ஒரு முறை இரு பாலர் படிக்கும் கல்லூரி ஒன்றில் பாலியல் துன்புறுத்தல் விழிப்புணர்வுப் பட்டறை ஒன்றை நடத்தினோம். நாங்கள் சில தன்னார்வலர்களை அதில் நடிக்க அழைத்தோம். நாடகத்தின் கதை இது தான்- ஆண்கள் பலவீனமானவர்களாக வாழும் ஒரு கற்பனை உலகம் அது.

அங்கு ஒரு கல்லூரி மாணவன் அவனது டியூஷன் வகுப்பில் பெண் ஆசிரியர் ஒருவரால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகிறான். அவன் அதை எதிர்த்தபோது, ​​அவனால் எதுவும் செய்ய முடியாது என்றும் அவர் விருப்பத்துக்கு மாணவன் இணங்கவேண்டும் என்றும் அந்தப் பெண் ஆசிரியர் சொல்கிறார். அச்சமடைந்த மாணவர், அங்கிருந்து தப்பி ஓடிவிடுகிறான்.

இதை எப்படிக் கையாள்வது என்று புரியாமல், மாணவன் முதலில் இதை தனது நண்பனிடம் பகிர்கிறான். அதற்கு அவன் நண்பன் அவனைப் பகடி செய்து, ” உன் மூஞ்சி எல்லாம் ஒரு பொண்ணு பார்த்து உன்னை புடிச்சிருக்குன்னு சொல்வதெல்லாம் நடக்கவே நடக்காத விஷயம். சும்மா காமெடி பண்ணாத”, என்று கூறுகிறான்.

என்ன இவன் நம்மள சீரியஸாகவே எடுத்துக்கலையே என்று மனம் நொந்த அவன், வேறு ஒரு நெருங்கிய நண்பனிடம் கூறுகிறான் அதற்கு அவன், “மச்சி இத வேற யார்கிட்டயும் போய் சொல்லிடாத, அந்த அம்மாவுக்கு நம்ம அம்மா வயசு. அவங்க மேல எல்லாருக்கும் பெரிய மரியாதை இருக்கு. யாரும் உன்னை நம்ப மாட்டாங்க பேசாமல் விட்டுடு. வேற ஏதாவது டியூஷன் சேஞ்ச் பண்ணிக்கோ”, என்கிறான்.

பிறகு அவன் தனது அம்மாவிடம் தயங்கித் தயங்கி விஷயத்தை பகிர, முதலில் ” உனக்கு இந்த வயசிலேயே இப்படி ஆசை போகுதா?”, என்று எரிந்து விழும் அம்மா, பிறகு தனது பிள்ளையாயிற்றே என்று மனம் வருந்தி, ” இத யாருகிட்டயும் சொல்லிடாத… இது வெளிய தெரிஞ்சா என்ன ஆகுமோ? உன்ன பத்தி என்ன பேசுவாங்க? நம்ம குடும்ப கௌரவம் என்ன ஆவரது? நீ படிச்ச வரைக்கும் போதும். முதல்ல உனக்கு ஒரு கல்யாணத்தை பண்ணி விடுறேன்”, என்கிறார்.

இது தெரிந்த அப்பாவும், ” டியூஷனுக்கு போற பையன் யாராவது இப்படி அரை டவுசர் போட்டுக்கிட்டு போவாங்களா? எங்கே போனாலும் ஒழுக்கமா டிரஸ் பண்ணிட்டு போகணும். இவங்க பார்த்தாங்க, அவங்க பாத்தாங்க, கைய புடிச்சாங்க என்று சொன்னா என்ன பண்றது? பேசாம உனக்கு சீக்கிரம் கல்யாணம் பண்றது தான் நல்லது”, என்கிறார்.

” யாரோ செஞ்ச தப்புக்கு என்னோட படிப்பு ஏன் பாழாகணும்? எனக்கு ஏன் கல்யாணம் நடக்கணும்?”, என்ற மனக்குழப்பத்தில் தனது நண்பனுக்குத் தெரிந்த போலீஸ்காரரிடம் அவன் விஷயத்தைப் பகிர்கிறான். அதற்கு அவர், ” நீ என்ன பெரிய ஹீரோவா? Six pack வெச்சிருக்கியா? ஒன்ன ஒருத்தவங்க கைய புடிச்சு இழுத்தாங்க? இத நாங்க நம்பணும்? உங்களுக்கு வேற வேலை இல்லன்னா எங்கள வந்து டிஸ்டர்ப் பண்ணுவீங்களா?”, என்கிறார்.

யாரிடம் போவது என்று தெரியாமல் அவன் மனம் கலங்கி தனியறையில் அமர்கிறான்.

இந்த நாடகத்தை நாங்கள் நடத்திய போது முதலில் எல்லோரும் விழுந்து விழுந்து சிரித்தார்கள்; அதன் பின் அங்கு கனத்த மௌனம் நிலவியது.

” உலகம் இப்படி இருக்கவேண்டும் என்பது எங்கள் ஆசை அல்ல. ஆனால் மறுபக்கத்தின் (பெண்கள்) மேல் உங்களுக்கு empathy உருவாக்கவேண்டும் என்றே இதைச் செய்தோம்”, என்று அவர்களிடம் சொன்னேன்.

இப்படி ஒரு சூழலில் அவர்கள் என்ன செய்வார்கள் என்று அவர்களை நோக்கிக் கேட்டேன். அதில் ஒரு மாணவன், ” அந்தப் பெண் ஆசிரியரை பாலியல் தொழிலாளி என்று குறிப்பிட்டு, அவரது அலைபேசி எண்ணை சமூக ஊடகங்களில் பரப்புவேன்”, என்று சொன்னான். சம்பவம் நடப்பது கற்பனையான பெண்மய சமூகம் என்றும், இவ்வாறு அவன் எழுதுவதால் என்னப் பலனும் ஏற்படப்போவதில்லை என்றும் அவனுக்கு நினைவூட்டினேன். அவ்வாறு அவன் சிந்தித்துக்கூடப் பார்க்கவில்லை என்று சொன்னான்.

ஆம், இவ்வாறான கற்பனை உலகை நினைத்துப் பார்க்கக் கூட நமக்குக் கடினமாக இருக்கிறது!

படைப்பு:

சுடர்விழி

பஞ்சாப் மாநிலத்தில் பணியாற்றிவரும் இந்திய காவல்துறைப் பணி (IPS) அதிகாரி.

All views expressed are personal*