தேவைப்படும்போது

பாலினத்தை

சிறகுகளைப் போல உதிர்க்க முடியும்

என்று என் மனதுக்குத் தெரியும்தான்

ஆனாலும்

நிலைக்கண்ணாடியின்மீது தெறிக்கும் பெயிண்ட் துளிகளைப் போல

உன் உடை

எதிர்பார்ப்புகளிலிருந்து உன்னை விடுவிக்கிறதே

அதைப் பார்த்தால் பொறாமையாகத்தான் இருக்கிறது.

ஆண், பெண் ஆகிய இரண்டு பால்பண்புகளையும் கொண்ட கார்டினல் பறவையைப் பற்றிய ஏமி விட்மோரின் கவிதை வரிகள் இவை. பல்வேறு வகையான பாலினங்கள், பாலீர்ப்புத் தன்மைகள் கொண்ட விலங்குகள்/பறவைகளைப் பற்றிய அறிவியல் கட்டுரைகளே இந்தக் கவிதைக்கான உந்துசக்தியாக இருந்ததாக ஏமி குறிப்பிடுகிறார். சூழலியலையும் பால்புதுமையினரையும் இணைக்கும் Queer Ecology Theoryயின் மையப்புள்ளியும் இதுதான்.

இதைச் சற்று விரிவாகப் பார்க்கலாம். ஆண்/பெண், மரபு/இயற்கை, மனிதன்/சூழல், இயற்கையானது/இயற்கைக்கு எதிரானது போன்ற இருமைகளை வைத்துதான் தத்துவவியலாளர்களும் அறிவு ஜீவிகளும் பல காலமாக உலகத்தை அணுகுகிறார்கள். இந்த அணுகுமுறையில் பலவிதமான பழமைவாதங்களும் ஒடுக்குமுறைகளும் ஒளிந்திருக்கின்றன. பிறக்கும்போது வழங்கப்பட்ட பாலினங்களை நிராகரித்து தங்களுக்கான அடையாளங்களை அறிவிக்கும் திருநர்கள், எதிர்பாலீர்ப்பே வழமையானது என்ற heteronormativity கருத்துக்குள் வராத தன்பாலீர்ப்பு கொண்டவர்கள் ஆகிய எல்லாரையும் இந்த அணுகுமுறை ஒடுக்குகிறது, இவர்களை இயற்கைக்கு எதிரானவர்கள் என்று அறிவிக்கிறது. அது மட்டுமல்லாமல் ஆண்கள் எப்படிப் பெண்களை ஒடுக்குகிறார்களோ அதைப் போலவே சூழலை மனிதன் ஒடுக்குவதும் சரியானது என்று இந்த அணுகுமுறை நம்புகிறது. இயற்கையைப் பெண்ணுக்கு அருகில் வைப்பதன்மூலம் இயற்கையைப் பாதுகாப்பது பெண்ணின் வேலை என்று ஒரு கட்டமைப்பும் உருவாக்கப்படுகிறது.

குயர் சூழலியல் இவற்றை எல்லாமே மறுதலிக்கிறது. குயர் கருத்தாக்கத்தின் வழியே இயற்கையை அணுகிப் பார்க்கிறது. அறிவியல், சூழல் பெண்ணியம், சூழல்சார் சமூகநீதி, குயர் புவியியல் போன்ற பல்வேறு தளங்களில் இயற்கையைப் புரிந்துகொள்ள முயற்சி செய்கிறது, எல்லா வகையான இருமைகளையும் உடைக்கிறது. விலங்குகளில் இருக்கும் பாலீர்ப்பு சார்ந்த அம்சங்களை மையப்படுத்தி, இயற்கை/இயற்கைக்கு எதிரானது என்கிற கட்டமைப்பை மறுதலிக்கிறது.

“பாலினம், பால்சார் ஒடுக்குமுறை, இனவெறி, பால்புது நபர்கள் மீதான வெறுப்பு ஆகியவை அமைப்பு ரீதியான ஒடுக்குமுறைகள், இவை சக மனிதர்களை எப்படிப் பார்க்கிறோம் என்பதையே மாற்றியமைக்கின்றன” என்கிறார் அசமே ஔர்கியா. இந்த ஒடுக்குமுறைகளும் சூழலியலும் இணையும் இடம்தாம் குயர் சூழலியல். இதே குயர் சூழலியலை அடிப்படையாக வைத்து சமகாலத்தின் சூழல்சார்ந்த பிரச்னைகளை அணுகுவது அவசியம். சமூகத்தில் விளிம்புநிலை மக்களாக இருக்கும் பால்புதுமையினர் எவ்வாறெல்லாம் பாதிக்கப்படுகிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள அது உதவும்.

பால்புதுமையினரை உள்ளடக்கிய சூழலியல் ஆய்வுகளில் முக்கியமானது பேரிடர் பற்றிய ஆராய்ச்சி. குறிப்பாக பேரிடர்களுக்குப் பின்னான காலகட்டங்களில் பால்புதுமையினர் எவ்வாறெல்லாம் பாதிக்கப்படுகிறார்கள் என்பதைப் பல ஆய்வுகள் விரிவாகவே எடுத்துக்காட்டுகின்றன. உதாரணமாக, சுனாமியால் தமிழ்நாட்டைச் சேர்ந்த திருநங்கைகள் எப்படி எல்லாம் பாதிக்கப்பட்டார்கள் என்பதை விரிவாக ஆராய்ந்திருக்கிறார் சாமன் பிஞ்சா. சுனாமியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் களப்பணி செய்து, அங்கு இருக்கும் திருநங்கைகளை நேரடியாகச் சந்தித்துப் பேசி ஆக்ஸ்ஃபாம் அறிக்கை ஒன்றை உருவாக்கியிருக்கிறார். சுனாமி நிவாரண நிதி திருநங்கைகளுக்குச் சென்று சேரவில்லை என்பதையும், சுனாமி முகாம்களில் திருநங்கைகளுக்கான வசதிகள் இருக்கவில்லை என்பதையும் அந்தக் கட்டுரை சுட்டிக் காட்டுகிறது. ஜப்பான், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, அமெரிக்கா போன்ற பல நாடுகளில் நடந்த ஆய்வுகளிலும் பேரிடர்களின்போது பால்புதுமையினர் அதிகமான பாதிப்பைச் சந்தித்தது உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.

பேரிடர் பற்றிய ஆய்வுகள் அவசியமானவைதான். ஆனால், பெரும்பாலான குயர் சூழலியல் ஆய்வுகள் இவற்றைப் போன்ற பெரிய பிரச்னைகளை மையப்படுத்துபவையாகவே இருக்கின்றன. சிறிய சூழல் பிரச்னைகள், சூழல்சார்ந்த சிறு இழப்புகள், மாசுபாடு போன்றவை பற்றிய குயர் ஆய்வுகள் கிட்டத்தட்ட இல்லை என்றே சொல்லலாம். அதுமட்டுமல்லாமல் இந்தப் பேரிடர் ஆய்வுகள்கூட 2000த்துக்குப் பின்னால் வெளியான சமீப ஆய்வுகள்தாம் என்பது கூடுதல் சோகம். சூழலியல் பற்றிய பிரச்னைகளில் குயர் மக்கள் பாதிக்கப்படுவதைப் பற்றிய அக்கறை மிகச் சமீபமாகவே தொடங்கியிருப்பதை இது காட்டுகிறது.

பால்புதுமையினர் சமூகரீதியாக மிகவும் விளிம்புநிலையில் இருக்கிறார்கள். கல்வி, வேலைவாய்ப்பு, மருத்துவம், வீட்டுவசதி ஆகிய அடிப்படை உரிமைகளே அவர்களுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் மறுக்கப்படுகின்றன. இந்த நிலையில், சூழல் சார்ந்த ஒரு பிரச்னை வரும்போது சமூக அடுக்கில் அவர்களது இடம் எப்படிப்பட்ட பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதை ஆராய வேண்டியது அவசியம். உதாரணமாக, அமெரிக்காவில் இருக்கும் வீடற்ற இளைஞர்களில் 40 சதவீதத்தினர் பால்புதுமையினர் என்கிறது ஓர் ஆய்வு. ஒட்டுமொத்த மக்கள்தொகையில் பால்புதுமையினர் 7 சதவீதம் மட்டுமே. ஆக, இருக்கும் பால்புதுமையினரில் பெரும்பாலானோர் வீடற்றவர்கள். சமூகம் அவர்களை எந்த இடத்தில் வைத்திருக்கிறது என்பதற்கு இது ஓர் உதாரணம். ஒரு சராசரி நபரின் வேலைவாய்ப்பு சாத்தியத்தை விடவும் திருநர்களுக்கு வேலை கிடைக்கும் சாத்தியம் மூன்று மடங்கு குறைவு என்கிறது ஓர் அமெரிக்க ஆய்வு. தொடர்ந்த வெறுப்பு, ஒடுக்குமுறை காரணமாக, 16.6 சதவீதப் பால்புது நபர்கள் மருத்துவமனைக்குச் செல்வதையே தவிர்க்கிறார்கள் என்றும் ஓர் அமெரிக்க ஆய்வு தெரிவிக்கிறது. உடல்நிலை சரியில்லை என்றாலும் அங்கே கண்ணியத்தோடு நடத்தமாட்டார்கள் என்பதால் ஒருவர் மருத்துவமனைக்குச் செல்வதில்லை என்பது எத்தனை பெரிய சோகம்.

பூங்காக்கள், விலங்குகள் சரணாலயம், ஏரிக்கரை, தேசிய பூங்கா போன்ற பசுமை வெளிகளை (Green spaces) யாரால் அணுக முடிகிறது என்பது மிகப்பெரிய அரசியல். குறிப்பாக நகரங்களில் இருக்கும் பசுமை வெளிகள் முக்கியமானவை. நகரமயமாக்கல் அதிகரித்துவரும் சூழலில் உடல், மன நலத்தைப் பேணிகாப்பதற்கு இதுபோன்ற வெளிகளை அணுகுவது அவசியம். ஒரு பெருநகரத்தை நீங்கள் உற்றுக் கவனித்தால் எந்த வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் இருக்கும் பகுதிகளில் அதிகமான மரங்களும் மரநிழலும் இருக்கின்றன என்பதை எளிதில் கண்டுகொள்ளலாம். பசுமை வெளிகளின் பயன்கள் பெரும்பாலும் மேல்தட்டு மக்களுக்கே சென்று சேர்கின்றன என்பது பல ஆண்டுகளாக இருக்கும் குற்றச்சாட்டு. இதைப் பல தரவுகளும் உறுதி செய்திருக்கின்றன. சூழல் சார்ந்த பசுமை வெளிகளில் பால்புதுமையினர் அனுமதிக்கப்படுவதில்லை என்பது சமீபத்தில் பேசுபொருளாகியிருக்கிறது. பல நாடுகளில் பசுமை வெளிகளுக்குள் நுழைந்த பால்புதுமையினர் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டிருக்கின்றனர்/கைது செய்யப்பட்டிருக்கின்றனர். இது ஒரு சூழல் அநீதி என்று பலர் குரல் கொடுத்துக்கொண்டிருக்கின்றனர். இதுவும் பரவலாக கவனம் பெறவேண்டும்.

குயர் சூழலியலின் இன்னொரு முக்கியமான அம்சம் பெண் விவசாயிகள் பற்றியது. குறிப்பாகத் தன்பாலீர்ப்பு கொண்ட பெண்கள், தங்களுக்கான உணவு ஆதாரத்தை உறுதிப்படுத்திக்கொள்வதற்காக 1970களில் தொடங்கிய விவசாய இயக்கங்கள் இதில் முக்கியமாகப் பேசப்படுகின்றன. “எங்களுக்கான உணவு, உடை, உறைவிடம் ஆகியவற்றை யாரும் கட்டுப்படுத்தத் தேவையில்லை” என்கிற முழக்கத்தோடு அமெரிக்காவில் 150 க்கும் மேற்பட்ட சிறு குழுக்கள் பண்ணைகளில் விவசாயத்தைத் தொடங்கினார்கள். இவை ‘Womyn farms’ என்று பொதுவாக அழைக்கப்படுகின்றன. பெண்-நிலம்-உணவு ஆகியவற்றின் மீதான ஆண்களின் மேலாதிக்கத்தை இந்தப் பண்ணைகள் உடைத்திருக்கின்றன. இதன் பின்னணியில் இருக்கும் சமூகவியல் கூறுகள் விரிவாக ஆராயப்பட வேண்டியவை.

Womyn farms

சூழல் செயற்பாட்டாளர்கள், காலநிலை செயல்பாடுகளில் இயங்கிவரும் பெண்கள் ஆகியவர்களுக்குக் கிடைக்கும் முக்கியத்துவம், அதே களத்தில் இருக்கும் பால்புதுமையினருக்குக் கிடைப்பதில்லை. இன்னும் சொல்லப்போனால், சில சூழல் பாதுகாப்பு இயக்கங்கள் திருநர் வெறுப்பு கொண்டவையாகவே இருக்கின்றன என்பதைப் பால்புதுமையினர் சுட்டிக் காட்டுகிறார்கள். “பெண் இயற்கையுடன் ஒரு பூடகமான உறவு கொண்டவள் என்று ஒருவர் அறிவித்தால், திருநங்கைகளையும் பெண்களாக அவர் பார்க்கிறாரா என்பதை கவனிக்க வேண்டும்” என்று பால்புது செயற்பாட்டாளர்கள் வலியுறுத்துகிறார்கள். “பல நேரத்தில், பிறக்கும்போதே பெண்ணாக அறிவிக்கப்பட்டவர்களை மட்டுமே இவர்கள் பெண்களாக ஏற்றுக்கொள்வார்கள். சூழல் பெண்ணியவாதிகளில் சிலர் இப்படித்தான் நடந்துகொள்கிறார்கள்” என்று அவர்கள் தெரிவிக்கின்றனர். இதுபோன்ற இயக்கங்களில் பின்பற்றப்படும் திருநர் வெறுப்பு அந்த இயக்கங்களின் அடிப்படை அறத்தையே குலைத்துவிடுகிறது.

“காலனியவாதம், முதலாளித்துவம், வெள்ளையர்களே உயர்ந்தவர்கள் என்கிற மனப்பான்மை, ஆண்மைய சிந்தனை, எதிர்பாலீர்ப்பு, சிஸ் பாலினமுமே வழமையானது என்கிற நம்பிக்கை ஆகியவை எல்லாம் சேர்ந்துதான் சூழலைச் சீர்குலைத்திருக்கின்றன. இவை எல்லாம் இருந்த்தால்தான் சூழலியல் ரீதியாக இப்படி ஓர் ஆபத்தான இடத்தில் நாம் வந்து நிற்கிறோம்” என்கிறார் செபின் லெபெல். ஆக, சூழல்ரீதியான பிரச்னைகளுக்கு உண்மையிலேயே தீர்வு காண வேண்டும் என்றால், இந்த எல்லாக் கருத்தாக்கங்களையும் நாம் உடைத்தெறிய வேண்டும்.

சூழல்சார்ந்த பிரச்னைகளில் குயர் மக்களின் இயங்கியல் பற்றிய ஆய்வுகள் மிகவும் குறைவு. இதுவே குயர் மக்களுக்குத் தரப்படும் முக்கியத்துவத்தைக் காட்டுகிறது. இந்தத் துறையில் இன்னும் அதிகமான ஆய்வுகள் வர வேண்டும். குயர் மக்கள் மீது நடத்தப்படும் சூழல் அநீதி நிறுத்தப்பட வேண்டும். அவர்களுக்கான அடிப்படை உரிமைகள், வசதிகள் ஆகியவை உறுதி செய்யப்பட வேண்டும். சூழல் பாதுகாப்பு செயல்பாடுகள், காலநிலைத் தீர்வுகள் ஆகியவை பால்புதுமையினரையும் உள்ளடக்கியவையாக இருக்க வேண்டும். இவை எல்லாம் நடந்தால் மட்டுமே உண்மையான சூழல் சமூகநீதி நிலைநிறுத்தப்படும்.

உலகமெங்கும் பெண்களும் பால்புதுமையினரும் பல ஒடுக்குமுறைகளை எதிர்கொள்கிறார்கள். ஆனால், இந்தியாவில் மட்டுமே இயங்கும் ஒருவகை ஒடுக்குமுறை உண்டு. அந்த ஒடுக்குமுறையில் பெண்கள் எப்படிப் பாதிக்கப்படுகிறார்கள்? சூழலுக்கும் அதற்கும் உண்டான தொடர்பு என்ன?

(தொடரும்)

படைப்பாளர்:

நாராயணி சுப்ரமணியன்

கடல் சார் ஆய்வாளர், சூழலியல் ஆர்வலர் மற்றும் எழுத்தாளர் என்ற பன்முக ஆளுமை இவர். தமிழ் இந்து உள்ளிட்ட முன்னணி இதழ்களில் சூழலியல், கடல் வாழ் உயிரினங்கள் குறித்து தொடர்ச்சியாக எழுதி வருபவர். ஹெர் ஸ்டோரிஸில் இவர் எழுதிய ‘விலங்குகளும் பாலினமும்’ தொடர் புத்தகமாக வெளிவந்து, சூழலியலில் மிக முக்கியமான புத்தகமாகக் கொண்டாடப்படுகிறது!