கேள்வி

தாய்ப்பால் தராமல் மற்ற பால் வகைகள், பவுடர், பாட்டில் உபயோகிப்பதால் என்ன பிரச்னை? நிறைய அம்மாக்கள் புட்டிப்பால் தருகிறார்களே!

பதில்

நிறைய பேர் செய்வதால் அந்தச் செயல் சரியானதாக ஆகிவிடாது! தாயின் பால் குழந்தையின் வாழ்விற்கு அமுது. முதல் உணவும் அதுதான். முதல் மருந்தும், தடுப்பூசியும் அதுதான். பற்பல தவறான கருத்துகளாலும் தவறான புரிதல்களாலும் தாய்ப்பால் தராமல், பாட்டில் பாலுக்கு மாறும் தாய்மார்கள் குழந்தைக்கு நீண்ட நெடிய அநீதியை இழைத்து விடுகிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.

பால் பாட்டில் மற்றும் நிப்பிள் இரண்டும் ஒவ்வொரு வகை பிளாஸ்டிக்கால் ஆனவை. அதில் ஊற்றிய சூடான பாடலை குழந்தை குடிக்கும்போது, நுண் நெகிழித் துகள்கள் (Micro Plastics) வயிற்றில் சேர்கின்றன. இவை உண்டாக்க கூடிய பாதிப்புகள் எண்ணிலடங்காதவை. தாய்ப்பாலிலும் நுண் நெகிழித் துகள்கள் இருக்கிறது என்கிறது ஆராய்ச்சி. ஆனால் அது ஒப்பீட்டளவில் மிக மிகக் குறைவு!

 பாட்டில் நிப்பிளைச் சப்பிய குழந்தை தாயின் மார்க்காம்புகளை சப்பாது. ஏனெனில் செயற்கை நிப்பிள் மிகவும் மிருதுவாக சப்புவதற்கு எளிதாகவும் இருக்கிறது. தன் முயற்சியால் குழந்தை இழுத்துப் பாலைத் தன் வாயில் கரந்து கொள்ள வேண்டியதில்லை. அதில் போடப்படும் ஓட்டை பெரிதாக இருந்து விட்டால் பாட்டிலை சாய்த்தாலே வாய் நிறைய பால் வந்துவிடும். எந்தப் பாலாக இருந்தாலும் அதில் மாவுச் சத்து, கொழுப்புச்சத்து, விட்டமின்கள் எல்லாம் இருக்கிறது. இதனால் பாலில் நோய்க்கிருமிகள் எளிதில் பல்கி பெருகிவிடும். அதுவும் பாட்டில் விளிம்பில், நிப்பிளின் மடிப்புகளில் கொழுப்பும், கிருமிகளும் எளிதில் சேர்ந்து விடும்.

பாட்டிலையும் நிப்பிளையும் சுத்தமாக பராமரிப்பது மிகவும் கடினம். வெந்நீர் ஊற்றி, சோப்பு பவுடர் போட்டு குலுக்குவதால் மட்டும் பாலில் இருந்த கொழுப்புச் சத்துக்கள் பாட்டிலை விட்டு நீங்காது. அதிக சூட்டுடன் நீரை பாட்டிலில் ஊற்றவும் முடியாது. கொதிக்க வைக்கவும் முடியாது. நமது சகோதரிகள் சூட்டிகை நிறைந்தவர்கள் அல்லவா! ‘2-3 பாட்டில்களை வைத்துக்கொண்டு அவற்றை பிரஷர் குக்கரில் நீரில் வைத்து 2-3 விசில் விட்டு விடுவேன். அதனால் கிருமிகள் இருக்காது’ என்கிறார்கள்!

அம்மாக்களே! நீங்கள் தடுக்குக்குள் போனால் நாங்கள் கோலத்திற்குள் போவோம் என்று கிருமிகள் சொல்வது காதில் கேட்கிறதா? அதிக அழுத்தத்துடன் அதிக சூட்டில் குறைந்த நேரம் வைப்பதால் எல்லா கிருமிகளையும் அழித்து விட முடியாது. ஓரளவுக்கு மேல் நிப்பிள், சூட்டை தாங்காது.

பாட்டில் பால் குடிப்பதால் மட்டும் லட்சக்கணக்கான குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு ஏற்படுகிறது என்பது ஆராய்ச்சி முடிவு. தாய்ப்பாலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்திகள் எதுவும் விலங்குகளின் பாலிலோ மாவுப் பால் வகைகளிலோ இல்லை. இயற்கையான எதிர்ப்பு சக்தி இன்னும் வளர்ச்சி அடையாத நிலையில் உள்ள குழந்தைக்கு நாமே நோய்க் கிருமிகளை பாட்டில், ரப்பர் மூலம் உள்ளே செலுத்துகிறோம். ஆடு, மாடு, ஒட்டகம் போன்றவற்றின் குட்டிகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அவற்றின் பால் மூலம் தானே கிடைக்கிறது. அதேபோல் நம்ம குழந்தைக்கும் அந்தப் பாலில் அது கிடைக்கும் என்று தானே யோசிக்கிறீர்கள்! யு ஆர் ரைட்!

மாட்டுப் பால் மாட்டின் கன்றுக்கு வரும் நோய்க்கு தேவையான எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கிறது. ஒட்டகம், திமிங்கலம் போன்றவையின் பாலில் உள்ள எதிர்ப்பு சக்திகள் அந்தந்த குட்டிகளுக்கு மட்டும் உதவும்.The Antibodies are Species Specific – குறிப்பிட்ட விலங்குகளுக்கு ஏற்றபடி அவற்றின் பாலில் நோய் எதிர்ப்பு சக்தி இருக்கும். மனிதக் குழந்தைக்கு மனிதத் தாயின் பால் தான் எதிர்ப்பு சக்தி தரும். விலங்குகளின் பாலால் குழந்தைக்கு வயிறு நிரம்பும், ஓரளவு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கலாம். சத்துக்களின் தேவையும் அந்தந்த ஜீவராசியை பொறுத்துதான்.

மாட்டுப்பாலில் கேசின் என்ற புரதம் அதிகம். இதை செரிக்க குழந்தையின் முதிராத உணவுப் பாதை சிரமப்படும். மாட்டுப் பாலுடன் ஒப்பிடும் போது ஆட்டுப்பாலில் விட்டமின் B12, போலிக் அமிலம், விட்டமின் D மற்றும் இரும்பு சத்து மிகவும் குறைவு. ஒட்டகப் பாலில் விட்டமின் A, விட்டமின் E, போலிக் அமிலம் மற்றும் விட்டமின் B5 (போன்டோதினக் அமிலம்) ஆகியவை மிகவும் குறைவு. தாய்ப்பால் கிடைக்காத குழந்தைக்கு வயிற்றுப்போக்கு மட்டுமின்றி தீவிர சளியான நிமோனியா நோயும் வர வாய்ப்பு அதிகம்.

பாட்டில் மூலம் குழந்தையின் வாயில் அதிக பால் வாயில் வந்து விடுவதால் புரை ஏறும் வாய்ப்புகளும் அதிகம். அப்போது பால் மூச்சுப் பாதையை அடைத்துவிட்டால் நிமோனியா ஏற்பட்டுவிடும் .வயிற்றுப் போக்கும் ,நிமோனியாவும் ஒரு வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு மிகவும் ஆபத்தானவை. ஒரு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் இறப்புக்கும் இவை இரண்டும் முக்கியமான காரணங்கள்.

சரியான முறையில் பால் பாட்டிலை சாய்த்துப் பிடிக்கவில்லையானால் ஒவ்வொரு முறை குழந்தை சப்பும் போதும், காற்றும் சேர்ந்து வயிற்றுக்கும் போகும். அதனால் வயிற்று உப்புசம், அடிக்கடி வாந்தி, வயிற்றுப்போக்கு ஆகியவை ஏற்படலாம்.

தாய்ப்பாலை சேமித்து வைக்கும் போது மூடி கொண்ட எவர்சில்வர் டப்பாவில் வைக்கும் படித்தான் அறிவுறுத்தப்படுகிறது. பிளாஸ்டிக் பாட்டிலில் வைத்தால் தாய்ப்பாலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்திகளும் மற்ற நல்ல புரதங்களும் பிளாஸ்டிக்குடன் எதிர்வினை புரிந்து வீணாகி விடுகின்றன.

தாய்ப்பாலை விட மற்ற பால் வகைகள் எல்லாமே இனிப்பு சுவை அதிகம் கொண்டவை. மற்ற பால் வகைகளில் சீனியும் சேர்த்து கொடுப்பதுதான் பழக்கமாகவும் உள்ளது. குழந்தை முதன்முதலில் உணரும் சுவை இனிப்புதான். ஒரு முறை பாட்டிலில் வேறு வகை பாலைக் கொடுத்து விட்டாலே ஆபத்து தான். அதிக இனிப்புள்ள பால், குறைவான வேகத்தில் சப்பினாலே வாயில் நிறைய சேருமானால் குழந்தை அதைத்தானே விரும்பும்?! இதனை ருசி கண்ட குழந்தை தாயின் மார்பில் வாயே வைக்காது. இதை Nipple confusion என்பர். பிறகு சிரமப்பட்டு தான் தாயிடம் பழக்க வேண்டும் .ஒரு முறைக்கே இப்படி என்றால், அறுவை சிகிச்சை, அம்மாவுக்கு இடுப்பு ,முதுகு வலி என்று ஏதேதோ காரணத்தால் பிறந்த 3-4 நாட்கள் பாட்டிலில் தந்து பழகிவிட்டால் குழந்தையை தாயிடம் ஊட்ட வைப்பது பெரிய தலைவலிதான்.

மாட்டுப்பால், ஆட்டுப்பால் ஆகியவற்றைத் தருவதால் படிம நச்சுக்கள் குழந்தையின் உடலில் சேருகின்றன. (உ-ம்) DDT, விவசாயத்திற்கு பயன்படுத்தும் பூச்சிக்கொல்லிகள், உரங்கள் போன்றவை படிம நச்சுக்கள் என்று அழைக்கப்படுகின்றன. அவை பயிர்த் தாவரங்களுடன் சேர்ந்து இருக்கின்றன. அவற்றை சாப்பிடும் ஆடு, மாடுகளின் பாலில் படிம நச்சுக்கள் அதிகம். தாய்ப்பாலில் கூட DDT இருப்பதாக பல ஆண்டுகளுக்கு முன்பே கண்டுபிடித்து இருக்கின்றனர். ஆனால் ஆடு, மாடுகளின் பாலுடன் ஒப்பிடும்போது தாய்ப்பாலில் படிம நச்சுக்கள் குறைவு.

பவுடர் பால் வகைகளில் நோய் எதிர்ப்பு சக்திகள் எதுவுமே இல்லை. அவற்றில் இனிப்புக்காகவும், கெட்டுப்போகாமல் இருக்கவும், பல வேதிப் பொருட்கள் சேர்க்கப்படுகின்றன. இதனால் நுண்ணூட்ட சத்துக்கள் சிதையும் வாய்ப்புகள் அதிகம். பவுடரைக் கரைக்க பயன்படுத்தப்படும் நீர் மூலம் நோய்க்கிருமிகள் பரவக் கூடும். அதிகமான படிம நச்சுக்களும் குழந்தையின் உடலில் சேர்கிறது.

மற்ற பால் வகைகளைக் கொடுக்கும் போது தண்ணீர், எரிபொருள் பயன்பாடு மிகவும் அதிகம். அதனால் சுற்றுச்சூழல் மாசுபாடு அதிகம். பவுடர் பால் வகைகள் தயாரிக்கும் தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் தண்ணீர், எரிபொருள் இழப்புகள், அதனால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசு எல்லாமே அதிகம்தான். பயன்படுத்தப்பட்ட பிறகு குப்பையில் சேரும் பாட்டில்கள், நிப்பிள்கள், பால் டின்கள், அட்டைப்பெட்டிகள் என்று சுற்றுச்சுழல் மாசுக்களின் பட்டியல் நீள்கிறது. நெகிழி நுண் துகள்களும், படிம நச்சுக்களும் கல்லீரல், உணவு பாதை மற்றும் சிறுநீரகங்களை நாட்பட சிதைக்கின்றன. மெது மெதுவாக அவை செயல் இழக்கின்றன.

மறதி நோய், பார்க்கின்ஸ் நோய், குழந்தைகளின் வளர்ச்சி பருவங்கள் (Developmental Milestones) தாமதமாகுதல், ஆண் பெண்களிடையே மலட்டு தன்மை, முக்கியமாக ஆண்களிடையே விந்தணு ஓட்டம் குறைதல், சுவாசக் கோளாறுகள், இதய நோய்கள், சர்க்கரை நோய் மற்றும் கல்லீரல், மார்பகம், சினை முட்டை, ப்ராஸ்டேட் சுரப்பி போன்றவற்றின் புற்றுநோய் என்று பற்பல உயிர்க்கொல்லி நோய்களை ஏற்படுத்துகின்றன. குப்பையில் சேரும் மக்காத பிளாஸ்டிக் பொருட்களிலிருந்து வெளியாகும் பைஸ்பினாஸ் (BPA) மற்றும் ப்தோலேட்டுகள் (Pthalates) சில நாளமில்லா சுரப்பிகளில் உள்ள வேதிப்பொருட்களைப் போலவே வடிவத்தைக் கொண்டிருப்பதால் (Mimics Normal Endocrine structure) உடலில் அந்த நாளமில்லாச் சுரப்பிகள் சுரப்பதிலும், வேலை செய்வதிலும் பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. மேற்குறிப்பிட்ட ஆராய்ச்சி முடிவுகள் மருத்துவ உலகத்தையே அச்சுறுத்திக் கொண்டிருக்கின்றன.

 எல்லாவற்றுக்கும் முத்தாய்ப்பாக சில செய்திகள்:

  1. தாயின் மார்புடன் அணைத்துப் பாலூட்டும் போது குழந்தைக்கு கிடைக்கும் உணர்வுகள் மென்மை, அன்பு, பாசம், அரவணைப்பு, பாதுகாப்பு உணர்வு ( TALCS) இவை யாவும் பவுடர் பால் ஊட்டுவதில் கிடைப்பதில்லை. இதனால் குழந்தையின் ஆரம்ப காலத்தில் மிகவும் தேவையான உணர்வுகளுக்கான உணவு (Emotional Food) கிடைப்பதில்லை.
  2.  மேற் சொன்னவற்றால் தாய்க்கு கிடைக்கும் பெருமிதம், பூரிப்பு ஆகியவையும் மிஸ்ஸிங்!!
  3.  வளர்ந்த பிறகு குழந்தைக்கு ஏற்படும் வாழ்வியல் நோய்களான சர்க்கரை நோய்,அதிக இரத்த அழுத்தம்,இரத்தத்தில் அதிகக் கொழுப்பு வரும் வாய்ப்பு தாய்ப்பாலில் குறைவு. மற்ற பால் வகைகள் தரும் போது வாய்ப்பு அதிகம்.
  4.  தாய்ப்பால் தருவதால் தாய்க்கு உயிர் கொல்லி நோய்களான மார்பக புற்றுநோய், சினை முட்டைப் புற்றுநோய் ஏற்படுவது தடுக்கப்படுகிறது.
  5. தாய்ப்பால் மட்டுமே தரும் முதல் 6-மாதங்கள் மகளிருக்கு அதுவே ஒரு இயற்கையான கருத்தடை செயல்முறையாகிறது .

மற்ற பால் வகைகள், பால் பவுடர், பாட்டில், ரப்பர் நிப்பிள் ஆகிய அனைத்துக்கும் ஒரு பெரிய தடா! ‘டாட்டா!’ சொல்லி விடுங்கள் பெண்களே!

தொடரும்…

படைப்பாளர்

மரு. நா. கங்கா

நா.கங்கா அவர்கள் 30 வருடம் அனுபவம் பெற்ற குழந்தை மருத்துவர். குழந்தை மருத்துவம் மற்றும் பதின்பருவத்தினர் மருத்துவத்தில் சிறப்புப் பட்டம் பெற்றவர். குழந்தைகளுக்கான உணவு மற்றும் தாய்ப்பால் ஊட்டுதல் ஆகியவற்றில் சிறப்புப் பயிற்சி பெற்ற உணவு ஆலோசகர். குழந்தை வளர்ப்பில் முனைவர் பட்டமும் பெற்றிருக்கிறார். இந்திய குழந்தை மருத்துவர் சங்கத்தின் “சிறந்த குழந்தை மருத்துவர்” விருது பெற்றவர். குழந்தை வளர்ப்பு பற்றி பல நூல்களை எழுதியிருக்கிறார். வானொலி மற்றும் அச்சு ஊடகங்கள் மூலமாகத் தொடர்ந்து குழந்தை வளர்ப்பு மற்றும் குழந்தைகளின் உடல்நலம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.