ஒரு வழியாக குழந்தை பிறப்பு, கருத்தடை, குடும்பக்கட்டுப்பாடு அறுவை சிகிச்சை என ஹார்மோன்களின் ஏற்ற இறக்கங்கள் குழந்தைகள் வளர்க்க ஏதுவாகவோ, அல்லது நமது குழந்தை வளர்ப்பில் காட்டும் கடமையுணர்ச்சியைப் பார்த்தோ, இளமையில் இருக்கும் எதையும் தாங்கும் உடல் வலிமை காரணமாகவோ, அல்லது இப்போது பெண்கள் தங்கள் குழந்தைகள் தவிர வேறு எதற்கும் முக்கியத்துவம் தரமாட்டார்கள் என்றோ பலரிடமும் தனது ஆட்டத்தைச் சற்றே நிறுத்தி வைத்திருக்கும். ஆனால், இவை எதையும் பொருட்படுத்தாது சிலருக்கு மாத விலக்குக்கு முன் மாதா மாதம் மைக்ரேனில் ஆரம்பித்து பல தொந்திரவுகளைத் தந்து கொண்டிருப்பதும் உண்டு.
பெரி மெனோபாஸ் எனப்படும் மாதவிலக்குக்கு முன்னான பிரச்னைகள் சில பெண்களை மாதா மாதம் புரட்டிப் போட்டுச் செல்லும் என்றாலும், முப்பதுகளின் பிற்பகுதியில் இதன் ஆட்டம் பலரும் நினைத்துப் பார்க்க முடியாதளவு இருக்கும். வழமை போல சில பெண்களுக்கு இருந்த இடம் தெரியாமல் மெனோபாஸுக்கு இட்டுச் சென்றாலும், பல பெண்களுக்குக் கிட்டத்தட்ட ஏழெட்டு வருடங்கள் மேலாக ஆடி, சம்மந்தப்பட்ட பெண்களைப் படாதபாடு படுத்திவிட்டுதான் அடங்கும்.
உடலிலும் மனதிலும் எந்த மாற்றமும் இல்லாமல் மிகச் சாதாரணமாக மெனோபாஸைக் கடப்பவர்கள் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள். ஆனால், மெனோபாஸ் என்னும் மாத விலக்கு முற்றிலும் நின்று போகும் முன் பெண்கள் என்னென்ன மாதிரி பிரச்னைகளை எதிர்கொள்வார்கள் என்பதை பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் தெரிந்து கொண்டால் ஓரளவு வீட்டில் உள்ள பெண்களைப் புரிந்து கொள்ள ஏதுவாக இருக்கும்.
பொதுவாக 35+இல் சின்னச் சின்ன பிரச்னைகள் ஏற்படும் போது, நம்மைக் கூர்ந்து கவனிக்கத் தொடங்க வேண்டும். மாதம் மாதம் பீரியட்ஸ் ரெகுலராக வருகிறதா? அதிக காரணமே இல்லாமல் கோபமும் எரிச்சலும் வருகிறதா? பாலியல் உணர்வுகள் அதீதத்துக்கும், அதற்கு எதிர்நிலைக்கும் அவ்வப்போது சென்று வருகிறதா? அதிக சோர்வுடன் கை கால் முதுகு வலி, உதிரப்போக்கில் மாறுதல் ஏற்படுகிறதா என்பதைத் தொடர்ந்து கவனியுங்கள். பீரியட்ஸ் ஆரம்பிப்பதற்கு முன் எத்தனை நாளில் இத்தகைய மாற்றங்கள் நடக்கிறது, பீரியட்ஸ் முடிந்தவுடன் என்ன மாதிரி மனநிலை இருக்கிறது என்பதைப் பட்டியலிடுங்கள். நிறைய வேறுபாடுகள் தெரிந்தால் ஹார்மோன்கள் விளையாட ஆரம்பித்துவிட்டதென்று அர்த்தம். நம் உடல் நம்மை ஒரு பெரிய மாற்றத்திற்குத் தயார் செய்யத் தொடங்குகிறது.
நாற்பது நெருங்கும் அல்லது நாற்பதைக் கடக்கும் பெண்கள் தங்கள் வாழ்க்கையின் முக்கியமான அதே நேரம் கடுமையான காலகட்டத்தைக் கடக்கிறார்கள். மெனோபாஸுசுக்கு முந்தைய இந்தக் காலகட்டத்தில் பெண்கள் பல்வேறு விதமான உடல் மற்றும் மனரீதியான பிரச்னைகளை எதிர்கொள்கிறார்கள். எல்லாப் பெண்களும் ஒரே மாதிரியான பிரச்னைகளை எதிர்கொள்வதில்லை என்பதுதான் சிக்கலே. அதனால் ஒரு சிலருக்கு கொடுக்கப்படும் சிகிச்சை வேறு சிலருக்கு ரிவர்ஸாக மாறிவிடுவதற்கும் சாத்தியகூறுகள் உண்டு.
முப்பதுகளின் இறுதியில் ஆரம்பிக்கும் இது, சிலருக்கு நாற்பதுக்கு மேல் தொடங்கலாம். முதலில் உடல் ரீதியான பிரச்னைகளுடன் மருத்துவரைச் சந்திக்கும்போது வயதை எக்காரணம் கொண்டும் குறைக்காதீர்கள். சிறு சிறு அசெளகரியங்களையும் கூறிவிடுங்கள். சாதாரணமாக பீரியட்ஸ் ஆரம்பிப்பதற்கு முன் எதிர்கொள்ளும் உடல், மனம் சார்ந்த பிரச்னைகளை ஆரம்பத்திலேயே கூறினால்தான் மருத்துவரால் எளிதில் கண்டறிய முடியும். இல்லையென்றால் நமக்கு PMS இருப்பதை டாக்டர் உணரவே நாளாகும்.
ஒரு சிலருக்குப் பருக்கள் பருவகாலத்தைவிட அதிக அளவில் முகம் முழுவதும் வாரி இறைக்கும். இதை Acne என்கிறார்கள் மருத்துவர்கள். ஹார்மோனின் தாறுமாறான சுழற்சியால் அதிகம் வருவதாகக் கூறினாலும், கர்ப்பப்பையில் கட்டிகள் இருந்தாலோ அல்லது வேறு ஏதேனும் கர்ப்பபை சார்ந்த பிரச்னைகள் இருந்தாலோ வருவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். இதைத்தான் அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்று கூறியிருக்கிறார்கள்.
தூக்கமின்மை, எரிச்சல், கோபம் அதிகமாக இருக்கும். என்ன அன்யோன்யமான தம்பதிகளுக்குள்ளும் காரணமே இல்லாமல் சண்டைகள் வரும். பிள்ளைகள் சொல்லும் ஒரு விஷயத்தைச் சாதாரணமாகப் பெரிதாக பொருட்படுத்தியிருக்கவே மாட்டோம். ஆனால், இந்த மனநிலையில் அந்தச் சின்ன விஷயம் பூதாகரமாகத் தோன்றி, நம் பிள்ளைகள் நம்மை அலட்சியப்படுத்துகிறதோ என்று தோன்றி, அது படிப்படியாக விரிந்து கழிவிரக்கத்திலோ சில நேரம் தற்கொலை எண்ணத்திலோ முடியும். நமக்குள் என்ன மாற்றம் நடக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளாத குடும்பத்தினர், நம் செயல்களில் ஏற்படும் மாறுபாட்டை கண்டு திகைத்து, சாதாரணம் விஷயம்தானே இவளுக்கு என்ன பைத்தியமா பிடிச்சிருக்கு என்று நம்மை ஏலியன் போல பார்க்கத் தொடங்குவார்கள். சில வீடுகளிலோ பெண்களின் நிலை புரியாது, அவர்களை வார்த்தைகளால் காயப்படுத்த தொடங்குவார்கள். அது இன்னும் அதிகளவில் வேதனைப்படுத்தும்.
நாம் அர்த்தமில்லாமல் கோபப்படுகிறோம் என்று நன்கு தெரிந்தாலும், நம்மைக் கட்டுப்படுத்த முடியாமல் வெவ்வேறு வகையில் வெடித்துக் கொண்டே இருப்போம். மனதிற்கும் உடலிற்கும் நடக்கும் போராட்டத்தில் சிந்திக்கும் திறனைப் பெரும்பாலும் இழந்து விடுவோம். அதை யாராவது சுட்டிக்காட்டினாலும் ஏற்க முடியாத நிலையில் இருப்போம். பாலியல் சார்ந்த உணர்வுகள் ரோலர் கோஸ்டர் போல அதீதம், வெறுப்பு இரண்டு நிலைக்கும் மாறி மாறி பயணிக்கும்.
அடுத்து மாத விலக்கு இஷ்டத்துக்கு வரும். சில மாதம் வரவே வராது. இரண்டு மாதம் கழித்து வரும்போது அதீத உதிரப்போக்கு, இதெல்லாவற்றையும்விட எப்போது வருமோ என்கிற மன அழுத்தமும் எரிச்சலில் ஒருவித பதற்றத்திலுமே நம்மை வைத்திருக்கும். உற்சாகத்தின் எல்லைக்கும் விரக்தியின் எல்லைக்கும் ஊசலாடும் மனதைச் சமன்படுத்தவே படாதபாடுபட வேண்டியிருக்கும். மன அழுத்தம் பெண்களை அமுக்கிப் படாதபாடுபடுத்தும் இந்தக் காலகட்டத்தில் உடலும் மனமும் போர்களமாகும்.
எதையும் ‘டேக் இட் ஈஸி ஊர்வசி’ என்று நேர்மறை எண்ணங்கள் கொண்டவர்கள்கூட எதிர்மறை எண்ணங்களின் பிடியில் சிக்கி வெளியே வர முடியாமல் தவிப்பார்கள். எதிர்மறை எண்ணங்கள் நமக்குள் தோற்றுவிக்கும் கற்பனை பயங்கள் நம் இயல்பான வாழ்க்கையையும் சிந்தனைத்திறனையும் மாற்றிப் போடும் வல்லமை வாய்ந்தது. நம்மை நாம் ஆராயாமல் விட்டால், அலைபாயும் மனத்துக்குள் (மூட் ஸ்விங்) சிக்கி சின்னா பின்னமாவோம். அலைபாயும் மனதை எதிர்கொள்வது அவ்வளவு எளிதில்லை. நம்மை மட்டுமல்ல, நமது குடும்பத்தையும் சேர்ந்தே பாதிக்கும். சாதாரணமாகவே கோபப்படுபவர்கள், கொஞ்சம் சென்ஸிடிவ் என்றால் இந்தக் காலகட்டம் அவர்களை அதீத உணர்ச்சி குவியலுக்குக் கொண்டு செல்லும்.
அந்தக் காலகட்டத்தில் மனம் யாரிடமாவது மிக ஒன்றிப்போய், அவர்களைச் சார்ந்தே நம் இன்ப, துன்பங்கள் என்ற மிகப்பெரிய மாயைக்குள் சுழல ஆரம்பிப்போம். சில பெண்கள் திருமணம் தாண்டிய உறவுகளில் சிக்கிக்கொள்வது (Extra marital affair) இந்தக் காலகட்டத்தில்தான். ஹார்மோன்களின் விளையாட்டால் மனமும் உடலும் ஒரு நிலையில் இல்லாமல் இருக்கும் இந்தக் காலகட்டத்தில் பெண் சாய்ந்துகொள்ளத் தோள் தேடுகிறாள். பொறுப்புகளின் பிடியில் இருக்கும் கணவரும், தன் இளமைக்குள் சிறகடித்துப் பறக்க முயற்சிக்கும் குழந்தைகளும் அவரவர் உலகத்திற்குள் ஐக்கியமாக, அறிமுகமில்லாத ஓர் ஆண் கேட்கும் சாப்பிட்டியா என்ற அக்கறையான ஒற்றை வார்த்தைகூட அந்தத் தருணத்தில் மிகப்பெரும் ஆறுதலாக அமைய, அவனுடன் நெருங்கிப் பழகத் தொடங்குகிறாள். அந்த நேரத்தில் ஆணின் சின்னச் சின்ன ரொமான்ஸ் விளையாட்டுகள் அவளின் மனக்குழப்பத்துக்கு ஆறுதலாகிறது. ஆனால், அப்படியாகத் துளிர்விடும் உறவுகள் பெரும்பாலும் மற்றொரு பிரச்னையாகதான் உருவெடுக்கும். அதனால் மனநிம்மதி இழந்து, கூடுதல் மன உளைச்சலுக்கு ஆளாவோம். அதோடு நம் மனநிலை மாற்றங்களை உணர முற்படாமல், இத்தகைய உறவுகளில் மட்டுமன்றி, நம்மிடம் நெருங்கிப் பழகுபவர்களையும் அதிகம் இறுக்கத் தொடங்குவோம். கணவர், பிள்ளைகள், நெருங்கிய உறவினர்கள், நண்பர்களை இந்த இறுக்கம் மூச்சுத் திணற வைத்து நம்மிடம் இருந்து கொஞ்சம் தள்ளி நிற்க வைக்க, இன்னும் மூர்க்கமாவோம். நமக்கு யாருமில்லை என்று கழிவிரக்கமும் நாம் யாருக்கும் உபயோகமில்லை என்ற எண்ணமும் அதிவேகமாக நம்மை ஆக்ரமிக்க, உடைந்து அழத் தொடங்குவோம். இன்னும் சொல்லப்போனால் இந்த எண்ணச் சூழலுக்குள் சிக்கிக்கொண்டு, நம்மைச் சுற்றி இருக்கும் புற உலகைகூட மறந்து அந்தச் சூழலிலேயே வெந்து சாவோம். மெல்ல மெல்ல தனிமையை நோக்கி நகருவோம்.
(தொடரும்)
படைப்பாளர்:
கமலி பன்னீர்செல்வம். எழுத்தாளர். ‘கேட் சோபின் சிறுகதைகள்’ என்ற நூல் இவர் மொழிபெயர்ப்பில் வெளிவந்து, பாராட்டுகளைப் பெற்று வருகிறது.