ஹெர் ஸ்டோரீஸ் வாசகி ரேவதி அவரின் தாய் முத்துலட்சுமி பற்றி எழுதியிருக்கும் ‘என் அம்மா’ கட்டுரையை உங்களோடு பகிர்வதில் மகிழ்வடைகிறோம்.
சித்தனேந்தல் என்ற சிறிய கிராமத்தில் வீட்டிற்கு மூத்த பெண்ணாகப் பிறந்தவர் என் அம்மா முத்துலட்சுமி. அவருக்கு ஒரு தங்கை, தம்பி. அவர் தாத்தாவின் அப்பா அந்நாளில் அக்கம் பக்கத்து கிராமங்களில் திண்ணைப் பள்ளிக்கூடம் நடத்திய போதும், அம்மா அடிக்கடி உடல்நலம் பாதிக்கப்பட்டதால் அவரைப் பள்ளிக்கு அனுப்பவில்லை. இருந்தபோதும், தன் தங்கை, தம்பி படிப்பதைப் பார்த்தே தமிழ் எழுதப் படிக்க ஆர்வத்துடன் கற்றுக்கொண்டார். அவர் அப்பா இலங்கையிலிருந்து வரும்போது வாங்கி வந்த பல இசைக் கருவிகளில் புல்புல்தாரா, வீணை இரண்டையும் தன் தந்தையிடமே கற்றுக்கொண்டார். அவருக்கு முறையாகக் கற்றுத்தர, அந்தக் கிராமத்திற்கு அருகில் யாரும் அப்போது இல்லையென்று சொல்லியிருக்கிறார் .
அம்மாவுக்கு 15 வயது முடியும் முன்னரே தாய்மாமாவிற்குத் திருமணம் செய்துகொடுத்தார்கள். நாங்கள் நான்கு பிள்ளைகள். இரண்டு பெண்கள், இரண்டு ஆண்கள். கிராமத்தில் ஓரளவு வசதியான குடும்பத்தில் பிறந்து பெரிய வீட்டில் வளர்ந்தவர், சென்னை மேற்கு மாம்பலத்தில் ஒண்டுக்குடித்தனத்தில் வாழ ஆரம்பித்தார். இந்த வாழ்க்கை குறித்து அம்மா வருத்தப்பட்டு யாருமே பார்த்ததில்லை.
சிறந்த அறிவாற்றல் கொண்டவர் அம்மா. எதைச் செய்தாலும் மிக ருசியாகச் செய்யும் அளவுக்கு நேர்த்தியான கைமணம் கொண்டவர். கண்களாலேயே துல்லியமாக அளவு பார்த்து 50, 100 பேருக்குக்கூடச் சமைத்துவிடுவார். இருப்பதை வைத்து எளிமையாகச் சமைத்தாலும் அந்த ருசிக்கு ஈடு இணையே கிடையாது. சென்னை வரும் உறவினர்கள், ’எத்தனை மணிக்கு முத்துலட்சுமி வீட்டுக்குப் போனாலும் சாப்பாடு கிடைக்கும்’ என்று கூறும் அளவுக்கு எப்பொழுதும் இரண்டு பேருக்குச் சேர்த்தே சமைப்பார். கோலம் போட்டாலும் வீட்டைச் சுத்தமாகப் பராமரித்தாலும் அதில் ஓர் ஒழுங்கும் அழகும் காணப்படும். வேலை செய்யும்போது கொஞ்சம்கூட அலட்டிக்கொள்ளவே மாட்டார். உறவினர்களிடம் வேற்றுமை பாராட்டியதே இல்லை.
அம்மா யாருடனும் சண்டையிட்டு நாங்கள் பார்த்ததேயில்லை, அப்பா உள்பட. அக்கம் பக்கத்திலும் அம்மாவுக்குப் பெரிய நட்பு வட்டம் உண்டு. அதில் மொழி, மதம், சாதி எந்தப் பாகுபாடும் இருக்காது. சிறிய கிராமத்தில் சாதி வேறுபாடு அதிகம் பார்க்கும் சூழ்நிலையில் வளர்ந்த அம்மா, எப்படித் தன்னை மாற்றிக்கொண்டார் என்று ஆச்சரியமாக இருக்கிறது. நட்பு வீட்டு விசேஷங்கள் எல்லாவற்றுக்கும் தன் வீட்டு விசேஷசம் போல அக்கறையுடன் உதவுவார்.
தொடர்ந்து விரதம் இருந்து மாங்காடு கோயிலுக்குச் செல்வார். அம்மாவின் நட்புக்காக இஸ்லாமிய தோழியான மும்தாஜும் கோயிலுக்கு வருவார்! நாங்கள் அவரை ’பாபி’ என்று உறவு சொல்லித்தான் அழைப்போம். இந்த நட்பு வட்டத்தில், இவருக்கு மருத்துவம் பார்த்த மருத்துவர்களும் விதிவிலக்கல்ல. நளினி என்ற மருத்துவர் அம்மாவுக்கு நெருக்கம். கிறிஸ்துமஸ் பண்டிகைக்குப் பலகாரம் சுட்டுக்கொடுக்கும் அளவுக்கு நட்பு.
பசி என்று வந்த யாரும் வெறும் வயிறோடு சென்றதே இல்லை. தனக்கு இல்லையென்றாலும், எடுத்துக் கொடுத்துவிடுவார். ஒண்டுக்குடித்தனத்தில் பொதுக்கழிப்பறையைச் சுத்தம் செய்ய வரும் லட்சுமி பாட்டிக்கு ஆஸ்துமா பிரச்னை. அதனால் இட்லி, சாதம் போன்றவற்றைச் சூடாகத்தான் கொடுப்பார் அம்மா.
அம்மா கதை சொல்லும் விதம் அலாதியானது. தெனாலிராமன், விக்ரமாதித்தன், பஞ்சதந்திர கதைகள், அரசர் கதைகள் என விதவிதமான கதைகளை அவர் சொல்லும்போது எவ்வளவு நேரமானாலும் கேட்டுக்கொண்டேயிருக்கலாம்! பக்திப் பாடல்களையும் குழந்தைப் பாடல்களையும் நன்றாகப் பாடுவார். கொசுவைப் பற்றி அவர் பாடும் பாட்டு மிகவும் பிரமாதமாக இருக்கும். விடுகதைகள் ஏராளமாகச் சொல்வார், அதற்கு விடையே ஒரு கதை அளவு விரியும்.
அம்மா மட்டும் படிக்கும் வாய்ப்பைப் பெற்றிருந்தால், இன்னும் அதிக உயரத்தைத் தொட்டிருப்பார் என்று தோன்றும்.
நான் படிக்கும் காலத்தில் தாவரங்கள், பறவைகள் பற்றிய சந்தேகங்களைத் தீர்த்து வைத்தவர் அம்மாதான். அவருக்குத் தெரியாத மூலிகைகளே இருக்க முடியாது. வீட்டில் சமைப்பதோடு, அனைவருக்கும் சொல்லியும் கொடுப்பார். செடிகொடிகள் அதிகம் இருக்கும் சொந்தக்காரர்கள் வீடுகளுக்குச் சென்றால், அவற்றைத் தேடி எடுத்து சமைத்தும் கொடுப்பார்.
அக்கம்பக்கத்துப் பெண்களுக்கு விதவிதமாகச் சடை பின்னி, பூ தைத்து விடுவார். இன்றைய தலைமுறை பேத்திகளும் அவரிடம் தலைபின்னிக்கொள்ள ஆசைப்படுவார்கள். மாறுவேடப்போட்டிகளுக்கு அழகாக வேடம் போட்டுவிடுவார். நான் மோடிமஸ்தான், குறத்தி வேடம் போட்டு பள்ளியில் பரிசு வாங்கியதும் அம்மாவால்தான். மூன்றாம் வகுப்பு படிக்கும்போது, அம்மா தையல் வகுப்புக்குச் சென்று ஜாக்கெட், பாவாடை, கவுன் போன்ற பெண்களுக்கான உடைகளைத் தைக்கக் கற்றுக்கொண்டார். எங்களுக்கு மட்டுமல்லால், அக்கம்பக்கத்துப் பெண் குழந்தைகளுக்கும் அழகாகத் தைத்துக் கொடுப்பார். ஆனால், எப்போதும் எதையும் பணத்திற்காகச் செய்ததும் இல்லை, பணத்தைப் பெரிதாகக் கருதி சேமித்து வைத்ததும் இல்லை. இதனால் பிழைக்கத்தெரியாதவர் என்று பெயர் எடுத்த போதும், தன்னை மாற்றிக்கொண்டதே இல்லை.
நான் ஒருமுறை வீட்டில் கொலு வைக்க வேண்டும் என்று அடம்பிடித்தபோது, முன்னறையில் இருந்த அலமாரியை ஒதுக்கிக் கொடுத்து, ரங்கநாதன் கடைத்தெருவுக்குச் சென்று, சிறு சிறு பொம்மைகளையும் வாங்கிக் கொடுத்தார். நான் பள்ளியிலிருந்து வருதற்குள் களிமண்ணால் மனிதர்கள், பறவைகள், விலங்குகள் பொம்மைகள் செய்து வைத்துவிட்டார். அவற்றிக்குச் சிறு சிறு உடைகளும் தைத்துக் கொடுத்தார். களிமண்ணில் குளம் போன்று அமைத்து, கிண்ணத்தில் நீரூற்றி அதில் வெந்தயம், பாசிப்பயறு தூவி முளைக்க வைத்தார். கொலு மிகவும் அழகாக இருந்ததாகப் பலரும் பாராட்டினர்.
நாங்கள் குடியிருந்த காம்பவுண்டில் திருமண உறவை முறித்துக்கொண்ட ராணி, அதே காம்பவுண்டில் மனைவியை இழந்த கோபியுடன் இணைந்து வாழ ஆரம்பித்தார். அக்கம்பக்கத்து வீட்டுக்காரர்கள் அவதூறு பேசி அவருடன் பேசுவதைத் தவிர்த்தனர். ஆனால், அம்மா மட்டும் எப்போதும் போல் அவர்களிடம் நட்புடன் பழகினார். அது எங்களுக்கு விசாலமான பார்வையையும் வாழ்க்கை பற்றிய புரிதலையும் கொடுத்தது.
நான் ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் படித்தபோது, தேர்வில் மதிப்பெண்கள் குறைந்ததால் மன உளைச்சலுக்கு ஆளானேன். யாருடனும் நன்றாகப் பேசிப் பழக முடியாமல் இருந்தேன். விசிட்டர்ஸ் டே அன்று வந்த அம்மா, என் முகத்தைப் பார்த்ததும் ஏதோ பிரச்னை என்று புரிந்துகொண்டார். விஷயத்தைச் சொன்னவுடன், அன்போடு பேசினார். உடனே எனக்குத் தைரியம் வந்துவிட்டது. உடன் படித்த மாணவியரை அழைத்து, அவர்களிடம் விஷயத்தை எடுத்துச் சொல்லி, எல்லோரிடமும் நட்புடன் பழகவும் சேர்ந்து படிக்கவும் செய்துவிட்டார். அடுத்த தேர்வில் நான் முதல் மதிப்பெண் வாங்கிவிட்டேன்.
அவரின் திறமைகள் அனைத்தும் எங்களுக்கு வாய்க்கப் பெறாவிட்டாலும், அன்பையும், அனைவரையும் அரவணைத்துச் செல்லும் குணத்தையும், செயலில் நேர்த்தியையும், முழுமனத்துடனும் செய்யும் பண்பையும் பெற்றுள்ளோம். இன்று அவர் பேத்தி, பேரன், மட்டுமல்லாமல் கொள்ளுப்பேரன், பேத்திகளிடம் அவரின் திறமைகளின் சாயலை மட்டுமின்றி சிறந்த குணத்தையும் காணும்போது, பெருமிதத்துடன் அந்த அசாத்தியமான மனுஷிக்குச் சொல்கிறோம், நன்றி அம்மா!
பதிவு, படங்கள்:
ரேவதி
ஹெர் ஸ்டோரீஸ் வாசகி
Very nice and inspiring words Revathy, weldone!
Thank you so much Anna..
மிகவும் அருமை. இவர்களின் தனித்துவம் மெய்சிலிர்க்க வைக்கிறது
Nandri brindha
நல்ல கோர்வையாக நேர்த்தியாக இருந்தது.
எழுத்துக்களின் முதிர்ச்சி அருமை.
பாத்திரங்கள் முன் நிறுத்திய விதம் அருமை.
இன்னும் சில பொது நடப்புகளையும் ஆய்ந்து தங்கள் எழுத்துக்களில் வெளிக்கொணர்ந்து அடுத்த கட்டத்துக்கு கடக்குமாறு வேண்டுகிறேன்.
எழுத்து என்பது சிந்தனையை தோண்டும் ஒரு கருவி, அது எழுதும்போது உணரலாம்.
எண்ணத்தின் ஓட்டத்தை எழுத்தின் வேகத்தில் இணைக்க முயற்சித்து வார்த்தைகளை வரிசைப்படுத்தி அர்த்தம் மாறாமல் வெளிப்படுத்தும் செயல் தொடர வேண்டுகிறேன்.
எழுத்தாளர் தானாகவே சிந்தனையாளர் ஆகிறார், நல்ல சிந்தனையாளர் பொறுப்புள்ள பேச்சாளர் ஆகிறார்.
தங்களின் முதல் பரிணாம வளர்ச்சியில் மகிழ்ந்து வணங்குகிறேன்.
Was a great story of Aachi… Loved to read every single line.. Inspired and Interesting.. Keep going.. @Revathy Athai..
அருமையான தாய் பாசம், ஆச்சியின் குணாதிசயங்களை விவரித்தது சிறப்பு,
கட்டுரையாக்கத்தில் இன்னும் சுவாரசியம் இருந்திருக்கலாம்..