”என்னைச் சராசரி மனிதராக இல்லாமல், சமூகச் சிந்தனைகொண்ட மனுஷியாக மாற்றிய பெருமை தொழிற்சங்கத்துக்குதான் உண்டு. சமூக முன்னேற்றத்தில் என் பங்கும் இருக்கிறது என்ற எண்ணமே என் வாழ்க்கைக்கு அர்த்தத்தைக் கொடுக்கிறது.”

மகாலட்சுமி

2006ஆம் ஆண்டு திருப்பூர் சிஐடியு மாநாட்டில் மகாலட்சுமியைச் சந்தித்தேன். அவரின் செயல்பாடு என்னைக் கவர்ந்தது. அற்புதமான பேச்சாளர். அயராமல் மக்கள் பணியாற்றுவதே இவரின் சிறப்பு. மகாலட்சுமியின் செயல்பாடுகளுக்கும் முன்னேற்றத்திற்கும் உறுதுணையாக நிற்பவர், அவரின் இணையர் மூக்கையா.

மகாலட்சுமி மதுரையைச் சேர்ந்தவர். விவசாயக் குடும்பம். இவர் ஆறாம் வகுப்பு படிக்கும்போதே தந்தையை இழந்துவிட்டார். 12ஆம் வகுப்பு முடித்ததும் 19 வயதில் மூக்கையாவுடன் திருமணம். வறுமை, என்ன செய்வதென்று தெரியவில்லை. வேலை தேடி சிவகாசிக்குச் சென்றார்கள். மகாலட்சுமி தையல் கற்றுக்கொண்டார். 2002ஆம் ஆண்டு குழந்தைத் தொழிலாளர் பள்ளியில் ஆசிரியராக வேலைக்குச் சேர்ந்தார். பள்ளியில் இடை நின்ற குழந்தைகளை மீட்டெடுத்து, அவர்களுக்குக் கல்வி கொடுத்து, பணியில் சேர வைத்து, நன்றாக வாழவைப்பதுதான் இந்தப் பள்ளியின் நோக்கம். குழந்தைத் தொழிலாளர் பள்ளி மாலையில்தான் நடைபெறும். விருதுநகர் லட்சுமணாபுரத்தில் உள்ள சிஐடியு இயக்கமும், ஐஎல்ஓவும் நடத்தும் பள்ளி. 52 மாணவர்கள் இதில் இருந்தனர்.

“பள்ளி மூலம் நான் புதிய உலகத்தைக் கண்டேன். மாணவர்களுக்கு நானும் கற்றுக்கொடுத்தேன். மாணவர்களிடமிருந்து நானும் கற்றுக்கொண்டேன். மாணவர்களுடன் நானும் முன்னேற்றம் கண்டேன். எங்கள் குழந்தைத் தொழிலாளர் பள்ளியை முதலில் அரசு ஏற்றுக்கொள்ளவில்லை. பின்னர் குழந்தைகளின் திறமைகளைக் கண்டு அங்கீகரித்தது. மாவட்ட ஆட்சியரே என்னிடம் 2 அரசு பள்ளிகளை சிஐடியு ஏற்று நடத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அவற்றையும் திறம்படச் செய்தேன்.”

“தமிழ்நாடு அறிவியல் இயக்கம் நடத்துகிற தேசிய குழந்தைகள் அறிவியல் திருவிழாவில் எங்கள் மாணவர்களின் ஆய்வுக் கட்டுரைகளையும் சமர்ப்பித்தோம். எங்கள் மாணவர்களின் கட்டுரைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, டெல்லி சென்றனர். அன்றைய குடியரசுத் தலைவர் அப்துல் கலாமைச் சந்தித்து, பதக்கத்தைப் பெற்றனர். இதை என் வாழ்நாளில் மறக்கவே முடியாது” என்கிறார் மகாலட்சுமி.

2003இல் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் நடத்தும் ’துளிகள்’ என்ற பெண்கள் மேம்பாட்டு சங்கத்தில் இணைந்தார். பெண்களிடம் நெருங்கிப் பழகும் வாய்ப்பு கிடைத்தது. மக்களுடன் எப்படிப் பேச வேண்டும், ஒரு விஷயத்தை எப்படிக் கையாள வேண்டும், பிரச்னைகளை எப்படிச் சமாளிக்க வேண்டும் என்பதையெல்லாம் இங்குதான் மகாலட்சுமி கற்றுக்கொண்டார். நிறைய புத்தகங்களை வாசித்தார். அந்த வாசிப்புதான் அவரை மேலும் மேலும் முன்னேற்றத்துக்கு அழைத்துச் சென்றது. மிகச் சிறந்த பேச்சாளராக மாறினார்.

சிவகாசி பட்டாசு தீப்பெட்டி தொழிலாளர் சங்கத்திலும் சேர்ந்து பணியாற்றினார். 2006-ல் விருதுநகர் மாவட்டத்தின் சிஐடியுவின் முழு நேர ஊழியராக இணைந்தார். அதே ஆண்டு பட்டாசு தீப்பெட்டி தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட பொருளாளராகத் தேர்வு செய்யப்பட்டார்.

“ஒரு கவளம் சோற்றுக்காக, குழந்தைகளின் படிப்புக்காக, வேறு வாழ்வாதாரமே இல்லை என்பதற்காகத் தான் பட்டாசு தொழிற்சாலைகளில் தொழிலாளர்கள் வேலை செய்கிறார்கள். அந்தத் தொழிலில் விபத்து ஏற்படுவது சகஜம். விபத்து இல்லா தொழிலாக மாற்ற வேண்டும் என்று தான் எங்கள் சங்கம் போராடுகிறது. தொழிற்சங்கத்தால் மட்டுமே தொழிலாளர்களின் நிரந்தர பாதுகாப்புக்கும் பணிக்கும் உத்தரவாதம் அளிக்க முடியும் என்பதால், நான் இந்தச் சங்கத்தில் இணைந்து வேலை செய்கிறேன்” என்று சொல்லும் மகாலட்சுமி, தற்போது விருதுநகர் மாவட்டத்தின் பட்டாசு தீப்பெட்டி தொழிற்சங்கத்தின் தலைவராகவும் இருக்கிறார்.

2003-ல் உழைக்கும் பெண்கள் மாநில மாநாட்டிற்குச் சிறப்பு அழைப்பாளராகச் சென்றார் மகாலட்சுமி. 2005இல் திருவள்ளூரில் நடந்த மாநில மாநாட்டில் உழைக்கும் பெண்கள் மாநிலக் குழு உறுப்பினரானார். 2009-ல் கடலூரில் நடைபெற்ற சிஐடியு மாநில மாநாட்டில் மாநிலச் செயலாளரானார்.

மயிலாடுதுறை ரயில்வே பெண் தொழிலாளர்களுக்குப் பாலியல் பிரச்னைகள் ஏற்பட்டன. உடனே அந்தப் பெண்களைக் காப்பாற்றும் நடவடிக்கைகளில் இறங்கினார் மகாலட்சுமி. உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக் குழு மூலம் போராட்டத்தை நடத்தினார். பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டவர் உயர் அதிகாரி என்பதால், பாதிக்கப்பட்ட பெண்கள் பிரச்னையை வெளியில் சொல்லத் தயங்கினர். அவர்களுக்கு நம்பிக்கையூட்டினார். 5 நாட்கள் தொடர் போராட்டம். பல்வேறு மாவட்டங்களுக்கும் போராட்டம் பரவியது. குடும்பத்தோடு அமர்ந்து போராடினர். பல்வேறு அமைப்புகளும் ஒற்றுமையாகப் போராடியதன் விளைவாக, அந்த அதிகாரி தற்காலிக இடைநீக்கம் செய்யப்பட்டு, பணிமாற்றமும் செய்யப்பட்டார்.

சிவகாசி தீப்பெட்டி தொழிற்சாலையில் நேரடியாக ஒன்றரை லட்சம் பேரும், வீடுகளிலிருந்து இரண்டு லட்சம் பேரும் பணியாற்றுகிறார்கள். பேக்கிங், லோடிங், ஏஜென்சி, சேல்ஸ் எல்லாம் சேர்த்தால் 8 லட்சம் பேர் ஈடுபடுகிறார்கள். தீப்பெட்டி பட்டாசு தொழில் என்பது கொஞ்சம் ஆபத்தானது. அதிக வெயிலும் கூடாது; அதிகக் காற்றும் கூடாது. கூடுதல் வெயில் இருந்தால் வெடி விபத்து ஏற்படலாம். தொழிற்சாலையில் விதிமுறைகள் சரியாகக் கடைப்பிடிக்காவிட்டாலும் விபத்துகள் ஏற்படும். பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வாங்கித் தருவதற்கும் போராட்டம் நடத்த வேண்டியிருக்கிறது.

”பட்டாசு தொழில் தனியார் முதலாளிகள் நடத்துவது. வெடிவிபத்து ஏற்படுகிறது என்பதால், தொழிலாளியைக் காக்கவும் போராட வேண்டியிருக்கிறது. தொழிலைக் காக்கவும் போராட வேண்டியிருக்கிறது. மத்திய அரசு சூழலைக் காக்க பட்டாசு தொழிலை முடக்கப் பார்க்கிறது. பட்டாசு மட்டுமா சூழலைக் கெடுக்கிறது? “

“எத்தனையோ தொழிற்சாலைகள் நச்சுப் புகையையும் ரசாயனத்தையும் வெளியிட்டு, சூழலை மாசுபடுத்துகின்றன. பசுமை பட்டாசு தயாரிக்க வேண்டும். உச்ச நீதிமன்றத்தில் என் பெயரில் ஒரு வழக்கு தொடுக்கப்பட்டு நடந்துகொண்டிருக்கிறது. இந்த கொரோனா காலகட்டத்தில் எல்லோரையும் போலவே பட்டாசு தொழிற்சாலையிலும் உற்பத்தி முடக்கம். பெண்களுக்கு வாழ்வாதாரப் பிரச்னை. வெடிமருந்துடன் வேலை செய்வதால் வரும் வியாதிகளுக்கு என்ன செய்வது? தொழில் ரீதியான நோய்களுக்கு இழப்பீடும் காப்பீடும் போதுமான அளவு கிடைப்பதில்லை. எல்லாவற்றையும் மாற்ற வேண்டும்” என்கிற மகாலட்சுமி, சிஐடியு தொழிற்சங்கத்தின் மாவட்டத் தலைவரான முதல் பெண் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் மாநிலச் செயலாளராகவும் பணியாற்றுகிறார்.

முகங்கள் தொடரின் முந்தைய பகுதிகள்:

கட்டுரையாளர்

மோகனா சோமசுந்தரம்

ஓய்வுபெற்ற பேராசிரியர். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் முன்னாள் தலைவர். 35 ஆண்டுகளாக அறிவியலை மக்களிடம் பரப்பி வருகிறார். துப்புரவுத் தொழிலாளர்களுக்காகப் போராடி வருகிறார். ‘மோகனா – ஓர் இரும்புப் பெண்மணி’ என்ற இவரின் சுயசரிதை சமீபத்தில் வெளிவந்து, வரவேற்பைப் பெற்றுள்ளது. அறிவியல் நூல்கள், கட்டுரைகள் எழுதியிருக்கிறார்.