இரவோடு இரவாக என்னென்னவோ நடந்து விட்டது. இந்த விடியல் அதை மாற்றி விடாதா என்ற‌ ஏக்கம் செந்தூர் எக்ஸ்பிரஸில் பயணித்த எல்லோரையும் போல் அந்த மூதாட்டிக்கும் இருந்தது.

உடம்புக்கு முடியாத கணவரைப் பூஜை பரிகாரங்களில் நம்பிக்கை இல்லாத மகனிடம் விட்டுவிட்டு மகளும் மருமகளும் பேத்தியுமாக அவர்கள் பக்கத்து வீட்டு ஜோசியரின் அறிவுரையின் பேரில் திருச்செந்தூருக்கு கிளம்பி வந்தனர்.

அப்பன் மயூரநாதனை தொழுது விட்டு கிளம்பிச் சென்று மகன் முருகனைத் தரிசித்து விட்டு வந்தால், கணவனை விட்டுப் பிரிந்து வாழும் மகள் சீக்கிரம் கணவனோடு சென்று சேர்ந்து வாழும் நேரம் வரும் என்று கணித்தவர் வார்த்தைகள் மீது இருந்த நம்பிக்கை அவர் கணிக்க முடியாமல் போன இந்த எதிர்பாராத தடங்கலால் கொஞ்சம் அசைந்துதான் போயிருந்தது.

விடிந்ததும் விடியாததுமாகப் பசியில் அழுத அண்ணன் மகளுக்குச் சாப்பிட ஏதேனும் கிடைக்கிறதா என்று பார்த்து வரக் கிளம்பிய மகளுக்குத் துணையாக இறங்கி வந்தவர் மனம் மகளையே சுற்றி வந்தது.

அளவான அழகு, அதிகமான அன்பு எல்லாரிடமும் எளிதில் பழகக் கூடியவள், படிப்பில் சுட்டி பன்னிரண்டாம் வகுப்பில் பள்ளியில் முதல் மதிப்பெண் பெற்று அவர்கள் கூறைநாட்டு என்.கிட்டப்பா நகராட்சி மேல்நிலைப்பள்ளியின் வாசலின்‌ பேனரில் மகளின் புகைப்படத்தை பார்த்துப் பார்த்து மனம் பூரித்த போதும் அவள் ஆசை போல் மேலே படிக்க வைக்க முடியாத சூழல்.

நெசவு குழிக்குள் நெய்தே காலத்தைக் கடந்து ‌நலிந்து போன கணவனை மின்தறியின் வரவு உலுக்கிப் போட்ட சமயம் அது.

படிக்க வேண்டிய மகள், நூல் காயப்போடுவதைப் பார்த்து மனம் அந்த நூல் இழைகள் போல் பிரிந்து நோகாத நாள் இல்லை. அவர்களைப் போலவே பல நெசவுக் குடும்பங்களுக்கும் மயிலாடுதுறையில் அந்தச் சமயத்தில் பேரிடியாகத்தான் மின் தறியின் வரவு இருந்தது.

என்ன செய்வது என்று புரியாமல் விழித்துக் கொண்டிருந்த சமயத்தில், ‘நகை ரொக்கம் எதுவும் வேண்டாம். கல்யாணச் செலவுகூட நாங்க பாத்துக்குறோம்’ என்று வலிய வந்த சம்பந்தம் அந்நேரத்தில் தெய்வாதீனமாகவே வந்ததாகத் தோன்றியது.

அந்தத் திருமணம் கசந்து போக ஓர் ஆண்டு மட்டுமே ஆனது என்பதை இவர்கள் புரிந்து கொள்ள ஐந்து ஆண்டுகள் ஆனது மகளின் சாமர்த்தியமா இல்லை, தங்களின் கவனக்குறைவா என்று புரியாமல் புலம்பிக் கழித்த இரவுகள்தான் எத்தனை.

மகள் புகுந்த வீட்டில் மகிழ்ச்சியாக வாழ்கிறாள் என்கிற நம்பிக்கையில்தானே மகனின் திருமணத்தையும் முடித்துவிட்டு இனி அவன் நிழலை அண்டி வாழ்ந்து விடலாம் என்று ஆசுவாசமானார்கள்.

மகளுக்கு ஒரு குழந்தை மட்டும் பிறந்துவிட்டால் இனி வாழ்வில் கவலைக்கு இடமில்லை என்று நினைத்துக் கோயில் கோயிலாகச் சுற்றிய சமயத்தில், அவள் அங்கு கொத்தடிமைக்கும் கீழாக நடத்தப்பட்டு, குறைபாடுள்ள கணவனைப் பற்றி வீட்டில் சொல்லவும் முடியாமல், அந்தப் பழியைத் தன் மீது சுமத்தி வீட்டை விட்டு வெளியே வர விடாமல் தந்திரமாக வீட்டுச் சிறையில் வைத்துக் கொண்டிருந்த புகுந்த வீட்டாரின் பிடியில் இருந்து எப்படியோ தப்பி வந்து, “இனி அங்க என்ன கொண்டு உடுறதா இருந்தா , புணமாத்தான் போவேன்” என்று கதறி அழுத மகளை அரவணைத்து ஆறுதல்  சொல்லித் தேற்றிக் கொண்டு வரவே இரண்டு வருடங்கள் ஆகிவிட்டன. இனி அவள் வாழ்க்கை என்ன ஆகும் என்று கவலையுடன் கணவரின் பக்க வாதமும் சேர்ந்து கொண்டது.

அவள் வந்த கையோடு அவளைத் தேடிக்கொண்டு பின்னால் மருமகனின் வீட்டார் வருவார்கள், அவர்களை நாலு வார்த்தை நறுக்கென்று கேட்கலாம் என்று எதிர்பார்த்து இருந்ததற்குப் பதிலாக மகளைக் குறித்து தவறாகப் பரப்பப்பட்ட அவதூறுகளே உறவுகள் மூலம் வந்து சேர்ந்தன. அதுவரை கஷ்டப்பட்டு கட்டுப்படுத்தி வைத்திருந்த மகனின் கோபம் எல்லையை மீறி விட்டது.

விவாகரத்து என்று எளிதாக அவன் வாயில் வந்துவிட்ட வார்த்தைக்கும் அதற்குத் தலையசைக்கும் மகளையும் என்ன செய்வதென்று தெரியாமல் கோணலாகக் கிடக்கும் கணவனையும் எதுவும் கேட்க முடியாமல் திக்குத் தெரியாமல் தவிக்கும் போதுதான் தெய்வத்தை நோக்கி வர, அந்தத் தெய்வமும் இப்போது நட்டாற்றில் விட்டுவிட்டதே என்கிற அவரின் எண்ண ஓட்டங்களை மகள் சங்கீதாவின் குரல் தடுத்தது.

“அம்மா அங்க பாருங்க, ஏதோ ஊர் இருக்குற மாதிரி தெரியுது. போய்ப் பாப்போமா?” என்று அதுவரை முட்டியளவு தண்ணீரில் தண்டவாளத்தை அடையாளமாக வைத்துப் பார்த்துப் பார்த்துக் குளிரில் நடுங்கிக் கொண்டு, அடுத்து என்ன செய்யப் போகிறோம் என்று புரியாத நிலையில் கால் போன போக்கில் சென்றவர்களுக்குப் புது உற்சாகம் பிறந்தது. அவர் பதிலுக்குக் காத்திருக்காமல் அவள் நடந்து சென்றாள். பின்னால் அவரும் சென்றார்.

இரவில் நெடுநேரம் உறங்காமல் களைத்து விடிந்த பின்னரே பலரும் அவர்கள் இருந்த கம்பார்ட்மெண்ட்டில்  உறங்கியிருந்தனர். அவர்கள் யாரையும் எழுப்பவோ உதவி கேட்கவோ மனம் வராததால் தாயும் மகளுமாக வந்துவிட்டார்கள்.

ஏதோ வேகத்தில் கிளம்பி வந்தாலும் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை ஆள் நடமாட்டம் எதுவும் இல்லாமல் செடி கொடிகளும் எல்லாவற்றையும் நிறப்பி காட்டாற்று வெள்ளமாக ஓடிய மழைத் தண்ணீரையும் தவிர்த்து அவர்களுக்கு நம்பிக்கை தரும் விதத்தில் எதுவுமே தென்படாமல்தான் கிட்டத்தட்ட ஒரு கிலோமீட்டர் நடந்து வந்தார்கள்.

நீண்ட கடல் பயணத்திற்குப் பின்னர் கரையைப் பார்த்த பயணிகளின் மனவோட்டம் இப்போதைய அவர்கள் மனவோட்டங்களை‌த்தான் ஒத்திருக்கும் என்று சங்கீதா நினைத்துக் கொண்டாள்.

“ஏதோ கோயில் கோபுரம் தெரியுதுமா. கண்டிப்பா அப்ப ஊர் பக்கத்துல இருக்கும்” என்றவளின் குரலில் தொனித்த நம்பிக்கை  நடையின் வேகத்தைக் கூட்டியது. பின்னால் மெதுவாக வந்த அம்மாவிடமும் கூடத் தெம்பு காணப்பட்டது.

‘முருகைய்யா ‌உன்னய நம்பி வந்த சனத்துக்கு ஒரு வழியக் காட்டுய்யா. சீக்கிரம் வீட்டுக்கு போய் சேர வழியக் காட்டுப்பா’ என்று மானசீகமாக வேண்டியவாறே கோயில் இருந்த திசை நோக்கி இருவரும் நடந்தார்கள். நேரம் ஆறு மணியைத் தாண்டி இருந்தாலும் மழை எப்போது வேண்டுமானாலும் பொத்துக் கொண்டு வரலாம் என்கிற நிலையில் நீர் சுமந்த மேகக் கூட்டங்களால் இருள் இன்னும் கவிந்து கீழ்வானம் கருத்துதான் இருந்தது.

சற்றுத் தொலைவில் தெரிந்த கோயிலுக்கு அருகில் ஆள் நடமாட்டம் இல்லாத நிலையிலும் ஆட்கள் இருப்பதற்கான அறிகுறிகள் தெரிந்து கோயில் நேர் நடந்தனர்.

பின்னால் தண்ணீர் சலம்பும் சத்தம் கேட்டுத் திரும்பிய போது ஆண்கள் பெண்களாகச் சிறு சிறு குழுவாக அவர்களைப் போலவே ரயிலில் இருந்து இறங்கி வந்தவர்கள் சிலர் சற்றுத் தொலைவில் இங்கும் அங்கும் பார்த்தவாறு நடந்து வருவது தெரிந்தது.

ஆள்கள் பின்னால் வரும் தைரியத்தில் எப்படியும் ஏதாவது ஒரு வழி கிடைக்கும் என்கிற நம்பிக்கை மேலோங்கியது. அந்தச் சமயத்தில்

புதுக்குடி மேலூர் என்கிற பதாகைக்கு அருகில் இருந்த பத்திரகாளி அம்மன் கோயிலுக்குள் தெரிந்த மனிதர்கள் ஏதோ தெய்வமாகப் பார்த்து அவர்களுக்கு உதவி செய்ய அனுப்பியவர்களாகவே தோன்றினர்.

அப்போதுதான் விழித்தவர்களாகத் தோன்றிய நடுத்தர வயது நபரும் அவருடன் நின்று பேசிக் கொண்டிருந்த ஓர் இளைஞனின் பார்வையும் கோயிலின் கிரில் கேட்டுக்கு வெளியே தெரிந்த இருவர் உருவத்தின் மேலும் பட்டது.

தன் ஊரைச் சேர்ந்தவர்கள் அவர்கள் இல்லை என்பதைக் கண்டு கொண்ட அந்த மனிதர்,

‘யாரது?’ என்று கேள்வியாகப் புருவத்தைச் சுருக்கிப் பார்த்துவிட்டு, அருகில் நின்ற இளைஞனை பார்த்து,

“ஏலே முருகா, யாரது? நம்ம ஊர்க்காரங்க மாரி தெரியலயே. யாரும் சொந்த பந்தமா ? இந்த மழைக்குள்ள எங்க இருந்து வந்தாங்க? “

என்று கேட்டார் .

“நம்ம ஊருக்காரங்க மாதிரி தெரியலையே”

என்று அவனும் யோசனையாகப் பதில் அளிக்க,

“யாருன்னு போய்ப் பாத்துட்டு வரேன், மாமா”

என்று  மெல்ல நடந்து வந்து கதவைத் திறந்தான். அவர்களின் உரையாடல் முழுவதுமாகக் கேட்காவிட்டாலும் அவர்கள் பேச்சில் ஒன்று, இரண்டு வார்த்தைகள் காதில் விழுந்தன.

அந்த இளைஞனின் பெயர் முருகன் என்பது அந்த மூதாட்டி காதில் விழுந்த போது அவர் கண்களில் கண்ணீர் அருவியாய் பெருக்கெடுத்தது.

திடீரென்று கோயில் வாசலில் வந்து கண்ணீருடன் நிற்கும் அந்தப் பெரியவரைப் பார்த்த முருகனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. அவர் அருகில் தயங்கியபடி நின்ற அந்தப் பெண்ணும் எதுவும் சொல்லாமல் அமைதி காத்தாள்.

“யாரும்மா நீங்க?” என்று அவன் தொடங்கவும்,

“தம்பி, உங்க பேரு முருகனா?” என்று அந்த அம்மா உணர்ச்சி பெருக்கில் கேட்க. ஆமா என்று யோசனையுடன் அவன் தலையசைக்கவும்.

“ஐயா ! முருகா ! முருகா ! நீதான்யா எங்கள காப்பாத்தணும்” என்று அந்த அம்மாள் பெருங்குரலெடுத்து கதறி அழுத குரல் கேட்டு கோயிலில் படுத்திருந்தவர்களும், ‌ அவர்கள் பின்னால் வந்திருந்த ரயில் பயணிகளும் அவரைப் பரிதாபமாகப் பார்த்தார்கள்.

தன் முன்னால் கைகூப்பி அழுது கொண்டு நிற்கும் பெரியவரை என்ன சொல்லி ஆறுதல் படுத்துவது என்று புரியாமல் முருகன் விழித்தான். அவன் அருகில் வந்து நின்ற மல்லிகாவும் அவனும் ஒருவருக்கொருவர் பார்த்துக் கொண்டார்கள்.

(தொடரும்)

படைப்பாளர்:

பொ. அனிதா பாலகிருஷ்ணன் 

பல் மருத்துவரான இவருக்குச் சிறுவயது முதல் தன் எண்ணங்களைக் கவிதைகளாக, கட்டுரைகளாக எழுதப் பிடிக்கும். நாளிதழ்கள், வலைதளங்களில் வரும் கவிதைப் போட்டிகள், புத்தக விமர்சனப் போட்டிகள் போன்றவற்றில் தொடர்ந்து பங்கேற்று பரிசுகள் பெற்று வருகிறார்.  இயற்கையை ரசிக்கும், பயண விரும்பியான இவர் ஒரு தீவிர புத்தக வாசிப்பாளர். தன் அனுபவங்களைக் கவிதைகளாக, கட்டுரைகளாக, ஒளிப்படங்களாக வலைத்தளங்களில் பதிந்து வருவதோடு சிறுகதைகளும் கதைகளும் எழுதி வருகிறார்.