“ம்… ஆமா வேல முடிஞ்சிருச்சு” என்று தன் கைபேசிக்குப் பதிலளித்தவாறு நாசரேத் நேர் செல்லும் ரயில்வே தண்டவாளத்தைப்  பார்வையிட்டுவிட்டு, வழக்கமான பாதுகாப்பை உறுதி செய்யும் வேலைகளை முடித்துவிட்டு வந்தான் டிராக் சூப்பர்வைசர் சிவக்குமார்.

அவனையும் மீறி அவன் இதழ்களில் புன்னகைத் தவழ்ந்தது. ஏற்கெனவே அவனை வச்சு செய்யும் சக ஊழியர்களுக்கு அவன் முகத்தில் படர்ந்த புன்னகையைக் கண்டால் ஒரு வழியாக்கி விடுவார்கள் என்று இயல்பாக இருக்க முயன்றான்.

“என்ன புதுமாப்பிள்ள, ஏன் அதுக்குள்ள டியூட்டிக்கு வந்துட்டீங்க?” என்று அவன் மேலிருந்த மழையின் ஈரத்தை தட்டிவிட்டு டிராக் ரிப்போர்ட்டர் எழுதி லெட்ஜிரில் கையெழுத்துப் போட  ஆபீஸ் அறைக்குள் நுழைந்தவனை ஸ்டேஷன் மாஸ்டர் இஸ்மாயிலின்  கனிவான புன்னகை கலந்த கேள்வி வரவேற்றது.

“அதான் ஒரு வாரம் ஆயிருச்சே சார்” என்று அதிகம் பகிர்ந்து கொள்ளாமல் அவன் நழுவுவதைப் புரிந்தவர் சிரித்தார்.

“நமக்கு வேலை வெட்டின்னு ஆயிரம் இருந்துட்டேதான் இருக்கும் சிவா. நம்மள நம்பி வந்த பொண்ண நல்லா பாத்துக்கணும்ங்கிறதும் இனி உங்க கடமைல ஒண்ணுதான். அத எப்பவும் நியாபகம் வச்சிக்கோங்க.”

காலையிலிருந்து ஒவ்வொருவரும் கேட்ட கேள்வியிலும் சொன்ன அறிவுரையிலும் கடுப்பாகிப் போனவனுக்கு ஸ்டேஷன் மாஸ்டர் பேசிய விதம் மாறுதலாக இருந்து.

ஐம்பது வயதைக் கடந்த மனிதர். வயது வித்தியாசமின்றி அனைவரிடமும் மரியாதையுடன் நடந்து கொள்பவர். எப்படியும் அவன் அப்பா வயது அவருக்கு இருக்கும் என்று நினைத்துக் கொள்வான். ஒருவித மிடுக்குடன் அவர் நடந்து வரும் விதமும், சக ஊழியர்களை அவர் நடத்தும் விதமும் அவனுக்கு மிகவும் பிடிக்கும்.

சில நேரம் பயணிகளுடன் அவர் தோழமையுடன் உரையாடுவதையும், ஒரு முறை அருகிலிருந்த அரசுப் பள்ளிக் குழந்தைகள் பள்ளியிலிருந்து ரயில் நிலையத்தைக் காண வந்த போது, அவர்கள் கேட்ட அத்தனை கேள்விகளுக்கும் சற்றும் முகம் சுழிக்காமல் பொறுமையுடன் விளக்கியதோடு ரயில் நிலைய செயல்பாடுகளையும் விவரித்த விதத்தில், ஒரு மாணவன் வருங்காலத்தில் அவரைப் போல் ஸ்டேஷன் மாஸ்டராகப் போகிறேன் என்று சொல்லிச் சென்றதில் எந்த ஆச்சரியமும் இல்லை என்று நினைத்தான்.

அவன் கல்யாணம் குலசை முத்தாரம்மன் கோயில் வளாகத்தில் நடைபெற்ற போது அத்தனை பெரிய பொறுப்பில் உள்ள மனிதர் எப்படி அவன் கல்யாணத்துக்கெல்லாம் வருவார் என்று யோசித்தவனுக்கு, அவர் திருமணத்துக்கு வந்ததோடு , எந்த மத வேறுபாடும் கருதாமல் திருமணம் முடிந்தபின் அவர்களோடு சேர்ந்து கோயிலுக்குள் சென்று சுவாமி தரிசனம் செய்து விட்டு வந்தது அவர் மீது இருந்த மரியாதையைப் பல மடங்கு அதிகரிக்கச் செய்தது.

கிட்டத்தட்ட எல்லா நிலை ஊழியர்களுக்கும் பிடித்த ஒரு மனிதராக அவர் இங்கு வந்த சில மாதங்களிலே மாறிப் போனதில் எந்த ஆச்சரியமும் இல்லை.

‘இன்னைக்குச் சீக்கிரம் வாங்க. உங்களுக்குப் புடிச்ச நாட்டுக்கோழி பிரியாணியும் காடை பொறியலும் சுடச் சுட ரெடி பண்ணி வச்சிட்டு, நான் காத்துக்கிட்டு இருக்கே’ என்று சிறிது நேரத்துக்கு முன் அழைத்துப் பேசிய புதுப் பொண்டாட்டியின் குரல் கிசுகிசுப்பாக காதில் கேட்ட போது, அவனுக்குள் நிகழ்ந்த ரசாயன மாற்றத்தை அனுபவித்தவாறே கையெழுத்துப் போட்டுவிட்டு, வீட்டுக்குக் கிளம்பத் தயாரானவன் எண்ண ஓட்டத்தை ஸ்டேஷன் மாஸ்டரின் குரல் சிவப்பு விளக்கு போட்டு நிறுத்தி வைத்தது.

அவர் என்ன கேட்டார் என்பதைக் கவனிக்காமல் விட்டுவிட்டதை உணர்ந்து வெட்கத்தில் சற்று அசௌகரிமான குரலில், “என்ன கேட்டீங்க சார்?” என்று அவன் கேட்ட போது  அருகில் நின்ற சேவியர்,

“சாயங்காலம் ஆறு மணிக்கு மேல யாரு பேசுறதும் இனி சிவா காதுல விழாது சார்” என்றார்.

“செய்துங்கநல்லூர் டைரக்ஷன்ல இருக்குற டிராக் செக் பண்ண போன சுகுமார் இன்னும் திரும்பி வரலையான்னு கேட்டேன்ப்பா?”

“இன்னும் சைன் பண்ணாமதான் சார் இருக்கு. ஒரு ரவுண்டு இன்ஸ்ப்பெக்ஸன் முடிச்சிட்டு  ஒம்போது மணி செந்தூர்ல கும்பகோணத்துக்குக் குடும்பத்தோட கோயிலுக்குக் கிளம்பணும்னுதான் சொல்லிட்டு இருந்தாரு. அவங்க ஃபேமிலிகூட பிளாட்பாரம்ல நிக்கிறத பாத்தேனே. அவங்க கூடயும் அவர் இல்லை. ஏன் இன்னும் வரலன்னு தெரியலையே.”

மணி எட்டு ஐம்பது என்று காட்டியது.  எல்லாவற்றிலும் நேரத்தைக் கடைப்பிடிக்கும் ஆசாமி அந்த டிராலிமேன் சுகுமார்.

அதே போல் அவர் வேலையும் நேர்த்தியாக  இருக்கும். வாங்கும் சம்பளத்துக்குச் சரியாக உழைக்க வேண்டும் என்று நினைக்கும் சொற்ப மனிதர்களில் அவனும் ஒருவன்.

அவன் தாமதிப்பது, அதுவும் அவன் பயணிக்கும் ரயில் வரும் நேரம் ஆகியும் வராமல் இருப்பது அவனுக்கு ஏதோ ஒருவித விவரிக்க முடியாத உணர்வைத் தந்தது.

“எதுக்கும் ஒரு எட்டு பாத்துட்டு கிளம்புறேன் சார்.”

“பரவாயில்லை சிவா ,நீங்க கிளம்புங்க. நான் சாட்டிலைட் போன்ல கணக்ட் பண்ணி என்னன்னு விசாரிக்கிறேன்.”

சேட்டிலைட் போனைத் தொடர்பு கொள்ள முயற்சித்தவருக்குத் தொடர்பு கிடைக்காமல் இருந்தது ஆச்சரியமாகவும் குழப்பமாகவும் இருந்தது.

அது சாத்தியமில்லை என்பதை அவருடைய இருபத்தி ஐந்து வருட அனுபவம் நினைவூட்டியது.

அப்படி என்றால்?

அதற்கு மேல் யோசிக்க அவர் மனம் பயந்தது.

ஆனால் எல்லாவற்றையும் யோசித்து, எந்தச் சூழ்நிலையிலும் சரியான முடிவு எடுக்கும் பொறுப்பு அவருடையது. அதைச் சரிவர செய்வது தன் கடமை என்று நினைவூட்டிக் கொண்டார்.

ஏதேனும் அசம்பாவிதம் நிகழ்ந்திருக்கக் கூடுமா?

சாட்டிலைட் போனில் தொடர்பு கொள்ள முடியாத அளவுக்கு என்ன நிகழ்ந்திருக்கக் கூடும்?

ஏதேனும் விபத்தா?

கடைசியாகச் சென்ற ரயில் கடந்து ஒரு மணி நேரத்துக்கு மேல் ஆகி இருக்கும். லெவல் கிராசிங்கை இயக்கும் சந்திரனிடம் ஒரு தகவல் விசாரிக்க அழைத்தபோது, “கொஞ்ச நேரத்துக்கு முன்னாடிதான் சுகுமார் சார் ரெயின் கோர்ட் போட்டுட்டுக் கொள்ளைக்காரன் மாதிரி போறார் சார்” என்று அவன் கிண்டலடித்துச் சிரித்தது நினைவுக்கு வந்தது.

எனவே அது சாத்தியமில்லை. ஒருவேளை மழை காரணமாக என்று நினைத்தபோது அவர் மூளைக்குள் பச்சை விளக்கு எரிந்தது.

ஸ்ரீவைகுண்டம் அணையில் ஒரு வேளை உடைப்பு ஏற்பட்டால் அது நேராக ரயில் பாதையை அரித்துச் செல்லும் சாத்தியக் கூறுகள் நிறையவே இருக்கின்றன என்று ஒருமுறை அணையைப் பார்வையிடச் சென்றபோது எடக்கு மடக்காக அவருக்குத் தோன்றிய எண்ணம் உண்மையாகும் வாய்ப்பு இருக்கிறதா?

ஒரு வெயில் கால மதியத்தில் அவருக்குத் தோன்றிய எண்ணம் இந்த அடைமழை நாளில் நிறைவேறிவிட்டதா?

அப்படி எதுவும் ஏற்பட்டு அவன் உயிருக்கு ஏதேனும் ஆபத்து என்றால் வெளியே நிற்கும் அவன் குடும்பத்துக்கு என்ன பதில் சொல்வது என்றெல்லாம் மனக்குதிரை பல திசைகளிலும் சவாரி செய்யத் தொடங்கியது.

அவர் முகத்தில் படர்ந்த குழப்ப ரேகைகளைக் கண்ட சிவா, “பாத்துட்டு வந்துடறேன் சார்” என்று சொல்லிவிட்டு வேகமாகக் கொட்டும் மழையில் குடைகூட எடுக்காமல் ஆபீஸ் அறையை விட்டு வெளியேறி செய்துங்கநல்லூர் இருந்த திசை நோக்கி நடக்கத் தொடங்கினான்.

மழை காரணமாக ஆங்காங்கே பிளாட்பாரத்தில் ரயிலுக்காகக் காத்து நிற்கும் பயணிகள் அவனைக் கண்டுகொள்ளாமல், நனையாமல் ரயிலில் ஏறுவது எப்படி என்பதில் கண்ணாக இருந்தனர்.

அவனுக்குள் இருந்த ஏதோ ஒன்று அவனை அவசரப்படுத்தி ஓடத் தூண்டியது. சிறிய கை டார்ச்சையும் அவனுடைய சாட்டிலைட்  போனையும் எடுத்துக் கொண்டு மழைத்துளிகளுடன் போட்டிப் போட்டுக் கொண்டு வேகமாக ஓடினான்.

ரயில் நிலையத்தை விட்டுத் தூரம் அதிகரிக்க அதிகரிக்க அதுவரை ஒளி கொடுத்த சோடியம் வேப்பர் விளக்குகளின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்து, ஸ்ரீ வைகுண்டம் என்று எழுதப்பட்ட பதாகையைக் கடந்த போது மழையும் இருளும் மட்டுமே அங்கு ஆட்சி புரிந்தது.

அரை கிலோமீட்டர் தூரத்தை அரை நொடிக்குள் ஓடி வந்துவிட்டதாக அவனுக்குத் தோன்றியது. கிட்டத்தட்ட பிளாட்பாரத்தின் எல்லையை அடைந்த போது அவனின் காலணிகளைத் தாண்டி கால்களை ஏதோ ஒன்று ஜில்லென்று தொட்டுச் சென்றது.

ஒரு நொடி நிதானித்தவன் கால்களுக்கு நேராக டார்ச் அடித்தான். அந்தச் சிறிய வெள்ளை ஒளி வட்டத்தில் பிளாட்பாரத்தைத் தொட்டு வேகமாக ஓடிய தண்ணீரைக் கண்டவன் உறைந்தான் .

இல்லை.

இருக்காது.

அதற்கு வாய்ப்புகள் இல்லை என்றெல்லாம் அவன் மனதைச் சமாதானப்படுத்த முயன்று தோற்றுக் கொண்டிருந்தான்.

அவன் நிற்கும் போதே தண்ணீரின் அளவு அவன் கால்களைச் சுற்றி அதிகரித்ததாகத் தோன்றியது.

அது வெறும் பிரமை இல்லை என்கிற உண்மை அவன் முகத்தில் அறைந்தது.

சற்று தொலைவில் நீருக்குள் யாரோ ஓடிவரும் ஓசை அவன் செவிகளை எட்டியது. அதிலிருந்த பரபரப்பு அவனையும் தொற்றிக் கொண்டது.

அந்த ஓசை நீரில் அமிழ்ந்து கனம் கூடிய ஒரு ஜோடி காலடிகளின் ஓசை என்பது அவன் புலன்களுக்கு எட்டிய அடுத்த நொடி, அபாய எச்சரிக்கை செய்யும் சிவப்புத் தீச்சுடரின் ஜீவாலை ஒளிர்ந்து மறைந்தது.

பிளாட்பாரத்தைத் தாண்டி சற்றுத் தொலைவில் ஒளிர்ந்து கொண்டிருந்த சிவப்பு சிக்னல், வண்டி நாசரேத்திலிந்து கிளம்பிவிட்டதைக் காட்டியது. ஞாயிற்றுக்கிழமை ஆதலால் குறைந்தபட்சம் ஆயிரம் சொச்சம் பயணிகள் அதில் பயணிக்கக்கூடும் என்று நினைத்த போது ஒரு நொடியில் ‘ஆட்டோ பைலட்’ மோடில் இயங்கத் தொடங்கினான்.

அவன் சாட்டிலைட் போனை ஆன் செய்யவும், அவன் இதயத்தைப் போலவே ரயிலின் தண்டவாளமும் தடதடத்தது.

அவனின் எச்சரிக்கை வார்த்தைகள் ஸ்டேஷன் மாஸ்ட்டர் காதுகளுக்கு எட்டுவதற்குப் பதிலாக,

ரயிலின் சத்தம் முந்திக் கொண்டது. 

‘குப்’ என்று அழுத்தமான காற்றை அவன் மீது வீசிவிட்டு காற்றையும் மழையையும் கிழித்துக் கொண்டு அவனை சற்றும் சட்டை செய்யாமல்  கடந்து சென்றது செந்தூர் எக்ஸ்பிரஸ்.

அதற்கு நேர் எதிர்த் திசையில் அவன் ஓடிக் கொண்டிருந்தான்.

அவனுக்குப் பின்னால் சற்றுத் தொலைவில் எச்சரிக்கை விளக்கைப் பொருத்தியவாறு ஓடிவந்த சுகுமார் கையிலிருந்த சிவப்பு வெளிச்சமும், சிவாவின் முகத்தில் இருந்த பதற்றமும் தான் கணித்தது சரி என்று தோன்றியது.

வண்டியை நிறுத்தும் சிகப்பு விளக்கை அருகிலிருந்த லைன் மேன் சேவியரின் கைகளில் கொடுத்துவிட்டு, கட்டுப்பாட்டு அறையை நோக்கி ஸ்டேஷன் மாஸ்டர் இஸ்மாயில் ஓடத் தொடங்கினார்.

இது எதுவும் அறியாமல் ஸ்ரீ வைகுண்டம் ரயில் நிலையத்தில் வழக்கம் போல் வந்து நின்றது செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில்.

(தொடரும்)

படைப்பாளர்:

பொ. அனிதா பாலகிருஷ்ணன் 

பல் மருத்துவரான இவருக்குச் சிறுவயது முதல் தன் எண்ணங்களைக் கவிதைகளாக, கட்டுரைகளாக எழுதப் பிடிக்கும். நாளிதழ்கள், வலைதளங்களில் வரும் கவிதைப் போட்டிகள், புத்தக விமர்சனப் போட்டிகள் போன்றவற்றில் தொடர்ந்து பங்கேற்று பரிசுகள் பெற்று வருகிறார்.  இயற்கையை ரசிக்கும், பயண விரும்பியான இவர் ஒரு தீவிர புத்தக வாசிப்பாளர். தன் அனுபவங்களைக் கவிதைகளாக, கட்டுரைகளாக, ஒளிப்படங்களாக வலைத்தளங்களில் பதிந்து வருவதோடு சிறுகதைகளும் கதைகளும் எழுதி வருகிறார்.