எத்தனை வயதானாலும் பயணங்கள் என்பவை எப்போதுமே குதூகலம் கொடுப்பவை தான். ஒரே இடத்தில் இருந்து சலித்த மனதுக்கு புதிய இடங்கள், புது மனிதர்கள், புதுப் புது உணவுவகைகள் என்று ஒரு புதிய அனுபவத்தைப் பயணங்கள் தான் ஏற்படுத்திக் கொடுக்கும்.

ஆனால் பயணங்கள் அதுவும் சாகசப் பயணங்கள் என்பவை எல்லாம் நம் இந்தியச் சூழலில் ஆண்களுக்கு மட்டுமே எப்போதும் வாய்க்கிறது. பெண்கள் பயணம் போவதென்பது குடும்பச் சுற்றுலாவாகவே பெரும்பாலும் வாய்க்கிறது. அல்லது ஆன்மீகச் சுற்றுலாக அவை அவதாரம் எடுக்கும். அவ்வளவே. இப்போது அந்த நிலை கொஞ்சம் மாற்றம் கண்டிருக்கிறது. நல்ல மாற்றம்தான்.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னால் கண்ணுக்கு எட்டிய அளவு வானத்தோடு, கடலோடு உலகம் முடிவதாக மனித சமுதாயம் நம்பிக் கொண்டிருந்தது. அதன்பின் துணிச்சல் மிகுந்த சிலரால் பயணங்கள் மேற்கொள்ளப்பட்டு உலகத்தின் வரைபடமும் தயாரிக்கப்பட்டது. ஆனால் ஆரம்பகாலப் பயணிகள் ஆண்களாகவே இருந்தனர் என்றுதான் சரித்திரத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. யுவான் சுவாங், வாஸ்கோடகாமா, மார்க்கோ போலோ, இபன் படூடா, கேப்டன் குக் என்று ஆண்கள்தான் உலகம் சுற்றும் நாடோடிகளாக இருந்தனர்.

பெண்களுக்கு இவை எல்லாம் எட்டாக்கனியாகவே இருந்தன. இன்றும் அந்த நிலையே தொடர்வதுதான் மிகப்பெரிய சோகம். பயணக் கட்டுரைகளும் இதுநாள் வரை ஆண்களின் கண்ணோட்டத்திலேயே எழுதப்பட்டு வந்திருக்கின்றன. ஆனால் இப்போது மெல்ல மெல்லப் பெண்களும் பயணம் செய்து, கட்டுரைகள் எழுதும் அளவுக்கு மாறி இருக்கிறார்கள் என்பது ஒரு சிறிய ஆறுதல்.

வரைபடங்கள் இல்லாத அன்றைய காலகட்டத்தில் புதிய பாதைகளைக் கண்டறிந்து, மற்றவர்களும் அதன் வழியே பயணம் செய்ய ஏதுவாக பயண இலக்கியங்கள் தோன்றின. தாங்கள் கண்டதை, கேட்டதை, அறிந்ததை, உணர்ந்ததை மற்றவர்களும் தெரிந்து கொள்ள பாடலாக, ஓவியங்களாக, கட்டுரைகளாக, பயண நூல்கள் படைக்கப்பட்டன. இத்தகைய பயண நூல்கள் மூலம் அந்த இடங்களுக்குச் செல்பவர், முன்பே சென்றவரின் அனுபவங்களைக் கொண்டு அந்தச் சூழ்நிலையை புரிந்து கொள்ளவும், கையாளவும் ஏதுவாக அமைகிறது.

தமிழில் பயண இலக்கியம் என்பது புதிதான ஒன்றல்ல. சங்க காலத்தில் இருந்தே பயணம் பற்றிய செய்திகளும் குறிப்புகளும் சங்க இலக்கியங்களில் இடம்பெற்று இருக்கின்றன. சங்கத் தமிழர்கள் கிரேக்கர்களுடன், ரோமானியர்களுடன் பயணங்கள் மூலமாக வியாபாரத் தொடர்பு வைத்திருந்தார்கள். அவர்களை ‘யவனர்’ என்ற சொல்லால் குறிப்பிடுகின்றனர். தொல்காப்பிய காலத்தில் பயணம் என்ற சொல் இடம்பெறவில்லை. ‘செலவு’ என்ற சொல்லே பயணத்தைக் குறிப்பதாக அமைந்திருந்தது.

பெண்கள் மட்டும் இணைந்து பயணம் போவதென்பது இயலாது என்று நிறையப் பெண்களே நினைக்கிறார்கள். தங்குமிடம், பாதுகாப்பு என்றெல்லாம் காரணங்கள் சொல்லப்படுகின்றன. ஆனால் சரியான திட்டமிடல் இருந்தால், பெண்கள் எங்கு வேண்டுமானாலும் பயணிக்கலாம். பெண்கள் மட்டும் பயணிக்க இயலாதென்று ஆண்கள் நினைக்கிறார்கள் என்றால், அதற்கு ஒரே காரணம் நான்கு பெண்களால் ஒற்றுமையாக இருக்க முடியாது என்ற பொதுப்புத்தி.

மற்றொன்று பெண்கள் பயணம் செய்ய வீட்டாரின் ‘அனுமதி’ அவ்வளவு எளிதில் கிடைக்காது என்பதும்தான். ‘ஸ்வீட், காரம், காபி’ என்ற வெப் தொடரில் பாட்டி, அம்மா, மகள் என்ற மூன்று தலைமுறைப் பெண்கள் மூச்சு முட்டும் வீட்டுச் சூழலில் இருந்து கொஞ்சம் வெளிக்காற்றைச் சுவாசிக்க வீட்டாரிடம் சொல்லாமல் பயணம் செல்வார்கள். வீட்டினர் அதிர்ந்தாலும் அவர்களைத் திரும்ப வரவைக்க ஏதேதோ நாடகமாடுவார்கள். ஆனாலும் அவர்கள் சில நாள்கள் வெளியில் கழித்து விட்டுத்தான் வருவார்கள்.

அதேபோல் ஜோதிகா நடித்த ‘மகளிர் மட்டும்’ திரைப்படத்தில் மூன்று நாள்கள் தோழிகள் ஒன்றாகச் சேர்ந்து வெளியே செல்வார்கள். நிஜத்தில் இது எந்த அளவு சாத்தியம் என்பது இப்போதும் கேள்விக் குறியாகவே இருக்கிறது. ஏனென்றால் தோழி ஒருவர் கணவருடன் இணைந்து அந்தப் படத்தைப் பார்க்கும் போது, “இந்த மாதிரி எல்லாம் படம் எடுத்துத்தான் பொம்பளைங்க கெட்டுப் போறாங்க…” என்றொரு முத்தைத் தோழியின் கணவர் உதிர்த்திருக்கிறார்.

கற்பனையில் இரண்டு, மூன்று பெண்கள் தனியாக வெளியில் செல்வதைக்கூட ஏற்றுக் கொள்ள முடியாமல் ஆண்மனம் கடுப்பாகிறது என்பதுதான் இங்கு உண்மை.

அப்படியே வெளியில் சென்றாலும் அந்த சில நாள்களுக்கு முன்னரே நிறைய ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். (ஒருவேளை) சென்று வந்த பிறகும், வீட்டின் நிலைமையைச் சரிசெய்யப் பெண்கள்தான் அல்லாடுவார்கள். இதுதான் உண்மை.

என்னுடைய தோழி ஒருவர் அதிகம் வெளியில் எங்கும் செல்லாதவர். ஆனால் அவருக்குப் பயணம் செய்வதில் ஆர்வம் என்று சொல்வார். சமீபத்தில் பேசிக் கொண்டிருந்தபோது எங்காவது ஒரு சிறிய பயணம் செய்யலாம் என்ற பேச்சு எழுந்தது. அப்போது, தான் இல்லாமல் தனது குடும்பத்தினர் மிகவும் கஷ்டப்படுவார்கள்; அவர்களால் தனித்து எந்த வேலையும் செய்ய இயலாது என்றெல்லாம் வருத்தப்பட்டார். அவர் மட்டும் அல்ல. நிறைய பெண்கள் குடும்பத்தினருக்காகத்தான் கவலைப்படுகிறார்கள். தாங்கள் இல்லாமல் போனால் அவர்கள் சிரமப்படுவார்கள் என்று கவலைப்படுவதைவிட தனது தேவை, முக்கியத்துவம், இருப்பு போன்றவை அலட்சியப்படுத்தப் படுமோ என்ற உளவியல் காரணம் தான் இதற்குக் காரணம்.

ஏனெனில் நம் இந்திய சமூகத்தில் ஒரு ஆணைத் தன் கைப்பிடியில் வைத்துக் கொள்ள அலங்காரமும், சமையலும்தான் ஒரே வழி என்று பெண் பிறந்ததில் இருந்தே புகட்டப்படுகிறது. அதற்கு ஏதேனும் ஆபத்து வந்து விடுமோ என்ற அச்சம் பெண்களுக்குள் நீறு பூத்த நெருப்பாகவே இருக்கிறது. வெளிநாட்டுப் பெண்கள் தனக்கென்று நேரம் ஒதுக்கிப் பயணிக்கும்போது, நம் நாட்டுப் பெண்கள் கண்ணுக்குத் தெரியாத மாயத் தளைகளைக் காலில் பூட்டிக் கொண்டு செக்குமாடாக ஒரே இடத்தில் உழன்று கொண்டிருக்கின்றனர். அந்தத் தளைகளிலிருந்து விடுபடவும் விரும்பாமல், சிலர் வாழ்நாளெல்லாம் ஒரே இடத்தில் இருந்து மடிந்தும் விடுகின்றனர்.

பயணம் செய்வதற்கு ஏதாவது ஒரு தேடல் வேண்டும். நிறையப் பெண்களுக்குத் தேடல் இருந்தாலும் அதைச் செயல்படுத்த குடும்பச் சூழல் விடுவதில்லை என்பதே உண்மை. அப்படியே பயணங்கள் கைகூடி வந்தாலும் மனதுக்குள் நத்தையைப் போல வீட்டைச் சுமந்து கொண்டேதான் அலைகிறார்கள். இந்த மனப்போக்கைப் பெண்கள் மாற்றிக் கொள்ள வேண்டும். கூடுமானவரை வீட்டுப் பொறுப்புகளைப் பகிர்ந்து கொள்வதாலும், சிறு வயதில் இருந்தே தனது வேலைகளைச் செய்து கொள்ளக் குழந்தைகளைப் பழக்குவதாலும், ஒருவரைச் சார்ந்தே அதுவும் குறிப்பாக பெண்களைச் சார்ந்தே வீட்டினர் இருப்பது மாறும். ஆனால் அதற்கான மனப்போக்கை முதலில் பெண்கள் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

விண்வெளிப் பயணங்களை, ஆழ்கடல் பயணங்களைக் கூட இன்றைய பெண்கள் மேற்கொள்ளத் தொடங்கி விட்டார்கள். என்றாலும், சாதாரணமான ஒரு சிறிய பயணத்திற்குக்கூட வீட்டாரின் அனுமதியை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் பெண்களும் இங்கேதான் இருக்கின்றனர் என்பதை நாம் மறக்கவும், மறுக்கவும் இயலாது.

சுற்றுலா என்பது வழக்கமான சூழலில் இருந்து வேறொரு சூழலுக்கு ஓய்வு அல்லது அலுவல் விஷயமாகக் குறிப்பிட்ட காலத்திற்கு மேற்கொள்ளப்படும் பயணம் ஆகும். 1980ஆம் ஆண்டு முதல், உலக சுற்றுலா தினம் ஆண்டுதோறும் செப்டம்பர் 27 அன்று கொண்டாடப்படுகிறது. இந்திய சுற்றுலா தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சி மற்றும் தொழில் வளர்ச்சிக்கு சுற்றுலா உதவுகிறது. நாடுகளுக்கிடையே நல்லுறவையும், இணக்கத்தையும், புரிந்துணர்வையும் சுற்றுலாக்கள் ஏற்படுத்துகின்றன. 

பயணங்கள் ஒரு தனிமனிதரை மேம்படுத்த உதவுகின்றன. தனக்குள்ளிருக்கும் திறமைகளைக் கண்டறியவும், சகிப்புத்தன்மையை வளர்த்துக் கொள்ளவும் உதவுகின்றன. புது சூழல் நம்மைப் புத்துணர்வாகவும்,  ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்ளப் பெரும் பங்காற்றுகிறது. நம்முடைய படைப்பாற்றல் திறனும், ஆளுமையும் மேம்படும். நம்மைப் பற்றி நாமே அறிந்து கொள்ள, பயணங்கள் பயன்படுகின்றன. சில பயணங்கள் நம்முடைய வாழ்க்கை போக்கையே மாற்றி விடும். மகாத்மா காந்தி அவர்களின் தென்னாப்பிரிக்க பயணம் அவரது வாழ்க்கையின் போக்கையே மாற்றியதை நாம் அறிவோம்தானே. வாழ்க்கையை நாம் பார்க்கும் கண்ணோட்டம் கூட மாறிவிடும்.

தம்பதியர் தங்களுக்குள் அதிக நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளவும், ஒருவரை ஒருவர் முழுமையாகப் புரிந்து கொள்ளவும், அவ்வப்போது சிறிய பயணங்களை ஏற்படுத்திக் கொண்டு சுற்றுலா அல்லது சிற்றுலா (பிக்னிக்) செல்வது குடும்ப வாழ்க்கைக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

ஒரே இடத்தில் வசிப்பது மனதுக்கு அழுத்தத்தைக் கொடுக்கக் கூடியது. அவ்வப்போது பயணங்கள் செய்து நமக்கு நாமே சார்ஜ் போட்டுக் கொள்வது நல்லது. அவசியமும் கூட. பயணங்கள் பல மாற்றங்களை நமக்குள் ஏற்படுத்தும். புது விஷயங்களைக் கற்றுக் கொள்வதன் மூலம் நம் பார்வையும் கண்ணோட்டமும் பரந்து விரிந்ததாக மாறும். நம் முன்னோர்கள் பயணம் செய்ததால்தான் புதிய நாடுகள், மொழிகள், கலாச்சாரங்கள் போன்றவை நமக்கு அறிமுகம் ஆயின. மனதை மலர்ச்சியாக வைத்துக் கொள்ளப் பயணங்கள் அவசியம். பயணங்கள் கலாச்சாரங்களை மறுசீரமைப்பு செய்யவும் உதவுகின்றன. புத்தகங்களில் இருந்து கற்றுக் கொள்வதை விட பயணங்கள் அதிகமாக நமக்கு பாடங்களை சொல்லித் தருகின்றன.

நாம் சம்பாதிக்கும் பணத்தில் ஒரு சிறு பகுதியாவது பயணத்திற்கு ஒதுக்க வேண்டும். நேரத்தைச் செலவு செய்தேனும் இனிய நினைவுகளைச் சேகரிக்க வேண்டும். இனிவரும் காலங்களில் பெண்கள் கூடுதல் பயண இலக்கியங்களைப் படைக்க வேண்டும்.

இருப்பது ஒரு வாழ்க்கைதான். கூண்டுக்கு வெளியே ஒரு ஆகாயமும், கொஞ்சம் மேகங்களும், சிறு துண்டு நிலாவும், நட்சத்திரங்களும், பெரியதொரு சூரியனும் காத்துக் கிடக்கின்றன. சிறகுகளை விரிப்போம். வானத்தை அளப்போம்..வாருங்கள் தோழிகளே!

படைப்பாளர்

கனலி என்கிற சுப்பு

‘தேஜஸ்’ என்ற பெயரில் பிரதிலிபி தளத்தில் கதைகள் எழுதி வருகிறார். சர்ச்சைக்குரிய கருத்துகளை எழுதவே கனலி என்ற புனைபெயரைப் பயன்படுத்துகிறார். ஹெர் ஸ்டோரிஸில் இவர் எழுதிய கட்டுரைகள், ‘பெருங்காமப் பெண்களுக்கு இங்கே இடமிருக்கிறதா?’ , ‘அவள் அவன் மேக்கப்’ , ’இளமை திரும்புதே’ ஆகிய நூல்களாக வெளிவந்திருக்கின்றன.