சமீபத்தில் 8 வயது சிறுமி ஒருவருக்கு திருப்பதி ஏழுமலையான் சுவாமியுடன் பொட்டு கட்டித் திருமணம் செய்விக்கப்பட்டது. பொட்டு கட்டுதல் என்பது பெண்களுக்கு, குறிப்பாக சிறுமிகளுக்கு எதிராக நாட்டில் நடைபெறும் பெரும் கொடுமை என்பதில் மாற்றுக்கருத்து எதுவுமில்லை. தேவதாசி ஒழிப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டு பல்லாண்டு ஆகியும், இன்னும் இந்த வழக்கம் ஓயவில்லை. கொரோனா காரணம் காட்டப்பட்டு, தமிழ்நாட்டிலும் கூட பல இடங்களில் சிறுமிகளுக்கு கட்டாயத் திருமணங்கள் செய்து வைக்கப்படுகின்றன.
அமைச்சர் கீதா ஜீவன் இவ்வாறான திருமணங்கள் அரசின் கவனத்துக்கு வந்தால், குற்றவாளிகள் மேல் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சமீபத்தில் கூறியுள்ளார். இந்த சூழலில், பொட்டுக் கட்டும் வழக்கத்தை முடிவுக்குக் கொண்டுவர இங்கு நடந்த பெரும் சமரின் வரலாறை நாம் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. வரலாறை மீள் வாசிப்பு செய்வது, நம் தவறுகளை திருத்திக் கொள்ள, மீண்டும் அவ்வாறான தவறுகள் நடைபெறாமல் நம்மைக் காக்க…
1930ம் ஆண்டு குடி அரசு இதழில் தேவதாசி ஒழிப்புச் சட்டம் குறித்து பெரியார் எழுதிய தலையங்கங்களின் தொகுப்பை இங்கே வெளியிடுகிறோம். அந்தக் காலத்தில் தமிழ்நாட்டில் நிலவிய சூழல் என்ன, சாரதா சட்டம் என்ன சொன்னது, முத்துலட்சுமி அம்மையாரின் முயற்சி பற்றி பெரியாரின் கருத்து என்ன போன்றவற்றை இந்தத் தலையங்கங்களை வாசித்து நாம் புரிந்து கொள்ளலாம். இந்தப் பகுதியில் முத்துலட்சுமி ரெட்டி அம்மையாருக்கும் பெரியாருக்கும் இடையே இருந்த கடிதப் போக்குவரத்தும், அம்மையாரின் தேவதாசி ஒழிப்பு மசோதாப் பணியில் பெரியார் ஆற்றிய பங்கும் தெளிவாகப் புரிகிறது. தமிழ்நாட்டில் இந்த சட்டத்துக்கு ஆதரவாக கருத்துருவாக்கம் செய்வதில் பெரியாரின் பங்கு அளப்பரியது. இனி, பெரியாரின் எழுத்து:
கோயில்களில் பெண்களை பொட்டுக்கட்டுவதைத் தடுக்க சட்டம் செய்யவேணுமாய் திருமதி முத்துலட்சுமி அம்மாள் அவர்களால் சட்டசபைக்கு அனுப்பப்பட்டிருக்கும் சட்டத்தை சர்க்கார் நமக்கு அனுப்பி, அதன் மீது நமது அபிப்பிராயம் கேட்டிருக்கின்றார்கள்.
இதற்காக சர்க்கார் பொதுஜனங்களின் அபிப்பிராயம் கேட்பது என்பது கோமாளித்தனம் என்பதே நமது அபிப்பிராயம். ஏனெனில் கோவில்களில் கடவுள்கள் பேரால் பெண்களுக்கு பொட்டுக்கட்டி அவர்களையே பொது மகளிர்களாக்கி, நாட்டில் விவசாரித்தனத்திற்கு செல்வாக்கும் மதிப்பும், சமய சமூக முக்கிய தானங்களில் தாராளமாய் இடமும் அளித்து வரும் ஒரு கெட்ட வழக்கம் நமது நாட்டில் வெகுகாலமாய் இருந்து வருகின்றது. அன்றியும் நாளாவட்டத்தில் இது ஒரு வகுப்புக்கே உரியது என்பதாகி, இயற்கையு டன் கலந்த ஒரு தள்ள முடியாத கெடுதியாய் இந்த நாட்டில் நிலைபெற்றும் விட்டது.
ஒரு நாட்டில் நாகரீகமுள்ள அரசாங்கமாகவாவது அல்லது நாட்டின் சுயமரியாதையையோ, பிரஜைகளுடைய ஒழுக்கத்தையோ, நலத்தையோ, கோரின் அரசாங்கமாகவாவது ஒன்று இருந்தால் இந்த இழிவான கெட்ட பழக்கம் கடவுள் பேராலும், மதத்தின் பேராலும், சமூகத்தின் பேராலும், தேசிய வழக்கத்தின் பேராலும், இருந்து வர ஒரு க்ஷண நேரமும் விட்டுக்கொண்டு வந்திருக்காதென்றே சொல்லுவோம்.
ஆனால் நமது இந்தியாவில் வெள்ளைக்கார ஆட்சி குடி புகவும் நிலை பெறவும், நம் நாட்டுச் சுயநலப் பார்ப்பனர்கள் உளவாளிகளாகவும் உதவி யாகவும் இருந்து வந்ததால், அப்பார்ப்பனர்களுக்கு அனுகூலமாக வெள்ளைக்காரர்களும் இருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டு இருந்ததால், அந்தப் பார்ப்பனர்கள் சொல்லுகின்றபடியே நடந்து வெள்ளைக்காரர்கள் தங்கள் காரியத்தைச் சாதித்துக் கொள்ள வேண்டிய அவசியத்தில் பட்டு விட்டார்கள். இந்தக் காரணங்களால் அவர்கள் பார்ப்பனர்களுக்கு விரோதமாய் சீர்திருத்தத் துறையிலாவது, மனிதத்தன்மைத் துறையிலாவது இதுவரை ஒருவித முற்போக்கான காரியமும் செய்யாமலே இருக்க வேண்டியவர்களாகி விட்டார்கள்.
ஆனால் இப்போது கொஞ்ச காலமாய் அப்பார்ப்பனர்களின் தந்திரத்தையும் சூழ்ச்சியையும் கண்டுபிடித்து அவர்களது யோக்கியதைகளை அடியோடு வெளியாக்கி சீர்திருத்தங்களை உத்தேசித்து நாமும் வெள்ளைக்காரர்களை மிரட்டக் கூடிய சமயம் மிரட்டியும், ஆதரிக்கக் கூடிய சமயம் ஆதரித்தும், பார்ப்பனர்களின் செவ்வாக்கை ஒழித்து நமது சத்தியத்தையும், தீவிர ஆசையையும் காட்ட ஆரம்பித்து விட்டதால், இப்போது ஏதோ சிறிது அளவுக்காவது சர்க்காரார் சீர்திருத்தத் துறையில் நமது இஷ்டத்திற்கும் இணங்கும்படியான நிலைமை ஏற்பட்டிருக்கின்றது.
இந்த நிலைமையின் பலனேதான் இப்போது நமது கொள்கைகள் சிலது நாட்டில் பிரசாரம் செய்யவும், செல்வாக்குப் பெறவும் இடம் ஏற்பட்டதும்; சட்டசபையில் இது சமயம் ஒரு முடிவை பெற்று தீரவேண்டிய அவசியம் ஏற்பட்டுப் பொதுஜன அபிப்பிராயத்திற்கு வர நேர்ந்ததுமாகும்.
நிற்க, இப்போது திருமதி டாக்டர் முத்துலட்சுமி அம்மாள் அவர்களால் சென்னை சட்டசபைக்கு அனுப்பப்பட்டிருக்கும் ” பொட்டுக் கட்டுவதை ஒழிக்கும்” இந்த மசோதாவானது வெகு காலமாகவே ஜனப் பிரதிநிதிகள் என்பவர்களால் பொதுக்கூட்டங்களிலும், பொதுமகாநாடுகளிலும் கண்டித்துப் பேசப்பட்டிருப்பதுடன் இம்மாதிரி ஒரு சட்டம் செய்ய வேண்டுமென்று இந்திய சட்டசபைக் கூட்டங்களிலும் அடிக்கடி பிர தாபிக்கப்பட்டும் வந்திருக்கின்றது. இது சம்மந்தமாக, திருமதி டாக்டர் முத்துலட்சுமி அம்மாள் அவர்கள் ஒரு துண்டு பிரசுரம் வெளியிட்டு இருக்கிறார். அதன் சுருக்கமாவது…
தேவதாசி மசோதா
இந்த சமூகக் கொடுமையை ஒழிக்க ஆரம்பித்த கிளர்ச்சியானது 1868 வருடம் முதல் நடைபெற்று வருகிறது. 1906, 1907 வருஷம் உலக தேசிய மகாநாட்டில், இந்தக் கொடிய கெட்ட வழக்கத்தை ஒழிப்பதற்காகப் பல மாகாண சர்க்கார் அபிப்பிராயங்களையும் அறிந்து, தம்மால் கூடியவரை ஒழிப்பதென முடிவு செய்ததினின்று, இந்திய கவர்ன்மெண்டும் இந்த தேவதாசி மசோதாவில் அதிக சிரத்தைக் காட்டி வந்தது.
1912 வருஷம் பழைய இம்பீரியல் சட்ட நிரூபண சபையில் மூன்று இந்திய அங்கத்தினர்கள்- கனம் மாணிக்ஜி தாதாபாய், முதோல்கர், மேட்கித் ஆகியவர்கள், இந்த கொடிய பழக்கத்தை ஒழிப்பதற்கு இதே எண்ணத்தோடு வேறே மூன்று மசோதாக்கள் கொண்டு வந்தனர். இந்திய சர்க்கார் உள்நாட்டு சர்க்காருக்கு இந்த மசோதாவை அனுப்பி, அவர்களது அபிப்பிராயம் தந்த உடன் 1913 வருஷம் செப்டம்பர் மாதம் தாங்களாகவே ஒரு மசோதாவைக் கொண்டு வந்தார்கள். மீண்டும் அம்மசோதா ஒரு செலக்ட் கமிட்டிக்கு அனுப்பப்பட்டு, அவர்களது ரிப்போர்ட்டையும் 1914 வருஷம் மார்ச்சு மாதம் பெற்றார்கள். அந்த ரிப்போர்ட் மறுபடியும் இப்போதைப் போலவே பொதுஜன அபிப்பிராயத்துக்கு விடப்பட்டது.
பிறகு 1922ம் வருஷம் டாக்டர் கோர் மீண்டும் அதை இந்திய சட்டசபையில் கொண்டு வந்தார். அத்தீர்மானத்தின் மேல் விவாதம் நிகழ்ந்து கடைசியாக அது மறுபடியும் பொது ஜன அபிப்பிராயத்திற்கு பிரசுரிக்கப்பட வேண்டுமென்ற பிரரேபனை, அதிகப்படியான ஒட்டுகளால் தோற்கடிக்கப்பட்டது. பிறகு மேல்படி 1922 -ம் வருஷத்திய தீர்மானத்தின் மீது 1924 -ம் வருஷம் அதை சட்டமாக்கப் பட்டதோடு, அதை அனுசரித்து இந்தியன் பீனல்கோடு 372, 373 செக்ஷன்கள் திருத்தப்பட்டன. அதன் சட்டம் 1925 -ம் வருஷம் ஜனவரி மாதம் முதல் தேதியன்று அமுலுக்கு வந்தது.
ஆதியில் 14 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்குப் பொட்டுக் கட்டுதல் கட்டாதென்றே சாத்திரத்தால் தடுக்கப்பட்டிருக்கிறது. ஏனெனில் பொட்டுக் கட்டப்பட வேண்டிய பெண் சாத்திரப்படி கன்னிகையாயிருக்க வேண்டுமாதலால், 14 வயதிற்குள் தான் இந்த சடங்கு செய்வது வழக்கமாக இருந்து வந்தது. அதாவது எந்தப் பெண்ணையும் 14 வயதிற்கு மேல் பொட்டுக்கட்ட எந்தக் கோயில் அதிகாரியும் அனுமதிப்பதில்லை. ஆனால் இப்பொழுது மேற்படி சட்டம் வந்தபிறகு, 16 வயதிற்குக் கீழ்ப்பட்ட பெண்களுக்கு பொட்டுக்கட்டப் பட்டால் கோயிலதிகாரிகள் குற்றவாளிகள் ஆவதோடு, அந்த விதமாக அனேக கேசுகள் நடந்து அந்த 25வது சட்டப்படி தண்டனையும் பெற்றிருக்கிறார்கள்.
ஆகவே வைதீகர்களது அபிப்பிராயப்படி பார்த்தாலும்கூட, சாத்திரப்படி 18 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கு கோவில்களில் பொட்டுக்கட்ட மத அனுமதியில்லையென்று தெரிகிறது. இந்தியன் பீனல்கோடுபடி ஒரு மைனர் பெண்ணைப் பொட்டுக் கட்டுவது குற்ற மென்றாலும், பேராசையுள்ள பெற்றோர்கள் சிலர் தங்கள் பெண்களுக்குப் பொட்டுக் கட்ட கோவிலினிடமிருந்து உத்திரவு பெற்று விடுகிறார்கள். இது விபசாரத்துக்கு அனுமதி கொடுத்ததாகுமேயன்றி வேறில்லை. பொதுஜன அபிப்ராயம் இதை சட்டமாக்க அனுகூலமாயேயிருக்கிறது.
பத்திரிகைகளில் இதை ஆதரித்து எழுதியும் பொதுக் கூட்டங்களில் ஆதரித்துத் தீர்மானங்கள் நிறைவேற்றியும், சுமார் 13 வருஷத்துக்கு மேற்பட்ட ஆண் பெண் சங்கங்களில் அதை ஆதரித்து தீர்மானங்கள் நிறைவேற்றியும், இந்தக் கொடிய பழக்கத்தினால் அல்லலுறும் சமூகத்தினரே இதை சட்டமாக்க வற்புறுத்தி எழுதியும் இருக்கின்றனர். டி டிரிக்டு போர்டு முனிசிபாலிட்டிகளிலும் தங்களது ஆதரவைத் தெரிவித்திருக்கின்றனர். இவ்வாறெல்லாமிருக்க இச்சட்டத்திற்குப் பொது ஜன அபிப்ராயத்தை அறிய விரும்புவானேன்? என்பது விளங்கவில்லை. இந்த நாள்பட்ட கொடிய சமூகக் கொடுமையை ஒழிக்க யாருக்கும் ஆட்சேபனையோ எதிர் அபிப்பிராயமோ இருக்கவே முடியாது.
அன்றியும் ஒரு குறிப்பிட்ட ஜாதியையோ, சமூகத்தையோ விபசாரத்திற்கு அனுமதி கொடுப்பதும், பின்னர் அவர்களை இழிந்த சமூகமாகக் கருதுவதும் பெரும் சமூகக் கொடுமையாகும். சிறு குழந்தைகளிலிருந்தே இத்தகைய துராசார வழிகளில் பயிற்றுவிப்பது ஜனசமூக விதிகளையே மீறியதாகும். எனவே இப்படிப் பட்ட நிலைமையில் இனி இதைப்பற்றி பொது ஜனங்களுடைய அபிப்பிராயத்தைத் தெரிய வேண்டிய அவசியமே இல்லை.
தவிர இது விஷயத்தில் சாத்திர சம்மந்தமான வைதீகர்களின் ஆட்சேபணைக்கும் இடமில்லை. ஏனெனில் சாத்திரத்தில் 14 வயதுக்கு முன் கன்னிப் பெண்ணாய் இருக்கும் போதுதான் பொட்டுக் கட்ட வேண்டும் என்று இருக்கின்றது. இந்தியன் பீனல்கோட் 372, 373 செக்ஷன்களின்படியோ, 18 வயதுக்குள் பொட்டுக் கட்டக்கூடாது என்றும், கட்டினால் ஒரு வருஷக் கடினக் காவல் தண்டனையும் அபராதமும் என்றும் இருக்கின்றது. ஆகவே இது விஷயத்தில் வைதிகமும் இந்து மதமும் 1924 வருஷத்திலேயே ஒழிந்துவிட்டது. இந்நிலையில் இப்போதைய வைதிகர்கள் என்பவர்கள் இதை ஆட்சேபிப்பதானால், ஒன்று அவர்களது சாத்திரம் அவர்களுக்குத் தெரியாமல் இருக்க வேண்டும்; அல்லது தாசிகள் மூலம் தங்கள் வகுப்பார்களில் சிலர் வயிறுவளர்ப்பது கெட்டுப் போகுமே என்கின்ற ஜாதி அபிமானமாக இருக்க வேண்டும்.
அடுத்தாப்போல் பொது ஜனங்கள் எந்த விதத்திலாவது இந்தச்
சட்டத்தை ஆட்சேபிப்பார்களா என்று எண்ணுவதும் ஒன்று முட்டாள் தனமாகவோ அல்லது யோக்கியப் பொறுப்பற்றத் தன்மையாகவோதான் இருக்க வேண்டும். ஏனெனில் இந்து சமூகத்தில் கடவுள் பேரால் மதத்தின் பேரால் விபசாரிகளை ஏற்படுத்த வேண்டும் என்று எந்த சமூகத்தாரோ, தேசத்தாரோ கருதுவார்களானால், அவர்களைப் போல் காட்டுமிராண்டிகளோ, கெட்டவர்களோ இருக்கவே முடியாது. மற்றபடி எந்த சமூகமாவது இம்மாதிரியான தொழில் தங்கள் வகுப்புக்கு இருக்க வேண்டுமென்று கேட்பார்களேயானால், அவர்களைப் போல் சுயமரியாதையற்றவர்களும் இழிகுலமக்களும் வேறு யாரும் இருக்க முடியாது.
எந்தப் பெண்களாவது இந்தத் தொழிலில் ஜீவிக்கலாம் என்று கருதி அதற்காக சுவாமியையும், மதத்தையும் உதவிக்கு உபயோகப்படுத்த நினைத்தால் அவர்களைப் போல் ஈனப்பெண்கள் வேறு எங்கும் இருக்கவே முடியாது. ஆகவே இந்தச் சட்டம் சென்ற சட்டசபைக் கூட்டத்திலேயே நிறைவேற்றப்பட்டிருக்க வேண்டியது; மிக்க அவசியமும் யோக்கியமுமான காரியமுமாகும்.
ஆனால் அந்தப்படி நிறைவேற்றப்படாமல் இருக்க சட்ட மெம்பர் ஆட்சேபனைகளைக் கிளப்பி இதைப் பொது ஜன அபிப்பிராயத்திற்கு அனுப்புவது என்னும் பேரால் தடைப்படுத்தி விட்டது மிகவும் வருந்தத்தக்கதாகும். அதற்கு அனுகலமாய் ஜடி கட்சி அங்கத்தினர்கள் ஓட்டுக் கொடுத்தது அவர்களுக்கு மிகுதியும் மானக்கேடான காரியமாகும். அக்கட்சியார்கள் இந்த காரியத்தைகூட செய்ய முடியவில்லையானால் பின் என்ன வேலை செய்யத்தான் அந்த சட்டசபையை நடத்திக் கொண்டிருக்கிறார்கள் என்பது நமக்குப் புலனாகவில்லை. “காங்கிரஸ்காரர்கள் சட்டசபையில் இல்லாததால் இச்சட்டம் நிறைவேற்றாமல் போயிற்று” என்று திருமதி டாக்டர் முத்துலட்சுமி அம்மாள் நமக்கு எழுதி இருப்பதைப் பார்க்க நமக்குத் தாங்க முடியாத அவமானமாகவே இருந்தது.
எப்படியானாலும் அடுத்த சட்டசபைக் கூட்டத்திலாவது இச்சட்டம் நிறைவேறாமல் போகுமேயானால், சர்க்காரின் யோக்கியத்திலும் ஜடி கட்சியாரின் சுயமரியாதையிலும் தெருவில் போகின்றவனுக்குக் கூட மதிப்பும் நம்பிக்கையும் இருக்காதென்றே சொல்லுவோம்.
குடி அரசு – தலையங்கம் – 23.03.1930
நன்றி: பெரியார் களஞ்சியம்- குடிஅரசு தொகுதிகள்
வெளியீடு: பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம்.