ராகா பேக்கரியின் போர்டு மின்னிக்கொண்டிருந்தது. பேக்கரியின் ஐந்தாவது ஆண்டுக் கொண்டாட்டம். கடையில் கூட்டம் நிரம்பி வழிந்தது.
மகிழ்ச்சியான வாடிக்கையாளர்கள், வண்ணமயமான ஒளிப்படங்கள், அழகாக வடிவமைக்கப்பட்ட கேக்குகள், காற்றில் கலந்த சிரிப்பு என்று அந்த இடமே கொண்டாட்டத்தில் மிதந்தது.
“நம்ம ஊர்லேயே பெஸ்ட் பேக்கரி!” என்று ஒரு வாடிக்கையாளர் சொல்ல, ராதாவும் மகாவும் ஒருவரை இன்னொருவர் பார்த்துச் சிரித்துக் கொண்டார்கள்.
“இந்த வெற்றிக்குக் காரணம் மகாதான். நான் கண்ட கனவை நிஜமாக்கியது மகாதான்” என்று ராதா மனதார அனைவரிடமும் சொன்னாள்.
ராதாவுக்குச் சிறுவயதிலிருந்தே தொழிலதிபராக வேண்டும் என்கிற ஆசை. பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக மட்டும் அல்ல.
“எதையாவது உருவாக்க வேண்டும்” என்கிற ஆவலால். அவளது தோழி மகா எப்போதும் அவளுடனே இருப்பாள்.
இருவரையும் தனித்தனியாகப் பார்த்ததே இல்லை என்று சொல்லும் அளவுக்கு, ஐந்து வயதிலிருந்து அத்தனை நெருக்கமான தோழிகள்.
ஐந்தாம் வகுப்பில் ஒரு நாள் ஆசிரியர் கேட்டார்: “பெரியவங்களா ஆனதும் என்ன ஆகப் போறீங்க?”
ஒவ்வொருவரும் டாக்டர், டீச்சர், இன்ஜினியர் என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள்.
ராதாவின் முறை வந்ததும், அவள் உற்சாகமாக, “நான் பிஸினஸ் பண்ணப் போறேன்!” என்றாள்.
வகுப்பே சிரித்தது. அடுத்த நொடி மகா எழுந்தாள்.
“நான் அவளோட சேர்ந்து பிஸினஸ் பண்ணப் போறேன்!” இந்த முறை வகுப்பில் சிரிப்பு இன்னும் பெரிதானது.
அப்போது அவர்கள் கண்ட கனவு எவ்வளவு பெரியது என்று அவர்களுக்கே தெரியாது. பதினாறு வயதில் மகா வீட்டில் முதல் முறையாக கேக் செய்ய முயன்றாள். அவள் நினைத்த மாதிரி அது வரவில்லை. கேக் பாதியாக உடைந்து போயிருந்தது. வீட்டில் எல்லாரும் கிண்டல் செய்தார்கள். மகா முகம் சுருக்கி அமர்ந்திருந்தாள். ராதா ஒரு துண்டை எடுத்துச் சாப்பிட்டாள்.
“டேஸ்ட் சூப்பர்” என்று சொல்லி இன்னொரு துண்டையும் எடுத்தாள். மகாவின் முகத்தில் மெதுவாகச் சிரிப்பு திரும்பியது.
அன்று முதல் முறையாக யாரோ ஒருவர் தன்னால் செய்ய முடிந்ததைப் பாராட்டியதாக மகாவுக்குத் தோன்றியது.
கல்லூரிக் காலத்தில் இருவருக்கும் ஒரு புதிய பழக்கம் உருவானது. இரவு மொட்டைமாடியில் அமர்ந்து எதிர்காலத்தைப் பற்றிப் பேசுவது.
ஒரு பழைய நோட்டுப் புத்தகம். அதில் பேக்கரிக்கான பெயர்கள், லோகோ, வருங்காலக் கிளைகள், சாத்தியமே இல்லாத லாபக் கணக்குகள்…
ஒரு நாள் இரவு மகா சிரித்துக்கொண்டே கேட்டாள்.
“நம்மால உண்மையாவே இது முடியுமா?”
ராதா யோசிக்காமலே சொன்னாள், “நீ கேக் பண்ணு. நம்ம கனவை நான் விற்கிறேன்.”
அந்தப் பதிலில் இருந்த நம்பிக்கை மகாவுக்குப் பிடித்திருந்தது.
கல்லூரி மூன்றாமாண்டில் இருந்தபோதே பேக்கரி பற்றிய திட்டங்களைப் போட ஆரம்பித்தாள் ராதா. அப்படித்தான் அவர்கள் பேக்கரியை ஆரம்பித்தார்கள்.
ராதா – மகா.
ராகா பேக்கரி ஆனது.
முதலீடு போடத் தயாராக இருந்த ராதாவின் பெற்றோருக்கு, அவள் தெரியாத தொழிலில் இறங்குகிறாளே, கூட்டு வியாபாரம் சரியாக வருமா என்கிற தயக்கம் இருந்தது.
ஒரு நாள் அவளின் அப்பா நேராகவே கேட்டார்.
“மகா இல்லாம நீ தனியா இந்த பிஸினஸ் பண்ண முடியாதா?” ராதா நொடியும் யோசிக்கவில்லை.
“அவ இல்லனா நான் பிஸினஸே பண்ண மாட்டேன்பா.”
அவ்வளவு நம்பிக்கை, பிணைப்பு.
முதலீடு முழுவதும் ராதா குடும்பத்திலிருந்து வந்ததால், லாபத்தில் 70 சதவீதம் ராதாவுக்கும், 30 சதவீதம் மகாவுக்கும் என்று முடிவானது.
தொழில் அவர்கள் இருவருமே எதிர்பாராத அளவுக்கு வளர்ந்தது. மகாவின் திறமை சாதாரணமில்லை.
புதுவகை கேக்குகள், புதிய டிசைன்கள், அற்புதமான சுவை… அவளுடைய படைப்பாற்றலை முழுமையாகக் வெளிப்படுத்தினாள்.
ராதா அதைச் சமூக வலைத்தளங்களில் பிரபலப்படுத்தினாள்.
இருவரும் சேர்ந்து வளர்த்த கனவு வளர வளர, மகாவின் வேலைப்பளுவும் அதிகரித்தது.
அதிகாலை ஐந்து மணிக்கே பேக்கரிக்கு வருவாள். மாவு கலப்பது, கிரீம் தயாரிப்பது, ஆர்டர்களைச் சரிபார்ப்பது, புதிய டிசைன்களை முயற்சிப்பது…
இரவு கடை மூடிய பிறகும் அடுத்த நாளுக்கான தயாரிப்புகள். அவளுடைய உலகமே பேக்கரியாக மாறியிருந்தது.
ஒரு நாள் கடைக்கு வந்த வாடிக்கையாளர் ஒருவர் ராதாவிடம் பேசிக்கொண்டிருந்தார்.
“உங்க மார்க்கெட்டிங் செம்மம்மா. எங்க பார்த்தாலும் உங்க பேக்கரி பேர்தான்.”
ராதா புன்னகைத்தாள். அருகில் நின்றிருந்த மகாவும் சிரித்தாள். ஆனால், அந்தச் சிரிப்பு சில நொடிகளுக்குப் பிறகு மறைந்தது.
எல்லாருக்கும் ராதாவைத்தான் தெரிந்திருக்கிறது என்கிற எண்ணம் மகாவின் மனதுக்குள் மெதுவாக வந்து உட்கார்ந்தது.
சில வாரங்கள் கழித்து ஒரு பெரிய திருமண ஆர்டர் வந்தது. மூன்று அடுக்கு பிரம்மாண்ட கேக். அதற்காக மகா தொடர்ந்து இரண்டு நாட்கள் தூங்காமல் உழைத்தாள். திருமண மண்டபத்தில் கேக்கைப் பார்த்த அனைவரும் ஆச்சரியப்பட்டனர்.
ஒளிப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவின. அடுத்த நாள் உள்ளூர்ப் பத்திரிகையிலும் செய்தி வந்தது. மகா ஆர்வமாகப் பத்திரிகையைத் திறந்தாள்.
’இளம் தொழிலதிபர் ராதாவின் வெற்றிப் பயணம்!’
உள்ளே ராதா, மகாவை வெகுவாகப் பாராட்டியிருந்தாள்.
அதைப் படித்த மகா புன்னகைத்தாள். ஆனால், அந்தப் புன்னகை நீண்ட நேரம் நீடிக்கவில்லை. புகழ் வெளிச்சத்தில் தன் பெயர் எங்கோ ஓரத்தில் நின்றுவிட்டதைப் போல உணர்ந்தாள்.
ராதா அதைக் கவனிக்கவில்லை. மகாவும் எதுவும் சொல்லவில்லை. ஏனெனில் பேச வேண்டியதை வார்த்தைகளில் சொல்ல அவளுக்குத் தெரியவில்லை.
ராதா பேக்கரியின் முகமாக மாறினாள். மகா பேக்கரியின் இதயமாக இருந்தாள். இதயத்தை யாரும் பார்க்கவில்லை. முகத்தையே எல்லாரும் பார்த்தார்கள்.
மகாவின் மனதில் ஏதோ மாறிக்கொண்டிருப்பதை ராதா கவனிக்கவே இல்லை. ஏனெனில் இன்னும் அவள் மகாவைத் தனது சிறுவயது தோழியாகத்தான் பார்த்துக் கொண்டிருந்தாள். தொழில் போட்டியாக அல்ல.
ஒரு நாள் ஓர் உள்ளூர் யூடியூப் சேனல் ராகா பேக்கரியைப் பற்றி எடுக்க வந்தது.
“உங்க வெற்றிக்கு முக்கியக் காரணம் என்ன?”
ராதா இயல்பாகப் பதில் சொன்னாள். “சரியான டீம். நல்ல அப்ரோச்.” பேட்டி தொடர்ந்து சென்றது.
மகா அருகிலேயே நின்றுகொண்டிருந்தாள். ஒரு கட்டத்தில் தொகுப்பாளர் அவளைப் பார்த்துத் திரும்பினார். “நீங்க இங்க வேலை பார்க்கிறீங்களா?”
ஒரு நொடி அமைதி. ராதா உடனே சொன்னாள்.
“இல்ல. அவங்க என் பார்ட்னர்.” அந்த வார்த்தை மகாவின் காதில் விழுவதற்கு முன்பே அவளுக்குள் ஏதோ ஒன்று உடைந்திருந்தது.
ஒரு மழை இரவு.
கடை மூடிய பிறகு மகா பழைய நோட்டுப் புத்தகத்தை எடுத்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். பள்ளி நாட்களில் இருவரும் வரைந்த கேக் டிசைன்கள்.
“ராகா பேக்கரியின் முதல் கிளை.”
“நூறு கிளைகள். நம்ம லோகோ.”
ஒவ்வொரு பக்கத்திலும் இரண்டு கையெழுத்துகள்.
பிறகு தற்போதைய கணக்குகளைத் திறந்தாள்.
70% – ராதா.
30% – மகா.
மீண்டும் பழைய நோட்டைப் பார்த்தாள்.
அங்கே எங்கும் 70, 30 என்று எழுதப்படவில்லை.
“அப்போ நம்ம கனவு…” என்று நினைத்தவள் வாக்கியத்தை முடிக்கவில்லை.
தங்களுக்குள் ஏதோ சமமாக இல்லையோ என்கிற எண்ணம் அவளுள் முளைத்தது. ஒரு நாள் நகரின் பெரிய முதலீட்டாளர் ஒருவர் பேக்கரிக்கு வந்தார். பேக்கரியின் வளர்ச்சி அவரைக் கவர்ந்தது.
“இதை ஒரு பெரிய பிராண்டா மாற்றலாம்” என்றார்.
ராதாவும் மகாவும் உற்சாகமடைந்தனர். ஆனால் அந்தச் சந்திப்பில் ஒரு விஷயம் மகாவைக் குத்தியது.
“உங்க விஷன் அருமை” என்று ராதாவைப் பாராட்டியவர், பிறகு மகாவைப் பார்த்து, “மகா நல்லாதான் பண்றாங்க. ஆனா பெரிய பிராண்டா மாற்றும்போது ஒரு பெரிய செஃப் வச்சுக்கலாம்…” என்றார்.
ராதா உடனே மறுத்தாள். “மகாவை மாத்திட்டு வர்ற வெற்றி எங்களுக்கு வேணாம் சார்.”
மகாவின் மனதுக்கு அந்த வார்த்தைகள் இதமாக இருந்தன. ஆனால் இன்னொரு கேள்வியும் எழுந்தது.
இந்த பேக்கரியில் என் இடம் எவ்வளவு உறுதியானது?
அன்று இரவு அவளுக்குத் தூக்கம் வரவில்லை.
“இந்த நிறுவனத்தை உண்மையில் உருவாக்கியதில் என்னுடைய பங்கு என்ன என்கிற கேள்வி அவளை விடவில்லை.
பேக்கரியில் கூட்டம் குறைந்த ஒரு மதியம்.
மகா ராதாவைப் பார்த்தாள்.
“கொஞ்சம் பேசணும்.”
“சொல்லு.”
“இந்த கம்பெனில நான் என்ன?”
ராதா சிரித்தாள்.
“என்ன கேள்வி இது? நீதான் ராகாவின் உயிர்.”
“அது இல்ல…”
மகா வார்த்தைகளைத் தேடினாள்.
“எல்லாருக்கும் நீதான் ராகா மாதிரி தெரியுது.”
ராதா புரியாமல் பார்த்தாள்.
“அதனால என்ன? நம்ம ரெண்டு பேரும்தானே?”
மகா சில நொடிகள் அமைதியாக இருந்தாள்.
அவள் எதிர்பார்த்த பதில் அது இல்லை.
“விடு” என்று மட்டும் சொன்னாள்.
அன்று ராதாவிற்கு அந்த உரையாடல் முடிந்துவிட்டது.
மகாவிற்கு அன்றுதான், ஏதோ ஒன்று முடிந்து போனது.
சில வாரங்கள் கழித்து…
மகா விலகிக்கொள்வதாக ஒரு கடிதம் மட்டும் வந்தது. காரணம் புரியாமல் குழம்பிய ராதா, அவளைத் தொடர்புகொள்ள முயன்றாள். அதற்குள் அதே ஊரில் புதிதாகத் திறக்கவிருந்த ஒரு பேக்கரியின் விளம்பரங்கள் எங்கும் தெரிய ஆரம்பித்தன. அதன் கேக்குகள், டிசைன்கள், சிறப்பு உணவுகள்… எல்லாமே ராகா பேக்கரியை நினைவூட்டின.
புதிய பேக்கரியின் உரிமையாளர் – மகா. ராதாவால் முதலில் நம்பவே முடியவில்லை. உடனே அவளைச் சந்திக்க ஓடினாள்.
“என்னடா இது?”
மகா அமைதியாகப் பார்த்தாள்.
“நான் என் தொழிலை ஆரம்பிச்சிருக்கேன்.”
“நம்ம தொழில்?”
“இல்ல. என் தொழில்.”
ராதா அதிர்ச்சியில் உறைந்து நின்றாள்.
“நீ என்கிட்ட ஒரு வார்த்தைகூடச் சொல்லல.”
மகா சிரித்தாள்.
அந்தச் சிரிப்பில் பழைய நட்பு இல்லை.
“இன்னும் எவ்வளவு வருஷம் முப்பது சதவீதம் வாங்கிட்டு இருக்கணும்?”
அந்த வார்த்தை ராதாவின் இதயத்தைத் தாக்கியது. பணத்தைவிட நட்பு முக்கியம் என்று அவள் வாழ்நாள் முழுக்க நம்பியிருந்தாள். ஆனால், மகாவுக்கு அந்த 30 சதவீதம் பணம் மட்டும் இல்லை. அது அவளுடைய உழைப்பின் அளவாகத் தோன்றியிருந்தது.
அடுத்த சில மாதங்கள் ராதாவிற்கு நரகமாக இருந்தது. முக்கிய ஊழியர்கள் சிலர் மகாவுடன் சென்றனர். வாடிக்கையாளர்களும் குறைந்தனர்.
தூங்காத இரவுகள், கண்ணீர், கோபம், நம்பிக்கையின்மை… எல்லாம் சேர்ந்து அவளை நசுக்கியது.
ஒரு நாள் இரவு… கடை மூடிய பிறகு தனியாக அமர்ந்திருந்தாள். சுவரில் பழைய புகைப்படம் ஒன்று இருந்தது. ஐந்தாம் வகுப்பில் எடுத்த படம்.
உலகத்தைப் பற்றிய கவலையே இல்லாமல் சிரித்துக் கொண்டிருந்த இரண்டு சிறுமிகள்.
ராதா அந்தப் ஒளிப்படத்தை நீண்ட நேரம் பார்த்தாள். பல ஆண்டுகளுக்குப் பிறகு ஓர் உண்மை அவளுக்குப் புரிந்தது. தனது கனவை மகாவுடன் பகிர்ந்திருந்தாள். மகா அந்தக் கனவின் ஒரு பகுதியாக இருந்தாள். ஆனால் அந்தக் கனவு மகாவை மட்டும் நம்பி நிற்கக் கூடாது. மகா விலகியிருக்கலாம். கனவு விலகவில்லை.
அடுத்த நாள் முதல் ராதா செயல்பட ஆரம்பித்தாள். மகாவின் ரெசிப்பிகளை மாற்றினாள். புதிய பயிற்சி பெற்ற பேக்கர்களை வேலைக்கு எடுத்தாள், வாடிக்கையாளர்களிடம் நேரடியாகப் பேசினாள்.
சிறிய குழந்தைகளுக்கு இலவச பேக்கிங் வகுப்புகள் நடத்தினாள், கிராமப் பெண்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கினாள். பேக்கரியை ஒரு கடையாக மட்டும் பார்க்கவில்லை, ஒரு சமூகமாக மாற்ற ஆரம்பித்தாள்.
அது ஒன்றும் ராஜபாட்டையாக இல்லை, சறுக்கல்கள், திணறல்கள் இருந்தன. மகாவின் கேக்குகளின் சுவைக்கு ஈடுகொடுக்க இன்னும் அதிகமாக உழைக்க வேண்டியிருந்தது. ஆனால் ராதா இப்போது யாருக்காகவும் காத்திருக்கவில்லை. தன் கனவுக்குத் தானே வடிவம் கொடுக்க ஆரம்பித்திருந்தாள்.
இரண்டு வருடங்கள் கழித்து…
ராகா பேக்கரியின் ஆண்டு விழா.
கடை மீண்டும் கூட்டத்தால் நிரம்பியிருந்தது.
சுவரில் இரண்டு ஒளிப்படங்கள் இருந்தன.
ஒன்று பழையது, இரண்டு சிறுமிகள். மற்றொன்று புதியது, நூற்றுக்கணக்கான பயிற்சிப் பெற்ற பெண்கள், சிரிக்கும் குழந்தைகள், ஒரு கனவால் இணைக்கப்பட்ட மக்கள்.
ஒரு செய்தியாளர் ராதாவிடம் கேட்டார்.
“உங்க வெற்றிக்குக் காரணம் என்ன?”
ராதா சில நொடிகள் அமைதியாக இருந்தாள்.
பிறகு சொன்னாள்: “ஒரு காலத்தில் என் வாழ்க்கை ஒரு தோழியை நம்பி இருந்தது. இப்போ ஒரு விஷயம் புரிஞ்சிருக்கு. மனிதர்கள் நம்ம வாழ்க்கையிலிருந்து விலகிப் போகலாம். ஆனா நம்ம கனவுகளை நாமே கைவிடாத வரை… அவை நம்மை விட்டு போகாது.”
அன்று விழா முடிந்து அனைவரும் சென்ற பிறகு ராதா தனியாக நின்றாள்.
கரை வந்திருந்தாள். ஆனால் அவள் புரிந்துகொண்ட உண்மை வேறு. அவளை மூழ்கடித்தது தோழி மட்டுமல்ல.
ஒரே ஒருவரை நம்பி தனது உலகத்தைக் கட்டியிருந்ததும்தான்.
இப்போதும் அவள் தனியாக நின்றாள்.
ஆனால் முதல் முறையாக… தனியாக அல்ல.
(தொடரும்)
படைப்பாளர்:

யாமினி
வாழ்க்கைக் கல்வி மற்றும் மென்திறன் பயிற்சியாளர், இயற்கை விரும்பி, நெகிழி ஒழிப்பு ஆர்வலர், திடக் கழிவு மேலாண்மை பயிற்சியாளர். பயிலரங்குகள் நடத்துகிறார். உறவு மேலாண்மை தனிபட்ட ஆலோசகர். குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு விழிப்புணர்வை உருவாக்குவதின் மூலமே நாட்டின் நலம், இயற்கை வளம், சரிவிகித சமுதாயத்தை அடைய முடியுமென்று தீவிர நம்பிக்கை உள்ளவர். எல்லாச் சூழ்நிலைகளிலும் வாழ்தலைக் கொண்டாடுபவர்.




