‘வீணாப்போனவ’ அது என்ன இப்படி ஒரு தலைப்பு என்றுதானே தோன்றுகிறது?
“பாவம்! அவ சின்ன வயசுலயே வீணாப்போயிட்டா!”
“அச்சச்சோ, அந்த மாமி வீணாப்போனவா, அவாளுக்கு போய் குங்குமம் கொடுக்கப் போறியே!”
“அவளப் பாரு, வீணாப்போனவ மாதிரியா இருக்கா?”
இப்படியாகப் பேச்சுவழக்கில் ‘வீணாப்போனவ’ என்று விளிக்கப்படும் பார்ப்பன கைம்பெண்களைப் பற்றிய அத்தியாயம் இது என்பதால்தான் இந்தத் தலைப்பு!
‘என்ன, கைம்பெண்ணை வீணாப்போனவ என்று சொல்லுவார்களா’ என்றுதானே தோன்றுகிறது?
ஆமாம், அதுதான் உண்மை.
விதவை என பொதுவாகச் சொன்னாலும், ‘முண்டை, அறுத்தவ’ என்றெல்லாம் கொச்சையாக விளித்தாலும், தேன் தடவிய விஷம் போல, பேச்சு வழக்கில் கொஞ்சமும் அறமே இல்லாமல் தமிழ் பார்ப்பனர்கள் முக்கியமாகப் பெண்கள், கைம்பெண்களை ‘வீணாப்போனவ’ என்றுதான் வழங்குகிறார்கள்.
எல்லாச் சொந்தங்களையும் தாண்டி வாழ்விணையர் என்னும் உறவு மிக முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால் வைதவ்வியம் / கைம்மை என்பது ஒரு பெண்ணுக்கு எவ்வளவு வேதனையான நிலை என்பதை நான் இங்கே சொல்லித் தெரியத் தேவையில்லை.
இதெல்லாம் பெரிய விஷயமா? காலம்தான் மாறிப்போய்விட்டதே? பெண்களின் மறுமணங்கள்தான் இப்பொழுதெல்லாம் இயல்பாக நடக்கிறதே? அதற்கான தனித் திருமண மையங்கள் கூட செயல்படுகின்றனவே? இதைப்பற்றி இப்பொழுது பேச வேண்டிய அவசியம் என்ன என்ற கேள்வி வரலாம்.
ஆனால் சில விஷயங்களைத் தெளிவுபடுத்த வேண்டிய கட்டாயம் இன்றளவும் இருப்பதாகவே எனக்குப் படுகிறது.
‘பொண்டாட்டி செத்தா ஆம்பள புது மாப்பள’ எனும் பழமொழிக்கு ஏற்ப, ஓர் ஆணுக்கு மறுமணம் என்பதை மிகச் சுலபமான விஷயமாக ஏற்றுக்கொண்டு கடந்துபோக நம் சமூகம் நமக்குக் கற்பித்து வைத்திருக்கிறது. மனைவி உயிருடன் இருக்கும்போதே மற்றொரு திருமணம் செய்துகொண்டு, இருவரையும் ஒரே வீட்டில் வைத்து குடும்பம் நடத்தியதையெல்லாம் கண்டும் காணாமலும் கடந்துசென்றிருக்கிறோம்.
ஆனால் இன்றைய நவீன யுகம்வரை கூட ஒரு ‘பெண்ணுக்கு’ மறுமணம் என்பது சர்ச்சைக்குரிய விஷயமாகத்தானே பார்க்கப்படுகிறது. அதை இயல்பாக ஏற்றுக் கடந்துபோகும் பக்குவம் இன்றும்கூட பெரும்பாலானவர்க்கு இல்லைதானே?
பார்ப்பனர்களில், (வைதீகக் குடும்பத்தினர் தவிர) பெண்களின் மறுமணத்தைப் பரவலாக ஏற்றுக்கொள்கிறார்கள் என்றாலும், இதில் சில வரையறைகளும் இருக்கவே செய்கின்றன.
ஏற்கனவே திருமணம் முடிந்து, மனைவி இறந்த / விவாகரத்தான ஆண்கள் மட்டுமே விவாகரத்தான / கைம்பெண்ணை மறுமணம் முடிக்க முன்வருகிறார்கள். இதில் வெகு சில விதிவிலக்கானவர்களும் உண்டு, அத்தகைய ஆண்கள் பகுத்தறிவுவாதிகளாகவே இருக்கிறார்கள். தனக்கு இரண்டாம் மணமாக இருந்தாலும், திருமணம் ஆகாத பெண்தான் தேவை என மறுக்கும் ஆண்கள்தான் இங்கே அதிகம்.
எப்படி இருந்தாலும் மறுமணம் என வரும்பொழுது, விவாகரத்தான பெண்ணுக்கும், கைம்பெண்ணான ஒரு பெண்ணுக்கும் இடையில் ஒரு மயிரிழை வித்தியாசம் இருப்பதைக் கவனித்திருக்கிறேன்.
அதாவது, கைம்பெண்ணான பெண்ணை மறுமணம் செய்ய, எல்லோருக்கும் உள்ளே ஒரு தயக்கம் இருக்கிறது. அவளது ஜாதக ராசிதான் அவளது கைம்மைக்குக் காரணம், எங்கே அந்தப் பெண்ணை தங்கள் மகனுக்கு மணம் முடித்து வைத்தால் அவனுக்கும் அதே நிலை வந்துவிடுமோ எனும் அச்சம்தான் அத்தகைய தயக்கத்துக்கு வித்திடுகிறது.
கணவன் இறந்தவுடன் ‘சதி’ எனப்படும் உடன்கட்டை ஏறுதல் பற்றி எல்லோரும் கேள்விப்பட்டிருப்போம்.
திரைப்படங்களில் சித்தரிப்பது போலப் பெண்கள் தங்கள் ‘பதிவிரதா தருமத்தை’ நிரூபிக்க கரம் குவித்து மனதார சிதையில் ஏறினார்கள் என்பது முற்றிலும் புனிதப்படுத்தப்பட்ட அபத்தம். இறந்த ஆணின் பிணத்துடன், அவனுடைய மனைவியையும் உயிருடன் பாடையில் கட்டி சிதை மூட்டினார்கள் என்பதே உண்மை. இந்த வரலாறெல்லாம் எவ்வளவு பேருக்குத் தெரியும்?
அடுத்து கைம்பெண்களை மொட்டை அடித்து வீட்டுக்குள் உட்கார வைத்ததையெல்லாம் எல்லோருமே அறிந்திருக்கிறோம். ஆனால் அதன்பின் பெண்கள் அனுபவித்த துயரங்களைப் பலரும், குறிப்பாக இன்றைய தலைமுறையினர் அறிந்திருக்க வாய்ப்பே இல்லை.
சென்ற நூற்றாண்டின் முக்கால் பகுதிக் காலம் வரைகூட குழந்தைத் திருமணம் என்பது இங்கே வெகு சகஜமாக நடந்தேறிக் கொண்டிருந்தது. இன்றளவும்கூட அது வழக்கொழிந்து போகவில்லை எனலாம். தில்லை தீட்சிதர்களில் குழந்தைத் திருமணமும், கைம்மையில் முண்டனமும் இன்றும் நிகழ்வதாகச் செய்திகள் வருகின்றனவே!
பெண்கள் பூப்படைவதற்கு முன்பே திருமணம் செய்துவிடுவார்கள். அதற்கு ஒரு முக்கியக் காரணம் இருக்கிறது. அதை இந்த அத்தியாயத்தின் இறுதியில் சொல்கிறேன்.
நல்லபடியாக வாழ்ந்து பிள்ளைகுட்டிகளைப் பெற்றுக்கொண்டு சுமங்கலியாகச் சகல சௌபாக்கியங்களுடன் வாழ்ந்து சுமங்கலியாகவே மரித்தவர்கள் வீட்டின் கடவுளாக மாறிப்போகிறார்கள். அவர்கள் திவசத்தன்று குடியில் பிறந்த பெண்ணுக்கு வெற்றிலை பாக்கோடு புடவை வைத்துக் கொடுத்து, செத்த பிறகும் மதிப்பைப் பெறுகிறார்கள். சுமங்கலியாக இறந்த குடும்பத்துப் பெண்களை நினைவு கூர்ந்து சுமங்கலிப் பிரார்த்தனை செய்துவிட்டுத்தான் வீட்டில் எந்த ஒரு சுப நிகழ்ச்சியையும் நடத்துவார்கள்.
அதனாலேயே சுமங்கலியாக இறந்துபோவதைப் பெண்கள் பெருமையாகக் கருதினார்கள். இது… கைம்பெண்ணாகி, மொட்டை அடித்து மூலையில் உட்காரவைக்கப்பட்டு வாழ்க்கையே வீணாகப் போவதை விட, மரணமே மேல் என்கிற எண்ணம் பெண்களின் மனதில் ஆழமாகப் பதிந்துபோனதின் வெளிப்பாடுதான் போலும்.
மற்றொருபக்கம், வாழும் காலத்திலேயே நரகத்தைப் பார்த்தவர்கள் யார் என்றால், கணவனை இழந்து ‘வீணாகப்போனவர்கள்’ என அழைக்கப்பட்ட கைம்பெண்கள்தான்.
பூப்படையும் முன்பே கன்னிகாதானம் செய்துகொடுக்கப்பட்டு, மணம் முடித்து, இணையை இழந்து வாழ்கையில் எந்த ஒரு மகிழ்ச்சியையும் காணாமலேயே மொட்டையடித்து, மூளியாக்கி மூலையில் உட்காரவைக்கப்பட்ட பெண்கள் பலர்.
வயது முதிர்ந்து, பேரன் பேத்தி எடுத்து கைம்பெண் ஆன பலர் நல்ல செல்வாக்குடன் வாழ்ந்ததும் உண்டு என்றாலும் அகாலத்தில் மணவாழ்க்கையை இழந்து துயரத்துடனேயே வாழ்ந்து மடிந்தவர்கள் ஏராளம்.
கல்வி கற்கக்கூடாது. பொருள் ஈட்ட இயலாது. கணவனை இழந்தால், தன்னையும் தான் பெற்ற பிள்ளைகளையும் வைத்துச் சோறுபோட யாரையாவது அண்டியே இருக்கவேண்டிய நிலை என வரும்போது, அனாதரவாகப் பிறந்த வீட்டினரை நம்பியோ அல்லது புகுந்த வீட்டினரை அண்டியோ பிழைக்க வேண்டிய நிலை உண்டாகிறது. பாவப்பட்டு மூலையில் முடங்கிக் கிடந்ததோ மாடுபோல வீட்டு வேலைகளைச் செய்துகொண்டோ வாழ்ந்தவர் சிலர் என்றால், அதற்கு நேர்மாறாக நடந்துகொண்டவர்களும் இருக்கவே செய்தார்கள்.
எந்த இடத்திலும் மரியாதை இருக்காது. சதாசர்வ காலமும் தன் நிலையைச் சபித்தபடி மனக் குமுறலிலேயே வாழ்ந்துகொண்டிருக்க, வீட்டில் மதிப்புடன் வளைய வரும் மற்ற சுமங்கலிப் பெண்களைக் காணும்போது கைம்பெண்களுக்கு அவர்கள் மீது ஆத்திரம் பற்றிக்கொண்டு வருவதும் இயல்பே.
தானும் நிம்மதியிழந்து, அவர்களையும் நிம்மதி இல்லாமல் வாழ வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளுவர். எது எப்படி இருந்தாலும் அவர்களது வாழ்கை வீணாகப் போனது என்பதே உண்மை.
‘முண்டனம்’ என்றால் சமஸ்கிருதத்தில் மொட்டை அடித்தல் என்று பொருள். ‘முண்டை’ என்றால் தலையை மழித்துக் கொண்டு மொட்டையாக இருப்பவர். பார்ப்பனக் கைம்பெண்கள் என்றாலே நிரந்தரமாக மொட்டையாக இருப்பவர்கள்தான் என்பதால்தான் ‘முண்டை’ என்கிற சொல் பொதுவாக கைம்பெண்களைக் குறிப்பதாக மாறிப்போயிருக்கக்கூடும்.
ஒரு பெண்ணின் கணவன் இறந்து பத்தாவது நாள் இரவில்தான் இந்தச் சடங்குகள் நடத்தப்பட்டன. பெண்கள் தாமாகவே கழுத்தில் அணிந்த தாலியைக் கழற்றி பால் நிரம்பிய பத்திரத்தில் போட்டுவிட வேண்டும். ஊரில் உள்ள நாவிதர், வீட்டிற்கே வந்து மொட்டை அடிப்பார். உடன் மகனோ அல்லது உடன் பிறந்தவனோ மட்டுமே இருக்கலாம்.
அதன் பின் குளித்து, நார்மடி எனப்படும் காவி நிறமோ அல்லது வெள்ளை நிறமோ கொண்ட புடவையை அணியவேண்டும். எந்த ஒரு நகையையும், குறிப்பாக மெட்டி, மூக்குத்தி, வளையல்கள் அணியக் கூடாது. அதன் பின் அந்தத் தோற்றமே நிரந்தரமாகிவிடும்.
முண்டனம் செய்துவிட்ட பிறகு, பெண்கள் வீட்டைத் தாண்டி வெளியில் வரக் கூடாது. ஏதோ ஓர் அவசியத்துக்காக வெளியில் வந்தே ஆகவேண்டும் என்றால் கூட, வீட்டின் முக்கிய வாயில் வழியாக வெளியேறக் கூடாது. புழக்கடை வழியை மட்டுமே பயன்படுத்தலாம்.
வீட்டில் உள்ளவர்கள் எங்கேனும் வெளியில் கிளம்பும்பொழுது அவர்களைப் பார்க்க நேர்ந்தால் அது அபசகுனமாகக் கருதப்பட்டது. தப்பித்தவறி அப்படி நடந்துவிட்டால், நாக்கில் நரம்பில்லாமல் அவர்களைத் தூற்றுவர். அதையும் வாங்கி கட்டிக்கொள்ள வேண்டும்.
கடவுளைத் தவிர, கைம்பெண்கள் மூத்தவர், பெரியவர் யாரையும் (சேவிக்க) விழுந்து வணங்கக் கூடாது. காரணம், ‘தீர்க்க ஆயுளுடன் இரு! தீர்க்க சுமங்கலியாக இரு!’ என ஆசி கூறி நல்லபடியாக இருக்கும்படி அவர்களை வாழ்த்த இயலாது, வாழ்த்தவும் கூடாது. காரணம் கணவனை இழந்தபின் அவள் உயிர்வாழ தகுதியற்றவள்.
பெண்களை உடன்கட்டை ஏற்றுவதற்கு மட்டுமல்ல, இப்படி அலங்கோலப் படுத்தக் கூட காரணம் என்னவென்று கேட்டால், அவர்களைப் பாதுகாக்க எனத் தட்டையான ஒரு பதில் வரும். கொஞ்சம் ஆழ்ந்து நோக்கினால் பெண்களுடைய உணர்ச்சிகளை மழுங்கடிக்கவே இப்படிச் செய்தார்கள் என்பது புரியும்.
என்னதான் இப்படி அலங்கோலமாக மற்றவர் பார்வைக்குக் காட்சியளித்து, வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடந்தாலும், பிறந்த வீட்டில் இருந்தாலும், புகுந்த வீட்டில் வாழ்ந்தாலும் பாலியல் தொந்தரவுக்குப் பெண்கள் ஆளாகவே இல்லை என்றெல்லாம் கிடையாது. வீட்டு ஆண்களாலேயே பாலியல் சுரண்டல்களைச் சகித்தவர்கள் பலரும் உண்டு. அதனால் ஒரு கைம்பெண் கருவுற்றுவிட்டால், காதும் காதும் வைத்ததுபோல அந்தக் கருவைக் கலைக்க முடியாமல் போனால், அவளுக்கு மரணம் நிச்சயம். அது தற்கொலையாகவோ, கட்டாயப்படுத்தித் தூண்டப்பட்ட தற்கொலையாகவோ அல்லது கொலையாகவோக்கூட இருந்திருக்கலாம்.
என் சுற்றத்தில் உள்ள, அக்கிரகங்களில் வசித்த மூத்த பெண்கள் சிலர் சொல்லிக் கேள்விப்பட்ட இந்தத் தகவல்களை எழுதும்போது, ஜோதிபாய் பூலே, சாவித்ரிபாய் பூலே இணையரை எண்ணாமல் இருக்கமுடியவில்லை.
பூப்படைவதற்கு முன்பாகவே பெண்களுக்கு ஏன் திருமணம் செய்துவைத்தார்கள் தெரியுமா?
மனுதர்ம சாஸ்திரம், அதாவது மநு ஸ்ம்ரிதிதான் காரணம்.
திருமணம் என்றாலே, கன்னிகாதானமும் பாணிக்கிரகணமும் சப்தபதியும்தான். மநு ஸ்மிருதிப்படி எட்டு வயதிற்கு உட்பட்ட பெண்ணே கன்னிகை எனும் வரையறைக்குள் வருகிறாள். அதன் பிறகு அவள் கன்னிகை எனும் தகுதியை இழக்கிறாள்.
அதனால் ஒரு தந்தை தன் மகளை எட்டுவயத்துக்குள் தன சுய ஜாதியைச் சேர்த்த ஆண்மகனுக்கு கன்னிகாதானம் செய்து கொடுத்து, அவனிடம் அவளது கைபற்றிக் கொடுக்கவேண்டும். குறைந்தபட்சம் அவள் பூப்படைவதற்குள்ளாகவாவது அதைச் செய்திட வேண்டும். அந்தக் காலக்கெடு கடந்துபோனால், அந்தத் தகப்பனுக்குச் சில தண்டனைகளை மனுதர்மம் வகுத்திருக்கிறது.
இதைப் படிக்கும்போதே குமட்டிக்கொண்டு வருகிறதல்லவா? அப்படியென்றால், எந்த ஓர் ஆண்மகன் இதைச் செய்ய ஒப்புவான்? கூடுமான வரை, கிடைத்த ஒருவனுக்கு மகளைத் தாரைவார்க்கத்தான் எண்ணுவான்.
இதற்கு ஒரு சிறு பரிகாரமும் இருக்கிறது. அதைச் செய்வதும் சுலபம் அல்ல. அதாவது ஒவ்வொரு முறையும் மகளது மாதவிடாய் முடியவும், ஒரு பசுவை ஒரு பார்ப்பனருக்கு தானம் கொடுக்க வேண்டும்!
அதை விடப் பெண்ணை தானம் கொடுப்பது மிக மிகச் சுலபமல்லவா?
மேலும் மநு ஸ்மிரிதி பெண்களுக்கு என்ன மாதிரியான ஒரு கண்ணிவெடியை வைத்திருக்கிறது என்று பார்க்கலாம்.
‘முப்பது வயதுள்ள ஆணுக்குப் பன்னிரண்டு வயது உள்ள பெண்ணையும் இருபத்துநான்கு வயதுள்ளவன் எட்டு வயது பெண்ணையும் மணக்கலாம். இதற்கு முன்பே விவாகம் புரிய ஆசைப்பட்டால், வேதம் ஓதுதல் போன்ற அறச் செயல்கள் தடைபடுதலும் அதனால் பின்னர் துயருறுதலும் நேரும்’. அவ்வளவுதான்!
இதையெல்லாம் யாரவது பின்பற்றியிருப்பரா என்றுதானே தோன்றுகிறது?
என் மாமனார் அவருடைய ஒன்றுவிட்ட அத்தைக்கு நடந்த திருமணத்தைப் பற்றிக் கதை போலச் சொல்லுவார். அது சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில் நடந்திருக்கும் என எண்ணுகிறேன்!
அப்பொழுது, அக்கிரகார வீதியில், தெருவை அடைத்து பந்தல் போட்டுத்தான் திருமணங்கள் நடக்கும். அதேபோன்றுதான் அந்தத் திருமணமும் நடந்தேறியது. அப்பொழுது மாலை மாற்றும் சடங்கின் போது, பெண்ணின் தாய்மாமாவும் பிள்ளையின் தாய்மாமாவும் அவர்களைத் தோளில் அமரவைத்து, உற்சாகமாக ஓடியாடி மாலை மாற்றிக் கொண்டிருந்தார்கள். அப்பொழுது தென்னக்கீற்றுப் பந்தலில் நீட்டிக்கொண்டிருந்த குச்சி ஒன்று மாட்டி இழுத்து அந்த மணமகளின் காது அறுந்துபோனது.
அறுந்த காதை தைப்பதற்காக நரிக்குறவரை வரவழைத்தார்களாம். அவர்கள்தான் அந்த வைத்தியத்தைச் செய்வார்களாம். அதன் பின் அறுந்த இடத்தில் புறாவின் இரத்தத்தை ஊற்றி, அவர் தையல் போட்டுவிட்டுப் போனாராம்.
அப்பொழுது மணமகளாக இருந்த அந்தக் குழந்தைக்கு வயது, வெறும் இரண்டரை மட்டுமே… நம்புங்கள்!
இப்பொழுது சொல்லுங்கள் உண்மையில் கைம்பெண்கள் வீணாகப்போனவர்களா அல்லது மநுதர்ம சாஸ்திரத்தை இன்றுவரை கடைப்பிடிக்கும் நம் சமூகத்தால் அவர்கள் வீணடிக்கப்பட்டவர்களா?
இன்னும் எழுதுவேன்…
- உள்ளிருந்து ஒரு குரல்