மார்ச் இரண்டாவது வாரம் கல்லூரி ஆண்டு விழா நடைபெறும். அதற்குப் பத்து நாள்களுக்கு முன்பிருந்தே, கலை நிகழ்ச்சிகளுக்கான ஒத்திகை நடைபெறும். கலை நிகழ்ச்சிகளைப் பொறுத்தவரை ஏற்கனவே ஃபைன் ஆர்ட்ஸ் வீக்கில் நன்றாக ஆடுபவர்கள், பாடுபவர்கள், நடிப்பவர்கள் யார் யார் என்று தெரிந்து இருக்கும். அவர்களைத் தேர்ந்தெடுப்பார்கள். சில பேராசிரியைகளும் இதில் ஈடுபட்டிருப்பார்கள்.
அன்று காலையில் மாணவிகள், பேராசிரியைகள் எல்லோரும் இணைந்து திறந்தவெளி அரங்கில் தோரணம் கட்டுவார்கள். முதல்வரும் வந்து பார்த்து ஏதாவது பேசுவார்கள். அப்படி தோரணம் கட்டும்போது நாகர்கோவிலைச் சார்ந்த பேராசிரியர் ஒருவர் ‘சொட்டை’ என்ற சொல்லைப் பயன்படுத்த, ‘அப்படி என்றால் என்ன?’ என்று முதல்வர் கேட்க, முடிச்சு என்று பதில் கூறினேன். வட்டார வழக்குச் சொல். பொதுவாக வழுக்கையைத்தான் கேலியாக அப்படிச் சொல்வார்கள்.
அன்று எல்லோரும் வெகு இயல்பாக, மகிழ்வாக இருப்பார்கள். அன்று காலைதான் முன்னாள் மாணவர்களின் சந்திப்பு நடைபெறும். நாங்கள் அதை ‘ஓல்ட் ஸ்டுடென்ட்ஸ் மீட்டிங்’ என்றுதான் கூறுவோம். அதில் சில பேராசிரியர்களும் கலந்து கொள்வர். அந்த முன்னாள் மாணவர்கள், மாலையில் கல்லூரி விழாவிலும் கலந்து கொள்வார்கள். மதியம் கேன்டீனில் சாப்பிடுவார்கள். மாலையில் கல்லூரி வளாகம் வண்ண விளக்குகளால் ஒளிரும்.
கலை நிகழ்ச்சிகள் எல்லாமே சிறப்பாக இருக்கும். அந்தக் காலத்திலேயே காஸ்ட்யூம் எல்லாம் பக்காவாக வாடகைக்கு எடுத்து நடக்கும். எப்போதுமே ஆங்கில நாடகம் ரொம்ப அற்புதமாக இருக்கும். செட் அலங்காரம், கதாநாயகன்- கதாநாயகி மேக்கப், ஃபேன்டஸியான ஆடைகள் என அப்படி இருக்கும்.
முதலாம் ஆண்டு ஷேக்ஸ்பியரின் ஜூலியஸ் சீசர் நாடகம்ஆங்கில போட்டோம். அந்த நாடகத்தில் நான்கு ரோம் (Rome) போர் வீரர்கள் வருவார்கள். அதில் நான் ஒரு போர் வீரன். எனக்கு ஹெயில் சீசர் (Hail Caesar – சீசர் வாழ்க) என்ற ஒற்றைச் சொல்லைச் சொன்னால் போதும். கிளியோபாட்ரா சீசர் என்று தெரியாமலே பழகுவதாகவும் நாங்கள் ‘ஹெயில் சீசர் ‘என்று வாழ்த்தியதால் தெரிந்து கொண்டதாகவும் கதை. மேடை அலங்காரம் குறிப்பாக சீசரின்- கிளியோபாட்ராவின் தேர் எல்லாம் மிக மிகச் சிறப்பாக இருந்தன. கிளியோபாட்ராவின் மேக்கப் மிகவும் சிறப்பு. பெரிய பாராட்டு பெற்றோம்.
கத்தோலிக்க மாணவிகளுக்காக கேற்றிகிசம் (catechism) என்கிற சமய வகுப்புகள் நடைபெறும். தேர்வும் நடைபெறும். அதில் பி யு சி யில் கல்லூரியிலேயே நான்தான் முதல் மதிப்பெண். அதற்கான பரிசு கல்லூரி ஆண்டு விழாவில் கொடுக்கப்பட இருந்தது. முதல் பரிசளிப்பு கேற்றிகிசத்திற்குத்தான். பரிசு வாங்கும் வரிசையில் நிற்க வைப்பதற்காக என்னைக் கூப்பிட்டபோது ரோம் போர் வீரன் மேக்கப் போட்டுக் கொண்டிருப்பதால், பின்னர் வருவதாகச் செய்தி சொல்லி அனுப்பினார்கள். எனக்கு மேக்கப் பக்காவாக போட்டிருந்தது. அதைப் பார்த்ததும் எனக்கு ரொம்ப வெட்கமாகிவிட்டது.
அரைத் தாவணி, சேலை தவிர எந்த உடையும் உடுத்தியது இல்லை. எனவே நான் பரிசு வாங்கும் வரிசைக்குச் செல்லவில்லை. சிறப்பு விருந்தினர் பேச்சு முடிந்ததும், முதல் பரிசாக என் பெயரை அறிவித்த போது நான் பரிசு வாங்கச் செல்லவில்லை. முதல்வர் முகத்தில் சற்றே கோபம் தெரிந்தது. நான் மேலே நின்று பார்த்துக் கொண்டிருந்தேன். அதன் பின் இப்படிப்பட்ட கல்லூரி ஆண்டு விழாவில் பரிசு வாங்கச் செல்லவில்லையே என்று நிறைய பேர் கேட்டார்கள். மனதுக்கு கஷ்டமாகத்தான் இருந்தது.தற்போது பெண்கள் தயக்கத்தை உடைத்து சாதனை படைப்பது மகிழ்ச்சியாக உள்ளது. ஹெர் ஸ்டோரீஸ் தளத்தின் பங்களிப்பும் சிறப்பாக உள்ளது. சாமானியப் பெண்களும் சாதிக்க வேண்டுமென்றால், இன்னும் வெகுதூரம் செல்ல வேண்டியுள்ளது.
கல்லூரி ஆண்டு விழாவிற்காக ஃபோட்டோகிராஃபரை ஏற்பாடு செய்திருப்பார்கள். அன்று மட்டுமே ஃபோட்டோ எடுக்க முடியும். அதனால் கிட்டத்தட்ட அனைவருமே தோழிகளுடன் போட்டோ எடுத்துக் கொள்வோம். அன்று விடுதியில் கூட கொஞ்சம் நல்ல சாப்பாடாக இருக்கும். அன்று விழாவை அனுபவித்த மகிழ்வும், விழா முடிந்து விட்டதே என்று கொஞ்சம் வருத்தமும் இருக்கும்.
மார்ச் மாத கடைசியில் ஃபேர்வெல் டே (Farewell day) நடக்கும். முதலில் முதலாம், இரண்டாம் ஆண்டு மாணவிகள் சேர்ந்து மூன்றாம் ஆண்டு மாணவிகளுக்குப் பிரியா விடை கொடுப்பார்கள். மூன்றாம் ஆண்டு மாணவிகளை ஏதாவது செய்யச் சொல்வார்கள். சின்னதாகப் பாட்டுப் பாடுவது, நடனம் ஆடுவது, நடிப்பது, சண்டை போடுவது என்று இப்படி ஏதாவது செய்யச் சொல்லி சீட்டு எழுதிப் போட்டிருப்பார்கள். அவரவர்களுக்கு என்ன வந்ததோ அதை விருப்பப்பட்டால் செய்யலாம் செய்யாமலும் இருக்கலாம். விருப்பப்பட்டவர்கள் சீட்டில் உள்ளபடி ஏதாவது செய்து ஃபன் பண்ணுவார்கள். சிலர் சில நிகழ்ச்சிகளை நினைவு கூறுவார்கள். பின் ஒரு இனிப்பு, ஒரு காரம், ஒரு குளிர் பானம் -டொரினோ தருவார்கள். இந்த கார்பனேட்டட் ட்ரிங்க் அப்போது நிறைய ஸ்பெஷல். அது தூத்துக்குடியில் மட்டும்தான் முன்பு கிடைக்கும். அதன்பின் திருச்செந்தூர் போன்ற சுற்று வட்டாரங்களிலும் கிடைத்தது.
ஒரு நினைவுப் பரிசும் தருவார்கள்.எங்களுக்கு ஒரு ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் டிஷ் – கூட்டு வைக்கும் சிறு தட்டு தந்தார்கள். அது இன்றும் நல்ல நிலையில், பேத்திகள் பயன்படுத்தும் படியாக உள்ளது. அப்போதைய ஸ்டெயின்லெஸ் ஸ்டீலின் தரம் அப்படி.
அதன்பின் மூன்றாம் ஆண்டு மாணவிகள் அனைவரும் சேர்ந்து பேராசிரியைகளுக்குப் பிரியா விடை கொடுப்போம். பிற்பகலில் கூட்டம் நடைபெறும். சில மாணவிகள், சில பேராசிரியைகள், தங்களின் நினைவுகளைப் பகிர்ந்து கொள்வர். எல்லா மூன்றாம் ஆண்டு மாணவிகள் சார்பாகவும் எல்லா பேராசிரியர்களுக்கும் நினைவுப் பரிசு வழங்குவார்கள். சற்று விலை உயர்ந்ததாக இருக்கும். பின்னர் பேராசிரியர்கள் சார்பாக எங்களுக்கு நினைவுப் பரிசு வழங்குவார்கள்.
எங்களுக்கு ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் குங்குமச்சிமிழ்- கீழே தாமரை போல் இதழ் வைத்தது தந்தார்கள். அதுவும் இப்போது பயன்பாட்டில் உள்ளது. ஆனால் ஐந்து இதழ்களும் உடைந்துவிட்டன.
இதே மாதிரி தோழிகள் பலரும் நினைவுப் பரிசுகள் கொடுத்தனர்.
வகுப்புகள் முடியும் தறுவாயில் சிறிய ஆட்டோகிராஃப் நோட்டுகளில் பேராசிரியர்கள் மற்றும் தோழிகளிடம் ஆட்டோகிராஃப் வாங்கினோம். ஆட்டோகிராஃப் நோட்டும் ஒரு சில கடைகளில் மட்டுமே கிடைக்கும் அரிதான பொருள். ஆட்டோகிராஃபில் எழுதுவதற்கு பெரும்பாலோர் ‘இதோ இதோ என் நெஞ்சிலே’ என்ற பாடலை பயன்படுத்தினார்கள். ‘Life is short make it sweet’, ‘Aim high’ போன்ற வாசகங்களை எழுதுவார்கள். எதிர்ப்பக்கம் முகவரி எழுதுவார்கள். ஆட்டோகிராஃப் நோட் வாங்க இயலாதவர்கள், டைரியிலேயே எழுதி வாங்கிக் கொள்வார்கள்.
தொடரும்…
படைப்பாளர்

பொன் ஜெய இளங்கொடி
MSc. Chemistry. MSc. Psychology. B.Ed. PGDGC. வயது 62. கன்னியாகுமரியைச் சேர்ந்தவர். இவர் PUC மற்றும் BSc. புனித மரியன்னை கல்லூரி, தூத்துக்குடியில் 1978 முதல் 1982 வரை படித்தவர். அப்போது அவர் பெற்ற அனுபவங்களை இந்தத் தொடரில் எழுதியுள்ளார். இது இவரின் முதல் முயற்சி.





Very very nice to read this type of college story..it makes to feel our memories
நன்றி
அன்றிருந்த நட்பின் பெருமையையும் ,ஆண்டு விழாவின் ஈர்ப்பும் ஒருங்கே இனிமையாக சிலாகித்துள்ளார். மேலும் பாரம்பாரிய உடை விடுத்து மாடர்ன் டிரஸ் அந்நாளில் அணிவதன் தயக்கத்தை நேர்த்தியாக வெளிப்படுத்தியுள்ளார்.
காலேஜ் சென்று மறுபடியும் படிக்கத் தோன்றுகின்றது. ஆட்டோகிராப் எல்லாம் இன்னும் பத்திரமாக வைத்திருப்பது வியப்பை தருகிறது. அதிலும் என்னுடைய பிரசன்டேஷன் ஞாபகமாக வைத்துக்கொள்வதற்கு நன்றி தோழியே.
நன்றி இளங்கொடி, அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே…… அதற்காக. கல்லூரியின் அந்த கடைசி நாட்களில் நடைபெற்ற விழாக்கள், aitographs, return gifts என்று நினைவலைகளை புரட்டி போட்டுவிட்டீர்கள். அருமை.
நன்றி