கேள்வி
குழந்தைகள் முதல் எல்லோரும் சாப்பிடும் பிட்ஸா, கேக், பலவகை சிப்ஸ் போன்றவற்றை ஒரே வார்த்தையில் குப்பை உணவு (JUNK FOOD) என்று வசை பாடுகிறார்களே! இது நியாயமா?
பதில்
வாங்கம்மா! வாங்க! இன்று காலை டிபன் உங்கள் வீட்டில் எல்லோருக்கும் நூடுல்ஸா? தின்பண்டமாக கடையில் விற்கும் சிப்ஸ் கேட்டு அடம் பிடித்தார்களா உங்கள் வாரிசுகள்? அப்படித்தான் இருக்கும்.
இந்த மாதிரியான உணவுகளை சாப்பிடுபவர்கள் MSG (Mono Sodium Glutamate) என்ற இயற்பெயருடைய அஜினமோட்டோவிற்கு (அஜினோமோட்டோ என்பஹ்டு கம்பெனியால் சூட்டப்பட்ட பெயர்) அடிமைகள்! MSG addicts! இது என்ன அடிக்சன் என்றெல்லாம் பெரிய வார்த்தைகளை கூறி பயமுறுத்துகிறீர்களா என்று என்னை திட்டுவது காதில் விழுந்து விட்டது.
JUNK என்ற ஒரு பொல்லாத போக்கிரி உணவுக்கு அண்ணாவாக JUNCS தோன்றி விட்டான். இந்திய குழந்தை மருத்துவர்கள் அகாடமி (Indian Academy of Pediatrics) 2019-ல் இந்த பெயர் சுருக்கத்தைப் பயன்படுத்தியது. சில குறிப்பிட்ட உணவு வகைகளை பயன்படுத்தினால் ஏற்படும் உடல் மற்றும் மன ரீதியான பாதிப்புகளை விவரமாக அலசி ஆராய்ந்து இருக்கிறது.
இந்த சுருக்கத்திற்கான விளக்கம்:
- J – Junk Foods
- U – Ultra processed Foods
- N – Nutritionally inappropriate
- C – Carbonated / Caffeinated / Coloured foods / Beverages
- S – Sugar / Sweetened beverages
இவற்றை ஒவ்வொன்றாக விரிவாகப் பார்க்கலாம்.
- JUNK Foods – குப்பை உணவுகள்
அதிக கலோரிகள், இனிப்பு சுவை, ஆரோக்கியம் இல்லாத கொழுப்புகள், அதிக உப்பு, மிகவும் குறைவான ஊட்டச்சத்துக்கள் கொண்ட உணவுகள் JUNK Foods என்று குறிப்பிடப்படுகின்றன.
உதாரணமாக:
- துரித உணவுகள் – பிட்ஸா, பர்கர், பொரித்த கோழி
- அதிக இனிப்பு கொண்ட உணவுகள், எனர்ஜி பானங்கள் என்று விற்கப்படுபவை, வண்ண வண்ண குளிர்பானங்கள
- நொறுக்கு தீனிகள் – சிப்ஸ், கேக், பிஸ்கட், குக்கீஸ் போன்றவை

பதப்படுத்தப்பட்ட உணவுகள்( Processed Foods), உடனடி உணவுகள், நூடுல்ஸ், குளிர்விக்கப்பட்ட உணவு வகைகள், உடனடி காலை உணவு வகைகள் (Breakfast cereals), உடனடியாக கிண்டி தரப்படும் உணவு வகைகள், இதெல்லாம் இல்லாத ஏதாவது ஒன்றிரண்டாவது இல்லாத வீடு உண்டா? வேலைக்கு போகும் அம்மாவுக்கு இவையெல்லாம் கை கொடுக்கும் தோழிகள் அல்லவா என்று கேட்கிறீர்கள் தானே! இதை உடல் நலத்திற்கு எதிரிகள்! ஆபத்தானவை! குழந்தைகளின் எதிர்காலம் தானே நமக்கு முக்கியம்.
எப்போதாவது ஒருமுறை இவற்றை சிறிதளவு எடுத்துக் கொண்டால் ஆபத்து இல்லை தான். ஆனால் இவற்றில் உள்ள சுவைகள் அடிக்சன் ஏற்படுத்துபவை. எனவே ஒரு தடவை சாப்பிட்டால் கூட திரும்பத் திரும்ப சாப்பிட தூண்டுபவை. இந்த உணவுகளை அதிகமாக, அடிக்கடி எடுத்துக் கொண்டால் அதிக உடல் பருமன் (Obesity), சர்க்கரை நோய், மாரடைப்பு, அதிக ரத்த அழுத்தம், ரத்தத்தில் அதிக கொழுப்பு, எலும்பு தேய்மானம் போன்ற வாழ்க்கை முறை நோய்கள் (Lifestyle diseases) இளம் வயதிலேயே ஏற்படுகின்றன. இதனால் மன அழுத்தம் (Stress) அதிகமாகி அது மனத் தொய்வு (Depression) நோய் ஏற்பட அடித்தளம் போட்டு விடுகிறது. உணவுக்கும், மூளைக்கும் பலவிதங்களில் தொடர்பு உண்டல்லவா!
2. U – Ultra processed Foods:-
மிக அதிகமாகப் பதப்படுத்தப்பட்ட உணவுகள். நிறமிகள், வாசனை மற்றும் ருசிக்கான வேதிப்பொருட்கள், அதிக வெள்ளை சர்க்கரை, உப்பு மற்றும் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் கொழுப்புகள் இவற்றில் அதிகமாக சேர்க்கப்பட்டு இருக்கும். அவை கெட்டுப்போகாமல் நீண்ட நாட்கள் பாதுகாக்க வேதிப்பொருட்கள் சேர்க்கப்படுகின்றன. நமது ஊறுகாய் வகைகளே ஒரு விதத்தில் இந்த வகையை சேர்ந்ததுதான். அதிக உப்பு, காரம், எண்ணெய் சேர்த்தால் தான் ஊறுகாய்களை அதிக நாட்கள் பாதுகாக்கலாம். இவற்றில் மாங்காய் அல்லது எலுமிச்சை போன்றவை ஊறும்போது காய்களில் உள்ள ஊட்டச்சத்துக்கள் சிதைந்துவிடும். ஊறுகாய் ருசிக்காக மட்டுமே !அதிகம் எடுத்துக் கொள்வது நல்லதல்ல .
வண்ண வண்ண மென்பானங்கள், டப்பாவில் அடைத்து விற்கப்படும் பழச்சாறுகள், சோடா, சிப்ஸ் வகைகள், மிட்டாய்கள், கேக் வகைகள், ஜாம் மற்றும் சாஸ் வகைகள் நூடுல்ஸ், புரோட்டின் பவுடர்கள், எனர்ஜி பார் சாக்லேட்கள், ருசியூட்டப்பட்ட தயிர் வகைகள் இப்படி இந்த லிஸ்ட் நீண்டு கொண்டே போகிறது. ஒரு வரியில் சொல்ல வேண்டுமானால் நமக்கு, முக்கியமாக குழந்தைகளுக்கும், இளையோருக்கும் மிக பிடித்த உணவுகள் பலவும் ஆபத்தானவை.
- Nutritionally Inappropriate Foods (சரிவிகிதமற்ற பொருந்தாத உணவுகள்)
தேவையான மாவுச்சத்து ,புரதச்சத்து, கொழுப்புச்சத்து, A, B, C, D வகை வைட்டமின்கள், செம்பு, இரும்பு, துத்தநாகம், மெக்னீசியம், செலினியம் போன்ற நுண்ணூட்டச் சத்துக்கள்; தேவையான கரையக்கூடிய மற்றும் கரையாத நார்ச்சத்துக்கள் இவையெல்லாம் நமது தினசரி உணவில் தேவை.
எந்த உணவுகளில் இவை இல்லையோ அதை சாப்பிடுவதால் பிரயோஜனம் எதுவும் இல்லை. இவற்றால் வயிறு நிரம்பலாம். இவை வாய்க்கும் ருசியாக இருக்கலாம். ஆனால் நாட்பட சாப்பிட்டால் நோய்வாய்ப்பட வாய்ப்பு உள்ளது. உதாரணத்துக்கு- பொரித்த கோழித் துண்டுகளைச் சொல்லலாம். அதிக சூடான எண்ணெயில், அதிக நேரம் பொரிப்பதால் கோழியில் உள்ள அனைத்து சத்துக்களும் சிதைந்து விடுகின்றன. திரும்பத் திரும்ப சுட வைக்கப்பட்ட எண்ணெயானால் அதுவும் கூட பாதிப்பை ஏற்படுத்தும். அதனால் புற்றுநோய்கூட ஏற்படும்.

- C – Caffeinated / Coloured / Carbonated foods and Beverages:
பால் கலந்த அல்லது கலக்காத காபி, வண்ணமயமான பானங்கள், சோடா கலந்த கார்பன் ஏற்றப்பட்ட பானங்கள் மற்றும் விளம்பரங்களால் ஏமாற்றப்பட்ட நாம் சூடான பாலில்/தண்ணீரில் கலந்து தரும் பானங்கள், இவை அனைத்தும் குப்பை உணவுகள். ஐந்து வயதிற்கு கீழ்ப்பட்ட குழந்தைகளுக்கு காபி, டீ, பிற பானங்கள்கூட தரக்கூடாது என்பதுதான் உலக சுகாதார நிறுவனத்தின் அறிவுரை தெரியுமா? நான் எழுதுவதெல்லாம் உண்மை, உண்மை ,உண்மையைத் தவிர வேறு இல்லை. ஐந்து வயதிற்கு மேல் ஒன்பது வயதிற்குள் குழந்தை விரும்பினால் ஒரு நாளைக்கு ஒருமுறை 100 ml மட்டும், வளர் இளம் பருவத்தினருக்கு தினம் ஒருமுறை 200 ml மட்டும் தரலாம்.
சோடா கலந்த இனிப்பு பானங்களில் கரியமில வாயு இருக்கிறது. அது பானத்தின் தன்மையை மாற்றி ருசியை அதிகமாக்குகிறது. அதுவும் குளிரூட்டப்பட்டு இருந்தால் கொளுத்தும் வெயிலுக்கு வாய்க்கும், மனதுக்கும் மிகவும் உற்சாகம் அளிப்பதாகவும், ரசிக்கக் கூடியதாகவும் ஒரு போலி உணர்வை தருகின்றன. கரியமில வாயு கலந்த மென்பானங்கள் அதிகம் எடுத்துக் கொண்டால் இதயத்துடிப்பு மாறுபாடுகள், வளர் இளம் பருவத்தினருக்கு தூக்கமின்மை பிரச்சனைகள், மனநல பாதிப்புகளை ஏற்படுத்தும். இந்த பாதிப்பு வளர் இளம் பருவத்தினருக்கு அதிகம். சில சோடா பானங்களில் கஃபீன் எனப்படும் உற்சாகமூட்டி இருக்கும், அளவுக்கு மிஞ்சினால் அதுவும் பாதிப்பை ஏற்படுத்தும்.
குழந்தைகளுக்கு உயரம் அதிகமாகும், அறிவும் அதிகமாகும், விளையாட்டுத் திறன் அதிகமாகும் என்று எத்தனை ஏமாற்று விளம்பரங்கள்! இதையெல்லாம் உண்மை என்று நம்பி பணத்தை மட்டும் இன்றி, குழந்தையின் ஆரோக்கியத்தையும் மெது மெதுவாக பெற்றோர்கள் இழக்கிறார்கள்!
- S – Sugar Sweetened Beverages:
இனிப்பு அதிகம் சேர்க்கப்பட்ட பானங்கள், விற்கப்படும் பழச்சாறுகள், சுவையூட்டப்பட்ட பால் வகைகள், தயிர் வகைகள் இதில் அடங்கும். இவற்றை அடிக்கடி எடுத்துக் கொண்டால் வாழ்க்கை முறை நோய்களுடன் பற்கள் பலமிழந்து எளிதில் சொத்தை ஆகின்றன. அதிக இனிப்பு சாப்பிடும் குழந்தைகளுக்கு ஒருவித களைப்பு, சோர்வு, பாடங்களில் கவனம் செலுத்த முடியாத நிலை, கற்பதில் குறைபாடு ஆகியவை ஏற்படும். S உலக சுகாதார நிறுவனம் HFSS (High Fat Sugar Salt) என்றும் சில உணவுகளை வகைப்படுத்துகிறது. குப்பை உணவுகளில் இவை எல்லாம் அதிகம் தானே!

இவற்றால் என்ன ஆபத்துக்கள்?
- அதிக இனிப்பு, உப்பு, கொழுப்பு ஆகியவை உடல் எடையை விரைவில் அதிகப்படுத்துகின்றன. அதிக உடல் எடை வாழ்க்கை முறை நோய்கள் அனைத்துக்கும் உறுதியான அடித்தளத்தை அமைத்து விடுகிறது.
- இவைகளில் சேர்க்கப்படும் நிறமிகள், ருசிகள், வாசனைகள் பாதுகாப்புப் பொருட்கள் போன்றவை குடல், கல்லீரல், சிறுநீரகம் ஆகியவற்றை மெது மெதுவாக பாதிக்க ஆரம்பிக்கின்றன.
- பதப்படுத்தப்படும் போது உணவில் உள்ள நுண் ஊட்டச்சத்துக்களும், நார்ச்சத்துக்களும் அதிகம் சிதைக்கப்படுகின்றன.
- அதிக இனிப்பு, உப்பு மற்றும் வறுத்து பொரித்த உணவு வகைகளை சாப்பிடும்போது ருசியால் ஈர்க்கப்பட்டு மேலும் மேலும் சாப்பிட தூண்டும்.
நமது உணவில் உள்ள நற்பயன்களை மகிழ்வுடன் பார்க்கலாமா?
இட்லி, தோசையில் என்ன இருக்கிறது என்று கேட்கிறீர்களா? இட்லி, தோசை, ஆப்பம் என்ற உணவு வகைகள் அரைத்து புளிக்க வைக்கப்பட்ட மாவில் செய்யப்படுபவை. இவற்றில் நொதித்த மாவு (Fermented) இருக்கும். நொதிக்க வைக்கும் போது மாவு சத்துக்களும், புரதங்களும் கொஞ்சம் பிரிக்கப்பட்டு எளிதில் செரிக்கக்கூடியதாக மாறுகின்றன. நொதித்தல் என்பது நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் மற்றும் ஈஸ்டுகள் (Probiotics) நன்கு வளர்வதால் தான் ஏற்படுகிறது. அந்த பாக்டீரியாக்களின் வளர்ச்சியின்போது அதிக B1, B12 வைட்டமின்கள் மாவில் சேருகிறது. இட்லி ஆவியில் அவிக்கப்படுகிறது. இதன்மூலம் நன்மை செய்யும் கிருமிகளும் உடலில் உணவுடன் சேர்கிறது. ஆனால் ஊத்தாப்பம், தோசை போன்றவற்றை அதிக சூட்டில் முறுகலாக செய்தால் நன்மை செய்யும் கிருமிகளும், தண்ணீரில் கரையும் விட்டமின்களும் வீணாகி விடுகின்றன. அதிக எண்ணெயும் உடலில் சேரும். எனவே மூடி போட்டு வேக வைப்பது அவிப்பது ஆகியவை நல்லது.
அரிசியும், உளுந்தும் சேர்த்து தயாரிக்கப்படும் மாவு உணவு ஒரு முழு புரத உணவாக அமையும். உடலுக்கு கட்டாயம் தேவையான ஒன்பது முக்கிய அமினோ அமிலங்கள் (Essential Amino Acids) எல்லாம் உள்ள உணவு இது. அரிசியில் லைசின் என்ற அமிலம் மட்டும் குறைவு, மெதியோனின் அதிகம். உளுந்தில் மெதியோனின் மட்டும் குறைவு, லைசின் அதிகம். எனவே இவை இரண்டும் சேர்த்து தயாரிக்கப்படும் உணவுகளான இட்லி, தோசை வகைகள், ஆப்பம் போன்றவற்றில் முக்கிய அமினோ அமிலங்கள் (Essential Amino Acids) எல்லாம்கிடைக்கிறது. ஒன்றில் இல்லாததை மற்றொன்று தருவதால் எல்லா அமினோ அமிலங்களும் உடலுக்கு கிடைக்கின்றன. சப்பாத்தியுடன் தொடுக்கறியாக வேகவைத்த பருப்பு கொடுத்தாலும் இதே அடிப்படையில் அமினோ அமிலங்கள் கிடைக்கும்.
இட்லி, தோசைக்கு தொட்டுக்கொள்ள நாம் தயாரிக்கும் சட்னி வகைகள், சாம்பார் வகைகள், குருமாக்கள், எல்லாவற்றிலும் காய்கறிகள், தேங்காய், கொத்தமல்லி, கருவேப்பிலை, புதினா போன்றவை சேர்க்கப்படுவதால் உடலுக்கு தேவையான எல்லா வைட்டமின்களும், நுண்ணூட்ட சத்துக்களும் கிடைத்து விடுகின்றன .
தயிரும் ஒரு நொதித்த உணவு. அதிலும் Probiotics மிகவும் அதிகம். அது செரிமானத்திற்கும், குடல் ஆரோக்கியத்திற்கும் சிறந்தது. நோய் எதிர்ப்பு சக்தியும் தரக்கூடியது. வீட்டில் தயாரிக்கப்படும் அதிகம் புளிக்காத தயிர் தினசரி உணவில் கட்டாயம் தேவை. தயிர் பச்சடிகளின் அடிப்படை அதுதான். சமைக்காமல் தயிரில் வெங்காயம், காய்கறிகள், பழத் துண்டுகள், கீரைகள் போட்டு செய்யப்படும் பச்சடி இவையெல்லாம் உடலுக்கு நல்லது.
வீடுகளில் செய்யப்படும் பருப்பு பாயாச வகைகள், கொழுக்கட்டைகள், சுண்டல் வகைகள், வடை வகைகள், போளி, லட்டு இனிப்பு மற்றும் காரப்பணியார வகைகள், எல்லாவற்றிலும் சத்துக்கள் நிறைய உண்டு.
இனிப்பு சுவையில் தனிப்பட்ட குணம் உண்டு. குழந்தை அறியும் முதல் சுவை இனிப்புதான். இனிப்பை உணரும் சுவை அரும்புகள் நாக்கின் நுனியில் இருக்கின்றன. இனிப்பு சுவை உடனடியாக மனதுக்கு ஒரு இதத்தையும், மகிழ்ச்சியையும் தரும். அதனால் அடிக்கடி சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் தோன்றும். நம்மில் பலருக்கும் இனிப்பு பிடிக்கும் தானே! ஆனால் அடிக்கடி சாப்பிட்டால் உடலின் தேவைக்கு அதிகமான மாவு சத்துக்கள் கொழுப்பாக உடலில் சேமித்து வைக்கப்படுகிறது. உடல் எடை கூடுகிறது. பல நோய்களும் ஏற்படுகின்றன. இதனால் தான் சிறு குழந்தைகளுக்கு உணவு ஊட்ட ஆரம்பிக்கும் போது கொஞ்சமாக சர்க்கரை சேர்த்து பழக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. ஒரு அளவுக்கு இருக்கும்போது இது உடல் வளர்ச்சிக்கு உதவும்.
வீட்டில் செய்தால்கூட எண்ணெயில் பொரிக்கக்கூடிய வடை, பஜ்ஜி, போண்டா, பக்கோடா, சமோசா வகைகளை அடிக்கடி சாப்பிட்டால் உடல் எடை கூடும். பல நோய்களும் ஏற்படும்.
நாம் விரும்பி சாப்பிடும் பல தொடுகறிகளிலும் பிரியாணியிலும் பூண்டு, வெங்காயம், சோம்பு, ஏலக்காய், கிராம்பு, பட்டை, அன்னாசிப்பூ போன்றவை சேர்க்கப்படுகின்றன. இவற்றில் Aromatic oils இருக்கின்றன. இந்த உணவுகள் மணமாகவும் சுவையாகவும் இருக்கின்றன. ஆனால் இவை திரும்ப திரும்ப சாப்பிடவேண்டும் என்ற மனநிலையைது தூண்டுபவை. ஆகவே குழந்தைக்கு முதன்முதலில் உணவு ஊட்டத் தொடங்கும்போது இவற்றைத் தவிர்க்கலாம். கொஞ்சம் பூண்டு, தக்காளியைத் தட்டிப் போட்டால் ரசம் வைப்பது எளிது என்பதால் அதை சமைத்து முதலில் குழந்தைக்குத் தந்துவிட்டால் இதுபோன்ற மணமூட்டிகள் இல்லாவிட்டால் சாப்பிடமுடியாத நிலை வந்துவிடும். இதையே குழந்தை எதிர்பார்க்கும்.
இதையேதான் அஜினோமோட்டோவும் செய்கிறது. நீண்ட நாள்கள் அஜினோமோட்டோவை எடுத்துக்கொள்வதால் பல நோய்கள் ஏற்படுகின்றன. துரித உணவுகளால் ஏற்படும் நோய்களோடு சேர்த்து அஜினோமோட்டோ தரும் நோய்களும் ஏற்படும். முடி உதிர்வதில் தொடங்கி அதிகபட்சமாக புற்றுநோய் வரைகூட ஏற்படலாம். சுமார் 20 நோய்கள் வரிசைபடுத்தப்பட்டிருக்கின்றன. இவையெல்லாம் பயமுறுத்தவில்லையா?
இன்னும் நிறைய பேச வேண்டும். அடுத்த கட்டுரையில் பார்ப்போம்…
படைப்பாளர்

மரு. நா. கங்கா
நா.கங்கா அவர்கள் 30 வருடம் அனுபவம் பெற்ற குழந்தை மருத்துவர். குழந்தை மருத்துவம் மற்றும் பதின்பருவத்தினர் மருத்துவத்தில் சிறப்புப் பட்டம் பெற்றவர். குழந்தைகளுக்கான உணவு மற்றும் தாய்ப்பால் ஊட்டுதல் ஆகியவற்றில் சிறப்புப் பயிற்சி பெற்ற உணவு ஆலோசகர். குழந்தை வளர்ப்பில் முனைவர் பட்டமும் பெற்றிருக்கிறார். இந்திய குழந்தை மருத்துவர் சங்கத்தின் “சிறந்த குழந்தை மருத்துவர்” விருது பெற்றவர். குழந்தை வளர்ப்பு பற்றி பல நூல்களை எழுதியிருக்கிறார். வானொலி மற்றும் அச்சு ஊடகங்கள் மூலமாகத் தொடர்ந்து குழந்தை வளர்ப்பு மற்றும் குழந்தைகளின் உடல்நலம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.





அருமையான பதிவு