தற்போது நீரிழிவு நோய் பொதுமக்களிடையே பெருகிக்கொண்டே வருகிறது. முன்பெல்லாம் 50 வயதிற்கும் மேற்பட்டவர்களுக்கே இந்நோய் வந்தது. இதை ‘பணக்கார வியாதி’ என்றுகூடப் பேச்சு வழக்கில் சொல்வார்கள். காரணம் இது பெரும் செல்வந்தர்களுக்கே (அதிக மாவுச்சத்து உணவுகளை உண்பதால்) வந்தது அந்தக் காலத்தில். தற்போது நமது வாழ்க்கை முறையில், உணவு பழக்கவழக்கங்களில் மாற்றங்கள் ஏற்பட்டதன் காரணமாக இது அனைவருக்கும் பொதுவான ஒரு நோயாக மாறிவிட்டது. மேலும் இளம் வயதினரிடையே தற்போது பரவலாக இந்நோய் அதிகரித்து வருகிறது. இதனால் இளம் வயதில் பெண்கள் பாதிக்கப்படுவதால் கர்ப்பத்தின்போது தாய்க்கும் குழந்தைக்கும் பாதிப்பு ஏற்படுகிறது.

கர்ப்பகால நீரிழிவு நோயானது கர்ப்பத்தில் உள்ள குழந்தைக்கும் பல்வேறு உடல்கோளாறுகளை உண்டாக்குகிறது. அந்தக் குழந்தை வளர்ந்து பெரிய ஆளாக வந்த பிறகு அந்த நபருக்கும் நீரிழிவு நோய் வர வாய்ப்புக்கள் அதிகம். கருவுற்ற தாய்மார்கள் 20% கர்ப்பகால நீரிழிவு நோயினால் அவதியுறுகின்றனர். கரு உருவாவதற்கு முன்பு சர்க்கரை அளவு சரியாக இருந்து, கருவுற்ற பிறகு சர்க்கரை அளவு அதிகரித்தலே கர்ப்பகால நீரிழிவு நோய். கர்ப்பகால நீரிழிவு நோயை ரத்தப் பரிசோதனை மூலம் மட்டுமே கண்டறிய முடியும். எனவே கர்ப்பகாலத்தில் குறைந்தது மூன்று முறையாவது ரத்தத்தில் சர்க்கரை உள்ளதா எனப் பரிசோதித்துக் கொள்வது மிகமிக அவசியம்.

கர்ப்பகால நீரிழிவு நோயால் பாதிக்கப்படும் பெண்கள் யார்?

1) அதிக உடல்பருமன் உள்ள பெண்கள்.

2) முந்தைய கர்ப்பத்தின் போது நீரிழிவு நோய் இருந்தவர்கள்.

3) பெற்றோர் நீரிழிவு நோய் உள்ளவர்களாக இருந்தால்.

4) 30வயதிற்கு மேல் முதல் குழந்தை பெறும் தாய்.

5) அடிக்கடி கருச்சிதைவு ஏற்பட்டவர்கள்.

அறிகுறிகள்:-

1) அதிக தாகம்

2) அதிக பசி

3) பிறப்புறுப்பில் அரிப்பு

4) அடிக்கடி சிறுநீர் கழித்தல்

பக்க விளைவுகள்

பிரசவத்திற்கு முன் வரும் விளைவுகள்:-

1) மன அழுத்தம்

2) தொற்று நோய்கள்

3) கண், சிறுநீரகம், இதயம் பாதித்தல்

4) ரத்த அழுத்தம் அதிகரித்தல்

5) பனிக்குட நீர் அதிகரித்தல்

6) குறைமாதப் பிரசவம்

7) கருக் கலைதல்

பிரசவ நேர விளைவுகள்:-

1) நீடித்த பிரசவம்

2) கர்ப்பபை செயல் இழத்தல்

3) அதிக எடையுடன் கூடிய குழந்தை

4) குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்படுதல்

5) பிறவி ஊனக்குழந்தை

6) பிறப்பு உறுப்பு காயங்கள்

7) சிசேரியன் அறுவை சிகிச்சை

பிரசவத்திற்குப் பின் வரும் விளைவுகள்:-

1) தொற்று நோய்

2) கர்ப்ப காலத்திற்குப் பிறகும் ரத்த சர்க்கரை அளவு குறையாது போதல்.

3) மன அழுத்தம்

பரிசோதனை செய்ய வேண்டிய மாதங்கள்

கருவுற்ற அனைத்து தாய்களும் கர்ப்பக் காலத்தில் மூன்று முறையேனும் ரத்தத்தில் சர்க்கரை அளவைப் பரிசோதிக்க வேண்டும்.

1) நான்காம் மாதம் (16வது வாரம்)

2) ஆறாம் மாதம் (24வது வாரம்)

3) எட்டாம் மாதம் (32வது வாரம்)

கர்ப்பகால நீரிழிவு நோயைக் கண்டறிதல்

சர்க்கரை தாங்குதிறன் பரிசோதனை மூலம் ரத்த சர்க்கரை அளவு கணக்கிடப்பட்டு கர்ப்பகால நீரிழிவு நோய் கண்டறியப்படுகிறது.

சிகிச்சை

கருவுற்ற தாய்மார்களுக்கு 4வது மாதத்தில் வெறும் வயிற்றில் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு 90மில்லி கிராமிற்கு குறைவாகவும் மற்றும் 75கிராம் சர்க்கரை (குளுக்கோஸ்) கொடுத்து 2மணி நேரம் கழித்து ரத்தத்தில் சர்க்கரையின் அளவு 140மில்லி கிராமிற்கு குறைவாகவும் இருந்தால், அந்தத் தாயை நீரிழிவு நோய் இல்லாதவர் என்று அறிவிக்கலாம். அவருக்கு 6வது மாதத்திலும் 8வது மாதத்திலும் மீண்டும் இந்த ரத்த சர்க்கரை பரிசோதனையைச் செய்ய வேண்டும்.

கருவுற்ற தாய்மார்களுக்கு 4வது மாதத்தில் வெறும் வயிற்றில் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு 90மில்லி கிராமிற்கு அதிகமாகவும் மற்றும் 75கிராம் குளுக்கோஸ் கொடுத்து இரண்டு மணி நேரம் கழித்து ரத்தத்தில் சர்க்கரையின் அளவு 140மில்லி கிராமிற்கு அதிகமாகவும் இருந்தால் அவரை ஒருவாரம் முதல் பத்து நாட்கள் வரை உணவுக்கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். உணவுக்கட்டுப்பாடு முடிந்தபின் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை பரிசோதனை செய்யவேண்டும். சர்க்கரை அளவு கட்டுப்பாடாக இருந்தால் அவரை உணவுக்கட்டுப்பாட்டிலேயே தொடர அனுமதிக்கலாம். ஆனால், ஒவ்வொரு மாதமும் பிரசவம் முடியும்வரை ரத்த சர்க்கரை அளவை அவர் பரிசோதித்துக்கொள்ள வேண்டும். அவ்வாறு இல்லாமல் வெறும் வயிற்றில் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு 90மில்லி கிராமிற்கு அதிகமாகவும், உணவு உண்டபின் 2மணிநேரம் கழித்து ரத்தத்தில் சர்க்கரையின் அளவு 120மில்லிகிராமிற்கு அதிகமாகவும் இருந்தால் இன்சுலின் மருந்து கொடுக்க ஆரம்பிக்க வேண்டும்.

சர்க்கரையின் அளவு அதிகரித்து இருப்பதற்கு ஏற்றவாறு இன்சுலின் அளவு கொடுக்கப்பட வேண்டும். சர்க்கரையைக் கட்டுப்படுத்தக்கூடிய வாய்வழி மருந்து மாத்திரைகள் புழக்கத்தில் உள்ளன. வாய்வழி மாத்திரை கொடுப்பதா அல்லது தோலடி இன்சுலின் ஊசி போடுவதா என்பதை சிகிச்சை அளிக்கும் மருத்துவரே தீர்மானிக்க முடியும்.

உணவுமுறை:-

தவிர்க்கவேண்டிய உணவு வகைகள்:-

1) கஞ்சி

2) கூழ்

3) கிழங்கு வகைகள்

4) இனிப்பு வகைகள்

5) குளிர்பானங்கள்

6) மா,பலா,வாழை,சப்போட்டா பழங்கள்

7) மதுபானங்கள்

8) பதப்படுத்தப்பட்ட உணவு வகைகள்

பசித்துப் புசிப்போம்!

நீரிழிவைத் தவிர்ப்போம்!

(தொடரும்)

படைப்பாளர்:

மருத்துவர் அனுரத்னா. இவர் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அரசு மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவராகப் பணியாற்றுகிறார். ஓய்வு நேரங்களில் விளிம்புநிலை மக்களை அவர்கள் இருப்பிடத்துக்கே தேடிச்சென்று மருத்துவ உதவி வழங்குகிறார். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மூலமாக சமூகத்தில் அறிவியல் சிந்தனைகளை பரப்பிவருகிறார். பெண்கள் மற்றும் இதர ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வியல் போராட்டங்களில் பங்குகொள்கிறார். மனிதி அமைப்பின் உறுப்பினராக உள்ளார். கட்டுரைகள் மற்றும் கவிதைகள் எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். 2012ம் ஆண்டு வெளிவந்த “மனிதநேய மாமுனிவர்” என்ற நூலின் ஆசிரியர்.