விடுதியில் ஞாயிற்றுக்கிழமை மட்டுமே சற்றே ஆசுவாசமாக இருப்போம். மதியம் சாப்பாடு முடிந்ததும் வரவேற்புக் கூடத்தில் கேரம் போர்டு, செஸ், சைனீஸ் செக்கர் போன்ற விளையாட்டுக்கள் விளையாடப் பொருள்கள் போடப்பட்டிருக்கும். அவரவருக்குப் பிடித்த விளையாட்டுகளை விளையாடுவோம்.
இதில் சைனீஸ் செக்கர் விளையாடத்தான் டிமாண்ட் அதிகமாக இருக்கும். ஒரு சைனீஸ் செக்கரில், நட்சத்திரத்தின் ஆறு முனைகளில் ஆறு பேர் ஆடலாம். இந்த முனையில் இருக்கும் காய்களை எதிர் முனைக்குக் கொண்டு சேர்க்க வேண்டும். முதன் முதலாகக் கொண்டு சேர்ப்பவரே வெற்றி பெற்றவர். ஒரு ஒரு குழு ஆடி முடித்ததும் காத்திருக்கும் அடுத்த குழு ஆடும்.
விளையாடிக் கொண்டிருக்கும்போதே ஒரு மணிக்கு வானொலியை இயக்குவார்கள். அந்தக் காலத்தில் வானொலிமேல் ஏரியல்- வலை போன்ற அமைப்பு பொருத்தியிருப்பார்கள். வானொலி மிகவும் பத்திரமாகப் பாதுகாக்கப்பட்டு இருக்கும். அப்போது அனைவரும் இலங்கை வானொலியைத்தான் கேட்பார்கள். அதில் தான் திரைப்படப் பாடல்கள் பெருமளவில் ஒலிபரப்புவார்கள். நமது ஆகாச வாணியில் எப்போதாவது தான் அரை மணி நேரம் திரைப்படப் பாடல்கள் ஒலி பரப்புவார்கள்.
கல்விச் சேவை தான் பெரிதாக இருக்கும். ஆனால் இலங்கை வானொலியில் காலை பொங்கும் பூம்புனலில் தொடங்கி, விதவிதமான நிகழ்ச்சிகள் இருக்கும். இப்போது தொலைக்காட்சி போல அப்போது வானொலி. ஞாயிறு மதியம் இசைத் தேர்வு என்ற நிகழ்ச்சி நடக்கும். இதில் ஆறு பாடல்கள் ஒலி பரப்பாகும். அதற்கு நேயர்கள் வாக்களிக்க வேண்டும். அதில் குறைந்த வாக்குகள் பெற்ற பாடல் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிவிடும். அதற்குப் பதிலாக புதியதொரு பாடலை கடைசியாக அறிமுகப்படுத்துவார்கள். வாக்கு எண்ணிக்கையில் ஏறு வரிசையில் பாடல்கள் ஒலிபரப்பப்படும். இந்த நிகழ்ச்சி மாணவிகளிடம் ஏன் தமிழ் மக்கள் அனைவரிடையே மிகுந்த வரவேற்பு பெற்ற ஒன்றாகும்.
உன்னை நான் பார்த்தது, மழை தருமோ என் மேகம், என்னடி மீனாட்சி, எந்தன் பொன் வண்ணமே, என் இனிய பொன் நிலாவே, பூப்போலே எல்லாம் ரொம்பக் காலமாக முதலிடத்திலேயே இருந்தன. பெரும்பாலும் ஆண் குரல் பாடல்களாகவே இருந்ததாக நினைவு. இந்தநிகழ்ச்சியை நடத்தியவர் கே எஸ் ராஜா; அவருக்கு மதுரக் குரல் மன்னன் என்ற பட்டப் பெயர் உண்டு. அவருக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உண்டு. அவர் வேகமாகப் பேசுவார்.
இதே போல் வினோத வேளை என்ற ஒரு நிகழ்ச்சியையும் கே எஸ் ராஜா தான் நடத்தினார். இரண்டு நிமிடங்கள் தொடர்ச்சியாகப் பேச வேண்டும் ஆம், இல்லை என்றோ, ஒற்றைச் சொல்லிலோ பதில் அளிக்கக்கூடாது. ஒரு சொல்லை மூன்று முறைக்கு மேல் பயன்படுத்தக் கூடாது. தெரியும், தெரியாது என்று ஒற்றை வார்த்தையிலோ, ஆம் இல்லை என்றோ பதில் அளிக்கும்படியான கேள்விகளைக் கேட்பார். மிகவும் கவனமாக அவரது கேள்வியை அப்படியே பதிலாகினால் மட்டுமே வெற்றி பெற முடியும். பெரும்பாலானவர்கள் தோற்றுத்தான் போவார்கள். பங்கேற்றவர்கள் தோற்றுப் போகும்போது கே எஸ் ராஜா ஒரு சிரிப்பு சிரிப்பார் பாருங்கள்; அது கூட ரசனையாகத் தான் இருக்கும். ஒரு மணி நேரம் தான் வானொலி இயக்குவார்கள் .இந்த இரண்டு நிகழ்ச்சிகள் மட்டும் தான் கேட்க முடியும்.
விடுமுறை நாள்களில் நாங்கள் விளையாடும் ஒரு முக்கியமான விளையாட்டு திரைப்படப் பெயர்களைச் சைகை மூலம் கண்டுபிடிப்பது. இரண்டு குழுக்களாகப் பிரிந்து இருப்போம் . ஒரு குழு எதிர்க் குழுவிலிருந்து ஒரு ஆளை வரவழைத்து அவர் காதில் ஒரு திரைப்படத்தின் பெயரைச் சொல்லுவார்கள். அவர் அந்த பெயரைத் தனது குழுவிற்குச் சைகை மூலம் உணர்த்த வேண்டும். விஜய் டிவியில் ஸ்டார்ட் மியூசிக் என்ற நிகழ்ச்சியில் இதே மாதிரி பாட்டுகளைச் சைகை மூலம் கண்டுபிடிக்கும் நிகழ்ச்சியும் நடந்தது. இதனை Dumb charades என்று சொல்கிறார்கள். இதில் சைகை காட்டுவது எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் அவர் அணியினர் கேள்வி கேட்பது. நூற்றுக்கு நூறு என்ற பெயரை நாங்கள் சொல்லி அனுப்பினால் 100 என்பதைக் குறிக்க அவர் 10 விரல்களைக் காட்டி பெருக்கல் குறியைக் காற்றில் வரைந்து இன்னொரு பத்து விரல்களைக் காட்டுவார். உடனே கண்டுபிடித்து விடுவார்கள். தபால்காரன் என்றால் பையைத் தோளில் போட்டுக் கொண்டு சைக்கிளில் செல்வது போலக் காட்ட வேண்டும். எங்கள் குழு எளிதில் சைகையில் சொல்ல முடியாத பெயர்களாகப் பார்த்துத் தேர்ந்தெடுத்துச் சொல்லி அனுப்பும்.
மந்திரி குமாரி, அனாதை ஆனந்தன், உத்தமபுத்திரன், ஞானசௌந்தரி, தாய் சொல்லைத் தட்டாதே இப்படி… அனாதை ஆனந்தன் என்றால் இரண்டு சொற்கள் என்பதால் இரண்டு விரல்களைக் காட்டுவார். அவர் அணியினர் இரண்டு சொற்களா என்று கேள்வி கேட்பார்கள்.அவர் தலையை ஆட்டுவார். முதல் சொல்லைச் சொல்ல முயன்றால் இடதுகை இரு விரல்களைக் காட்டி முதல் விரலை வலது கை விரலால் தொட்டுக் காட்டுவார்; இரண்டாவது சொல்லைச் சொல்ல முயன்றால் அவ்வாறே இரண்டாவது விரலைத் தொட்டுக் காட்டுவர். அவரது அணி முதல் சொல்லா அல்லது இரண்டாவது சொல்லா என்று கேட்க வேண்டும் அவர் சரியான கேள்விக்குத் தலையை ஆட்டுவார்.
முதல் சொல் என்றால் ஒரு விரல் காட்டி அதன் பின் முதல் எழுத்தைச் சொல்ல முயன்றால் அதற்கும் ஒரு விரல் காட்ட வேண்டும் . குழு முதல் எழுத்தா என்று கேட்டு இவர் ஆம் எனத் தலையாட்டி இருக்க வேண்டும். அ என்ற எழுத்தை உணர்த்த அடுப்பு, அல்வா போன்ற பொருட்களைச் சைகையில் காட்ட வேண்டும். ஆனால் எளிதாகச் சைகை காட்டக்கூடிய பெயர்களைக் கூறினால்தான் விளையாட்டு விறுவிறுப்பாக இருக்கும்.
ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி (பத்து விரல்கள் பெருக்கல் பத்து விரல்கள் பெருக்கல் 10 விரல்கள்), பார் மகளே பார் (உற்றுப் பார்ப்பது), பார்த்தால் பசி தீரும் (வயிற்றைத் தடவி பசியாக இருப்பதாகக் காட்டுவது), பாவ மன்னிப்பு (தேவாலயத்தில் குருவிடம் பாவசங்கீர்த்தனம் கேட்பது), புதிய பறவை (பறப்பது போல் காட்டுவது), தங்கமலை ரகசியம் (மலை போலக் காட்டுவது) போன்றவை விளையாட்டை விறுவிறுப்பாக்கும்.
அடுத்தபடியான கேளிக்கை என்றால் திரைப்படம்தான். கிட்டத்தட்ட மாதம் ஒரு திரைப்படம் வீதம் போடுவார்கள். ஆனால் படிப்பு விடுமுறை, செமஸ்டர் தேர்வு, செமஸ்டர் விடுமுறை என்று ஏழு அல்லது எட்டுதான் திரையிட முடியும் திரைப்படங்கள் திறந்த வெளி அரங்கிலோ, தேவாலயத்துக்கு முன்னாலோ திரையிடுவார்கள். லேசாக இருட்ட ஆரம்பித்ததும் ஆறு நாற்பத்து ஐந்து முதல் ஏழு மணிக்குள் திரையிடுவார்கள். அன்று இரவு உணவு ஆறு மணிக்கெல்லாம் தயாராகிவிடும். அன்று ஒரே கொண்டாட்டமாக இருக்கும்.
படம் திரையில் ஓடிக்கொண்டிருக்கும் போது சற்று வித்தியாசமான காட்சிகள் வந்தால் லென்ஸ் முன்னால் கையை வைத்து மறைத்து விடுவார்கள்; தாவணிக் கனவுகள் பாக்கிய ராஜ் போல். அந்த நேரம் மாணவிகள் கூச்சல் இடுவார்கள். சட்டம் என் கையில் திரையிட்டபோது கமலஹாசன் வெளிநாட்டு நடிகையுடன் இருக்கும் காட்சிகளை இவ்வாறு மறைத்தார்கள். பின்னர் அவர் இறந்தபோது கமலஹாசன் நினைத்துப் பார்ப்பதாக அதே காட்சிகள் வந்த போது ஒரே சிரிப்பும் ஆரவாரமும் தான். ஃப்ளாஷ் பேக் வரும் என்று திரையிட்டவர் எதிர்பார்க்கவில்லை போலும்! அவன் ஒரு சரித்திரம் படம் என்று நினைக்கிறேன்; அதிலும் குளிரில் விறைத்துப் போன கதாநாயகியைக் காப்பாற்றும் காட்சியும் இவ்வாறு மறைக்கப்பட்டது.
பசி திரைப்படம் பார்த்தபின் எல்லோரும் கனத்த மனத்துடன் வந்தோம். பாலைவனச் சோலை பார்த்த பின்னும் அப்படித்தான் இருந்தது. ஞான சௌந்தரி படத்தில் அடுக்கடுக்காக பாடல்கள் வரும்போது மாணவிகள் கூச்சல் போட்டார்கள். இது தவிர மூடுபனி, நிழல் நிஜமாகிறது, தீபம், அவன்தான் மனிதன், அழியாத கோலங்கள், ஏணிப்படிகள், கவரிமான், மழலைப் பட்டாளம் , பத்து மாத பந்தம் எனத் திரையிட்ட சில படங்கள் நினைவில் இருக்கின்றன.
AICUF (All India Catholic University Federation) என்று கத்தோலிக்க மாணவர்களுக்கு ஒரு இயக்கம் உள்ளது. அதன் நிதி நிலையை உயர்த்த (Fundraise) நிழல்கள் படத்தைத் திரையிட்டார்கள். கட்டணம் ரூபாய் ஒன்று. நிழல்கள் திரைப்படம் அப்போதுதான் வெளிவந்திருந்தது. வைரமுத்து இதில்தான் முதன்முதலாக பாடல் எழுதியிருந்தார். பொன் மாலைப்பொழுது, பூங்கதவே தாழ் திறவாய் எல்லாம் பட்டி தொட்டிகள் எல்லாம் ஒலித்தன. ஆனால் எனக்கு தூரத்தில் நான் கண்ட உன் முகம் பாடல் தான் பிடிக்கும். சில வருடங்களுக்கு முன்புதான் அந்தப் பாடல் படத்தில் இடம்பெறவில்லை என்று என் தங்கை கூறினாள். ஆனால் நாங்கள் படம் பார்க்கும்போது இந்த பாடல் இடம் பெற்றதாகவே நினைவு என்றேன்.
பிறகு இணையத்தில் பார்த்து, ‘தூரத்தில் நான் கண்ட உன் முகம் பாடல், நிழல்கள் படத்தின் இரண்டாவது கதாநாயகி நடித்துத் திரையிடப்பட்டது. சில நாட்களுக்குப் பின் தான் படத்திலிருந்து நீக்கப்பட்டது. இந்தப் பாடலின் தெலுங்குப் பதிப்புப் (வெண்ணெல்லோ கோதாரி அந்தம்; திரைப்படம்: சிதாரா) பாடலுக்காக ஜானகி அம்மாவிற்குத் தேசிய விருது கிடைத்தது’ என்று சொன்னாள்.
“திரைப்படத்தில் கதாநாயகன், கதாநாயகி, ராஜசேகர், சந்திரசேகர் எல்லோருமே புது முகங்கள். படம் முழுவதும் இளைஞர்களுக்கு எதிர் மறையான எண்ணங்களை விதைக்கும்படி இருக்கிறது; கொலை, மனநிலை பிறழ்தல் என்று மிக மோசமான முடிவு இந்தப் படத்தை எப்படித் தேர்ந்தெடுத்தீர்கள்?” என்று அதைத் தேர்ந்தெடுத்த AICUF தலைவி டோஸ் வாங்கினார். நான் பொருளாளர் என்பதால் நானும்கூட உண்டு. படத்தின் கதையை நாங்கள் விசாரிக்கவில்லை. அப்போது நிழல்கள் திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்போடு திரைக்கு வந்தது. ஆனால் அவர்கள் திட்டியது ரொம்ப சரி. விரைவிலேயே படம் ஊத்திக் கொண்டு தோல்விப் படமானது.
ஒருமுறை இதே மாதிரி கல்லூரியின் நிதி நிலையை உயர்த்த அவர்கள் படம் போடுவதாகச் சொல்லி குழந்தையும் தெய்வமும் படம் போட்டு விட்டார்கள். ஒரே கூச்சலாக இருந்தது. அவர்கள் படம் கிடைக்கவில்லை என்று சொன்னார்கள்.
ஒருமுறை கருணா மூர்த்தி திரைப்படம் பார்க்க சார்லஸ் தியேட்டருக்குக் கூட்டிச் சென்றார்கள்.
இன்னொரு முறை குடியரசு நாளன்று குப்பத்து ராஜா படம் பார்க்கக் கூட்டிச் சென்றார்கள் எந்தத் திரையரங்கம் என்று நினைவில்லை. ரஜினி படம் என்றாலும் புரட்சிக் கலைஞர் விஜயகுமார் என்ற பெயர் தான் முதலில் போட்டார்கள். இந்தப் புரட்சிக் கலைஞர் என்ற பட்டம் நடிகர் ‘விஜயகாந்த்’துக்கு எப்போது சொந்தமானது என்று தெரியவில்லை. முதல் நகைச்சுவை நடிகையான அங்கமுத்துவின் கடைசி படம் குப்பத்து ராஜா.
அனைத்து ஆண்டுகளும் பனிமாதா கோயில் திருவிழாவிற்குக் கூட்டிச் செல்வார்கள். ஒருமுறை மட்டும் திருவிழா அன்று மாணவிகளைச் சுதந்திரமாகத் திருவிழா பார்க்கச் சென்று விட்டு மாலை 6:00 மணிக்குள் வரும்படி கூறி இருக்கிறார்கள். நான் எங்கள் ஊர்த் திருவிழாவிற்குச் சென்று விட்டதால், இப்படி ஒரு சுதந்திரமான அவுட்டிங் (outing) கை அனுபவிக்க முடியவில்லை. அந்த பனிமாதா கோவில் தூத்துக்குடி திருவிழா அவுட்டிங் அன்று மாலை ஆறு மணிக்குக் கதவைப் பூட்டி விட வேண்டும் என்று வாட்ச்மேன் அறிவுறுத்தப்பட்டிருந்தார். எனவே அவர் ஆறு மணிக்குப் பூட்டி விட்டார். ஒரு ஆறு ஏழு பேர் ராஜா ஹோட்டலில் பரோட்டா சாப்பிட்டு விட்டு ஆறு முப்பது மணிக்கு மேல் வந்துள்ளனர். முதல்வரிடம் என்ன காரணம் சொல்ல என்று சிந்தித்து, ‘கம்மல் தொலைந்து விட்டது. அதைத் தேடுவதில் நேரம் ஆகிவிட்டது’ என்று கூறலாம் என்று ஒருவரின் ஒரு கம்மலையும் கழற்றி வைத்திருக்கிறார்கள். வாட்ச்மேன் முதல்வர் அறையிலிருந்த சிஸ்டரிடம் சென்று தகவல் சொல்லவும், அவர்கள் வந்திருக்கிறார்கள். நானே திறக்கிறேன் என்று சொல்லித் திறக்கவும் இவர்கள் வெலவெலத்து போய்விட்டார்கள். இவர்கள் கம்மல் தொலைந்து போனதாகக் கூறியுள்ளார்கள். அவர்கள் அதை நம்பியது போல் தெரியவில்லை என்றாலும் இவர்கள் பயந்ததுபோல ரொம்ப திட்டவில்லையாம்.
யாரோ ‘உங்கள் கல்லூரி மாணவிகள் பரோட்டா கடைக்குச் சென்று சாப்பிட்டார்கள்’ (இவர்கள் மட்டுமல்ல ஓல்ட் ஹாஸ்டலிலும் நிறைய பேர் வேறு வேறு கடைகளில் சாப்பிட்டதாகத் தகவல்) என்று முதல்வரிடம் போட்டுக் கொடுக்க, சிஸ்டர் எல்லோரையும் ஒட்டுமொத்தமாகப் பின்னர் கண்டித்தார்கள்.
அப்போது பரோட்டா என்றால் ரொம்ப கிரேஸ் ஆக இருந்த காலம் (44 வருடங்களுக்கு முன்னால் ). அப்போது பெண்கள் பரோட்டா கடை மற்றும் திரையரங்கு செல்வது பெரிய குற்றமாகக் கருதப்பட்டது. பெண்களின் பாதுகாப்பு கருதித்தான் அவ்வாறு சொன்னார்கள். அப்போது அசைவ உணவகங்களுக்கு பொதுவாக குடிகாரர்கள்தான் செல்வார்கள் என்று ஒரு மனநிலை இருந்தது. இப்போதும்கூட உள்ளூர் உணவகங்களில் பெண்கள் அமர்ந்து சாப்பிடுவதோ ஒரு தேநீர் அருந்துவதோ சிரமம்தான். வீட்டிற்கு வாங்கிச் செல்லுமளவிற்குவரை தான் சமூகம் வந்திருக்கிறது.
ஆண்டு தோறும் மெஜூரா கோட்ஸ் (Madura coats), எதிரே அமைந்துள்ள விளையாட்டு அரங்கில் கூடைப்பந்து போட்டிகள் நடத்தும். அதைக் கண்டு களிக்க எங்களை அழைத்துச் செல்வார்கள். முதன்முதலாக (கடைசியாகவும் தான்) கேலரியில் உட்கார்ந்து மின்னொளியில் விளையாட்டுப் போட்டிகளைக் கண்டு களித்தது அங்குதான். கேலரி, பலகையை வைத்து புதிதாக அமைக்கப்பட்டிருக்கும். மாநிலங்களுக்கு இடையேயான அந்த போட்டிகள் மிகச் சுவாரசியமாக இருக்கும். பந்து இங்கும் அங்கும் நகர்வதை நம்மால் பின்தொடர்ந்து பார்க்கக் கூட இயலாது. அவ்வளவு விரைவாக இருக்கும். ஒரு கோல் போட்டால் அவ்வளவு திரில்லிங்காக இருக்கும்.
தற்போது அந்த விளையாட்டு அரங்கின் அருகிலேயே முத்துநகர் பீச் அமைந்துள்ளது. நான் பார்த்தபோது அந்த விளையாட்டு அரங்கில் ஏராளமான சிறுவ, சிறுமிகள் ஸ்கேட்டிங் பயிற்சி எடுத்துக் கொண்டிருந்தார்கள். கடந்த ஆண்டு முத்து நகர் பீச்சில் போட்டிங் சென்ற போது கடலில் கல்லூரியின் மாதா சொரூபம் தெரிந்ததும் பரவசமாக இருந்தது. ஒரு பெண்கள் கல்லூரியில் இப்படி ஒரு டோர்னமென்றை கண்டு களிக்க அனுமதித்தது எல்லாம் அன்று பெரிய புரட்சி தான்.
தொடரும்…
படைப்பாளர்

பொன் ஜெய இளங்கொடி
MSc. Chemistry. MSc. Psychology. B.Ed. PGDGC. வயது 62. கன்னியாகுமரியைச் சேர்ந்தவர். இவர் PUC மற்றும் BSc. புனித மரியன்னை கல்லூரி, தூத்துக்குடியில் 1978 முதல் 1982 வரை படித்தவர். அப்போது அவர் பெற்ற அனுபவங்களை இந்தத் தொடரில் எழுதியுள்ளார். இது இவரின் முதல் முயற்சி.





Very nice narration
நன்றி
கல்லூரி விடுதி வாழ்க்கையில் கற்றலுக்கு இடையே கிடைத்த பொழுதுபோக்கு களையும் அனுபவித்து நினைவுகூர்ந்து மிகச்சிறப்பு.
நன்றி
பொழுதுபோக்குகளில் நினைவுகூர்ந்தது மிகச்சிறப்பு.
விளையாட்டு திரைப்படம் எல்லாம் நேரில் பார்த்தது போல் இருக்கிறது. ஹோட்டல் ராஜாவில் பரோட்டா சாப்பிட்டதில் நானும் ஒருத்தி. அந்த நாள் ஞாபகம் வந்ததே வந்தது. படைப்பு மிகவும் அருமை. வாழ்த்துக்கள் தோழி.