ஹாய் தோழமைகளே,

எல்லாரும் நலம்தானே?

கடந்த வாரம் வரை தன்னை அறிதலில் சில முக்கிய வழிமுறைகளைப் பார்த்தோம். அனைவரும் பயிற்சி செய்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். உணர்வுசார் நுண்ணறிவின் அடிப்படையே தன்னை முழுமையாக அறிவதுதான். முதலில் தன் உடலை அறிவது, பின் பலம், பலவீனங்கள், எண்ண ஓட்டங்கள், உணர்வுகள் என்று அறிவை விரிவாக்குவது.

நாம் விவாதித்த பயிற்சிகள் இதையெல்லாம் பற்றிய தெளிவான அறிவை உங்களுக்குக் கொடுக்கும்.

அடுத்த படி, உங்கள் லட்சியம் / குறிக்கோள் / வாழ்வின் நோக்கம் என்ன என்று அறிந்துகொள்வது. இதுவும் தன்னை அறிதல்தான். எதை நோக்கி வாழ்வு நகர்கிறது என்கிற தெளிவுள்ளவர்களின் வாழ்வு எப்போதும் சுவாரசியமாகப் போகிறது.

பாரதியின் கவிதை ஒன்று

தேடிச் சோறுநிதந் தின்று — பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி — மனம்
வாடித் துன்பமிக உழன்று — பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து — நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி — கொடுங்
கூற்றுக் கிரையெனப் பின்மாயும் — பல
வேடிக்கை மனிதரைப் போலே — நான்
வீழ்வே னன்றுநினைத் தாயோ?

எந்த பெருங்கனவும் (நோக்கமும்) இல்லாத மனிதரின் அர்த்தமில்லா வாழ்வை விளக்கும் வரிகள்.

தினமும் உணவுக்காகப் பிரயத்தனப்பட்டு, எந்த உபயோகமும் இல்லாக் கதைகள் பேசி, தானும் துன்பத்தில் உழன்று மற்றோரையும் துன்பத்துக்குள்ளாக்கும் மனிதர்களைப் பற்றியது.

ஆழ்ந்து யோசித்தால், நம்மில் பலரின் வாழ்வு அப்படித்தான் போகிறது. உணவு, உடை, இருப்பிடத்திற்கான போராட்டத்தைத் தாண்டி யோசிப்பதற்கு நேரமில்லை. அப்படியே கிடைத்தாலும் அந்த நேரத்தைத் திருடும் கேளிக்கைகளே அதிகம்.

தினமும் படுக்கையில் இருந்து எழுவதற்கு ஒரு சுவாரசியமான காரணம் இல்லாததால்தான் பலருக்கும் அலுவலகம் இல்லா விட்டால் விடிவதே இல்லை. அப்படியே விடிந்தாலும் நமது ஆற்றல் பொழுது போக்கிலேயே வீணாகிறது.

இதையே சைமன் ஸ்னீக்கின் ‘Find your Why’ புத்தகம் விரிவாகப் பேசுகிறது. வாய்ப்பு கிடைத்தால் கட்டாயம் படியுங்கள்.

ஒவ்வொரு நாளும் விழிக்கும் போதும், இந்த நாளில் நாம் என்ன செய்யப் போகிறோம், ஏன் செய்யப் போகிறோம் என்கிற தெளிவுடன் எழுபவருக்கு, எதைச் செய்யக் கூடாது என்கிற தெளிவும் இருக்கும்.

எந்தக் கடினமான சூழ்நிலையிலும், எந்த உணர்வு கொந்தளிப்பிலும், குறிக்கோளுக்கு இடையூறாக வரக்கூடிய செயல்களுக்கும், எண்ணங்களுக்கும் மனம் தடை விதிக்கும். ஏனெனில் உங்கள் குறிக்கோளை வாழ்வின் லட்சியத்தை உங்கள் மனதில் பதிய வைத்துவிட்டீர்கள். இனி நீங்கள் தூங்கும் போதும் உங்கள் ஆழ் மனம் அதை எப்படிச் செயலாக்குவது என்றுதான் பார்க்கும். இடையூறாக வரும் மனிதர்களை, உணர்வுகளை உங்களுக்கு எச்சரிக்கை கொடுத்து வழிநடத்தும்.

உங்கள் வேலை சரியான லட்சியத்தைக் கண்டறிவதும், அதை உங்கள் ஆழ் மனதிற்குச் சொல்வதும்தான்.

சரி, சரியான லட்சியத்தை எப்படிக் கண்டறிவது? சவாலான விஷயம்தான். எதை செய்யும் போது

உங்கள் மனம் புற உலகைப் பற்றிய அனைத்துக் கவலைகளில் இருந்தும் விடுபடுகிறதோ,

பசி, தாகம், தூக்கம் மறக்கிறதோ,

நீங்கள் எந்த அழுத்தமும் இல்லாமல் நீங்களாக உணர்கிறீர்களோ, எந்த எதிர்பார்ப்பும் இன்றி எதை முழு மனதோடு செய்ய முடிகிறதோ அதுதான் உங்கள் அடையாளம், அதில் உச்ச திறனை வளர்த்துக் கொள்வதே உங்கள் இருப்பிற்கான நோக்கம்.

ஆனால், இது சொல்லும் அளவிற்குச் சுலபமான விஷயம் இல்லை. பல விஷயங்களைச் செய்து பார்த்துதான், பல தோல்விகளுக்கப்புறம்தான் உங்களின் பாதை உங்களுக்கே புலப்படும். ஒரு சிலருக்குச் சிறு வயதிலேயே தெரிந்துவிடும், சிலருக்குப் பாதி வாழ்க்கையைக் கடந்த பின்தான் புலப்படும். சிலர் தேடலே இல்லாமல் வாழ்ந்தும் முடிப்பர்.

புதையலைக் கண்டெடுப்பது எத்தனை ஆச்சரியமான விஷயமோ அதை விட ஒரு படி மேல் தன் வாழ்வின் நோக்கத்தை உணர்வது. அதைக் கண்டுகொள்பவருக்கு வாழ்வு பரிசாகிறது. ஒவ்வொரு நாளும் கொண்டாட்டமாகிறது. பின் உணர்வு கொந்தளிப்பிற்கு இடமேது?

மாறா படத்தில் வரும் ஒரு பாடல்.

யார் அழைப்பது…
யார் அழைப்பது…
யார் குரல் இது…
காதருகினில்… காதருகினில்…
ஏன் ஒலிக்குது…

போ என…
அதைத் தான் துரத்திட…
வாய் மறுக்குது…
குரலின் விரலை பிடித்து…
தொடரத்தான் துடிக்குது…

இப்படி ஒரு பிரத்தியேகப் குரல் அனைவருக்கும் கேட்கும். அதைப் புரிந்துகொள்ளும் ஆர்வமும் அமைதியான மனதும் மட்டுமே நமக்குத் தேவை.

அதே பாடலில் இன்னொரு வரி

“அலைவார் அவரெல்லாம்…
தொலைவார் வசனம் தவறு…
அலைவார் அவர்தானே அடைவார்…
அவர் அடையும் புதையல் பெரிது…”.

அந்தப் புதையல் வேறொன்றும் இல்லை. நீங்கள்தான், உங்கள் அமைதியான, உணர்வுசார் நுண்ணறிவு கொண்ட,  மகிழ்ச்சியான மனம்தான்.

(தொடரும்)

படைப்பாளர்:

யாமினி

வாழ்க்கைக் கல்வி மற்றும் மென்திறன் பயிற்சியாளர், இயற்கை விரும்பி, நெகிழி ஒழிப்பு ஆர்வலர், திடக் கழிவு மேலாண்மை பயிற்சியாளர். பயிலரங்குகள் நடத்துகிறார். உறவு மேலாண்மை தனிபட்ட ஆலோசகர். குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு விழிப்புணர்வை உருவாக்குவதின் மூலமே நாட்டின் நலம், இயற்கை வளம், சரிவிகித சமுதாயத்தை அடைய முடியுமென்று தீவிர நம்பிக்கை உள்ளவர். எல்லாச் சூழ்நிலைகளிலும் வாழ்தலைக் கொண்டாடுபவர்.

’உன்னை அறிந்தால்…’ என்கிற தலைப்பில் ஹெர் ஸ்டோரிஸில் இவர் எழுதிய தொடர், ஹெர் ஸ்டோரிஸ் வெளியீட்டில் புத்தகமாக வெளிவந்து, வரவேற்பைப் பெற்று இருக்கிறது.