வாழ்க்கையில் நாம் எல்லா விஷயங்களையும் செய்தே தீர வேண்டும் என்றெல்லாம் இல்லை. சில விஷயங்களுக்குத்  தயங்காமல் ‘நோ’ சொல்லி விடுங்கள். சரியென்று சொல்லி விட்டு அந்தச் செயலால் வருத்தப்பட்டுக் கொண்டிருப்பதை விட (சில வருத்தங்கள் எல்லாம் வாழ்நாள் முழுக்கக்கூட வரும்) இயலாதென்று மறுத்துவிட்டு அதற்காக ஐந்து நிமிடமோ, அரைமணி நேரமோ அல்லது அரை நாளோ வருத்தப்பட்டு விட்டு அதைத் தூக்கிப் போட்டு விட்டு நிம்மதியாக அடுத்த வேலையைப் பார்க்கலாம். நாம் ஒரு சிறந்த மனிதர் அல்லது தியாகி என்கிற பட்டம் பெற வேண்டியெல்லாம் பிடிக்காத விஷயங்களைச் செய்யக் கூடாது.

எப்போதெல்லாம் நோ சொல்ல வேண்டுமென்றால் நாம் பதற்றமாகவும் கோபமாகவும் மனச் சோர்வாகவும் இருக்கும் போது கட்டாயம் நோ சொல்ல வேண்டும். ஏனென்றால் அப்போது எடுக்கும் எத்தகைய முடிவும் சிறந்த பலனைத் தராது. அதனால் மனம் உளைச்சலுற்ற தருணங்களில் முடிவெடுப்பதைத் தள்ளிப் போடலாம். என் தோழி ஒருவர் கோபமோ, வருத்தமோ, துக்கமோ எதுவாக இருந்தாலும் உடனே போய்த் தூங்கிவிடுவார். அரைமணி நேரம் அல்லது ஒரு மணிநேரம் கழித்து எழுந்து வந்து, பிரச்சினையை யோசித்து முடிவெடுப்பார். பெரும்பாலும் அந்த முடிவுகள் நல்லனவாகவே அமைந்துவிடும். எனக்குத் தெரிந்த ஓர் அக்கா குடும்பப் பிரச்சினையில் தூக்குக் கயிறைக் கழுத்தில் மாட்டிக் கொண்டார். அக்கம் பக்கத்தினர் வந்து மீட்டார்கள். அதன் பின்னர் பேசும் போது தனது செயலுக்காக மிகவும் வருத்தப்பட்டார். ஆனால் அன்று உயிர் போயிருந்தால்? அதனால் பதற்றமாக இருக்கும் போது முடிவெடுப்பதைக் கொஞ்சம் தள்ளிப் போடலாம்.

நம்மிடம் யாராவது கடன் கேட்டால், அந்தத் தொகை அவரது சக்திக்கு மீறியதாக இருந்தால் கண்ணை மூடிக்கொண்டு நோ சொல்லிவிட வேண்டும். ஏனென்றால் இப்போது பரிதாபப்பட்டு தொகையைக் கொடுத்துவிட்டு நாளை நாம் வருத்தப் படக் கூடாது இல்லையா? என் நெருங்கிய தோழியின் கணவர் இளகிய மனம் படைத்தவர். அவரிடம் தொழில் ரீதியாகப் புதிதாக அறிமுகமான நபர் ஒரு மிகப் பெரிய தொகையைக் கடனாகக் கேட்டார். தோழி எவ்வளவோ சொல்லியும் கேளாமல் அந்தத் தொகையை அவர் கடனாகக் கொடுத்து விட்டார். ஒரே மாதத்தில் திருப்பித் தருவதாக உறுதி கொடுத்தவர், இரண்டு வருடங்கள் கடந்த நிலையிலும் தொகையைத் தராமல் இன்னும் இழுத்தடித்துக் கொண்டிருக்கிறார். தோழியின் வீட்டில் அவசரச் செலவுக்குப் பணமின்றி நாளொரு சண்டையும், பொழுதொரு பிரச்னையுமாக இருந்து வருகிறது. பழகி விட்டதால் மறுக்க இயலவில்லை என்று கூறுகிறார் தோழியின் கணவர். எத்தகைய பழக்க வழக்கமும் பணத்தால் சிதறிப் போன பல கதைகளை நாம் அறிவோம். தோழியின் கணவர் ஒரு சிறு தொகையை அவரிடம் கொடுத்து அதையும் வராக்கடன் லிஸ்டில் வைத்திருந்தால் இத்தகைய பிரச்சினை வந்திருக்காது இல்லையா?. அதேபோல் எத்தனை வருடம் பழகியவர்களாக இருந்தாலும் அவர்கள் வாங்கும் கடனுக்கு நாம் ஒருபோதும் உத்திரவாதம் தரக் கூடாது. ஏனென்றால் நாளை பிரச்சினைகள் எப்படி வரும் என்று யாருக்குத் தெரியும்?. இன்றிருக்கும் மனோநிலை நாளை மாறக் கூடும். எனவே பண விஷயத்தில் நம்மால் முடிந்த உதவிகளை மட்டுமே செய்து விட்டு, இயலாதவற்றைச் செய்ய மறுப்பதே நம் நிம்மதிக்குச் சிறந்த வழி.

சிலர் நம்மை விடப் பெரியவர்கள் சொல்லி விட்டார்களே என்று பிடிக்காத விஷயத்துக்குத் தலையாட்டி விடுவார்கள். தேவையற்ற தயக்கத்தாலும், கூச்சத்தாலும் இல்லையென்று மறுக்கத் தெரியாமல் இருப்பார்கள். என் நண்பர் ஒருவர் யார் எது கேட்டாலும் மறுக்கவே மாட்டார். வேண்டாவெறுப்பாகவே செய்து தருவார். அவரது இந்த இயல்பைப் பயன்படுத்திக் கொள்பவர்கள் பலர். இந்த மாதிரி இடங்களில் எல்லாம் நோ சொல்ல வேண்டும்.

அதேபோல் நாம் உணவுக் கட்டுப்பாட்டில் இருக்கும்போது யார் எத்தகைய அறுசுவை உணவு வகைகளைக் கொண்டு வந்தாலும்  கண்களை இறுக மூடிக் கொண்டு தலையை இடவலமாக அசைத்து நோ என்று அழுத்தமாகச் சொல்லி விட வேண்டும். வற்புறுத்துகிறார்களே என்று சாப்பிட்டு விட்டு பின்னர் நாம்தான் குற்ற உணர்ச்சியில் குமைந்து கொண்டிருக்க வேண்டும். சுவையான உணவு என்பது அந்த நேரத்து இன்பம் மட்டுமே. அதனால் நம் உடலில் கூடும் எடை, ஏறும் சர்க்கரை, ஏற்படுத்தும் ரத்த அழுத்தம் போன்றவற்றை நாம்தான் அனுபவிக்க வேண்டும்.

சாமியார் ஒருவர் வீட்டுக்கு விருந்தாளியாகச் சென்றிருக்கிறார். அங்கே இலையில் அவருக்கு உணவு படைக்கும் போது கத்தரிக்காய் பொரியலையும் வைத்திருக்கிறார்கள். சாமியாருக்கு ஒரு வழக்கம். எது பிடிக்காதோ அதை வேகமாக விழுங்கி விடுவார். பிடித்ததை மட்டும் ருசித்து உண்பார். உணவை வீணடிப்பது அவருக்குப் பிடிக்காது. ஆனால் விருந்து பரிமாறிய பெண்மணி இதைத் தவறாகப் புரிந்து கொண்டு சாமியார் விரும்பிச் சாப்பிடுகிறார் என்று மீண்டும் கத்தரிக்காய் பொரியலை வைத்திருக்கிறார். இவர் மீண்டும் அதை எடுத்து விழுங்க, அவர் மீண்டும் மீண்டும் வைக்க, கடைசியில் பிடிக்காத கத்தரிக்காய் பொரியலை மட்டுமே சாமியார் உண்டு விட்டு எழுந்தாராம். முதலிலேயே கத்தரிக்காய் பிடிக்காது வேண்டாம் என்று நோ சொல்லியிருந்தால் சாமியாருக்கு இந்த மாதிரி நேர்ந்திருக்குமா என்ன?. நிறையப் பேர் செய்யும் தவறு இதுதான். விருந்துக்குச் செல்லும் இடத்தில் அவர்கள் பரிமாறி விட்டார்களே என்று உடம்புக்கு ஒவ்வாத உணவைச் சாப்பிட்டு விட்டு வந்து அவதிப்பட்டுக் கொண்டிருப்பது. உணவு விஷயத்தில் எந்தவிதச் சமரசமும் செய்யாதீர்கள்.

வாழ்க்கையில் சிரமப்பட்டு முன்னேறி வரும்போது இடையில் கண்சிமிட்டும் சலனங்களுக்கு எப்போதுமே நோ சொல்லப் பழகிக் கொள்ள வேண்டும். எனக்குத் தெரிந்த ஒரு நண்பர் கடின உழைப்பாளி. வாழ்க்கையில் சிரமப்பட்டு முன்னேறிக் கொண்டிருந்தவர். தொழிலில் நல்ல லாபம் வரும் வேளையில் சில தவறான நட்புகளால் மதுப் பழக்கத்துக்கு ஆட்பட்டார். எதையும் அளவோடு வைத்துக் கொள்ளத் தெரியாமல் போதைக்கு அடிமையாகி விட்டார். அதனால் அவரது தொழில் பாதிக்கப்பட்டு, சொத்துகளை இழந்து, நடக்கவிருந்த திருமணம் நின்று போய் இன்று குடிப்பதற்குத் தினமும் யாராவது நண்பர்களிடம் கையேந்திக் கொண்டிருக்கிறார். அன்று அவருடன் குடித்துக் கூத்தடித்தவர்கள் இன்று அவரைத் தெரியாதவர்கள் போல் நடந்து கொள்கின்றனர். அப்போது நோ சொல்லத் தவறியதன் விளைவு இப்போது மொத்த வாழ்க்கையையும் விழுங்கி விட்டது.

நமக்குப் பிடிக்காத விஷயங்களை யார் செய்யச் சொன்னாலும் பிடிவாதமாக நோ சொல்லிப் பழகுங்கள். நம் நன்மைக்காக என்று சொல்லி நம் பெற்றோரோ அல்லது உறவினர்களோ வற்புறுத்தினாலும் கண்டிப்பாக நோ சொல்லிவிட வேண்டும். அதே நேரத்தில் அந்தச் செயலுக்கு முழுப் பொறுப்பையும் நாமே ஏற்றுக் கொள்ள வேண்டும். என்னுடைய தோழி ஒருவருக்கு தமிழ் இலக்கியம் படிக்க வேண்டும் என்று மிகவும் ஆசை. ஆனால் அவரது தந்தையின் வற்புறுத்தலின் பேரில் வேறு வழியின்றி அலுவலக மேலாண்மை படித்தார். விருப்பம் இல்லாமல் படித்ததால் போதிய மதிப்பெண்கள் பெற முடியவில்லை. அப்போது நோ சொல்லியிருக்கலாம் என்று இப்போது வருந்துகிறார். படிப்பு போன்ற மிகப்பெரிய விஷயங்களில் எந்தவித சமரசமும் செய்யக் கூடாது. தனக்குப் பிடித்ததைப் படிக்கும் போது அதில் சிறந்து விளங்கி வாழ்வில் முன்னேறும் சாத்தியக்கூறுகள்தான் அதிகம் இருக்கும்.

தம்பதிகளுக்குள் இருக்கும் பிரச்னையில் மூன்றாவது நபர் ஒருவர் மூக்கை நுழைக்கிறார் என்றால் சற்றும் யோசிக்காமல் நோ சொல்லி விடுங்கள். தம்பதிகளுக்குள் ஏற்படும் பிரச்னைகளை அவர்கள்தாம் பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டுமே தவிர வேறு யாராலும் அவர்களுக்குள் இணக்கத்தை ஏற்படுத்த இயலாது. அதேபோல் கணவன், மனைவி இடையிலான  அந்தத் தனிமைத் தருணங்களில் யார் தலையிட்டாலும் நோ சொல்லி மறுத்து விடுங்கள். அது நீங்கள் பெற்ற குழந்தைகளாக இருந்தாலும்கூட. நமக்கே நமக்கென்று சில அந்தரங்கத் தருணங்கள் வேண்டும் தானே?. எதற்காக அதைத் தியாகம் செய்ய வேண்டும்?. தம்பதியருக்குள் எத்தகைய பிணக்குகள் வந்தாலும் அவற்றை இட்டு நிரப்ப இத்தகைய இனிய நினைவுகள்தாம் வேண்டும். அதில் பிறரது இடையூறு இன்றிப் பார்த்துக் கொள்வது அவசியம்.

பெண்கள் நான்கு பேர் சேர்ந்தால் புறணி பேசுவார்கள் என்று எப்போதும் சொல்வார்கள். அதைத் தடுப்பது நாமாக இருப்போமே. ஓர் இடத்தில் பேசும் போது அங்கே இல்லாத ஒருவரைப் பற்றிய தேவையற்ற விவரங்களை யாராவது பேசத் தொடங்கும் போது அழுத்தம் திருத்தமாக நோ சொல்லுங்கள். அத்தகைய பேச்சுகள் கேட்பதற்கு ஒவ்வாததாக இருப்பதோடு நம் வளர்ச்சிக்கும் தடையாக இருக்கக் கூடும். அதேபோல் நம்மைப் பற்றிய பிறரது தவறான கணிப்புகளுக்கும் நாம் உடைந்து போகாமல் அத்தகைய சிந்தனைகளுக்கு நோ சொல்லி விட்டு அடுத்த வேலையைப் பார்க்க வேண்டும். அதுதான் நம்மைப் பற்றிப் பிறருக்கு நாம் கொடுக்கும் தகவல். அதேபோல் தம்பதிகளுக்குள் பிணக்கு ஏற்படும் போது பேசத் துடிக்கும் மனதிடமும், நாக்கிடமும் நோ சொல்லி அடக்கி வையுங்கள். அப்போது அமைதியாக இருந்தால் பெரிய பிரச்சினைகள் எழாமல் காத்துக் கொள்ளலாம். 

அப்புறம் பெண்களுக்கு மட்டும் முக்கியமான இரண்டு விஷயங்கள். ஒன்று, வீட்டில் யார் சாப்பிட்டு மீந்தாலும் அது வீணாகிவிடும் என்று பதறிக் கொண்டு மிச்ச மீதியை உங்கள் வயிற்றுக்குள் தள்ளாதீர்கள். மீந்ததை எல்லாம் கொட்ட உங்கள் வயிறு ஒன்றும் குப்பைத் தொட்டி அல்ல. அப்போது உங்களுக்கு நீங்களே கட்டாயமாக நோ சொல்லுங்கள். உங்களுக்குப் பிடித்ததைச் சாப்பிடுங்கள். அது ஒன்றும் பெரிய குற்றம் இல்லை. எனக்குத் தெரிந்த ஒரு பெண்மணி வீட்டில் எந்த உணவுப் பண்டத்தை யார் மீதம் வைத்தாலும் கீழே கொட்ட மாட்டார். “பொருள் என்ன விலை விக்குது? கீழே போடறதை வயித்துக்குள்ள போட்டுக்க வேண்டியதுதான்” என்று விட்டு வீணாகி விடாமல் சாப்பிட்டு விடுவார். ஒருமுறை சிறுகீரை, அரைக்கீரை இரண்டும் கொஞ்சம் மீந்ததை ஒன்றாக வாணலியில் இட்டு சூடு படுத்திச் சாப்பிட்டவருக்கு சீதபேதி ஏற்பட்டு கிட்டத்தட்ட பத்து நாட்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு, கடும் வயிற்றுப் போக்கால் அவதிப்பட்டு, மருத்துவரால் கடுமையாக எச்சரிக்கப்பட்டு வீட்டுக்கு அனுப்பப்பட்டார். இப்போது மீந்த உணவுகளைச் சாப்பிடுவதில்லை.

இரண்டு, பணியிடத்திலோ அல்லது வீட்டிலோ அல்லது பொது இடத்திலோ உங்களைப் பாலியல் ரீதியாக அத்துமீறி யாரேனும் பேசினாலோ, பார்த்தாலோ மிகக் கடுமையாக நோ சொல்லுங்கள். உங்கள் கடுகடுப்பான முகத்தைப் பார்த்தே எதிராளி இரண்டடிகள் பின்னோக்கி நகர்ந்துவிட வேண்டும். இந்த விஷயத்தில் உங்கள் தவறு எதுவும் இல்லை என்று முதலில் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். பயந்து விடாமல் தைரியமாக இத்தகைய சீண்டல்களை எதிர்கொள்ள வேண்டும் என்பது மிகவும் முக்கியம். என் தோழிக்குத் தெரிந்த பெண் ஒருவர் அலுவலகத்தில் பணிபுரிந்து வந்தார். ஒருநாள் யாருமில்லாத சமயத்தில் அவரது மேலாளர் அவரது கைகளைப் பிடித்துக் கொண்டு பேசியிருக்கிறார். அந்தப் பெண் பதற்றமின்றிக் கைகளை விடுவித்துக் கொண்டு அவர் தன்னிடம் நடந்து கொண்ட முறை நாகரீகமற்றது என்று கடுமையாகச் சொல்லியிருக்கிறார். அந்த மேலாளரோ தனக்கு ஒத்துழைக்கவில்லை என்றால் எல்லாரிடமும் அந்தப் பெண்ணின் நடத்தை குறித்துத் தவறான தகவல்களைப் பரப்புவதாக மிரட்டியிருக்கிறார். அசராத அந்தப் பெண் தன்மீது தவறில்லாதபட்சத்தில் தான் யாருக்கும் பயப்படத் தேவையில்லை என்று அழுத்தம் திருத்தமாகச் சொல்லவே, அந்த மேலாளர் அன்றிலிருந்து அந்தப் பெண்ணின் வழிக்கே வருவதில்லை. ஒதுங்கிச் சென்று விடுகிறார் என்று தோழி சொன்னார்.

சரியான திட்டமிடல் இல்லாதவர்கள் வெகு எளிதாக மன அழுத்தத்திற்கு உள்ளாகிறார்கள். செய்ய இயலாத வேலைகளுக்கு நோ சொல்லுபவர்கள் மனச் சிதைவு நோய்களுக்கு ஆளாவதில்லை. எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டு செய்பவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். மனதை நேர்மறை எண்ணங்களால் லகுவாக வைத்துக் கொள்ள வேண்டும். தியானம், மூச்சுப் பயிற்சி போன்றவற்றால் மனதை ஒருமுகப்படுத்த முயற்சி செய்ய வேண்டும். சில சமயம் நோ சொல்வதால் நாம் சுயநலவாதிகளாக அறியப்படலாம். ஆனால் எதையும் விட நம் மனநிம்மதியும், சந்தோஷமும் நமக்கு முக்கியம் என்பதை உணர்ந்து கொள்வோம். இல்லை என்று சொல்வது நம் சுய அதிகாரத்தின் ஒரு பகுதி என்று உணர்ந்து கொள்வோம். நாம் முடியாது என்று சொல்லும் போது சுயநலவாதியாக அறியப்படுவோமோ என்கிற அச்சம் ஏற்படலாம். ஆனால் முடியாது என்று சொல்வது சுய மதிப்பை அதிகரிக்கவே செய்யும். அதனை நாம் வெளிப்படுத்தும் முறை நாகரீகமாக இருக்க வேண்டும் என்பது மிகவும் முக்கியம். நோ சொல்வதால் மற்றவர்கள் நம்மை வெறுத்து விடுவார்கள் என்று பயப்படத் தேவையில்லை. புரிந்து கொள்பவர்கள் பிரிந்து செல்வதில்லை. அதனால் இயலாத போது நோ சொல்வதைத் தவிர்த்து விட்டுத் தவிக்காதீர்கள்.

படைப்பாளர்:

கனலி என்கிற சுப்பு

‘தேஜஸ்’ என்ற பெயரில் பிரதிலிபி தளத்தில் கதைகள் எழுதி வருகிறார். சர்ச்சைக்குரிய கருத்துகளை எழுதவே கனலி என்ற புனைபெயரைப் பயன்படுத்துகிறார். ஹெர் ஸ்டோரிஸில் இவர் எழுதிய கட்டுரைகள், ‘பெருங்காமப் பெண்களுக்கு இங்கே இடமிருக்கிறதா?’ , ‘அவள் அவன் மேக்கப்’ , ’இளமை திரும்புதே’ ஆகிய நூல்களாக வெளிவந்திருக்கின்றன.