குழந்தைகளை நல்வழிப்படுத்துவது எப்படி என்று தெரிந்துகொள்வதற்கு முன்னால் பெற்றோராகிய நாம், சில விஷயங்களை நம் மனத்தோடு பேசி, நமக்கு நாமே விழிப்புணர்வையும் தெளிவையும் ஏற்படுத்திக்கொள்வோம்.குழந்தைகளை எதற்காக நாம் நல்வழிப்படுத்த வேண்டும்? ஏனென்றால் சில விஷயங்களை எதிர்பார்க்கிறோம்; குழந்தைகள் அது மாதிரியாக நடந்துகொள்ளவில்லை.

சரி, குழந்தைகளிடம் என்ன எதிர்பார்க்கிறோம்?

அவர்கள் நாம் சொல்வதைக் கேட்க வேண்டும்.

ஒழுக்கமாக இருக்க வேண்டும்.

பொய் சொல்லவே கூடாது.

எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்.

எந்தத் தவறுமே செய்யக் கூடாது.

நன்றாகப் படித்து முதல் மதிப்பெண் வாங்க வேண்டும்.

நம் குழந்தைகள் முதலில் ஒன்றும் அறியாதவர்களாக இருந்தார்கள். அதன் பின்னர், நாம் தான் ஒவ்வொன்றாகச் சொல்லித்தர ஆரம்பித்தோம். நன்றாகக் கவனியுங்கள், நாம் சொல்லித் தருவதைத் தான் குழந்தைகள் சொல்கிறார்கள். ஒவ்வொரு செயலிலும் சாப்பிடும் முறை தொடங்கி, அன்றாட நடவடிக்கைகள் எதுவாயினும் அவை நம்மிடமிருந்து கற்றுக்கொண்டவை தான்.

அப்படியெனில், மேற்கூறியவை எல்லாம் உங்கள் எதிர்பார்ப்பாக இருந்தால், முதலில் நீங்கள் அவற்றை எல்லாம் செய்கிறீர்களா என்று கேட்டுப் பாருங்கள். பொய் சொல்லாமல், மிகவும் ஒழுக்கமாக, வீட்டில் குடும்ப உறுப்பினர்கள் சொல்வதைக் கேட்டு, அவர்களுக்கு மதிப்பளித்து, அவர்களுக்கு முக்கியத்துவம் அளித்து, நாம் ஒவ்வொருவரும் நடந்து வருகிறோமா?

குழந்தைகள் மாசில்லா கண்ணாடிகள். ஒவ்வொரு செயலிலும் ஒவ்வொரு சொல்லிலும் நம்மைதான் பிரதிபலித்துக்கொண்டே இருக்கிறார்கள். அவர்கள் நல்ல செயல்களைச் செய்ய வேண்டும் என்றால், நாம் முதலில் அவற்றை எல்லாம் செய்ய வேண்டும்.

என்னைப் போன்று கண்கள், என் அப்பா மாதிரி பற்கள், என் அம்மா போல கன்னங்கள் என்று விவரிக்கும் நாம், அவர்களின் பழக்கங்களும் அப்படியே நம்மிடம் இருந்து எடுக்கப்பட்டவை என்பதை ஏன் மறந்துவிடுகிறோம்?

குழந்தைகள் பிடிவாதமாக இருந்தால் அது உங்கள் பிடிவாதம் தான். ஒருவேளை கூடுதலாகவோ குறைவாகவோ இருக்கலாம். ஆனால், கண்டிப்பாக அது உங்கள் குணம் என்பதை மறவாதீர்கள்.

ஒரு வீட்டில் குழந்தைகளின் தந்தை கோபம் வந்தால், பலமாகக் கத்துகிறார் அல்லது பொருள்களை உடைக்கிறார் என வைத்துக்கொள்வோம். அந்த வீட்டில் வளரும் சிறிய வயது குழந்தையும் கோபம் வந்தால் கத்திப் பேச வேண்டும், சத்தமாகப் பேச வேண்டும், பொருள்களை உடைக்க வேண்டும் எனப் புரிந்துகொள்ளும். இப்போது அந்தக் குழந்தையும் கோபம் வந்தால் பொருள்களை எடுத்து உடைக்கும். உடனே பெற்றோர், குழந்தையை அதட்டுவார்கள், தண்டிப்பார்கள். அப்போது அந்தக் குழந்தை, அடுத்த முறைதான் இவ்வாறு பொருள்களை எடுத்து உடைத்தால் அம்மாவிடம் இருந்து, அப்பாவிடமிருந்து தண்டனை கிடைக்கும். என்னால் அவர்களை எதிர்க்க இயலாது என உணர்ந்துகொண்டு, பொருள்களை எறிவதையோ கத்திப் பேசுவதையோ நிறுத்திவிடும்.

ஆனால், இதே குழந்தைகள் பதின் பருவத்தையோ இளம்பருவத்தை அடையும்போதோ தான் பெற்றோரைவிடப் பலசாலியாக உணரும்போது கண்டிப்பாக இதே நடத்தையைக் கையெடுத்துக்கொள்வார்கள். அவர்களும் இதே முறையை, கோபம் வந்தால், அந்தக் கோபத்தைக் கண்டிப்பாகச் சத்தமாகப் பேசியோ பொருள்களை உடைத்தோ தான் வெளிப்படுத்துவார்கள்.

இளவயதிலேயே விதைக்கப்பட்ட ஒரு விதை சூழ்நிலை காரணமாக முளைவிட முடியவில்லை; இப்போது சூழ்நிலை சரியாக அமைந்தது முளைவிட்டுவிட்டது. இதுதான் சில இளைஞர்களிடம் திடீரென்று காணப்படும் மாற்றத்திற்குக் காரணம்.

குழந்தை தான் கற்ற ஒரு நடத்தையை வெளிப்படுத்த முடியாமல் நடந்துகொள்வதற்குக் காரணம், உங்களை வெற்றிகொள்ள முடியாது என்ற எண்ணம் மட்டுமே. மேலும், இந்தத் தருணம் தான் குழந்தைகளிடம், ”வலியது மட்டுமே வாழும்” என்ற எண்ணத்தை உருவாக்குகிறது.

சில நேரத்தில், நாம் அளிக்கும் தண்டனைகள் குழந்தைகளிடம் நடவடிக்கைகளில் மாற்றத்தைக் கொண்டுவருவது என்னவோ உண்மைதான். ஆனால், கூடவே அது பயத்தையும் பாதுகாப்பு உணர்வின்மையையும் உருவாக்கிவிட்டுச் செல்கிறது. அதுவே, தன்னை எல்லையற்ற ஆற்றல்களைக்கொண்ட ஒருவர் என்பதைப் புரிந்துகொள்வதற்கு, உணர்ந்துகொள்வதற்கு மிகத் தடையாக அமைந்துவிடுகிறது.

ஒன்றை மட்டும் நினைவில் வையுங்கள்; குழந்தைகளின் நடவடிக்கைகளில் ஏதோ ஒன்று உங்களுக்குச் சரியாகப்படவில்லை என்றால் அதன் மூலக் காரணம் என்னவென்று பாருங்கள். கண்டிப்பாக அது குழந்தைகளாக இருக்கவே முடியாது. அது வளர்ந்த ஒரு நபராகத்தான் இருக்க முடியும். சுற்றுச்சூழலாக மட்டுமே இருக்க முடியும்.

அது குடும்ப உறுப்பினராக இருக்கலாம்; அண்டைவீட்டாராக, உறவினர்களாக, நண்பர்களாக, ஆசிரியர்களாகக்கூட இருக்கலாம். நிறைய விஷயங்கள் நம் வீட்டுத் தொலைத்தொடர்பு சாதனங்களில் இருந்தும் கற்றுக்கொள்கின்றனர்.

மேலும், நம்மில் எத்தனை பேர், பெற்றோராக இருத்தல் என்பது கடினமான, அர்ப்பணிப்பு மிகுந்த, நீண்ட நாட்களுக்குத் தொடர்ந்து செய்யவேண்டிய ஒரு பொறுப்புமிக்க வேலை என்பதை உணர்ந்து அதற்கான தயாரிப்புகளோடு பெற்றோராக ஆனோம்? (இந்தக் கேள்வி கண்டிப்பாகக் குற்ற உணர்வு ஏற்படுத்துவதற்காக அல்ல; சிந்திக்க வைப்பதற்கு மட்டுமே.)

பெற்றோராக இருத்தல் என்பது ஒரு மிகக் கடினமான வேலை என்பதை இந்தச் சமுதாயம் சொல்லித் தராமல், பெற்றோராக ஆவதற்கான வேறு சில காரணங்களை நியமித்திருக்கிறது என்பதுதான் கசப்பான உண்மை. அது ஒரு தேர்வு என்பதைச் சொல்லித் தரவே இல்லை. இன்னும் ஒரு க்ரூப் கல்யாணம் முடிந்து விட்டால் எல்லாம் சரியாகி விடும்; குழந்தை பெற்றுவிட்டால் எல்லாம் சரியாகிவிடும்; குழந்தைக்கு நான்கு வயது ஆகிவிட்டால் எல்லாம் சரியாகிவிடும்; குழந்தை பள்ளிக்குச் சென்றால் சரியாகிவிடும்; இன்னும் அடுக்கிக்கொண்டே போகிறார்களே தவிர, அது ஒரு நீண்ட நாள் பொறுப்பு என்ற உண்மையைக் கடைசிவரை சொல்லித் தருவதில்லை.

இறுதியாக நான் பெற்றோருக்குச் சொல்ல விரும்புகிற முதல் விஷயம், இந்த உலகில் இருக்கிற ஒவ்வொரு குழந்தையும் அளவுகடந்த அன்புக்கு மட்டுமே உரியவர்கள். அவர்களை நல்வழிப்படுத்தத முயற்சிப்பதற்கு முன்னால் அவர்கள் செய்யும் தவறுகளில் நமக்கும் முக்கியப் பங்கு இருக்கிறது என்பதை நினைவில் வையுங்கள். மாற வேண்டியது நாமும் தான் என்பதையும் மறுக்காமல் ஏற்றுக்கொள்ளுங்கள்.

பெற்றோராக ஆவதற்கு தங்களை முழுவதுமாகத் தயார்படுத்திக்கொண்டு, குழந்தை வளர்ப்பில் தங்களை முழுவதுமாக ஈடுபடுத்தி, குழந்தைகளை முழுமூச்சாக, முழுக் கவனத்துடன், முழு ஈடுபாட்டுடன் வளர்த்துவரும் பெற்றோரை நான் பார்த்திருக்கிறேன். அந்தக் குழந்தைகள் மிக ஆரோக்கியமாக இருக்கிறார்கள். அந்தப் பெற்றோரைச் சந்திக்கும் வரை நானும் இதையெல்லாம் நடைமுறை சாத்தியமில்லை என்றே கருதினேன்; இப்போது நான் உங்களிடம் சொல்ல விரும்புகிற இரண்டாவது விஷயம், “மேற்கூறிய குணங்களுடன் கூடிய ஒரு பெற்றோராக இருப்பது சாத்தியம்; இதைச் சில பெற்றோர் கடைப்பிடித்து வருகிறார்கள்” என்பதை நினைவில் வையுங்கள்.

அந்தச் சாத்தியத்தை மகிழ்ச்சியோடு செயல்படுத்த தொடங்கி வாழ்வைக் கொண்டாடலாம் வாங்க!

(தொடரும்)

படைப்பாளர்:

ஜான்சி ஷஹி

மனநல ஆலோசகர். மன நலத்திற்கான தெரப்பிகளையும் ஆற்றுப்படுத்துதலையும் வழங்கி வருகிறார். வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழவும், பிடித்த எதிர்காலத்தை அமைத்துக்கொள்ளவும், பொது மக்களுக்கு பயிற்சிப் பட்டறைகளை நடத்திவருகிறார். இவர் பெங்களூர் கிரைஸ்ட் பல்கலைக்கழகத்தில் மாணவர் மன நல ஆலோசகராக (student counsellor) பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.