இந்தக் கட்டுரை People’s Archive of Rural India (PARI) இணையதளத்திலிருந்து சிறப்பு அனுமதி பெற்று, Her Stories இணையதளத்தில் வெளியிடப்படுகிறது. ஆக்கம்: PARI. படங்கள், மூலக்கட்டுரை: ஜிக்யாசா மிஸ்ரா, தமிழில்: சவிதா.

பீகாரின் முசாஃபர்பூர் மாவட்டம் சதுர்புஜ் ஸ்தான் விபச்சார விடுதியில், நிரந்தர வாடிக்கையாளர்களை மகிழ்வித்து அடிக்கடி கருத்தரிக்கும் பாலியல் தொழிலாளர்கள் கோவிட்-19 பொதுமுடக்கத்தினால் மோசமாக பாதிக்கப்பட்டனர்

“நீங்கள் சீக்கிரமே வந்துவீட்டீர்கள். ஞாயிற்றுக்கிழமைகளில் பொதுவாக மாலை 4 மணிக்கு முன் அவர்கள் வருவதில்லை. ஹார்மோனியம் வாசிக்க கற்றுக் கொள்வதற்காக நான் இந்த நேரத்திற்கு வந்துள்ளேன்,” என்கிறார் பியூட்டி.

‘இது‘ பீகார் மாநிலம் முசாஃபர்பூர் மாவட்டம் முஷாலி வட்டாரத்தில் உள்ள மிக பழமையான சதுர்புஜ் ஸ்தான் விபச்சார விடுதி. ‘இந்நேரம்‘ நான் அவரை சந்தித்தபோது காலை 10 மணி. மாலை நேரங்களில் தான் அவரை வாடிக்கையாளர்கள் சந்திப்பார்கள். பியூட்டி – வேலைக்காக சூட்டப்பட்ட பெயர். 19 வயது பாலியல் தொழிலாளி ஐந்து ஆண்டுகளாக பாலியல் தொழிலில் உள்ளார். இப்போது அவர் மூன்று மாத கர்ப்பம்.

இப்போதும் அவர் தொழிலை தொடர்கிறார். அத்துடம் ஹார்மோனியம் வாசிக்கவும் கற்றுக் கொண்டிருக்கிறார். “என் குழந்தைக்கு இசை நல்ல தாக்கத்தை தரும் என என் அம்மா சொல்வார்” என்கிறார்.

அவர் பேசிக்கொண்டே ஹார்மோனிய பொத்தான்களை விரல்களால் அழுத்தியபடி, “இது எனக்கு இரண்டாவது குழந்தை. எனக்கு ஏற்கனவே இரண்டு வயதில் மகன் இருக்கிறான்” என்கிறார்.

அவரது பணியிடத்தில் பாதியளவுக்கு, பெரிய மெத்தை போடப்பட்டுள்ளது. பின்னால் சுவற்றில் 6க்கு 4 அடி அளவுள்ள கண்ணாடி பொருத்தப்பட்டுள்ளது. அறை 15க்கு 25 அடி நீள, அகலம் கொண்டிருக்கலாம். வாடிக்கையாளர்கள் அமரவும், சாய்ந்து கொள்ளவும் மெத்தையில் குஷன்கள், திவான் தலையணைகள் கொண்டு அலங்கரிக்கப்பட்டுள்ளது. அதில்தான் வாடிக்கையாளர்க அமர்ந்துகொண்டோ, சாய்ந்துகொண்டோ இப்பெண்கள் ஆடும் முஜ்ரா நடனத்தை ரசிப்பார்கள். இந்தியாவில் காலனி ஆதிக்கத்திற்கு முன்பே இந்த நடன முறை தோன்றிவிட்டது. சதுர்புஜ் ஸ்தானும் முகலாயர் காலம் முதலே இருந்து வருகிறது. விபச்சார விடுதியில் உள்ள சிறுமிகள், பெண்கள் அனைவருக்கும் முஜ்ரா ஆட தெரிந்திருக்க வேண்டும். பியூட்டிக்கும் முஜ்ரா தெரியும்.

விபச்சார விடுதியின் அனைத்து பாலியல் தொழிலாளர்களுக்கும் முஜ்ரா தெரிந்திருக்க வேண்டும். பியூட்டி ஹார்மோனியம் வாசிக்கவும் கற்று வருகிறார்

முசாஃபர்பூரின் முக்கிய சந்தை வழியாக இங்கு செல்ல வேண்டும். கடைக்காரர்கள், ரிக்ஷா ஓட்டுநர்கள் என பலரும் அவ்விடத்திற்கு வழிகாட்டுகின்றனர். விபச்சார விடுதி எங்குள்ளது என்பதை அனைவரும் அறிந்துள்ளனர். சதுர்புஜ் ஸ்தான் வளாகத்தில் ஒரே மாதிரியான வீடுகள் 2 முதல் 3 தளங்களுடன் தெருவின் இருபக்கங்களும் உள்ளன. வீட்டிற்கு வெளியே பல வயதுடைய பெண்கள் வாடிக்கையாளர்களுக்காக நிற்கின்றனர் அல்லது நாற்காலியில் காத்திருக்கின்றனர். கடந்து செல்லும் ஒவ்வொருவரையும் பிரகாசமான உடையணிந்தபடி, அடர்ந்த ஒப்பனையோடும், முழு நம்பிக்கையோடும் உன்னிப்பாக கவனிக்கின்றனர்.

விபச்சார விடுதியில் உள்ள பாலியல் தொழிலாளர்களின் எண்ணிக்கையில் வெறும் 5 சதவீதம் பேரைத்தான் பகல் பொழுதில் நீங்கள் பார்க்கிறீர்கள் என்கிறார் பியூட்டி. “மற்ற தொழிலைப் போல நாங்களும் வாரத்தில் ஒருநாள் விடுமுறை எடுத்துக் கொள்கிறோம். எனினும் ஒருநாளில் பாதி நேரம்தான் எங்களுக்கு ஓய்வு. மாலை 4-5 மணிக்கு வேலைக்கு வந்தால் இரவு 9 மணி வரை இருக்க வேண்டும். மற்ற நாட்களில் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை இருக்க வேண்டும்.”


அதிகாரப்பூர்வ எண்ணிக்கை ஏதுமில்லை. எனினும் ஒரு கிலோமீட்டருக்கு மேல் நீளும் சதுர்புஜ் ஸ்தானில் உள்ள மொத்த பாலியல் தொழிலாளர்களின் எண்ணிக்கை 2,500க்கு மேல் இருக்கும். நான் பேசியவரை தாங்கள் உள்ள தெருவில் இதே பகுதியில் இத்தொழிலில் சுமார் 200 பெண்கள் ஈடுபட்டு வருவதாக பியூட்டி மற்றும் பலர் சொல்கின்றனர். சுமார் 500 பெண்கள் பிற பகுதிகளில் இருந்து இத்தொழிலுக்கு வருகின்றனர். பியூட்டி ‘வெளிப்புற’ குழுவைச் சேர்ந்தவர். இவரைப் போன்றவர்கள் முசாஃபர்பூர் நகரில் எங்காவது வசிப்பவர்கள்.

மூன்று தலைமுறைக்கும் மேலாக பாலியல் தொழிலில் ஈடுபட்டு வரும் குடும்பத்து பெண்கள்தான் சதுர்புஜ் ஸ்தானில் உள்ள பெரும்பாலான வீடுகளின் உரிமையாளர்கள் என்று அவரும், பிற பெண்களும் எங்களிடம் தெரிவித்தனர். தாய், அத்தை, பாட்டியைக் கடந்து இப்போது அமிரா போன்ற பெண்ணுக்கு இத்தொழில் கடத்தப்படுகிறது. “இங்கே இப்படித்தான் இத்தொழில் நடக்கிறது. மற்றவர்கள் பழைய பாலியல் தொழிலாளிகளிடம் வீடுகளை வாடகைக்கு எடுத்துக் கொள்கின்றனர்,” என்கிறார் 31 வயது அமிரா. “எங்களுக்கு இதுதான் வீடு. வெளியிலிருந்து வரும் பெண்கள் குடிசைப் பகுதிகள் அல்லது ரிக்ஷா இழுக்கும், கூலித் தொழில் செய்யும் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். சிலர் இங்கு [கடத்தப்படுதல்] வாங்கப்படுகின்றனர்,” என்கிறார் அவர்.

கடத்தல், வறுமை, இதுபோன்ற தொழில் செய்யும் குடும்பங்களில் பிறத்தல் போன்ற காரணங்களால் பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படுகின்றனர் என்கிறது பல்கலைக்கழக மானியக் குழு வெளியிட்ட ஒரு ஆராய்ச்சி கட்டுரை . இது ஆண்களால் பெண்களுக்கு நேரும் சமூக மற்றும் பொருளாதார அடிபணிதலைப் பற்றி பேசுகிறது.

பல தலைமுறைகளாக இத்தொழிலில் உள்ள பெண்கள் தான் சதுர்புஜ் ஸ்தானின் பல வீடுகளின் உரிமையாளர்கள். சில பாலியல் தொழிலாளர்கள் அருகமை பகுதிகளைச் சேர்ந்தவர்கள். பியூட்டி போன்றோர் நகரின் எங்கிருந்தேனும் வருபவர்கள்.


பியூட்டியின் வேலை குறித்து அவரது பெற்றோருக்குத் தெரியுமா?

“ஆம், நிச்சயமாக, அனைவருக்கும் தெரியும். என் அம்மா சொன்னதால்தான் நான் கருக்கலைப்பு செய்யவில்லை,” என்கிறார் அவர். “நான் கருக்கலைப்பு செய்து கொள்ள அவரிடம் கேட்டேன். தந்தையில்லாமல் ஒரு குழந்தையை வளர்ப்பதே போதும் என்றேன். ஆனால் அவர் நம் மதத்தில் இது ஒரு [கருக்கலைப்பு] பாவச்செயல் என்றார்.”

பியூட்டியைவிட இளம் வயது பெண்கள் பலரும் இங்குள்ளனர். அவர்களில் சிலர் கருவுற்றுள்ளனர் அல்லது ஏற்கனவே குழந்தை பெற்றவர்களாக உள்ளனர்.

பதின்மபருவ கர்ப்பத்தை குறைப்பதற்கு பல ஆராய்ச்சியாளர்களும் சொல்வது , ஐக்கிய நாடுகள் அவையின் தொடர் வளர்ச்சி இலக்குகளில் உள்ள பாலியல் மற்றும் இனப்பெருக்க சுகாதாரம் தொடர்பான குறிக்கோள்களின் ஒரு முக்கிய பகுதி. குறிப்பாக SDGs 3 மற்றும் 5 . அவை ‘நல் ஆரோக்கியம் மற்றும் உடல்நலம்‘, ‘பாலின சமஉரிமை‘ என்பதாகும். இப்போதிலிருந்து 40 மாதங்களில் அதாவது 2025ஆம் ஆண்டிற்குள் அடைவோம் என்று நம்பிக்கை கொள்வோம். ஆனால் உண்மை நிலவரம் அச்சுறுத்தலாகவே உள்ளது.

ஹெச்ஐவி/எய்ட்சிற்கான ஐக்கிய நாடுகள் திட்டத்தின்படி தனது முதன்மை மக்கள் தொகை அட்டவணைப்படி 2016ஆம் ஆண்டு இந்தியாவில் சுமார் 6,57,800 பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். எனினும் அண்மையில் ஆகஸ்ட் 2020 தேசிய பாலியல் தொழிலாளர்களின் குழுமத்தின் (NNSW), வெளியான சமர்பிப்பில் நாட்டில் சுமார் 10 லட்சத்து 20 ஆயிரம் பெண் பாலியல் தொழிலாளர்கள் உள்ளதாக தேசிய மனித உரிமை ஆணையம் சொல்கிறது. அவர்களில் 6.8 லட்சம் பேர் (ஐ.நா எய்ட்ஸ் திட்டத்தின் விவரப்படி) மத்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகத்திடமிருந்து சேவைகளை பெறும் பதிவு செய்யப்பட்ட பெண் பாலியல் தொழிலாளர்கள் என்கிறது. NNSW அமைப்பு இந்தியாவில் பாலியல் தொழிலில் உள்ள பெண்கள், மாற்று பாலினத்தவர்கள், ஆண்களின் உரிமைகளை மேம்படுத்துவதற்காக 1997ஆம் ஆண்டு நிறுவப்பட்ட தேசிய பாலியல் தொழிலாளர்கள் குழுமம்.

வாடிக்கையாளர்கள் முஜ்ராவை அமர்ந்து காணும்படி ஒவ்வொரு வீட்டின் வெளி அறையிலும் பெரிய விரிப்பு உள்ளது.
அந்தரங்க நடனங்களுக்கு என தனி அறை உள்ளது

பியூட்டியின் வயதை ஒத்த ஓர் இளைஞன் அறைக்குள் நுழைந்தபடி நாங்கள் பேசுவதை கேட்டுவிட்டு சொல்கிறான். “என் பெயர் ராகுல். நான் இளம் வயது முதலே இங்கு வேலையில் இருக்கிறேன். வாடிக்கையாளர்களை அழைத்து வந்து பியூட்டி போன்ற சிலருக்கு உதவுகிறேன்,” என்கிறார் அவன். எனினும் தன்னைப் பற்றி மேற்படி எவ்வித தகவலும் சொல்லாமல் எங்கள் பேச்சை தொடரவிட்டு நகர்கிறான்.

“என் மகன், தாய், இரண்டு மூத்த சகோதரர்கள், தந்தையுடன் வசிக்கிறேன். நான் 5ஆம் வகுப்பு வரை பள்ளிக்குச் சென்றேன். பிறகு நிறுத்திவிட்டேன். பிறகு பள்ளிக்குச் செல்லவே இல்லை. என் தந்தைக்கு [சிகரட், தீப்பெட்டி, தேநீர், பான் போன்ற பொருட்களை விற்கும் சிறிய ஸ்டால்] நகரத்தில் டிப்பா உள்ளது. அவ்வளவு தான். எனக்கு திருமணம் ஆகவில்லை,” என்கிறார் பியூட்டி.

“எனது முதல் குழந்தை நான் காதலித்தவரால் வந்தது. அவரும் என்னை காதலிக்கிறார். அவரும் அதை சொல்வார்,” என வெட்கப்படுகிறார் பியூட்டி. “எனது நிரந்தர வாடிக்கையாளர்களில் அவரும் ஒருவர்.” இங்குள்ள பல பெண்களும் நீண்ட கால வாடிக்கையாளர் அல்லது வழக்கமான வாடிக்கையாளரை குறிக்க ‘பெர்மனன்ட்‘ எனும் ஆங்கில சொல்லை பயன்படுத்துகின்றனர். சிலர் ‘பார்ட்னர்‘ என்கின்றனர். “எனது முதல் குழந்தையை நான் திட்டமிடவே இல்லை. இந்த கர்ப்பமும் அப்படித்தான். ஆனால் அவர் கேட்டுக்கொண்டதால் இருமுறையும் கர்ப்பத்தை தொடர்கிறேன். குழந்தையின் அனைத்து செலவுகளையும் பார்த்துக் கொள்வதாக அவர் சொன்னார். சொன்னபடி அவர் நடந்தும் கொள்கிறார். இப்போது எனது மருத்துவச் செலவுகளை அவரே பார்த்துக் கொள்கிறார்,” என்று திருப்தியுடன் சொல்கிறார் அவர்.

தேசிய குடும்பநல கணக்கெடுப்பு-4 , பியூட்டியைப் போன்று ‘15-19 வயதிலேயே குழந்தை பெற்றெடுக்கும் பெண்கள் 8 சதவீதம் பேர் உள்ளனர். இதே வயது பிரிவில் சுமார் 5 சதவீத பெண்கள் ஒரு குழந்தையையாவது பெற்றெடுக்கின்றனர். 3 சதவீதம் பேர் முதன்முறை கர்ப்பமடைகின்றனர்’ என்கிறது.

இங்குள்ள சில பாலியல் தொழிலாளர்கள் தங்களின் ‘பெர்மனன்ட்‘ வாடிக்கையாளர்களிடம் எவ்வித கருத்தடை சாதனங்களையும் பயன்படுத்துவதில்லை, என்கிறான் ராகுல். கர்ப்பமடைந்தால் கருவை கலைக்கின்றனர் அல்லது பியூட்டியைப் போன்று குழந்தை பெற்றுக் கொள்கின்றனர். அவர்களுடனான நீண்ட கால உறவை பாதுகாக்கவே இவர்கள் இப்படி செய்கின்றனர்.

பியூட்டி தனது நிரந்தர வாடிக்கையாளரிடம் பேசுகிறார்: ‘என் முதல் குழந்தையை திட்டமிடவில்லை. இந்த கர்ப்பமும் அப்படித்தான்… அவர் கேட்டுக்கொண்டதால் கர்ப்பத்தைத் தொடர்கிறேன்’


“இங்கு வரும் பெரும்பாலான வாடிக்கையாளர்கள் ஆணுறைகளை வைத்துக் கொள்வதில்லை,” என்கிறான் ராகுல். “பிறகு நாங்கள் [தரகர்கள்] தான் விரைவாக கடைக்கு சென்று வாங்கி வருவோம். சில சமயங்களில் இப்பெண்களே நிரந்தர பார்ட்னருடன் எவ்வித பாதுகாப்புமின்றி செல்ல ஒப்புக் கொள்கின்றனர். அப்போது எங்களால் தலையிட முடியாது.”

நாடெங்கும் ஆண்களின் குடும்ப கட்டுப்பாட்டு முறைகளின் பயன்பாடு என்பது மிகவும் குறைவே என்கிறது ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழக பத்திரிகை வெளியிட்ட ஓர் அறிக்கை 2015-2016 ஆண்டுகளில் ஆண்களின் கருத்தடை, ஆணுறை பயன்பாடு வெறும 6 சதவீதம் மட்டுமே. 1990களில் இருந்தே அது தேக்கநிலையில் உள்ளது. 2015-2016 காலத்தில் ஏதேனும் ஒரு வடிவில் கருத்தடை செய்து கொண்ட பெண்கள் பீகாரில் 23 சதவீதம், ஆந்திர பிரதேசத்தில் 70 சதவீதம்.

“நான்கு ஆண்டுகளாக நாங்கள் காதலிக்கிறோம்,” என்று தனது பார்ட்னர் குறித்து சொல்கிறார் பியூட்டி. “குடும்பத்தின் அழுத்தம் காரணமாக அவர் அண்மையில் திருமணம் செய்துகொண்டார். எனது அனுமதியுடன் தான் அவர் அப்படி செய்தார். நான் ஒப்புக் கொண்டேன். நான் ஏன் செய்து கொள்ளவில்லை? நான் திருமணம் செய்து கொள்ளக் கூடிய பெண் கிடையாது. என்னை திருமணம் செய்துகொள்வதாக அவரும் ஒருபோதும் சொன்னதில்லை. என் குழந்தை நன்றாக வாழும் வரை இதுவே எனக்கு போதும்.”

“மூன்று மாதங்களுக்கு ஒருமுறை நான் பரிசோதனைகள் செய்து கொள்கிறேன். அரசு மருத்துவமனைகளை தவிர்த்து தனியார் மையங்களுக்கு செல்கிறேன். இரண்டாவது முறையாக கர்ப்பமடைந்தவுடன் தேவையான பரிசோதனைகளை (ஹெச்ஐவி உள்ளிட்ட) செய்து கொண்டேன். எல்லாம் நன்றாகவே உள்ளது. அரசு மருத்துவமனைகளில் அவர்கள் எங்களை வேறு மாதிரி நடத்துவார்கள். அவர்கள் எங்களை கேவலமாக பேசுவதோடு, கீழ்த்தரமாக நடத்துவார்கள்,” என்கிறார் பியூட்டி.


ஒருவரிடம் பேசுவதற்காக ராகுல் கதவருகே செல்கிறான். “மாத வாடகை செலுத்துவதற்கு வீட்டு உரிமையாளரிடம் ஒரு வார காலம் அவகாசம் கேட்டேன். அவர் வாடகை கேட்கிறார்,” என அவன் விளக்குகிறான். “அவரது இடத்தை 15,000 ரூபாய் வாடகைக்கு எடுத்தோம்.” சதுர்புஜ் ஸ்தானில் உள்ள வீடுகள் பெரும்பாலும் பழைய, வயதான பெண் பாலியல் தொழிலாளர்களுக்கு சொந்தமானவை.

பழைய தலைமுறையிடமிருந்து இளம்பெண்கள் இங்கு முஜ்ரா நடனத்தைக் கற்கின்றனர்.
உள்ளிருக்கும் சிறிய அறை படுக்கை அறை.

பெரும்பாலானோர் அதிக காலம் இத்தொழிலில் நீடிப்பதில்லை. அவர்கள் தங்கள் இடத்தை தரகர்கள், இளம் பாலியல் தொழிலாளர்களுக்கு வாடகைக்கு விடுகின்றனர். சில சமயம் அவர்களின் குழுவிற்கு வாடகைக்குத் தருகின்றனர். தரை தளத்தை வாடகைக்கு விட்டுவிட்டு முதல் அல்லது இரண்டாவது தளத்தில் வசிக்கின்றனர். “சிலர் தங்களின் மகள், உறவுக்காரப் பெண்கள் அல்லது பேத்திகள் என அடுத்த தலைமுறைக்கு தொழிலை கடத்திவிட்டு வீட்டில் இருந்து கொள்கின்றனர்,” என்கிறான் ராகுல்.

NNSW கூற்றுபடி, பாலியல் தொழிலாளர்களில் குறிப்பிடத்தக்க விகிதாச்சாரத்தில் (ஆண், பெண், திருநபர்கள்) வீட்டிலிருந்து வேலை செய்கின்றனர். கைப்பேசி வழியாக, தனிப்பட்ட முறையில் அல்லது தரகர் வழியாக வாடிக்கையாளர்களுக்கு ஏற்பாடு செய்கின்றனர். சதுர்புஜ் ஸ்தானில் பலரும் வீட்டிலிருந்தபடி வேலை செய்யும் பிரிவை சேர்ந்தவர்கள்.

இங்குள்ள அனைத்து வீடுகளும் ஒரே மாதிரியானவை. வாசலில் இரும்பு கம்பிகள் போடப்பட்டு மரப்பலகையில் பெயர் எழுதப்பட்டுள்ளது. அந்த வீட்டின் உரிமையாளர் அல்லது முக்கிய பெண்ணின் பெயர் இதில் இடம்பெறுகிறது. பெயருக்குப் பின்னால் நர்த்தகி ஏவாம் கயிகா (நடனமங்கை மற்றும பாடகி) அவர்களின் தொழிலும் இடம்பெறுகிறது. அதற்கு கீழ் அவர்களின் நிகழ்ச்சி நேரம் – பொதுவாக காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை. சில பலகைகளில் காலை 11 மணி முதல் இரவு 11 மணி வரை என எழுதப்பட்டுள்ளன. சில மட்டுமே ‘இரவு 11 மணி வரை’ என்று சொல்கின்றன.

ஒரே மாதிரியான பெரும்பாலான வீடுகளில் ஒரு தளத்தில் 2-3 அறைகள் இருக்கும். பியூட்டியின் இடத்தைப் போன்றே மற்றவர்களின் பணியிடத்திலும் பெரிய விரிப்புகள் பெரும்பாலான இடத்தை ஆக்கிரமித்து இருக்கும். பின் சுவரில் பெரிய கண்ணாடி இருக்கும். அறையின் சிறிய பகுதி நடனம், இசைக்கு என முஜ்ராவிற்கு ஒதுக்கப்பட்டு இருக்கிறது. பழைய தலைமுறையின் தொழில் வல்லுநர்களிடம் இளம்பெண்கள் இங்கு முஜ்ரா கற்கின்றனர். சிலர் அறிவுறுத்தல்களை கவனித்தபடி இருக்கின்றனர். 10க்கு 12 அடி சிறிய அறை படுக்கைக்கு பயன்படுத்தப்படுகிறது. சிறிய சமையலறையும் உள்ளது.

“ஒரு முஜ்ரா நிகழ்ச்சிக்கு 80,000 ரூபாய் வரை கட்டணம் செலுத்தும் வயதான வாடிக்கையாளர்களும் உண்டு,” என்கிறான் ராகுல். “கொடுக்கப்படும் பணத்தை மூன்று உஸ்தாத்கள் [வித்வான்கள்] பிரித்துக் கொள்கின்றனர். எங்களிடம் தபேலா, சாரங்கி, ஹார்மோனியம் – நடன மங்கை மற்றும் தரகர் இருக்கின்றனர்.” ஆனால் பெரிய தொகை கிடைப்பதெல்லாம் அரிதாகிவிட்டது. இப்போது அவை ஒரு நினைவாகவே உள்ளன.

சதுர்புஜ் ஸ்தான் விபச்சார விடுதியின் வாசல்

இதுபோன்ற கடினமான காலத்தில் பியூட்டியால் போதிய அளவு சம்பாதிக்க முடிகிறதா? ‘சில அதிர்ஷ்ட நாட்களில் முடியும். ஆனால் பெரும்பாலும் இல்லை. எங்களின் பெரும்பாலான வாடிக்கையாளர்களே இச்சமயம் வருவதை தவிர்க்கின்றனர். வருபவர்களும் குறைவாகவே பணம் தருகின்றனர்’

இந்த கடின காலங்களில் பியூட்டி போதிய அளவு சம்பாதிக்கிறாரா?

“அதிர்ஷ்டமான நாட்களில் கிடைக்கும். பெரும்பாலும் அப்படி இருப்பதில்லை. கடந்தாண்டு எங்களுக்கு மிகவும் மோசமானது,” என்றார் அவர். “எங்களின் பெரும்பாலான வாடிக்கையாளர்களே இச்சமயம் வருவதை தவிர்க்கின்றனர். வருபவர்களும் குறைவாகவே பணம் தருகின்றனர். யார் வந்தாலும் எவ்வளவு கொடுத்தாலும், கோவிட் தொற்று காலத்திலும் ஆபத்தை பொருட்படுத்தாமல் ஏற்க வேண்டி உள்ளது. எங்களுக்கு வேறு வழியில்லை. புரிந்துகொள்ளுங்கள்: இக்கூட்டமான விபச்சார விடுதியில் ஒருவருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டாலும், ஒவ்வொருவரின் உயிருக்கும் ஆபத்து ஏற்பட்டுவிடும்.”

இந்தியாவில் கரோனா வைரசின் இரண்டாவது அலை தாக்குவதற்கு முன் மாதம் ரூ. 25,000 முதல் 30,000 வரை பியூட்டி சம்பாதித்து வந்துள்ளார். இப்போது வெறும் 5,000 தான் கிடைக்கிறது. இரண்டாவது அலையை ஒட்டிய பொதுமுடக்கம் என்பது இங்கு பியூட்டி போன்ற பாலியல் தொழிலாளர்களின் வாழ்க்கையை மிகவும் கடினமாக்கியுள்ளது. வைரஸ் தொற்று அச்சமும் அதிகமாகவே உள்ளது.


கடந்தாண்டு மார்ச் மாதம் மத்திய அரசு அறிவித்த பிரதான் மந்திரி கரிப் கல்யாண் யோஜனா திட்டத்தின் பலன்களை சதுர்புஜ் ஸ்தான் பெண்கள் பெற முடியவில்லை. இத்திட்டத்தின் கீழ் 20 கோடி ஏழை பெண்களுக்கு மூன்று மாதங்களுக்கு ரூ.500 வழங்கப்பட்டது. ஆனால் இதற்கு ஜன் தன் கணக்கு வைத்திருக்க வேண்டும். விபச்சார விடுதியில் உள்ள எந்த பெண்ணிடமும் ஜன் தன் கணக்கு இல்லை. பியூட்டி கேட்கிறார் அப்படி இருந்தாலும்: “500 ரூபாய் வைத்துக் கொண்டு நாங்கள் என்ன செய்வது மேடம்?”

பாலியல் தொழிலாளர்கள் வாக்காளர் அட்டை, ஆதார் அட்டை, ரேஷன் அட்டைகள் அல்லது சாதிச் சான்றிதழ்கள் போன்ற அடையாள ஆவணங்களைப் பெறுவதற்கு அன்றாட வாழ்வில் பல இன்னல்களை சந்திப்பதாக NNSW குறிப்பிடுகிறது தனியாக குழந்தைகளுடன் வசிக்கும் பல பெண்களால் தங்களின் வசிப்பிடத்திற்கான ஆதாரத்தை அளிக்க முடிவதில்லை. சாதிச் சான்றிதழ்கள் பெறுவதற்கு தேவையான ஆவணங்களைக் கூட காட்ட முடிவதில்லை. மாநில அரசுகளின் ரேஷன் நிவாரண தொகுப்புகள்கூட அவர்களுக்கு அவ்வப்போது மறுக்கப்படுகிறது.

ஞாயிறு காலை வாடிக்கையாளர்களுக்காக காத்திருக்கிறார் பியூட்டி. அவர் மூன்று மாத கர்ப்பமாக இருந்தும் வேலை செய்கிறார்

“தலைநகரான டெல்லியில்கூட அரசிடம் இருந்து எவ்வித உதவியும் கிடைக்காத போது, நாட்டின் கிராமப்புற பகுதிகளில் கொள்கைகளும், பலன்களும் எவ்வகையிலும் ஒருபோதும் சென்றடைவதில்லை,” என்கிறார் டெல்லியை அடிப்படையாக கொண்ட அனைத்து இந்திய பாலியல் தொழிலாளர்கள் குழுமத்தின் தலைவர் குசும். “இப்பெருந்தொற்று காலத்தில் வாழ்வதற்காக பல பாலியல் தொழிலாளர்கள் கடன் வாங்கிக் கொண்டே இருக்கின்றனர்.”

பியூட்டி ஹார்மோனிய பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.“ இளம் வயது வாடிக்கையாளர்கள் முஜ்ராவை ரசிப்பதில்லை. வந்தவுடன் நேராக படுக்கையறைக்குச் செல்லவே விரும்புகின்றனர். சிறிது நேரமாவது [30 முதல் 60 நிமிடங்கள் வரை பொதுவாக நடக்கும்] நடனத்தை பார்க்க வேண்டியது கட்டாயம் என நாங்கள் சொல்கிறோம். இல்லாவிட்டால் வீட்டு வாடகைக்கும், எங்கள் குழுவிற்கும் பணத்திற்கு எங்கு போவது? இதுபோன்ற சிறுவர்களிடம் நாங்கள் குறைந்தது 1,000 வாங்கிவிடுவோம்.” பாலுறவுக்கான கட்டணம் என்பது தனி, என அவர் விளக்குகிறார். “மணி கணக்கிற்கு ஏற்ப வசூலிக்கப்படுகிறது. வாடிக்கையாளருக்கு ஏற்ப இது மாறுபடும்.”

இப்போது காலை 11.40 மணி. பியூட்டி ஹார்மோனியத்தை வைத்துவிட்டு தனது கைப்பையில் கொண்டு வந்த ஆலூ பரோட்டா உணவுப் பொட்டலத்தை பிரிக்கிறார். “நான் என் மருந்துகளையும் [மல்டிவைட்டமின்கள் மற்றும் ஃபாலிக் அசிட்] சாப்பிட வேண்டும், என்பதால் இப்போதே காலை உணவை சாப்பிடுகிறேன்,” என்கிறார் அவர். “நான் வேலைக்கு வரும்போதெல்லாம் அம்மாதான் உணவு சமைத்து பொட்டலமாக கட்டி கொடுப்பார்.”

“இன்று மாலை ஒரு வாடிக்கையாளரை நான் எதிர்பார்க்கிறேன்,” என்கிறார் மூன்று மாத கர்ப்பிணியான பியூட்டி. “ஞாயிறு மாலை நேரங்களில் வசதியான வாடிக்கையாளர்களை பெறுவது எளிதல்ல. போட்டி கடினமாக இருக்கும்.”

இந்தியாவின் கிராமப்புற பருவப் பெண்கள், இளம் பெண்கள் குறித்த செய்தி சேகரிக்கும் திட்டத்தை பாரி மற்றும் கவுன்டர் மீடியா டிரஸ்ட் தேசிய அளவில் இந்திய மக்கள்தொகை அறக்கட்டளையின் அங்கமாக செய்து வருகிறது. பின்தங்கிய பிரிவினர், எளிய மக்களின் சூழல், வாழ்க்கை அனுபவத்தை அவர்களின் குரல் வழியாக வெளிக் கொணர்கிறது.

ஜிக்யாசா மிஷ்ரா தாகூர் குடும்ப அறக்கட்டளையின் நிதியுதவியில் சுதந்திர ஊடகவியலாளராக பொது சுகாதாரம், மக்களின் பொது சுதந்திரம் குறித்த செய்திகளை அளிக்கிறார். இந்த செய்தியறிக்கையின் உள்ளடக்கத்தில் தாகூர் குடும்ப அறக்கட்டளை எந்த கட்டுப்பாட்டையும் விதிக்கவில்லை.

பாரி ஆன்லைனின் முந்தையக் கட்டுரையை இங்கு வாசிக்கலாம்: