மனிதர்களின் மொழியை வைத்தே அவர்களுடைய பரிணாமத்தின் பல கூறுகளை நம்மால் ஆராய முடியும். காலனி ஆதிக்கக் காலகட்டத்தோடு சேர்ந்து வளர்ச்சி அடைந்த சென்னை மாநகரத்தின் மிக முக்கிய அடையாளமான ‘மெட்ராஸ் வட்டார வழக்கும்’ அப்படி உருவானதுதான்.
ஒரு நகரம் கட்டமைக்கப்படுவதில் உழைக்கும் மக்களின் பங்கு அளப்பரியது. சென்னை என்று அழைக்கப்படும் இந்த மெட்ராஸ் நகர மக்களால் பேசப்படும் ‘மெட்ராஸ் பாஷை’யின் பின்புலத்தில் இந்த நகரத்தின் வளர்ச்சியும், மாற்றங்களும், பரிணாமமும் உறைந்திருக்கிறது.
ஆங்கிலேயர்கள் சென்னையை தங்களுடைய இருப்பிடமாக கொண்டு இங்கே கோட்டையை அமைத்த காலகட்டத்தில், நிறைய வேலை வாய்ப்புகள் உருவாகத் தொடங்கின. வளர்ந்து வந்த வாய்ப்புகளின் பொருட்டு பல ஊர்களில் இருந்தும் பலதரப்பட்ட மொழி பேசிய மக்கள் சென்னையை நோக்கிப் படையெடுத்தனர். சென்னையில் வசித்த பூர்வ குடிகளும் காலனியாதிக்க காலத்தில் இங்கே பல்வேறு மொழி பேசிய மக்களை தினமும் சந்தித்து பேசும் வாய்ப்பு இருந்தது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை ஒட்டி உள்ள வால்டாக்ஸ் ரோடு ரிக்ஷா ஓட்டிகளும், குதிரை வண்டிக்காரர்களும் அன்றாடம் ரயில் நிலையத்தில் வந்து இறங்கிய வேற்று மொழி மக்களை சவாரிக்காக கூட்டிச் செல்லும்போது அவர்கள் பேசிய உருது, தெலுங்கு, ஹிந்தி, ஆங்கிலம், பர்மீஸ், கன்னடம், மலையாளம் முதலியவற்றில் பரவலாகப் பேசப்பட்ட சொற்களை அவர்களின் அன்றாட மொழியோடு கலந்து பேசத் தொடங்கினர். நாளடைவில் அது சென்னை மக்களுக்கே உரித்தான ஒரு புதிய பேச்சு வழக்காக மாறியது. இப்பேச்சுவழக்கு சென்னை மட்டுமல்லாது வட ஆற்காடு பகுதி வரையில் புழங்குவதைக் காணலாம்.
இந்த மெட்ராஸ் தமிழின் தனித்தன்மையே இதில் கையாளப்பட்ட பல்வேறு மொழி வார்த்தைகளும், சொல்ல வந்த கருத்தினை நேரிடையாக சொல்ல முற்படுவதும், கடினமான நீளமான சொற்களையும்கூட எளியதாக சிறியதாக திரித்து உச்சரிப்பதும் தான். ‘இட்டுக் கொண்டு வந்துவிடு’ என்பதை எளிதாகச் சுருக்கி, ‘இட்டாந்திடு’ என்று ஒரே சொல்லாக மெட்ராஸ் தமிழில் சொல்லி விட முடியும். நாள்தோறும் கடின உடல் உழைப்பின் மூலம் பொருளீட்டும்படியான வாழ்க்கை முறையைக் கொண்டிருந்த சென்னையின் உழைக்கும் வர்க்கம், நின்று நிதானமாக மொழியைக் கையாண்டு பதில் அளிக்கக்கூடிய வாழ்வியல் வாய்க்கப் பெறாததால், இப்படியாக தமிழை எடுத்தாண்டனர் என்று மெட்ராஸ் பாஷையை இம்மக்கள் கை கொண்ட விதம் குறித்து வரலாற்று ஆய்வாளரான நிவேதிதா லூயிஸ் கூறுகிறார்.
ஒரு எள்ளல் தன்மையோடு எளிமையாக கையாளப்படும் மொழியாக மெட்ராஸ் தமிழ் இருந்து வருகிறது. மெட்ராஸ் தமிழுக்கே உரித்தான அப்பீட்டு, அட்டு, பேஜாரு, துட்டு, கலீஜூ போன்ற வார்த்தைகளைப் பேசி விடுவதாலேயே ஒருவர் இந்த வட்டார வழக்கை சிறப்பாகப் பேசுகிறார் என்று ஆகிவிடாது – காரணம்: இச்சொற்கள் மட்டுமின்றி இம்மொழியின் அடிநாதம், இது பேசப்படும் மக்களின் வாழ்வியலோடு கலந்த ஒரு அங்கமாக உள்ளதால் மட்டுமே.
‘சாவு கிராக்கி’ என்ற சொல்லாடலை எடுத்துக் கொள்வோம். அந்நாட்களில் சென்ட்ரல் ஸ்டேஷன் வெளியே சவாரிக்காக காத்திருந்த ஜட்கா (குதிரை) வண்டிக்காரர்கள் சவாரி கிடைக்காவிடில் எதிரே இருந்த மருத்துவமனையின் பிணவறையிலிருந்து பிணங்களை சவாரியாக ஏற்றிக் கொண்டு போவது வாடிக்கை. ‘கிராஹக்’ என்ற ஹிந்தி சொல்லிலிருந்து வந்தது தான் ‘கிராக்கி’. சவாரி அவர்களுக்கு கிடைக்காவிடில் ‘சாவு கிராக்கி’தான். இப்படி ஒவ்வொரு சொல்லுக்குப் பின்னும் மெட்ராஸ் தமிழில் சென்னையின் வரலாறு பொதிந்துள்ளது.
ஆனால் ஆரம்ப காலகட்டங்களில், தமிழ் சினிமா, இந்த பேச்சு வழக்கை, நாகரீகத் தன்மையற்ற வாழ்க்கைமுறையை பிரதிபலிப்பதற்காகவே எடுத்தாண்டது. மூன்று நான்கு தலைமுறையாக சென்னைவாசிகளாக இருந்து வரும் அனைத்து தரப்பு மக்களின் வீடுகளிலும் புழங்கும் ஒரு பேச்சு வழக்காக இம்மொழி இருந்தாலும், உழைக்கும் வர்க்கம், ஒடுக்கப்பட்ட மக்கள் மட்டுமே பேசும் ஒரு மொழியாக திரைப்படங்களில் பதிவு செய்யப்பட்டதால், மெட்ராஸ் தமிழ் குறித்த ஒவ்வாமை இன்றளவும் பலருக்கும் இருப்பதைக் காணலாம். குடிசையில் வசிக்கும் ஏழ்மையான கதாநாயகன் திருந்திய தமிழை பேசுவார். ஆனால் அதே திரைப்படத்தில் குடிகாரனாக, திருடனாக, அடியாளாக வரும் கதாபாத்திரங்கள் மெட்ராஸ் தமிழ் பேசுவதாக சித்தரிக்கப்பட்டது. அதேபோல மிகைப்படுத்தப்பட்ட ஒரு தொனியுடன் மெட்ராஸ் தமிழ் திரைப்படங்களில் பதிவு செய்யப்பட்டது. இன்றைய திரைப்படங்களில் மாறிவரும் இந்தப் போக்கு வரவேற்கத்தக்கதே. இருந்தாலும், இன்றளவும் தமிழ்நாட்டைச் சேர்ந்த மற்ற மாவட்ட மக்கள் மெட்ராஸ் தமிழை பெரும்பாலும் கொச்சையாகவே பார்க்கின்றனர்.
சென்னை மக்களின் வாழ்க்கையோடு ஒன்றறக் கலந்த மெட்ராஸ் பாஷையை பற்றிப் பேசும்போது, மெட்ராஸ் தமிழால் உருவான கலை வடிவங்களை நாம் அறிந்து கொள்ள வேண்டும். அவை கானா பாடல்களும், குஜிலி பாடல்களும். எளிய மக்களின் அன்றாட வாழ்க்கை பாடுகளின் வெளிப்பாடு இந்தக் கலை வடிவங்களாக உருவெடுத்தது.
வட சென்னையின் தண்டையார்பேட்டை, வியாசர்பாடி, புளியந்தோப்பு, டுமிங் குப்பம், கொருக்குப்பேட்டை இடங்களில்தான் கானா பிறந்தது. காதல், நட்பு, சோகம், கல்யாணம், கொண்டாட்டம் என அனைத்தும் இந்த கானாபாடல்களில் வெளிப்பட்டாலும், இறுதி ஊர்வலத்தில் பாடப்படும் ‘மரண கானா’ ஒரு தனித்துவமான வகையறா. வாழ்க்கைத் தத்துவங்களை உள்ளடக்கிய வகையில் மரண கானா மெட்டிசைக்கப்படும். வாய்மொழி இலக்கியமாக இருந்து வந்த கானா பாடல்களுக்கு வெளிச்சம் தமிழ் சினிமாவின் மூலம் கிடைத்தது. பல கானா கலைஞர்களைக் கண்டறிந்த தமிழ் சினிமா, கானா கலைஞர்களையும், கானா பாடல்களையும் பிரபலப்படுத்தி ஊரறியச் செய்தது எனலாம் (சென்னை அடித்தள மக்கள் வரலாறு, பேராசிரியர் வி. ராமகிருஷ்ணன்).
19ஆம் நூற்றாண்டு வாக்கில் ‘குஜிலி பாடல்கள்’ பிரபலம் அடையத் தொடங்கின. அப்பாடல்களில் கருத்தாழம் பொதிந்த வரிகளை வைத்து எழுதி, நாட்டு நிலவரத்தையும், மக்களின் மனப்போக்கையும் பதிவு செய்ய ஆரம்பித்தனர். 4-5 தாள்கள் அடங்கிய சிற்றேடுகளாக அச்சிடப்பட்டு, ‘குஜிலி பாடல்கள்’ சென்ட்ரல் ரயில் நிலையத்தை அடுத்துள்ள ‘தீவிங் பஜார்’ பகுதியில் விற்கப்பட்டுள்ளன. ‘குச்சிலி’ என்ற சொல் குஜராத்தி பெண்மணியைக் குறிக்கும் சொல்லாகும். குஜராத்திகள் வசித்த பகுதி குச்சிலிக் கடைத் தெரு. அந்தத் தெருவில் விற்கப்பட்டதால் இந்த நூல்கள் குச்சிலி நூல்கள் எனப் பெயர் பெற்றன (முச்சந்தி இலக்கியம், பேரா. ஆ.இரா. வெங்கடாசலபதி).
நாளடைவில் சென்னை சந்தித்த இரு பெரும் பஞ்சங்களைப் பற்றியும், உலகப்போர் குறித்தும், ரேஸ் கோர்ஸில் நடந்த குதிரை பந்தயத்தை பற்றியும், எட்டாம் எண் ராசி அற்றதாக எப்படி பந்தயத்தில் பார்க்கப்பட்டது முதலிய பல சுவாரஸ்ய செய்திகளை இந்த குஜிலி பாடல்கள் பதிவு செய்துள்ளன. குஜிலி பாடல்களை இயற்றியவர்கள் எளிய மனிதர்களே. 1920களில் இருந்த குஜிலி பஜாரின் இன்று தெருப்பெயராக நீடிப்பது குறிப்பிடத்தக்கது. இந்நகரத்தின் வரலாற்றை அதன் வரிகளில் பொரித்த குஜிலி பாடல்கள் சென்னையின் பண்பாட்டு பாரம்பரியத்தின் பிரிக்க முடியாத ஒரு அங்கமாக மாறிப்போயின.
‘கானாவும்’, ‘குஜிலியும்’ மெட்ராஸின் பண்பாட்டு கலாச்சார விழுமியங்களை உள்ளடக்கிய கலை வடிவங்கள். இப்பாடல்கள் எளிமையானதாக மட்டுமல்லாமல் கேட்பவர்களின் கற்பனைக்கேற்ப மெட்டிசைத்து பாடக்கூடிய வகையில் இருந்தன. இந்தப் பாடல்களில் மக்களின் ஆன்மா வெளிப்பட்டதற்கான முதன்மை காரணம், இவை மெட்ராஸின் பேச்சு மொழியில் இயற்றப்பட்டதுதான். இவ்விரண்டு இசை, இலக்கிய வடிவங்களும் மக்கள் எளிதாக உள்வாங்கக்கொள்ள கூடியதாக செய்ததில், மெட்ராஸ் தமிழ் முக்கிய பங்காற்றியது.
மெட்ராஸ் பாஷை ஓயாது உழைக்கும் வர்க்கத்தின் மொழி மட்டுமல்ல, இது சென்னையின் அடையாளம்! நீங்கள் சென்னையை பூர்வீகமாக கொண்டவராக இருந்தாலும் சரி, சென்னைக்கு பஞ்சம் பிழைக்க வந்தவராக இருந்தாலும் சரி – சென்னையைப் புரிந்து கொள்வதில் மெட்ராஸ் பாஷையின் பங்கு மிகப் பெரியது.
கால மாற்றத்திற்கு ஏற்ப மாறிக்கொண்டே வரும் சென்னையில், நிலையான ஒன்றாக இந்த மெட்ராஸ் தமிழ் இருந்து வருகிறது. இம்மொழி கடந்த காலத்தை நிகழ்காலத்துடனும், இம்மக்களை அவர்களின் நகரத்துடனும் பிணைக்கும் வலுவான இழை என்றால் அது மிகையல்ல! சென்னை தின வாழ்த்துகள்.
படைப்பாளர்
கிரண்யா
எம்.பி.ஏ. பட்டதாரியான கிரண்யா, ஆர்.ஜே.வாக ஊடகங்களில் பணியாற்றியுள்ளார். வரலாறு வாசிப்பதில் பெரும் ஆர்வம் கொண்டவர். சென்னையில் பிறந்து வளர்ந்தவர்.