இந்த சமூகம் ஏன் இப்படி இருக்கு…?
சிலர், பசங்களும் சரி, பெரியவர்களும் சரி, நான் சிறியவளாக இருந்தபோது என்னோடு நன்றாகப் பேசினார்கள். நான் வளர வளர, காரணமே இல்லாமல், என்னோடு பேசுவதில்லை.
நாங்கள் வழக்கமாக மளிகை வாங்கும் கடையில், 5th std– ல் நானே வீட்டில் இருந்து நடந்து சென்று, பொருட்களை வாங்கப் பழகினேன். சில்லரை கணக்குப் போட்டு வாங்கப் பழகினேன். அப்போதெல்லாம் கடைகளில் இருப்பவர்கள் கண்ணைப் பார்த்துதான் பேசுவார்கள்; எல்லாரும் தள்ளித்தான் நிற்பார்கள். இடிக்க மாட்டார்கள்.
நான் வளர வளர ஒன்றை கவனித்தேன், அங்கு வேலை செய்பவர்கள் கண்ணைப் பார்த்துப் பேசுவதில்லை. நெருக்கியடித்து வந்து நிற்கிறார்கள்.
பிருந்தா பிறந்த நாளுக்கு முதல் நாள் நவம்பரில் இரவில், ஒரு பிஸ்கெட் வாங்கப் போனேன். அந்தக் கடைக்கு அப்போதுதான் முதல் முறை போகிறேன். அங்கு இருந்த எல்லோருமே ஆண்கள். ஒரு பெண் கூட இல்லை. தனியாக ஒரு பெண் வந்தால், அவளை சரியாகவே கவனிப்பதில்லை. எனக்கு கோவம் கோவமாக வந்தது. ஏன் பெண்கள் அதிகம் வெளியே வரக்கூடாது? பெண்களாக இந்த உலகம் நிரம்பக் கூடாது??
ஃ

சமீபமாக ‘பாம்பே பேகம்ஸ்’ ( Bombay Begums) வெப் சீரிஸ் பார்த்தேன். அதில், ஷாய் (teen age girl) ஒரு பையனை விரும்புவாள். ஆனால், அந்தப் பையன் அவளை விரும்பமாட்டான். அதற்கு அவள், ” நீ என்னை விரும்பித்தான் ஆகணும்; இல்லாட்டிஆசிட் ஊத்துவேன்”, என்று சொல்லவில்லை. அவள் நிறைய வரைவாள். அதில் அவளது கவனத்தை செலுத்த ஆரம்பிப்பாள்.
ஷாய் அந்தப் பையனுக்காக அழும்போது, அவள் அந்தப் பையனுக்காக ப்ரபோஸ் பண்ண வைத்திருந்த தனது ஆர்ட் நோட்டைக் கிழித்துவிடுவாள். அப்ப அவளுடைய StepMother வந்து சொல்வார்கள், “He doesn’t deserve you”, என்று. ஏன் ஆண்களுக்கு, டீனேஜ் பையன்களுக்கு தனது பிரச்சினையை பாசிட்டிவ்வாக பார்க்கத் தெரியவில்லை?
ஃ
கடைகளில் காலையில் போனால் பார்க்கிற பார்வை, அப்புறம் இரவு நேரங்களில் பார்க்கிற பார்வை, தனியாக இருந்தால் பார்க்கிற பார்வை, கூட்டமாக இருந்தால் பார்க்கிற பார்வை…
முதல்ல எல்லாம் அடுத்தவங்க பார்க்குறதை நான் பார்க்க மாட்டேன்; ஆனா, அதுக்குனு அடுத்தவங்க பார்க்கிற பார்வையை எவ்வளவு நாள்தான் பொறுத்துப் போறது?!
Malls, Theatres, Shops, lift… எல்லா இடங்களிலுமே public manners-ஏ இல்லாமல், நடந்துகொள்கிறார்கள்.
ஆண்கள் எப்போதும் TeenAgeல இருக்கிற மாதிரியே இருக்கிறார்கள்; வளர்வதே கிடையாது.
PSBB விசயம் பற்றி செய்திதாள்களில் இன்று வாசித்தபோது ஒன்று தோன்றியது… பெரியவர்கள், ‘அவ குழந்தைதானே, அவளுக்கு என்ன தெரியும்?’ அப்படிங்கிறாங்க. ஆனால், எவ்வளவு பெரிய விசயத்தை குழந்தைகள் மேல செய்றாங்க…
ஃ
வெளியே செல்லும்போது, பிருந்தா, ‘யார்கிட்டயாவது அவங்க பார்வையோ, இல்ல தொடுகையோ Uncomfortஆ இருந்தா சொல்லுங்க’ என்று எப்பவும் கேட்பார். தனியாக எப்ப வெளியே போகும்போதும், ” யாராவது மோசமாகப் பார்த்தாலோ, misbehave பண்ணினாலோ, அந்த இடமே அதிரும்படியாக, ‘ஏன் அங்க்கிள் அப்படிப் பார்க்குறீங்க. என்ன பிரச்சினை உங்களுக்கு?’”, என்று சத்தமாக கேட்கச் சொல்லி பிருந்தா சொல்லி அனுப்புவார்.
இதுவரை அந்த ஆயுதத்தை நான் பயன்படுத்தியதே இல்லை. ஏன் என்றால், அடுத்தவர்கள் என்ன நினைப்பார்களோ, எல்லாரும் என்னையே பார்ப்பார்களோ என்று எண்ணி, செய்ய மாட்டேன். ஏன்தான் டீனேஜ் வந்ததோ என்று எனக்குத் தோன்றுகிறது.

PSBBல் அந்த பொண்ணு, அவளுடைய friend கிட்ட தனக்கு ஆசிரியர் தந்த பாலியல் தொந்தரவை சொல்லப்போக, அவ friend மற்ற friendsகிட்ட விசாரிச்சு, Instagramமில் போடறா. Instagramமில் போட்டதால் எல்லாருக்கும் தெரிய வருகிறது. அதனால் மற்ற ஒவ்வொரு பள்ளியாக பெண்கள் OpenUp ஆவறாங்க. கல்வி அமைச்சர், ஒவ்வொரு பள்ளியிலும் பாலியல் புகார்களை விசாரிக்க தனிக்குழு அமைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
ஒரு குரல், முழக்கம் ஆகிறது. மகிழ்ச்சி.
கட்டுரையாளரின் பிற படைப்பு:
படைப்பு:

ரித்திகா
ரித்திகா (18.06.2005) வயது பதினாறு, ‘சாவித்ரிபாய் ஃபுலே பெண்கள் பயணக்குழு’ உறுப்பினர். ரித்திகா தனது ஒன்பதாவது வயதில் கராத்தே (இஷின்ட்ரியு ஸ்டைல்) ப்ளாக் பெல்ட் மற்றும் பதின்மூன்றாவது வயதில் ‘டேக்வொண்டோ’வில் ப்ளாக் பெல்ட் பெற்றுள்ளார். ட்ரம்ஸ் வாசிப்பதில் –லண்டன் ட்ரினிட்டி காலேஜ் நடத்தும் தேர்வில், ஐந்தாம் நிலையில் உள்ளார். பள்ளியில் 10ஆம் வகுப்பு முடித்துள்ளார்.