திடீரென, “ஹை அக்கா” என எதிரில் வந்து நின்றவளைப் பார்த்ததும் யோசனையில் ரஞ்சனாவின் நெற்றி சுருங்கியது. பின் அவளை உணர்ந்து, “அமுதா ரைட், மார்னிங்ல இருந்து எக்கச்சக்க வேலையா, உன்னை இங்க வரச் சொல்லி இருந்ததையே நான் மறந்துட்டேன். குட், சொதப்பாம சொன்ன டைம்க்கு வந்துட்டியே. தங்கம் அண்ணன மீட் பண்ணிட்டியா?” என வினவினாள்.

“பார்த்துட்டேன்க்கா. பணம் கிடைச்சிடுச்சு. ரொம்ப தேங்க்ஸ்” என ரஞ்சனாவிடம் தன் கையிலிருந்த ரூபாய் நோட்டுக் கட்டைத் தூக்கிக் காண்பித்தாள். வனிதாவிடம் என்ன பேசுவது என்று இவளுக்கும் தெரியவில்லை, அவளும் எதுவும் பேச முற்படவில்லை.

“இத வெச்சு நீ மேல மேல வளரணும், ஆல் தி பெஸ்ட்” என்றாள் ரஞ்சனா.

“தேங்க்ஸ், நீங்க என்னக்கா இங்க?”

“வனிதா புதுவீடு கட்டி, ஹவுஸ் வார்மிங் ஃபங்ஷன் வெச்சிருக்காங்க. தங்கம் அண்ணன இன்வைட் பண்ண, சும்மா கம்பெனிக்குக் கூப்டாங்க, வந்தேன்.”

“ஓ… சூப்பர்க்கா, உங்க ரெண்டுபேர் வீடியோசும் பார்த்திருக்கேன். நேர்லயும் அழகா இருக்கீங்க.”

“தேங்க்ஸ்” என ரஞ்சனி சொல்லப் புன்னகை செய்தாள் வனிதா.

“அக்கா, இந்தப் பணத்த எங்க, எப்படிக் கொடுக்கணும்?”

“ஓ… இது ஒண்ணு இருக்கில்ல… வழக்கமா எங்க ஆபிஸ்ல வெச்சுதான் வாங்குவோம். அதான் இங்கயே மீட் பண்ணிட்டோமே, பரவால்ல எங்கிட்டயே குடு, வாட்ஸ்அப்ல டிஜிட்டல் ரெசிப்ட் அனுப்ப சொல்றேன்.”

ரஞ்சனா இப்படிச் சொன்னதும் சற்றுத் தயக்கமும் பயமும் உண்டானாலும், கஜாவைத் திரும்பி ஒரு பார்வை பார்த்துவிட்டு, பணத்தை அவளிடம் கொடுத்தாள் கோலவிழி.

அதை வாங்கித் தன் கைப்பையில் வைத்துக்கொண்டு, “சரிம்மா, நாங்க போய் தங்கம் அண்ணன பார்க்கணும், சீக்கிரமே உங்க வியூஸ் இன்கிரீஸ் ஆயிடும். கங்ராஜூலேஷன்ஸ்” என்று சொல்லிவிட்டு அலுவலக அறை நோக்கிப் போனாள் ரஞ்சனா. ஒரு புன்னகையுடன் அவளைக் கடந்துபோனாள் வனிதா.

“வெயில் கொளுத்துது. ரெண்டு பஸ் மாறிப் போகறதுக்குள்ள ஒரு வழி ஆயிடுவ. வா, நானே உன்ன டிராப் பண்றேன்” என அவளருகில் வந்து நின்றான் கஜா.

“கிட்டத்தட்ட பத்து மணியில இருந்து என்கூடவே இருக்கியே. உன் வேலைக்கு எதுவும் பிரச்ன வராதா?” என வினவினாள்.

“என் வேல நேரம் ராத்திரி ஏழுல இருந்து மிட் நைட் ஒரு மணி வரைக்கும்தான். பப்ல இருக்கறவன எல்லாம் வெளியில தள்ளிப் பூட்டிட்டு, நானும் இங்கயே ஒரு ஓரமா படுத்துத் தூங்கிட்டுக் காலைல கிளம்பி வீட்டுக்குப் போவேன். நேத்து ஒருத்தன் குடிச்சி மட்டையாகி மூணு மணி வரைக்கும் வெச்சி செஞ்சிட்டான். நீ இங்க உள்ள நுழையும் போதுதான் தூங்கி எந்திரிச்சேன். உன்னப் பார்த்ததும் மூஞ்சி கழுவிட்டு அங்க வந்தேன். எப்படியும் வீட்டுக்குத்தான் போகணும், வா உன்ன டிராப் பண்றேன்” என்றான்.

பேசிக்கொண்டே இருவரும் வாகன நிறுத்தம் வரை வந்தனர். அப்பொழுது ரஞ்சனாவிடமிருந்து கோலவிழிக்கு அழைப்பு வந்தது. ‘இப்பதானே நேர்ல பாத்துட்டு வந்தோம், அதுக்குள்ள எதுக்குக் கால் பண்றாங்க?’ என்று சிந்தித்தபடி “சொல்லுங்கக்கா” என்று அழைப்பை ஏற்றாள்.

“ஏம்மா உனக்கு நான் ஹெல்ப் பண்ணணும்னு நெனச்சு ஒண்ணு செஞ்சா, நீ என்ன வசமா மாட்டி விட்டுட்ட” என்று படபடத்தாள் ரஞ்சனா.

“ஐயோ, என்னங்கக்கா ஆச்சு?” என்று பதற்றத்துடன் வினவினாள்.

“ஏம்மா இங்க உன்னோட கசின் வேலை செய்றான்னு எங்கிட்ட சொன்னியா நீ?”

“அப்படி எல்லாம் இல்லக்கா. அவன் இங்க வேலை செய்யறது எனக்கே இங்க வந்ததுக்கு அப்புறம்தான் தெரியும்.”

“அப்படி இருந்தாலும், நீ இங்க லோன் எடுக்கறதைப் பத்தியெல்லாம் அவங்கிட்ட சொல்லணுமா?” என ரஞ்சனா பேசிக் கொண்டிருக்கும்போதே, “என்ன அம்மு, கிளம்பலாமா” என்றபடி வாகனத்துடன் அருகில் வந்து நின்றான் கஜா.

“ஏம்மா, அந்தப் பையன் உன் பக்கத்துலதான் இருக்கானா? கடவுளே” எனப் பட்டென அழைப்பைத் துண்டித்து விட்டாள் ரஞ்சனா. அதில் பதறியவளாகக் கோலவிழி மீண்டும் அழைக்க, அவள் அந்த அழைப்பை ஏற்கவேயில்லை.

“எல்லாம் என் நேரம், எந்தப் பக்கம் போனாலும் பிரச்னையாகவே இருக்கு” என்று புலம்பியபடி அவனுடைய இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்தாள்.

“ஏன், என்ன வந்துச்சாம் இப்ப?” என்று கேட்டவனிடம் ரஞ்சனா பேசியவற்றைச் சொல்லிப் புலம்பினாள்.

அதற்கு அவன் ஏதோ பதில் சொல்ல அது அவள் செவிகளை எட்டவில்லை. “என்ன சொல்றன்னு புரியல” என்றாள்.

சரி விடு” என மேற்கொண்டு எதுவும் பேசாமல் வாகனத்தைச் செலுத்தியவன் சில நிமிடங்களில் ஓர் உணவகத்தின் வாயிலில் நிறுத்தினான். “இப்ப எதுக்கு இங்க நிறுத்தி இருக்க?” என்று கேட்டாள்.

“நீ இருக்கிற நிலைமையில உனக்குத்தான் பசி, தாகம் எதுவுமே தெரியாது. ஆனா, எனக்குப் பசிக்குதில்ல. வா, சாப்பிடலாம்” என்று சொல்லிவிட்டு உணவகத்தின் உள்ளே அவளை அழைத்துச் சென்றான்.

“சிக்கன் பிரியாணியா? மட்டன் பிரியாணியா என்ன சாப்பட்ற?” என்று கேட்டான்.

பிரியாணியின் பெயரைக் கேட்டதுமே அவளின் கண்கள் பளபளத்தன. “இதுல ஒரு பிளேட், அதுல ஒரு பிளேட் ஆர்டர் பண்ணு. ரெண்டு பேரும் ஷேர் பண்ணிச் சாப்பிடலாம்” என்று அவள் சொன்ன விதத்தில் அவன் முகத்தில் புன்னகை அரும்பியது.

“இங்க செல்ஃப் சர்வீஸ்தான். இரு நான் போய் வாங்கிட்டு வரேன்” என்று சொல்லிச் சென்றவன் சில நிமிடங்களில் பிரியாணி தட்டுகளுடன் வந்தான். இதில் கொஞ்சம் அதில் கொஞ்சம் என சுவைத்துப் பார்த்துவிட்டு, “ரெண்டுமே ரொம்ப நல்லா இருக்கு, கஜா?” என்றாள். “அதனாலதான் இங்க கூட்டிட்டு வந்தேன்” என்றான்.

மீண்டும் அவள் ரஞ்சனாவுக்கு அழைக்க, திரும்பவும் அந்த அழைப்பை அவள் ஏற்கவே இல்லை. அதைப் பார்த்தவனின் முகம் கன்றியது.

“இதோ பாரு அம்மு, நீ இவங்க கிட்ட எல்லாம் ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும். இது எல்லாமே ஒரு மோசமான வெறிபிடிச்ச கூட்டம். எந்தப் பிரச்னையும் வராத வரைக்கும் சரி. வந்துட்டா அவங்க தப்பிச்சுக்க எந்த எல்லை வரைக்கும் வேணாலும் போவாங்க” என்றான்.

“இவங்க வீடியோஸ் எல்லாத்தையும் நான் ரொம்ப நாளா பார்த்துட்டு இருக்கேன். அவங்கள பார்த்தா அப்படியெல்லாம் தெரியல. உங்கக்கா மாதிரியே நீயும் சும்மா கண்டதையும் கற்பனை செஞ்சிட்டு அட்வைஸ் மழையா பெய்யாத” என்றாள் வெடுக்கென.

“உன்னல்லாம் சொல்லித் திருத்த முடியாது. பட்டாதான் உனக்குப் புத்தி வரும். எப்படியோ போய்த்தொல. ஆனா, மாசா மாசம் பணம் மட்டும் ஒழுங்கா என் அக்கவுண்ட் வந்தாகணும் சொல்லிட்டேன்” என்று அவன் சொன்ன விதத்தில் அவளின் முகம் கூம்பிப்போனது.

அமைதியாகச் சாப்பிட்டு முடித்து அங்கிருந்து கிளம்பினர். அவளை அழைத்து வந்து அவள் வீட்டின் வாயிலில் இறக்கிவிட்டுவிட்டு, ஒரு வார்த்தைகூடப் பேசாமல் அவன் பாட்டுக்குச் சென்றுவிட்டான். அவனுடைய கோபம் மனதை அசைத்தது. கதவைத் திறந்து கொண்டு வீட்டிற்குள் நுழைந்தவளுக்குத் தனிமை என்கிற உணர்வு முதன் முதலாகத் தோன்றியது. மின்விசிறியைச் சுழல விட்டுவிட்டு, முதுகில் மாட்டி இருந்த பையைக் கழற்றி ஓரமாக வைத்துவிட்டு, அப்படியே சுவரில் சாய்ந்து அமர்ந்தாள்.

கைபேசி, நோட்டிபிகேஷன் வந்ததற்கான ஒலியை எழுப்பியது. ஆர்வ மிகுதியில் எடுத்துப் பார்க்க, ‘ஶ்ரீஷா’ என்பவர் அவளுடைய சேனலை சப்ஸ்கிரைப் செய்திருப்பது தெரிய வந்தது. தொடர்ந்து, அவள் சமீபமாகப் பதிவேற்றம் செய்திருந்த வீடியோவைப் பார்த்துவிட்டு அவர், ‘ நைஸ்… ரொம்ப நல்லா டான்ஸ் பண்ணி இருக்கீங்க. உங்க எக்ஸ்பிரஷன்ஸ் எல்லாம் ரொம்ப அழகா இருக்கு’  என்று பின்னூட்டமிட்டிருந்தார்.

இதுவரை இப்படி ஒரு நீளமான பின்னூட்டம் அவளுக்கு வந்ததே இல்லை. மிஞ்சிப் போனால் நைஸ், அருமை போன்ற ஒரு வார்த்தை மட்டுமே இருக்கும். இல்லாமல் போனால், ஏதாவது ஓர் இமோஜியை அழுத்தி இருப்பார்கள் அவ்வளவுதான்.

இத்தனை நாள்களாகத் தான் போட்ட ஒவ்வொரு வீடியோவையும் யாரும் கவனிக்கவே இல்லையே என்கிற ஏக்கம் அவளுக்குள் கனலாகத் தகித்துக்கொண்டே இருந்தது. இந்த ஒரு நீளமான பின்னூட்டம், அவளுடைய எல்லாச் சோர்வையும் ஒரே நொடிக்குள் மறக்கச் செய்துவிட்டது. மகிழ்ச்சியில் கோலவிழியின் விழிகளில் கண்ணீர் பெருகியது. அந்தப் பின்னூட்டத்திற்கு உளமார நன்றி தெரிவித்தாள்.

அதோடு நிற்காமல், ஸ்ரீஷா அவளுடைய பழைய குறுங்காணொளிகளையும் ஒவ்வொன்றாகப் பார்த்து, இதே போன்ற நீளமான பின்னூட்டங்களைத் தொடர்ந்து இடவும்,               ‘இந்த அளவுக்கு ரிஸ்க் எடுத்து கடன் வாங்கி, நாம சேனலை ப்ரோமோட் பண்ணது தப்பே இல்ல. ஒர்த்துதான்’ என்று நிம்மதி அடைந்தாள் கோலவிழி.

ரஞ்சனாவிடமிருந்து அழைப்பு வர, அவள் ரசித்துக்கொண்டிருந்த திரை தான்பாட்டிற்கு மாறியது. 

(தொடரும்)

படைப்பாளர்

எழுத்தாளர் கிருஷ்ணப்பிரியா நாராயணன். தமிழ் நாவலாசிரியர் மற்றும் பதிப்பாளர். சென்னையில் வசிக்கிறார். சென்னை வானொலி நிலைய நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்தவர். இவரது பதினாறு நாவல்கள் புத்தகங்களாக வெளிவந்திருக்கின்றன. ஹெர் ஸ்டோரிஸ் வலைதளத்தில் பெண்ணியக் கட்டுரைகள் எழுதி வருகிறார். சிறாருக்கும்
நூல்களும் எழுதி வருகிறார்.