எந்தச் சூழலையும் துணிவோடு கடந்து செல்லும் பெண்களையும் சற்றுத் தடுமாறச் செய்து விடுவது மாதவிடாய். மாதவிடாய் நாள்களும் அதற்கு முன்னதான நாள்களும் நம்மை ஏதோ பதற்றத்தோடே வைத்திருக்கும். அதிலும் பள்ளி, கல்லூரி, பணியிடங்களுக்குச் செல்வோருக்குப் பெரும் நெருக்குதலையே கொடுக்கிறது. என் பள்ளி, கல்லூரி நாள்களில் மாதவிடாய் வந்த முதல் நாள் விடுமுறை எடுக்காமல் கழிந்ததே இல்லை. அதிலும் தேர்வு போன்ற முக்கிய நாள்கள் எனில் எமகண்டம் தான். ஆரோக்கியமான உணவு முறை கொண்ட ஒரு சில பெண்களுக்குச் சாதாரண நாள்களாகக் கடக்கலாம். ஆனால், அத்தகைய வாய்ப்பு அமையாத என்னைப் போன்ற பெரும்பாலான பெண்களுக்கு அவை வலி மிகுந்த நாள்களாகவே அமைந்துவிடுகின்றன.
வயிறு வலியோடு தலைவலி, வாந்தி, மயக்கம் என எல்லாம் ஒன்று சேர்ந்து வாட்டிவதைத்து விடும். வெந்தயம், எலுமிச்சை சாறு எதும் பலனளிக்காத சூழலில் அலோபதி மாத்திரைதான் கடைசித் தேர்வாகவும் வலி நிவர்த்தியையும் கொடுக்கும். இப்படி இருக்கையில் தங்களது பிராண்ட் நாப்கின்களைப் பயன்படுத்தினால் பறக்கலாம், ஓடலாம், தாவலாம், வகுப்பறையில் டான்ஸ் ஆடலாம் போன்று வரும் விளம்பரங்கள் பெண்ணின் வலியை உணராத சமூகமாகவே வர்த்தக நிறுவனங்கள் பரிணமித்திருக்கின்றன என்பதையே காட்டுகின்றன.
உடலியல் ரீதியான பிரச்னை ஒருபக்கம் இருக்க, தீட்டு என்கிற பெயரில் உளவியல் ரீதியாகப் பலவீனப்படுத்தும் கூறுகள் தனது உடல் சார்ந்த நிகழ்வுக்கு வெட்கி தலைகுனிகிற சூழலுக்கும் கொண்டு சென்றுவிடுகின்றன. மாதவிடாய் நாள்களின் போது தனியாகப் புழங்குவதற்கு (தனியாக இருக்கக் கட்டாயப்படுத்தல்) இயலாமல் போன சூழலை இன்றைய நெருக்கடியான நகரமயமாக்கல் உருவாக்கியிருந்தாலும், கிராமப்புறங்களில் இவை நீடிப்பதை யாரும் மறுக்க முடியாது. அது அடிவயிற்று வலியைவிட அபாயகரமானது.
செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றக் கூடாது, பூக்களைப் பறிக்கக் கூடாது, பூஜைப் பொருள்களைத் தொடக் கூடாது, குரான் ஓதக் கூடாது, நோன்பு வைக்கக் கூடாது, தொழுகக் கூடாது, வெளிப்படையாக (குறிப்பாக ஆண்கள்) பார்க்கும் வகையில் நாப்கின்களைக் கையாளக் கூடாது. உபயோகித்த துணியை ரகசியமாக அப்புறபடுத்த வேண்டும் போன்ற கட்டுப்பாடுகள் வடிவில் தீண்டாமை நம்மை விட்டுவைப்பதாக இல்லை. இஸ்லாத்தில் ஒதுக்கி வைக்கும் வழக்கம் இல்லை என்றாலும் மாதவிடாய் காலத்தில் பெண்கள் தூய்மையற்றவர்கள் என்றே இறையியல் அறிஞர்கள் கூறுகின்றனர்.
சாதாரண நாள்களிலேயே பெரும்பாலான அரசுப் பள்ளிகளின் கழிவறையைப் பயன்படுத்த முடியாத நிலையில் மாதவிடாய் நாள்களில்? பொதுக் கழிப்பறைகளின் நிலையோ இன்னும் மோசம் தான். பெண்கள் பொதுவெளியைப் பயன்படுத்தும் சூழல் கணிசமாக உயர்ந்திருக்கும் இன்றைய சூழலில், அவை மேலும் பெண்களுக்கு நெருக்கடியையே கொடுக்கின்றன. இன்றைய நவீன காலத்திலும் மாதவிடாய் குறித்துப் பேசுவதே சிதம்பரம் ரகசியம்தான்!
அதுமட்டும் அல்லாமல் சமூக ரீதியான பழமைவாத சிந்தனைகள் பெண்கள் மீதான உரிமை மீறல்களில் தயக்கமே இல்லாமல் தாக்குதல் தொடுக்கின்றன. சபரிமலைக்குச் செல்ல தடை விதிப்பது, தெருக்கூத்தில் பெண்கள் பங்கேற்றால் அதன் புனிதம் கெட்டுவிடும் என்பது போன்ற மனித உரிமைக்கு எதிரான செயல்கள் தொடர்கின்றன.
இன்றும் மாதவிடாய் விடுமுறை குறித்த விவாதங்கள் உலகம் முழுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. உலகில் முதல் முறையாக மாதவிடாய் விடுப்பு மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கி சட்டம் இயற்றி வரலாற்றைப் படைத்திருக்கிறது ஸ்காட்லாந்து. மாதவிடாய் பயன்பாட்டுப் பொருள்கள் அந்நாட்டுப் பெண்களுக்கு எந்தவோர் இடையூறும் இல்லாமல் கிடைக்கும் வகையில் அந்த மசோதா அமைந்திருக்கிறது. பெண் தொழிலாளர்களுக்கு மாதவிடாய் விடுப்பு வழங்கும் மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கி இருக்கிறது ஸ்பெயின். ஆசிய நாடுகளான ஜப்பான், இந்தோனேஷியா, தைவான் போன்ற நாடுகள் ஊதியத்துடன் கூடிய விடுப்பும் தென்கொரியா ஊதியமற்ற ஒரு நாள் விடுப்பும் வழங்குகின்றன.
ஆஸ்திரேலியாவில் Victorian women’s trust என்கிற பாலின சம்த்துவ நிறுவனம் ஆண்டுக்கு 12 நாள்கள் விடுமுறை அளித்திருக்கிறது. இந்தியாவில் Zomato போன்ற நிறுவனங்கள் ஊதியத்துடன் கூடிய விடுமுறையை வழங்கி இருக்கின்றன. Zomato நிறுவனத்தின் CEO இவ்விடுமுறை குறித்து, ‘மாதவிடாய் விடுப்பு எடுப்பது குறித்துத் தயக்கம்கொள்ளத் தேவையில்லை. நீங்கள் வெளிப்படையாக அலுவலர்களிடம் கூறலாம்.’ பெண்களின் அடிப்படையை மீட்டெடுக்கும் செயலாக மட்டுமே இல்லாமல், பழமைவாதச் சிந்தனையைப் பண்பாட்டிலிருந்து அழித்தொழிக்கும் செயலாகவே இதைப் பார்க்க முடிகிறது.
அதே போல ஸ்காட்லாந்து நாடாளுமன்ற உறுப்பினர் மோனிகா நென்னான் மாதவிடாய் விடுப்பு மசோதா குறித்துப் பேசியது கவனத்திற்குரியது. “இயற்கையாக உடலில் நிகழும் மாதவிடாய் போன்ற சிக்கல்களுக்கு நாம் பொருளாதார சிக்கல்களைச் சந்திப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. டாய்லெட் பேப்பர்கள் இலவசமாகக் கிடைக்கும் தேசத்தில் சனிட்டரி நாப்பின்கள் கிடைக்காதது ஏன்? மாதவிடாய் குறித்த புனிதப்படுத்தல் மற்றும் கட்டுகதைகளை உடைக்க இந்த மைல்கல் மசோத உதவியாக இருக்கும்” என்கிறார்.
இந்தியாவில் சினிமா, சமூக வலைத்தளங்கள், இதழ்கள் எனப் பேசும் பரப்பு விரிந்தாலும் பெரும்பாலானவர்களின் எண்ணங்களை இது மாற்றவில்லை. நண்பர்களிடத்தில், குடும்பத்தில் மாதவிடாய் குறித்து வெளிப்படையாகப் பேசும் பெண் இன்னும் அருவருப்பாகவே பார்க்கப்படுகிறாள்.
இதழியல் முதுகலை படிக்கும் போது வகுப்பறையில் நண்பர்கள் வட்டாரத்தில் ஒருவர் இன்னொரு நண்பரிடம், “என்னடா மூணாவது நாளா இப்படி இருக்க” என்பது போன்ற ஆணாதிக்க நகைச்சுவையெல்லாம் அவர்களுக்குக் குற்ற உணர்ச்சியே தருவதில்லை. இவர்களெல்லாம் அடுத்து ஊடகங்களில் பணி மேற்கொள்ளப் போகிறவர்கள்! இது குறித்தான ஆரோக்கியமான விவாதத்தையும் செயலையும் ஊடகங்களில் எப்படி எதிர்பார்ப்பது?
பெண்ணிய அமைப்புகளின் தொடர் போராட்டத்தின் பலனாக சில தனியார் நிறுவனங்கள் மாதவிடாயின் முதல் நாள் ஊதியத்துடன் கூடிய விடுமுறையை அறிவித்திருப்பது மாற்றத்திற்கான முன்னெடுப்பாக அமைந்திருக்கிறது. இந்திய அரசும் இது போன்ற செயலுக்குச் செவி சாய்க்கும் என்று பார்த்தால், நாப்கின்களின் மீதான ஜிஎஸ்டி வரியை உயர்த்தியது. எதிர்ப்புகள் வரவே அதைத் திரும்பப் பெற்றுக்கொண்டது.
மாதவிடாய் விடுப்பு குறித்த நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமாரின் கேள்விக்கு பதில் அளித்த மத்திய மகளிர் மற்றும் குழந்தை நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி ராணி, “மாதவிடாய் விடுப்பு வழங்குவதற்கான ஏற்பாடுகள் ஏதும் அரசிடம் இல்லை” என்கிறார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மாதவிடாய் நன்மைகள் மசோதா என்ற சிறப்பு மசோதா நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. இது பணியாற்றும் பெண்கள் மற்றும் மாணவியருக்கு இரண்டு நாட்கள் விடுமுறை அளிப்பதை நோக்கமாகக் கொண்டது. இந்த மசோதா இன்னும் அமலுக்கு வரவில்லை. பெண்களைப் போற்றும் அரசின் நடவடிக்கைகள் இப்படியாகத்தான் இருக்கும்!
மாதவிடாய் வலி நெஞ்சு வலிக்கு நிகரானது என்று ஆய்வுகள் கூறுகின்றன. இவை குறித்தான பல்வேறு முறையான ஆய்வுகளோ அடிப்படை உரிமைகளோ இன்னும் இல்லை. பெண்கள் பேசத் தொடங்கிவிட்டார்கள், செவி சாய்க்குமா சமூகம்?
மாதவிடாய் குறித்தான மாயத் தோற்றம் களைந்து தெளிவான புரிதல்களை இன்றைய தலைமுறையினரிடத்தில் விதைப்பதை கல்வியும் வாழ்வியல் முறையில் சாத்தியபடுத்துவதற்கான சூழலைக் குடும்பமும் சமூகமும் இணைந்தே உருவாக்க வேண்டும். மாதவிடாய் என்பது இயல்பான உடலியல் நிகழ்வு என்பதை ஆண், பெண் இருவரிடம் பேச வேண்டும். வயது வந்த ஆணின் உடலிலிருந்து வெளியேறும் விந்து எவ்வளவு இயல்பான உயிரியல் செயலோ அது போலவே மாதவிடாய் ரத்தப்போக்கும் என்ற புரிதலை ஏற்படுத்த வேண்டும்.
தன் வாழ்நாளில் பெரும்பகுதியை வலியோடு பிரச்னைகளை எதிர்கொள்ளும் பெண்களின் துயரை நமது பொதுச்சமூகம் எப்போது உணரப் போகிறது? பெண்களைச் சமமாகக் கருதும் சமூகம் தழைக்காமல் அது சாத்தியம் இல்லை. வருங்காலச் சந்ததியருக்குப் பெண் உடல் குறித்தான புரிதலை, கல்வியும் சமூகமும் கொடுப்பதை உறுதிபடுத்தினால் மட்டுமே சாத்தியம்.
(தொடரும்)
படைப்பாளர்:
மை. மாபூபீ, சென்னைப் பல்கலைக்கழகம் இதழியல் மற்றும் தொடர்பில் துறையில் முனைவர்பட்ட மாணவி. அரசியல், சமூகம் பெண்ணியம் சார்ந்த கட்டுரைகளை எழுதிவருகிறார். தீக்கதிர் நாளிதழ், கீற்று, Thenewslite போன்ற இணையதளங்களில் கட்டுரைகள் வெளிவந்திருக்கின்றன.