36-24-36 என்பது பெண்களுக்கென்று ஆண்களால் வரையறுக்கப்பட்ட அங்க அளவீடு. அதாவது மார்பு பகுதியும் இடுப்பின் கீழ்ப்பகுதியும் முப்பத்தாறாகவும், இடுப்பு இருபத்தி நாலாகவும் இருப்பதே ஒரு பெண்ணுக்குரிய அளவு. அதைத் தாண்டிய அளவு கொண்டவர்களை இவர்கள் பெண்களாக ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் போலும்.

சில வருடங்களுக்கு முன்பு ஒரு பெண்ணின் கவர்ச்சியான உடலமைப்பு என்பது ‘36-24-36’ அளவுகளில் இருக்க வேண்டும் என்று சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் உடற்கல்வி பாடத்திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விஷயம்  பெரிய சர்ச்சையைக் கிளப்பியது. இதற்கு மகளிர் அமைப்புகள் சார்பில் கடும் கண்டனமும் தெரிவிக்கப்பட்டு, அந்தப் பாடப்பகுதி திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் 12ஆம் வகுப்பு உடற்கல்வி பாடத்தை டாக்டர் வி.கே. சர்மா எழுதியுள்ளார். அதில் அவர் குறிப்பிடுகையில், ‘கவர்ச்சியான பெண்களின் உடல் அமைப்பு என்பது ‘36-24-36’ என்ற அளவுகளில் இருக்க வேண்டும். இடைமெலிந்து இருக்கும் பெண்கள் தாம் கட்டுடல் கொண்ட, அழகானவர்கள். உலக அழகி, பிரபஞ்ச அழகிப்போட்டியில் ‘ஹவர் கிளாஸ்’ எனப்படும் இடைமெலிந்து, மார்பும் இடுப்புக்குக் கீழ்பகுதி பெரிதாகத் தோற்றமளிக்கும் பெண்கள்தாம் வெற்றி பெறுகிறார்கள்’ என்று எழுதியுள்ளார். 

அதேபோல ஆண்கள் குறித்துக் கூறுகையில், ஆங்கிலத்தில் V போன்று தோற்றமளித்தால் அது கட்டுடல் என்று கூறியுள்ளார். மகளிர் அமைப்புகளால் கடும் கண்டனத்திற்கு உள்ளான இந்தக் கருத்து பின்னர் நீக்கம் செய்யப்பட்டது.

பெண் எப்போதுமே ஆண்களின் கண்களுக்கு அழகாக விருந்து படைத்துக்கொண்டே இருக்க வேண்டுமா என்ன? இல்லை, அளவுகளில் மாற்றங்கள் இருந்தால் இந்த உலகம் அழிந்துதான் போய்விடுமா? சாமுத்திரிகா லட்சணம் என்ற பெயரில் முழுக்க முழுக்கப் பெண்ணின் உச்சி முதல் பாதம் வரை அளவுகள் எழுதிய ஆணின் கை விரல்களை முறித்துப் போட்டால் தான் என்ன?

ஆதி காலத்தில் பெண் வளமையின் குறியீடாகக் கருதப்பட்டாள். ஆதிச்சநல்லூரில் கிடைத்த தாழியின் மேல் பகுதியில் காணப்படும் பெண் உருவத்தை, கொற்றவை என்றே ஆய்வாளர்கள் குறிக்கின்றனர். மான், மயில் இவற்றைத் தனது இரு பக்கங்களிலும் இப்பெண் தெய்வம் கொண்டுள்ளது. மேலும், கொற்றவையைக் குறிக்க அகன்ற வயிறும் பருத்த புட்டங்களும் பெரிய மார்பகங்களும் கொண்ட தாய் தெய்வங்கள் அனைத்தும் கொற்றவையைச் சுட்டுவதாகவே அமைந்திருக்கின்றன. அப்போதைய சித்திர வடிவங்கள்கூடத் தொடை பெருத்த, இடை பெருத்த பெண்ணைத்தான் தெய்வமாகக் குறிக்கின்றன. இந்தக் குறுக்கல் அளவு எப்போது வந்து ஒட்டிக் கொண்டது? பெண்ணின் தலைமையில்  இயங்கிய மனித இனம் எப்போது ஆணின் கட்டுப்பாட்டிற்குள் வந்ததோ அப்போதே பெண் வெறும் போகப் பொருளாகக் கருதப்பட்டாள். அவளது அதிகாரத்தையும் பொதுவெளிப் புழக்கத்தையும் சுருக்கியவர்கள் அவளது உருவத்தையும் சுருக்கத் தொடங்கினார்கள்.

திரைப்படங்களில் நகைச்சுவை என்ற பெயரில் பருமனான உடல்வாகு கொண்ட பெண்கள் அசிங்கமாக உருவக்கேலி செய்யப்படுகிறார்கள். இதை யாரும் கேள்வி கேட்பதில்லை. மாறாகச் சிரித்து இன்னும் அவர்களை அவமானப்படுத்துகிறார்கள். ஆண்களைவிடப் பெண்களே அதிக அளவில் உடல்ரீதியான கேலிக்கு உள்ளாகிறார்கள். ஆண்களைக் கவரும் விதத்தில் உடலை வைத்துக்கொள்ள அவர்கள் நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள். அதுவும் அவர்கள் குடும்பத்தாராலேயே நிகழ்கிறது.

எந்நேரமும் உடல் எடை, வடிவம் குறித்த சிந்தனையிலேயே உழல நேரிடுகிறது. இதைத் தங்களுக்குச் சாதகமாக்கிக் கொண்ட சில கார்ப்பரேட் நிறுவனங்கள் உடல் எடையைக் குறைக்க புரோட்டீன் பவுடர், சப்ளிமெண்டரி மாத்திரைகள் என்ற பெயரில் ஏதோ ஒன்றைத் தலையில் கட்டி, உடற்பயிற்சி இல்லை, உணவுக் கட்டுப்பாடு இல்லை என்று கவர்ச்சிகரமான விளம்பரங்களைச் செய்து, கொள்ளை லாபம் பார்த்துக்கொண்டு இருக்கிறது. முதலில் எடை குறைவது போல் தோன்றினாலும் அதனுடைய பக்க விளைவுகள் பின்னர் தான் மெல்ல மெல்லத் தலை தூக்குகின்றன. இந்த நிறுவனங்களின் விளம்பரங்களை நம்பி ஏமாந்து செல்லும் மக்கள் தான் அதிகம்.

சில வருடங்களுக்கு முன்பு ஆர்த்தி அகர்வால் என்ற நடிகை உடல் எடைக்குறைப்பு செய்ய இது போன்ற ஒரு நிறுவனத்தை அணுகி, அவர்கள் தந்த மருந்தினால் ஏற்பட்ட ஒவ்வாமையால் உயிரை இழந்தார். சில மாதங்களுக்கு முன்பு உடல் எடை அதிகம் என்று சக நண்பர்களால் கிண்டல் செய்யப்பட்ட பள்ளி மாணவி ஒருவர் தற்கொலை செய்த சம்பவமும் நிகழ்ந்துள்ளது. பள்ளிப் பருவத்தில் இருந்தே உடல் அழகுக்குக் கொடுத்த தேவையற்ற முக்கியத்துவம்தான் இந்த நிலைக்குக்  கொண்டு வந்திருக்கிறது. பெண்கள் இந்த இந்த அளவுகளில் இருக்க வேண்டும் என்ற அளவீடுகள் தாமே இத்தகைய உயிரிழப்புகளுக்கு முக்கியக் காரணம்?    

உடல் எடை கூடிவிடும் என்ற அச்சத்தால் நிறையப் பெண்கள் சத்தான உணவுகளைத் தவிர்க்கிறார்கள். பெண்கள் ஆரோக்கியமாக இருக்கும் பட்சத்தில் உடல் வடிவம் குறித்துக் கவலைப்படத் தேவையில்லை.

1959ஆம் ஆண்டு ரூத் ஆண்ட்லர் தனது பெண்குழந்தை பார்பரா சிறிய அளவிலான பொம்மையை உருவாக்கி நண்பர்களோடு சேர்ந்து விளையாடுவதைக் கவனித்தார். அது போலொரு பொம்மையை உருவாக்க எண்ணியவர், ஒரு‌ கண்காட்சியில் பில்ட் லிலி என்ற பொம்மையைப் பார்த்து, இப்போதைய பார்பி பொம்மையை வடிவமைத்தார். 

அமெரிக்கப் பெண்களிடையே பார்பி ஏற்படுத்திய தாக்கம் அதிகமாக இருக்கிறது. பார்பியின் உயரம் 5.9 அடி, மார்பு 36 அங்குலம், இடை 18, இடுப்பு 33. எடை 49.90 கிலோ. 5.9 அடி உயரம் கொண்ட பெண்ணுக்கு இருக்க வேண்டிய குறைந்தபட்ச எடை 55 கிலோ. 18 அங்குல இடுப்பு என்பது சாத்தியமே இல்லாத ஒன்று. அதுவும் 5.9 அடி உயரம் கொண்ட பெண்ணுக்கு இடுப்பு அப்படி இருந்தால் அந்தப் பெண்ணுக்கு வயிற்றுப் பகுதியில் இருக்க வேண்டிய உள் உறுப்புகளுக்குப் போதிய இடம் இருக்காது. உடலைத் தாங்கும் திறன், மிக மெல்லிய கால்களுக்கு இருக்காது. இத்தகைய உடலையும் கால்களையும் கொண்ட பெண் பிராணிகளைப் போல நான்கு கால்களில்தாம் நடமாட முடியும். கால்களால் மட்டும் நடந்தால் இடுப்பு வலிதான் மிஞ்சும்.

பெண் எப்போதும் அலங்கரித்துக் கொண்டு ‘சிக்கென்று’ இடையோடு இருக்க வேண்டும் என்று குழந்தையாக இருக்கும்போதே பெண்களின் மூளைக்குள் திணிக்கப்படுகிறது. ஆண் குழந்தைகளுக்கு கார், பில்டிங் மெட்டீரியல் பொம்மைகளைப் பரிசளிக்கும் நம் நாட்டில் தானே பெண் குழந்தைகளுக்குச் சொப்புச் சாமான்கள், கிச்சன் செட்டப் என்று பரிசளிக்கிறோம்? விளையாட்டுப் பொருட்களில்கூடப் பாலினப் பாகுபாடு நிறைந்து இருப்பது வேதனையான ஒன்று.

இந்தப் பார்பி மோகம் எந்தளவுக்கு மேற்கத்தியப் பெண்களைப் பிடித்து ஆட்டுகிறது என்பதற்குச் சிறந்த உதாரணம் மார்ட்டினா பிக்.

 இந்தப் பெண் கவர்சிகரமான பார்பி டால் போல தனது உருவத்தை மாற்றிக்கொள்ள இதுவரை 50,000 டாலர்கள் செலவழித்துள்ளார். இன்னும் அதிக செலவு செய்து, அதிக சர்ஜரிகள் செய்து, தனது உடலமைப்பை மாற்றிக்கொள்ள விரும்புகிறார். மேலும், தனது சரும நிறத்தை மாற்றி அமைத்துக்கொள்ள மூன்று முறை மெலனின் பூஸ்டிங் ஊசிகள் எடுத்துக்கொண்டிருக்கிறார் மார்டினா பிக். இதன் மூலம் வெள்ளையாக இருந்த இவரது நிறம் இப்போது சாக்லேட் நிறத்தில் மாறியுள்ளது. இந்தக் கருமைக்கு கான்ட்ராஸ்டாக வெள்ளைத் தலைமுடியுடன் அவரது முந்தைய பொலிவை இழந்து காட்சியளிக்கிறார். இத்தனை அறுவை சிகிச்சைகளுக்குப் பிறகு அதன் பக்கவிளைவுகளை அவர்தானே எதிர்கொண்டாக வேண்டும்? அவரது எதிர்காலம் கேள்விக்குறியாக மாறுவது குறித்து அவர் தெரிந்துகொள்ளவேயில்லை.

இப்படியெல்லாம் சிரமப்பட்டு தனது உருவத்தை மாற்றிக் கொண்டு வாழ வேண்டுமா? அது எத்தனை நாளைக்கு உபயோகப்படும்? வயது முதிர்வு என்பது தள்ளிப் போட முடியாத ஒன்று. உடலழகைவிட மன அழகு தான் முக்கியம். அதுதான் நம் இறுதிவரை தொடர்ந்து வரும். நம்மை முதலில் நாம் ரசிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். நம் வாழ்க்கையை நாம்தான் வாழ வேண்டும். இருக்கும் ஒரு வாழ்வை இந்த மாதிரி அற்ப பிரச்னைகளுக்காக வீண் செய்யக்கூடாது. நமக்குப் பிடித்த கலைகளைக் கற்று நம் சிந்தனையை மடைமாற்றம் செய்ய வேண்டும். உருவம் எப்படி இருந்தாலும் உள்ளத்தை அழகாக வைத்துக்கொள்ள வேண்டும். அது நல்ல சிந்தனைகளால் மட்டுமே முடியும். ஆரோக்கியத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து உடலை பேணிக் காக்க வேண்டும்.

அழகு என்பது முகத்தில் இல்லை. அகத்தில் என்பதை மனதில் பதிய வைத்துக்கொள்ள வேண்டும். குழந்தைகளுக்கும் பதிக்க வேண்டும். அப்போதுதான் மனிதம் மிகுந்த சமூகம் மலரும்.

(தொடரும்)

படைப்பாளர்:

கனலி என்ற சுப்பு

‘தேஜஸ்’ என்ற பெயரில் பிரதிலிபி தளத்தில் கதைகள் எழுதி வருகிறார். சர்ச்சைக்குரிய கருத்துகளை எழுதவே கனலி என்ற புனைபெயரில் எழுதத் தொடங்கியிருக்கிறார்.