வெனிஸின் சான்/செயிண்ட் மார்க் ஸ்கொயரில் இருக்கும் இரண்டாம் விக்டர் இம்மானுவேல் நினைவுச் சின்னத்தைக் கடந்துதான் கொண்டோலா படகுச் சவாரிக்குப் போனோம்.

வெனிஸே நீர் சூழ் உலகுதான். அதிலும் நன்னீர் ஏரி போல் கடல்நீர் சூழந்த கட்டடங்கள் வெகு அழகு. வெய்யில்தான் கொளுத்தி எடுக்கிறது. வேர்த்து விறுவிறுத்து மட்டுமல்ல மயக்கம் வரும் அளவுக்கு வெய்யில் வாட்டுகிறது (நீர் நிலைகள் இருந்தாலும், கேரளா, சிங்கப்பூர் போல ஒரு மாதிரி வறட்சியான தட்பவெப்பம்).

மிக பிரம்மாண்டமான சிலை ஒன்று ஐந்து ஆறு குட்டிப் பாலங்களைக் கடந்தபின் வந்தது.  இந்த விக்டர் இமானுவேல் குதிரையில் கம்பீரமாக ஆரோகணித்திருக்கும் சிலையின் பீடத்தின் முன்புறம், ஒரு ‘வானகமே வையகமே’ எனக் கையை விரித்துச் செங்கோல் பிடித்த வீராங்கனையும், விரிந்த இறக்கைகளோடு கர்ஜிக்கும் சிங்கமும் இருந்தன. ஆனால் சிற்பத்தில் பின்புறமோ, கொடிபிடித்த பெண்ணும் தலை கவிழ்ந்து படுத்திருக்கும் சிங்கமும் செதுக்கப்பட்டுள்ளது.

இந்த பீடத்தின் மற்ற இருபுறங்களில் ஒருபுறம் மாஜியோ என எழுதப்பட்டுள்ளது. அதன் கீழ் இரண்டு குழந்தைகளுக்குப் பாலூட்டும் ஓநாய்ச் சின்னம் கொண்ட ஷீல்டும் ( ரோமாபுரியை நிர்மாணித்த ரோமுலஸ், ரோமஸ )  துப்பாக்கியும் செதுக்கப்பட்டுள்ளது. இவை எல்லாமே வெண்கலச் சிலைகள்.

அது 1878 ஆம் ஆண்டு. வெனிஸில் விக்டர் இம்மானுவேலின் சிலையை நிறுவ முடிவெடுத்தார் இத்தாலியின் அரசர் உம்பர்டோ. ராஜாவின் சிலையை வடிக்க ஒரு ஓவியப் போட்டி வைத்து, கிட்டத்தட்ட 48 பேரின் ஸ்கெட்சுகளைத் (ஓவிய மாதிரி) தேர்ந்தெடுத்தார்கள். கடைசியாக ரோமானியச் சிற்பி எட்டோர் ஃபெராரியுடைய (Ettore Ferrari) ஓவியம் சிற்பம் வடிக்கத் தேர்ந்தெடுக்கப்பட்டது.

1880 ஆகஸ்ட் 14 அன்று ஒப்பந்தம் போடப்பட்டது. தனக்குக் கொடுக்கப்பட்ட பணியை மூன்றே ஆண்டுகளில் செவ்வனே முடித்தார் ஃபெராரி. அதுதான் வீரமும் அழகும் பொலியும் இரண்டாம் விக்டர் இம்மானுவேல் அரசரின் சிற்பம். சிற்பத்தை நிறுவ சான் மார்கோ நதிப்படுகையின் பல்வேறு கரைகள் (பியாஸா டிலியோன்சினி , பியாசெட்டா சென் மார்கோ, பல்லாஸோ டுகேல்) அலசப்பட்டன. கடைசியாக முதலில் முடிவு செய்த இடமாகிய ரிவா டெல்கி ஷியாவோனி – சான் ஸக்காரியா என்ற இன்று நாம் காணும் இடத்தில் சிற்பம் நிறுவப்பட்டது.

1887 மே 1 ஆம் தேதி ராஜா உம்பர்டோ, ராணி மார்கரீட்டா டி சவோயா முன்னிலையில் திறப்புவிழா நடத்தப்பட்டது. 2011 இல் 150 ஆண்டுகால இத்தாலியின் ஒருங்கிணைப்பைக் குறிக்கும் விதமாக இது புனரமைக்கப்பட்டது. மார்கரெட் ப்ளாண்ட் என்ற எழுத்தாளர் வெனிஸ் பற்றி எழுதும்போது, ‘1797இல் நெப்போலியனால் தோற்கடிக்கப்பட்டபின்பு வெனிஸின் ராஜரீக சரித்திரம் அழிந்தது. ஆனால் இந்தச் சிலை மட்டும் தப்பியது’, என்கிறார்.

இந்தச் சிலை இருவேறு நிலைகளைப் பிரதிபலிக்கிறது. இது ஒருங்கிணைந்த இத்தாலியை உருவாக்கிய விக்டர் இம்மானுவேல் என்ற மன்னரின் நினைவாக உருவாக்கப்பட்டது. அப்படி ஒருங்கிணைந்த இத்தாலியை – ரிஸோர்கிமெண்டோ – உருவாக்கும்போது, அவர் பட்ட இன்னல்களைக் காட்சிப்படுத்துவதாக அமைந்துள்ளது இந்தச் சிற்பம்.

ஒருபுறம் வெனிஸின் வீழ்ச்சியும், இன்னொருபுறம் அதன் எழுச்சியும் சித்தரிக்கப்பட்டுள்ளது. சிலையின் பின்புறம் வீழ்ந்த இத்தாலியையும் அதோடு தன் கொள்கையில் உறுதியுடன் அமர்ந்திருக்கும் பெண்ணும் அவள் பக்கம் சாய்ந்திருக்கும் செயிண்ட் மார்க் சிங்கமும் செதுக்கப்பட்டுள்ளது.  அவள் பக்கம் இருக்கும் கேடயத்தில் 1848 – 49 என்று குறிப்பிட்டிருக்கும் ஆண்டு, ஆஸ்திரியப் படைகளால் வெனிஸ் தோற்கடிக்கப்பட்ட ஆண்டாகும்.

அந்தப் பெண்ணும் ஒருபக்க மார்பு அற்றவளாக கொடி ஏந்தினவளாக உடைந்த வாள் கொண்டு சுதந்திரத்திற்காகப் போராடித் தோற்றவளாக அமர்ந்திருக்கிறாள். அவள் நிலை கண்டு சிங்கமும் வருத்தத்துடன் தலைசாய்த்து அமர்ந்திருப்பதுபோல் இருக்கிறது.

முன்புறம் அமர்ந்திருக்கும் சிங்கமோ அடிமைத் தளைகளை உடைத்துக் கர்ஜிக்கிறது. இது பிரஸ்ஸியா ஆஸ்த்ரியா போரில் வெனிஸ் பெற்ற வெற்றியைப் பிரகடனப் படுத்துகிறது. அந்தச் சிங்கத்துடன் அமர்ந்திருக்கும் வீராங்கனை வானமே எல்லை என்பது போல் இடது கையைத் தூக்கியபடி வெற்றிப் பார்வையுடன் மிக ஆடம்பரமான உடையலங்காரத்துடன் நவீன காலணிகளுடன் சுதந்திரத்தை அறிவிப்பவர் போல் அமர்ந்திருக்கிறார்.

இந்த நினைவுச் சின்னத்தின் இருபுறமும் இருக்கும் கேடயங்களில் ஒன்று  நெப்போலியனின் வெற்றியை அறிவிப்பதாகவும், இன்னொன்று ஒருங்கிணைந்த இத்தாலியின் (வெனிஸின்) தலைநகராக ரோம் மாறியதையும் குறிக்கிறது. இது வெனிஸின் சிக்கலான சரித்திரத்தைப் பயணிகளுக்கு அறிவிப்பதோடு, பண்பாட்டு சின்னமாகவும் பரிமளிக்கிறது.

நகரத்தைப் பெண்ணாக்கிச் சிற்பத்தில் காட்டியது இந்தச் சிலையின் சிறப்பம்சம். மறுமலர்ச்சிக் கால பாணியிலான சிற்பம் இது. இதே போன்ற இன்னொரு சிற்பம் சான் ஜியார்ஜியோ இ பாலோ என்ற இடத்திலும் நிறுவப்பட்டுள்ளது. இந்தியா நெடுகிலும் நான் கண்டவரை, குதிரை வீரர்கள்/குதிரை சவாரி செய்யும் மன்னர்களின் சிலைகள் என்றைக்கும் கம்பீரமானவை.

ஃபெராரி, டோனெட்டல்லோ என்ற இத்தாலிய சிற்பிகள் மறுமலர்ச்சிக்கால பாணியில் இவை போன்று சில சிற்பங்களை உருவாக்கினர். கோதிக் கலை வடிவத்தில் இல்லாத யதார்த்தத்தையும், சிற்ப வடிப்பின் நேர்த்தியான விகிதாசாரத்தையும் இது பிரதிபலிக்கிறது. குதிரை, சிங்கம் ஆகியவை வெனிஸின் புராதனத்தில் பெறும் இடத்தை இவை அழகாகச் சுட்டுகின்றன. அடிமையான பெண், அதிலிருந்து மீண்டு தன்னை வெற்றி பெற்றவளாகப் பிரகடனப்படுத்தும் இச்சிற்பம், தேசம் மற்றும் பெண் இருவரின் மனநிலைகளையும் வெளிப்படுத்துவது வெகு அழகு. நான் கண்ட அரிய சிற்பங்களில் பெண் உணர்வுகளை, மன நிலையை வெளிக்கொணர்ந்தது இந்த சிற்பம் என்பேன்…

படைப்பாளர்

தேனம்மை லட்சுமணன்

கவிஞர், எழுத்தாளர், வலைப் பதிவர், இதழியலாளர். ஏழு வலைப்பூக்களில் எழுதி வருகிறார். இதுவரை 27 நூல்களை எழுதி, பதிப்பித்துள்ளார். புஸ்தகாவில் இவரது 12 நூல்களும், அமேஸானில் இவரது 49 நூல்களும் வெளியாகி உள்ளன. நான்காம் உலகத்தமிழ் கருத்தரங்கத்தில் ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பித்துள்ளார். இந்திய ஆசிய கவிஞர்கள் மாநாட்டில் தேனம்மை லெக்ஷ்மணனின் படைப்புலகம் என்ற நூல் வெளியாகி உள்ளது. அழகப்பா பல்கலை வெளியிட்ட கருத்தரங்க நூலில் 20 ஆம் நூற்றாண்டுப் புதின ஆசிரியர்களில் ஒருவராக இடம் பெற்றிருக்கிறார். அழகப்பா பல்கலையின் தொலைதூரப் பாடத்திட்டத்தில் இவரது கவிதை இடம்பெற்றுள்ளது.