பண்டைய விளையாட்டுகள் – 3

கிச்சுக் கிச்சுத் தாம்பாளம் 

ஒருவர் மறைத்துவைக்க, மற்றவர் அதைக் கண்டு பிடிக்கும் விளையாட்டே கிச்சுக் கிச்சு தாம்பாளம்.

ஒன்று – ஒன்றரை அடி நீளமுள்ள சீரான சிறு மணல் திட்டு தான் ஆடுகளம். அதனுள், ஏதாவது சிறு பொருள் அல்லது மெல்லிய குச்சியை ஒருவர் மறைத்து வைப்பார். மற்றவர் கண்டுபிடிப்பார்.  மறைத்து வைக்கும் போது, கிச்சுக் கிச்சுத் தாம்பாளம் கிய்யாக் கிய்யாத் தாம்பாளம் என பாடிக் கொண்டே, மணலை முன்னும் பின்னுமாக இழுத்து உள்ளே மறைத்து வைக்க வேண்டும். 

போட்டியாளர், எந்த இடத்தில் பொருள் இருக்கிறது என்று நினைக்கிறாரோ, அந்த இடத்தில், தன் இரண்டு கைகளையும் இணைத்து, பொத்த (மூட) வேண்டும். பொத்திய இடத்தில் குச்சி அகப்பட்டால், எடுத்தவர் வென்றார். இல்லையெனில் மறைத்தவர் வென்றார்.

வென்றவர் அடுத்து  மறைத்து வைப்பார். 

இப்படியாக பத்து தடவை தொடர்ச்சியாக வென்றவர், தோற்றவரின் உள்ளங்கைகளில் மணலை அள்ளி வைத்து, நடுவிலே அந்த சிறு குச்சியை குத்தி வைப்பார். பின்னர், அவரின் கண்களைப் பொத்தி, சிறிது தூரத்தில் ஒரு இடத்தில் அம்மணலை வைக்கச் சொல்வார். மணல் வைத்த இடம் தெரியாமல் இருக்க, சுற்றி விடுவர்.

கண் திறந்தவர், அம்மணலைத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும். 

———————-

மாக்கொழுக்கட்டை 

மாக்கொழுக்கட்டை மஞ்ச கொழுக்கட்டை மாமியார் தந்த பிடிகொழுக்கட்டை என பாடல் பாடிக்கொண்டே போட்டியாளரும் உள்ளங்கைக்குள் ஒவ்வொரு வார்த்தைக்கும் தனது கையை விட்டு எடுக்க வேண்டும். கடைசியாக பிடிகொழுக்கட்டை என்ற வார்த்தையை சொல்லும் போது உள்ளங்கைகளை மூடி பாடுபவரின் கையைப் பிடித்துக் கொள்ள வேண்டும். 

பிஸ்கட் பிஸ்கட்

இது இருவர் ஒருவர் மாறி ஒருவர் ஒவ்வொரு வார்த்தையாக ஒருவர் கையை மற்றவர் தட்டிக் கொண்டே பாட வேண்டும்.

பிஸ்கட் பிஸ்கட்

என்ன பிஸ்கட்

ஜாம் பிஸ்கட்

என்ன ஜாம் 

ராஜம் 

என்ன ரா 

கோரா 

என்ன கோ 

மாகோ 

என்ன மா 

செல்லம்மா 

என்ன செல்லம் 

வெத்திலை செல்லம் 

என்ன வெத்திலை 

போடு வெத்திலை 

என்ன போடு 

செவிட்டில போடு. என சொல்லும் போது போட்டியாளரை அடிக்க வேண்டும். அடிபடாமல், அவர் தப்பிக்க வேண்டும்.

———————

வளையல்/ குச்சி விளையாட்டு 

இரண்டு அடி விட்டத்தில் ஒரு பெரிய வட்டம் போடுவோம். அதனுள் உடைந்த கண்ணாடி வளையல் துண்டுகளைப் பரவலாக வீச வேண்டும். பின், வேறு ஒரு வளையல் துண்டு மீது கை படாமல் சோடி சோடியாக வளையல் துண்டுகளை எடுக்க வேண்டும். ஏதாவது ஒரு வளையல் அலுங்கினாலும் ஆட்டம் கைமாறும்.

இதே போல குச்சி விளையாட்டும் விளையாடுவோம். குச்சிகள் ஏறக்குறைய நான்கு அங்குல அளவுக்கு இருக்கும். குச்சிகளின் நீளத்திற்குத்  தகுந்தவாறு வட்டம் பெரிதாக இருக்கும். ஏதாவது ஒரு குச்சி அலுங்கினால் ஆட்டம் கைமாறும்.

———————–

கயிறு குதித்தல் 

இது இன்றும் பரவலாக உடற்பயிற்சியாக செய்யப் படுகிறது. அதிக நேரம் யார் குதிக்கிறார்கள், அதிக தூரம் யார் கயிறு குதித்துக் கொண்டே ஓடுவார் என போட்டி நடக்கும்.

————————-

காதில் சொல்லி விளையாட்டு 

அனைவரும் வட்டமாக அமர்ந்து கொள்ள வேண்டும். இது நடத்தி வைக்க ஒருவர் இருப்பார். அவர் தனக்கு அடுத்து இருப்பவர் காதில் ஏதாவது ஒரு வார்த்தையை, சொற்றோடொரை சொல்லுவார். அவர், அவருக்கு அடுத்து இருப்பவர் காதில் சொல்லுவார். இவ்வாறு வரிசையாக சொல்ல வேண்டும். கடைசியில் இருப்பவர் அவரது காதில் சொல்லப்பட்ட சொல்லை சொல்ல வேண்டும். அது சரியானதாக இருந்தால், மீண்டும் அடுத்து விளையாட வேண்டும். அவர் தவறாக சொன்னால், அவருக்கு முன்னால் இருப்பவர், அவர் காதில் சொல்லப்பட்ட வார்த்தையை  உரக்க சொல்வார். இவ்வாறு தவறு யாரிடமிருந்து வந்திருக்கிறது என கண்டுபிடித்து, அவர் நீக்கப் படுவார். வணங்காமுடி என சொல்லி விட்டு, பனங்கா மூடி என வந்ததுண்டு. தப்பும் தவறுமாக வரும் அந்த வார்த்தைகள் அவ்வளவு நகைச்சுவையாக இருக்கும்.

——————–

மலையிலே தீப்பிடிக்குது பிள்ளைகளே ஓடுங்கள் 

இது நடத்தி வைக்க ஒருவர் இருப்பார். அவர் மலையிலே தீப்பிடிக்குது பிள்ளைகளே ஓடுங்கள் என்று சொல்லிக் கொண்டே இருப்பார்.  விளையாடுபவர்கள் வட்டமாக ஓடுவர். நடுவர் ஏதாவது ஓர் எண்ணைச் சொன்னதும் அத்தனை அத்தனையாக நிற்க வேண்டும். மற்றவர்கள்  வெளியேற வேண்டும். கடைசி வரை நிற்பவர் வென்றவர்.

———————-

பெயர் சொல்லி விளையாட்டு 

இது நடத்தி வைக்க ஒருவர் இருப்பார். அவர் மற்ற அனைவருக்கும் ஏதாவது பெயர்கள் வைப்பார். அவர் ஆளுக்கொரு மரம் பெயர், ஊர் பெயர், தலைவர் பெயர் என ஏதாவது பெயர் வைப்பார். பின் அந்த பெயரை சொல்லிக் கூப்பிடும் போது குறிப்பிட்ட நபர் ஆஜர் சொல்ல வேண்டும். அவர் தவறினாலோ, வேறு பெயரை அழைக்கும் போது தவறுதலாக ஆஜர் சொல்லி விட்டாலோ, ஆட்டத்திலிருந்து வெளியேற்றப் படுவார்.   

———————

சட்டி பானை 

இது நடத்தி வைக்க இருவர் இருப்பர். மற்றவர்கள் தரையில், சம்மணம் போட்டு அமர வேண்டும். அப்போது அவர்கள் இடது காலின் பெருவிரலை வலது கையாலும், வலது காலின் பெருவிரலை இடது கையாலும், கெட்டியாக பிடித்துக் கொள்ள வேண்டும். அப்போது கை வளையம் ஒன்று கிடைக்கும். விளையாட்டை நடத்தி வைப்பவர்கள் தரையில் இருப்பவர்களை அந்த கை வளையத்தினுள் ஆளுக்கொரு கையாக பிடித்து குறிப்பிட்ட தூரத்தில் கொண்டு வைப்பார். இடையில் போகும் போது கையை விட்டு விட்டால், அந்த பானை உடைந்து விட்டது என ஆட்டத்தை விட்டு வெளியேற சொல்லி விடுவார்கள்.

————————

ஒரு குடம் தண்ணி ஊத்தி 

இது நடத்தி வைக்க இருவர் இருப்பர். அவர்கள் கைகளை உயர்த்திப் பாதை அமைப்பர். விளையாடுபவர்கள் பாதை வழியே சங்கிலி போல் பின் தொடர்ந்து செல்ல வேண்டும். 

நடுவர்கள், 

ஒருகுடம் தண்ணி ஊத்தி ஒருபூ பூத்தது 

இரண்டு குடம் தண்ணி ஊத்தி …..

என பாடுவர் 

பத்துக்குடம் தண்ணி ஊத்திப் பத்துப் பூ பூத்தது.

என பாடும்போது இடையில் வருவோரைப் பிடித்துக்கொள்வர்

பிறகு பேரம் பேசுதல் நிகழும்.

….. தாரேன் தாரேன் விடுடா 

விடமாட்டேன்.

ராசா மகளை கட்டித்தாறேன் விடுடா

விடமாட்டேன்.

என நீளும். இறுதியில், ஆட / பாட என ஏதாவது சொல்லி; செய்து பேரம் முடியும்.

———————————–

திரியே திரி 

இது நடத்தி வைக்க ஒருவர் இருப்பார். தெருவில், இருக்கும் மணலை சிறு மலை போல குவித்து வைத்து அதன் நடுவில் ஏதாவது ஒரு பொருளை மறைத்து வைப்பார். பின் இரு கைகளாலும், 

‘திரியே கம்பந்திரி கண்டெடுத்தவன் கொண்டோடு’ என பாடிக்கொண்டே எதிரில் இருப்பவர்களுக்கு முன் போட்டுக் கொண்டே இருக்க வேண்டும். யார் முன்னால் விழும் மணலில் அந்த பொருள் இருக்கிறதோ அவர், ஏற்கனவே நிர்ணயம் செய்த இடத்தை ஓடிப்போய் தொட வேண்டும். அவர் அந்த இடத்தைத் தொடுமுன், அவரை மற்றவர் யாராவது  தொட்டு விட்டால், அவருக்குப் புள்ளி. இல்லையென்றால், திரி கிடைத்தவருக்குப் புள்ளி.

——————————–

பூப்பறிக்க வருகிறோம் 

பூப்பறிக்க வருகிறோம் இரு குழுக்களாக விளையாடும் விளையாட்டு. இரண்டு அணிகளும் எதிர் எதிர் பக்கம் கை கோர்த்து நிற்க வேண்டும். நடுவில் ஒரு கோடு போடவேண்டும். ஒரு அணி 

பூப்பறிக்க வருகிறோம் வருகிறோம் இந்த மாதத்தில்’

என பாடியபடி நடுக்கோடு வரை வந்து திரும்ப வேண்டும்.

அடுத்த அணி 

‘எந்த பூவைப் பறிக்கிறீர் இந்த மாதத்தில்?

என பாடியபடி நடுக்கோடு வரை வந்து திரும்ப வேண்டும்.

முதல் அணி எதிர் அணியில் இருந்து யார் பெயரையாவது குறிப்பிட்டு 

——- பூவைப் பறிக்கிறோம் இந்த மாதத்தில்’

அடுத்த அணி 

யாரை அனுப்பப் போகிறீர் இந்த மாதத்தில்?’

அடுத்த அணி

———அனுப்பப் போகிறோம் இந்த மாதத்தில் 

பெயர் குறிப்பிடப் பட்ட இருவரும் நடுக்கோட்டுக்கு அருகில் வந்து இழுக்க வேண்டும். நடுக்கோட்டைத் தாண்டி விடுபவர் இழுக்கப்பட்ட அணியில் இணைவார். 

——————-

பன்னி (பன்றி) பன்னி முத்தம் குறி (குறியீடு) 

இது இருட்டில் விளையாடப்படும். இரண்டு அணியினர் இருப்பர். ஒரு அணியில் ஒருவர் தவிர அனைவரும் ஒளிந்து கொள்ள வேண்டும். அவர் உடல் முழுவதும் மிகப்பெரிய துணியால் மூடிக்கொண்டு இருப்பார். எதிரணியினர் வந்து ‘பன்னி (பன்றி) பன்னி முத்தம் குறி’ என்று சொன்னதும், உள்ளே இருப்பவர் ஏதாவது குரல் கொடுப்பார். அந்த ஒலியைக் கேட்டு எதிர் அணியினர், உள்ளே இருப்பவர் யார் என்று சொல்ல வேண்டும். சரியாக சொல்லி விட்டால் எதிர் அணியினருக்கு வாய்ப்பு கொடுக்கப் படும். 

——————–

அட்டலங்காய் புட்டலங்காய்

இந்த விளையாட்டில், ஒருவர் ஒளிந்து கொள்ள வேண்டும். மற்றவர்கள் காலை நீட்டி உட்கார வேண்டும். அவர்களுக்குள் பேசி வைத்துக் கொண்டு யாராவது ஒருவரின் கால்களுக்குக் கீழே ஒரு சிறு பொருளை வைத்து விட்டு, ஒளிந்து கொண்டிருப்பவரைக் கூப்பிட வேண்டும். அவர் 

அட்டலங்காய் புட்டலங்காய் அரிசி பொறிவெளங்காய் 

தேங்காயை துருவி தெருவிலே போட்டு 

மாங்காய துருவி மடியிலே போட்டு

பச்ச நெல்ல குத்தி பானையில வச்சு 

அத்தனையும் தின்ன பூச்ச (பூனை) எந்தப் பூச்ச?

என்று பாடி, கால்களைத் தூக்கி பொருளை எடுத்து விட்டால், அவர் வெற்றி பெற்றவர்.  

பெரும்பாலும் வெற்றியே கிடைக்கும். ‘ஒளியத் தெரியாதவன் தலையாரி வீட்டில் ஒளிந்து போல’ என சொல்வது போல, குழந்தைகள் தங்களைத் தாங்களே காட்டிக் கொடுத்து விடுவார்கள்.

——————-

குலைகுலையா முந்திரிக்கா

படம் நன்றி: தமிழக நாட்டுப்புற விளையாட்டு மேம்பாட்டுக் கழகம்

எங்கள் பகுதியில் திராட்சைப் பழத்தை முந்திரி பழம் என்பார்கள். இந்த விளையாட்டின் பாடல், நரி, திராட்சைப் பழ குலையை பறித்து சாப்பிட நினைத்து சுற்றுவதாக பாடல் உள்ளது. அதனால் தமிழ்நாட்டின் தென்பகுதியில், தோன்றிய விளையாட்டாக இருக்கலாம்.  

இந்த விளையாட்டில், எல்லோரும் வட்டமாக உட்கார்ந்து கொள்ள வேண்டும். சுற்றி வருபவர் துணி ஒன்றை எடுத்துக் கொண்டு, அந்த வட்டத்தை சுற்றி நடந்தவாறு முதல் அடியை பாட வேண்டும். சுற்றி வருபவர் இரண்டாவது அடியைப் பாடுவார். இவ்வாறு மாறி மாறி பாடவேண்டும். பாடல்;

குலையா குலையா முந்திரிக்காய் 

நரியே நரியே சுத்திவா 

கொள்ளையடிப்பவன் எங்கிருக்கான் 

கூட்டத்திலிருக்கான் கண்டுபிடி

கப்பலடி கப்பல் 

தூத்துக்குடி கப்பல் 

வள்ளியூர் முறுக்கு 

வாயில போட்டு நொறுக்கு 

அம்மா சுட்ட முறுக்கு 

ஓரல்ல போட்டு நொறுக்கு 

அம்மா கடலை 

விடியட்டும் மகளே 

ஓட்டு வீட்டுல ஏறுவேன்

ஈட்டியால குத்துவேன்

பச்சரிசியை தின்பேன்

பல்ல உடைப்பேன்

சோள கொல்லையில் காக்கா 

சூ சூ காக்கா 

இடைப்பட்ட நேரத்தில், சுற்றுபவர், கையில் வைத்திருக்கும் துணியை கீழே உட்கார்ந்திருக்கும் யார் பின்னாடியாவது, அவர்களுக்குத் தெரியாமல் போட்டுவிட வேண்டும். யார் பின்னால் துணி இருக்கிறதோ? அவர் துணியை எடுத்துக் கொண்டு சுற்றியவரை துரத்தி துணியால் தொட வேண்டும். அல்லது சுற்றியவர் ஓடிவந்து, யார் பின்னால் துண்டைப் போட்டாரோ, அவரோட இடத்திலே வந்து உட்கார வேண்டும். இது தான் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கும்.

தொடரும்…

தொடரின் முந்தைய பகுதி:

படைப்பாளர்:

பாரதி திலகர்

தீவிர வாசிப்பாளர், பயணக் காதலர்; தொன்மை மேல் பெரும் ஆர்வம் கொண்டவர். அயல்நாட்டில் வசித்து வந்தாலும் மண்ணின் வாசம் மறவாமல் கட்டுரைகள் எழுதிவருகிறார்.