ஒரு வீட்டிற்குச் சென்றிருக்கிறோம். ‘காபி வேண்டுமா’ என்று உபசாரமாகக் கேட்கிறார்கள். வேண்டாமென மறுத்து விடுகிறோம். பின்னும் நீளும் காட்சியின் நீட்சியில், நமக்கு காபி குடிக்க வேண்டும் போல இருக்கிறது. ஆனால், அவர்கள் நம்மிடம் வேண்டுமா எனத் திரும்பக் கேட்கவில்லை. இதில் யாரிடம் தவறிருக்கிறது? யாரிடமும் தவறில்லை. அவர்கள் நாம் காபி வேண்டாமென மறுத்த மனநிலைக்குச் செல்ல, நாம் காபி வேண்டுமா என அவர்கள் கேட்ட மனநிலைக்குச் செல்கிறோம். அவ்வளவுதான்.
இப்படியொரு நிறைவற்ற உணர்வை, நிகழ்வற்ற தன்மையை வாழ்வின் எல்லா நிலைகளிலும் ஒவ்வொரு கணமும் வெவ்வேறு விதமாகக் காணமுடிகிறது.
ஒரு தோழி, தனது சிறுவயதில் இறந்த அப்பாவிடம் பெற முடியாமல் இழந்த அன்பை, தான் சந்திக்கும் எல்லா ஆண்களிலும் தேடிக்கொண்டிருப்பார்; இன்னொரு நண்பரோ, அகாலத்தில் மரணித்த தன் தோழனிடம் ஊற்றெடுக்கிற நேசத்தை, எல்லாத் தோழர்களிடமும் காட்டுவார்.
ஒருவர், தனது அத்தை உயிரோடு இருக்கும்போது பெற்ற தாய்போலத் தன்னைக் கவனித்துக் கொண்டதற்கு – அப்போது அவர் வேலையில் இல்லை, படித்துக்கொண்டிருந்தார் – அத்தையிடம் காண்பிக்க முடியாத பாசத்தை, கடைசிக் காலத்தில் அவரின் மாமாவிடம் காண்பித்துக்கொண்டிருக்கிறார்.
இன்னொருவரோ முறிந்த தன் நட்பிடம் கற்ற பாடத்தை, எதிர் வரும் எல்லா மனிதர்களிடத்தும் முன்னெச்சரிக்கையாக வெளிப்படுத்துகிறார்.
தனக்கு வாழ்வளித்த துயரங்களை எல்லாம் திராவகமாகத் தன்னைச் சுற்றியுள்ள எல்லார் மேலும் தெளித்துப் புகையாகிறார் ஒருவர்.
முன்பு தவறிழைத்த உறவினரை, அந்தத் தவறிலிருந்தே அவரை அடையாளப்படுத்தி, பிரிந்து தனித்து வாழ்கிற மற்றொருவர்.
பெரியவர்களிடமும் கணவரிடமும் பொறுத்துப் பொறுத்துச் சேமித்த வாழ்நாள் கோபத்தை, பிள்ளையின் சிறிய தவறுகளுக்கும் பொறுக்க முடியாமல் வெடிக்கிறார் இன்னொருவர்.
இப்படி வாழ்வின் அத்தனை நிகழ்வுகளும் வாழ்வின் அனைத்து நிலைகளும் ஒவ்வொரு கணமும் ஒன்றோடொன்று பொருந்தாத பல் சக்கரங்கள் போல, முறுக்கி ஒன்றையொன்று இயங்கவிடாமல் இறுகிக் கிடக்க, எப்படி முன்னகர்ந்து செல்வது?
பெரிய விஷயங்கள்தான் என்றில்லை, ஒவ்வொரு நொடியும் நாம் கடக்கிற சின்னச் சின்ன விஷயங்களிலும் நூற்றாண்டுகளின் புழுதி படர்ந்து கிடப்பதை எப்படிக் கடந்து வருவது?
சிறிதோ பெரிதோ நன்றியை உடனே சொல்லிவிடுவது நல்லது. அல்லது அது பின்னாளில் குற்றவுணர்வாக உருவெடுக்கும்; பிறகு பார்க்கும்போதெல்லாம் நன்றி சொல்ல கடமைப்பட்டுவிடுவோம்; நன்றி – விசுவாசமாக மாறி அடிமைப்படுத்திவிடும்.
சிறிதோ பெரியதோ நாம் காரணமாக இருக்கிற, அப்படித் தோன்றுகிற, நிகழ்ந்துவிட்ட குற்றங்களுக்கு உடனடியாகவே மனதார மன்னிப்பு கேட்பதும் நலம். மன்னிப்பு கேட்காமல் விட்டு, அது தரும் குற்றவுணர்வும், வளர்த்தும் பயமும், பயம் தூண்டும் குற்றங்களும் பெருகிக்கொண்டே போகும். ஒரு தானியத்தைப் பயிரிடுவது போலத்தான். ஒரு தீயை அணைக்காமல் சென்றது போலத்தான்.
நாம் இப்போது உரையாடுகையில், போனமுறை பார்த்த உங்களோடு நானும், போன முறை பார்த்த என்னோடு நீங்களும் உரையாடலைத் துவக்குகிறோம். அல்லது நான் என்று நீங்கள் வைத்திருக்கும் இத்தனைநாள் பிம்பத்தோடு நானும், உங்களைப் பற்றிய பிம்பத்தோடு நானும்.
விபத்தில் எனக்குக் காலொடிந்திருந்த நேரம். என் உடல் எடையைக் குறைத்தால்தான் நான் வெகு சீக்கிரம் குணமடைய முடியும். சத்துள்ளதாகவும் அதே நேரம் எடையைக் கூட்டாததாகவும் இருக்க வேண்டும். என் ஒருநாளின் உணவே, ஒரு டம்ளர் பால், ஒரு மாதுளை இரண்டு சப்பாத்தி, ஏதாவது முளைவிட்ட பயறின் காரமற்ற சுண்டல், ஆட்டுக்கால் பாயா அவ்வளவுதான். வாரக்கணக்காக இப்படித்தான்.
ஓரளவு நலமான நேரம் எனக்கு மிகப் பிடித்த ஆளுமை விருந்திற்கு வந்திருந்தார். அவர் வரும்போது நான் காலையிலிருந்தே மெதுவாகச் சமைத்துக் கொண்டிருந்ததால், உணவு ஆறியிருந்தது. எங்கள் வீட்டில் திரும்ப சூடு செய்வதில்லை. செய்தால் அது பழையது; சத்து கெட்டது. என் ருசியிழந்த நாக்கிற்குத் துளி காரமும் அதிகமாகத் தோன்ற, சமையல் ‘சப்’பென்று அமைந்தது. அதனால் இன்றுவரை அவருக்கு நான் சமைக்கத் தெரியாதவள்தான்.
ஆனால், வேறு சிலருக்கோ நான் அற்புதமாகச் சமைப்பவள், அருமையாகக் கவனித்துக்கொள்பவள். சிலருக்கு நான் உம்மணாம்மூஞ்சி; சிலருக்கு நான் வெடிச்சிரிப்புக்காரி. சிலருக்கு நான் தாராளமாகச் செலவு செய்பவள்; சிலருக்கு கஞ்சம்பட்டி. சிலருக்கு நான் ‘மனிமைண்டட்’; சிலருக்கு நான் மனிதர்களை நேசிப்பவள். சிலருக்கு நான் புலம்பல் திலகம்; சிலருக்கு நான் ‘டோன்ட் கேர் மாஸ்டர்’. சிலருக்கு நட்பென்றால் உயிரையே கொடுப்பவள்; சிலருக்கோ கரடி கதையில் போல நண்பரைக் கரடியிடம் சாகவிட்டு ஓடிப்போன துரோகி. சிலருக்கு என்மேல் அன்பு; சிலருக்கு வெறுப்பு.
இதில் எது உண்மை, எது நான்?
எல்லாமும் உண்மை, எல்லாமும் நான்.
யாரேனும் என்னைக் குறையாகச் சொன்னவற்றை அறிய நேரும்போது எதிர்கொள்ள, மனதில் ஜீரணிக்கக் கஷ்டமாக இருக்கும்.
பிறகான காலங்களில் இன்னொன்றும் புரிய நேர்ந்தது. அந்தந்த நேரத்து உண்மையை எப்போதுமாக்கி பிம்பமாக்குவது. அதாவது ஒரு சந்தர்ப்பத்தில் ஒருவர் அழுவதைப் பார்க்க நேர்ந்தால், எப்பொழுதுமே அவர் அழுகிறவர் என்று நாமாக நினைத்துக்கொள்வது; தன் கவலைகளைப் பற்றிப் பகிர்ந்து கொள்ளாமல், எப்போதும் சிரித்தபடி இருப்பவர்களுக்குக் கவலையே இல்லை என்று கற்பிதம் செய்துகொள்வது. என்னை அவர்கள் தவறாக, வேறாகப் புரிந்துகொள்வது போலத்தானே நானும் அவர்களைப் புரிந்திருக்கிறேன்.
எல்லாருமே இறந்தகாலத்தில்தானே வாழ்கிறோம்! இறந்த கால நம்பிக்கைகளின்படிதானே வழி நடக்கிறோம்.
டிபன் பாக்ஸில் ’பாம்’ வெடித்தால் – போலீஸார் எல்லா டிபன் பாக்ஸை மட்டுமே சோதிப்பது போல; பள்ளிகளில் தீ விபத்து ஏற்பட்டால், பள்ளிகளில் மட்டுமே கவனம் செலுத்துவது போல…
இவர் எனக்கு நன்மையே செய்பவர்; இவர் எனக்குத் துன்பமே தருபவர் இப்படி நாமாக நினைத்துக்கொள்கிறோம்.
உடல் நலம் குறித்த நம்பிக்கைகள், பிம்பங்கள்: ‘அச்சோ, எனக்கு பஸ்ல போனாலே வாந்தி வரும், அடைச்சு ஏசியைப் போட்டாலே தலைவலி வந்துரும்’ இப்படி.
‘12ம் தேதின்னாலே எனக்கு முடிஞ்சுது கதை, சனிக்கிழமையே எனக்கு ஆகாது’… இப்படி…
‘இந்தப் பொண்ணுங்களே இப்படித்தான் எசமான்; இந்த ஆம்பளைங்களே இப்படித்தாங்க’ இப்படி…
அப்புறம் இந்த ஜோசியங்கள் ‘இந்த ராசிக்காரர்களே இப்படித்தான், இந்த நட்சத்திரம் கிரகமே இப்படித்தான்’.
*
பிறந்தது முதல் ஐந்தாறு வருடங்களில் அல்லது பன்னிரண்டு வயது வரையிலான விஷயங்களேதான் நம் முதல் சுற்று வாழ்வு. பிறகு அவையேதான் திரும்பத் திரும்ப வருகின்றன. மரத்தின் இலையுதிர்காலம், வசந்த காலம் போல. வேரறும் நாள் வரை அதேதான்.
மூளை நம் ’முதன் முதலை’ப் பதித்துக்கொள்கிறது. அதையே நினைத்து சந்தோஷம்கொள்கிறது; அல்லது பயந்து நடுங்குகிறது. அதையேதான் மறுசுற்றாக்கித் தருகிறது.
நம் குழந்தைப் பருவத்தில், எந்த எதிர்பார்ப்புமில்லாமல்தான் நாம் எல்லாவற்றையும் எதிர்கொண்டோம்.
முதல் சுற்று என்பது விதி. நம்மால் மாற்றவே முடியாதது. ஆனால், அடுத்தடுத்த சுற்றுகள் நமக்கான வாய்ப்பு. ஒவ்வொரு நாளும் ஒரு நூல் நகர்த்த முடிந்தால் கூடப் போதும். மாற்றம்தான். வாய்ப்புதான். வெற்றிதான். அனுபவம்தான்.
எதிர்காலத்தையே மாற்றும் வல்லமை இந்த நாளுக்கு உண்டு; இந்தக் கணத்திற்கு நிச்சயம் உண்டு. இந்தக் கணம் என்பது நாளையின் இறந்த காலம்தானே, நாம் இறந்த காலத்தில் வாழ்பவர்கள்தாமே.
எனவே, நம் குழந்தைகளுக்கு நல்ல ‘முதல்’களைக் கொடுத்தால் போதும்! அதுவே போதும்!
படைப்பாளர்
பிருந்தா சேது
சே.பிருந்தா (பிருந்தா சேது), கவிஞர். எழுத்தாளர். திரைக்கதை ஆசிரியர்.
Arumai!!!