சந்தியா பதிப்பகம் வெளியிட்ட, ‘இந்தியப் பயணக் கடிதங்கள்’ என்ற புத்தகத்தைச் சமீபத்தில் வாசித்தேன். பல நினைவுகளைக் கிளர்த்திய புத்தகம். இங்கிலாந்தைச் சேர்ந்த எலிஸா ஃபே (Elisa Fay) என்னும் 24 வயதுப் பெண் தன் கணவருடன் 1779ஆம் ஆண்டு இங்கிலாந்திலிருந்து இந்தியாவுக்குக் கிளம்பினார். இந்தியாவில் பாரிஸ்டராகப் பதிவு செய்து வளமாக வாழலாமென்பது அவர் எண்ணம். கடல்வழி மார்க்கத்தில் வராமல் தரைவழியாக பிரான்ஸ், இத்தாலியிலிருந்து ஜெனோவாவுக்குப் பயணித்து அங்கிருந்து மரக்கலம் மூலம் கெய்ரோவுக்கு வந்தார். அங்கிருந்து பாய்மரக் கப்பலில் கள்ளிக்கோட்டையில் வந்திறங்கினார்.

பயணத்துக்கு இடையில் வழிப்பறிக் கொள்ளையர்களிடம் சிக்கிப் பொருள்களை இழந்தார், சிறைப்படுத்தப்பட்டார்; இப்படிப் பல்வேறு இன்னல்களுக்கிடையில் கோவா, சென்னைவழி கல்கத்தாவை அடைந்தார். இதற்கிடையில் அவர், ஓராண்டுக் காலம் தன் பயண அனுபவங்களைத் தாய்க்கும், சகோதரிக்கும் தொடர்ந்து எழுதினார். இந்தக் கடிதங்கள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு சந்தியா பதிப்பகம் வாயிலாக வெளிவந்துள்ளது. (இந்த நூலின் ஆங்கில மூலத்தை இங்கே வாசிக்கலாம்).

250 ஆண்டுகளுக்கு முன்னால் எழுதப்பட்ட கடிதங்களை, பெண்ணின் பயண அனுபவங்களைப் படிக்கையில் இப்போதும் பிரமிப்பாகவே இருக்கிறது. இருப்புப் பாதையோ, மோட்டார் வாகன வசதியோ இல்லாத காலம். பள்ளத்தாக்குகளிலும் மலைத்தொடர்களிலும் பயணித்து கடும்வெயில், பனி, மழை, குளிரென அவரும் அவருடைய கணவரும் அலைந்திருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. பயணத்தில் தான் சந்தித்த மனிதர்கள், அவர்களைப் பற்றிய வருணனைகள், நிலக்காட்சிகள், புதுமையான செய்திகள் எனப் படிக்கத் தூண்டும் வகையில் அக்கடிதங்களை எழுதியிருப்பதே நூலின் சிறப்பு. அத்தனை துன்பங்களை அனுபவித்து கல்கத்தா வந்து சேர்ந்தபின்னும், அவர் வாழ்வு நிம்மதியாயில்லை. கணவனுடன் ஏற்பட்ட கருத்து மாறுபாட்டால் விவாகரத்துப் பெற்று மீண்டும் இங்கிலாந்துக்கே சென்று, பின் இந்தியாவை விரும்பித் திரும்பவும் இங்கேயே வாழ்ந்து மறைந்தார்.

‘ஹைதர் அலியால் கள்ளிக்கோட்டையில் சிறைபிடிக்கப்பட்ட அனுபவங்கள்’ என்ற தலைப்புடன் எலிசா ஃபேயின் நூல், archive.org

இந்நூலைப் படிக்கும்போதே பள்ளியில் செல்லும் சுற்றுலாவுக்குக்கூட அனுமதிக்கப்படாத என் பால்யத்தை நினைத்துக் கொண்டேன். ஒவ்வொரு முறை வெளியூர் கிளம்பும்போதும் ‘போயே தீரணுமா?’ என்று கேட்கும் அம்மா நினைவுக்கு வந்தார். அப்போதுதான் ஏதேனும் வேலை தருவார்; நூறு கேள்விகள் கேட்பார்; இத்தனை வயதிலும் மகள் தனியாகச் செல்வதில் அவருக்கு உள்ள தயக்கம் காரணமாக எப்படியேனும் என் பயணத்தைத் தள்ளிப்போடச் சிறுபிள்ளைத்தனமாக முயல்வார். அவருக்காகவே பெரும்பாலும் ரயில் பயணத்தைத் தவிர்த்து விடுவேன்.

பெண் தனித்துப் பயணிப்பது இன்றைக்கும் சாகசமாகவே பார்க்கப்படுகிறது. பெண்கள் தனித்துக் கிளம்புவது இன்னும் இயல்பாகவில்லை.

நண்பர்களின் சாவித்திரிபாய் புலே பெண்கள் குழுவை அறிவேன். அங்கொன்றும் இங்கொன்றுமாக, பெண்களின் பயணக்குழுக்கள் இருப்பதையும் கேள்விப்படுகின்றேன். தனித்துப் பயணிக்கும் பெண்களைப் பற்றியும் அறிய முடிகிறது. இப்படியான குழுக்கள் பெருக வேண்டும். நாள்கணக்கில், மாதக்கணக்கிலான பயணமென்பதில்லை. வீட்டிலிருந்து பெண் வெளியில் வருவது என்பதே இன்னும் பலவிடங்களில் சாத்தியப்படாதிருக்கும் துயரத்தை என்னென்பது?

வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டி வைத்த விந்தை மனிதர் எல்லாம் தலை கவிழ்ந்து விட்டதாக பாரதி பாடிச் சென்றாலும் இன்னும் பெண்கள் வெளியே வருவதில் நூறு சிக்கல்கள் இருக்கிறது என்பது கசப்பான உண்மை. நவீன அறிவியலும் அரசியலும் அதற்கான தொடக்கத்தை வித்திட்ட பிறகு சமூகம் வேறுவழியின்றி அதையேற்கத் தொடங்கியிருக்கிறது.

திருவண்ணாமலையில் நான் ஆசிரியர் பணியில் சேர்ந்த புதிதில் கவனித்திருக்கிறேன். கிராமத்திலிருக்கும் மேனிலைப் பள்ளி அது. பள்ளியில் மாணவியர் எண்ணிக்கை குறைவாகவே இருக்கும். அரசின் கட்டணமில்லா பேருந்துப் பயண அட்டையுடன் மாணவர்கள் பயணித்த காலம். மாணவர் கூட்டத்தைப் பார்த்தாலே பேருந்து பல அடிகள் கடந்துதான் நிற்கும். காசற்ற மாணவர் கூட்டம் பேருந்தில் ஏறுவதை நடத்துநர் விரும்ப மாட்டார். பாதி ஏறிக்கொண்டிருக்கும்போதே விசிலடிக்க, ஏறியும் ஏறாமலும் மாணவியர் பின்னால் ஓடிவருவதைப் பார்க்கவே வருத்தமாக இருக்கும். அப்போதுதான் 2001 – 2002இல் பள்ளிகளில் பெண்கல்வியை ஊக்குவிக்க மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டித் திட்டம் அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவால் கொண்டுவரப்பட்டது.

விலையில்லா மிதிவண்டி வழங்கும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா

யாரிடமும் இடி வாங்காது, பேருந்தில் நசுங்காது கம்பீரமாக மிதிவண்டியில் மாணவிகள் பட்டாம்பூச்சிகளைப்போல் பறப்பதைக் கண்டபோது பெரும் மகிழ்ச்சி. மிதிவண்டிக்காகவே பத்தாம் வகுப்புக்குப் பிறகும் படிக்க வைத்தார்கள். கல்வியோடு தன்னம்பிக்கையும் கிடைத்தது. மாணவியர்க்கு மட்டுமாக இருந்த திட்டம் பின்னர் மாணவர்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டது. முதல்வர் ஸ்டாலின் பெண்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயணத்திட்டம் அறிவித்தபோது அந்த மகிழ்ச்சியைத் திரும்பவும் அனுபவித்தேன்.

ஐந்து கோப்புகளில் முதல் கையெழுத்திடும் முதல்வர் ஸ்டாலின் (ANI Photo)

தமிழக முதல்வராகப் பதவியேற்ற மு.க.ஸ்டாலின், ஐந்து கோப்புகளில் கையெழுத்திட்டார். அதில், ‘நகரப் பேருந்துகளில் பெண்கள் கட்டணமின்றி பயணம் செய்யலாம்’ என்னும் அறிவிப்பு மிக முக்கியமானது. மாணவியர், பணிபுரியும் மகளிர், வீட்டில் அடைபட்டிருக்கும் பெண்கள் என அனைவருக்கும் பெரிய வரம். காசுக்காக எவரிடமும் வீட்டில் கையேந்தாமல், வரும் பேருந்தில் ஏறிச் செல்லலாம் என்பது ஒடுக்குதலின் பிடியிலிருந்து கிடைத்திருக்கும் நெகிழ்ச்சி. முறை சாராப் பணி செய்யும் பெண்களுக்கு இப்பணம் மிச்சப்படும். அதுவொரு சேமிப்பாக நிற்கும். தமிழகப் பெண்களுக்குப் புதிய அரசு தந்திருக்கும் சீரென்றே சொல்லலாம். குழப்பத்தைத் தவிர்ப்பதற்காக, பேருந்துகளில் ஒட்டப்பட்டிருக்கும் ‘மகளிர் பயணம் செய்யக் கட்டணமில்லை’ என்னும் அறிவிப்பைப் பார்த்தபோது பேரானந்தம்.

இதை இணைய உலகம் கொண்டாடிவிட்டது. இத்திட்டத்தில் பெண்களுடன் திருநங்கையரையும் இணைக்கலாமென்று ஊடகவியலாளர் இந்துஜா ரகுநாதன் இட்ட ட்விட்டர் பதிவினை ஏற்று அவர்களும் கட்டணமின்றி பயணிக்கலாம் என்று அரசு அறிவித்தது இன்னும் சிறப்பு.

தமிழகத்தின் வளர்ச்சியில் இத்தகைய சமூக நலத் திட்டங்களுக்கு மிக முக்கியமான பங்குண்டு. கட்டணமில்லா பேருந்துப் பயணம் என்பது பணத்துக்கு வழியில்லாமலும் தொலைவு காரணமாகவும் பள்ளிக்கு வர இயலாத மாணவர்களைப் பள்ளிக்குக் கொணர்ந்தது. விலையில்லா மிதிவண்டி கிராமப்புற மாணவர்களின் கல்விப் பயணத்தை இன்னும் விரைவாக்கியது. இப்போது பெண்களுக்குப் பேருந்துகளில் வழங்கப்பட்டிருக்கும் இச்சலுகையால் நிகழவிருக்கும் மாற்றத்தைக் கவனிக்க வேண்டும். கிராமப்புறங்களிலும்கூட ஓரளவு மேம்பட்ட பேருந்துத் தொடர்பு உள்ள காரணத்தால் ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்துக்குப் பெண்கள் செல்வது எளிதாகும்.

பயணம் என்பது பயணம் மட்டுமா? அது தரும் சுதந்திரம், தன்னம்பிக்கை, மகிழ்ச்சி எல்லாமும்தான். பயணங்கள் மன அழுத்தத்தைக் குறைக்கும்; உடலுக்கும் மனத்துக்கும் நலம் சேர்க்கும். எனவே, பெருந்தொற்றுக் காலம் கழிந்த பின் நாம் நிச்சயம் பயணம் செய்வோம். பேருந்தில் ஜன்னலோர இருக்கை, காதில் நமக்கே நமக்காக இளையராஜா இசையமைத்த பாடலைக் கேட்டபடி பயணிக்கும் சுகத்தை அடிக்கடி அனுபவிப்போம். பயணம், நம்மை நமக்கே புதிதாய் அறிமுகப்படுத்தும். பயணிப்போம்.

கட்டுரையாளர்

தி. பரமேசுவரி

 ‘எனக்கான வெளிச்சம், ஓசை புதையும் வெளி, தனியள்’ ஆகிய கவிதைத் தொகுப்புகள்,  ‘ம.பொ.சி பார்வையில் பாரதி,  சமூகம் – வலைத்தளம் – பெண், சொல்லால் அழியும் துயர் ‘ஆகிய மூன்று கட்டுரைத் தொகுப்புகள்,  மற்றும் ‘ம.பொ.சியின் சிறுகதைகள், ம.பொ.சியின் சிலப்பதிகார உரை, ஜோ.டி.குரூஸின் கொற்கை நாவலை முன்வைத்து ‘கலிகெழு கொற்கை’ என்னும் கட்டுரைத் தொகுப்புகளையும் ‘தமிழன் குரல்’ என்ற இதழை மூன்று தொகுதிகளாகவும் தொகுத்துள்ளார். கலை இலக்கியப் பேரவை விருது, பாலா விருது, அன்னம் விருது பெற்றிருக்கின்றார். கலை இலக்கியப் பெருமன்றத்தின் மாநிலச் செயலாளர்.