திருக்கோயிலாக உருமாறிய திரு நிழல் தாங்கல்

கதை எழுதுவதென்றால், நாயகன் நாயகியின் அறிமுகம் அல்லது ஊரின் வளமைகளை சொல்லித் தொடங்கி விடலாம். கட்டுரையை எங்கிருந்து தொடங்குவது என்பதில் எப்போதுமே எனக்கு குழப்பமிருக்கும். அதிலும் அய்யா வைகுண்டரின் வரலாற்றை எங்கிருந்து ஆரம்பிப்பது என்பதைப் பற்றி சிந்தித்து வெகுநேரம் குழம்பிப் போனேன்.

அய்யா வைகுண்டரின் பிறப்பிலிருந்து ஆரம்பிக்கலாம் என்றால், அவர் பிறந்த போது, திருவிதாங்கூரில் இருந்த சமூக சூழ்நிலையை சொல்ல வேண்டியதன் அவசியம் குறுக்கிடுகிறது. எனவே இக்கட்டுரையை எழுத வேண்டியதன், இன்றைய சமுதாயச் சூழலின் கட்டாயத் தேவையில் இருந்து எழுத ஆரம்பிக்கிறேன்.

நேற்றைய வரலாற்றைத் தேட வேண்டியுள்ளது, ஆனால் நாளைய வரலாறுக்கு சமகாலத்தில் வாழும் நாமே சாட்சி. ஒரு மதத்தின் வழிபாட்டுத்தலம், மற்றொரு மதத்தின் வழிபாட்டுத்தலமாக உருமாற்றம் பெற்ற வரலாறுகள், உலகில் பல இருக்கின்றன. ஆனால் அவ்வரலாறுகளை எல்லாம்,  கல்வெட்டுகள் மூலமும், இலக்கியங்கள் மூலமும் தேடித்தேடி ஆராய்ந்து அறிய வேண்டியுள்ளது. சம காலத்தில், இந்தியாவில், பாபர் மசூதி, ராமர் கோயிலாக மாறிய சரித்திர அவமான நிகழ்வு அரங்கேறியது. ரத்தம் தோய்ந்த அச்சரித்திர நிகழ்வுக்கு, சமகாலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் நாமே சாட்சி.

அது போல, நான் வாழும் கிராமத்தில் என் கண்ணெதிரே, ஒரு அய்யா வழிபாட்டுத்தலம், வைணவ வழிபாட்டுத்தலமாக உருமாறிக் கொண்டிருக்கிறது. அய்யா வழிபாட்டுக்கும், வைணவ அல்லது  இந்துத்துவ வழிபாட்டுக்கும் இடையிலுள்ள வேறுபாட்டையும் சொல்லியாக வேண்டியுள்ளது.

நிகழும் வரலாற்று நிகழ்வை பார்த்துக் கொண்டிருக்கும் சாட்சி ஒருவரின் சாட்சியமே இக்கட்டுரை.

நாஞ்சில் நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தில், தேர்தல் இன்றி ஊர்த்தலைமையை தேர்ந்தெடுக்கும் நிர்வாகக் கட்டமைப்பு கொண்ட ஒரு சிறிய கிராமம்தான் நான் வசிக்கும் ஊர் – மயிலாடி பேரூராட்சியில் இருக்கும் மயிலாடிப்புதூர். பழங்காலத்தில் இவ்வூரை புளியந்தோப்பு என்று அழைப்பார்களாம்.  மயிலாடிப்புதூரில் மட்டுமல்ல; எனக்குத் தெரிந்து கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி போன்ற மாவட்டங்களின் பெரும்பாலான சிறிய மற்றும் பெரிய கிராமங்களில் ஊர்த்தலைமை, தேர்தல் முறையில் தேர்ந்தெடுக்கப்படுவதில்லை. குடவோலை முறை கண்ட தமிழன் என்று வலைத்தளங்களில் மார்தட்டிக் கொள்பவர்கள், இன்றும் கிராமத் தலைமை நிர்வாகங்களை தேர்தல் நடத்தி ஜனநாயக முறையில் தேர்ந்தெடுப்பதில்லை.

சில ஊர்களில் நிலவுடமையாளர்களும் பண்ணையார் வம்சாவழியினரும் தலைமைப் பொறுப்பில் இருக்கிறார்கள். எனக்குத் தெரிந்த சிற்றூர் ஒன்றில் பதினேழு வருடங்களாக ஒரே மனிதர்தான் தலைவராக இருக்கிறார். ஏனென்றால் அவர்தான் ஊரிலேயே பணக்காரர். அதாவது ஊருக்கு நிறைய பணம் செலவு செய்யக்கூடியவரை தலைவராக தேர்ந்தெடுக்கும் முறையும் உள்ளது. இவையெல்லாம் ஜனநாயகக் கட்டமைப்புக்குள் வருவதில்லை அல்லவா?

நான் வசிக்கும் ஊரின் வழக்கம் பற்றி சொல்கிறேன். இவ்வூரின் ஆண்கள் அனைவரும், ஒவ்வோர் மாதமும், மாதத்தின் முதல் திங்கள்கிழமை அன்று ஊரின் ‘ஸ்ரீமன் நாராயணசுவாமி திருநிழல்தாங்கலின்’ முன்பாகக் கூடுவார்கள். அதை ஊர்க்கூட்டம் என்பார்கள். ஊர் வரி செலுத்தும் அனைத்து ஆண்களும் ஊர்க்கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்பது ஊர்க்கூட்டத்தில் எழுதப்படாத சட்டம். ஊரின் நிர்வாகம் குறித்தும், ஊருக்குப்  பொதுவான ‘இசக்கியம்மன் கோயில்’ மற்றும் ‘ஸ்ரீமன் நாராயணசுவாமி திருநிழல்தாங்கல்’ ஆகியவற்றின் நிர்வாகம் குறித்தும் ஊர்க்கூட்டத்தில் கலந்துரையாடுவார்கள்.

இந்தக் கலந்துரையாடலில் கலந்து கொள்ள ஊரின் பெண்களுக்கு உரிமை கிடையாது. முன்பு ஒருமுறை, ஏதோ ஓர் விவகாரத்தில், ஊர்க்கூட்டத்தில் பெண்கள் கலந்து கொண்டு தங்கள் கருத்தினை சொன்னபோது, ஊர் ஆண்கள் அனைவரும் பெண்களை ஓட ஓட துரத்தியடித்ததாக, ஊரின் வயதான பெண்ணொருவர் சொல்லி கேள்விப்பட்டிருக்கிறேன்.

ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை ஊர்த்தலைவரும், ஊர் நிர்வாகக்குழுவும் மாற்றியமைக்கப்படுவார்கள். ஐந்தாமாண்டின் முடிவில், மாதத்தின் முதல் திங்கள்கிழமையில், ஊரின் ஆண்கள் கூடி கடந்த ஐந்தாண்டு நிர்வாகத்தில் நடைபெற்ற நிறைகுறைகளை அலசுவார்கள். அடுத்த ஐந்தாண்டுக்கான ஊர் நிர்வாகக்குழுவை அமைப்பது பற்றியும் அதன் தலைவர் யார் என்பது பற்றியும் விவாதிக்கப்படும். தலைமை ஒன்றுக்கு ஒரு தலைவரும் பத்து டிரஸ்டிகளும்[உறுப்பினர்களும்]  தேர்ந்தெடுக்கப்படுவார்கள். தலைமைப் பொறுப்புக்கு போட்டியிடும் குழுக்களில், எந்த குழுவுக்கு பெரும்பான்மையான ஆண்களின் ஆதரவு கிடைக்கின்றதோ, அந்தக் குழுவே அந்த ஆண்டின் ஊர்த் தலைமைக் குழுவாகத் தேர்ந்தெடுக்கப்படும். அந்தக் குழுவின் தலைவர், ஊர்த்தலைவர் ஆவார்.

தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவரை ‘ஊர் முதலுடியார்’ என்பார்கள். இந்தத் தேர்தலின் சிறப்பம்சம் யாதெனில், கூட்டத்தில் கூச்சலிட்டு தங்களின் ஓட்டுகளை பதிவு செய்வதற்குக்கூட ஊரின் பெண்களுக்கு அனுமதி கிடையாது. அதாவது ஜனநாயகப்படுத்தப்பட்ட சுதந்திர இந்தியாவின் கிராமங்களில், கிராமத் தலைமை நிர்வாகத்தை தேர்ந்தெடுக்க இன்றும் பெண்களுக்கு வாக்குரிமை கிடையாது.

“பெண்கள் அடைந்துள்ள முன்னேற்றத்தின் அளவைக் கொண்டுதான் ஒரு சமுதாயத்தின் முன்னேற்றத்தை அளவிடுகிறேன்”, என்று சொன்ன  புரட்சியாளர் அம்பேத்கரின் வாக்கியத்தை ஒப்பிட்டுப் பார்த்தால், நம் இந்தியாவின் கிராம சமுதாயங்களின் பரிணாம வளர்ச்சி என்பது இன்னும் கேள்விக்குறியே…

அய்யா வைகுண்டர் பற்றிய என் ஆராய்ச்சியின் தொடக்கம் மயிலாடிப்புதூர் ஊரின் ‘ஸ்ரீமன் நாராயணசுவாமி திருநிழல்தாங்கல்’.

திருநிழல்தாங்கல் எனப் பெயர் இருந்தபோது…

கிட்டத்தட்ட எண்பது ஆண்டுகளாக, அய்யா வழி மரபின்படி பணிவிடைகள் நடைபெறும் அய்யாவின் வழிபாட்டுத்தலம், ஆறு ஆண்டுகளுக்கு முன்பு வரை ‘ஸ்ரீமன் நாராயணசுவாமி திருநிழல்தாங்கல்*’ என்ற பெயரைத்தான் கொண்டிருந்தது.

*அய்யா வைகுண்டரின் ஆணைக்கிணங்க அவரது கருத்துகளைப் பரப்ப இவ்வாறான திருநிழல் தாங்கல்கள் ஏற்படுத்தப்பட்டன. தற்போது ஏறத்தாழ 8000 நிழல் தாங்கல்கள் இந்தியா முழுக்க இருப்பதாக அறியமுடிகிறது.

ஆறு வருடங்களுக்கு முன்பு, 2018 ஆம் ஆண்டு, அப்போதிருந்த ஊர் நிர்வாகத்தினர், ‘ஸ்ரீமன் நாராயணசுவாமி திருநிழல்தாங்கல்’ என்ற அய்யா வழிபாட்டுத்தலத்தின் பெயரை, ‘ஸ்ரீமன் நாராயணசுவாமி திருக்கோவில்’ என்று யாருடைய அனுமதியும் பெறாமல் திடீரென்று பெயர் மாற்றம் செய்தார்கள். அந்த நேரத்தில் ஊரின் நிர்வாகக்குழுவின் பத்து உறுப்பினர்களில் ஒருவராக என் கணவரும் செயல்பட்டார் என்பதால் இந்தத் தகவல்களை என்னால் எளிதாக சேகரிக்க முடிந்தது.

இந்நிலையில், அய்யா வழிபாட்டுத்தலத்தின் பெயர் மாற்றம் குறித்து ஸ்ரீமன் நாராயணசுவாமி நிழல்தாங்கல் வரியை சேர்ந்த  மக்கள் 245 பேர், ஊர் நிர்வாகத்தினரிடம் மனு ஒன்றை அளித்திருந்தார்கள். அந்த மனுவின் பேசுபொருள் பின்வருமாறு,

‘ஸ்ரீமன் நாராயணசுவாமி நம் இன நிழல்தாங்கல் என்கிற அடிப்படை நாமத்தை, 2,3 தலைமுறையாக பின்பற்றி வந்த அய்யா வழி நாமத்தை, அய்யா தாங்கள் திருவிழா பத்திரிகையில் மாற்றி அமைத்துள்ளீர்கள். ஆகவே இனி வரும் காலங்களில், முன்பிருந்த ‘நிழல் தாங்கல்’ என்ற நாமத்தையே பின்பற்றும் படி கேட்டுக்கொள்கிறோம்.

குறிப்பு: அகிலத்திரட்டு அம்மானையிலும் 17வது பட்டாபிஷேக ஏடு வாசிப்பிலும், 366 ஆம் பக்கம் அய்யா இப்படிக்கு இணத்தாங்கல்களில் எழுந்தருளல் என்றிருக்கிறது.’

திருக்கோயில் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்ட பிறகு…

மேற்கூறியவாறு ஊர் நிர்வாகத்திடம் அளிக்கப்பட்ட மனுவில் ஊரைச் சேர்ந்த 245 நபர்கள் கையெழுத்திட்டிருந்தார்கள். ஆனால் ஊரின் நிர்வாகம் அய்யா வழிபாட்டுத்தலத்தின் பெயரை, முன்பிருந்தபடி ‘நிழல்தாங்கல்’ என்று மாற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

பெரும்பாலான மக்களைப் போலவே நானும், திருக்கோயிலுக்கும் நிழல்தாங்கலுக்கும் இடையேயான வேறுபாட்டை அறியாதவளாக, ‘திருக்கோயில்’ என்ற பெயருக்குப் பின்னால் இருக்கும் ஆபத்தான அரசியல் பற்றிய புரிதல் இல்லாதவளாகவே இருந்தேன். மேற்கூறிய சம்பவம் பற்றி யாராவது கேட்டால், “எந்த பெயராக இருந்தால் என்ன? எல்லாம் சாமிதானே” என்று பொதுப்புத்தியில் பதிலளிக்கும் முட்டாளாகத்தான் நானுமிருந்தேன்.

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, சொந்த வாழ்க்கையின் நிர்பந்தத்தால் என்னைத் தனிமை பிடித்தது. தனிமையை வெல்ல ஏதேதோ செய்து இறுதியாக புத்தகங்களைப் பற்றினேன். புத்தகங்களின் வாசிப்பு புனைவுக்கதைகள் வழியாக எழுத்துக்குள் என்னை இழுத்துச் சென்றது. புனைவுக்கதைகள் வெறும் வெற்றுப் பொழுதுபோக்கு மட்டுமே என்பதையும் வாசிப்பின் மூலமே அறிந்தேன். வெறும் கற்பனை புனைவுகளை எழுதக்கூடாது என்று எனக்குள் தீர்மானம் செய்து கொண்ட நேரம் அது. பெரியார், அம்பேத்கர், கார்ல் மார்க்ஸ் ஆகியோரின் எழுத்துகளையும், அந்த பெரியவர்களின் வழிவந்த தோழர்கள் பலரின் எழுத்துகளையும் படிக்க நேர்ந்த போது, நினைவு தெரிந்த நாள் முதலாக என் மனதுக்குள் ஒலித்துக் கொண்டிருந்த  கேள்விகள் பலவற்றுக்கும் விடை கிடைத்தது.

பெண் என்ற ஒரே காரணத்தால், பதின்மூன்று வயதிலேயே என் சிறகுகள் ஏன் வெட்டப்பட்டன? கூடைப்பந்தாட்டத்தில் மாவட்ட அளவில் கலந்து கொள்வதற்காக எனக்கு கிடைத்த வாய்ப்பு, குட்டைப்பாவாடையை காரணம் காட்டி ஏன் மறுக்கப்பட்டது? அதே வயதில் என் தம்பிக்கு தொடை தெரியுமளவிற்கு டிரவுசர் அணிய ஏன் தடை விதிக்கப்படவில்லை? National service scheme ல் இணைய நினைத்த எனது ஆசை, “பத்து நாள் வெளியூரில், ராத்தங்கும் கேம்ப் பெண் பிள்ளைகளுக்கு ஏற்புடையதல்ல” என்ற காரணம் காட்டி ஏன் அழிக்கப்பட்டது? பெண் என்ற ஒரே காரணத்தைக் காட்டி என் மேற்படிப்பின் குரல்வளையை இரக்கமின்றி ஏன் நெறித்தார்கள்? கல்யாணத்துக்கு பிறகு, குற்றுயிரும் குலையுயிருமாகக் கிடந்த என் தனி மனித விடுதலையின் ஆக்சிஜன் குழாயை ஏன் அடைத்தார்கள்? பூட்டி வைத்த வீட்டுக்குள் இணையதளத்தின் மூலம் உலகை பார்த்துக் கொள்ளலாமே தவிர நிஜ உலகத்தின் விடுதலைக் காற்றை சுவாசிக்க முடியாமல் நான் கட்டுண்டதேன்? விதவைப் பெண்ணொருத்தியின் தாய் தகப்பன், “நாங்க அவகிட்ட கேட்டோம், அவ ரெண்டாங்கல்யாணம் வேண்டாம்னு உறுதியா சொல்லிட்டா” என்று சொல்லிக் கொள்வதில், தங்கள் கௌரவம் உயிருடன் இருப்பதாக நம்புவதேன்?

இது போன்ற எண்ணிலடங்கா கோபக்கனலும் கண்ணீரும் தோய்ந்த கேள்விகளுக்கான பதில்கள் அவை. ஆண்டாண்டு காலமாக மூடநம்பிக்கைகளைக் கொண்டு கட்டமைக்கப்பட்ட சமுதாயத்தில், இன்னும் அழிக்கப்படாமல் இருக்கும் சாதிகள் மற்றும் மதங்களின் கோர வடிவம்தான் இந்த சமுதாயத்தையும், சமுதாயத்தின் பெண்களையும் சீரழித்துக் கொண்டிருக்கிறது என்ற உண்மை வரலாற்றை  புத்தக வாசிப்பின் வழியே அறிந்தேன்.

அது 2022 ஆம் வருடம், மே மாதம். அப்போது மயிலாடிப்புதூரின் ஊர் நிர்வாகத் தலைமை மீண்டும் மாறியிருந்தது. என் கணவர் ஊர் நிர்வாகக்குழு உறுப்பினராக இல்லை.

நான் மேலும் புத்தகங்களைத் தேடித் தேடி அலசிக் கொண்டிருந்த நேரம் அது. அப்போது எதேச்சையாக தி. லஜபதி ராய்  அவர்களின் நேர்காணல் ஒன்றை யூடியூப் செயலியில் பார்த்தேன். அவர் எழுதிய ‘நாடார் வரலாறு கருப்பா காவியா?’ புத்தகத்தை வாங்கிப் படித்தேன். என் வீட்டு முதியவர்களின் வாய் வழியாக கேட்டறிந்த, நாஞ்சில் நாட்டின் வரலாற்று சம்பவங்களை, தி. லஜபதி ராய் அவர்களின் எழுத்தின் வழியாக உயிரூட்டமுள்ள காட்சிகளாகப் பார்க்க நேர்ந்தது.

அப்போதுதான் அந்த பெரும் சர்ச்சை, ஊருக்குள் பேசுபொருளாக கிளம்பியிருந்தது. மயிலாடிப்புதூர் ஊரைச் சேர்ந்த ஜெயச்சந்திரன் என்பவர், அய்யா வழிபாட்டுத்தலத்தின் பெயரை திருக்கோயில் என்று மாற்றியது குற்றம் என்று காவல்துறையில் அளித்த புகார்தான் சர்ச்சைக்கான காரணம்.

ஜெயச்சந்திரன் கன்னியாகுமரி காவல்துறை துணை கண்காணிப்பாளருக்கு அளித்த புகாரில்,

‘எங்கள் ஊரைச்சேர்ந்த அய்யாவழி மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகிற நிர்வாகத்தினர் திருநிழல்தாங்கலை நிர்வகித்து வருகிறார்கள். 2018 ல் திருநிழல்தாங்கல் என்ற பெயரை எந்தவித தீர்மானமும் இல்லாமல் தன்னிச்சையாக மாற்றுவதற்கு முற்பட்டு, வழிபாட்டுத்தலத்தின் முன் நடையில் ‘திருக்கோயில்’ என்று எழுதினார்கள். அதை செய்யக்கூடாது என்று சொல்லி, 17.12.2018 ல் 245 நபர்கள் கையெழுத்திட்டு ஊர்த்தலைவர் மற்றும் நிர்வாகக் குழுவினருக்கு மனு செய்திருந்தோம். இப்போது ஊர் நிர்வாகம் மாறியிருக்கிறது. அவர்கள் அதிரடியாக திருக்கோவில் என்று பெயர் சூட்டுவதற்கு தீர்மானம் எதுவும் நிறைவேற்றாமல் முயற்சி செய்து வருகிறார்கள். எங்கள் ஊர் நிர்வாகத்தை சேர்ந்த 90 சதமானத்துக்கு மேற்பட்டவர்கள் திருநிழல்தாங்கல் என்ற பெயரை திருக்கோயில் என்று மாற்றக்கூடாது என்று முறையிட்டு வருகிறார்கள். இந்நிலையில் நேற்று இரவு ஊர் நிர்வாக தலைவரும், நிர்வாக உறுப்பினர்கள் சிலரும், ஏற்கனவே நிழல்தாங்கலை புனரமைத்த போது, ‘ஸ்ரீமன் நாராயணசுவாமி திருநிழல்தாங்கல்’ என்று 23.4.1998 வருடம் வைத்த கல்வெட்டை அப்புறப்படுத்த முயற்சித்தார்கள். 18.5.2002 அன்று கல்வெட்டை அப்புறப்படுத்த அவர்கள் முயற்சித்த போது, அய்யா வழி மக்கள் எதிர்த்ததால் அந்த முயற்சி நடத்தப்படவில்லை. எப்படியாவது கல்வெட்டை அப்புறப்படுத்த முயற்சிப்பார்கள். அதன் மூலம் சட்டம் ஒழுங்கு பிரச்சினை உருவாகும். எனவே தங்கள் சமூகம் தலையிட்டு தக்க நடவடிக்கை எடுத்து நீதி வழங்க தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்’

என்று கோரிக்கை வைத்திருந்தார்.

சில ஆண்டுகளுக்கு முன் திருநிழல்தங்கல் எனப் பெயர் இருந்தபோது…

காவல்துறையினர் ஊர் நிர்வாகக்குழு உறுப்பினர்களை விசாரித்தார்கள். ஊர்க்கூட்டத்தில் ஊர் பிரச்சினையை காவல்துறைக்குக் கொண்டு சென்றது மாபெரும் குற்றம் என்று ஜெயச்சந்திரன் மீது குற்றம் சாட்டினார்கள் ஊர் நிர்வாகத்தினர். அய்யா வழிபாட்டுத்தலத்தின் பெயர், நிழல்தாங்கல் என்பதுதான் சரி என்று ஒருசாராரும், திருக்கோயில்தான் சரி என்று ஒருசாராரும் வாதிட்டார்கள்.

ஊரின் தெருக்களில் பெண்களும் ஆண்களும் இதைப் பற்றி பேசினார்கள்.

“அய்யாவின் இருப்பிடத்துக்கு நிழல்தாங்கல்தான் சரியான பெயர்… நீ இதைப்பற்றி ஊர்க்கூட்டத்தில் பேசு” என்று என் மாமியார் என் கணவரிடம் சொன்னதாக, என் கணவர் என்னிடம் சொன்னார். ‘நாடார் வரலாறு கருப்பா காவியா?’ என்ற புத்தகத்தைக் கையில் வைத்திருந்த நான், நிழல்தாங்கல் என்ற பெயர்தான் சரி என்றேன்.

‘நிழல்தாங்கல்தான் சரி’ என்று ஊரைச் சேர்ந்த என் தோழிப்பெண்களிடம் நான் வாதிட்ட போது, “உன் புருசனும் பொறுப்புல இருந்தப்பதானே பேர மாத்திருக்காவ?,” என்று என் வாயை அடைத்தார்கள்.

இது குறித்து என் கணவரிடம் கேட்ட போது, “பெரியவங்க பேர மாத்தும் போது நான் என்ன செய்ய முடியும்? எல்லாரையும் போல அமைதியா இருந்துட்டேன்”, என்றார் அவர்.

நிழல்தாங்கல் பற்றியும், அய்யா வழி உருவான வரலாறு பற்றியும் அய்யா வழி மக்களிடம் காணப்படும் அறியாமை என்னை வியப்புக்குள்ளாக்கியது. நான் பிறப்பால் அய்யா வழியைச் சேர்ந்தவள் அல்ல. மிகவும் பிற்போக்கான குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவள்.

அய்யா வைகுண்டர் பற்றிய புத்தகங்களைத் தேடித்தேடி படிக்க ஆரம்பித்தேன். ஊரின் அரசியலை கவனிக்கவும் ஆர்வம் காட்டினேன்.

சமீபத்திய திரு ஏடு வாசிப்பு திருவிழா அழைப்பிதழில் ‘திருக்கோயில்’ என்ற பெயர்

அய்யா வைகுண்டரின் வாழ்க்கை வரலாற்றை படித்துணர்ந்தபோது, பெரிய குற்றம் ஒன்று நிகழ்ந்துவிட்டது என்பதை அறிந்தேன். எனவே அய்யா வைகுண்டரின் வாழ்க்கை வரலாறைப் பற்றியும், நிழல்தாங்கல் என்ற பெயரின் அவசியம் பற்றியும்  கட்டுரை ஒன்றை எழுதி, காவல்துறைக்கு புகார் கொடுத்த ஜெயச்சந்திரன் சகோதரரிடம் கொடுத்ததோடு, அக்கட்டுரையை முகநூலில் பதிவிட்டேன். மேலும் அக்கட்டுரையை என் குரலிலேயே வாசித்துப் பதிவு செய்து, எங்கள் ஊரைச் சேர்ந்த நண்பர்கள் எல்லோருக்கும் வாட்ஸ் ஆப் செயலியில் அனுப்பினேன். அக்கட்டுரையில் பெரும்பகுதி தி.லாஜபதிராய் “நாடார் வரலாறு கருப்பா காவியா” புத்தகத்தில் சொன்னதுதான்…

இதற்கு எதிர்வினை எப்படி இருந்தது?

தொடரும்…

படைப்பாளர்:

சக்தி மீனா

பட்டதாரி, தொழில் முனைவர். பெரியாரின் சித்தாந்தத்தால் ஈர்க்கப்பட்டவர். பொழுதுபோக்காக ஆரம்பித்த எழுத்து, பெரியாரின் வழிகாட்டுதலில், பொதுவுடைமை சித்தாந்தம் நோக்கி நகர்ந்தது. எதுவுமே செய்யவில்லையே என்ற தன் மனக்கவலையைக் களைய, படித்துக்கொண்டும் எழுதிக்கொண்டும் இருக்கிறார்.