அவ்வப்போது இணையத்தில் சுற்றிக்கொண்டிருக்கும், ஹிடன் ஃபிகர்ஸ் (Hidden Figures) படத்தின் பாத்ரூம் பாகுபாடு காட்சியை நம்மில் பலரும் பார்த்திருப்போம். சிலர் படத்தையும் பார்த்திருக்கக்கூடும். பூமியைச் சுற்றி வலம் வந்த முதல் அமெரிக்கரான ஜான் ஹெர்ஷல் கிளென் ஜூனியரின் பயணத்தில் முக்கியமான பங்கு வகித்த மூன்று பெண்களின் கதை அந்தத் திரைப்படம்.

சோவியத் யூனியனுக்கும் அமெரிக்காவுக்கும் மண்ணிலும் விண்ணிலும் போட்டி இருந்த காலகட்டம் அது. 1961ஆம் ஆண்டு யூரி ககாரின் விண்வெளிக்குச் சென்ற முதல் நபர் என்ற பெருமையைப் பெற்றார். சோவியத்தின் இந்த வெற்றி, அமெரிக்காவைப் பதற்றமாக்கியது. அமெரிக்க ஆய்வு நிலையமான நாசாவில் அது எதிரொலித்தது. மனிதகுலத்தின் நலனுக்காக ஆய்வுகள் நடக்கின்றன என நம்புவதும், கடவுளை நம்புவதும் கிட்டத்தட்ட ஒன்றுதான். இம்மாதிரி போட்டி, பொறாமை, பெருமை உள்ளிட்ட காரணங்கள் இருந்ததால்தான் அரசின் நிதி கிடைக்கும். அப்போதுதான் உலகை மாற்றியமைக்கும் பெரிய திட்டங்களில் ஆய்வு நடக்கும். அப்படி உருவானதுதான் பூமியை மனிதன் சுற்றிவரும் எண்ணம். மண்ணில் அல்ல, விண்ணில்.

இந்தியாவெனில், பூமியைச் சுற்றி வர மயிலேறிக் கட்டளையிட்டால் போதும். அமெரிக்கர்களுக்கு அவ்வளவு கிரியேட்டிவிட்டி கிடையாது. எனவே கஷ்டப்பட்டுக் கணக்குப்போட்டுத்தான் திட்டமிடவேண்டும். தேவையான அளவு எரிபொருளை நிரப்பிக்கொண்டு போய் ஸ்டியரிங்கை இடதுபுறமோ வலதுபுறமோ வளைத்தமாதிரியே பிடித்துக் கொண்டிருந்தால் போதும், ஒரு சுற்றி வந்துவிடலாம் என்பதுபோன்ற காரியமல்லவே. இவ்வளவு நீண்ட பயணத்துக்குத் தேவையான எரிபொருளை நிரப்பும் அளவுக்கு வாகனம் தயாரிக்க முடியாது என்பதில் தொடங்குகிறது சிக்கல். புவியீர்ப்பு விசையைக் கணக்கிட்டு பூமியின் சுற்றுவட்டப்பாதையில் இணைந்து சுற்றி வரும்படி திட்டமிட்டால் சாத்தியம். அதற்குக் கணினியே திணறும் சிக்கலான கணக்குகளைப் போடவேண்டும்.

நாசாவின் எனியாக் பெண்கள்

அமெரிக்க விண்வெளி ஆய்வு நிலையமான நாசாவில் இப்படிச் சிக்கலான கணக்குகளைப் போடுவதற்கென்றே கறுப்பினப் பெண்களை வேலைக்கு வைத்திருந்தார்கள். அவர்களில் சில பெண்களுக்கு, விண்வெளிக்கு மனிதரை அனுப்பும் திட்டத்தில் வேலை செய்யும் வாய்ப்பு கிடைக்கிறது. கேத்தரின் ஜான்சன். மேரி ஜாக்சன். டோரத்தி வாகன். இவர்கள் எந்த அளவுக்குச் சிறப்பாகப் பணி செய்தார்கள் என்பதை உயிரைப் பணயம் வைத்து விண்வெளிக்குச் சென்ற ஜான் கிளென் சொற்கள் மூலம் அறிய முடிகிறது. கணினி கணக்குப் போட்டுச் சொன்னாலும் காத்தரின் அதை உறுதி செய்தபிறகே நான் விண்வெளிக்குப் போவேன் என அவர் சொல்லும் அளவுக்கு கணிதத் திறமை கொண்டவராக காத்தரின் இருந்திருக்கிறார்.

காத்தரின்

வெஸ்ட் வர்ஜீனியாவில் பிறந்த காத்தரினுக்கு இளம் வயதில் இருந்தே எண்களைப் பிடிக்கும். ஆசிரியர் கரும்பலகையில் எழுதி முடிக்கும் முன்பே இவர் கணக்குப் புதிர்களுக்கு விரைவாக விடையைக் கண்டுபிடித்துவிடுவாராம். கறுப்பினத்தவர் கல்லூரிப் படிப்பில் சேர இருந்த தடை இருந்த காலகட்டம் அது. நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகு வெஸ்ட் வெர்ஜீனியா பல்கலைக்கழகத்தில் கல்லூரிக் கல்வியைப் பெற அனுமதிக்கப்பட்ட முதல் மூன்று பெண்களில் காத்தரினும் ஒருவர். நாசாவில் சேர்ந்த பிறகு உலக வரலாற்றையே வேறு விதமாக மாற்றி அமைக்கக் காரணமானார். அப்பல்லோ 11 மூலம் முதன்முதலில் மனிதர்கள் நிலவில் கால் வைக்கக் காரணமாக இவர் போட்ட கணக்குகள் இருந்தன. இன்றைக்கு சுனிதா வில்லியம்ஸ் நல்லபடியாக பூமி திரும்பக் காரணம் நாங்கள்தான் என எலான் மஸ்க்கும் டிரம்பும் பேசுகிறார்கள். உண்மையான காரணம் விண்வெளி ஆய்வாளர்களும் காத்தரினும். விண்ணுக்குச் சென்று பத்திரமாக மண்ணுக்குத் திரும்ப வருவதைச் சாத்தியமாக்கியது காத்தரின் போட்டக் கணக்கு. நீண்டகாலம் அவர் செய்த பணிகள் வெளிச்சத்துக்கு வரவில்லை. இவ்வுலகம் புரிந்து கொண்டு அங்கீகரிக்கும் வரைக்கும் காத்திருந்து பெருவாழ்வு வாழ்ந்து தன் 101 வயதில் 2020ஆம் ஆண்டு இறந்தார் காத்தரின்.

நிறவெறிப் பாகுபாடுகள் நிறைந்த காலகட்டத்தில் நாசாவில் வேலை செய்ய வாய்ப்பு கிடைப்பதே அரிது. கிடைத்த வாய்ப்பில் இருந்த பல்வேறு இடர்களைப் பெரிதுபடுத்தாமல் வேலை செய்தார்கள் இந்த கறுப்பினப் பெண்கள்.

தான் வேலை செய்யும் கட்டடத்தில் கறுப்பினத்தவர் பயன்படுத்தும் கழிப்பறை இன்றி முக்கால் மணிநேரம் செலவிட்டு ஓடிப்போய் ஓடிவரும் காத்தரின், தன் நிலையை விளக்கும் பாத்ரூம் காட்சிதான் ஆரம்பத்தில் குறிப்பிட்டது. அங்கீகாரம் கிடையாது. ஊதியம் குறைவு. உணவு முதல் உட்காரும் இடம் வரைக்கும் அனைத்திலும் அவமானத்தை எதிர்கொள்ளவேண்டும். தன் திறமை மேல் நம்பிக்கை கொண்ட காத்தரின் கண்ணீர்விட்டுக் கதறாமல் தன் ஆற்றாமையை வெளிப்படுத்தும் விதமாக அக்காட்சி இருக்கும். எவ்வளவு தூரம், எப்படிச் செல்கிறார் என்பதை விவரித்து, “தாமதத்தை நீங்கள் பொறுத்துக்கொள்ளத்தான் வேண்டும்” எனச் சொல்லி முடிப்பார். அதன் பின்னர் கழிவறைப் பாகுபாடு களையப்படும்.

நிஜவாழ்வில் நேர்காணல் ஒன்றில், காத்தரின், தான் தன்னைப்பற்றிக் குறைவாக ஒருபோதும் எண்ணியதில்லை எனத் தெரிவித்தார். பாகுபாடுகளைப் பற்றிக் கேட்டபோது, “அதைப் பற்றிச் சிந்திக்க எனக்கு நேரம் இருந்ததில்லை” என்றார். திரைப்படத்தில் இன்னொரு காட்சியில், இவருடைய பாஸ் தன் முடிவுகளை எப்படிச் செயல்படுத்துவது என்று யோசிக்கும்போது, “இங்கே தலைமைப் பொறுப்பு உங்களிடம்தான் இருக்கிறது. தலைவர் மாதிரி நடந்துகொண்டால் போதும்” என வெகு இயல்பாகச் சொல்வார் கேத்தரின். இந்த கதாபாத்திரத்துக்கென்றே அளவெடுத்துச் செய்யப்பட்டவர் போல இருப்பார் தாராஜி ஹென்சன். ஆறு எம்மி விருதுகள், அகாடமி விருது நாமினேஷனில் இடம்பிடித்தவர். கோல்டன் குளோப் உள்ளிட்ட சில விருதுகளை வென்றும் இருக்கிறார். டைம் பத்திரிகை, செல்வாக்கு வாய்ந்த நூறு நபர்களில் ஒருவராகவும் பட்டியலிட்டுள்ளது.

தாராஜி ஹென்சன்

எந்தப் பட்டியலில் இருந்தாலும், எந்தச் சாதனையைச் செய்தாலும் நூறு ஆண்டுகளுக்குப் பிறகு பார்த்தால் அந்தப் பெண்கள் இருந்த தடமே தெரியாமல் போய்விடுகிறது. “எந்தத் துறையிலும் குறிப்பிட்டுச் சொல்லும்படி பெண்கள் சாதிக்கவேயில்லை. அதன் பொருள் அவர்களுக்கு அறிவு குறைவு என்பதுதானே?” என்ற கேள்வியோடு சென்னை புத்தகக் காட்சியில் ஹெர்ஸ்டோரிஸ் ஸ்டாலுக்கு வந்த ஒருவரைக்காண நேர்ந்தது. சாதனைகள் பதிவாகவில்லை என்பதை உணர்ந்து அடுத்த தலைமுறைப் பெண்கள் தேடித்திரிந்து தரவுகளைச் சேகரித்து ஆவணமாக்குவது அண்மையில்தான் தொடங்கியுள்ளது. பதிவானவரைக்கும் படித்திருந்தால்கூட இப்படியொரு கேள்வி எழாது.

கேத்தி கிளைமன் வந்து ஆய்வு மேற்கொண்டிருக்காவிட்டால் எனியாக் பெண்களைப் பற்றி நமக்குத் தெரிந்திருக்க வாய்ப்புகள் குறைவே. நவீன கணினிகளின் தொடக்கப்புள்ளியாக எனியாக் கணினிகளைச் சொல்வார்கள். இதன் அருமை பெருமைகளைப் பேசும் எந்தக் கட்டுரையிலும் இதற்கு நிரல் எழுதிய பெண்களைப் பற்றிய தகவல் இருந்ததில்லை. கணினி மென்பொருள் உருவாகியிராத காலத்தில் எனியாக் வேலை செய்யத் தேவையான நிரல்களை எழுதிய ஆறு பெண்களைப் பற்றித் தன் ஆய்வின் மூலம் வெளிச்சத்துக்குக் கொண்டுவந்தவர் கேத்தி. இப்படி மேற்கோள்கள் காட்ட நிறைய உண்டு.

கறுப்பினப் பெண்களின் சாதனைகளை ஆவணப்படுத்துவதில் ஆல்பா கப்பா ஆல்பா முக்கியமான பங்காற்றுகிறது. ஹிடன் ஃபிகர்ஸ் படத்தில் வரும் மூன்று பெண்களுமே ஆல்பா கப்பா ஆல்பா குழுமத்தைச் சேர்ந்தவர்கள். அமெரிக்கக் கல்லூரிகளில் கிரீக் லெட்டர் குழுக்கள் பிரபலமானவை. கிரேக்க எழுத்துகளை வைத்துப் பெயரிட்டு, ஒத்த ஆர்வம் உடைய மாணவர்கள் இணைந்து சங்கம் மாதிரி அமைத்துச் செயல்படுவார்கள். ஆல்பா என்றால் ஆரம்பம் அல்லது முதல், முதன்மை என்று நமக்குத் தெரியும். கப்பா என்றால் தேடல், அறிவுத்தேடல் என்பதுபோலப் பொருள் கொள்ளலாம். இந்தக் குழுவின் குறிக்கோள் By culture and by merit. தங்கள் தனிப்பட்ட சாதனைகளுக்கும் தகுதிக்கும் கொடுக்கும் கவனத்தை பண்பாட்டுப் பின்னணிக்கும் கொடுத்து விழிப்புணர்வு உண்டாக்குகிறார்கள். அமெரிக்கத் துணை அதிபராக இருந்த கமலா ஹாரிஸ்கூட தன் கல்லூரிக் காலத்தில் இக்குழுவில் தன்னை இணைத்துக் கொண்டார்.

கறுப்பின, ஆப்பிரிக்க அமெரிக்கப் பெண்களின் சாதனைகள், சமூகப்பங்களிப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் இவர்கள் ஓர் இயக்கமாகவே செயல்படுகிறார்கள். விருதுகளைக் கொடுத்து அங்கீகரிக்கிறார்கள். பரப்புரை மேற்கொள்கிறார்கள். என்றாலும் இம்மாதிரி முயற்சிகள், ஆய்வு, ஆவணம் எல்லாம் குறுகிய வட்டத்துக்குள்ளேயே நின்றுவிடுவது வாடிக்கை. படித்துத் தெரிந்துகொள்வதைவிட கண்ணை மூடிக்கொண்டு கருத்துசொல்வது எளிதென்பதால் பெரும்பான்மை மக்கள் அதைத்தான் செய்கின்றனர்.

நாசா வரலாற்றில் பெண்களின் பங்களிப்பைப் பற்றி சாரா ஒரு கட்டுரை எழுதியிருந்தார். பாவாடை கட்டிக்கொண்ட கணினிகள் எனத் தலைப்பிட்ட அக்கட்டுரையில் 1935–1970 காலகட்டத்தில் நாசாவில் பணியாற்றிய பெண்களை ஆவணப்படுத்தியிருந்தார். மார்கட் லீ ஷட்டர்லி இந்தத் தகவலை ஆவணப்படுத்தும் விதத்தைச் சற்றே மாற்றினார். இவருடைய அப்பா நாசாவில் வேலை பார்த்தவர். இவர் படித்து முடித்து வங்கித் துறையில்தான் வேலைக்குச் சேர்ந்தார். மெக்ஸிகோவுக்கு இடம்பெயர்ந்து கணவருடன் சேர்ந்து ஆங்கிலப் பத்திரிகை ஒன்றை ஆரம்பித்தார். குடியுரிமை இன்றி வாழும் மெக்சிகோ மக்களைப் பற்றிய கதைகளை வெளியிட்டார். எளிய மனிதர்களின் வாழ்வை ஆய்வு செய்து கதையாகச் சொல்லும் கலையில் தேறிய பின்னர் இவர் கையில் எடுத்ததுதான் கேத்தரின் ஜான்சனின் கதை.

ஆய்வுப்பணிகளை மேற்கொண்டு புத்தகமாக எழுதியது வரைக்கும் யாரும் செய்யக்கூடியதே. அதை எப்படிப் பெருவாரியான மக்களிடம் கொண்டு சேர்க்கவேண்டும் என்பதையும் யோசித்துச் செயல்படுத்தியதில் மார்கட் தனித்துத் தெரிகிறார். நெட்பிளிக்ஸில் திரில்லர் வகைத் தொடர்களைப் பார்ப்பவர்கள் தவறவிடாத பெயர் ஹாப்பர்காலின்ஸ். அந்தப் பதிப்பு நிறுவனத்துக்குத் தன் புத்தகத்தின் உரிமையைக் கொடுத்தார் மார்கட். 2016ஆம் ஆண்டு, ஹிடன் ஃபிகர்ஸ், புத்தகமாகவும் திரைப்படமாகவும் இணைந்தே மக்களை வந்து சேர்ந்தது. படக்கதைப் புத்தகமாகவும் வந்தது.

ஒபாமாவுடன் காத்தரின்

மக்கள் கொடுத்த ஆதரவு இவ்வகைப் படங்களை எடுக்க மேலும் உந்துகிறது. இந்தியாவில் இப்படத்தை ஜியோஹார்ஸ்டாரில் பார்க்கலாம். நாசா இணையதளத்தில் ‘மறைக்கப்பட்ட ஆளுமைகள் அல்ல, மாடர்ன் ஆளுமைகள்’ என்று தனிப்பக்கமும் இருக்கிறது. நூலாசிரியர் மார்கட், மனிதக் கணினிகள் என்றொரு இணையதளத்தைத் தொடங்கி இம்மாதிரியான ஆளுமைகளைக் கதைகளாக ஆவணப்படுத்த முயற்சி செய்கிறார். ஆவணம்தான் எனினும் கதை சொல்லும் உத்தியின் மூலம் நிறைய பேரைச் சென்றடைய முடிகிறது. போலவே, காட்சி ஊடகத்தில் விடுபட்டுப்போன கதைகளைப் பேசினால் வரவேற்கவும் மக்கள் தயாராகத்தான் இருக்கிறார்கள்.

வெறுப்பைக் கிளறவும் பரப்பவும் பயன்படுத்துவதைத் தவிர்த்து இதைப்போல ஊக்கமளித்து முன்னேறும் கதைகளைச் சொல்வது நல்ல விஷயம்தான். கதையல்ல, நிஜம் என்று சிலரேனும் உணர்வார்கள்.

படைப்பாளர்

கோகிலா 

இளநிலை கணிப்பொறி அறிவியல் படித்தவர். சிறுவயதில் இருந்தே வாசிப்பில் ஆர்வம் உண்டு. புனைவுகளில் ஆரம்பித்த ஆர்வம் தற்போது பெரும்பாலும் பெண்ணியம், சமூகம், வரலாறு சார்ந்த அபுனைவு வகை புத்தகங்களின் பக்கம் திரும்பியிருக்கிறது. பயணம் செய்வது பிடிக்கும்.  கல்விசார்ந்த அரசுசாரா இயக்கங்களில் தன்னார்வலராகச் செயல்படுகிறார்.

ஹெர் ஸ்டோரிஸில் இவர் எழுதிய ‘தொழில்நுட்பம் அறிவோம்’ என்கிற தொடர், ‘இணையத் தொழில்நுட்பம் அறிவோம்’ என்கிற புத்தகமாக ஹெர் ஸ்டோரிஸ் மூலம் வெளிவந்திருக்கிறது. இது தவிர ‘உலரா உதிரம்’ என்கிற அரசியல் வரலாறு நூல் மற்றும் ‘தரையை ஓங்கி மிதித்த பட்டாம்பூச்சி’ என்கிற சிறார் நூலையும் எழுதியுள்ளார்.

படத்தின் முன்னோட்டம்

பாத்ரூம் பாகுபாடு காட்சி

ஆல்பா கப்பா கப்பா

https://aka1908.com

எனியாக் நிரலாளர்கள்

நாசாவில் தனிப்பக்கம்

https://www.nasa.gov/from-hidden-to-modern-figures

பாவாடை கட்டிக்கொண்ட கணினிகள்

நாசா காணொளி