பண்டைய கால விளையாட்டுகள்-1
விளையாட்டுகள் என எடுத்துக் கொண்டால், சில விளையாட்டுகளை நடத்தி வைக்க ஒருவர் தேவைப்படுவார். சில விளையாட்டுகள், இரு அல்லது பல குழுக்களாகப் பிரிந்து விளையாடப்படும். சில விளையாட்டுக்கள், தனிநபர் திறன் சார்ந்ததாக இருக்கும். சில, ஓரிடத்தில் அமர்ந்து விளையாடுவதாக இருக்கும். சில, ஓடி ஆடி விளையாடுவதாக இருக்கும்.
பெண்கள், இரவு நேரத்தில், பொதுவாக முழு நிலா நாட்களில் விளையாடுவது வழக்கமாக இருந்திருக்கிறது. அவர்கள், கும்மி, கோலாட்டம், ஆடல் பாடல் எல்லாம் நடத்தியிருக்கின்றனர். அதன் நீட்சியான அலேசியார் கும்மி, இன்றும் எங்கள் பக்கத்தில், குறிப்பாக சௌந்தரபாண்டியபுரத்தில் கிறிஸ்துமஸ் நாளுக்கு முந்தைய இரவில் நடத்தப்படுகிறது. திறமைசாலி என சொல்லுவதற்கு, “அலேசியார் கும்மி முழுசாப் பாடுவாள்”, என சிலரைப் பற்றி என் அப்பம்மா சொல்லுவதுண்டு. அப்போதெல்லாம், அது அவ்வளவு சிரமா என நினைத்ததுண்டு. அது 30 பக்க அளவிலான பெரிய பாட்டு என்பது சமீபத்தில் தான் தெரிந்தது.
அலேசியார் கும்மி
எங்கள் தெருவில் 90+ வயது பாட்டி ஒருவர் இருந்தார். அவர், “இலுங்கு இலுங்கடி ……..பாரு பாரடி பரக்கப் பாரடி”, என ஒரு பாடல் பாடிக்கொண்டே ஒரு இடி கொடுப்பார். எங்களில் யாராலும் தாக்குப் பிடித்து நிற்க முடியாது. அனைவரும் வீழ்ந்து விடுவோம். அது ஒருவிதமான வர்மக்கலை.
அவர்கள் இவ்வாறு விளையாடும் போது, பல இரவுகள், செம்புலிங்கம் அந்த வழியே போவார் என அந்த பாட்டி சொல்லியிருக்கிறார். செம்புலிங்கம், எங்கள் பகுதியின் ராபின் ஹூட். ஏழை மக்களுக்கு நண்பனாகவும், காவல் துறைக்கு எதிரியாகவும் இருந்துள்ளார். தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்த அவர் இறுதியில் காவல்துறையினரால் சுடப்பட்டு இறந்தார். செம்புலிங்கம், வேலியை எல்லாம் சுற்றிப் போக மாட்டார்; தாண்டித்தான் போவார் என அந்தப் பாட்டி சொல்லுவார்கள்.
நையாண்டி திரைப்படத்தில், கிணற்றைத் தாண்டி பறவை பிடிக்கின்ற காட்சி வருமே அது போல, செம்புலிங்கம் கோழி பிடித்ததாகவும், அவரைச் சுற்றி நின்றவர்கள், ஆரவாரம் செய்ததாகவும் ஏமி கார்மைக்கேல் அம்மையார் பதிவு செய்துள்ளதாகப் படித்திருக்கிறேன். அந்தக் கிணறு குறித்த யூடியூப் காணொலி காட்சியை இங்கே காணலாம்.
ஏமி கார்மைக்கேல் அம்மையார், டோனாவூரில் சமூகத்தால் புறக்கணிக்கப் பட்டோர், ஆதரவற்றோர் போன்றவர்களுக்குப் புகலிடம் கொடுத்தவர். அவர், செம்புலிங்கம் குழந்தைகளையும் வளர்த்து இருக்கிறார்.
எங்கள் காலத்தில், இரவு நேரத்தில், பெண்கள் விளையாடுவது மிகவும் குறைந்து, ஏதாவது விழா நாட்களில் மட்டும் இவ்வாறு விளையாடுவது என சுருங்கிவிட்டது. மற்ற நாட்களில் சிறுவர்களை வைத்து விளையாட்டு நடத்துவது, அமர்ந்து விளையாடுவது என வாலிபப் பெண்களின் விளையாட்டு சுருங்கி விட்டது. ஆனால் சிறுவர்கள் விளையாடுவர்.
பெண்களுக்கான விளையாட்டு, ஆண்களுக்கான விளையாட்டு என பகுக்கப்பட்டு இருந்தாலும், பொதுவாக சேர்ந்துதான் விளையாடுவோம். வெளிச்சம் தேவையான விளையாட்டுகளை இரவில் விளையாடுவதில்லை. ஏனென்றால், இருக்கும் ஒரு விளக்கை அதற்குப் பயன்படுத்தமுடியாது. அதனால் வெளியில், நிலவொளியில் விளையாடக் கூடிய விளையாட்டுகளையே விளையாடுவோம்.
அந்தக் காலத்தில் பம்பரம், கழச்சி என்னும் கோலிக்காய், பந்து தவிர எதையுமே கடையில் வாங்கி விளையாடமாட்டார்கள். அருகில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டேதான் விளையாடுவார்கள். பந்து வாங்கக்கூட இயலாதவர்கள், சைக்கிளின் வீணாகிப் போன டியூபை எடுத்து வந்து ரப்பர் பேண்டு போல வெட்டி, அவற்றை ஒன்றன் மேல் ஒன்று சுற்றி விளையாடுவார்கள்.
ரப்பர் பேண்டு பந்து
ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு விளையாட்டு நடைபெறும். அந்த மாற்றம் எங்கிருந்து வருகிறது; யாரால் வருகிறது என்பது யாருக்கும் தெரியாது. ஆனால் ஒரே காலகட்டத்தில் அனைத்து தெருக்களிலும் அந்த விளையாட்டு நடக்கும்.
நான் சிறுவயதில் கிரிக்கெட் விளையாடிப் பார்த்ததே இல்லை. 80களில் ஊரில் ஆங்காங்கே ஓரிரு வீடுகளில் தொலைக்காட்சிப் பெட்டிகள் முளைத்தன. அதில் ஒளிபரப்பப்படும் போட்டிகளைப் பார்த்து, ஓரிருவர் பந்து வாங்கினர். மட்டைக்கம்புகளை நல்ல முறையில் செதுக்கி பேட்/ ஸ்டம்ப் என பயன்படுத்தினர். படிப்படியாக கிரிக்கெட் ஆக்கிரமித்து, மற்ற விளையாட்டுகள் அனைத்தையும் புறந்தள்ளியது.
ஆறு பகுதிகளாக ஒவ்வொரு விளையாட்டு குறித்தும் பார்ப்போம்.
பல்லாங்குழி / பாண்டியாட்டம்
இது தனிநபர் திறன் சார்ந்த விளையாட்டு. பல்லாங்குழியில் பொதுவாக ஒரு வரிசைக்கு ஏழு குழிகள் என இரு பக்கமும் பதினான்கு குழிகள் இருக்கும். பதினான்கு குழி மருவி, பன்னாங்குழி / பல்லாங்குழி என மாறியது என்கின்றனர்.
இது ஓரிடத்தில் அமர்ந்து விளையாடுவதாக இருக்கும், பல ஊர்களில் இதன் பெயர் பல்லாங்குழி. எங்கள் பகுதியில் இது பாண்டியாட்டம்தான். அதற்கு சான்றாக, குமரி மாவட்டத்தில் பிறந்த கவிமணி தேசிய விநாயகம் இவ்வாறு பாடியிருக்கிறார். சிறுமி ஒருத்தி, தன் தோழி பங்கஜத்தை விளையாட அழைக்கின்றாள்.
பாங்கி தோழி பங்கஜம்
பாண்டியாட வாராயோ
பாட்டி எனக்குப் பரிசளித்த
பல்லாங்குழியைப் பாரிதோ
மாமா நேற்று வாங்கித் தந்த
மாணிக்கத்தை பாரிதோ
அத்தை தந்த கட்டி முத்தின்
அழகை வந்து பாரிதோ
சேரருக்கு மங்கலங்கள்
செப்பி விளையாடலாம்
சோழருக்குச் சோபனங்கள்
சொல்லி விளையாடலாம்
பாண்டியருக்குப் பல்லாண்டு
பாடி விளையாடலாம்.
உண்ணும் பாண்டியாடலாம்
ஓய்ந்து விட்டால் நிறுத்தலாம்!
கட்டும் பாண்டியாடலாம்
களைத்து விட்டால் நிறுத்தலாம்
எய்யாப் பாண்டியாடலாம்
ஏய்த்து விட்டால் நிறுத்தலாம்
பசும் பாண்டியாடலாம்
பசித்தவுடன் நிறுத்தலாம்
பாங்கி தோழி பங்கஜம்
பாண்டியாட வாராயோ.
நமது பாண்டியாட்டம் மாதிரியே அமெரிக்கக் குழந்தைகள் விளையாடுகிறார்கள். அதற்கு ‘மங்கலா’ என்பது பெயர்.
எங்கள் வீடுகளில் எல்லாம் இவ்வாறு பல்லாங்குழியோ, அதற்கான முத்துக்களோ வாங்கி பயன்படுத்தியதில்லை. வீட்டின் முற்றத்தில், அல்லது பின்பக்கம் நன்கு சாணி மெழுகிய தரையில் அதற்கான குழியை அமைத்துக் கொள்வோம். புளியங்கொட்டைதான் முத்து. அது விளையாடுவதற்கு மிக வசதியாக இருக்கும்.
பல்லாங்குழி விளையாட்டில், பல முறைகள் உண்டு.
சிறியவர்கள், குழிக்கு மூன்று முத்து போட்டு விளையாடுவர். அவரவரின் வலது ஓரத்தில், அவர்கள் தங்களது முத்துக்களை சேமிக்க வேண்டும். அடுத்தவரின் சேமிப்பு குழிக்கு போட வேண்டிய தேவை இல்லை. விளையாடும்போது கடைசியாக போடும் முத்து, தனது சேமிப்பு குழியுடன் நின்று விட்டால், மீண்டும் தனது பகுதியில் இருந்து விளையாட்டைத் தொடங்கலாம். கடைசியாக போடும் குழிக்கு அடுத்த குழியில் எந்த முத்தும் இல்லை என்றால், எதிர்ப் பக்கம் உள்ள குழியின் முத்தை எடுத்துக் கொள்ளலாம். அத்துடன் அவர் ஆட்டம் முடிந்து விடும். பின் அடுத்தவர் ஆட வேண்டும். எவ்வளவுக்கெவ்வளவு அதிக சுற்று ஆடுகிறோமோ அவ்வளவிற்கு நமக்கு முத்து சேரும்.
பெரியவர்கள் பொதுவாக விளையாடும் விளையாட்டு, குழிக்கு பன்னிரண்டு முத்து போட்டு விளையாடும் விளையாட்டு. நடுக்குழியில் மட்டும் முத்து போடக்கூடாது. நடுக்குழியின் பெயர் ‘ராசாக் குழி’. அதில் சேரும் முத்தை எடுத்து விளையாடக் கூடாது. விளையாடும்போது கடைசியாக போடும் முத்து, ராசாக் குழிக்கு முந்தைய குழியுடன் நின்று விட்டால், அத்துடன் அவர் ஆட்டம் முடிந்து விடும்.
ராசாக் குழிக்கு முந்தைய குழுவிற்கு முந்தைய குழியுடன் நின்று, ராசாக் குழிக்கு முந்தைய குழி முத்தில்லாமல் வெறுமையாக இருந்தால், அதற்கு ‘தக்கம்’ என்று பெயர். அத்துடன் அவர் ஆட்டம் முடிந்து விடும். தக்கம் வைத்து விட்டால், விளையாட்டு முடிந்தபின் அந்த குழியின் முத்துக்கள் அவருக்குச் சொந்தம். ஒன்றுக்கும் மேற்பட்டோர் தக்கம் வைத்தால், அவர்கள் அனைவரும் பகிர்ந்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
அதே போல, விளையாடும்போது கடைசியாக முத்து போட்ட குழிக்கு அடுத்த குழியில் முத்து இல்லையென்றால் அதற்கு அடுத்த குழியின் முத்தை, நமக்கு எடுத்துக் கொள்ளலாம். இதற்குத், ‘தடவி எடுத்தல்’ எனப் பெயர். அத்துடன் அவர் ஆட்டம் முடிந்து விடும். பின் அடுத்தவர் ஆட வேண்டும்.
வெற்றுக் குழியில் ஒவ்வொரு சுற்றுக்கும் ஒவ்வொரு முத்தை இட்டுக் கொண்டே வரும்போது, ஆறு முத்துக்கள் சேர்த்ததும், அதனைப் ‘பசு’ என்ற பெயரில் அந்தக் குழிக்குரியவர் எடுத்துக் கொள்வார். அதனை உடனே எடுக்கவில்லை என்றால், போட்டியாளர் பசு முத்தினால் (முற்றினால்) பாண்டி என்பார். அப்படி சொல்லிவிட்டால், அவற்றை உரியவர் எடுக்க முடியாது.
இவ்வாறாக, ஒரு பக்கம் விளையாட முடியாத அளவிற்கு முத்துகள் தீர்ந்து, அடுத்தவர் ஆடும்போது, தனது முத்தை தனது பக்கத்தோடு நிறுத்துமாறு ஆட்டத்தை ஆகிவிட்டால், எதிர் பக்கம் இருப்பவருக்கு முத்து இருக்காது. ஆட முடியாது. அந்த நிலை வரும் வரை இருவரும் தொடர்ந்து விளையாட வேண்டும். அத்துடன் அந்த ஆட்டம் முடிந்து விடும்.
பின் அவரவரிடம் இருக்கும் முத்தின் அளவைக் கணக்கிட்டு அடுத்த ஆட்டத்தைத் தொடங்குவதற்காக குழிகளில் நிரப்ப வேண்டும். தன்னிடம் நிரப்புவதற்குப் போதிய முத்து இல்லையென்றால், முத்து இட முடியாத குழிகளை ஏதாவது அடையாளம் வைத்துத் தற்காலிகமாக மூட வேண்டும். போன முறை யார் இரண்டாவது ஆடினார்களோ அவர்கள், இந்த முறை முதலில் ஆடலாம்.
ஆட்ட இறுதியில் ஒருவர் தோற்றுப் போகிறபோது அவர் கையில் ஒரு குழிக்குரிய பன்னிரண்டு முத்துக்கள் கூட இல்லாமல் இருந்தால் அவர் இருக்கும் முத்துக்களை வைத்து ஒரு குழி மட்டும் திறப்பார்.
போட்டியாளரும் அதே எண்ணிக்கையில் தனது பன்னிரண்டு குழிகளுக்கும் முத்து போட்டால் போதும். இவ்வாறு கடைசி முத்து வரை ஆட்டம் நடைபெறும். இதற்குக் ‘கஞ்சி காய்ச்சுதல்’ என்று பெயராம். நாங்கள் அவ்வாறு சொன்னதில்லை. ஒரு காய் கூட இல்லாமல் தோற்கின்ற போதே ஆட்டம் முழுமை பெறுகிறது. நல்ல சம பலத்துடன் அனைவரும் ஆடினால், ஆட்டம் முடியவே முடியாது. வெற்றி தோல்வி மாறி மாறி வந்துகொண்டே இருக்கும்.
பெரும்பாலும் இருவர் மட்டுமே விளையாடுவோம். சில நேரம் ஆளுக்கு மூன்று குழி, என பிரித்து நால்வர் விளையாடுவதும் உண்டு. ராசாக் குழிக்கு இடப்பக்கம் இருப்பவர்களுக்கு தக்கம் வைக்கும் வாய்ப்பு அதிகம். வலப்பக்கம் இருப்பவர்களுக்கு, தடங்கல் குறைவு. அதனால், ஆடும் வாய்ப்பு அதிகம்.
இதே ஆட்டத்தைக் குழந்தைகள் பன்னிரண்டு முத்திற்குப் பதில் ஆறு போட்டு விளையாடுவர்.
பல்லாங்குழி விளையாட நல்ல அனுபவம் வேண்டும். எந்தக் குழியை ஆடத்தொடங்கினால் என்ன நடக்கும் என அனுபவசாலிகள் கண்டுபிடித்து விடுவர். எடுத்துக்காட்டாக பன்னிரண்டு முத்து போட்டு விளையாடும் விளையாட்டில், ஒரு குழி அடைத்திருந்தால், ராசாக் குழிக்கு முந்தைய குழிகளைத் தவிர எந்த குழியில் ஆட்டத்தைத் தொடங்கினாலும், முதல் சுற்றிலேயே பாண்டி கிடைக்கும். மூன்று ஒரு குழி அடைத்திருந்தால், அடைத்தவரின் முதல் குழியில், ஆட்டத்தைத் தொடங்கினால், முதல் சுற்றிலேயே இரண்டு பசு மற்றும் 24 முத்துக்கள் கொண்ட பாண்டி கிடைக்கும்.
பொதுவாக, விளையாடும் போது தூ என சொன்னால், அது அவருக்கு அனுகூலமாக இருக்கும். அது அவரது விளையாட்டிற்கு சிறு சலுகைகள் கொடுக்கும்.
விளையாடுவோம்…
படைப்பாளரின் பிற படைப்புகள்:
படைப்பாளர்:
பாரதி திலகர்
தீவிர வாசிப்பாளர், பயணக் காதலர்; தொன்மை மேல் பெரும் ஆர்வம் கொண்டவர். அயல்நாட்டில் வசித்து வந்தாலும் மண்ணின் வாசம் மறவாமல் கட்டுரைகள் எழுதிவருகிறார்.