“இப்போதான் தூங்குனேன்… இன்னொரு பத்து நிமிஷம் தூங்குறனே…”

“பாப்பா அழறா பாரு.. எழுந்து பால் கொடு.”

படுத்தே உடனே குழந்தை அழுதாலும் மீண்டும் எழுந்து அமர்ந்து தாய்ப்பால் கொடுத்துதான் ஆக வேண்டும்.

பிறந்த குழந்தைக்கு இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை தாய்ப்பால் கொடுக்க வேண்டும். முதல் ஆறு மாதத்திற்கு இதையேதான் அந்தத் தாய் செய்ய வேண்டும்.

பால் கொடுத்து சில நிமிடங்களில் கூட மீண்டும் அழும். அப்பொழுதும் கொடுக்க வேண்டும். ஒரு சில நேரம் இரண்டு மணி நேரம், மூன்று மணி நேரம் கூட தொடர்ந்து தூங்கலாம் அப்பொழுது ஓய்வு கிடைத்தால் உண்டு.

குழந்தை பால் குடித்த பின்பும் அழும். அப்பொழுது எதற்குக் குழந்தை அழுகிறது என்பது புரியாமல் மனம் சோர்வடையும். தனக்குத் தாய்ப்பால் போதிய அளவில் சுரக்கவில்லையோ என்கிற சந்தேகம் வரும்.

தாய்ப்பால் சுரக்க என்னென்ன சாப்பிட வேண்டும் எனத் தேடித் தேடிப் பிடித்தது, பிடிக்காதது என எல்லாவற்றையும் சாப்பிடத் தோன்றும்.

பூண்டு குழம்பு, குச்சி கிழங்கு, பால் கருவாடு, வெந்தயம் இன்னும் இப்படித் தேடித் தேடிச் சாப்பிட்டேன்.

சரி பால் சுரக்கிறது சந்தோஷம் என்றால், மறுபுறம் என் பால் குடித்து குழந்தைக்கு ஏதாவது சேராமல் போனால் மனம் பதைபதைக்கும்.

காரமாகச் சாப்பிட்டதால்தான் இத்தனை முறை மலம் கழித்தாளோ.. இனிப்பாகச் சாப்பிட்டதால்தான் சளி பிடித்ததோ.. அசைவம் சாப்பிட்டதால்தான் அதிக முறை பாலை வாந்தி எடுக்கிறாளோ.. உடலுக்குச் சூடான பொருட்களைச் சாப்பிட்டதால்தான் வயிற்று வலியில் அழுகிறாளோ என்றெல்லாம் தோன்றும்.

ஏதோ வெறுப்பில் வெறும் வெள்ளை சாதம் மட்டும் சாப்பிட்ட கதையெல்லாம் உண்டு.

ஆனால் இந்த நேரத்தில் பசியின் தன்மையும் மாறி இருக்கும்.

ஐந்து இட்லி சாப்பிட்டும் அரை மணி நேரத்தில் மீண்டும் பசிக்கும். தாகமாகவே இருக்கும். உடல் சோர்வாக இருக்கும்.

எனினும் உணவுக் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும். இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை பால் கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும்.

நம் உணவால் குழந்தைக்கு அழற்சி ஏற்படாது என்று தெளிவடைந்து, பிடித்ததை உண்டால் ஒரு சில நேரம் ஒன்றும் நேராது. ஆனால் ஒரு சில நேரம் அவளுக்கு உடல் நிலை சரியில்லாமல் போகும்.

அதைச் சரி செய்ய சில நாட்கள் ஆகும். ஏன்தான் நாம் அதை சாப்பிட்டோம் என்கிற குற்ற உணர்ச்சி வரும்.

மெல்ல அதில் இருந்து வெளிவர அடுத்ததாக எனக்கு உடல்நிலை சரியில்லாமல் போகும்.

திருமணத்திற்கு முன் காய்ச்சல், சளி என்றால் இரண்டு மூன்று நாட்களுக்குப் படுக்கையிலே ஓய்வு எடுத்ததுண்டு.

இப்பொழுது பால் ஊட்டும் தாயாக இருப்பதில் இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை எழுந்து அமர்ந்தே தீர வேண்டும்.

படுத்துக்கொண்டே பால் கொடுக்கலாம் என்றால் புரை ஏறி விடுமோ என்கிற பயம். எப்பொழுதாவது படுத்துக் கொண்டு பால் கொடுப்பேன். அதுவும் மிகவும் கவனமாகத்தான் கொடுப்பேன்.

இருமலும் சளியும் தலைவலியும் காய்ச்சலையும் வைத்துக் கொண்டு, அவள் மேல் என் முகம் படாமல் முகத்தைத் திருப்பி இருமிக் கொண்டு, பால் கொடுத்ததும் மற்றவர்களிடம் கொடுப்பேன்.

இந்நேரம் பார்த்து அவளும் வெகு நேரம் பால் குடிக்க வேண்டும் என்பாள். எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டு முடியாமல் அமர்ந்திருப்பேன். பவுடர் பாலும் குடிக்காமல் அடம் பிடிப்பாள்.

பால் குடித்துக் கொண்டே உறங்குவாள். உறங்குகிறாளே என்று கீழே படுக்க வைத்தால் அழுவாள். மீண்டும் பால் தர வேண்டும். மடியிலேயே சிறிது நேரம் வைத்திருக்க வேண்டும்.

எப்படியாவது இந்த நாட்களைச் சீக்கிரம் கடந்துவிடத் தோன்றும்.

சளி, காய்ச்சலுக்கு மாத்திரைகள் எடுத்துக் கொள்ளக்கூட பயமாக இருக்கும். குழந்தைக்கும் ஏதாவது பால் வழியே சென்றுவிடுமோ என்று.

மருத்துவரிடம் கேட்டுவிட்டுதான் தேவையானதை எடுத்துக்கொள்ள வேண்டும்.

நானும் தாய்ப்பால் கொடுப்பதை மகிழ்ச்சியோடு செய்ய வேண்டும் என நினைப்பதுண்டு… ஆனால் இப்படிச் சில சூழல்களில் முடிவதில்லை.

நன்கு பசியெடுத்துச் சாப்பிட அமரும்போது பாலுக்கு அழுவாள். மடியில் குழந்தையை வைத்துக் கொண்டே தட்டிற்கும் கைக்கும் எட்டியும் எட்டாமலும் அவள் மேல் சிந்தாமல் சாப்பிட வேண்டும்.

எப்பொழுதும் ஜிப் வைத்த உடைகள்தான் அணிய வேண்டும். அல்லது அவளுக்குப் பால் கொடுக்க ஏற்ற உடைதான் அணிய வேண்டும். பொருந்தாத பெரிய உடைகள் அணிய வேண்டும். அந்த உடைகளில் வீசும் பால் வாசனையைப் பொறுத்துக் கொள்ளவும் வேண்டும்.

பிறந்து சில மாதங்கள் கழித்துப் படுத்துக் கொண்டே பால் தர முயற்சிக்கும்போது விடிய விடிய குழந்தை வாய் வைத்துக் கொண்டே தூங்கிய நாட்களும் உண்டு. ஒரே பக்கமாகக் குழந்தைக்கு எப்படி வாட்டமோ அப்படியே படுத்திருக்க வேண்டும். கை வலித்தால் என்ன, உடல் வலித்தால் என்ன, பால் கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும்.

எட்டு, ஒன்பது மாதங்களில் முதல் பல் முளைக்கும். அந்த பல்லின் வலிமையை நம்மைக் கடித்துதானே சோதித்து பார்ப்பார்கள் குழந்தைகள். உயிரே போகும் வலி ஏற்படும் பால் குடிக்கும்போது கடித்தால், ரத்தம்கூட வந்தது உண்டு. அப்போது பால் கொடுக்கவே பயமாக இருக்கும், எனினும் கொடுத்துத்தான் ஆக வேண்டும்.

ஏன்தான் பெண்களுக்கு மட்டும் இயற்கை இப்படி ஒன்றைக் கொடுத்து கஷ்டப்பட வைக்கிறதோ என்று  கோபமும் வரும். அப்போது என் மடியில் இருப்பவள் பாலைக் குடித்துவிட்டு மெல்ல சிரிப்பாள்.

‘இது என்னடா மழலை சிரிப்பில் இருந்து பரவசம் நம்மைத் தொற்றுகிறது!’

ஓர் உயிரை உருவாக்கிப் பெற்று எடுத்தோம். இப்போது அந்த உயிரின் பசியை என்னில் இருந்து வரும் தாய்ப்பாலே தீர்த்து வைக்கிறதா.. அவ்வளவு பெரிய சக்தி நமக்குள் இருக்கிறதா என்று ஆச்சரியம் எழும்.

தாய்ப்பால் கொடுப்பதால் மன அழுத்தம் குறையுமாம், மார்பகப் புற்றுநோய் வரும் ஆபத்து குறையுமாம்.

தூங்கி எழும்போது சிணுங்கிக் கொண்டே எழுபவள், ஐந்து நிமிடங்கள் என் பால் குடித்ததும் மகிழ்ச்சியாகச் சோம்பல் முறித்து சுறுசுறுப்பாகி விடுவாள். அதைப் பார்க்கும்போது எனக்குள்ளும் பரவசம் எழும்.

எவ்வளவு அழும் குழந்தையும் பால் கொடுக்கத் தாய் தூக்கும்போது அழுகையை நிறுத்தும்.

பல சாவல்களுக்கு மத்தியில் இப்படிச் சில சந்தோஷங்களும் இருக்கத்தான் செய்கின்றன.

எல்லாம் கொஞ்ச நாட்களுக்குத்தான். முடிந்த வரை தாய்ப்பால் கொடுக்கலாம், தாயால் முடியாத நேரத்தில் உடலை வருத்திக்கொள்ளத் தேவையில்லை. வளரும் குழந்தைக்குச் சத்தான உணவு வகைகளையும் கொடுத்து சமன் செய்யலாம்.

தாயின் உடல் நிலையும் மன நிலையும் முக்கியம் தானே! முக்கியம்தான். ஆனால், உடலையும் மனதையும் பார்த்துக்கொள்ள முயற்சித்தாலும் அடுத்தடுத்த சவால்கள் வந்துவிடுகின்றனவே!

(தொடரும்)

படைப்பாளர்:

ரேவதி பாலாஜி

சேலம் மாவட்டத்தில் பிறந்து வளர்ந்தேன். தற்சமயம் ஈரோட்டில் வங்கிப் பணியாற்றி வருகிறேன். சிறு வயதில் இருந்தே தமிழ் மீதும் புத்தக வாசிப்பின் மீதும் பெரும் ஆர்வம் கொண்டேன். கடந்த சில ஆண்டுகளாக வாழ்க்கை ஏற்படுத்துகிற தாக்கங்களைக் கதைகளாகவும் கட்டுரைகளாகவும் பதிவு செய்து வருகிறேன். மைவிகடன் இணைய தளத்தில் நாற்பதிற்கும் மேற்பட்ட கட்டுரைகள் எழுதியுள்ளேன். கடந்து ஆண்டு சஹானா இணைய இதழ் நடத்திய நாவல் 2023-24 போட்டியில் பங்கேற்று முதல் பரிசு பெற்றுள்ளேன். அதில் ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் என்கிற தலைப்பில் நான் எழுதிய நாவல் புத்தகமாகவும் வெளிவர உள்ளது.