மீண்டும் அடுக்களை டூ ஐ நா 3

வெளிநாடு செல்வதற்கு துறை அனுமதி பெறுவதற்கான விண்ணப்பத்தை சென்னைக்கு அனுப்பிவிட்டு, “எப்படியாவது அனுமதியை வாங்கிடுங்க தெய்வமே” என்று எங்கள் ஆசிரியர் சங்கப் பொதுச் செயலாளர் ரெங்கராஜன் சார் கையில் பொறுப்பை ஒப்படைத்துவிட்டேன்.

‘நண்பேண்டா’ தோழிகள் பொற்செல்வி, சசி ப்ளாரன்ஸ் உதவியோடு மேட்சிங் மேட்சிங் பார்த்து பேக்கிங் எல்லாம் பக்காவா ரெடி. என்னைவிட அவர்கள் இருவரும்தான் பயங்கர எக்ஸைட்டிங். (நம்மளை நாட்டை விட்டு தொரத்துறதில தான் எம்புட்டு ஆர்வம்!) மகள் பூஷிதாவுக்கு பத்தாம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வு தொடங்கப் போகிறது.

“பத்தாப்பூ படிக்கிற பிள்ளைக்காக, பெத்தவங்க என்ன வெல்லாம் தியாகம் பண்றாய்ங்க! வாழ்க்கையில் ஒரே ஒரு முறை நான் எழுதப் போகும் என்னோட பப்ளிக் எக்ஸாம் டைம்ல நீங்க ஊர்லயே இருக்க மாட்டீங்களா? நீங்க தாய் இல்லம்மா, தெய்வத்தாய்” என்று நடிகர் திலகமாகி சுமத்தீ… சுமத்தீ… ரேஞ்சுக்கு சென்டிமெண்ட் பிழிய , “நீ சூப்பரா படிச்சிடுவ பாப்பா, அம்மா ஹெல்ப்பே தேவைப்படாதுடா” என்று ஐஸ் வைத்து, அசடு வழிந்து, தேர்வு முடியும்வரை ஹாஸ்டலில் சேர்த்துவிட்டாச்சு.

இன்னும் பத்து நாள் தான் இருந்தது. விமான டிக்கெட்டும் அங்கு தங்கப் போகும் ஹோட்டல் குறித்த விபரங்களும் ரெடி. அதே ஹோட்டல் அஃபினா. அதே AI 001 தான். உலகக் கல்வி அமைப்பிலிருந்து ஆசிரியர்களின் பிரதிநிதியாக (ஆசியாவின் சார்பாக) நானும் ஒருங்கிணைப்பாளராக மலேசியாவிலிருந்து பத்மாவும் கலந்துகொள்வதாகச் செய்திவந்தது. பத்மா ஏற்கெனவே நன்கு அறிமுகமான தோழர் தான். நம்முடே மலையாளக் கரையோரம் மலையாளம் பறையும் சேச்சிதான், ஆனால், மூன்று தலைமுறைக்கு முன்பே மலேசியாவில் செட்டில் ஆகி, “இனி எண்ட தேசம் மலேசியா, எண்ட பாஷை மலாயா” என்று தேசத்தை மாற்றிக்கொண்ட பச்சைக் கேரளர். திக்கித் திணறி தமிழும் பேசத் தெரியும் என்பது எனக்கு சந்தோசமான செய்தி. மார்ச் 8 இல் தொடங்கி மார்ச் 20 வரை ஐநாவில் ஏகப்பட்ட அமர்வுகளில் கருத்தரங்குகள் நடக்கின்றன. அவற்றில் மார்ச் 15 வரை நடைபெறும் குறிப்பிட்ட கருத்தரங்குகளில் மட்டுமே கலந்துகொள்ள நாங்கள் இருவரும் அனுமதிக்கப்பட்டிருந்தோம். அதற்கு என்னவெல்லாம் பிரிப்பேர் பண்ண வேண்டும், என்ன பேச வேண்டும் என்று கூடிக்கூடிக் கலந்து பேசி, வாட்ஸ் அப் பண்ணி ஒரு மாதிரியா தயார் ஆகியாச்சு. எல்லா அமர்வுகளிலும் எல்லாரும் பேசிட முடியாது. எனக்கு, பெண்களுக்கு எதிரான வன்முறைகள், பெண் கடத்தல் , குழந்தைத் தொழிலாளர் என மூன்று அமர்வுகளில் பேச வாய்ப்பளிக்கப்பட்டிருந்தது. எனவே அது குறித்த செய்திகளைச் சேகரித்து வைத்துக்கொண்டேன்.

’UNCSW 59’ என்பது தான் இந்த நிகழ்வுக்கான பெயர். UNITED NATIONS COMMISSION ON THE STATUS OF WOMEN (பெண்களின் நிலை குறித்து ஆய்வுசெய்யும் ஐநாவின் விசாரணை ஆணையம்னு வைச்சுக்கலாமா?) என்பது ஐநாவின் முக்கிய உறுப்புகளுள் ஒன்று. இது சர்வதேச அரசுகளுக்கு இடையேயான முதன்மை ஆணையம். அரசியல், பொருளாதாரம், சமூகம், கல்வி தொடர்பாகப் பெண்களுக்கு எழும் பிரச்னைகளைக் கண்காணிக்கவும் உரிமைகளை நிலைநாட்டவும் 1946இல் இந்த ஆணையம் உருவாக்கப்பட்டது. கமிஷன் என்றால் நம் ஊரில் ரிட்டயர்டு அங்கிள்ஸ் கொண்டு உருவாக்கப்படுகிற உல்லுலாயி கண் துடைப்பு கமிஷன் இல்லை இது. ஒவ்வொரு வருஷமும் ஐநா உறுப்புநாடுகளின் பிரதிநிதிகள், தலைமையகத்தில் ஒன்றுகூடி பாலினச் சமத்துவத்தை மதிப்பிடல், பெண்களுக்கான சவால்களைக் கண்டறிதல், பெண்களின் முன்னேற்றத்திற்காக உறுதியான கொள்கைகளை வகுத்தல் போன்றவற்றுக்காகத் திட்டம் தீட்டி, அதைச் செயல்படுத்த வழிகாட்டும் வலிமையான ஆணையம். இதன் முதல் அமர்வு 1947இல் நியூயார்க்கில் இருக்கிற லேக் சக்ஸ்ஸ் என்ற இடத்தில் நடந்தது. அதன் 59வது அமர்வு தான் இது. முதல் அமர்வில் மொத்தமே 15 பேர் தான் பிரதிநிதிகளாகக் கலந்திருக்கிறார்கள். இந்தியாவிலிருந்து கலந்துகொண்ட ஷரிபா ஹமீத் அலி வழியில் இன்றைக்கு நான்.

இந்த UNCSW 59 அமர்வுக்கு ஒரு ஸ்பெஷல் இருக்கிறது. (ரமா கலந்துக்கிட்டாலே ஸ்பெஷல் தானேங்கிற உங்க மைன்ட் வாய்ஸ் எனக்குக் கேட்குது, ஆனாலும் தன்னடக்கத்தோட அதை நான் மறுக்கிறேன்). கொஞ்சம் டார்டாய்ஸ சுத்திவிட்டோம் என்றால், சுருள் சுருளாக வருகிற புகைக்குள் மங்கலாகத் தெரிகிறது பாருங்கள். 1995ஆம் ஆண்டு. வாங்க போகலாம். 189 நாட்டுத் தலைவர்கள் கலந்துகொள்ள, 1995இல் நான்காவது உலக மாநாடு சீனாவின் பீஜிங் நகரில் ஜாம்ஜாமென்று நடக்கிறது. அனைத்து நாடுகளும் பெண்கள் தொடர்பான அறிக்கைகளைச் சமர்ப்பிக்கும்போது தான் தெரிகிறது, பெண்களுடைய நிலைமை இவ்வளவு முயற்சிகளுக்குப் பிறகும் இன்னும் கீழ்க்கோடியில்… ஏன் தெருக்கோடியில் தான் இருக்கிறது என்பது. மாநாட்டுக்கு வந்திருந்த 189 நாட்டு அரசுப் பிரதிநிதிகள், தனியார் பிரதிநிதிகள், சர்வதேச பார்ட்னர்ஸ், நிதியளிக்கக்கூடிய சர்வதேச பங்குதாரர்கள் எல்லாரும் உண்மையான ஆதங்கத்துடன் கூடிப் பேசுகிறார்கள். இப்படியே போனால் எதிர்காலத்தில் டைனோசர் போல, ஐஸ்ஏஜ் மம்மத் யானை போல, பெண் இனமும் அழிந்து போகக்கூடிய ஆபத்து இருக்கிறது என்பது எல்லோருக்கும் புரிந்தது.

பெண்கள் மீதான வன்முறைகளை முடிவுக்குக் கொண்டு வருவதிலும் பெண்களை வலிமையாக்குவதிலும் பாலின சமத்துவத்தைக் கொண்டுவருவதிலும் எந்தெந்த இடங்களிலெல்லாம் பிரச்னைகள் இருக்கின்றன என்று வல்லுநர்களைக் கொண்டு பட்டியல் போட்டனர். வறுமை, கல்வி, உடல்நலம், வன்முறை, போர்ச்சூழல், பொருளாதாரம், நிறுவனங்கள், பதவி, மனித உரிமைகள், சுற்றுச் சூழல், பெண் குழந்தை , ஊடகம் என்று பெண்களுக்குச் சமத்துவம் மறுக்கப்படக்கூடிய , பெண்களைப் பாதிக்கக்கூடிய 12 ஏரியாக்களை மிக நுணுக்கமாக ஆய்வுசெய்து, அதற்கேற்ப செயல்பாடுகள் உருவாக்கப்படுகின்றன. இதை ’பெய்ஜிங் பிரகடனம் மற்றும் நடவடிக்கைகளுக்கான தளம்’ (Beijing Declaration and Platform for Action ) என்ற ஹேஸ்டேக் உருவாக்கி, உலக நாடுகள் முழுவதும் பெண்களுக்கு ஆதரவான செயல்பாடுகளை முடுக்கிவிட்டார்கள். இந்த ஆண்டு (2015) பீஜிங் பிளாட்பார்ம் தொடங்கி இருபதாவது ஆண்டு கொண்டாட்டம் நடக்கிறது. அதுதான் ஸ்பெஷல்.

ஒவ்வொரு நாடும் தேசிய அளவில் என்னவிதமான திட்டங்களைச் செயல்படுத்தினீர்கள், இருபது ஆண்டுகளில் பெண்களின் நிலையில் என்னவிதமான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது என்பது மாதிரியான மறு ஆய்வு (ரெவ்யூ) தான் இந்த வருடம் நடக்கவிருப்பது. அதனால் தான் பல தலைப்புகளில் பலவிதமான கருத்தரங்கு அமர்வுகள்.

அப்பப்பா… நினைக்கவே ஆச்சரியமாக இருக்குல்ல… நமக்காக, நம்ம நிலையை உயர்த்துவதற்காக எங்கெங்கோ உட்கார்ந்து, என்னல்லாம் யோசிச்சு, எப்படியெல்லாம் திட்டங்கள் தீட்டி, நிதி ஒதுக்கி, செயல்பாடுகளை முன்னெடுக்கிறார்கள்! இவ்வளவு உழைப்பு, சிந்தனை, நிதி ஆதாரங்கள் – இதனோட ஒப்பிடும்போது அதனால் கிடைக்கக் கூடிய பலன்கள் புல்லட் ட்ரெயின் ரேஞ்ச்சுக்கு பெண்களைப் போய்ச் சேர்ந்திருக்கணும்ல? ஆனா லோக்கல் பாஸஞ்சர் போல ‘புளியமரத்துக்கு புளியமரம்’ ஸ்டாப்பிங் போட்டு, பல இடங்களிலும் நிதி பில்டர் ஆகி, ஆணாதிக்க மனநிலையோடு செயல்பாடுகள் சுருங்கி , பெண்களை வந்துசேரும்போது தொட்டுக்கோ, தொடைச்சுக்கோ போலத்தான் இருக்கிறது.

உண்மையில், இந்தப் பாலினச் சமனற்ற நிலைக்கு யார் காரணம்? ஆணுக்கும் பெண்ணுக்குமாகப் படைக்கப்பட்ட இந்த உலகை, தனக்குப் ‘பணிக்கப்பட்ட’ உலகாகக் கைப்பற்றிக்கொண்ட ஆண்களும், அதற்குத் துணை போன பெண்களும் தானே? அதனால், ஆண்களை மட்டுமே குறை சொல்லிக்கொண்டு இருக்காமல், ஏற்கெனவே யாரோ வெட்டி வைச்ச கல்லும் முள்ளுமா கெடக்குற பாதையில தான் நாமளும் போகணும்னு ஸ்டீரியோடைப்பா நினைக்காம, தங்களுக்கென புதுசா, அழகா ஒரு பாதையை உருவாக்கத் தயாராக இருக்கும் பெண்களும், குடும்பம், குழந்தை குட்டி, பொறுப்புனு அத்தனையும் பெண்கள் மேல மட்டும் சுமத்தாம தானும் தோள் கொடுக்க முன்வரும் ஆண்களும் இணைந்தால் மட்டுமே இந்தச் சமனற்ற நிலையை மாற்றமுடியும். முக்கியமாக, இதையெல்லாம் சரிசெய்ய இன்னொரு பெரியார் வருவாருனு காத்திருக்காம, ஒங்வொருத்தரும் பெரியாரா மாறணும். அம்புட்டுதேங். ( அடடா ரொம்ப சீரியஸா போயிட்டிருக்கமோ!)

வழக்கமா இயக்குநரகத்தில் அனுமதி விண்ணப்பத்துடன் இணைக்கப்பட்டுள்ள பேப்பர்ஸை சரிபார்த்துவிட்டு விஜிலென்ஸ்க்கு அனுப்பிடுவார்கள். விஜிலென்ஸில் நான் ஹவாலா ஆசாமி இல்ல, என் பேரில் ஏதும் லஞ்சஊழல் கேஸ் இல்லை என்று சர்டிபை பண்ணியவுடன், நான் வெளிநாடு போக, அரசுக்கு ஆட்சேபணை இல்லை என்று (No objection certificate) கடிதம் கொடுத்திடுவாங்க. இந்த முறை, திடீர் திருப்பமாக, புது ஆட்சி வந்தவுடன் நடத்தப்படும் திடீர் ரெய்டு போல என் பூர்வாங்கம் சில சின்சியர் சிகாமணிகளால் தோண்டப்பட்டது. EI என்பது என்ன? ஏன் திரும்பத் திரும்ப இவங்களை மட்டும் கூப்பிடறாங்க? எத்தனை முறை வெளிநாடு போய் வந்துள்ளார்? ஒவ்வொரு முறையும் முறையான அனுமதி பெற்றுப் போனாரா என ‘புலன் விசாரணை’ நீள , அதற்கான டாக்குமென்ட்ஸ், என்னுடைய பணிப்பதிவேடு (SR) எல்லாம் தலைகீழா புரட்டப்படுது. நீட் எக்ஸாம் ரிசல்ட்டுக்குக் காத்திருக்கும் மாணவராய் டென்ஷனுடன் தினம் தினம் நான்.

உலகக் கல்வி அமைப்பிலிருந்து நடைபெறவிருக்கும் நிகழ்ச்சிகளைப் பற்றியும், அதில் நான் கலந்துகொள்வதை உறுதிப்படுத்தியும், ’NOC கொடுத்திடுங்க மக்கா’ என்று இயக்குநருக்கு ரெக்கமன்ட் மெயிலும்கூட அனுப்பிட்டாங்க. மார்ச் 6ஆம் தேதி ஃப்ளைட். ஐந்தாம் தேதி காலையும் விடிஞ்சிடிச்சு. இன்னும் அனுமதி பத்தி பேச்சு, மூச்சக் காணோம். நான் அமெரிக்கா போவதைக் கேள்விப்பட்ட ஆசிரிய சொந்தங்கள் வேறு, “என்னாது? மகளுக்கு டென்த் பப்ளிக், நீங்க வெளிநாடு போறீங்களா?” ஏதோ வேற்று கிரகத்து ஜந்துவைப் போல பார்த்து, குற்றவுணர்ச்சியைத் தூண்ட, நான் நகம் கடித்து டென்ஷனாக… ஒரு வாரமாக அன்னந் தண்ணியில்லாம இயக்குநகரத்தில அல்லாடிட்டு இருந்த எங்கள் பொதுச் செயலாளர் ஐந்தாம் தேதி மாலை 6.30 மணிக்கு அந்த சுபச் செய்தியை அறிவித்தார். ”ரமா, வெளிநாடு போறதுக்கு NOC ஆர்டர் வாங்கிட்டேம்மா. கிளம்புங்க!”

(தொடரும்)

படைப்பாளர்:

ரமாதேவி ரத்தினசாமி

எழுத்தாளர், அரசுப்பள்ளி ஆசிரியர். பணிக்கென பல விருதுகள் வென்றவர். இவர் எழுதி வெளிவந்துள்ள ‘கனவுகள் மெய்ப்படட்டும்’ கட்டுரைத் தொகுப்பு பரவலாக கவனம் பெற்றுள்ளது. 2014, 2015ம் ஆண்டுகளில் ஐ நா சபையில் ஆசிரியர் பேச்சாளராகக் கலந்துகொண்டு உரையாற்றியுள்ளார். இந்தத் தொடரில் அவரது ஐ நா அனுபவங்களை நகைச்சுவையுடன் விவரிக்கிறார்!