ஆனந்தகன்னியம்மனின் குறுநகை தவளும் கனிவான முகத்தை உற்றுப் பார்த்தபடி அமைதியே உருவாக நின்ற அம்மாவின்  நிச்சலனமற்ற முகத்திலிருந்த அமைதி அவனுக்கு ஒருவித கலக்கத்தைத் தந்தது.

மழை காரணமாகத் திண்ணையில் அடுப்பு கூட்டி கதையடித்தபடி சிரித்துக் கொண்டு பணியாரம் ஊத்திக் கொண்டிருந்த குடும்பத்துப் பெண்களின் மகிழ்ச்சியையும் ரசித்துக் கொண்டிருந்த கன்னியம்மனின் முகத்தில் மட்டும் எப்படி என்றும் மாறாத புன்னகை?

வேறு ஒரு சூழல் என்றால் அவன் அம்மாவுக்கு ஆறுதல் கூறித் தேற்றி ஏதேனும் விளையாட்டாகச் சொல்லி சிரிக்க வைத்திருப்பான்.

ஆனால் இன்று உண்மையில் அவனுக்கே சற்று வருத்தமாகத்தான் இருந்தது. காதல் தோல்வியால் மனமுடைந்து புலம்பும் நண்பர்களைப் பார்த்திருக்கிறான். ஆனால் அவனுடையது எந்த வகையில் சேறும்?

அவன் வெளிநாட்டில் படித்த, வேலை பார்த்த சமயங்களில் சில உறவுகள் சரி வரவில்லை என்று பரஸ்பரம் பிரிந்திருக்கிறான். ஆனால் அப்போதெல்லாம் இதுபோல் ஒரு வேதனைக்கு அவன் ஆட்பட்டதில்லை. ஒருவேளை அந்தச் சமயங்களில் எல்லாம் கண்டிப்பாக அந்த உறவு திருமணம் வரை செல்லாது என்று ஏதோ ஒருவிதத்தில் அவன் மனம் தெளிவாக இருந்திருக்கும்.

‘இப்போ கல்யாணத்துக்கு என்ன அவசரம்? ஸ்டார்ட் அப் நல்லபடியா போக ஆரம்பிச்சதுக்கு அப்புறம்தான் அதைப் பத்தி நினைக்க முடியும்’ என்று முதலில் தள்ளிப் போட்டு வந்தவன். ‘சரி ஒரு ரெண்டு மூணு பொண்ணுங்கள செலக்ட் பண்ணி சும்மா பாத்துட்டு வந்துருவோம், பாத்தா என்ன கல்யாணம் பண்ணணும்னு கட்டாயமா?’ என்று சிரித்த அண்ணனிடம், ‘அதெல்லாம் புரசீட் ஆற மாதிரி இருந்தாதான் பாக்கணும்’ என்று மறுத்தவன்.

“ஏண்டா, நீ அமெரிக்காவுல இருந்து வரப்போ எப்படியும் ஒரு வெள்ளக்காரிய கட்டிக்கிட்டு பேரன் பேத்தியோட வருவேன்னு பாத்தா எங்கள பொண்ணு பாக்கச் சொல்லி டார்ச்சர் பண்ணுறியேடா” என்று கிண்டலடித்தார் அப்பா.

”உங்கப்பா கிடக்குறாங்க, நான் பாக்குறேன் என் புள்ளைக்கு அவனுக்குப் புடிச்ச பொண்ணா.”

எதிர்பாராத நேரத்தில் பெய்த கோடைமழையாக உள்ளம் குளிர வைத்தவள் அவள்தான்.‌ இப்போது கானல் நீராய் கரைந்தவளும் அவள்தான்.

மெரினாவில் ஜாகிங் சென்ற போது பீச் கிளீனப் செய்து கொண்டே எதார்த்தமாகப் புன்னகையுடன் கடந்து சென்றவள் எப்படி அவன் மனதில் சிம்மாசனம் இட்டு உட்கார்ந்து கொண்டாள் என்கிற கேள்விக்கு இன்று வரை பதிலில்லை.

பின் சென்னை புத்தகக் காட்சியில் அத்தனை லட்சம் வாசகர்களுக்கு மத்தியில் ஏதோ கனவுலகத்தில நடந்து செல்வதைப் போல் ஒரு பிரமிப்பு கலந்த மகிழ்ச்சியுடன் நடந்து சென்றவள் மட்டும் எப்படிக் கண்ணுக்குப் பட்டாள்? பின் ‘விதைப்பந்து’ செய்யும் வொர்க் ஷாப் என்று அவன் சென்ற எல்லா இடங்களிலும் அவளைக் கண்டான். இல்லை, அவள் சென்ற இடங்களுக்கு எல்லாம் இந்தப் பிரபஞ்சம் அவனையும் அழைத்துச் சென்றதாகத்தான் அவன் நம்பினான்.

அவள் பெயர் அபி என்று தெரிந்த அன்று அதை எத்தனை எத்தனை விதமாகச் சொல்லி ரசித்தான். ஆனால் ஏன் நேரில் ஒருமுறைகூட அவளிடம் சென்று பேச முடியவில்லை என்று அவனுக்கே தெரியவில்லை.

அவன் ஒன்றும் கூச்ச சுபாவம் கொண்டவனோ முன்பின் பெண்களிடம் பேசியறியாதவனோ அல்ல. ஆனால் ஏனோ அவளைப் பார்த்தாலே அவன் சர்வமும் ஒடுங்கியது‌.

எவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தான் தற்செயலாக அவன் அம்மா காட்டிய பெண்களின் ஜாதகத்தில் அவளுடையதும் இருந்தபோது ஒரு நொடிகூட யோசிக்காமல் எத்தனை வேகமாக, ‘இந்தப் பொண்ண பாருங்கள், கட்டிக்கிறேன்’ என்று சொன்ன போது அவன் குடும்பமே ஒரு நொடி ஸ்தம்பித்து, பின் அதற்கான வேலைகளில் மும்முரமாக இறங்கியது. 

நடக்காத ஒரு விஷயத்தின் இழப்பு எப்படி வேதனையளிக்க முடியும்?

பார்த்துப் பேசியறியாத ஒருத்தியிடம் இதயத்தை இழக்கும் பைத்தியக்காரத்தனத்துக்கு, தான் எப்படி பலியானோம்? அவளின் நிராகரிப்பு ஏன் கூரிய முள்ளாக இதயத்தைக் கிழிக்க வேண்டும்?

கண்டதும் காதல் மீதெல்லாம்  அவனுக்குப் பெரிதாக நம்பிக்கை இருந்ததில்லை. ஆனால் அவளின் சமூக அக்கறை கொண்ட குணம், சக உயிர்களுக்கு அன்பு செய்யும் மனப்பான்மை, தெளிவான சிந்தனை என்று அவள் உள்ளத்தால் பேரழகியாக இருந்தாள்.

அவன் ஒரு வருடமாகக் கண்மூடித்தனமாகக் கொண்டிருந்த அந்த உணர்வுக்கும் ஆசைக்கும் பெயர் ஒன்று உண்டென்றால் அது காதல்தான்.

நிறைவேறாத காதல்.

அவன் என்ன நினைத்தான்? திரைப்படங்களில் வருவது போல் அவள் திருமணத்துக்கு உடனே சம்மதம் தெரிவித்த பின், அவன் அவளைப் பல இடங்களில் நின்று ரசித்ததையும், சமூக வலைத்தளங்களில் தேடித் திரிந்த கதைகளையும்  கேட்டு அணைத்து முத்தமிடுவாள் என்றா?

இது என்ன முட்டாள்தனம்?

அதுவும் தான் எப்படி இப்படி எல்லாம் யோசித்தோம் என்று நினைத்தபோது அவனுக்கே வெட்கமாக இருந்தது.

“அன்பு மச்சான், மழைய ரசிச்சது போதும். வாங்க வந்து இரண்டு பணியாரம் ஊத்துங்க. நாங்கல்லாம் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கோம்” என்று அவனின் உறவுக்காரப் பெண் ஒருத்தி அவனை அழைக்கவே, சிரித்தவாறே வந்தான்.

“ஜோதி பெரியம்மா, நம்ம அன்புத் தம்பிய கட்டிக்கப் போறவ குடுத்து வச்ச மகராசிதான். பாருங்க, வெளிநாட்டுல போய் படிச்சோம்னு ஒரு பந்தா இருக்குதா. இல்ல பொம்பளைங்க கூடி இருக்க எடத்துல வேல செய்யச் சொல்றாங்களேன்னு முகம் சுளிக்குதா? எவ்வளவு அழகா பணியாரம் சுடுது!” என்றாள் ஒரு பெண்.

“ஆமா மைனி, நானும் ஒன்ன கட்டியிருக்கேனே. கோயில் பக்கம் வந்து எப்பயாச்சும் தல காட்டுதா? இல்ல வீட்டு வேலைல நமக்கு ஒத்தாசையா இருக்குதா?” என்றாள் இன்னொருத்தி.

“ஆமாடியம்மா. வரப்போறவ குடுத்துவச்சவதான்.‌ ஆனா அதுக்கு நம்ம கன்னியம்மதான்  சீக்கிரம் ஒரு வழிய காட்டணும்” என்று சற்று வருத்தம் தொனித்த குரலில் அம்மா சொன்னதன் உள்அர்த்தம் அவனுக்கு மட்டுமே புரிந்தது.

அவனே சரி என்று சொல்லிவிட்டதால் எப்படியும் இந்தத் திருமணம் நடந்துவிடும் என்கிற நம்பிக்கையில் ஊருக்கு கார்த்திகைமுசுவுக்கு இரண்டு நாட்களுக்கு முன்னரே கிளம்பி வந்தவர்களுக்கு எதிர்பாராமல் எல்லாம் தலைகீழாக ஆகிவிட்டதன் வருத்தம் இருந்தது .

தன் புது கம்பெனி வேலைகளில் தன்னை மூழ்கடித்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்துக் கொண்டான்.

இனி திருமணம் என்கிற பேச்சுக்கு இப்போதைக்கு இடம் இல்லை. குறைந்தபட்சம் அவன் மனம் அவள் கிடைக்காத வேதனையிலிருந்து வெளியே வரும் வரையாவது.

எப்படியும் அவன் ஒருதலைக் காதல் திருமணத்தில் முடிந்துவிடும் என்கிற நம்பிக்கையில் அவசரப்பட்டு அண்ணியிடம் வேறு அபியைப் பற்றி உளறிக் கொட்டியிருந்தான். ஆனால் அவன் எதிர்பாராத விதமாக அவன் வாழ்க்கையைப் புரட்டிப் போட பிரபஞ்சம் புன்னகையுடன் காத்துக் கொண்டிருந்தது.

(தொடரும்)

படைப்பாளர்:

பொ. அனிதா பாலகிருஷ்ணன் 

பல் மருத்துவரான இவருக்குச் சிறுவயது முதல் தன் எண்ணங்களைக் கவிதைகளாக, கட்டுரைகளாக எழுதப் பிடிக்கும். நாளிதழ்கள், வலைதளங்களில் வரும் கவிதைப் போட்டிகள், புத்தக விமர்சனப் போட்டிகள் போன்றவற்றில் தொடர்ந்து பங்கேற்று பரிசுகள் பெற்று வருகிறார்.  இயற்கையை ரசிக்கும், பயண விரும்பியான இவர் ஒரு தீவிர புத்தக வாசிப்பாளர். தன் அனுபவங்களைக் கவிதைகளாக, கட்டுரைகளாக, ஒளிப்படங்களாக வலைத்தளங்களில் பதிந்து வருவதோடு சிறுகதைகளும் கதைகளும் எழுதி வருகிறார்.