பயணங்கள் அப்போதெல்லாம் உல்லாசமாக இருந்ததில்லை. நடந்து நடந்து வலிக்கும் கால்களோடு, களைத்த மனதோடு, பாதையின் முடிவில் அடர் காட்டின் நடுவே ஓடைக்கரையோரம் இருக்கும் மண்டபத்தில் வனப் பூச்சிகளின் ரீங்காரத்தில் எல்லா பிள்ளைகளும் ஒரு மூலையில் தூங்க, இன்னொரு மூலையில் பெரியவர்கள் எல்லாரும் நள்ளிரவுப் பூஜைக்குத் தயாராக, சாமியாடிப் பெரியம்மாவின் கட்டளைகள் பறக்க, ஏழு கொழுந்தன்களும் அவர்தம் மனைவிகளும் கீழ்படிந்து நடக்க பூஜை முடிந்து சாமி மலையேற சூடம் குளிர அடிவயிற்றிலிருந்து பிளிரும் சத்தம் எழுப்பி மலையேறும் சாமியை, விளக்கின் ஒளியில் ஆடும் நிழல்களை, பேய்கள் என்று நம்பி அலறி விழித்தெழுந்த பிள்ளைகள் நடுவே கடைக்குட்டி பிள்ளையாய் நான்.
குலதெய்வத்திற்கு கோவில் கிடையாது; கட்டினாலும் எத்தனையோ யுக கோபத்தில் ஏதோ வகையில் இடித்து விடும் சீற்றம் கொண்டவள்; அடுத்தநாள் அதிகாலையில் இரவின் எல்லா பயங்கர கனவுகளோடும் அந்தரப்பட்டு அதரிப்பதறி விழிக்கும் பிள்ளைகளை ஓடைக் கரையிலேயே குளிக்கச் செய்து, அங்கு உள்ளதிலேயே புனிதம் எனக்கருதும் முக்கோண வடிவிலான கற்களைத் தேர்ந்தெடுத்து மஞ்சள் பூசி, குங்குமப் பொட்டிட்டு, மாலையிட்டு குலதெய்வம் ஆக்கி இருப்பார்கள். அடுத்து அதிகாலைப் பூஜைகள் நடக்கும்.
ஃ
இதற்கு முன்பு ‘மண்டோ’ படம் டிக்கெட் முன் வரிசையில்தான் இடம் கிடைக்க, படத்தின் முதல் காட்சியே கடலுள் அலையாக என்னை வாரி இழுத்துக்கொண்டது. இந்தப் படத்தையும் முன் வரிசையில் பெரிய திரையில் பார்ப்பது நல்ல அனுபவம்.
எடுத்தவுடனே முதல் காட்சியே ஈரச் சேலைப் படபடக்க அந்த நடை பின்னாலேயே நாம் செல்வதான கேமரா உக்தி, நம்மைப் படத்துள் இழுத்துக்கொள்கிறது.
சாமியை உருகி வேண்டும் ஈரச்சீலைக்காரியோடு சேலைச் சரசரப்புடன் அதிகாலை ஒலிகளுடன் மெள்ள விடியும் காலையை அவள் பின்னாலேயே தொடரும் ‘கேமரா’வுடன் நம்மையறியாமல் படத்திற்குள் நாமும் இருக்கும் வித்தையைச் செய்திருந்தார்கள். (இதை இன்னும் சிற்சில இடங்களில் செய்திருந்தார்கள்). அவள் விரல்களின் விபூதி வாசனை கூட நாசிக்குத் தெரிந்தது.
முடி என்பது பெண்களுக்கான மிகப் பெரிய ஆழ்மனக் குறியீடு. தியேட்டரில் என்னைப் பார்த்த நண்பர் ஒருவர், நான் தலை மழித்திருப்பதைப் பார்த்து, சுதந்திரத்தையும் துணிச்சலையும் உணர்வதாகக் கூறினார்.
‘தனது தலைமுடியை (வடிவமைப்பை) மாற்றும் பெண், தலையெழுத்தையே மாற்றுகிறாள்’ என்று ஆங்கில முதுமொழி ஒன்று கூட உண்டு.
படத்தில் இவள் ஆட்டோவில் தனித்திருக்கும் காட்சியில் ‘இவளே இவளிலிருந்து செல்வாள்’ அது இவளது விடுதலையை நினைவூட்டுவதாய் இருக்கும்; இவளது தலைமுடி விரித்துவிடப்பட்டிருக்கும்.
உதிரிப் பூக்கள் படத்தில், ‘அழகிய கண்ணே’ பாடலில் அந்த குழந்தைகள் கதை கதையாகத் தன் அம்மாவிடம் ஏதோ சொல்ல அம்மா எங்கோ வெறித்தபடி ‘ம்’ கொட்டித் தலையசைத்தவாறே கேட்காமல் கேட்டுக் கொண்டிருப்பது – எவ்வளவோ காலம் கடந்தும் மனதை என்னவோ செய்யும். அப்படித்தான் இந்தப் படத்தில், அப்படியொரு கனத்த காட்சியடுக்கிற்குப் பிறகு அழுது கொண்டிருக்கும் சிறுவன், அத்தையின் புன்னகைக்கு பதில் புன்னகை தர முடியாமல் தருவது, நிச்சயம் வெகு காலம் மனதில் நிற்கும் காட்சி.
காட்சியும் மொழியும் குறைவான வசனங்களே என்றாலும் சக்தி மிகுந்த வார்த்தைகளும்… என்ன சொல்ல…
மீனா தனது ஒரேயொரு பார்வையில் அவனுடைய (பாண்டியினுடைய) அத்தனையும் தூக்கி எறியும் வீரியம்; படம் முழுவதும் அவளது பார்வை, பார்வை, பார்வை; ஒரு கணம் அதை நேர்கொள்ள முடியாமல் பாண்டியின் கண்கள் தாழ்வது, தலை குனிவது;
இனிமேல் என்ன நடந்தாலும் – இருவருக்கும் திருமணமே நடந்தாலும், அவளுக்கு வாழ்க்கை நரகம் என்றால் அவனுக்கு அதைவிட நரகம்; எப்போதும் ஆண்மை அற்ற வெற்றுக் கூடாகத்தான் அவன் திரிய வேண்டியிருக்கும்.
அப்படியொன்று நிகழாமலும் – ஒரு படுகொலை, தற்கொலை, பல படுகொலைகள், வாழ்க்கைச் சிதறல்கள், ஜாதிச் சண்டைகள், தீ வைப்பு, போராட்டங்கள், ஆணவக் கொலைகள் எல்லாவற்றிற்கும் முன்பான – அனைத்தையும் உள்ளடக்கிய – எப்போதும் அல்லது எப்போது வேண்டுமானாலும் வெடிக்கக் காத்திருக்கிற வெதும்பலை உள்ளடக்கிய படம்.
ஃ
உண்மையில் இந்தப் படத்திற்கு இடைவேளையே தேவையில்லை. இடைவேளையில் நண்பர்கள் உரையாடல், சமோசா, காபி, டீ, சிகெரெட் புகை இவற்றைக் கடந்து மறுபடியும் படத்திற்குள் வருவது என்பது, படத்தின் உச்சக்கட்டம் வரை, பார்வையாளர்களைக் கட்டிக் கூட்டிக் கொண்டு வந்து, கட்டக் கடைசியில் கட்டவிழ்த்து விடப்படும்போது நிகழும் அந்தப் பாய்ச்சல்தான் மேஜிக்.
இடைவேளை விடுவது படத்தின் ஓட்டம் தடை படக் காரணம் ஆகிறது. இன்னொரு தடை, படத்தின் உச்சக்கட்டம் இன்னொரு படத்தை நினைவுபடுத்திவிடுவது. அதில் படத்திலிருப்பவர் வெற்றுப் பார்வையாளராகவே வளைய வரும் நம் மீது கல்லெறிவார்.
இந்தப் படத்திலோ விருந்தினராகக் கலந்துகொள்ளப் போயிருந்த கல்யாணத்தில் நம்மையே இழுத்துப் பிடித்து மாப்பிள்ளையாக்கியது போல, நாம்தான் முடிவை எடுத்தாக வேண்டும் என்று நம்மை பிடித்து இழுத்து படத்துக்குள் தள்ளுவது. இதற்கு இது சரிதான்; ஆனால், இன்னும்கூட யோசித்திருக்கலாமோ என்று தோன்றியது. இது என் விருப்பத் தோன்றல். அவ்வளவுதான்.
ஃ
குடும்பத்தினர் அத்தனை பேரும் உடன் இருக்க இருக்கவே பூசாரிகள்/ சாமியார்கள் பெண்களுக்குச் செய்யும் abuses…
அவளின் அந்த வசனமும் //அடிக்க மட்டும் செய்யல// பூசாரியின் செய்கைகளும் இவனது பார்வையும் இணையும் கோடு அதுதான் படத்தின் pre-climax என்னவென்று நமக்கு பறை சாற்றுகிறது.
ஃ
படத்தில் நடிகர்களாக, யாருடைய பங்காற்றலும் குறைவில்லை; கால்கள் கட்டப்பட்ட திமிறும் சண்டைக்கோழி, பேய் பிடித்ததாகச் சொல்லப்படும் பெண் (உண்மையில் பேய் யாருக்கு பிடித்திருக்கிறது?) எல்லாவற்றையும் வேடிக்கை பார்க்கும் சிறுவன் – அவன் நிலை தான் முக்கியமானது –பார்வையாளர்களுடையதும்.
மீனா மட்டுமல்ல, அந்தத் தாய், அந்தத் தகப்பன், அந்தத் தாய்மாமன், மாமன் மகன் பாண்டி, அவன் தங்கச்சிகாரிகள், அந்த சிறுவன் – ஆஹா என்ன ஒரு தெரிவு, அந்த ஆட்டோக்காரர் அந்தக் குடிகாரர்கள்… பாதையில் தென்படும் சட்டிசுரண்டும் பெரியவர் மற்றும் சிறுவன், தாய்மாமன் சீர் சுமந்து வரும் ஊர்வலம்… பூசாரி, பூசாரியின் எதிரே பேய்ப் பிடித்த பெண் – அவள் கணவன், அந்தக் குடும்பம், அதற்குள் கிடைக்கும் கொஞ்ச நேரத்தில் ஒருவருக்கொருவர் குடும்ப பொறணி பேசுவது… ஒரு ஆட்டோ அளவு ஜனம் வைத்துக்கொண்டு என்ன ஒரு மேஜிக்!!! யப்பா, ஆட்டோகூட படத்தில் ஒரு காதாப் பாத்திரம்தான். ஹைய்யோ, அந்த சேவலும்தான். அதை எனக்கு அவ்வளவு பிடித்தது. அதையெல்லாம் விட முக்கியமாக படத்தின் நிலப்பரப்பு. அது காட்டப்பட்ட விதம்.
கொட்டுக்காளி – இப்படியொரு படத்தைத் தந்ததற்காக, படைப்பாளர் பி.எஸ். வினோத் ராஜிற்கு நன்றி. சினிமா கூட்டுழைப்பு; அதில் இயக்குனரின் பங்கு என்பது எல்லாரையும் அவரவருக்கு உரியளவு பங்காற்ற வைப்பது; இந்த படத்தில் கேமரா, ஒலி அமைப்பு, பார்வையாளர்களாகிய நம்மையும் திரைக்குள் தள்ளிவிடுவது மற்றும் எல்லாருடையதையும் சிறப்பாகச் செய்ய வைத்திருக்கிறார். இவரது திரை மொழி; அசாத்தியமானது மொழி கடந்தது.
படைப்பாளர்
பிருந்தா சேது
சே.பிருந்தா (பிருந்தா சேது), கவிஞர். எழுத்தாளர். திரைக்கதை ஆசிரியர். ஹெர்ஸ்டோரீஸில் இவர் எழுதிய ’கேளடா மானிடவா’ என்ற தொடர் நல்ல வரவேற்பைப் பெற்றது. கேளடா மானிடவா, கடல், அருவி முதல் அயலி வரை, கதவு திறந்ததும் கடல், அப்புறம் என்பது எப்போதும் இல்லை, வாழ்க்கை வாழ்வதற்கே ஆகிய நூல்கள் ஹெர் ஸ்டோரிஸ் வெளியீடுகளாக வந்துள்ளன.