ஆயா

விடுதியில் உடம்பு சரியில்லாமல் போனால், Sick Room செல்ல வேண்டும்; நமது அறையில் இருக்கக் கூடாது. Sick Room செல்வதென்றால் பெரும்பாலானவர்களுக்குப் பெரியவர்கள் சொல்வார்களே ‘கொல்லக் கொண்டு போனது போல இருக்கு’ என்று அதேபோல் இருக்கும்.

அந்தத் தனிமை நம்மை மிகவும் பயமுறுத்தும். அதனால் எவ்வளவு காய்ச்சல் இருந்தாலும் நடமாட முடிந்தால் சமாளித்து கல்லூரிக்குச் சென்று விடுவோம் (கல்லூரிக்கு டிமிக்கி கொடுத்து விட்டு சிக் ரூம் செல்பவர்களும் உண்டு). சில சமயம் முகம் சீற்றமாக -காய்ச்சல் அறிகுறியோடு இருந்தால், ஜஸ்டின் அக்கா கண்டுபிடித்து கட்டாயமாக சிக் ரூம் அனுப்பி விடுவார்கள். 

மாத்திரை, மருந்துகள் தருவார்கள். இரண்டு நேரம் கஞ்சி, இரண்டு நேரம் பன் தருவார்கள். சிக் ரூமுக்கு ஒரு சிஸ்டர் பொறுப்பு. சிக் ரூமில் மாணவிகள் இரவு தங்கினால் அவரும் அங்குத் தங்க வேண்டி இருக்கும். இல்லாவிட்டால் அவர் கான்வென்ட் சென்று விடுவார். அதனால் அவர் அவ்வப்போது வந்து ஏதாவது புலம்பி விட்டுச் செல்வார். அது நமக்கு ஏதோ ஒரு விதமான சங்கடத்தைத் தரும். மாலை வேளையில் நம்மைப் பார்க்க ஒருவரை அனுமதிப்பார்கள். ஒரு தடவை நான்  இருக்க நேர்ந்தது. என்னைப் பார்க்க ஒரு சில டே ஸ்காலர் மாணவிகள் வந்து விட்டார்கள். அப்போது சற்று நேரம் சிஸ்டர் இல்லை; சிஸ்டர் வந்ததும் அனைவரையும் விரட்டி விட்டு விட்டார்கள்.

சிஸ்டர் கொடுக்கும் மருந்துக்கு நோய் கட்டுப்படாவிட்டாலோ அல்லது கொஞ்சம் பெரிய சிக்கல் என்றாலோ வேறு ஒரு மருத்துவரிடம் கூட்டிச் செல்வார்கள். ஆனால்  திரும்பி வந்து சிக் ரூமில் தான் இருக்க வேண்டும். 

ஒருமுறை என் நெருங்கிய தோழிக்குக் காய்ச்சல். இரண்டு நாள்கள் சிக் ரூமில் இருந்தாள். சிஸ்டர் கொடுத்த மருந்துக்குக் கட்டுப்படவில்லை. அவள் கஞ்சியும் குடிக்கவில்லை; மிகவும் பலவீனமாக இருந்தாள். அவளை  வழக்கமாக அழைத்துச் செல்லும் ஒரு மருத்துவரிடம் அழைத்துச் சென்றிருக்கிறார்கள். கொடுத்த மருந்து ஒத்துக் கொள்ளவில்லை. நான் மாலையில் அவளை சிக் ரூமில் சந்தித்த போது அவளால் எழும்பவோ, பேசவோ முடியவில்லை. மிகவும் மோசமாக இருந்தாள். திடீரென்று அவரது நாக்கு வெளியே தள்ளி விட்டது. பின்னர் உள்ளே சென்று விட்டது.

நான் மிகவும் பயந்து போய் அழுகையுடன் சிக் ரூம் சிஸ்டரிடம் கூறினேன். அவர்கள் நம்பவில்லை. சிஸ்டர் சற்று நேரம் காத்திருந்து பார்த்தார்கள். அப்படி எதுவும் நடக்கவில்லை. நான் ஓல்டு ஹாஸ்டல் வார்டன் சிஸ்டரிடம் சென்று கூறினேன். ஏனென்றால் சிக் ரூம் இருந்தது ஓல்ட் ஹாஸ்டல் அருகில். அவர்களும் நம்பவில்லை. வந்து பார்த்தார்கள். நான்  பயந்து போய் (Panic ஆக) இருந்தேன். நான் ஏதோ வீணாகப் பயப்படுவதாக அவர்கள் என்னைச் சமாதானப்படுத்தினார்கள். 

அவர்கள் ஆலோசனையின் பேரில் ஒரு ஃபிளாஸ்க், ஒரு ஹார்லிக்ஸ் வாங்கிக் கொடுக்க ஏற்பாடு செய்தேன். அதன்பின் இரவு அடிக்கடி நாக்கு தள்ளி இருக்கிறது. உடனே வேறு ஒரு மருத்துவமனை கொண்டு சென்றுள்ளார்கள். வார்டன் சிஸ்டர் என்னிடம் அவள் மருத்துவமனையில் இருப்பதாக மட்டுமே கூறினார்கள். வேறு எந்த விவரமும் கூற மறுத்து விட்டார்கள். நான் மிகுந்த வேதனையிலிருந்தேன்.

அப்போது எங்களுக்கு செமஸ்டர் தேர்வு நடந்து கொண்டிருந்தது. இரண்டு நாளில் பிசிகல் கெமிஸ்ட்ரி தேர்வு. அவள் தேர்விற்கு மருத்துவமனையிலிருந்து நேரடியாக ஆட்டோவில் வந்தாள். சரியாக பத்து மணிக்குத் தேர்வு மையத்திற்குக் கைத்தாங்கலாக வந்தாள். சற்று நேரத்திலேயே மயக்கம் அடைந்து விழுந்துவிட்டாள் (மூன்று ஒன் வேர்டு மட்டுமே எழுதி மூன்று மதிப்பெண்கள் பெற்றிருந்தாள்). பழையபடி மருத்துவமனைக்குக் கொண்டு சென்று விட்டார்கள். இதையெல்லாம் என்னால் வெறுமனே பார்க்கத்தான் முடிந்தது. அந்தத் தேர்வு நானும் சுமாராகத்தான் எழுதினேன்.

இதற்கிடையில் அவளது தந்தைக்குக் கடிதம் மூலம் தகவல் அனுப்பி அவர்கள் வந்து மகளைக் கூட்டிச் சென்றார்கள். எங்களுக்குத் தேர்வுகள் முடிந்து விட்டதால், விடுமுறை ஆரம்பித்து வீட்டிற்குச் சென்று கடிதம் எழுதினேன். அவள் உடல்நிலை சற்று சரியான பின் பதில் எழுதினாள். அதற்குள் கிட்டத்தட்ட விடுமுறையே முடிந்து விட்டது. அதுவரை எந்தவொரு தகவலும் இல்லை. இப்போதென்றால் உடனே வீடியோ காலில் பேசலாம்; குறுகிய காலத்தில் மிகப்பெரிய (Tremendous) தொழில்நுட்ப மாற்றங்கள்! 

பிறகு தெரிந்து கொண்டது என்னவென்றால், மருத்துவமனையில் நாடித்துடிப்பு இல்லை என்று எடுக்க மறுத்து, பின்னர் முதல்வர் ரொம்ப கேட்டுக் கொண்டதற்கு இணங்க சிகிச்சையைத் தொடங்கியிருக்கிறார்கள். துணைக்கு ஒரு அம்மா இருந்திருக்கிறார்கள். அவர்களை நாங்கள் ஆயா என்போம். வெளி மருத்துவமனைக்கு விடுதி மாணவிகளை அவர்கள்தான் கூட்டிச் செல்வார்கள். மருத்துவர் குளுக்கோஸ் ஏற்றி இருக்கிறார். 

ஆயா பக்கத்திலிருந்து ஜெபமாலை சொல்லியபடி உருக்கமாக வேண்டிக் கொண்டிருந்தார்களாம். இவளுக்கு அதெல்லாம் கனவு போன்று சிறிது நினைவு இருந்ததாம். அன்று முழுவதும் அவளால் பேச முடியவில்லை. அன்று இரவு இவள் தூங்கிக் கொண்டிருக்கும்போது மாதா வந்து கன்னத்தில் பளார் என்று அறைந்தது போன்று இருந்ததாம்.  ‘அம்மா’ என்று சப்தமிட்டபடி இவள் எழும்ப, ஆயா மகிழ்ச்சியுடன் ‘மாதா காப்பாற்றி விட்டாள்’ என்றார்களாம்.  அதன் பின்னர்தான் தோழி பேசியிருக்கிறாள். உணர்வும் ஓரளவு வந்திருக்கிறது.

உண்மையில் அந்த ஆயா பாராட்டப்பட வேண்டியவர். தன் பிள்ளை போல் அவர் செய்த வேண்டுதலின் பலன்தான் என்று தோழி இன்றும் நம்புகிறார். நாம் எப்போதும் பள்ளி ஆசிரியர், பேராசிரியர் குறித்துப் பேசுவோம். ஆனால் நமக்குப் பணிவிடை செய்யும் எங்கள் ஆயா மாதிரி உள்ளங்களை நாம் கடந்து விடுவோம்; அல்லது மறந்து விடுவோம். அவர்களையும் நன்றியுடன் நினைவு கூருவது நமது கடமை. 

முட்டைப் பூச்சித் தொல்லை

விடுதியில் சந்தித்த இன்னொரு சிக்கல் முட்டைப் பூச்சித் தொல்லை. பி யூ சி படிக்கும்போது  எங்களுக்கு நார்க் கட்டில்கள் போடப்பட்டிருந்தன. அவற்றில் நிறைய மூட்டைப் பூச்சிகள் இருந்தன. மூட்டைப் பூச்சியை ஒழிப்பது அவ்வளவு எளிதல்ல… நியூயார்க் நகரில் மூட்டைப்பூச்சி பிரச்சனை வந்தபோது அதை ஒழிக்க அரசாங்கம் பல லட்சங்கள் செலவழித்தார்களாம். வீடுகளில் என்றால் அடிக்கடி நார்க் கட்டில்களுக்குக் கொதிக்கக் கொதிக்க நீர் விடுவார்கள். ஏனென்றால் 40 டிகிரி சென்டி கிரேட் வெப்ப நிலைக்கு மேல் மூட்டைப் பூச்சி இறந்துவிடும். ஆனால் இங்குச் செய்வது அவ்வளவு எளிதல்ல. 

பொதுவாக மூட்டைப் பூச்சிகள் மரப்பொருள்களின் இடுக்குகளில் வாழும். பகல் முழுதும் அவை இருக்கும் இடமே தெரியாது. இரவு நாம் படுத்ததும் நாம் மூச்சில் வெளியிடும் கார்பன் டை ஆக்சைடை மோப்பம் பிடித்து வந்து நம்மைக் கடிக்கும். அது கடிக்கும் போது ஒரு வலி நிவாரணியை வெளியிடும். அதனால் கடிக்கும் போது நமக்கு வலி தெரிவதில்லை. ஐந்து நிமிடங்கள் வரை நமது ரத்தத்தைக் குடிக்கும். அதன் பின் ஓடிவிடும். கடித்த இடத்தில் எரிச்சலும் தடிப்பும் ஏற்படும். தூக்கம் கலைந்ததில் நமது மனதிலும் எரிச்சல் ஏற்படும். தூங்க வந்ததும் மூட்டைப் பூச்சிகள் பிலு பிலு என நம்மைச் சூழ்ந்து கொள்ளும். நிறைய இரவுகள் தூங்கவே முடியாது. நம்மை அறியாமல் தூங்கினால்தான் உண்டு. மூட்டைப் பூச்சிகளைக் கொன்றால் இரத்த வாடைக்கு இன்னும் அதிகமாக வரும் என்று அதைப் பிடித்து தண்ணீர் கொண்ட வாளியில் போடுவோம். வடிவேலு மூட்டைப் பூச்சியைப் பிடித்து கொல்லுவாரே! அந்தக் கதைதான்.

பெரிதாக ஒன்றும் செய்திருக்க வேண்டாம்; நார்க்கட்டில்களை திரும்பப் பெற்றிருந்தால் போதும். ஆனால் அந்த எண்ணம் யாரிடமும் இருந்திருக்கவில்லை என்று தோன்றுகிறது.

ஒரு நாள் காலை உணவு கூடத்திற்குச் செல்லும்போது ,இரவு இரண்டு மணிக்கு,தோசைக்கல் மணி அடித்து மூட்டைப்பூச்சி பிரச்சனைக்கு ஓல்ட் ஹாஸ்டலைச் சேர்ந்த மாணவிகள் எல்லோரும் ஒன்று சேர்ந்து எதிர்ப்பு தெரிவித்ததாகச் செய்தி கிடைத்தது (அங்கு நிறைய மாணவிகள் என்பதால் மெஸ்ஸுக்கு,  ரெக்ரியேஷன்- ஸ்டடி முடியும் நேரத்திற்கு, தூங்கச் செல்லும் நேரத்திற்கு என்று எல்லாவற்றிற்கும் மணி அடிப்பார்கள். எங்கள் விடுதியில் ஜஸ்டின் அக்கா குரல் கொடுத்தால் போதும்). இப்படி எதிர்ப்பு தெரிவிப்பது விடுதி வரலாற்றில் மட்டுமல்ல கல்லூரி வரலாற்றிலும்கூட இதுவே முதல் முறை என்று கூறினார்கள்.

வார்டன் சிஸ்டர் உட்பட நிறைய சிஸ்டர்ஸ் வந்து சமாதானப்படுத்தி இருக்கிறார்கள்.  கல்வி ஆண்டு முடிவுறும் காலம் ஆனதால் எந்த நடவடிக்கையும் பெரிதாக எடுக்கவில்லை. பலர் கட்டிலை வெயிலில் போட்டு எடுத்தார்கள். ஆனாலும் முழுமையான தீர்வு கிடைக்கவில்லை. 

ஒவ்வொரு ஆண்டும் விடுதியிலிருந்து நமது அனைத்துப் பொருள்களையும் எடுத்துச் சென்றாக வேண்டும். நான் தேர்வுக்குப் படிக்க விடுமுறை விடும்போதே ஓரளவு பொருட்களைக் கொண்டு சென்று  விடுவேன். நிறைய பேருக்கு அப்பா வருவார்கள். என்னைப் பொறுத்தவரை நானேதான் சூட்கேஸை கொண்டு செல்வேன். அப்போது நடத்துநர்கள் சூட்கேஸை படியிலிருந்து வாங்கி பேருந்தில் ஏற்றித் தருவார்கள்; அதே மாதிரி இறக்கியும் தருவார்கள். எனது மாமாவின் அச்சகம் எங்கள் ஊர் பேருந்து நிறுத்தத்தின் அருகே இருந்தது. அங்கு இறக்கி வைத்து விட்டு வீட்டிற்கு வந்தால், எனது தாத்தா போய் சூட்கேஸை எடுத்து வருவார்கள். 

நாங்கள் முதலாம் ஆண்டு ஹாஸ்டலுக்கு சென்றபோது, நன்றாக வெள்ளை அடித்து, இரும்புக் கட்டில் போடப்பட்டிருந்தது. அத்தோடு மூட்டைப் பூச்சியும் ஒழிந்தது.

புயல் மழை 

எங்கள் கல்லூரி கடற்கரையிலிருந்ததால் மழை பெய்தால் மிக அதிகமாகப் பெய்யும்; குடை எல்லாம் தாங்காது. ஒரு முறை புயல் வந்த போது -1980 என்று நினைக்கிறேன் மிகப் பெரிய மழையும், காற்றும்; விடுதி வராண்டா, கிழக்குப் பார்த்து இருந்ததால் மழை நீர் வராண்டாவில் (வராண்டாவிற்கும் கூரை உண்டு) அடித்து கதவு வழியே அறைக்குள் வந்து விட்டது.பொருள்களை எல்லாம் கட்டில் மேல் வைத்துவிட்டு நாங்களும் கட்டில் மேல் உட்கார்ந்திருந்தோம். இரவு சீக்கிரமாக இருட்டாகி விட்டது.

சாப்பிடச் செல்வதற்குக் கூட வழி இல்லை. ஓல்ட் ஹாஸ்டல்தான் உணவுக்கூடத்திற்கு  அருகில் உள்ளது. ஆனால் எங்கள் விடுதி தள்ளி இருக்கிறது. இவ்வாறான மழைக்காலங்களில் எங்கள் விடுதிக்குச் சாப்பாடு கொண்டு வந்து கொடுக்க ஏதாவது ஏற்பாடு முன்னமே செய்திருக்கலாம். ஆனால் செய்யவில்லை. எங்கள் விடுதியில் பெரிய ஹால் இருக்கிறது. அதில் கொண்டு வந்து வைத்திருந்தால், சாப்பாடு கிடைத்திருக்கும். 

நேரம் ஆக ஆகப் பசி கூடியது. ஹாஸ்டல் ஹாலிலிருந்து மெஸ்ஸுக்கு செல்வதற்கு ஒரு குறுக்கு வழி இருந்தது. அது சர்ச்சுக்குப் பின்பக்கமாகச் செல்லும். ஜஸ்டின் அக்கா அந்த வழியாக மெஸ்ஸுக்கு கூட்டிச் சென்றார்கள். குடை பிடித்தாலும் நன்றாக நனைந்து விட்டோம். சர்ச்சுக்கு பின்னால் பெரிய ரோஜாத் தோட்டம் இருந்தது. ரோஜாப் பூக்கள் ஒவ்வொன்றும் விதவிதமான வண்ணங்களில் கண்களைக் கவரும். அதில் எந்த ஒரு பூவையோ இல்லை செடியைக் கூட தொட முடியாது. ஆனால் அன்று திரும்பி வரும்போது பலர் ரோஜாப் பூக்களை பறித்தனர். பயன்படுத்த முடியாது என்றாலும் ஒரு ஆசைதான். 

ஒருமுறை கிறிஸ்மஸ் விடுமுறையின் போது செடி பிடுங்கிச் சென்றவர்களை விசாரித்து யார் எனக் கண்டுபிடித்து விடுதியை விட்டு நீக்கி விட்டார்கள்.

பூ பறித்தது பற்றி இன்னொரு சம்பவம் நினைவுக்கு வருகிறது. ஒரு நாள் எங்கள் வகுப்புத் தோழி ஒருவர், அருகில் உள்ள ரோஜாச் செடியில் பூவைப் பறித்து விட, மேலே மாடியின் வராண்டாவில் நின்றுகொண்டிருந்த முதல்வர் பார்த்து உடனே கூப்பிட்டார். நேரம் 9.30 இருக்கும். அன்று தேர்வு. அப்பாவைக் கூட்டி வந்தால்தான் தேர்வு எழுத முடியும் என்று முதல்வர் கூறிவிட்டார். தந்தையைக் கூட்டி வருவதாக இருந்தால் பிந்திவிடும்; அன்றைய தேர்வு எழுத முடியாது என்று கெஞ்சிக் கூத்தாடினாள். அவ்வளவு அழுகை அழுதாள். கடைசியில் மறுநாள் காலையில் அப்பாவைக் கூட்டி வருவதாக் கூறி அன்று தேர்வு எழுத அனுமதித்தார்கள். தேர்வு எழுதச் சற்று நேரம் தாமதம் ஆகிவிட்டது.

இடையில் ஒரு நிகழ்வை நினைவு கூறுகிறேன். எனது தங்கை அமெரிக்காவில் இருக்கிறாள். மகள் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படிக்கும் போது scout camp அழைத்துச் சென்றிருக்கிறார்கள். திரும்ப வரும்போது கையில் எதுவும் கொண்டு வரக்கூடாது. ஒரு குழந்தை ஒரு காய்ந்த குச்சியை எடுத்து வந்திருக்கிறது. அதற்கு ஆசிரியர் “இது உன்னுடையதா? பின் எதற்கு எடுத்து வந்தாய்?” என்று கடுமையாகத் திட்டினார்களாம். நமக்கு உரிமை இல்லாததை எடுக்கக் கூடாது என்று சிறுவயதிலே அங்குச் சொல்லிக் கொடுக்கிறார்கள். நாம்தான் பொதுச் சொத்துகளை பராமரிக்காமல் மோசமாகப் பயன்படுத்துகிறோம். நமது ஊரில் பூங்காக்களைப் பார்த்தால் மலர்ச்செடியே இருக்காது. ஏனென்றால் நமது மக்கள் தான் பூக்களைப் பறித்து விடுவார்களே. 

அப்போது, நிர்வாகம் மிகவும் தோழியிடம் கடுமையாக நடந்துகொண்டதாகத் தான் தோன்றியது. ஆனால் இப்போது நினைத்துப் பார்த்தால் அவர்கள் சரியாகத்தான் நடந்துள்ளார்கள்.  

கல்லூரியில் இந்த ரோஜாப் பூக்களை எத்தனை பேர் ரசித்துப் பார்க்கிறோம். அதை நாம் ஒருவரே பறித்து விட்டால் மற்றவர்கள் எப்படி ரசிக்க முடியும்? அப்படி பூ பறிப்பதில் கொஞ்சம் விட்டுக் கொடுத்தால் செடியில் ஏதாவது ஒரு பூ மிஞ்சுமா? அப்படி என்றால் பூச்செடி வளர்ப்பது வீண் அல்லவா? இதெல்லாம் இப்போதுதான் தோன்றுகிறது. 

தேர்வு என்பதால் தேர்வு எழுத கொஞ்சம் எளிதாக அனுமதித்து விட்டு தேர்வு முடிந்ததும் முதல்வரை சந்திக்கச் சொல்லி டோஸ் விட்டிருக்கலாம். 

ஸ்கை லேப்

புயல், மழை எனத் தொடங்கி, கதை எங்கேயோ போய்விட்டது. 1979 இல் பயமுறுத்திய இன்னொரு செய்தி, ஸ்கை லேப் (Sky lab). நாசா விண்வெளி நிலையம் விண்வெளியில் 25.9.1973 அன்று ஒரு ஆய்வகம் அமைத்திருந்தது. அது தன் நிலைப்பாட்டை இழந்து பூமியில் விழப்போவதாக இருந்தது. அது எங்கு விழுமோ அங்குப் பெருத்த சேதம் ஏற்படும் என்று உலகமே கலவரப்பட்டுக் கொண்டிருந்தது. விஞ்ஞானிகள்  ஸ்கை லேபை கடலில் விழ வைக்க முயற்சி செய்து கொண்டிருந்தனர். 1979 ஜூலை மாதம் எங்களுக்கு அப்போதுதான் கல்லூரி ஆரம்பித்திருந்தது. சில நாட்களில் ஸ்கை லேப் விழப்போகிறது என்றதும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விட்டார்கள் (அனைவரும் தங்கள் பெற்றோருடன் இருக்கட்டும் என்ற நல்ல எண்ணம்தான்). அப்போதுதான் விடுமுறை முடிந்து விடுதிக்கு வந்திருந்தோம். பழையபடி வீட்டிற்குச் செல்லும்படி ஆனது. மூன்று நாள்கள் விடுமுறையிலிருந்ததாக நினைவு. ஸ்கை லேப் ஜூலை பதினொன்றாம் தேதி ஆஸ்திரேலியா அருகில் கடலில் விழுந்தது. யாருக்கும் எந்தவித பாதிப்பும் இல்லை. உலகமே பெருமூச்சு விட்டது. 

பேய் கதையும் சூசையப்பர் கதையும் 

விடுதியில் பேய்க் கதைகள் பெருமளவில் நடமாடும். இரவு கழிப்பறைக்கு யாரும் தனியாகப் போகமாட்டார்கள். இரவு வராண்டாவில் நின்று கொண்டு விளையாட்டு அரங்கைப் பார்த்தால் கும்மிருட்டோடு பார்க்க அச்சமாக இருக்கும். கட்டிடத்தின் ஓரத்தில் ஆறு கழிப்பறைகளும், ஆறு குளியலறைகளும் இருக்கும். மிகவும் தூய்மையாகப் பராமரிக்கப்பட்டிருக்கும். மூன்று கழிப்பறைகளில் நேப்கின் போடப் பெட்டிகள் வைக்கப்பட்டிருக்கும். அதை நாள்தோறும் தூய்மைப்படுத்தி விடுவார்கள். இது மிக மிகப் பாராட்டப்பட வேண்டிய ஒன்று.

புயல் மழை நேரத்தில் இரவு மின்சாரம் இல்லை; அறைகளில் மெழுகுவர்த்தி பொருத்தி இருந்தோம். தோழி திடீரென ‘வீல்’ என்று அலறியபடி மயக்கம் அடைந்து விழுந்துவிட்டாள். கை கால்கள் எல்லாம் கொஞ்சம் வெடவெடக்க ஆரம்பித்து விட்டன. மயக்கத்தில் அவள் இருந்தாள். நாங்கள் எல்லாம் போய் நீவி   விட்டோம். சற்று நேரத்தில் எழும்பி விட்டாள். என்ன என்று பார்த்தால் இன்னொரு தோழி, கருப்பு போர்வை போர்த்தியபடி ஜன்னலில் ஏறி நின்று ஈ என்று பல்லைக் காட்டி இருக்கிறாள். அதைப் பார்த்துத் தான் இவள் மயக்கம் அடைந்து இருக்கிறாள். பயமுறுத்திய தோழி ‘ஒரு ஃபன்னுக்காக இப்படிச் செய்து விட்டேன்’ என்று கூறி பலமுறை மன்னிப்பு கேட்டாள். 

இதே மாதிரி இன்னொரு முறை அறைத் தோழிகள் இணைந்து ரெக்கார்டு முடிக்க வேண்டி உள்ளது என்று இரவு ஒரு மணிக்கு வராண்டாவில், ஜீரோ வாட் பல்பு வெளிச்சத்தில் மாடிப்படியில் வைத்து எழுதி இருக்கிறார்கள். படியின் கைப்பிடிச் சுவர் ஓட்டை ஓட்டையாக இருக்கும். ஒரு ஓட்டை வழியாக இரண்டு கண்கள் மட்டும் தெரிந்ததும், பேய் என்று பயந்து ஒரு மாணவி ரெக்கார்டு, கொண்டு போயிருந்த தின்பண்டங்கள் எல்லாம் தூக்கிப் போட்டு விட்டு அறைக்குள்  ஓடவும் மற்றவர்களும் என்னவோ ஏதோ என்று அறைக்குள் சென்று கதவைப் பூட்டிக் கொண்டார்கள். 

வார்டன் -ஜோதி சிஸ்டர் கதவைத் தட்டி தான்தான் வந்ததாகக் கூறி கதவைத் திறக்கச் சொல்லி நன்றாக டோஸ் விட்டிருக்கிறார்கள். வேற யாராவது வந்து ஏதாவது நடந்தால் என்ன ஆவது, ரொம்ப அவசரம் என்றால் என்னிடம் பெர்மிஷன் கேட்டு ரெக்கார்டு எழுதியிருக்கலாமே என்று சத்தம் போட்டு ரெக்கார்ட் எல்லாம் எடுத்துச் சென்று விட்டார்கள். பின்னர் மன்னிப்பு கடிதம்  கொடுத்து ரெக்கார்டு  திரும்பக் கிடைத்து இருக்கிறது. 

எங்கள் வார்டன் ஜோதி சிஸ்டர்

பேய்க் கதையைப் போலவே சூசையப்பர் கதையும்  மாணவிகளிடம் நடமாடியது. இரவு டக் டக் என்று கைத்தடியை வைத்துக்கொண்டு யாரோ நடப்பது போல் சத்தம் கேட்கிறது; அது சூசையப்பர்தான்; அவர் தானே கைத்தடி வைத்திருப்பார் என்று பலரும் சத்தம் கேட்டதாகக் கொஞ்சக் காலம் சொல்லிக் கொண்டிருந்தார்கள். நானும் ஒரு நாள் கேட்டேன். ஒரு நாள் யாரோ பகலிலும் அந்த சத்தம் கேட்கிறதே என்று சத்தம்  வந்த இடத்தைப் போய்ப் பார்த்தால், ஒரு அறையில் அறை எண் ஒரு  நார்க் கட்டில் சட்டத்தோடு இருந்திருக்கிறது (பெரும்பாலும் கட்டில் சட்டம் இல்லாமல் தான் இருக்கும்). அந்தக் கட்டிலில் கால் பகுதியில் உள்ள சட்டத்தில் ஒரு கம்பு கொஞ்சம் லூசாக இருந்திருக்கிறது. அந்த லூசான கம்பு, மாணவி படுத்திருக்கும் போது அவ்வப்போது கால் தட்டுப்பட்டு டக் டக் என்று சத்தம் எழுப்பியுள்ளது; அவ்வளவு தான்! எல்லோரும் எங்கள் கற்பனையைச் சொல்லிச் சொல்லிச் சிரித்தோம்.  

தொடரும்…

படைப்பாளர்

பொன் ஜெய இளங்கொடி

MSc. Chemistry. MSc. Psychology. B.Ed. PGDGC. வயது 62. கன்னியாகுமரியைச் சேர்ந்தவர். இவர் PUC மற்றும் BSc. புனித மரியன்னை கல்லூரி, தூத்துக்குடியில் 1978 முதல் 1982 வரை படித்தவர். அப்போது அவர் பெற்ற அனுபவங்களை இந்தத் தொடரில் எழுதியுள்ளார். இது இவரின் முதல் முயற்சி.