கடந்த சில கட்டுரைகளில் அலைக்கற்றையில் உள்ள இரு துருவங்களுக்கு இடையே, அதாவது தீவிர இடது மற்றும் தீவிர வலது கொள்கைகள் இடையே உள்ள முரண்கள் குறித்து விரிவாக பார்த்தோம். இந்த இரு துருவங்களுக்கு நடுவே இன்னும் மூன்று விதமான அரசியல் கொள்கைகள் இருக்கின்றன – இடது/தாராளவாதம், நடுநிலை, மற்றும் வலது/பழமைவாதம்.
பொதுவாக இரு துருவங்களுக்கு இடையேயான முரண் குறித்த உரையாடல்கள்தான் மிகவும் காரசாரமாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. ஆனால், அரசியல் கொள்கைகள் சார்ந்த விவாதங்களில் இடது பக்கத்தில் உள்ள தீவிர இடதுசாரிகளுக்கும் இடது/தாராளவாதிகளுக்கும் இடையே நிகழும் உரையாடல்கள் மிக மிக காரசாரமாகவும் சுவாரஸ்யமானதாகவும் இருக்கிறது என்று நான் கூறுவேன். காரணம், இந்த இரண்டு இடது கொள்கைகளுக்கு மத்தியில் எந்த அளவுக்கு ஒற்றுமை இருக்கிறதோ, அதே அளவுக்கு முரண்களும் இருக்கின்றன; இந்த முரண்கள் குறித்த சண்டைகள் சுவாரஸ்யத்தை கூட்டுவதுடன், நம் முன்னேற்றத்துக்கான சரியான கொள்கை எது என்று சிந்திக்கவும் வைக்கின்றன. இந்தக் கட்டுரையில் இடது சாரிகளுக்கு இடையே உள்ள முரண்கள் குறித்தும் அவற்றின் சாதக பாதகங்கள் குறித்தும் நாம் விரிவாகக் காணலாம்.
முதலில், தீவிர இடதுசாரிகளுக்கும் இடது/தாராள வாதிகளுக்கும் உள்ள ஒற்றுமைகள் குறித்து பார்ப்போம். அரசியலில் இடது கொள்கைகளை பின்பற்றும் அனைவருக்கும் சுரண்டல் இல்லாத சமத்துவமான சமுதாயத்தை படைப்பதே பொதுவான இறுதி இலக்கு.
தீவிர இடதுசாரிகள், ஒடுக்கப்படும் மக்கள் அனைவரையும் தொழிலாளர் வர்க்கமாக அணிதிரட்டி ஆதிக்கம் செலுத்தி, காலம் காலமாக மக்களின் உழைப்பைச் சுரண்டும் முதலாளி வர்க்கத்தை எதிர்த்து பெரும் புரட்சி செய்து, பாட்டாளி வர்க்க விடுதலையை அடையமுடியும் என்று கூறுவார்கள். இந்த விடுதலையை புரட்சி மூலம் சாத்தியப் படுத்தலாம் என்று நம்புவார்கள். மக்கள் புரட்சியை சாத்தியப்படுத்த அதிரடியாக ராணுவ நடவடிக்கைகள் மூலம் அரசியல் அதிகாரத்தை கைப்பற்றி, கடுமையான சட்டதிட்டத்தின் மூலம் சமத்துவத்தை வலுக்கட்டாயமாக உருவாக்க முடியும் என்று கூறுவர்.
தாராளவாதிகள், வர்க்க புரிதலோடு பலதரப்பட்ட அடையாளங்கள் மூலம் ஒடுக்கப்படும் மக்கள் அனைவரும் தோழமையுடன் தொடர்ந்து போராடி, சீர்திருத்தத்தின் வாயிலாக சமத்துவத்தை அடைய வேண்டும் என்று நம்புவார்கள். இவர்கள் ஜனநாயக அமைப்பில் உள்ள அமைதியான சீர்திருத்த வடிவங்கள் அனைத்தையும் பயன்படுத்தி நிதானமாக தொடர் சமூக உரையாடல் நிகழ்த்துவதன் மூலம் சமத்துவத்தை உருவாக்க முடியும் என்று கூறுவர்.
இரு சிந்தாந்த வாதிகளுக்கு இடையில் உள்ள முக்கியமான முரண், ஒருவர் (தீவிர இடது) புரட்சியையும் மற்றொருவர் (தாராளவாதிகள்) சீர்திருத்தத்தையும் தங்கள் அரசியல் கருவியாகக் கருதுவதே ஆகும். இப்போது இவ்விரு சித்தாந்தக்காரர்களும் ஒருவர் மீது மற்றொருவர் என்னென்ன விமர்சனங்கள் வைக்கிறார்கள் என்று பார்ப்போம்.
தாராளவாதிகளின் விமர்சனம்
தீவிர இடதுசாரிகள், புரட்சிக்கான சூழல் ஒரு பேரழிவு நிகழும்போது மட்டும்தான் வரும்; அப்போதுதான் அரசியல் அதிகாரத்தை பாட்டாளி வர்க்கம் கைப்பற்றி, சமத்துவம் தவறாத சுரண்டல் இல்லாத சமூதாயத்தை கட்டமைக்க முடியும் என்று பேரழிவு வரும்வரை காத்திருக்கிறார்கள். புரட்சிக்கான சூழல் இல்லாத காலத்தில் எவ்வளவு சீர்திருத்தம் செய்தாலும் எதோ ஒரு அடையாளம் மூலம் தொடர்ந்து ஒடுக்குமுறையை மக்கள் அனுபவிக்க நேரிடும்; எடுத்துக்காட்டாக, பெண்கள், குடும்ப அமைப்பிலிருந்து கல்வி மற்றும் வேலை வாய்ப்பு மூலம் விடுதலை பெற்றாலும், இந்த முதலாளித்துவ சுரண்டல் சமூகத்தில் மீண்டும் தொழிலாளியாக ஒடுக்கவே படுகிறார்கள்; எனவே, சீர்திருத்தம் என்பது புண்ணுக்கான மருந்து தானே தவிர, தேவை என்பது புரட்சி என்னும் அறுவை சிகிச்சை என்று கூறுவர்.
இவ்வாறு புரட்சிக்காகக் காத்திருக்கும் காலத்தில் சில தீவிர இடதுசாரிகள் சமுதாய மாற்றத்திற்காக எந்த ஒரு சீர்திருத்த செயலையும் செய்யாமல், தற்போதைய சமத்துவம் அற்ற சமூக நிலையை இப்படியே நீடிக்க தான் வைக்கிறது என்பர். இப்படிக் காத்திருக்கும் நிலைப்பாடு, தீவிர வலதுசாரிகளின் சரணாகதி நிலைப்பாட்டிற்கு சற்றும் சளைக்காத ஒன்றாக இருக்கிறது.
அதாவது, நாம் எவ்வளவு உழைத்தாலும் போராடினாலும், போன பிறவியில் நாம் செய்த பாவத்தின்படி இந்த பிறவியில் நாம் துன்பப்பட தான் செய்வோம். எனவே, இறைவன் மீது முழு நம்பிக்கை வைத்து (சரணடைந்து) ஒன்றுமே செய்யாமல் அமைதியாகவே (அடிமையாகவே) இருக்கவேண்டும் என தீவிர வலதுசாரிகள் பரப்புரை செய்வர். புரட்சி வரும், அப்புறம் எல்லாம் மாறும் என்று காத்திருப்பதும் இறைவன் வந்து துன்பத்தில் இருந்து மீட்டுப் போவார் என்று காத்திருப்பதும் இறுதியில் தற்போதைய சமத்துவம் அற்ற நிலையை இப்படியே நீடிக்க தான் செய்கிறது. இறுதியில், மேற்கூறிய புரிதலோடு, தங்களைத் தீவிர இடதுசாரிகள் என்று கூறிக்கொள்ளும் சில நபர்கள், உண்மையில் தீவிர வலதுசாரிகள் போல்தான் செயல்படுகிறார்கள். இவ்வாறு, தாராளவாதிகள் தீவிர இடதுசாரிகளை விமர்சிக்கிறார்கள்.
தீவிர இடதுசாரிகளின் விமர்சனம்
தாராளவாதிகள், கொஞ்சம் கொஞ்சமாக பல ஆண்டுகளாகப் போராடி தொடர் சீர்திருத்தங்கள் மூலம் சில முற்போக்கான மாற்றங்களை கொண்டுவருகிறார்கள். எடுத்துக்காட்டுக்கு, பாலின சமத்துவம் பற்றி தொடர்ந்து பேசி, சமூகத்தில் ஆணும் பெண்ணும் சமம்தான் என்ற கருத்தை நிறுவுவதன் மூலம் படிப்படியாகப் பெண்களுக்குக் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பங்குவகிக்கும் வாய்ப்பை பெறமுடிந்தது. தவிர, முதலாளித்துவத்தின் வழியாகத்தான் இதற்கு முன்பு கிடைக்காத பல உரிமைகளை ஒடுக்கப்படும் மக்களாகிய நாம் பெறமுடியும் என்றும், இது போன்ற சீர்திருத்தங்கள் மூலம் காலப்போக்கில் ஒட்டுமொத்த விடுதலையையும் மெல்ல மெல்ல பெற முடியும் என்று கருதுகிறார்கள். ஆனால், இந்த சின்ன சின்ன முற்போக்கான முன்னேற்றங்களும் முதலாளித்துவ வர்க்கத்தின் நன்மைக்கு வழிவகுக்கும் படியே அமைகிறது.
எடுத்துக்காட்டாக, உலகமயமாக்கலுக்குப் பிறகு பெருபான்மையான நாடுகளில் ஒரு குடும்பத்தில் ஒருவர், அதாவது ஆண் மட்டும் வேலை பார்த்து மொத்த குடும்பத்தின் செலவுகளை சரிவர சமாளிக்க முடியாதபடி பொருளாதார சூழல் மாறியது. எனவே, பெண்களும் கல்வி கற்கவும் வேலை செய்யவும் ‘அனுப்பப்பட்டனர்.’
தவிர, புரட்சிக்கான சூழல் கூடிவரும்படி போராட்டங்கள் துளிர்விடும் போதெல்லாம், அந்தப் போராட்டங்கள் பெரும் புரட்சியாக வெடிக்கவிடாமல் பார்த்துக்கொள்ள சின்ன சின்ன உரிமைகளை சலுகைகளாக கண்களுக்கு கவர்ச்சிகரமாக காண்பித்து நம்மை ஏமாற்றி, மீண்டும் நம்மை இதே நிலையில் நீடிக்க வைக்கிறது இந்த முதலாளித்துவம். சான்றாக, மேற்கத்திய நாடுகளில் விலைவாசி அதிகரிக்கும் நேரத்தில், மக்களின் வாங்கும் திறன் பாதிக்கப்படுகிறது; அவர்கள் மத்தியில் அமைதி குன்றுகிறது. அப்போது மீண்டும் அமைதியைக் கொண்டுவர, குறைந்தபட்ச ஊதிய அளவை சற்று உயர்த்துவார்கள். மேலோட்டமாகப் பார்க்கும் போது, உழைக்கும் மக்களின் அடிப்படை சம்பளம் உயர்ந்துள்ளது ஒரு நல்ல சீர்திருத்த செயலாக தெரியலாம். ஆனால், பொருளாதார மந்த நிலை எல்லாம் சரியாகி, ஆரோக்கியமாக நல்ல நிலையில் செயல்படும்போது எந்த முதலாளித்துவ அரசும் தொழிலாளர்களுக்கு லாபத்திலிருந்து பங்கு தரவோ அல்லது அடிப்படை சம்பள உயர்வையோ செய்ய முன் வராது.
எனவே, சீர்திருத்தம் என்பது முழு விடுதலையை அடைய விடாமல் தடுக்கும் மாயைதானே தவிர, சுரண்டல் அற்ற சமத்துவமான சமுதாயத்தை படைக்க உள்ள ஒரே கருவி கிடையாது என்று தாராளவாதிகளை நோக்கி தீவிர இடது சாரிகள் விமர்சனம் வைக்கிறார்கள்.
இரு தரப்பு கொள்கைக்காரர்கள் மீது வைக்கப்படும் இதுபோன்ற விமர்சனங்கள் யாவும் நியாயமாகத் தோன்றலாம். அப்போது எந்தக் கொள்கையை பின்பற்றுவது என்ற குழப்பம் நமக்கு வரலாம். எனக்கும் வந்தது. இந்த குழப்பத்தில் இருந்து விடுபட எனக்கு ஒரு திருக்குறள் உதவியது.
குறள்:
அருவினை யென்ப உளவோ கருவியான்
காலம் அறிந்து செயின் (483).
பொருள்: ஏற்ற கருவிகளோடு, தகுதியான காலத்தையும் அறிந்து செயலைச் செய்தால், செய்வதற்கு அரிய செயல் என்பதும் உண்டோ?
மேல் குறிப்பிட்ட திருக்குறளின் பொருளை அறிந்த போதுதான் இந்த காலத்தில் தற்போதைய சமூகச் சூழலில் ஒடுக்குமுறைகளை எதிர்த்துப் போராட எந்தக் கொள்கை சரியான கருவியாக இருக்கும் என்பதை பகுப்பாய்ந்து செயல்பட வேண்டும் என்று அறிந்தேன். இப்போது ஒரு கேள்வி எழலாம். சூழலுக்குச் சரியான கொள்கை எது என்பதை எதன் அடிப்படையில் கண்டறிவது என்று தோன்றலாம்.
நம் இருத்தலை பாதிக்காதவகையில் ஒடுக்குமுறையை எதிர்க்கும் நம் போராட்டத்திற்கு குறைந்த பட்ச பயனையாவது உறுதி அளிக்கும் ஒரு சாதகமான கொள்கையை அடையாளம் கண்டு, அந்தக் கொள்கையை நம் கருவியாகப் பயன்படுத்த வேண்டும்.
சான்றாக, ஒரு பெண் 100 ஆண்டுகளுக்கு முன் மிக மிகப் பிற்போக்குத் தனமான இறுகிய இந்திய சமூகத்தில், தன்னைச் சுரண்டும் குடும்ப அமைப்பில் இருந்து ‘புரட்சி’ செய்து வெளியே வந்தால், அவளுடைய ஆரோக்கியமான பிழைப்பு விகிதம் மிகவும் குறைவாக இருக்கும். எனவே 100 ஆண்டுகளுக்கு முன் மிதவாதப் பெண்ணியம் என்று கூறப்படும் ‘Liberal Feminism’ பேசப்பட்டது.
ஆண்டாண்டு காலமாகப் நடந்த உரையாடல்கள் மூலம் கொஞ்சம் கொஞ்சமாக நிகழ்த்த சமூக மாற்றம், இப்போது என்னை தீவிரப் பெண்ணியம் பேசி, புரட்சி செய்து, முழு விடுதலை பெற வழிவகுக்கிறது.
தொடரும்…
படைப்பாளர்:
தீபிகா தீனதயாளன் மேகலா
தமிழகத்தைச் சேர்ந்த தீபிகா, தற்போது கனடாவின் மக் ஈவன் பல்கலைக்கழகத்தில் மானுடவியல் பட்டப்படிப்பு பயின்றுவருகிறார். தான் கற்றுவரும் மானுடவியல் கோட்பாடுகளை தமிழ் நிலப்பரப்புக்கும், அமெரிக்கக் கண்டத்துக்கும் பொருத்திப் பார்த்து கட்டுரைகளை எழுதத் தொடங்கியுள்ளார். வரலாறு மற்றும் தமிழ் மேல் தீவிர பற்று கொண்டவர். இவரது யூடியூப் செய்தி சேனலின் சுட்டி: https://www.youtube.com/channel/UCyNXWPShwgZG4IsyjP7BnAQ