இவரைச் சாமானியர் எனச் சொன்னால் கள்ளிகுளம் ஊரே கொந்தளித்து விடும். அவ்வளவு  நல்மதிப்பைப் பெற்றவர். ஒரு ஆசிரியராகத் தன் வாழ்வைத் தொடங்கியவர்,  எப்படி ஆயிரக்கணக்கானவர் மதிப்பைப் பெற்றார் என்பதே இப்பதிவு. 

பணியில் இருக்கும் போது எட்டாப்பு டீச்சர் என்றும் பிற்காலத்தில் இல்லத்து டீச்சர் என்றும் மக்களால் அழைக்கப் பட்டவரின் பெயர் பிலீஸ் ஆசீர்வாதம். அவர்கள் இன்றைய கன்னியாகுமரி மாவட்டம் நெய்யாற்றைச் சார்ந்தவர்கள். வேலை நிமித்தம் கள்ளிகுளம் வந்தவர்கள். வந்த ஊரைத் தனது சொந்த ஊராகக் கருதியவர்கள். 

அவர் பணி ஓய்வுபெற்ற ஆண்டைக் கணக்கிட்டால், 1916ஆம் ஆண்டு பிறந்து இருக்க வேண்டும். ஆனால் அவரது கல்லறையில் 1939 எனப் போட்டிருப்பது அவர் பணிக்கு என, கள்ளிகுளம் வந்த ஆண்டாக இருக்க வேண்டும்.  உண்மையில் அவர் பிறந்ததே இந்த ஊருக்காகத்தான். பிறந்த ஊர் அன்றைய திருவிதாங்கூர். அங்கிருந்து இங்கு எதற்காக வந்தார் என்பதே வியப்பு தான். அவ்வளவு குளிர்ச்சியான இடத்தை விட்டுவிட்டு, இறுதிவரை இந்த ஊரிலிருந்தார் என்னும்போது கால்டுவெல் இடையன்குடி இடையிலான தொடர்புதான் நினைவிற்கு வருகிறது. 

அவர் பெண்கள் பள்ளியின் தலைமை ஆசிரியர். அந்தக்  காலகட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்தூரில் பெண்களுக்கான ஆசிரியர் பயிற்சிப் பள்ளி இருந்து இருக்கிறது. இவர் தன் மாணவர்களில் யாரை எல்லாம் படிக்க அனுப்ப முடியுமோ அவர்களை எல்லாம் அனுப்பி வைத்து இருக்கிறார். இன்றும் ஊரில் பல பெண்கள், ஆசிரியராக இருப்பதற்கு அடித்தளம் அப்போதுதான் போடப்பட்டது. அங்கொன்றும் இங்கொன்றும் என ஆசிரியர்கள் இருந்த நிலை போய் குடும்பத்திற்கு சில ஆசிரியர்கள் என்ற நிலை உருவாகி இருப்பதற்கு அனைவரும் அவருக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். 

எல்லாம் சரி. இப்போது படித்து வருபவர்களுக்கு வேலை வேண்டுமே! அதற்குப் புதிதாக வகுப்புகள் உருவாக வேண்டும்; மாணவர்களின் எண்ணிக்கை உயர வேண்டும். இல்லத்து டீச்சர் பல முயற்சிகளை எடுத்தார். மாணவர்களின் எண்ணிக்கையைப் பெருகினால்தான், படித்துவிட்டு வந்த ஆசிரியைகளுக்கு வேலை வாய்ப்புக்கள் அமையும் என உணர்ந்த அவர், சுற்றி உள்ள கிராமங்களுக்கு வீடு வீடாகச் சென்று மாணவர்களைப் பள்ளியில் சேர்த்தார்.

மிகவும் கண்டிப்பாகவும் இருந்து இருக்கிறார்; அதேநேரம் கனிவாகவும் இருந்து இருக்கிறார். தனது மாணவர்களைக் குழந்தைகளைப்போல் அதட்டுவதாகட்டும்; அவர்கள் அனுபவிக்காத பலவற்றை ஏற்படுத்திக் கொடுப்பதாகட்டும் அன்னை போன்றே வாழ்ந்து இருக்கிறார். பல முன்னாள் மாணவர்களுக்கு இறுதிவரை கூட ஒரு தார்மீக ஆதரவு (moral support) கொடுப்பவராக இருந்தார்.

 திரைப்படங்களுக்கு அழைத்துச் செல்வது, உல்லாசப்பயணம் அழைத்துச் செல்வது, தனது உறவினர் வீடுகளுக்கும் தன் குழந்தைகள் போல அழைத்துச் செல்வது, அவர் எங்காவது சென்று வந்தால் பரிசு வாங்கி வருவது என அவ்வளவு அன்பைச் செலுத்தி இருக்கிறார். கொழும்பு சென்று வந்தால், ராணி சந்தன சோப்பு, மஸ்கொத் எல்லாம் வாங்கி வந்து கொடுப்பாராம். இவற்றை அனுபவித்த மாணவர்களில் என் அம்மாவும் ஒருவர்.

அந்தக் காலகட்டத்தில் பல ஊர்களில் ஐந்தாம் வகுப்பிற்கும் மேல் பள்ளிகள் கிடையாது. பெற்றோர் கூலி வேலைக்குப் போனால் கவனிக்க ஆள் கிடையாது; பிள்ளைகளைக் கட்டாயமாக வேலைக்கு அழைக்கும் பண்ணையார்கள் எனப் பல குடும்பங்கள் இன்னல்கள் நிறைந்தவையாக இருந்து இருக்கின்றன. இரண்டையும் ஒரு புள்ளியில் ‘இல்லத்து டீச்சர்’ இணைத்தார். 1962 ஆம் ஆண்டு, ஓர் இல்லத்தைத் தொடங்கினார்.

தனது சொந்த சம்பளம், தனது பெற்றோரின் சொத்திலிருந்து தனக்குக் கிடைத்த பங்கு, வசூலித்த நன்கொடை போன்றவற்றைக் கொண்டு புனித சூசையப்பர் இல்லத்தை நிர்வகித்தார். இதனால் பல ஏழைக் குழந்தைகள் படிக்க வாய்ப்பு கிடைத்தது. பள்ளியின் ஆசிரியர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது. 

நாங்கள் படித்த காலகட்டத்தில் 200- 300 பிள்ளைகள் இல்லத்திலிருந்தார்கள். ஒரு வகுப்பிற்கு 20 மாணவர்கள் என வைத்துக் கொண்டால், 10 ஆசிரியர்கள் வேலை பெற்று இருக்கிறார்கள்; அல்லது தக்கவைக்கப்பட்டு இருக்கிறார்கள்.

ஊரில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடிய நேரம். இவர், அந்தப் பிள்ளைகளுக்கு குளிப்பதெற்கெனத் தோட்டம் ஒன்று வாங்கினார். அப்படி இல்லம் மீதான அவரது அக்கறை இருந்தது. அந்தப் பிள்ளைகள் மிகவும் கண்ணியமாக வாழ்ந்தார்கள். 

ஊர் மக்களுக்கு டீச்சர் மீது இருந்த மதிப்பு என்பது அந்த பிள்ளைகள் மீது வெளிப்பட்டது என்றே சொல்லலாம்.  அந்தப் பிள்ளைகள் பள்ளிக்கு வருவதாக இருந்தாலும் பள்ளியிலிருந்து செல்வதாக இருந்தாலும் இணைந்தே செல்வார்கள். யார் வீடுகளுக்கும் செல்ல மாட்டார்கள். இது அவர்களின் ஒழுங்கு என்றால், ஊரில் யாரும் அந்தப் பிள்ளைகளிடம் வாலாட்ட மாட்டார்கள். பின்னால் செல்வது, கேலி பேசுவது என எதுவுமே இருந்தது இல்லை என்பதை இப்போது நினைத்துப் பார்க்கும் போது வியப்பாகவே இருக்கும். இன்றும் ஊரில் சாதி மதம் கடந்து யாரைக் கேட்டாலும் இல்லம்/ டீச்சர் என பேசினால் அவர்கள் பேச்சிலேயே உடனே மரியாதை என்பது கலந்து விடும்,

புதிதாக, ஊரில், ITI  கல்லூரி, தட்டெழுத்து பயிற்சி நிலையம் என எது தொடங்குவதாக இருந்தாலும் தற்காலிகமாக இல்லத்தில் தொடங்குவதற்கு டீச்சர் அனுமதி கொடுப்பார். இறந்த பிறகு இல்லத்தை நிர்வகிக்கும் பொறுப்பைத் தனது குடும்பத்தில் யாரிடமும் கொடுக்காமல், பொதுத் தொண்டிற்கென கொடுத்து விட்டார்.

பிற்காலத்தில் அரசு உதவி செய்தாலும் இந்த பெரிய நிறுவனத்தை ஒரு ஆசிரியரின் சிறு ஒற்றை சம்பளம்தான் உருவாக்கியது. ஒரு பெண் ஆசிரியரின் இமாலய சாதனை என்றே நான் இதைக் கருதுகிறேன். 

(நடுவில் அமைர்ந்து இருப்பவர்) 

அருட்தந்தையின் இடப்புறம் இருப்பவர். 

படைப்பாளர்

பாரதி திலகர்

தீவிர வாசிப்பாளர், பயணக் காதலர்; தொன்மை மேல் பெரும் ஆர்வம் கொண்டவர். அயல்நாட்டில் வசித்து வந்தாலும் மண்ணின் வாசம் மறவாமல் கட்டுரைகள் எழுதிவருகிறார். ஹெர் ஸ்டோரிஸில் இவர் எழுதிய கட்டுரைகள், ‘பூப்பறிக்க வருகிறோம்’ என்கிற புத்தகமாக, ஹெர் ஸ்டோரிஸில் வெளிவந்திருக்கிறது.