மிக்கேலம்மாள் என்பது அவர் பெயர். ஆனால், அந்தப் பெயரைச் சொல்லி அவரை யாராவது அழைத்தார்களா என்பது எனக்குத் தெரியவில்லை. ஊரில் பெரியவர்களுக்கு அவர் ‘அன்னம் பேத்தி’.

எங்களைப் போன்ற பிள்ளைகளுக்கு ‘ஜெகதீஸ் பாட்டி’. அவருடைய பெயரைவிட, இந்த உறவுப் பெயர்கள்தான் எல்லோருடைய நாவிலும் பழக்கமாக இருந்தன. நிமிர்ந்த நடையும் நேர் கொண்ட பார்வையும் என்ற பாரதியின் சொல்லுக்கு இலக்கணம் வகுத்தவர். நெடுநெடுவென உயரம். கூர்மையான கண்களைக் கொண்டதால் இதைச் சொல்கிறேன். கண்கள் எவ்வளவு கூர்மை என்றால் 80+ வயதிலும் ஊசியில் நூல் கோத்தல் போட்டியில் கலந்து கொள்வார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். பரிசும் வாங்கியதாகச் சொல்வார்கள்.

வீட்டினருகிலிருக்கும் அந்தோனியார் கோயில்தான் பாட்டியின் உலகம். நாளில் இருபது மணிநேரம் கோயில் வாசலிலேயே இருப்பார் என்று சொன்னால் மிகையாகாது. தூங்குவதுகூடக் கோயில் வாசலில்தான். வீட்டில் இருப்பதைவிடக் கோயில் வாசலில் இருப்பதுதான் அவருக்குப் பிடித்தமானது.

அவர் மட்டுமல்ல பலரின் வாழ்விடமாகவே அருகிலிருந்த கோயில்கள்தான் அமைந்தன. மின்சார வசதி இல்லாத, அல்லது குறைவான வீடுகளில் மட்டுமே இருந்த காலகட்டத்தில், பலரும் இரவில் கோயில்களில்தான் படுப்பார்கள். பெரியவர்கள் நான்கரை மணிக்கு அடிக்கும் விடிகாலை மணி ஓசை கேட்டதும் வீட்டிற்குச் சென்றுவிடுவார்கள். குழந்தைகள் முகத்தில் வெய்யில் விழும்வரை தூங்கும். பல குடும்பங்களில் வீடு என்பது தம்பதியருக்கானது என்ற நிலை தான் இருந்தது.

கோயில் வாசலில் பிள்ளைகள் விளையாடும்போது ஏதாவது சண்டை வந்துவிட்டால், பாட்டிதான் பஞ்சாயத்துக்காரர்.

“ஏலேய், என்னலே சத்தம்? கோயில் வாசல்ல வச்சு இப்படியா சண்டை போடுவிய?”

“அவன்தான் பாட்டி, என்ன அடிச்சான்!”

“நீ என்ன செஞ்ச? அவன் சும்மாவா அடிச்சிருப்பான்? ஒழுங்கா சொல்லுங்கலே!”

இப்படித்தான் விசாரணை நடக்கும்.

பிள்ளைகள் மட்டுமா? கோயில் வாசலைக் கடந்துபோகிறவர்களையும் பாட்டி சும்மாவிடமாட்டார்.

“எங்காச்சி, எங்க போயிட்டு வார?”

“கடைக்குப் போயிட்டு வாரேன், பாட்டி.”

“ஏளா, என்ன! கண்டும் காணாம போறே?”

இப்படி விசாரிப்புகள் போகும்.

மதியத்திற்குமேல் பெரிய குழுவாக இருந்து தாயம் விளையாடுவார்கள். சுட்டிக்கல் விளையாடுவார்கள். எல்லாவற்றிலும் பாட்டியும் ஒரு அங்கம். அவரைத் தேடி யாரும் வீட்டுக்குப் போகவேண்டியதில்லை. கோயில் வாசலுக்குப் போனால் போதும்.

ஆனால், அன்று பாட்டியின் நல்ல நேரமா, கெட்ட நேரமா என்று எனக்குத் தெரியவில்லை. கோயில் வாசலில் பாட்டி இல்லை!

பிள்ளைகள் வழக்கம்போல் விளையாடிக்கொண்டிருக்கிறார்கள்.

இங்கேதான் தாத்தா அதாவது பாட்டியின் கணவர் வருகிறார். அவர் பெயர் சவரிமுத்து.

இனி கதையை அவர் சொல்வார்.

பேருந்திலிருந்து இறங்கிய எனக்கு, ஊரில் எங்கே நிற்கிறோம் என்றே
தெரியவில்லை. நான் ஊரிலிருந்தபோது தார்ச்சாலையைப் பார்த்ததில்லை. முன்பு ஒரே ஒரு பேருந்து மட்டும் ஓடிக்கொண்டிருந்த மண் சாலைதான் இப்போது தார்ச்சாலையாக மாறியிருப்பதுபோலத் தெரிகிறது. அப்படியானால், வீட்டுக்கு வடக்கில் நிற்கிறேன்.

சுற்றுமுற்றும் பார்த்தேன். உணவகங்கள், அச்சகம், மிதிவண்டிக் கடை என ஊரே அடையாளம் தெரியாமல் மாறியிருந்தது. இருபது மைல் தொலைவிலிருந்தே கண்ணுக்குத் தெரியும் மாதா கோயில்கூட, இப்போது கண்ணெட்டும் தொலைவில் நின்றும் தெரியவில்லை. சுற்றியிருந்த கடைகள், கோபுரத்தை மறைத்திருந்தன.

‘இல்லையென்றால் மட்டும் நமக்குத் தெரிந்துவிடுமா?’ என்கிற எண்ணம் சட்டென்று வந்தது. வயதுதான் எதிரில் வரும் ஆளே தெரியாம நம் கண்ணை மறைத்துவிட்டதே! இதில் கோபுரம் மட்டும் எப்படித் தெரியும்?

பேருந்து வந்த பாதையிலேயே நடந்தால் வீட்டைக் கண்டுபிடித்துவிடலாம் என்று நினைத்தேன். ஐம்பதடி தூரம் நடந்ததும், இடதுபுறத்தில் வின்சென்ட் வீடு தெரிந்தது. அப்பாடா! நம் தெருதான்! நான் ஊரைவிட்டுச் சென்றபோது புதிதாகக் கட்டப்பட்டுப் பளபளத்த வீடு, இப்போது வெள்ளையடிக்கப்படாமல் பழைய வீடாகக் காட்சியளித்தது. பழமையானது வீடு மட்டுமா? நானும்தானே!

உள்ளம் பரபரத்தது. சாலையைக் கடந்து தெற்கே நடந்தால் அந்தோனியார் கோயில். இதோ, கோயிலுக்கு அடுத்த வீடுதான் நம் வீடு. ஆனால், அது இன்னமும் நம் வீடுதானா? ஆயிரக்கணக்கில் பணம் அனுப்பிய காலத்திலேயே பணத்தை வைத்துக்கொண்டு வாழத்தெரியாதவள், இப்போது வீட்டையும் விற்றுவிட்டு, வேறு எங்காவது போயிருந்தால் என்ன செய்வது? என் குடும்பம் இங்கே இருக்குமா? குடும்பம் என்று ஒன்று நமக்கு இருக்கிறதா? பல கேள்விகள் உள்ளத்தில் மோதின!

இலங்கையிலிருந்து இராமேசுவரம் வந்து, கையிலிருந்த பணத்தையெல்லாம் திருட்டுக் கொடுத்துவிட்டு, எப்படியோ ஊர் வந்து சேர்ந்தாகிவிட்டது. இன்னும் பத்தடி நடந்தால் வீடு. இத்தனை தூரம் வந்த பிறகும் தெற்கே நடக்கக் கால்கள் வரவில்லை. கோயில் வாசலில் பத்து நிமிடங்களாக நின்றுகொண்டிருந்தேன்.

தாத்தா கிழக்கும் மேற்குமாக நடக்கிறார். முதல் வீட்டின் கதவு, கடை போன்ற அமைப்பிலிருந்தது. முழுவதுமாகத் திறந்துதான் இருந்தது! உள்ளே ஓர் இளைஞனின் பெரிய புகைப்படம் மங்கலாகத் தெரிகிறது. படத்திற்கு மாலை போட்டிருக்கிறார்கள்! இளம் வயதிலேயே இறந்திருக்கவேண்டும்! பாவம்!

மீண்டும் கோயிலைப் பார்க்கிறார். மொட்டைக் கோபுரமாகத்தானே அந்தோனியார் கோயிலிருந்தது. இது கோபுரம் கொண்ட கோயிலாக இருக்கிறதே! இது அந்தோனியார் கோயில் தானா? இல்லையா?

அவர் நிற்குமிடமெது என்பதே இப்போது அவருக்குத் தெரியவில்லை. குழப்பத்தில் உறைகிறார்.

கோயில் வாசலில் விளையாடிக் கொண்டிருந்த பிள்ளைகள் கிழக்கில் புதிதாகச் சுற்றிக் கொண்டிருந்த தாத்தாவைப் பார்க்கின்றனர். சட்டையில்லா மெலிந்த உடம்பு. எதையோ தேடும் குழிவிழுந்த கண்கள்; கலவரம் நிறைந்த முகம். பிள்ளைகளுக்குக் கொஞ்சம் குழப்பம்தான்!

“தாத்தா ஊருக்குப் புதுசு போல! என்னன்னு கேப்போம்!”

பிள்ளைகள் அவரை நோக்கி வருகிறார்கள்.

“என்ன தாத்தா! ஊருக்கு புதுசா?”

“இல்லப்பா! ஊரு தான் எனக்கு புதுசா இருக்கு!”

“டேய்! கொழும்பு தாத்தாடா! நம்மள ரொம்ப குழப்புறாவ.”

தாத்தா என்னதான் முயன்றாலும் அவரின் பேச்சில் இலங்கைத் தமிழ் எட்டிப்பார்த்தது!

“எனக்கும் கள்ளிகுளம்தான்”

“அப்பிடியா? நானெல்லாம் பாத்ததேயில்ல”

“நாந்தான் ஊருக்கு வந்து ஆயிட்டே நாற்பது ஆண்டு!”

“என்னது? நாப்பது ஆண்டா? அடேங்கப்பா!”

“இது அந்தோனியார் கோயிலா?”

“ஆமா”

“இங்க தாசன்னு யாராவது இருக்கவளா?”

“நல்ல கேள்வி? அதான் தெருவுக்கு நாலு தாசன் உண்டே! யாருனு சொல்லுறது!”

“முழுப்பேரு தேவதாசன்”

சிறுவர்கள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்கிறார்கள்.

அப்போது கோயிலிலிருந்து கிழக்கே செல்லும் தெருவின் முதல் வீட்டுக் கதவு திறந்தது. நடுத்தர வயதுப் பெண் வெளியே வருகிறார்.

“இங்க தேவதாசன் யாரு?”

பிள்ளைகள் அந்த அம்மாவை வினவுகிறார்கள்.

“ஏன்? அண்ணாச்சி தான்!”

“புதுப்பணக்காரத் தாத்தா தான ஒங்க அண்ணாச்சி?”

(இப்படிச் சொல்வதற்கும் ஒரு காரணம் உண்டு. ஊரில் பல தாசன்கள் உண்டு என்பதால் எல்லோருக்குமே ஒரு பட்ட பெயர் இருக்கும். சில பெயர்களெல்லாம் மிகவும் நகைச்சுவையாக இருக்கும். இந்தத் தாசன் மகன் ஜெகதீஸ் மிகவும் இளம்வயதில் சவுதி அரேபியா சென்று சம்பாதித்து அனுப்பினார். தாசன் தாத்தாதான் பணத்தை வங்கியிலிருந்து எடுத்து வருவார். காலில் நல்ல செருப்பு, கைக்கடிகாரம், நேர்த்தியான ஆடை, சட்டைப்பையில் பணமெனத் தாத்தா எப்போதுமிருப்பார். இதனால் நண்பர்கள் கேலியாக வைத்த பெயர் நிலைத்துவிட்டது.)

“அவருக்கும் பெயர் உண்டுல்லா!”

“ஆமா ஜெகதீஷ் அப்பா”

“ஒங்களல்லாம் திருத்தவே முடியாது!”

அந்தப்பெண் இப்போது பெரியவரை நோக்குகிறார்.

“ஆமா நீங்க அவருக்கு யாரு?

“தேவதாசனுக்கு நான் ஐயா”

“ஐயா! நாந்தா தாயம்மா!”

அவர் கத்தியதில் ஊரே கூடிவிட்டது!

அத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு, பிரிந்துபோன தந்தையும் மகளும் ஒருவரையொருவர் அடையாளம் கண்டுகொண்ட தருணம் அது. அந்தச் சந்திப்பில் அழுகையும் அன்பும் ஒன்றாகப் பெருக்கெடுத்தன.

தாத்தா, வீட்டிற்குச் செல்கிறார். வீட்டில் பேரனின் மகனுக்கே இப்போது பத்து வயது. இவர் இறுதியாகத் தன் மகனைப் பார்த்தபோது இதே வயதில்தான் இருந்தான். காலம்தான் எத்தனை ஓடிவிட்டது.

நிமிர்ந்த நடையும் நேர்கொண்ட பார்வையுமாய் பாட்டி இப்போது வீட்டினுள் நுழைகிறார்.

“அந்த மனுசன எதுக்கு உள்ள எடுத்தே! போனவரு அப்படியே போயிருக்க வேண்டியது தானே? வெளியே போச்சொல்லு!”

பேரனிடம் பாட்டி கத்துகிறார்.

40+ ஆண்டுகளுக்கு முன் என்ன நடந்ததெனப் பார்ப்போமா?

அந்தக் காலத்தில் பலர் இலங்கைக்குச் சென்று பொருளீட்டினார்கள். அப்படிச் சென்றவர்களில் ஒருவர்தான் இந்தத் தாத்தா! பெயர் சவரிமுத்து. அங்கே ஒரு கிறித்தவ இளைஞர் அமைப்பான YMCA-வின் மகளிர் விடுதியில் காப்பாளர் பணியில் சேர்ந்தார். கிடைத்த பணத்தை மனைவிக்கு அனுப்பினார். ஒருமுறை குதிரைப் பந்தயத்தில் பத்தாயிரம் ரூபாய் வென்றார். அந்தக் காலத்தில் அது பெரிய தொகை. தன் வாழ்வில் கிடைத்த அந்தப் பெரும் தொகையை, மனைவிக்கு அனுப்பிவைத்தார்.

ஓரிரு ஆண்டுகள் கழிந்தன. இப்போது அவருக்கு ஊரில் வந்து ஏதாவது தொழில் செய்யலாம் என்று விருப்பம். ஊருக்குத் திரும்பி வருகிறார். பணமெங்கே என்று கேட்டால் மனைவியிடம் பணமில்லை. முறையான எண்ணிக்கைகூடத் தெரியாத பாட்டி, ஒருவரிடம் கொடுத்துவைக்க, பணம் திரும்பக்கிடைக்கவில்லை. தாத்தாவிற்குக் கோபம். ஒரு பவுன் ஏறக்குறைய நூறு ரூபாய் என்று இருந்த காலத்தில் அது எவ்வளவு பெரிய பணமென நினைத்துப் பார்த்தால் தாத்தாவின் கோபம் புரியும்.

அன்று திரும்பிப் போனவர் தான். ‘போனவன் போனாண்டி’ என ஆகிப்போனார்!

அவர் ஊரை விட்டுச் செல்லும்போது பத்து வயதாக இருந்த மகன் பேரப்பிள்ளைகள் எடுத்து வாழ்கிறார். மூன்று வயதுக் குழந்தையாக இருந்த மகள், அவர் திரும்பி வந்தபோது ஐந்து பிள்ளைகளுக்குத் தாயாகி, இளமையிலேயே கணவனை இழந்து குழந்தைகளை வளர்க்கப் போராடிக்கொண்டிருக்கிறார்.

பாட்டி, தன்னந்தனியாக முதலில் தன் பிள்ளைகளை வளர்த்திருக்கிறார். பிறகு கணவனை இழந்த மகளுடன் இணைந்து உழைத்திருக்கிறார். அவரது ஆப்பம் மிகவும் சுவையாக இருக்குமென உண்டவர்கள் சொல்கிறார்கள். நண்பர் ஒருவர் பாட்டியை ‘வளத்தம்மை’ என்று குறிப்பிட்டார். ‘வளர்த்த அம்மா’ என்பது அம்மாவின் அம்மாவிற்குச் சில பேரப்பிள்ளைகள் கொடுத்த அடைமொழி. அதை ஒருவர் பெறுகிறார் என்றால் அவரது அன்பை நாம் உணர்ந்து கொள்ளலாம்.

1982–83ஆம் ஆண்டு காலகட்டத்தில், ஏதிலிகளாகப் பலர் இந்தியா வந்தனர். தாத்தா அப்போதும் போர் குறித்த அபாயம் எதுவுமில்லாத இடத்தில் பாதுகாப்பாகத்தான் இருந்திருக்கிறார். ஆனால், செய்தித்தாளில், பலரும் இந்தியா வரும் செய்திகளைத் தொடர்ந்து பார்த்த வண்ணமிருந்த தாத்தாவிற்கு, ஊர் திரும்பும் எண்ணம் உள்ளத்தில் அலைமோதியிருக்கிறது. தாத்தா, தன் விருப்பத்தைத் தெரிவிக்க, அருள்சகோதரிகள் பணமெல்லாம் கொடுத்துத்தான் தாத்தாவை அனுப்பிவைத்திருக்கிறார்கள். ‘ஒருவேளை குடும்பத்தினரைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றாலோ, அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்றாலோ திரும்பவும் வந்துவிடுங்கள்’ என்று சொல்லித்தான் அனுப்பியிருக்கிறார்கள்.

கையிலிருந்த பணம் எல்லாம் ராமேஸ்வரத்தில் திருடப்பட்டதால் வெறுங்கையுடன்தான் தாத்தா ஊர் வந்துசேர்ந்திருக்கிறார். இப்போது வீட்டில் பாட்டிமுன் அமர்ந்திருக்கிறார்.

“நாம இருக்கோமா செத்தோமாங்கிறதே தெரியாத இந்த மனுசனுக்கு இங்க என்ன வேல? எங்கூடத்தான் கோபம். புள்ளைங்க என்ன செய்யும்னு கொஞ்சமாவது நெனச்சுப் பாத்திருந்தா இப்டி இருந்திருப்பாவளா? என்னோட வயசு அப்போ என்ன? என்ன செரமமெல்லாம் பட்டிருப்பேன்! சரி ரெண்டு புள்ளைங்களையும் வளத்து உட்டேனே! அதுக்குப் பெறவாவது இந்த பனிமாதா என்ன சும்மா உட்டாளா?

வாசலில சும்மா உக்காந்திருந்த மனுசன், யார்னு அடையாளம் தெரியாம போலீஸ் அடிச்ச அடில போய்ச்சேந்திட்டாரு. இதுல ஏதாவது இந்த மனுசனுக்குத் தெரியுமா? வந்துட்டாருன்னு எல்லாரும் கொஞ்சுதியளே!”

பாட்டி குமுறினார்.

மகளின் கணவர் இறந்து விட்டார் என்று சொன்னேனே! அவர் சும்மா இறக்கவில்லை. வேறு ஒரு ஆளைத் தேடிவந்த போலீசார் தவறான புரிதலால் அடித்த அடியில் இறந்துபோனார். கருப்பட்டி வணிகம் செய்து கொண்டிருந்த அந்த குடும்பம், வாழ்க்கையை இழந்தது.

பாட்டி முறைத்துக்கொண்டே இருந்தாலும் தாத்தாவை குடும்பம் அன்போடு அரவணைத்துக்கொண்டது. பேரப்பிள்ளைகளும் கொள்ளுப் பேரப்பிள்ளைகளும் தாத்தாவிடம் அன்பைக்கொட்டினார்கள். அவரும்தான்! இத்தனை ஆண்டுகள் குடும்பத்திலிருந்து விலகியிருந்த அவர், அவர்களோடு இருந்த காலத்தில் தனக்குக் கிடைக்காமல்போன உறவின் அன்பை ஓரளவாவது அவர் அனுபவித்திருக்கவேண்டும். தன் பிள்ளைகளின் இளமைப் பருவத்தையும் அவர்களுடைய வளர்ச்சியையும் தவறவிட்டவர், பேரப்பிள்ளைகளின் வாழ்க்கையில் இடம்பிடித்தார். கொள்ளுப் பேரப்பிள்ளைகளைக் கொஞ்சினார்.

பாட்டியின் கோபம் ஏற்றுக்கொள்ளக்கூடியது. தாத்தாவும் இத்தனை காலம் பிரிந்திருந்தாலும் மனைவியை நினைத்தவாறே ‘பிறன் மனை நோக்கா பேராண்மை’ எனத்தான் வாழ்ந்திருக்கிறார். அந்தக் காலகட்டத்தில் இலங்கை, மலேசியா போன்ற நாடுகளில் வாழ்ந்த பலரும் இங்கும் அங்குமாக குடும்பம் வைத்திருந்தனர். இங்கு குடும்பம் இருப்பது அங்கு தெரியாது; அங்கு குடும்பம் இருப்பது இங்கு தெரியாது. இப்படி இரட்டை வாழ்க்கை வாழ்ந்தவர்கள் பலர். இவ்வாறான சூழ்நிலையில் தாத்தா, பாட்டியின் நினைவுகளைச் சுமந்துதான் வாழ்ந்திருக்கிறார். பாட்டியும் மிகக்கண்ணியமாகவே தன் வாழ்வைத் தொடர்ந்திருக்கிறார்!

ஒருவேளை, குதிரைப் பந்தயத்தில் பணம் கிடைக்காமலிருந்திருந்தால் இவ்வளவு நீண்ட பிரிவு ஏற்பட்டிருக்காதோ என்றுகூட நினைக்கத் தோன்றுகிறது.

கடந்த காலத்தின் காயங்கள் ஆறவில்லை. இழந்த ஆண்டுகளை மீண்டும் பெறவும் முடியவில்லை. யாரைக் குறைசொல்வது? பணத்தைப் பாதுகாத்து, பிள்ளைகளின் எதிர்காலத்தை அமைத்துக்கொள்ளத் தெரியாமல்போன பாட்டியையா? தன் உழைப்பின் பயன் வீணானதைத் தாங்கமுடியாமல் குடும்பத்தைவிட்டுப் பிரிந்துசென்ற தாத்தாவையா? அல்லது, இதற்குக் காரணமாக இருந்த பணத்தையா?

தொடரும்…

படைப்பாளர்

பாரதி திலகர்

தீவிர வாசிப்பாளர், பயணக் காதலர்; தொன்மை மேல் பெரும் ஆர்வம் கொண்டவர். அயல்நாட்டில் வசித்து வந்தாலும் மண்ணின் வாசம் மறவாமல் கட்டுரைகள் எழுதிவருகிறார். ஹெர் ஸ்டோரிஸில் இவர் எழுதிய கட்டுரைகள், ‘பூப்பறிக்க வருகிறோம்’, ‘சினிமாவுக்கு வாரீகளா ? – 1, 2 & 3’ என்கிற புத்தகங்களாக, ஹெர் ஸ்டோரிஸில் வெளிவந்திருக்கின்றன. இவை தவிர ‘தமிழர் பாரம்பரிய விளையாட்டுகள்’, ‘நகர்தல் என்றும் நன்று’, ‘கேட்டல் என்றும் நன்று’, ‘ஒரு தாய் மக்கள்’ ஆகிய நூல்களை எழுதியுள்ளார். தொடர்ந்து இந்து தமிழ் திசை உள்ளிட்ட நாளிதழ்களில் எழுதிவருகிறார். இவரது நூல்கள் கவிதை உறவு உள்ளிட்ட விருதுகளை வென்றுள்ளன. ‘சினிமாவுக்கு வாரீகளா – 4’ மற்றும் ‘சாதனை படைக்கும் சாமானியர்’ என்கிற இரண்டு தொடர்களை ஹெர் ஸ்டோரீஸ் வலைத்தளத்தில் எழுதியுள்ளார்.