மற்றும் ஒரு பள்ளி விடுமுறைக் காலம் வரவிருக்கிறது. ஆண்டு முழுவதும் தேக்கி வைத்த பயணக் கனவுகளைப் பலர் நிறைவேற்றியிருப்போம். சிலர் இன்னும் புதிதாய் திட்டங்கள் சேர்த்து வைத்து அடுத்த விடுமுறைக்குக் காத்திருப்போம்.

எங்கள் சுற்றுலாக் குழுவில் நண்பர்கள் சுமார் 30, 35 நண்பர்கள் இருக்கிறோம். வருடத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறையாவது சேர்ந்து சுற்றுலா செல்வது வழக்கம். The more the merrier என்பார்கள். பலருடன் இணைந்து பயணிக்கையில் மகிழ்ச்சியின் அளவு கூடுகிறது. ஒவ்வொரு பயணத்தின் போதும் குழந்தைகள் நிறைய கற்றுக் கொள்வதையும், பிறருடன் பயணிக்கும் ஒவ்வொரு முறையும் கெட்டப் பழக்கங்கள் சிலவற்றை விட்டு விடுவதையும் துல்லியமாக உணர முடிகிறது. பெரும்பாலும் தமிழ்நாடு மற்றும் கேரளாவில் அதிகக் கூட்டம் இல்லாத ஊர்களே எங்கள் தேர்வு. அதிலும் கேரளத்திற்கு முதலிடம்.

எத்தனை முறை சென்றாலும் கடவுளின் தேசமான கேரளாவில் எங்களை ஈர்ப்பதற்கு ஏதாவது ஒரு விஷயம் இருந்து கொண்டே இருக்கிறது. குறிப்பாக மனிதர்கள்.

அங்கு சந்திக்கும் ஓட்டுநர்களாகட்டும், தங்கும் இடங்களில் உள்ள விடுதிகளின் காப்பாளர்கள் ஆகட்டும், இரண்டொரு நாட்களில் நண்பர்கள் போல் ஆகி விடுகிறார்கள். நேர்மையானவர்களாகவும் இருக்கிறார்கள். ஒரு ஊரிலிருந்து கிளம்புகையில், ‘அடுத்த முறை கட்டாயம் வருகிறோம்!’ என்று சொல்லியே விடைபெறுகிறோம். இத்தோடு மூன்று முறை கொல்லம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்குச் சென்று வந்து விட்டோம்.

எங்கள் ஊருக்குப் பக்கத்தில் இருக்கிறது, நேரடி ரயில் வசதி என்பதைத் தாண்டி மக்கள் மிக இனிமையானவர்களாக இருப்பதும் முக்கிய காரணம். முதன் முறையாகக் கூட்டமாக நாங்கள் சென்றபோது ஒரு பெரிய உணவகத்தில் அமர்ந்திருந்தோம். எவ்வளவு பெரிய உணவகமாக இருந்தாலும் இத்தனை பேர் சேர்ந்தாற் போல் வந்து ஆளுக்கொரு உணவுப் பொருளைக் கேட்டால் கொஞ்சம் மிரளத்தான் செய்கிறார்கள். எதிர்பார்த்ததைவிட உணவு வகைகள் ஒவ்வொன்றும் வரத் தாமதமாகியது. குழந்தைகள் உண்டு முடித்துவிட்டு ஐஸ்கிரீம், ஜூஸ் என்று கேட்க, இதற்கு மேல் முடியாது என்று நினைத்தார்கள் போல…

ஹோட்டல் காரர்களே, “அப்படியே ரைட்ல ஒரு நாலஞ்சு கடை தள்ளிப் போனீங்கன்னா மில்க் ஷேக் கடை ஒண்ணு இருக்கு, அதுல இளநீர் மில்க் ஷேக், ஐஸ்கிரீம் சூப்பரா இருக்கும். ட்ரை பண்ணிப் பாருங்களேன்!” என்றனர். (எங்களை விட்டால் போதும் என்று மைண்ட் வாய்ஸ் ஓடி இருக்கும்!) அப்படியே மெல்ல நடந்து வந்தோம். இரண்டு தெருவோரக் கடைகள் அருகருகே இருந்தன. “இளநீர் மில்க் ஷேக் இருக்காமே?” என்றவுடன் இதோ என்று கணவனும் மனைவியுமான இரண்டு பேர் சுறுசுறுப்பாகக் களத்தில் இறங்கினார்கள். பக்கத்து கடைக்காரர்களை உதவிக்குக் கூப்பிட்டுக் கொண்டார் அந்தப் பெண். தமிழும் மலையாளமும் சரளமாகப் பேசினார். அங்கிருந்த பழச்சாறுகளின் பெயர்ப் பட்டியலைப் பார்த்துவிட்டு மாதுளை, ஆப்பிள், ஆரஞ்சு என்று ஆளுக்கு ஒன்றாகக் கேட்க, சளைக்காமல் ஒவ்வொன்றாகப் போட்டுத் தந்தார்கள். யாரும் ஒன்றுடன் நிறுத்தவில்லை.  இரண்டு மூன்று என்று உள்ளே போய்க் கொண்டே இருந்தது. “அப்பாடா அந்த ஹோட்டல்ல நல்லாவே சாப்பிடலை. இப்பதான் திருப்தியா இருக்கு!” என்றனர் குழந்தைகள்.

 மூன்று நாள் சுற்றுலாவின் முதல் நாளே அந்தக் கடையைக் கண்டுபிடித்து விட்டதால் மறுநாளும் சென்றோம். அன்றைய தினம் படகுவீட்டில் பயணிப்பதாகத் திட்டம். இத்தனை மணிக்குத் திரும்ப வருவோம், இத்தனை ஜுஸ் தேவைப்படும் என்று முதலிலேயே கடையில் சொல்லி விட்டே படகில் ஏறினோம். படகு திரும்பி வரும்போது, நாங்கள் கேட்ட பழச்சாறுகளை முன்னேற்பாட்டுடன் தயாரித்து வைத்திருந்தார் அந்தப் பெண். அதற்கு ஓரிரு ஆண்டுகள் கழித்து கொல்லத்திற்கு அருகில் இருக்கும் இன்னொரு ஊருக்குச் சென்ற போது, பிள்ளைகள் நினைவு வைத்திருந்து, ‘எவ்வளவு நேரம் ஆனாலும் சரி, இளநீர் ஐஸ்கிரீம் கடைக்குப் போயே ஆக வேண்டும்’ என்று சொல்லிவிட்டார்கள்.

Photo by Briana Tozour on Unsplash

தினந்தோறும் காணும் எத்தனையோ நபர்களுக்கு மத்தியில் அந்தப் பெண் எங்களை நன்றாக நினைவில் வைத்திருந்தார். “நல்லா இருக்கீங்களா?” என்றார். அதே புன்னகை முகத்துடன் எங்கள் அனைவரையும் கவனித்த அந்தப் பெண் என்னுடைய காதை சுட்டிக் காட்டி, “மேடம்! போன தடவை வந்தப்ப வேற கம்மல் போட்டிருந்தீங்களே! இப்ப மாத்திட்டீங்களா?” என்று ஞாபகமாகக் கேட்டார். “பரவாயில்லையே. உங்க  ஞாபக சக்தி, சுறுசுறுப்பு, ஐஸ்கிரீம் டேஸ்ட் எல்லாமே சூப்பர்! நீங்கல்லாம் ஸ்டார் ஹோட்டல்ல  சேர்ந்திருந்தால் இன்னும் எங்கேயோ போயிருப்பீங்க!” என்றதற்கு, “அப்ப இந்த மாதிரி கெஸ்ட்டை நேரடியா பார்த்து சந்தோஷமாப் பேசி சிரிக்க முடியாதே மேடம்! இதுவே எனக்குப் போதும்” என்றார்.

 கேரளாவில் மீண்டும் மீண்டும் சுற்றுலா செல்ல இன்னும் ஒரு காரணமும் இருக்கிறது. அங்கு யாரும் ஏமாற்றுவதில்லை. சொன்ன தொகைக்கு மேல் ஹோட்டல்காரர்கள் ஒரு பைசா கூட வாங்குவதில்லை. தேவைப்பட்டால் குறைத்துக்கூட வாங்கிக் கொள்கிறார்கள். ஒரு முறை பத்து அறைகளை முன்பதிவு செய்திருந்தோம். ஆனால் எட்டு அறைகளே போதுமானதாக இருந்தது. தயங்கிக் கொண்டே ரிசப்ஷனில் சென்று சொல்ல, “அதனாலென்ன! சாவியை ரிட்டர்ன் பண்ணிடுங்க. அதுக்கான பணத்தைக் கழிச்சுக்கிறோம்” என்றார்கள். மனம் வேகவேகமாகப் பிற மாநிலங்களின் சுற்றுலாத் தளங்களையும் இதையும் சேர்த்து ஒப்பிட்டது. இரண்டுக்கும் மேற்பட்ட முறை தங்கியதால், கேரள அரசு விடுதியான KTDCயின் மேலாளர் ஒருவர், ‘இனி எந்த ஊர் KTDC விடுதியில் தங்கினாலும் என்னைத் தொடர்பு கொள்ளுங்கள், 30 சதவீதத் தள்ளுபடியுடன் தங்கும் வசதி ஏற்பாடு செய்கிறேன்’ என்றார்.

குடும்பத்துடன் மகிழ்ச்சியாக நேரம் செலவழிக்க வந்திருக்கிறார்களா, முடிந்தவரை கறந்து விடுவோம் என்று திட்டமிடுபவர்கள் இங்கே அதிகம்.

ஒரு புகழ்பெற்ற வழிபாட்டுத்தலம் அது. நுழைவாயிலில் இலவசக் காலணி பாதுகாப்பு மையம் என்று போட்டிருந்த இடத்தில் செருப்புக்களை விட்டுவிட்டு உள்ளே சென்றோம். வெளியே வரும் போது ஒரு செருப்புக்கு பத்து ரூபாய் தர வேண்டும் என்றார்கள். இலவசம் என்றுதானே போட்டிருக்கிறது என்று பலகையைக் காட்ட, “இந்த உலகத்துல எதுவுமே இலவசம் கிடையாது. எல்லாத்துக்குமே ஒரு விலை உண்டு” என்று தத்துவம் பேசினார் அங்கிருந்தவர். தலத்தின் பொறுப்பு அலுவலரிடம் முறையிட்டபோது, “இங்கே அப்படித்தான். அவங்க சொல்றதைக் கேளுங்க” என்றார் அவர்.

“பத்து ரூபா பெருசில்ல… ஆனா நாங்க ஏமாந்துட்டோம்னு இருக்கக் கூடாது. செருப்பு எல்லாம் நீங்களே வச்சுக்கோங்க. எல்லாமே பழைய செருப்பு தான்” என்று சொல்லிவிட்டு நாங்கள் அனைவரும் வெறுங்காலுடன் நடக்கத் தொடங்க, ஒரு பெரியவர் வேகமாக வந்து, “காசு குடுக்க வேண்டாம். நீங்க எடுத்துட்டுப் போங்க. இவனுங்க இப்படித்தான் கிடைச்ச வரை லாபம்னு பார்ப்பாங்க. கடைசி எல்லாத்தையும் டாஸ்மாக்கில் கொண்டு போய்ப் போடுவாங்க” என்றார். பின் ஒருவர் மட்டும் சென்று, ஒரு பையில் அத்தனை பேரின் செருப்புக்களையும் அள்ளிப் போட்டுக் கொண்டு வந்தோம். அந்த நான்கு நாள் பயணத்தில் எத்தனையோ ஊர்களையும் மனிதர்களையும் சந்தித்திருந்தாலும் அந்தச் சுற்றுலாவைப் பற்றி பேசினாலே  காலணி சம்பவம் மட்டும் முன்னால் வந்து நிற்கும் அளவிற்கு மனதைப் புண்படுத்தி விட்டது.

இதே போல் பார்க்கிங் கட்டணம் என்று நிர்ணயிக்கப்பட்ட தொகையை விட அதிகமாக வசூலிக்கும் இடங்களும் பல இருக்கின்றன. வண்டியை நிறுத்துவதற்கு எந்த பாதுகாப்பான வசதியும் செய்வதில்லை, போலி டிக்கெட்டுகள் அச்சடித்து அதிகம் வசூலிக்கும் நபர்களும் உண்டு. இதனாலேயே அந்த ஊருக்கு மறுபடியும் போக வேண்டுமா என்ற எண்ணம் வருகிறது.

சிறு குழந்தைகளுடன் பயணிப்பதால் பெரும்பாலும் ‘ஹோம் ஸ்டே’ என்று சொல்லப்படும் சமையலறையுடன் இணைந்த விடுதிகளைத்தான் தேர்வு செய்வோம். சில பாத்திரங்கள், இன்டக்ஷன் ஸ்டவ் என்று கையில் வைத்திருப்போம். நமது தென்னிந்திய மாநிலங்கள் எல்லா பக்கமும் எப்போது வேண்டுமானாலும் பால் பாக்கெட் கிடைக்கும் என்பதால் பால் காய்ச்சி காபி, டீ போடுவதற்கு வசதியாக இருக்கும். மலையாளக் கரையோரம் கட்டன் சாயாவும், பெரிய அரிசி சாதமும் தான் கிடைக்கும் என்பதால் அரிசியைக் கையோடு கொண்டு போய் சமைத்துக் கொள்ளக்கூட இதுவரை எந்த விடுதியும் மறுப்புச் சொன்னதில்லை.

ஒரு படி மேலே போய் இந்த விடுதிப் பொறுப்பாளர்கள் நிரந்தர நண்பர்களாகத் தொடர்வதும் உண்டு.

 மேகாலயாவில் ஒரு அரசுசார் விடுதியில் தங்கியிருந்தோம். அங்கிருந்த பொறுப்பாளர் ஜான் என்ற ஒரு பழங்குடியின மனிதர். அரசு ஊழியராக இருந்த போதிலும், அவரது வேர்கள் காட்டுப்பகுதியில்தான் இருந்தன. வட இந்திய, தென்னிந்திய உணவுகளைச் சமைப்பதில் வல்லவராய் இருந்தாலும் வார்த்தைக்கு வார்த்தை தன் உறவினர்கள், தன் பூமி என்று பெருமையாகப் பேசிக் கொண்டிருந்தார். அதிகபட்சமாக நான்கரை அடி உயரம் தான் இருப்பார். அதிகம் படித்ததில்லை. இருந்தாலும் அவ்வளவு அனுபவசாலியாக இருந்தார்.

இன்னொரு முறை காவல்துறையினரின் கெஸ்ட் ஹவுஸ் ஒன்றில் தங்க நேர்ந்தது. அங்கிருந்த கேர் டேக்கர் ஒரு கான்ஸ்டபிள். ‘போலீசாகணும்னு ரொம்ப ஆசைப்பட்டு சேர்ந்தேன், இப்ப இந்த பங்களாவுக்கு வாட்ச்மேன் மாதிரி ஆக்கிட்டாங்க’ என்று வருத்தப்பட்டார். ‘ஏன் கவலைப்படுகிறீர்கள்? இங்கே உங்களுக்கு நிறைய நேரம் கிடைக்குமே, மேற்கொண்டு எஸ்ஐ, இன்ஸ்பெக்டர் பரீட்சைகளுக்கு நீங்கள் படிக்கலாமே?’ என்றேன். இது நடந்து பத்து வருடங்களுக்கு மேல் இருக்கும். நான் சொன்னதை நானே மறந்து விட்டேன், சமீபத்தில் ஒரு நாள் ஃபோன் செய்து, “மேடம் நீங்க சொன்ன மாதிரியே உட்கார்ந்து எக்ஸாமுக்கு சீரியஸா ப்ரிப்பேர் பண்ணினேன். இப்ப எஸ்.ஐ. போஸ்டிங் கிடைச்சிருக்கு. வேற ஊர்ல இருக்கேன்” என்று மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார்.

Photo by Manas Nandurkar on Unsplash

 பயணத்தில் கிடைக்கும் நண்பர்கள் சிலரை ரயில் ஸ்நேகம் போல் பாதியிலேயே மறந்து விடுவோம். சில புதிய  நண்பர்களை மீண்டும் சந்திக்க வாய்க்கும். அவர்களைப் பார்ப்பதற்காகவே அந்த ஊருக்குப் போக வேண்டும் என்று நினைக்கும் அளவிற்கு பிணைப்பு இறுகி விடுவதும் உண்டு. முன்பெல்லாம் ஒரு ஊருக்குச் செல்ல வேண்டும் என்றால் அங்கு யாராவது உறவினர் இருக்கிறாரா, தெரிந்தவர் யாரேனும் சென்று வந்தார்களா என்று தேடிப் பிடித்து அலைந்து, பின் முந்தைய நபர்கள் சென்ற பாதையிலேயே நாமும் போவோம். இப்போது கூகிள் ரிவ்யூகள் அந்தக் குறையை பெருமளவு தீர்த்து வைத்திருக்கின்றன. முழுமையாக கூகுளில் எழுதப்படும் ரிவ்யூக்களைப் படித்தால், தங்குவதற்கு ஏற்ற இடம் எது, எங்கே சாப்பிடலாம், பக்கத்தில் எங்கெங்கே சுற்றிப் பார்க்கலாம் என்பதைத் திட்டமிட முடிகிறது.

நல்ல திட்டமிடலும் அமைந்து, நிறைய நல்லவர்களை சந்திக்கும் வாய்ப்பும் கிடைத்து விட்டால் எல்லாப் பயணங்களும் இனிமையானவை தான்.

படைப்பாளர்

டாக்டர் அகிலாண்டபாரதி

கண் மருத்துவர், எழுத்தாளர்கதைசொல்லி. அன்றாட வாழ்வில் தான் சந்திக்கும் மனிதர்களையும் அவர்களின் கதைகளையும் எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். சிறார் வாசகர் வட்டம் ஒன்றை நடத்திவருகிறார். நாவல்கள், சிறுகதைகள், சிறார் கதைகள், கட்டுரைகள் என பல தளங்களில் பரந்துபட்ட எழுத்து இவருடையது.