செய்தி வந்தவுடன் ஒவ்வொருவராக வரத் தொடங்கியிருந்தார்கள். அந்தப் பெரிய வீட்டின் வாயில் கதவை விரியத் திறந்து வைத்து விட்டார்கள். சிமெண்ட் கற்கள் பாவிய தரை ‘ஜிலோ’வென்று விரிந்து கிடந்தது.
முன்னறையில் கங்கம்மா ஒரு மூலையில் சுவருக்குச் சாய்ந்து அமர்ந்திருந்தாள். கலைந்த கூந்தல் பிரிபிரியாய்த் தொங்க, நெற்றி வியர்த்து வழிந்ததில் குங்குமம் கலைந்து லேசாக மூக்கின் மீது வழிந்திருக்க, புடவையைத் தாறுமாறாக மேலே போட்டுக் கொண்டு, வெறித்த பார்வையுடன் சலனமின்றி உட்கார்ந்திருந்தாள்.
அவளுக்கு அருகில் ராஜப்பாவின் உடல் கிடத்தப்பட்டிருந்தது. தலைமாட்டில் சிறிய விளக்கு எரிந்து கொண்டிருந்தது. அவ்வப்போது சிறிதாக சுடர் விட்டுத் தெறித்தது. மட்டி ஊதுவத்தி புகைந்து அந்த இடத்தில் சாவு வாசனையைப் பரப்பிக் கொண்டிருந்தது. செவ்வந்தி மாலை, ரோஜாப்பூ மாலை என்று உடல் மீது குவிந்து கிடந்த மாலைகளை அவ்வப்போது உறவுப் பையன் சின்னராசு எடுத்து வைத்து, அடுத்த மாலை போட வழி செய்து கொண்டிருந்தான்.
“ஏ ராசாவே… எங்களை விட்டுட்டுப் போயிட்டியா. யப்பா தருமதொர… இனி எங்களுக்கு நாதியில்லாமப் போயிடுச்சே. ஆதரிப்பார் யாருமுண்டோ..?” ராஜப்பாவின் இரண்டாவது தங்கை கோசலை பிலாக்கணம் வைத்துக் கொண்டே உள்ளே வந்தாள்.
கூடத்தில் கிடத்தப்பட்டிருந்த உடலைப் பார்த்து மார்பில் அறைந்து கொண்டாள். “அய்யோ! அய்யோ..!” கங்கம்மாவின் அருகில் வந்து குமுறிக் குமுறி அழுதாள். “இனி நீ என்ன பண்ணுவ கங்கை…” மூக்கை முந்தானையில் சிந்தித் துடைத்துக் கொண்டாள்.
சிறிது நேரம் கழித்து ராஜப்பாவின் முதல் தங்கை கோமதி வாசற்படியைத் தாண்டி எட்டிக் குதித்து வந்தாள்.
‘ஏ அண்ணெ நடக்குந் தெசையெல்லாம்
பாலாறு பாஞ்சோடும்
தேனாறு தெரண்டோடும் – அவெந்
திலும்பும் தெசையெல்லாம்
தேனரும்பும் பூமலரும்
வாரேதுஞ் சேதியின்னா நா வாச
நெகுல் பாப்பேன்
எம்பொறவி ராசன் வந்தா
வார தடம் வழியே வாழை மடல் விரிய
எம்பொறவி மொகம் பாத்தே
என்னுசுரு தான் நெறையும்…’ பாடிக் கொண்டே அண்ணன் உடல் மீது விழப் போனவளைப் பிடித்துக் கொண்டார்கள்.
கோமதி தரையில் நெடுமரம் போல் சாய்ந்தாள். வாய் பாட்டுக்கு ஒப்பாரிப் பாடல்களை முனகிக் கொண்டே இருந்தது. “ஊரே ரெண்டாச்சு… என் ஒறவு போயாச்சு. நாடே ரெண்டாச்சு. எம் பொறவி சாஞ்சாச்சி…”
யாரோ வரக்காப்பியைக் கொண்டு வந்து அவளிடம் நீட்டினார்கள். உடனே எழுந்து முகத்தைத் துடைத்துக் கொண்டு காப்பியை வாங்கிக் கொண்டாள். கங்கம்மாவிடம் காப்பியை நீட்ட அவள் மறுத்துக் கண்களை மூடிக் கொண்டாள். கோமதி, கோசலையைப் பார்த்து வாயைச் சுழித்து விட்டு காப்பியைக் குடிக்கத் தொடங்கினாள்.
பாடை கட்ட ஒருபக்கம் ஏற்பாடுகள் ஆகிக் கொண்டிருந்தன. உப்புமாவும், காப்பியும் இன்னொரு பக்கம் தயாராகிக் கொண்டிருந்தன. தப்பு அடிக்க வந்தவர்கள் வீட்டின் பின்புறம் மறைவாகச் சென்று லேசாக போதையேற்றிக் கொண்டு வந்து கண்கள் சிவக்க நின்றிருந்தனர்.
“நல்லா வாழ்ந்த மனுசன்பா. ஏற்பாடெல்லாம் கனஜோரா இருக்கணும்…” தூரத்து உறவு ஒன்று அதட்டிக் கொண்டே புகை பிடித்துக் கொண்டிருந்தது. ” சாகுற வயசா? இப்ப யாரைப் பார்த்தாலும் ஹார்ட் அட்டாக்குங்கிறாங்க…”
ஊர்க்காரர்களும், உறவுக்காரர்களும் வந்து குவிந்த வண்ணமிருந்தனர். ராஜப்பா அந்த ஊரில் பெரிய செல்வாக்கு மிகுந்தவர். செல்வந்தரும்கூட. கண்ணுக்கெட்டிய தூரம் வயலும், தோப்புந் துரவும் பரந்து கிடந்தன. ஊருக்குள் முதலில் பெரிய மாடி வீடு கட்டியவர் அவர்தான். முதலில் கார் வாங்கியவரும் அவர்தான். எல்லோருக்கும் பாகுபாடு பார்க்காமல் உதவுவார். கங்கம்மாவிடம் சொல்லி பாதி உதவி, சொல்லாமல் மீதி உதவி செய்வார். சில விஷயங்களை கங்கம்மாவும் தெரிந்து கொண்டே அமைதி காப்பாள்.
அவருடன் பிறந்தவர்கள் இரண்டு தங்கைகள் மட்டுமே. அவர்கள் மீது அவர் அளவற்ற பாசம் வைத்திருந்தார். இருவருக்கும் நல்ல இடத்தில் சம்பந்தம் பார்த்து ஏகப்பட்ட செலவில் நிறைய நகை நட்டு போட்டு தடபுடலாகத் திருமணம் செய்து வைத்தார். கங்கம்மா எதற்குமே குறுக்கே நின்றதில்லை.
கோமதிக்கும், கோசலைக்கும் அண்ணன் ஒரு கற்பகத்தரு, காமதேனு. எப்போது வந்து கேட்டாலும் இல்லையெனாமல் கொடுப்பார். அவருக்குக் குழந்தைகள் எதுவும் இல்லாமல் போனது, இவர்களுக்கு மிகுந்த வசதியாகப் போனது. “உனக்கு என்னண்ணே? புள்ளையா, குட்டியா? யாருக்குன்னே இம்புட்டு சொத்து சேக்குற? எங்களுக்குத் தான் கொடேன்.” கூசாமல் வெளிப்படையாகவே வாயாடுவாள் கோமதி.
கோசலை அவ்வளவு வாய்த் துடுக்கு இல்லை. ஆனாலும் கோமதி மட்டும் சவுகரியங்களை அனுபவிக்க அவளது மனம் இடம் கொடுக்கவில்லை. வந்தவரைக்கும் லாபம் என்று பேசாமல் இருப்பாள். இருவரையும் கங்கம்மா ஒன்றுமே சொன்னதில்லை. அவர்களை மட்டுமல்ல. யாரையுமே ஒன்றும் சொல்ல மாட்டாள். அதிகம் யாருடனும் பேசுவதில்லை. ‘ராசப்பெங் கிட்டயாச்சும் பேசுவாளா?’ என்று பண்ணை வேலைக்கு வரும் பெண்கள் கிசுகிசுத்துச் சிரிப்பதுண்டு.
குழந்தையில்லாத ஏக்கம் ராஜப்பாவிற்கு இருந்தது என்பதே கங்கம்மாவுக்குத் தெரியவில்லை. அந்தரங்கப் பொழுதுகளில் ‘உனக்கு நான் எனக்கு நீ’ என்று கங்கம்மாவுக்கு ஆறுதலாகச் சொல்வார். அவளும் மெல்லிய சிரிப்போடு கேட்டுக் கொள்வாள். அவர் மீது உயிரையே வைத்திருந்தாள். அவரைப் பார்க்கும் அவளது விழிகளில் கருணை நிரம்பித் ததும்பும். அவர் கேட்கும் முன் அவரது வேலைகளை முடித்து வைப்பாள். அவர் காலால் இடும் வேலைகளைத் தலையால் செய்து முடிப்பாள். அவரைக் கேட்காமல் எதையும் செய்ய மாட்டாள்.
மாலை மயங்கும் நேரத்தில் மெல்லியதாக அலங்காரம் செய்து கொண்டு ராஜப்பாவிற்காகக் காத்திருப்பாள். எல்லாம் அந்த வெளியூர்க்காரி வரும் வரையில்தான். அன்றொரு நாள் காலை பத்து மணிக்கு வாசலில் யாரோ ஒண்டிக் கொண்டு நின்றிருந்ததைப் பார்த்து கங்கம்மா கை வேலையை விட்டு விட்டு முந்தானையில் கையைத் துடைத்துக் கொண்டே வெளியே வந்தாள். நின்றிருந்தவள் பேசும் முன்பே அவள் பசி கண்களில் தெரிந்தது. வேலை கேட்டவளைத் திண்ணையில் அமரச் சொல்லி விட்டு உள்ளிருந்து சூடாக நாலு இட்லிகளையும், சாம்பாரையும் ஒரு தட்டில் வைத்து எடுத்துக் கொண்டு வந்தாள்.
“சாப்பிடு முதல்ல…” நீட்டிய தட்டை, வந்தவள் ஆவலுடன் வாங்கி அவசர அவசரமாகத் தின்னத் தொடங்கினாள். அவள் சாப்பிடும் வேகத்தைப் பார்த்து மீண்டும் உள்ளே போய் ஒரு பெரிய தம்ளர் நிறைய காப்பியைக் கொண்டு வந்து வைத்தாள். அதையும் குடித்து விட்டு நன்றியுடன் கைகூப்பினாள் வந்தவள்.
கங்கம்மா சொல்லாமலே, மற்ற பெண்களுடன் தோட்டத்துக்குள் அவள் சென்றாள். பிற்பாடு விவரங்களாகத் திருமணமாகி ஒரு வருடம்தான் ஆகியிருந்ததையும், கணவனை ஒரு சாலை விபத்தில் இரண்டு மாதத்திற்கு முன்புதான் இழந்திருந்ததையும், பெற்றோர் இல்லாமல், உடன்பிறந்தவனுக்குச் சுமையாக இருக்க விருப்பமின்றி இந்த ஊருக்கு வந்ததையும் சொன்னாள். இரண்டு நாள்கள் கழித்து வயலை மேற்பார்வையிடச் சென்ற கங்கம்மாவின் கண்களில் அவளது ரவிக்கை கிழிசல் தென்பட்டது. சுருங்கிய வாயில் புடவையை இழுத்து இழுத்து விட்டுக் கொண்டு கிழிசலை மறைக்க முயன்று தோற்றுக் கொண்டிருந்தாள் அவள்.
மாலை கூலி வாங்க வரும்போது தனது பழைய பாலியெஸ்டர் புடவைகள் இரண்டும், நல்லதாக ரவிக்கைகள் நான்கும் ஒரு பையில் போட்டு கங்கம்மா அவள் கையில் திணித்தாள். கண்களில் நீர் வழிய அவள் வாங்கிச் சென்றாள். ஒரு மாதம் தான் வேலைக்கு வந்திருப்பாள். திடீரென்று ஆள் வரக் காணோம். கங்கம்மா விசாரித்த போது யாருக்கும் தெரியவில்லை. அப்புறம் பத்து நாட்கள் கழித்து டவுனுக்குச் சென்ற சின்னராசுதான் பதறி வந்து சேதி சொன்னான்.
“யேய் அத்தே… காத்தால நானும், மூர்த்தியும் ஒரம் வாங்க டவுனுக்குப் போனோம். அவன் சினிமாவுக்குப் போலாம்னு நச்சினான். கெரகத்தைப் போய்ப் பாத்துட்டுக் கெளம்புவோம்னு போனேம் பாத்துக்க. அங்கெ மின்னாடி சீட்டுல யாரிருந்தா தெரீமா?” சுற்றும்முற்றும் பார்த்து விட்டுக் குரலைத் தழைத்துக் கொண்டான். “நம்ம ராசப்ப மாமேன் தான்… கூட அந்த வெளியூர்க்காரி…”
கங்கம்மா அதிர்ந்து போனாள். “அவிங்க என்னெப் பாக்கலத்தே.. மூர்த்திப் பய பாத்தானான்னு நாங் கேக்கல…” ஆனால் மூர்த்தியும் பார்த்திருந்தான் என்பது ஊருக்குள் கிசுகிசுப்பாகப் பரவியதில் தெரிந்தது.
நாளாக ஆக ராஜப்பன் வீட்டுக்கு வர நேரமாகத் தொடங்கியது. காரணத்தை அவள் அவரிடம் நேரடியாகக் கேட்கவில்லை. ஒருநாள் துவைக்க எடுத்த அவரது சட்டைப் பைக்குள் வாடிய மல்லிகைப் பூக்கள் இரண்டு கிடந்தன. பிறிதொரு நாள் சட்டையில் முதுகுப் பக்கம் குங்குமம் தீற்றியிருந்தது. காரணம் கேட்டபோது, “கோயிலுக்குப் போயிருந்தேன்…” என்றார் உயிர்ப்பில்லாத குரலில். ஏனோ அவளது கண்களைப் பார்ப்பதைத் தவிர்த்தார். அவளுக்குள் ஏதோ மளுக்கென்று உடைந்தது.
***
ராஜப்பாவின் உடலை வெளியே எடுத்து வந்து பெஞ்சு மேல் கிடத்தினார்கள். தண்ணீரை எடுத்து மடமடவென்று ஊற்றிக் குளிப்பாட்டினார்கள். மேலே ஒரு வெள்ளைத் துணியைப் போர்த்தினார்கள். நெற்றியில் திருநீறு அள்ளிப் பூசினார்கள். ரோஜா மாலை போட்டுக் குங்குமம் வைத்தார்கள். உறவுப் பெண் வந்து மஞ்சள் கொட்டினாள்.
வெயில் லேசாக ராஜப்பா உடலின் மீது பட்டது. கோசலை உடனே ஒரு துணியை எடுத்து வந்து வெயில் படாமல் பிடித்துக் கொண்டாள். கோமதியும் சளைத்தவளல்ல. ஒரு துண்டை எடுத்து வந்து ஈக்கள் மொய்க்காமல் விசிறிக் கொண்டிருந்தாள். “ஏன்க்கா… கங்கை கண்ணுலருந்து ஒரு சொட்டு தண்ணி வந்துச்சா பாத்தியா?” கோசலை அங்கலாய்த்தாள். அப்போது ஒரு இளம் பெண் கையில் மாலையுடன் உள்ளே வந்தாள். அழுத கண்களும், சிந்திய மூக்கும் சிவந்திருந்தன. அவளைப் பார்த்ததும் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.
“சாடையைப் பாத்தியா?.. அப்புடியே ராசப்பனெ உரிச்சு வச்சிருக்கா…” மூணாம் பங்காளி ஒருவர் பக்கத்தில் இருந்தவரிடம் கிசுகிசுத்தார். “ஓ.. இவதான் வாரிசா..?”
கோமதிக்கும், கோசலைக்கும் ‘பக்’கென்றது.
“இந்தா நீ மாலை போடக் கூடாது…” கோமதி அவளை மறித்தாள். அந்தப் பெண் இறைஞ்சுதலாகப் பார்த்தாள். மூக்கு விடைத்து அழுகைக்குத் தயாரானது.
“எங்கண்ணன் ஒதுங்குன எடத்துக்கெல்லாம் மருவாத கெடயாது. போயிரு பேசாம…” கோமதி தலையை அள்ளி முடிந்து கொண்டு சண்டைக்குத் தயாரானாள்.
“அத்தே… நான் பெரியம்மா கிட்ட பேசணும்…” அவளை முடிக்க விடவில்லை கோசலை.
“யாருடீ உனக்கு அத்தை? சொல்லிக் குடுத்து அனுப்பிருக்காளா உங்காத்தா? சொத்துக்கு சொந்தங் கொண்டாடச் சொல்லி..?” முந்தானையை உதறிச் செருகிக் கொண்டு சீறினாள்.
***
ராஜப்பா அதன்பின் கங்கம்மாவின் முகத்தைப் பார்ப்பதும் இல்லை. அவளுடன் தனித்திருப்பதும் இல்லை. இருவருக்குமிடையில் சம்பிரதாயமான ஒன்றிரண்டு உரையாடல்கள் மட்டுமிருந்து காலப்போக்கில் அவையும் மறைந்து போய்விட்டன. அவருக்கான பணிவிடைகள் எதையும் அவள் இப்போதெல்லாம் செய்வதில்லை. சமையல் மட்டும் பெயருக்கு ஏதாவது சமைப்பாள். பெரும்பாலும் வயலுக்குள் போய்விட்டால், லேசில் வீட்டுப் பக்கம் தலை காட்ட மாட்டாள்.
அவர் தொடுப்பு வைத்திருந்த பெண்ணுக்கு குழந்தையும் பிறந்து விட்டது என்று அரசல்புரசலாகச் செய்தி வந்தது. அன்று பண்ணையில் வேலை செய்த எல்லோருக்கும் ராஜப்பா லட்டு வாங்கி வந்து தந்தார். விசாரித்தவர்களிடம், “ஏனோ மனசு சந்தோஷமா இருக்குன்னு வாங்கிட்டு வந்தேன். இனிப்பு குடுக்குறதுக்கெல்லாம் காரணம் வேணுமா..?” என்று வாயை அடைத்து விட்டார். கங்கம்மா தலை சீவும் கண்ணாடிக்குப் பக்கத்தில் லட்டுப் பெட்டி வைத்திருந்தது. அவள் அதை எடுத்துப் போய் குப்பைத் தொட்டியில் போட்டாள். அன்றிலிருந்து இனிப்பைத் தொடுவதில்லை. காப்பிக்குக் கூட.
***
காரசாரமான விவாதம் நடந்தது. அந்தப் பெண்ணை மாலை போட அனுமதிக்கலாம் என்று ஒரு சாராரும், கூடாதென்று அத்தைகள் தலைமையில் இன்னொரு சாராரும் வாய்ச் சண்டையில் இறங்கினார்கள். இறுதியாகப் பஞ்சாயத்து கங்கம்மாவிடம் வந்து நின்றது. ரோஜாச் செடிகளுக்கு தண்ணீர் விடவில்லையே… கொட்டிலில் இருக்கும் மாடுகளுக்கு தீவனம் போட்டு தண்ணீர் காட்டவில்லையே… வெண்டைக்காய் செடிகளுக்கு உரம் வேறு போட வேண்டுமே… என்ற கவலைகளில் கங்கம்மா மூழ்கியிருந்தாள். கோமதி உலுக்கியதில் கவனம் கலைந்தாள். கோசலை மெல்ல சாடை காட்டிய பக்கம் திரும்பியதில் அவள் பார்வையில் விழுந்தாள்.
கங்கம்மா அந்தப் பெண்ணை மேலிருந்து கீழ் வரை பார்வையாலேயே அளந்தாள். அகன்ற நெற்றி, சுருள் முடி, கூர்மையான நாசி, குறுகிய மோவாய் என்று ராஜப்பாவை அச்சுப் பதித்தது போலிருந்தாள். பார்க்கப் பார்க்க ஏனோ வயிற்றைப் பிசைந்தது. மனசு கொந்தளித்து கண்கள் வழியாகப் பொங்கியது. கண்களை இறுக்கி மூடிக் கொண்டாள்.
கோமதியும், கோசலையும் இதுதான் சாக்கு என்று அந்தப் பெண்ணின் தலைமயிரைப் பிடித்து இழுத்துப் போய் வெளியே தள்ளினார்கள். அவள் அழுது கொண்டே போய்விட்டாள்.
பாடையை நான்கு ஆண்கள் தூக்க, மாலை மயங்கும் வேளையில் ராஜப்பா சுடுகாட்டை நோக்கிப் பயணமானார். வாசல் வரை வந்து வழியனுப்ப கங்கம்மாவை எழுப்பியபோது மெல்ல எழுந்தாள். வெளியே வந்து ராஜப்பாவின் முகத்தைப் பார்த்தாள். எந்த உணர்வையும் அவள் வெளிக்காட்டவில்லை. சில நிமிடங்கள் அவர் முகத்தையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள். கோசலையும், கோமதியும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். “அழுதுரு கங்கை. துக்கத்தை உள்ளேயே வெச்சிருக்காத.” கோமதி சொல்லியும் அவள் அழவில்லை. “ம்கூம்.. ரொம்ப துக்கமா இருந்தாலும் அழுகை வராது…” என்றாள் கோசலை பெருமூச்சோடு.
கங்கம்மா ஒன்றும் பேசாமல் உள்ளே போனாள். பிணத்தைத் தூக்கிப் போனார்கள். உறவுப் பெண்கள் வீடு கழுவி விட்டனர். உடலைப் புதைத்து விட்டு வந்தபின் அவரவர் வீடு செல்லத் தொடங்கினர்.
கங்கம்மா யாருடனும் பேசாமல் வெகுநேரம் அப்படியே அமர்ந்திருந்தாள். சாப்பிட அழைத்தார்கள். அவள் இடத்தை விட்டு எழவேயில்லை. இரவு மணி பதினொன்றைத் தாண்டியது. சொற்ப உறவுப் பெண்கள் ஆங்காங்கே தலைசாய்த்து உறங்கிப் போயிருக்க அவள் மெல்ல எழுந்தாள்.
சமையலறைக்குள் போனாள். பெரிய குண்டானில் உப்புமா மிச்சமிருந்தது. கரண்டியால் இரண்டு மூன்று கட்டிகளைப் பெயர்த்துத் தட்டில் போட்டுக் கொண்டாள். தேங்காய் சட்டினி ஊசிப் போயிருந்தது. சர்க்கரையை நான்கு ஸ்பூன் அள்ளி வைத்துக் கொண்டு ருசித்துச் சாப்பிடத் தொடங்கினாள். கையைக் கழுவிக் கொண்டு திருப்தியாக ஏப்பம் விட்டவள், உள்ளறைக்குப் போனாள்.
சிவப்பு சிமெண்ட் பாவிய தரை சில்லென்று கிடந்தது. கீழே படுத்துக் கையைத் தலைக்கு அண்டைக் கொடுத்துக் கொண்டு, ஆழ்ந்து உறங்கத் தொடங்கினாள்.
படைப்பாளர்

கனலி என்கிற சுப்பு
‘தேஜஸ்’ என்ற பெயரில் பிரதிலிபி தளத்தில் கதைகள் எழுதி வருகிறார். சர்ச்சைக்குரிய கருத்துகளை எழுதவே கனலி என்ற புனைபெயரைப் பயன்படுத்துகிறார். ஹெர் ஸ்டோரிஸில் இவர் எழுதிய கட்டுரைகள், ‘பெருங்காமப் பெண்களுக்கு இங்கே இடமிருக்கிறதா?’ , ‘அவள் அவன் மேக்கப்’ , ’இளமை திரும்புதே’ ஆகிய நூல்களாக வெளிவந்திருக்கின்றன.