என்ன செய்து கொண்டிருப்பாள் இப்போது?
கையில் எடுக்கும் பொருளை வாயில் வைக்கப் பழகி விட்டாள். யாராவது ஒருவர் அருகிலேயே இருக்க வேண்டும். கொஞ்சம் அசந்தாலும் கிடைக்கும் பொருளை வாயில் போட்டுவிடுவாள். காலையில் இருந்து மதியம் வேலையில் அமரும் வரை கணவர் பார்த்துக்கொள்வார். அதற்குப் பிறகு அத்தை பார்த்துக்கொள்வார். கூடவேதான் அமர்ந்திருப்பார். எழுந்து ஏதாவது அவசர வேலை என்று சென்றால் கூட அந்த நேரத்தில் எதாவது செய்துவிடுவாள்.
வாக்கரில் அமர்ந்து வேகமாக நகர்கிறாள். வாசல் தாண்ட முயல்கிறாள். அங்கே படிக்கட்டுகள் வேற இருக்கின்றன. அன்று அப்படித்தான் சார்ஜில் இருந்து போனை எடுக்கும் போது யாரோ சுவிட்ச்சை அணைக்காமலே எடுத்துவிட்டார்கள். என் கையில் இருந்தவள் சார்ஜர் வொய்ரை தொடப் போனாள். நான் அவளைத் தடுத்துவிட்டு சுவிட்ச்சை அணைத்தேன். சோசியல் மீடியாக்களில் வரும் இது போன்ற அசம்பாவித வீடியோக்களைப் பார்க்கும் போது பயமாக இருக்கிறது.
இப்படிப்பட்ட தேவையற்ற கற்பனைகள் பயங்கள் எல்லாம் அலுவலகத்தில் இருக்கும் போது அவளை வீட்டில் விட்டுவிட்டு வந்திருப்பதை நினைத்து மனம் அச்சப்படும்.
என்ன சாப்பிடக் கொடுப்பார்கள்?
காலையில் சத்துமாவு கஞ்சி கொடுத்துவிட்டேன். நான் கிளம்பியப் பிறகு தர மாதுளை, ஆப்பிள், பப்பாளி பழங்கள் இருக்கின்றன. இதில் ஏதோ ஒன்றைத் தரலாம். மதியம் நான் ஓர் அரைமணி நேரம் வந்து போவேன். பருப்பு சாதம் குழைய பிசைந்து ஊட்ட வேண்டும். என் அத்தையும் எல்லாம் செய்வார்தான். அவள் உண்ணாமல் வேறு எதாவது கேட்டு அடம் பிடித்தாள். மெனக்கெட்டு ஊட்ட வேண்டும் இந்த வயதில் அவரும் எவ்வளவு சிரமப்படுவார்.
ஒரு வயது மகளுக்கு பிஸ்கட்டோ நொறுக்குத் தீனிகளோ தர எனக்கு விருப்பமில்லை. யாராவது அலைபேசியைப் பார்த்தால் அவளும் அதை எட்டிப் பார்ப்பாள். ஓர் அரைமணி நேரம் பாடல்கள் கேட்கிறாள் என்றால் சரி, அதையும் தாண்டி தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தாள் அலைபேசி பார்த்துக் கொண்டிருந்தாள் என்ன செய்வது? அவர்களும் எவ்வளவு நேரம்தான் விளையாடிக் கொண்டே இருப்பார்கள். அலுவலகத்தில் நான் அமர்ந்து இத்தனையும் யோசித்துக் கொண்டிருப்பேன் வீட்டில் விட்டு வந்த என் மகளைப் பற்றி.
வீட்டிற்கு வந்ததும் அவளைக் கட்டி அணைத்துக் கொண்டு அமர்ந்திருந்தேன்.
“இன்னிக்கு பாப்பா என்ன பண்ணா தெரியுமா…” என்று கணவர் சொல்ல ஆரம்பித்தார்.
“வணக்கம் சொல்றா… கை தட்றா… கண் எது மூக்கு எதுன்னு கேட்டா கரெக்ட்டா சொல்றா..”
முதல் மூன்று மாதங்கள் அவள் உறங்கிக் கொண்டும் அழுது கொண்டும் இருக்கும் போது அவளுடன் இருந்தேன். மூன்று மாதங்களுக்குப் பிறகு மெல்ல சத்தம் கேட்டு திரும்பினாள். சிரித்தாள். கை கால்களை அசைத்து விளையாடினாள்.
ஐந்து மாதங்களுக்குப் பிறகு குப்புற விழுந்து புரள ஆரம்பித்தாள். எங்களைக் கவனிக்க ஆரம்பித்தாள். வாய்விட்டுச் சிரித்தாள். எங்கள் பேச்சுகளைக் கவனிக்கத் தொடங்கினாள். பொம்மைகள், புத்தகங்களைப் பார்க்கும் போது ஆர்வம் அடைந்தாள்.
ஒன்பது மாதங்களுக்கு மேல் பல்வேறு உணர்ச்சிகளைப் புரிந்து கொள்ளத் தொடங்கினாள்.
ஒரு வருடம் நெருங்கும் போதுதான் அவள் ஒவ்வொன்றாகக் கற்றுக்கொண்டு திரும்பிச் செய்யத் தொடங்கினாள். நடக்க முயற்சித்தாள். பல சேட்டைகள் செய்யத் தொடங்கினாள். (குழந்தைக்குக் குழந்தை இந்த மாதிரியான முக்கியமான கட்டங்கள் சற்று மாறுபடலாம்.)
இப்படி அவள் பல வேடிக்கையான விஷயங்கள் செய்யத் தொடங்கும் நேரத்தில் அலுவலகப் பணியில் சேர்ந்துவிட்டேன்.
ஒவ்வொரு நாளும் வீட்டிற்கு வரும்போது இப்படி அவர் ஏதாவது சொன்னால் உள்ளுக்குள் ஒரு குற்றவுணர்ச்சி கலந்த வருத்தம் எழும். அவள் முதல் விஷயங்கள் செய்யும் போது அவளுடன் இருக்க முடியவில்லையே என.
“அம்மா கிட்ட வா சாமி” என அத்தையிடம் இருந்த மகளை கைநீட்டி அழைத்தேன்.
“ம்ஹும்” என்று வர மறுத்து தலை அசைத்தாள்.
அவ்வளவுதான், அதற்கு மேல் என்னால் அழுகையை அடக்க முடியவில்லை. எதிலோ தோற்றது போன்ற உணர்வு.
அறைக்குள் நுழைந்தேன். அழுது தீர்த்தேன்.
“இனிமே நான் வேலைக்கே போகமாட்டேன்” என்று கணவரிடம் சொல்ல ஆரம்பித்தேன்.
“என்னாச்சு இப்போ உனக்கு?”
“முதலில் நான் கிளம்பும் போது பாப்பா அழுவா.. அவளுக்குத் தெரியாம ஒளிஞ்சி போவேன். அப்புறம் அவளே புரிஞ்சிக்க ஆரம்பிச்சா.. கிளம்பும் போது டாட்டா சொல்லுவா.. நான் வீட்டுக்கு வந்ததும் கைய நீட்டிக்கிட்டு என்கிட்ட வருவா.. இப்போ நான் கூப்பிடறேன்.. அப்பவும் என்கிட்ட வராம அம்மாகிட்டயே இருக்கா.. என்னால இதெல்லாம் தாங்கிக்க முடில.. நான் வேலைக்குப் போக மாட்டேன்.”
“நீ இவ்ளோ டென்சன் ஆகி அழுது இப்படிலாம் பேசுற அளவுக்கு ஒண்ணுமே நடக்கல.. என் அம்மாகூட விளையாடிட்டு இருக்கா.. விளையாடற பொண்ணக் கூப்பிட்டா எப்படி வருவா? கொஞ்ச நேரத்துல அவளே வருவா உன்கிட்ட.”
“இன்னிக்கு அவ உன்கூட கலர் பென்சில் பிடிச்சி கலர் பண்ற வீடியோவ பார்த்ததும் நானும்கூட இல்லையேன்னு எனக்கு உன்மேல பொறாமையா இருந்தது.”
“சாயங்காலம் ஆனா எனக்கு ஒர்க் இருக்கு, நீதான அவள பாத்துக்குற.. அப்போ விளையாடு.. எல்லா நேரத்துலயும் எது பண்ணாலும் நீயும்கூட இருக்கணும்னு நினைச்சா உனக்குதான் தேவை இல்லாத ஸ்ட்ரெஸ் ஆகும்.”
“உனக்கு நான் சொல்றதெல்லாம் எங்க புரிய போகுது.. நீ போ…”
யார் வார்த்தையிலும் சமாதானம் ஆகும் நிலையில் என் மனம் இல்லை.
அரைமணி நேரம் சென்றிருக்கும்.. “ம்ம்ம்ம்ம்மா” என் கணவரின் கையில் இருந்த என் மகள் என்னை அழைத்துக் கொண்டே அறைக்குள் வந்தாள்.
தூக்கம் வந்ததும் என்னைத் தேடி வந்துவிட்டாள். சிறிது நேரம் என்னிடம் விளையாடிவிட்டு என்னைக் கொஞ்சிக் கொண்டே தூங்கினாள்.
என்ன இருந்தாலும் அம்மாவின் இடம் அம்மாவிற்கு மட்டும்தானே!
இப்படிப்பட்ட தெளிவு அவ்வப்போது எழுந்தாலும் மனம் ஒரே நிலையில் இல்லாமல் பல குழப்பங்களைத் தந்து வாட்டிக் கொண்டே இருக்கிறது.
மற்றொரு நாள் காலையில்…
இன்னும் ஐந்து நிமிடங்களில் அலுவலகத்திற்குக் கிளம்ப வேண்டும். பத்து நிமிடங்களில் என் வருகையைப் பதிவு செய்ய வேண்டும். வாசலில் நின்று கொண்டு என் மகளிடம் விடை பெற்றேன்.
என் ஒன்றரை வயது மகள் என்னைக் கைநீட்டி அழைத்தாள். நானும் உள்ளே சென்றேன்.
“ம்மா தா…” இட்லியைக் காண்பித்து ஊட்டச் சொன்னாள்.
கிளம்பும் அவசரத்தில் இருக்கும் என்னை இப்படித்தான் என் மகள் சோதிப்பாளா! வீட்டில் இருக்கும் போது ஒவ்வொரு வாய் ஊட்டுவதற்கும் போராட வேண்டும். இன்று ஏற்கெனவே அலுவலகத்திற்குத் தாமதமான நிலையில் அவளுக்கு ஊட்டிவிட என்னை அழைக்கிறாள்.
காலில் உள்ள செருப்பைக் கழட்டி விட்டுவிட்டு உள்ளே ஓடினேன். கையில் தட்டை எடுத்தேன். அவளுக்கு ஊட்டிவிட ஆரம்பித்தேன்.
நேரம் 9:56.. அடம் பண்ணாமல் முதல் வாய் வாங்கிக் கொண்டாள். 9:57.. என்னிடுப்பில் அமர்ந்து கொண்டாள். 9:58.. அடுத்தடுத்து ஊட்ட அடம் பண்ணாமல் வாங்கிக் கொண்டாள். 9:59.. தண்ணீர் வேண்டும் என்று கேட்டாள். நேரம் 10 மணி மீண்டும் வாயைத் திறந்தாள்.
“சார், கொஞ்சம் எமெர்ஜென்சி நான் ஒரு ட்வெண்ட்டி மினிட்ஸ்ல வந்தட்றேன்.” அவ்வளவு தான் இணைப்பைத் துண்டித்து விட்டு நிதானமாக அவளுக்கு ஊட்ட ஆரம்பித்தேன்.
இப்பொழுது அலுவலகத்திற்குச் சென்று என்ன காரணம் சொல்வதென்று தெரியவில்லை. ஆனால் ஒரு திருப்தி என் மகளுடன் ஆசைத் தீர நேரம் செலவழித்து விட்டேன்.
அலுவலகத்திற்குச் சென்று எதுவும் பேசாமல் அமர்ந்து கொண்டேன். தர்மசங்கடமாகத்தான் இருந்தது ஆனாலும் அதைப் பொருட்படுத்தாமல் வேலையைத் தொடங்கினேன்.
அன்று கொஞ்சம் வேலைகளைச் சேர்த்து செய்து தாமதமாக வந்த நேரத்தைச் சமன் செய்யத் தாமதமாக வீட்டிற்குத் திரும்பினேன்.
அவ்வளவுதான் என் கையில் இருப்பது. வேண்டிய நேரத்தில் விடுப்புகளும் தயங்காமல் எடுத்துக் கொண்டேன். ஒவ்வொரு முறை மேனேஜரிடம் நின்று விடுமுறை கேட்கச் சிரமமாகத்தான் இருந்தது. ஆனால் அந்நாள் என் மகளுடன் மீண்டும் இருக்க வாய்ப்பு கிடைக்காது என்பதால் துணிந்து எடுத்துக் கொண்டேன்.
அதே நேரம் அலுவலகத்தில் இருக்கும் போது வீட்டைப் பற்றி அதிகம் நினைப்பதைக் குறைத்துக் கொண்டேன்.
என் அறிவை, என் படிப்பைப் பயன்படுத்தி வேலைப் புரிய மீண்டும் எனக்கொரு வாய்ப்பு கிடைத்திருக்கின்றதாக மகிழ்ந்தேன்.
என் மனதை என் மகள் ஆட்கொண்டு இருந்தாலும் அவள் அங்கே அவள் அப்பாவுடனும் தாத்தா பாட்டியுடனும்தானே இருக்கின்றாள் ஏன் தேவையற்ற சிந்தனைகள் கொள்ள வேண்டும். எல்லாம் நூறு சதவீதம் சரியாகவும் நான் நினைப்பதை போன்றும் இருக்க வேண்டும் என நினைப்பது தவறுதானே. அவர்களுக்கும் தன் மகள் மேல் தன் பேத்தி மேல் உரிமை இருக்கிறதுதானே.
நான்தான் எல்லாவற்றையும் செய்வேன் என அடம்பிடித்தால் என் உடலும் மனமும்தான் பாதிக்கப்படுகிறது.
அலுவலகத்திலும் நூறு சதவீதம் மகள் வளர்ப்பிலும் நூறு சதவீதம் நான் மட்டும்தான் என்று இல்லாமல் சரிவிகிதமாகப் பார்த்துக் கொண்டால் சவால்களும் சுவாசியமாக இருக்கிறதே.
இன்னும் எத்தனை சுவாரசியங்கள் காத்திருக்கிறதோ!
(தொடரும்)
படைப்பாளர்:

ரேவதி பாலாஜி
சேலம் மாவட்டத்தில் பிறந்து வளர்ந்தேன். தற்சமயம் ஈரோட்டில் வங்கிப் பணியாற்றி வருகிறேன். சிறு வயதில் இருந்தே தமிழ் மீதும் புத்தக வாசிப்பின் மீதும் பெரும் ஆர்வம் கொண்டேன். கடந்த சில ஆண்டுகளாக வாழ்க்கை ஏற்படுத்துகிற தாக்கங்களைக் கதைகளாகவும் கட்டுரைகளாகவும் பதிவு செய்து வருகிறேன். மைவிகடன் இணைய தளத்தில் நாற்பதிற்கும் மேற்பட்ட கட்டுரைகள் எழுதியுள்ளேன். கடந்து ஆண்டு சஹானா இணைய இதழ் நடத்திய நாவல் 2023-24 போட்டியில் பங்கேற்று முதல் பரிசு பெற்றுள்ளேன். அதில் ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் என்கிற தலைப்பில் நான் எழுதிய நாவல் புத்தகமாகவும் வெளிவர உள்ளது.




