சம்பவம் 3

நெகிழிப்பையைப் பிரித்து  அதிலிருந்த தேநீரை காகிதக் கப்புகளில் நிரப்பிக் கொண்டிருந்தாள் சிந்து. 

“மேடம்”  என்றபடி அவளுக்கு அருகில் வந்து நின்றாள் கஸ்தூரி. 

“ஏம்மா, உங்களுக்கு ஒரு தடவை சொன்னா புரியாதா? நாள் முழுக்க இங்கேயே உட்கார்ந்துதுட்டு எங்க உசுர எடுக்கறீங்க?”

“என்ன மேடம் இப்படிச் சொல்றீங்க? நானே பொண்ண பறிகொடுத்துட்டு என்ன செய்யறதுன்னு தெரியாம என் பொழப்பை எல்லாம் விட்டுட்டு உங்க கிட்ட வந்து கெஞ்சிட்டு இருக்கேன். நான் என்ன உங்க சொத்தையா எழுதிக் கேக்கறேன்? என் பொண்ணோட பொணத்தை எங்கிட்ட ஒப்படைக்கச் சொல்லித்தான கேக்கறேன்?” 

அதற்குள் பரிமளாவின் கேபினிலிருந்து ஒலித்த மணிச் சத்தத்தில், போட்டது போட்டபடி அப்படியே அங்குச் சென்றாள் சிந்து.

“என்ன சிந்து, வெளிய ஒரே இரைச்சலா இருக்கு” என்று கேட்டாள் பரிமளா.

“மேடம்,  கஸ்தூரின்னு ஒரு அம்மா வந்துச்சுல்ல. காலைல இருந்து இங்கேயே உட்கார்ந்துட்டுக் கொடைச்சல் கொடுத்துட்டு இருக்கு மேடம். எவ்வளவு சொன்னாலும் இந்த இடத்தை விட்டு நகர மாட்டேங்கறாங்க” இன்று புலம்பினாள் சிந்து. 

“இருக்கிற தலைவலி  போதாதுன்னு இவங்க வேற”  என்று சலிப்புற்றாலும், “சரி அவங்கள உள்ள வர சொல்லு”  என்று பரிமளா சொன்னதும் வெளியில் வந்து, கஸ்தூரியை உள்ளே அனுப்பினாள்.

“ஏம்மா, உங்களுக்கு ஒரு தடவ சொன்னா புரியாதா?  சும்மா தொந்தரவு பண்ணிட்டு இருந்தீங்கன்னா ஒரு யூசும் இல்ல” என்றாள் பரிமளா.

“மொறையா என் பொண்ணோட பாடிய எங்கிட்ட குடுத்துட்டீங்கன்னா, நான் ஏன் இங்க வந்து உங்களைத் தொந்தரவு செய்யப் போறேன்” என்று வீம்பாகவே பதில் அளித்தாள் கஸ்தூரி.

“என்னம்மா என்கிட்டயே லா பாயிண்ட் பேசறீங்களா? உங்க பொண்ணோட பேரு கோலவிழின்னு சொல்றீங்க. ஆனா, செத்துப்போன பொண்ணோட பேரு அமுதா.  அவங்க ஆதார் கார்டுல அந்தப் பேர்தான் இருக்கு. உங்ககிட்ட ஆதாரம் ஏதாவது இருக்கான்னு கேட்டா அதுவும் சரியா குடுக்க மாட்டேங்கறீங்க.”

“அதான் பிறப்புச் சான்றிதழ் கொண்டு வந்து கொடுத்தேனில்ல மேடம்?”

“அதுதான் ஆதாரோட பொருந்திப் போகலையே. நீங்க சொல்ற கோலவிழிதான் இந்த அமுதாங்கறதுக்கு எந்த விதமான புரூஃபும் இல்லையே!”

“அத நீங்கதான் கண்டுபிடிக்கணும்.”

“என்னம்மா நக்கலா, செத்துப்போன அந்தப் பொண்ணோட பேங்க் அக்கவுண்ட்ல பெரிய அமௌன்ட் இருக்கிறத எப்படியோ தெரிஞ்சுகிட்டு, இங்க வந்து டிராமா செய்றீங்களா? ஓவரா பேசினா போர்ஜரி செய்றீங்கன்னு சொல்லி உங்களையும் தூக்கி உள்ள வச்சுருவேன்”  என்று பரிமளா ஆவேசமானாள். அதைக் கேட்டு அவள் முகத்தில் பல்பு எரிந்தது.   

ஆனாலும் சட்டென முகத்தைச் சுருக்கி, “ஐயையோ, என் பொண்ணு அக்கவுண்ட்ல நிறைய பணம் இருக்கா? அதெல்லாம் எனக்குத் தெரியாது மேடம்! கல்யாணம் ஆகாம பொண்ணு இப்படித் தற்கொலை செஞ்சுட்டு செத்துப் போச்சுன்னா குடும்பத்துக்கு ஆவாது.  முறையா அடக்கம் செஞ்சு தீட்டுக் கழிக்கணும். சொந்தக்காரங்க எல்லாம் கேள்வி கேக்குறாங்க”  என்று தணிந்து வந்தாள் கஸ்தூரி. 

இவள் சொல்வது உண்மையா, பொய்யா என்பதைக்கூட புரிந்துகொள்ள முடியவில்லை. “சரி, பள்ளிக்கூட டிசி,  பத்தாவது சர்டிபிகேட் அதுபோல ஏதாவது இருந்தா எடுத்துட்டு வாங்க” என்றாள். 

“கோலவிழி நயந்த் கிளாசு படிக்கும்போது, அவ அப்பனுக்கு உடம்பு சரியில்லன்னு சொல்லி கொஞ்சநாள் பள்ளிக்கூடத்தை விட்டு நிறுத்தி இருந்தேன் மேடம். அப்பதான் கொரோனா வந்துச்சு. அதனால டிசிகூட வாங்கல. அந்த ஆளு இறந்து போனதும்,  இந்தப் பொண்ணு என்ன விட்டுட்டுத் தனியா போயிடுச்சு. அதுக்குப் பிறகு எனக்கும் அதுக்கும் தொடர்பே இல்லாம போயிடுச்சு. எங்கிட்ட பட்டன் போன்தான் இருக்கு. இந்த யூட்யூப் எல்லாம் பார்க்கிறது இல்ல. அதனால அவளப் பத்தி எனக்குத் தெரியாமலேயே போயிருச்சு. இப்ப நெருப்புக் கொளுத்திட்டு அது செத்துப்போன பிறகுதான் டிவியில பார்த்து தெரிஞ்சுக்கிட்டேன்”  என்று மூச்சிரைக்க நீளமாகப் பேசினாள் கஸ்தூரி. 

ஆனால் இந்தப் பேச்சில் ஏதோ மழுப்பல் இருப்பது நன்றாகவே புலப்பட்டது பரிமளாவுக்கு.

“இந்த மாதிரி வாய் வார்த்தையா பேசறத வெச்சிட்டெல்லாம் அந்தப் பொண்ணோட பாடிய உங்ககிட்ட ஒப்படைக்க முடியாது” என்றாள் திட்டவட்டமாக. 

“மேடம், அது இன்னாரோட புள்ள தானே கண்டுபிடிக்க எதுவோ இந்த ரத்தப் பரிசோதனை எல்லாம் செய்வாங்களே. இந்த டிவி தொடர்ல எல்லாம்கூடக் காமிப்பாங்க இல்ல. அது மாதிரி எனக்கு ஏதாவது செஞ்சி கண்டுபிடிங்க.”

“எது இந்த டிஎன்ஏ டெஸ்டா? இந்த சினிமால டிவி சீரியல்ல எல்லாம் காமிக்கிற மாதிரி அது ஒண்ணும் அவ்வளவு சுலபம் கிடையாது. அது பெரிய ப்ரொசீஜர்.  கோர்ட் மூலமா பர்மிஷன் வாங்கணும். ரிப்போர்ட் வர பத்துப் பதினஞ்சு நாளாவது ஆகும். ஏற்கெனவே இந்த கேஸ் பெரிய தலைவலியா இருக்கு.  நீங்க சொல்றதெல்லாம் வெச்சுட்டு அதுக்கெல்லாம் எங்களால டைம் வேஸ்ட் செய்ய முடியாது. இல்லனா தெளிவா உண்மை வெளிய வர வரைக்கும் வெயிட் பண்ணுங்க.  இப்ப கிளம்புங்க.  இதே மாதிரி இங்க வந்து எங்களுக்குத் தொந்தரவு கொடுத்துட்டே இருந்தீங்கன்னா, நியூசன்ஸ் கேஸ்ல புக் பண்ணி உங்களை உள்ள  வெச்சுடுவேன்”  என்று அவளை எச்சரித்து அங்கிருந்து அனுப்பி வைத்தாள் பரிமளா.

ஓர் ஒழுங்கில்லாமல் புள்ளிகள் வைத்து அதைக் கோலமாகப் போட வேண்டும் என்றால் எப்படிக் குழப்பமாக இருக்குமோ அப்படி இருந்தது அவள் நிலை. பிரச்னையின் அடியும் தெரியவில்லை நுனியும் தெரியவில்லை. கடுப்புடன் மேசைமீதிருந்த ஒலிப்பானை ஓங்கித் தட்டினாள். 

தேநீர் கப்புடன் சிந்துதான் வந்து நின்றாள். 

‘ஏன் பாப்பா, எப்ப கூப்பிட்டாலும் நீயே வந்து நிக்கிற? இந்தத் தாமு என்னதான் செய்றாரு? நீ போய் அவர வரச் சொல்லு” என்றாள். 

“என்ன மேடம், கூப்பிட்டீங்களாமே” என்றபடி வந்து நின்றான் தாமு.

“ஏன் தாமு, ஏதாவது வேல சொன்னா அதை ஃபாலோவே பண்ண மாட்டீங்களா? ஒவ்வொரு தடவையும் உங்களக் கூப்பிட்டு நான் கெஞ்சிட்டு இருக்கணுமா?” என அவள் கேட்டதற்கு, காதைக் குடைந்தபடி, “என்னன்னு சொல்லுங்க, மேடம்? அத விட்டுட்டுக் கத்திட்டு இருக்கீங்க” என்றான் அசட்டையாக.

‘ச்சை, இவனுங்ககூட எல்லாம் மல்லு கட்றத விட எதையாவது செஞ்சு, ஏதாவது ஒரு மகளிர் காவல் நிலையத்துக்கு டிரான்ஸ்பர் வாங்கிட்டுப் போயிடணும்’ என்று உள்ளே கொதிக்க, “ஜிஹெச் போயி அமுதாவோட போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் ரெடி ஆயிடுச்சான்னு கேட்டு, வாங்கிட்டு வந்து குடுங்க. இங்க இருக்கிற சூழ்நிலை புரியாம டிலே பண்ணிட்டு இருக்காங்க” என்றாள்.

“அதான் பாடி முக்கால்வாசி எறிஞ்சுப் போய் அரையும் குறையுமா இருக்கே,  இத வச்சு தெளிவா ரிப்போர்ட் கொடுக்கணும்னா டைம் எடுக்கத்தான் செய்யும்னு சொல்றாங்களே மேடம். இப்ப போனா மட்டும் ரெடியா இருக்க போகுதா என்ன?” 

“நான் ஏற்கெனவே பேசிட்டேன். அவங்க சொல்றாங்கன்னு இவங்க சொல்றாங்கன்னு நீங்களே எல்லாத்தையும் இழுத்து மூடிடாதீங்க. நேர்ல போயப் பாருங்க. இல்லனா கேசுக்கு கோ-ஆபரேட் பண்ண மாட்டேங்கறீங்கன்னு உங்க பேர்ல டிபார்ட்மெண்ட்ல கம்ப்ளைன்ட் பண்ணிடுவேன்” என்றாள்  பரிமளா அதட்டலாக. 

மேற்கொண்டு ஏதும் பேசாமல் எதையோ முனகிக்கொண்டே அங்கிருந்து சென்றான் தாமு.

ஆனால், அவன் திரும்ப வரும்போது அந்தப் பிரேதப் பரிசோதனை அறிக்கையுடன்தான் வந்தான். 

ஆனால் அந்த அறிக்கைதான் மிகப்பெரிய அதிர்ச்சியைக் கொடுத்தது பரிமளாவுக்கு.  அதை எடுத்துக்கொண்டு கண்காணிப்பாளர் விமலின் கேபினை நோக்கி ஓடினாள்.

“சார், அமுதாவோட போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் வந்துடுச்சு. இதைக் கொஞ்சம் பாருங்க”  என்று அதை அவரிடம் நீட்டினாள். 

அதை வாங்கிப் படித்த விமலுக்குமே அதிர்ச்சிதான். காரணம், ‘இறப்புக்கான காரணம் – மாரடைப்பு’  என்றும் ‘இறந்து ஐந்து மணி நேரத்துக்குப் பிறகுதான் உடலில்  தீ வைக்கப்பட்டிருக்கிறது’ என்றும் அதில் தெள்ளத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. 

‘அப்படி என்றால் நடந்தது தற்கொலை இல்லையா? இறந்து போனது அமுதாவா இல்லை வேறு யாரோவா?’ என்கிற  கேள்விகள் அங்கே தொக்கி நின்றன. 

“சரி,  இதப் பத்தி வேற யார் கிட்டயும் ரிவில் பண்ணாதீங்க. கதை இப்படியே போனா வேலைக்கு ஆகாது. இதை விசாரிக்க ஒரு தனிப்படை அமைக்க முடியுமான்னு மேலிடத்துல பேசிப் பார்க்கலாம்”  என்று விமல் சொல்லிக் கொண்டிருக்கும்பொழுதே, எந்த அனுமதியும் கேட்காமல் அறைக்கதவைத் தள்ளிக் கொண்டு தடதடவென ஒரு பெண் உள்ளே நுழைந்தாள். 

“சாரி சார், சொல்லச் சொல்ல கேக்காம உள்ள வந்துட்டாங்க” என்றபடி கூடவே ஓடிவந்தான்  தாமு.

“சாரிங்க சார்,  உள்ள வந்ததுல இருந்து மாறி மாறி கேள்வி கேக்கறாங்களே தவிர, மீட்டிங்ல இருக்கீங்கன்னு சொல்லி உங்களப் பாக்க அலோ பண்ண மாட்டேங்கறாங்க”  என்றாள் அந்தப் பெண்.

“கொஞ்ச நேரம்கூட வெயிட் பண்ண முடியாதா, அப்படி என்னம்மா அவசரம்?” எனக் கேட்டாள் பரிமளா. 

“ரெண்டு நாளா என்னோட ஹஸ்பண்டைக் காணல மேடம்”  என்றாள் அந்தப் பெண்.

பதற்றத்துடன் அந்தப் பெண் பேசுவதைப் பார்த்து, “தாமு, தண்ணி கொண்டு வந்து கொடுங்க” என்று சொல்லிவிட்டு அவளை அமரச் சொன்னாள். 

அவள் அமர்ந்து தண்ணீர்  குடித்து  சற்று ஆசுவாசமடைந்ததும், “இப்ப சொல்லுங்க. உங்க பேர் என்ன? உங்க ஹஸ்பண்ட் பேர் என்ன, எங்க எப்ப காணாம போனாருன்னு மத்த டீடைல்ஸ் எல்லாத்தையும் சொல்லுங்க” என்றான் விமல். 

“ஐம் ரேகா, யூ டியூபர் ரோஷன் தெரியும் இல்ல, அவர்தான் என் ஹஸ்பண்ட்” என்றாள்.

“வாட்.. அமுதா சூசைட் கேஸ்ல அப்ஸ்காண்ட் ஆகி இருக்காரே அந்த ரோஷனையா சொல்றீங்க” என அதிர்ந்தாள் பரிமளா. 

“எஸ் மேடம்” என்று ரேகா சொல்லவும், விமலுக்கு ஆத்திரம் பற்றிக் கொண்டு வந்தது.  “என்ன மேடம், உங்க ஹஸ்பண்ட்ட எங்கேயோ ஒளிச்சு வெச்சுட்டு, இங்க வந்து டிராமா பண்ணிட்டு இருக்கீங்க. பார்க்கதான் டீசன்ட்டா இருக்கீங்க. ஆனா, செய்யறது பூராவும் இல்லீகல் ஆக்டிவிட்டீஸ். உங்களுக்கெல்லாம் கொஞ்சம்கூட வெக்கமாவே இல்லையா?” என வார்த்தைகளைக் கடித்துத் துப்பினார். 

“அப்படில்லாம் இல்ல, சார். ஏதோ யூடியூப் சேனல் வெச்சி பணம் சம்பாதிச்சிட்டு இருக்காருன்னுதான் நெனச்சிட்டு இருந்தேன். உண்மையாவே அவர் என்ன செஞ்சிட்டு இருக்காருன்னு எனக்கு எதுவும் தெரியாது, சார். யூடியூபர் அமுதா சூசைட் பண்ணிட்ட அன்னைக்கு ‘அந்தப் பொண்ணு வேணும்னே என்னை மாட்டிவிட்டுடுச்சு. எனக்கும் இதுக்கும் எந்தச் சம்பந்தமும் கிடையாது. இங்க இருந்தா தேவையில்லாத போலீஸ் கேஸ்ல மாட்டிக்குவேன். ப்ராப்ளம் சால்வானதும் நானே வரேன். அதுவரைக்கும் என் பிரண்டோட கெஸ்ட்-ஹவுஸ்ல தங்கி இருக்க போறேன்’னு சொல்லிட்டு அவசர அவசரமா கிளம்பிப் போனாரு. அதுக்குப் பிறகு தினமும் போன்ல பேசிட்டுதான் இருந்தோம். இப்ப, ரெண்டு நாளா அவரு போனே செய்யல. அந்த நம்பருக்கு போன் பண்ணா ஸ்விட்ச்டு ஆப்னு வருது. அவருக்கு ஏதோ ஆயிடுச்சோன்னு பயமா இருக்கு, சார். அதனாலதான் கம்ப்ளைன்ட் கொடுக்கலாம்னு நேரா இங்க வந்துட்டேன்” என்றாள் ரேகா கண்களில் கண்ணீர் பொங்க.

(தொடரும்)

படைப்பாளர்



எழுத்தாளர் கிருஷ்ணப்பிரியா நாராயணன். தமிழ் நாவலாசிரியர் மற்றும் பதிப்பாளர். சென்னையில் வசிக்கிறார். சென்னை வானொலி நிலைய நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்தவர். இவரது பதினாறு நாவல்கள் புத்தகங்களாக வெளிவந்திருக்கின்றன. ஹெர் ஸ்டோரிஸ் வலைதளத்தில் பெண்ணியக் கட்டுரைகள் எழுதி வருகிறார். சிறாருக்கும்
நூல்களும் எழுதி வருகிறார்.