ஆதிமனித சமூகம் பெண்ணையே தலைவியாக ஏற்றிருக்கிறது. அவளுக்குக் கீழ்ப்படிந்து நடந்திருக்கிறது. அவளது கட்டளையே சாசனமாகியிருக்கிறது. ஆனால், அதன்பின் ஆண்கள் நரித்தந்திரம் செய்து மனுசாஸ்திரம் (?) என்ற ஒன்றைக்கொண்டு வந்து மெல்ல மெல்லப் பெண்ணை அடிமையாக்கினர். இந்தச் சமுதாயம் ஆணாதிக்க சமுதாயமாக உருப்பெற்றது.             

வீட்டுவேலை என்பது முழுக்க முழுக்கப் பெண்களுக்கானது என்பதைக் காலங்காலமாகப் பெண்களைக் கொண்டே இதர பெண்களுக்கு மூளை மழுங்கும்படி போதிக்கப்பட்டு வந்திருக்கிறது. வீட்டுவேலை செய்யாத பெண்களை பொதுவெளியில் கிண்டலடிக்கும் மனோபாவமும் வளர்ந்திருக்கிறது. அவ்வாறு வீட்டுவேலையை ஒழுங்காகச் செய்யாத, பூக்கட்டத் தெரியாத, கோலமிடத் தெரியாத பெண்களை அவமரியாதையாக நடத்துவது பெண்களேதாம். வீட்டைக் கவனித்துக்கொள்ள, குழந்தைகளைக் கவனித்துக்கொள்ள பெண்கள் மட்டும்தாம் முன்வரவேண்டும் என்பதை ஆண்டாண்டு காலமாக இந்தச் சமூகம் போதித்து வருகிறது.             

அம்பை எழுதிய ‘வீட்டின் மூலையில் ஒரு சமையலறை’ கதை எழுதப்பட்டு அரை நூற்றாண்டு காலம் கடந்தும் அதிலுள்ள மாந்தர்கள் இன்னும் அப்படியேதான் வாழ்ந்துவருகிறார்கள். நிலைமை இன்றும் அப்படியேதான் இருக்கிறது. சமையலில் ஆண்கள் உதவி செய்வது இன்னும் இயல்பாகப் பார்க்கப்படவில்லை. அது பெண்ணால் கொண்டாடப்படுகிறது. ஆண்கள் யாரும், “என் மனைவிக்கு சமையல், வீட்டுவேலைகள் தெரியும்…” என்று பெருமைப்படுவதில்லை. ஆனால், வீட்டு வேலைகளில் உதவும் கணவர்களைப் பெற்ற மனைவிகள் அதுகுறித்துத் தங்கள் தோழிகளிடம் புளகாங்கிதம் அடைகிறார்கள். இந்த முரண்பாடு முதலில் களையப்பட வேண்டும்.                

இன்று உறவினர் வீட்டுக்குச் செல்ல நேரிட்டது. அவர் மனைவி எங்களுடன் பேசிக்கொண்டு அமர்ந்திருக்க, அவர் இயல்பாகச் சமையலறைக்குள் நுழைந்து பருப்பு வடை, காபியுடன் உபசரித்தார். சிறிது நேரம் கழித்து அவர் மனைவி கலந்த சாதம் தயாரிக்கச் சென்றார். இவரும் எங்களுடன் உரையாடிக்கொண்டே அவ்வப்போது உள்ளே சென்று அவருக்கு உதவினார். இருவரும் பணியாற்றியது இயல்பான ஒன்றாகவே இருந்தது. கணவர் உதவியதற்கு அந்தப் பெண் ஒன்றும் புளகாங்கிதம் அடையவில்லை. கணவரும் தான் பெரிய மனத்துடன் வீட்டுவேலை செய்ததாகத் தம்பட்டம் அடித்துக்கொள்ளவில்லை. அந்தச் சாப்பாடு எனக்கு அதிகமாகவே ருசித்தது.             

சாப்பிடுவது எப்படி இருபாலருக்கும் பொதுவோ அதேபோல் சமைத்தல் என்பதும் இருபாலருக்கும் பொதுதானே? வீட்டுவேலைகளுக்கு ஊதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை ஆண்கள் மத்தியில் கலவரத்தை ஏற்படுத்துகிறது. அதன் வெளிப்பாடுதான் அவர்கள் முன்வைக்கும் ‘குடும்பம் என்ற அமைப்பு சிதைந்துவிடும்’ என்ற பத்தாம்பசலி தனமான வாதம். இன்னும் எத்தனை காலம்தான் குடும்பம் என்ற ஒன்றைக் காட்டி, பெண்களை உணர்வு ரீதியாக அடிமையாக வைத்திருக்கப் போகிறார்கள்? அன்பு, அரவணைப்பு போன்றவற்றை குடும்பத்தில் பெண்களிடம் ஆண்கள் எதிர்பார்க்கிறார்கள் என்பது நியாயம்தான். ஆனால், எத்தனை ஆண்கள் மனைவி உடல் நலமில்லாமல் இருக்கும்போது அதே அன்பையும் அரவணைப்பையும் வழங்குகிறார்கள் என்பது கேள்விக்குரியது. குடும்பத்தில் யார் உடல் நலம் இல்லாமல் இருந்தாலும் பெண் தான் அவர்களைக் கவனித்துக்கொள்கிறாள். அதே பெண் உடல் நலமில்லாமல் இருக்கும்போது அவளை யாரும் கவனிப்பதே இல்லை என்பதே கசப்பான உண்மை.              

வேலைக்குச் செல்லும் பெண்கள்கூட வீட்டுவேலை,  அலுவலக வேலை என்ற இரட்டை மாட்டு வண்டியில்தான் சவாரி செய்கிறார்கள்.  வீட்டுவேலையை முடித்துவிட்டு, பின்னர் அலுவலக வேலையையும் சிரத்தை எடுத்துச் செய்ய வேண்டும். அத்தகைய பெண்கள் அதற்குரிய மரியாதையைப் பெறுகிறார்களா என்றால் இல்லை. இந்த வீட்டுவேலை என்பது நிறையப் பெண்களின் சிறகுகளை ஒடித்து, கூண்டில் அடைத்து இருக்கிறது என்பதுதான் உண்மை. எண்ணற்ற பெண்களின் கனவுகள் இதனால் தொலைந்து போயிருக்கின்றன.            

வீட்டுவேலைகளில் பங்குபெறும் ஆண்கள்கூட மற்றவர்களின் கேலிக்குப் பயந்து வெளியே சொல்வதில்லை. அதை இழிவாகப் பேசுபவர்களில் அதிகம் பெண்கள்தாம்! அப்படிப் பேசுபவர்களின் உளவியலை ஆராய்ந்தால் தங்கள் வீட்டு ஆண்கள் செய்யாத ஒன்று, தனக்குக் கிடைக்காத உதவி இன்னொருவருக்குக் கிடைக்கிறதே என்ற ஆதங்கம் தான் அதிகமாக இருக்கும். அவளுக்கு நட்பென்ற ஒன்று இருக்கக் கூடாது என்பதே இந்தச் சமுதாயத்தின் எண்ணம். அதையும் மீறி இருக்கும் நட்புகள், சமையல் குறிப்புகளைப் பரிமாறிக்கொள்ளவே இருக்க வேண்டும். அழுத்தும் வேலைச்சுமையிலிருந்து தங்களை ஆசுவாசப்படுத்திக்கொள்ள, சிறிய உற்சாகப் பயணத்தைக்கூட அவர்கள் நினைத்துப் பார்க்கவே கூடாது. அப்படியே சென்றாலும் வீட்டில் இருப்பவர்களுக்கு எல்லாவற்றையும் செய்து வைத்துவிட்டுத்தான் போகமுடியும். வரும்போதும் வீட்டின் மீதமிருக்கும் பணிகள் மனசுக்குள் வந்து மணியடித்து எச்சரிக்கும். பயணத்தை அனுபவிக்காது எந்நேரமும் அவஸ்தைப்படுபவர்கள் தாம் அதிகம்.            

தங்கள் வாழ்நாளில் எங்கேயும் போகாது, வீட்டுவேலை மட்டுமே செய்து வாழ்ந்து (?) வரும் பெண்கள் நம் சமூகத்தில் இருந்து வருகின்றனர். வீட்டுவேலை என்பது பெண்களின் பொறுப்பு என்று பிற பெண்கள் சொல்வதை முதலில் நிறுத்த வேண்டும். மாற்றத்தை முதலில் பெண்கள் தங்களுக்குள் கொண்டுவர வேண்டும். ஒவ்வொரு தனி மனிதரும் அது ஆணோ பெண்ணோ யாராக இருந்தாலும் தங்கள் அடிப்படை வேலைகளைத் தாங்களே செய்து பழக வேண்டும். சமையலறை என்பது பெண்களின் உலகம் என்பதை மாற்றி ஆண்கள் உலகமாகவும் ஆக்க வேண்டும்.                

சாப்பிடுவது என்பதை இயல்பாக ஏற்றுக்கொள்ளும் ஆண்கள், சமைத்தல் என்பதை மட்டும் அருவருப்பாகப் பார்க்கும் மனப்பாங்கை மாற்றிக்கொள்ள வேண்டும். வேலைகளில் ஆண் வேலை, பெண் வேலை என்று பாகுபாடு பார்க்கும் பழக்கத்தைக் கைவிட வேண்டும். முதலில் குழந்தைகளுக்கு வாங்கித் தரும் விளையாட்டுப் பொருள்களில் உள்ள பாலினப் பாகுபாட்டைக் களைய வேண்டும். ஆண் குழந்தைகள் என்றால் கார், பைக் என்றும் பெண் குழந்தைகள் என்றால் சொப்புச் சாமான்கள் என்றும் இல்லாது பொதுப் பார்வை வேண்டும்.                  

ஆண்கள் வேலை செய்வதை முதலில் பெண்கள் இயல்பாக எடுத்துக்கொள்ள வேண்டும். எத்தனை ஆண்கள் தங்கள் வீட்டுக் கழிவறை, குளியலறைகளைச் சுத்தம் செய்கிறார்கள்? சமைத்தல், சுத்தம் செய்தல், துவைத்தல் போன்ற பொதுவான வேலைகளை வீட்டில் உள்ளவர்கள் பாலினப் பாகுபாடு இன்றிப் பகிர்ந்துகொள்ள வேண்டும். எனக்குத் தெரிந்த ஒரு வீட்டில் கணவராகப்பட்டவர் கழிவறையைச் சுத்தம் செய்வதும், வீட்டுவேலை முழுக்கச் செய்வதும் எப்போதும் மனைவிதான் என்று சொல்வார். ஒரு சிறு துரும்பைக் கூட எடுத்துப் போட மாட்டார். ஆனால், அவரின் தாய் வீட்டுக்கோ சகோதரிகள் வீட்டுக்கோ சென்றால் எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டுக்கொண்டு செய்வார். மனைவி என்பவள் ஒரு சம்பளமில்லாத வேலைக்காரி என்பார். அவருடைய இத்தகைய பிற்போக்குத்தனமான சிந்தனையின் அடிப்படை உருவாக்கத்தைக் கொடுத்த அவர் குடும்பமும் சுற்றுப்புறமும் எத்தனை நூற்றாண்டுகள் பின்தங்கியிருக்கின்றன என்பதை நினைத்தால் களைப்பாக இருக்கிறது.                

ஆணும் பெண்ணும் சமம் என்பதை இயல்பாக எடுத்துக்கொள்ளும் வீட்டில் உள்ள அடுத்த தலைமுறை, சக உயிராகப் பெண்களை மதிக்கும் என்பது நிச்சயம். பெண்களைத் தெய்வமாகப் போற்ற வேண்டாம். வலிகள், உணர்வுகள் உள்ள சக உயிராகப் பார்த்தாலே போதும்.

பெண்களை முதலில் பெண்கள் தாம் நன்கு புரிந்துகொள்ள வேண்டும். அப்போதுதான் ஆண்களின் கண்ணோட்டத்தை நாம் மாற்ற முடியும்.

ஆரம்பிப்போமா?

(தொடரும்)

படைப்பாளர்:

கனலி என்ற சுப்பு

‘தேஜஸ்’ என்ற பெயரில் பிரதிலிபி தளத்தில் கதைகள் எழுதி வருகிறார். சர்ச்சைக்குரிய கருத்துகளை எழுதவே கனலி என்ற புனைபெயரில் எழுதத் தொடங்கியிருக்கிறார்.