சமீபத்தில் வெளியான டைம்ஸ் ஆஃப் இந்தியா கட்டுரையில் திரிபுராவில் இதுவரை 828 மாணவர்களுக்கு எச்ஐவி தொற்று உறுதிச் செய்யப்பட்டுள்ள தகவல் திடுக்கிட வைத்தது. அதில் இதுவரை 47 பேர் உயிரிழந்து இருக்கின்றனர். இந்தச் சர்ச்சையைத் தொடர்ந்து திரிபுரா அரசு இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் மேலே கூறப்பட்டுள்ள எண்ணிக்கையானது 2007 ஏப்ரலிலிருந்து 2024 மே வரையான எச்ஐவி தொற்றால் பாதிக்கப்பட்ட திரிபுராவைச் சேர்ந்த மாணவர்களின் கூட்டுத் தொகை என்று குறிப்பிட்டுள்ளது. இதில் மொத்தம் 220 பள்ளிகளும், 24 கல்லூரிகளும் சம்மந்தப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது. போதை மருந்து ஊசிகளை மாணவர்களிடையே பகிர்ந்துக் கொண்டதே இந்தத் தொற்றுக்கு காரணம் என்றும் அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
2024இன்படி மாநிலம் முழுவதும் மொத்தம் 8729 பேர் எச்ஐவியால் பாதிக்கப்பட்டு, திரிபுராவிலுள்ள antiretroviral சிகிச்சை (Antiretroviral therapy – ART) மையங்களில் பதிவாகி இருப்பதாகத் தரவுகள் கூறுகின்றன. இந்த மையங்கள் அனைத்தும் சிகிச்சை அளிப்பதிலிருந்து விழிப்புணர்வு முகாம்கள் நடத்துவது வரை தொற்றுப் பரவலைத் தடுப்பதற்கான அத்தனை முயற்சிகளையும் எடுத்து வருவதாக திரிபுரா மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்க (Tripura State AIDS control society – TSACS) செயல்திட்ட இயக்குநர் சமர்பிதா தத்தா கூறியுள்ளார். மாணவர்களுக்கிடையே எச்ஐவி தொற்று பரவுவதற்கான காரணமாக போதை மருந்துகளைக் கூறினாலும், இந்தப் பிரச்னையை உளவியல் கண்ணோட்டத்தில் பார்ப்பதுதான் குழந்தை வளர்ப்பில் தெளிவைக் கொண்டு வர உதவும்.
பத்திலிருந்து பத்தொன்பது வயது வரை உள்ள வளரிளம் பருவத்தில் உள்ள ஆணோ பெண்ணோ உடற்கூறு மாற்றங்கள் மட்டுமல்லாமல் அறிவாற்றல், உளவியல் மற்றும் சமூக ரீதியான மாற்றங்களையும் எதிர்கொள்கின்றனர். அதுவரை சிறு பிள்ளையாக இருந்தவர்கள் வயதுக்கு வந்த ஆணாகவோ அல்லது பெண்ணாகவோ மாறும் பட்சத்தில் அவர்களின் மூளையும் மனதும் ஒரே நேரத்தில் பல மாதிரியான தூண்டுதல்களை உருவாக்குகிறது. அதனால்தான் பதின்பருவ பிள்ளைகளைச் சிறுபிள்ளைகளாக நினைத்து நடத்தும் பெற்றோரிடமோ அல்லது உறவினர்களிடமோ அவர்கள் கோபத்தை வெளிப்படுத்துகின்றனர்.
நான் வளர்ந்துவிட்டேன். எனக்கு முடிவுகளை எடுக்கத் தெரியும். எனக்கு யாரும் அறிவுரை கூறத் தேவையில்லை போன்றவை எல்லாம் இந்தப் பதின்பருவ மாற்றங்களால் அவர்களுக்குள் முளைவிடும் எண்ணங்கள். இந்த நேரத்தில்தான் உடல் எடை, விளையாட்டு, அழகு, காதல், எதிர்பாலினத்தைப் பற்றி அறிய முனையும் குறுகுறுப்பு, மது மற்றும் போதை பழக்கம் போன்றவற்றின் மீது அதிக கவனம் செலுத்துவர். இதில் நல்ல விஷயங்களில் கவனம் சென்றால் அவர்கள் மிகச் சிறந்த ஆளுமைகளாக வருவார்கள். ஆனால் மாறாக மது மற்றும் போதை பழக்கத்திற்கு அடிமையானால் வேண்டாத பல சிக்கல்கள் வரும்.
பதின்பருவ குழந்தைகள் சுற்றத்திலிருந்து தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக் கொள்வது இயல்பு. நண்பர்களிடம் அதிக பற்றுதலோடு இருப்பதும், வெளி உலகைப் பற்றி தெரிந்து கொள்ள விழைவதும் பதின்பருவத்திற்கே உண்டான குணங்கள். இப்படி இருக்கும் நேரத்தில்தான் இந்த வேண்டாத காரியங்களில் ஈடுபடுவர். பெற்றோரின் கண்காணிப்பிலிருந்து தப்பித்து தனக்குப் பிடித்த வாழ்க்கையை வாழ நினைத்து ஆர்வக்கோளாறு காரணமாகப் பாலியல் தொற்றுகளை வாங்கிக் கொண்டு வந்த இளைஞர்களின் எதிர்காலம் என்னவாகும்?
பதின் பருவத்தில் போதைக்கு அடிமையாவதுதான் பெரும்பாலானவர்களின் வாழ்க்கையைத் தடம் மாற்றியுள்ளது. இது அவர்களின் வயது காரணமாக நடப்பது என்றாலும், அசம்பாவிதங்கள் நடந்துவிட்டால் விளைவுகள் மிகப் பெரியதாக இருக்கும். சமீபத்தில் வெளியான மற்றொரு செய்தியில் மகாராஷ்டிரா மாநிலம் பூனேவில் விலையுயர்ந்த காரை அதிவேகமாக இயக்கி நடந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற இருவர் பலியாயினர். அந்தச் சம்பவத்தில் காரை இயக்கியது பதினேழு வயதுள்ள ஒருவன். அதுவும் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டி இருக்கிறான். ஓட்டுநர் உரிமம் இல்லாதவனிடம் அவ்வளவு விலையுயர்ந்த காரைக் கொடுத்தது யார் தப்பு? பிள்ளைகளை வளர்ப்பதில் பொறுப்பில்லாத பெற்றோர் செய்த தவறால் யாரோ ஒரு அப்பாவி உயிரிழப்பது எந்த விதத்தில் நியாயம்.?
இது குறித்து கட்டாயம் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் இடம்பெற வேண்டும். பருவகால மாற்றங்களைப் பற்றிய விழிப்புணர்வும் அதைக் கையாளும் பக்குவமும் மாணவர்களிடையே ஏற்படுத்தப்பட வேண்டும். வீடுகளிலும் இது குறித்த கலந்துரையாடல்கள் அவ்வப்போது வேண்டும். தன் உடலும் மனதும் எதிர்கொள்ளும் மாற்றத்தை முறையான வழியில் செலுத்துவதற்குப் பிள்ளைகளைப் பழக்கப்படுத்துவது மிக அவசியம். விளையாட்டில் ஈடுபடுத்துவது ஒழுக்கத்தையும் கவனத்தையும் மேம்படுத்தும். இது தவிர பாலியல் தொற்றுகள், சிறுநீரகத் தொற்றுகள் போன்றவற்றைப் பற்றிய தெளிவை ஏற்படுத்தி தனிப்பட்ட சுகாதாரத்தில் அவர்கள் கவனமாக இருப்பதை உறுதி செய்வது நல்லது.
பொதுவாகவே பெண்களைவிட ஆண்களுக்கு இனப்பெருக்கக் காலம் கூடுதலாக இருக்கும். பெண்களுக்கு முப்பது வயதிற்கு மேல் கருமுட்டையின் ஆரோக்கியம் குறையத் தொடங்கும் என்றால் ஆண்களுக்கு விந்தணுக்களின் ஆரோக்கியம் 45 வயதிற்கு மேல் குறையத் தொடங்கும். பெண்களுக்கு மெனோபாஸ் காலத்திற்குப் பிறகு கருமுட்டை வெளியேற்றம் நின்றுவிடும். அதன் பிறகு பெண்களால் கருத்தரிக்க முடியாது. ஆனால் ஆண்களுக்கு அப்படி ஒரு நிகழ்வே இல்லை என்பதால் விந்தணு உற்பத்தி ஆயுட்காலம் வரை நடக்கும். ஒருவேளை ஆண்களைப் போலவே பெண்களும் வாழ்நாள் வரை கருமுட்டையை வெளியேற்ற முடியும் என்றால், அதன் விளைவைப் பற்றி நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை. அவ்வளவு பயமாக இருக்கிறது.
விந்தணுக்களின் எண்ணிக்கை, வேகம், வடிவம், உருவம், நகரும் தன்மை போன்றவற்றை வைத்துதான் விந்தணுவின் ஆரோக்கியம் தீர்மானிக்கப்படுகிறது. இவற்றில் ஏதேனும் ஒன்றில் குறையிருந்தாலும்கூட கருத்தரிப்பதில் சிக்கல் உண்டாகும். ஆனால் இவற்றை உணவு பழக்கவழக்கங்கள், உடற்பயிற்சி முதலியவற்றைக் கொண்டு சரிசெய்ய முடியும். காரணம், ஆண்களின் விந்தணு சுழற்சி ஏறக்குறைய இரண்டரை மாதங்களுக்கு ஒருமுறை நடைபெற்றுக் கொண்டே இருப்பது. பெண்களின் கருமுட்டைகள் தாய் வயிற்றில் கருவாக இருக்கும் போதே தீர்மானிக்கப்பட்டதால், கருமுட்டையின் ஆரோக்கியம் வயதாக வயதாக குறையும். அதற்கு விந்தணுக்களைப் போல் புதுப்பித்துக் கொள்ளும் திறன் கிடையாது.
எழுபது வயது ஆணுடைய விந்தணுவைக் கொண்டுகூடக் கருத்தரிக்க முடியும் என்பதுதான் இந்த விந்தணு சுழற்சியின் அறிவியல் நியதி. ஆனால் இது விந்தணுவின் ஆரோக்கியம் சார்ந்ததால், இது எல்லா வயது முதிர்ந்த ஆண்களுக்கும் பொருந்தும் என்று சொல்லிவிட முடியாது. பெண்களுக்கு முதுமக்கள் என்பவள் முப்பது வயதிற்கு மேல் இருப்பவள். ஆனால் ஆண்களின் முதுமகன் 72 வயதுக்கு மேல் இருப்பவர்.
பெண்ணுடல் அத்தனை மாற்றங்களையும் பெரும்பாலும் 50க்குள் முடித்துவிடுகிறது. ஆனால் ஆணுடலின் மாற்றங்கள் எழுபதைத் தாண்டியும் நிகழ்கிறது. இதில் பதின்பருவ மாற்றங்கள் மிக மிக முக்கியமானவை. அதைக் கண்ணும் கருத்துமாகக் கவனித்து சமூக பொறுப்புள்ள குழந்தையை உருவாக்குவது பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் கடமை. நான் படித்த போது எட்டாம் வகுப்பு அறிவியல் புத்தகத்தில் இருந்த The age of reaching adolescence பாடம் எங்களுக்கு (மாணவிகளுக்கு) பாதிதான் நடத்தப்பட்டது. மீதி சக மாணவர்களுக்குத் தனியாக நடத்தப்பட்டது. அந்தப் பாடத்தில் மாணவர்களுக்கு என்ன நடத்தப்பட்டது என்று எங்களுக்குத் (மாணவிகளுக்கு) தெரியாது. எங்களுக்கு என்ன நடத்தப்பட்டதென்று அவர்களுக்குத் (மாணவர்களுக்கு) தெரியாது. கடைசி வரை அது புரியாத புதிர்தான். இந்த ஒளிவு மறைவுகள்தான் இன்றைய பல பதின்பருவ சிக்கல்களுக்குக் காரணம். வெளிப்படையாக ஆண் மற்றும் பெண்ணுடலில் நடக்கும் மாற்றங்களைப் பக்குவமாக எடுத்துரைத்து, இந்த மாற்றங்களைச் சாதாரண நிகழ்வுகள் என்று மாணவர்கள் மத்தியில் புரிய வைப்பது நல்ல ஆரோக்கியமான, பாலினச் சமத்துவ சமுதாயத்தை உருவாக்கும் வழி.
(தொடரும்)
படைப்பாளர்:
வைஷ்ணவி என்கிற வாசகியாக இருந்து வெண்பா எனும் எழுத்தாளராக, ‘அவளொரு பட்டாம்பூச்சி’ வழியாக எழுத்துலகிற்கு அறிமுகமானவர். SRM கல்லூரியில், மரபணு பொறியியலில் இளநிலை தொழில்நுட்பம் (B.Tech Genetic Engineering) பயின்று, தற்போது அண்ணா பல்கலைக்கழகத்தில் கணக்கீட்டு உயிரியலில் முதுநிலை தொழில்நுட்பம் (M.Tech Computational Biology) பயின்று வருகிறார். ஹெர்ஸ்டோரிஸ் இணையதளத்தில் வெளிவந்த ‘தாயனை’ தொடர், ஹெர்ஸ்டோரிஸ் வெளியீடாக வந்திருக்கிறாது.