ஆறுமுக நாவலர் வழி வந்த சேர். பொன்னம்பலம் இராமநாதன் தமிழ் கலாச்சாரத்தையும் சைவத்தையும் பேணிக் காத்தவராக போற்றப்பட்டவர்.

ஆனால் சைவ மறுமலர்ச்சி கண்ட தமிழர் சமூகத்தில், குறிப்பாக இலங்கையின் வடக்கு பகுதிகளில், யாழ் சைவ வேளாள உயர் குழாமின் கைகள் ஓங்கியிருந்தன. அத்துடன் அக்காலத்தில் இலங்கையில் தமிழர் புராதன வழிபாடு மறைந்து, வைதீக மத வருணாசிரம கோட்பாடு செல்வாக்கு செலுத்தியமை குறிப்பிடத்தக்கது.
இன ரீதியாக பிரதிநிதித்துவம் ஒழிக்கப்பட்டு, பிரதேசவாரி பிரதிநிதித்துவம் சட்டநிருபண சபைக்கு 1931 டொனமூர் சீர்திருத்ததில் அறிமுகப்படுத்தப்பட்டபோது, இராமநாதன் இன அடிப்படையிலான பிரதிநிதித்துவ முறையை கோரி வாதாடினார். ஏனெனில் தமிழர் போன்ற சிறுபான்மை இனத்தவரின் அரசியல் பிரதிநிதித்துவம் இச்சீர்திருத்தத்தால் பாதிக்கப்படுவதை உணர்ந்து வாதிட்டது சரியான நகர்வு எனினும், சர்வஜன வாக்குரிமை எதிர்ப்பதற்கு அது மட்டுமே நியாயமான காரணம் கிடையாது.
பெண்கள் அரசியல் ஈடுபாடற்றவர்கள், வீட்டை கவனிக்க மாட்டார்கள் என்ற ஆணாதிக்க சிந்தனையும் சொத்தும் கல்வியுரிமையும் கொண்ட உயர் வகுப்பினரின் கைகளில் அதிகாரத்தை தக்க வைக்கும் நோக்குமே ஆகும்.
சொத்துடையவர்க்கு மட்டுமே நாட்டுப்பற்று உண்டு எனவும் கல்வியறிவு அற்றவர்கள் தவறான முறையில் வாக்குரிமையை பயன்படுத்துவர் என்றும் இராமநாதன் உட்பட ஏனைய பிரதான அரசியல் தலைவர்கள் வாதிட்டனர். ஆனால் தொழிற்சங்கவாதியான ஏ.இ. குணசிங்கா சர்வஜன வாக்குரிமையை ஆதரித்தார். கலாநிதி முருகர் குணசிங்கத்தின் ‘இலங்கையில் தமிழர் ஒரு முழுமையான வரலாறு கி.மு. 300 – கி.பி.2000′ மற்றும் யோதிலிங்கத்தின் ‘இலங்கையின் அரசியல் யாப்புக்கள்’ ஆகியவற்றில் இந்நிகழ்வுகள் தொடர்பான வாதப் பிரதிவாதங்கள் விவரிக்கப்பட்டுள்ளன. ஆனால் இந்நூல்களில் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்படக்கூடாது என்ற பிரச்சாரத்தை சூழ்ந்த ஆணாதிக்க கருத்தியல் கொண்ட சம்பவங்களும் கூற்றுக்களும் மிகக் குறைவாகவும் முக்கிய விடயங்கள் விடுபட்டும் பதிவாகியுள்ளன.

குறிப்பாக கலாநிதி குணசிங்கத்தின் 675 பக்க ஆய்வு நூலில், அந்நிகழ்வுகள் பெரியளவில் சுட்டிக் காட்டப்படவில்லை என்பது நமது அவதானிப்பு.பெண்களின் உரிமைப் போராட்டங்கள், பெண்ணியக்க வரலாறுகள், பெண் கல்வி, அதன் சமூகப் பார்வை, ஆண் நோக்கிலும் ஆண் குரல்களிலும் எழுதப்பட்ட நூல்களில் மறைக்கப்பட்டதோ விடுபட்டதோ ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

வாக்குரிமை சங்கத்தின் மனு டொனமூர் ஆணைக்குழுவிற்கு சமர்ப்பிக்கப்பட்ட போது, ஆண்கள் அதனை எள்ளி நகையாடியதாக ஒரு குறிப்பு, குறமகளின் ‘யாழ்ப்பாண சமூகத்தில் பெண் கல்வி – ஓர் ஆய்வு’ என்ற நூலில் பதிவாகி உள்ளது. பெண்கள் வாக்குரிமை சங்கத்தினரின் செயல்வாதத்துக்கு எதிராக ‘இந்து சாதனம்’ என்ற பத்திரிகையில் அதன் ஆசிரியர் தலையங்கத்தில் ‘…கொழும்பிலே உள்ள ஆண் தன்மை பூண்ட தன்னிஷ்ட பெண் ஜன்மங்கள் சிலர் கேள்விக்கிசைந்தே விசாரணைக்காக சபையாரும் பெண் என்றால் பேயும் இரங்கும் என்ற பழமொழிப்படி உடன்பட்டுவிட்டார்கள். இத்திருத்தம் எங்கள் சாதி, சமயம், தேசம், பழக்கவழக்கம், கொள்கைகள் என சொல்லப்படுவன எல்லாவற்றிற்கும் முழுமாறானதாகும்… மேலும் பறங்கியர், ஒல்லாந்தர் முதலாம் அந்நிய சமயத்தினர் இந்த இலங்கையை பரிபாலித்த போது சமய நிஷ்டுரம் செய்தனரேயன்றி இந்த விதமாக எங்கள் சாதிக்கட்டுபாட்டை அழித்து, இங்குள்ள பெண்களை பொது கருமங்களில் பிரவேசிக்க செய்து பொது மகளிர் ஆக்கி விடவில்லை…’ என 08.11.1928 பதிப்பில் வெளியாகி உள்ளது.
மனோன்மணி பற்குணம் அவர்கள் ‘பெண்களும் அபிவிருத்தியும் அனுபவங்களும் பிரச்சினைகளும்’ என்ற கட்டுரையில் இது பற்றி குறிப்பிட்டுள்ளார். குடும்ப விடயங்கள் தவிர்த்து அரசியல் விடயங்களில் ஈடுபடும் பெண்களை ‘பொது மகளிர்’ என்று விளித்தனர். இக்கட்டுரை ‘இலங்கையில் தமிழ் பேசும் பெண்கள் – சமூகமும் பண்பாடும்’ என்ற ஆய்வரங்க 1999 தொகுப்பில் இடம் பெற்றுள்ளது. அக்கால பத்திரிகைகளும் பரவலாக இதே எண்ணங்களைக் கொண்ட கருத்துக்களை பிரதிபலித்தன.

இந்து சாதனத்தின் மேற்கூறிய பிரசாரத்திற்கு பதிலாக மங்களம்மாள் எனும் பத்திரிகையாளர், இந்து சாதன ஆங்கில பதிப்பில் கடிதம் வாயிலாக ‘இப்போது நிலவும் அசமத்துவ நிலை நீக்கப்பட்டு இலங்கைப் பெண்கள் ஆண்களுடன் சமத்துவமான அரசியல் உரிமைகளை பெற வேண்டும்’ என எழுதியிருந்தார். மேலும் ‘பெண்களுக்கு விவாகம் ஒன்றே முடிந்த முடிவு எனக் கருதக்கூடாது. பெண்கள் கன்னிகளாக இருந்து கடவுள் பணியோ அல்லது சமூக சேவையோ செய்ய முடியும்’ எனவும் பகிரங்கமாக வாதிட்டு எழுதியது, இலங்கை தமிழ்ப் பெண்களின் பெண்ணிலை வாதச் செயற்பாடுகளுக்கு சிறந்த சான்றாகும்.
மங்களம்மாள் மாசிலாமணி 1902 இல் பெண்கள் சேவா சங்கம் எனும் அமைப்பை யாழ் வண்ணார் பண்ணையில் தொடங்கியதோடு ‘தமிழ் மகள்’ என்ற சஞ்சிகையை நடத்தி வந்தார். இவரது பெண்ணிலைவாத செயற்பாடுகளை, சமூக சேவைகளை பேசுவது என்றால் தனியாக ஒரு கட்டுரையில் உரையாடும் அளவிற்கு அவரது செயற்பாடுகள் அக்கால கட்டத்தில் அளப்பரியது.
இலங்கையின் முதல் பெண் பத்திரிகையாளர் என்ற பெருமையும் இவரையே சாரும். 40 வருடங்களாக தமிழ் மகள் சஞ்சிகை நடாத்தி வந்தார் மங்களம்மாள். ‘பெண் சமத்துவம், தீண்டாமை, சீதனக் கொடுமை, கன்னிப் பெண்களின் சமூகத் தொண்டு ஆகிய தலைப்புகளில் கட்டுரைகள், இந்தியச் செய்திகள் அடங்கலாக கட்டுரைகள் மற்றும் இலங்கையின் அன்றாட அரசியல் சமூக பிரச்சனை பற்றி கருத்துகளை அப்பத்திரிகை தாங்கி வந்தது’ என குறமகள் எனும் புனைபெயர் கொண்ட வள்ளிநாயகி இராமலிங்கம் தனது ஆய்வு நூலில் (2006 பதிப்பு) பதிவு பண்ணியுள்ளார்.

மங்களம்மாவை போன்ற ஒரு எழுத்தாளராக, மீனாட்சியம்மாள், மலையக மக்களுக்கான சேவைகளில் தன்னை அர்ப்பணித்தவர். அவரின் கணவரின் பத்திரிகையான ‘தேச பக்தனி’ல் தொடர்ச்சியாக எழுதி வந்தவர். பொன்னம்பலம் இராமநாதனின் பெண்களுக்கு வாக்குரிமை வழங்க வேண்டியதில்லை என்ற கருத்தை கண்டனம் செய்து எழுதிய பதிவு, தேச பக்தனில் 1928 இல் வெளியாகி இருந்தது. மீனாட்சியம்மாளின் சாதனைகளும் தனியாக பேசப்பட்ட வேண்டியவையே.
யாழ்ப்பாணத்திலிருந்து மங்களாம்மாள் பழைமைவாத கலாச்சார பாதுகாவலர்களுக்கு எதிராக எழுப்பிய குரல், மலையக மக்களை விழிப்படையச் செய்வதில் மீனாட்சியம்மாள் உரிமைக்காக ஓங்கியெழும்பிய கோஷம், கொழும்பில் அடிமைத்தனத்துக்கு எதிராக அயராது பணிபுரிந்த நல்லம்மா சத்தியவாகீஸ்வர ஐயரின் எழுச்சிப் பணிகள் என சமுதாய மாற்றத்துக்கு முன்னோடிகளாய் இப்பெண்கள் இருந்தனர்.
இவர்களோடு நேசம் சரவணமுத்து, திருமதி பி. ஆர். தம்பிமுத்து, அன்னம்மா முத்தையா போன்றோர் இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் பெண்களின் அரசியல் உரிமைகளுக்காக போராடிய முக்கிய ஆளுமைகளில் சிலர். 1932, 1936 ஆம் ஆண்டுகளில் இலங்கை அரசாங்க சபைக்கு இடம்பெற்ற தேர்தல்களில் கொழும்பு வடக்குத் தொகுதியில் போட்டியிட்டு தெரிவு செய்யப்பட்ட முதலாவது தமிழ்ப் பெண் என்ற பெருமைக்குரியவர் நேசம் சரவணமுத்து.

இம்முக்கிய வரலாற்று நிகழ்வுகளை தொடர்ந்து பல பெண் அமைப்புக்கள் பெண்விடுதலை கருத்துக்களை முன் வைத்து போரட தொடங்கினர். 1944இல் அகில இலங்கை பெண்கள் சம்மேளனம் எனும் மத்தியதர வர்க்கப் பெண்கள், அரசியல் மற்றும் சட்ட உரிமைகளை கோரி பல கூட்டங்களை நடத்தியதாக ஔவை விக்னேஸ்வரன், ‘பெண்கள் அமைப்பாதல்’ என்ற கட்டுரையில் பதிவு செய்துள்ளார். 1923 இல் நடைபெற்ற பொது வேலை நிறுத்தத்தில், பெண் தொழிலாளர்கள் பங்கு பற்றியிருந்தனர். 1948இல் ஐக்கிய பெண்கள் முன்னணி என்ற இடது சாரிய பெண்கள் அமைப்பு, சோஷலிசத்தை அடிப்படையாக கொண்டும் பாலின பாரபட்சங்களை இல்லாதொழிக்கும் இலக்கோடு உருவானது.

பெண்ணிய ஆய்வாளர் குமாரி ஜயவர்தனவின் பல நூல்களில் மேற் கூறிய பெண் ஆளுமைகள் பற்றிய குறிப்புகள் காணக்கூடியதாக உள்ளன. 19ஆம் நூற்றாண்டில் ஆணாதிக்க சிந்தனை கட்டமைப்புகளுக்கு எதிராக பல்வேறு பெண் கவிஞர்களும் பெண் எழுத்தாளர்களும் விவாதிக்கத் தொடங்கியதாகவும் இவர் கூறியுள்ளார்.
இவ்வாறான பெண்களின் மறைக்கப்பட்ட வரலாற்றை மீளக் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஒரு பகுதியாக கிழக்கு பல்கலைக்கழகத்தில் தமிழில் பெண்கள் இலக்கியம் என்ற பாடநெறி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக மட்டத்தில் இங்கு மாத்திரமே இப்பாடநெறி உண்டு (தற்போதும் உள்ளதா என்று உறுதிப்படுத்த வேண்டிய உள்ளது). இதற்குக் காரணமாக இருந்தவர் எழுத்தாளர், கவிஞர், மொழி பெயர்ப்பாளர், பேராசிரியர், சோஷலிச பெண்ணியவாதி என பன்முக திறன்களை தன்னகத்தே கொண்ட சித்ரலேகா மௌனகுரு அவர்கள்.

1970களில் இலங்கை பெண்ணியலாளர்கள் ஆசியா, ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு, ஐரோப்பா, லத்தீன் அமெரிக்கா போன்ற தேசங்களிலிருந்த பெண்ணிய ஆளுமைகளோடு தொடர்புகளைக் கொண்டிருந்தனர். எகிப்திய பெண்ணியலாளர் நவல் சாடாவி (Nawal El Saadawi) இலங்கைக்கு விஜயம் செய்ததை நினைவு கூறுகிறார் குமாரி ஐயவர்த்தன.
பெண்ணியம் என்ற கருத்தியல் மேற்குலக நாடுகளால் மூன்றாம் உலக நாடுகள் என அழைக்கப்படும் தேசங்களில் திணிக்கப்பட்ட ஒன்றாக நாம் கற்பனை பண்ணுவது மிகவும் தவறான சிந்தனை எனவும் ஒவ்வொரு நாடுகளும் தமக்கான தனித்துவமான பெண்ணிய வரலாற்றை கொண்டவை என குமாரி தனது எழுத்துக்களில் விவரித்துள்ளார். இந்த உண்மை, மேற்கூறிய தகவல்கள், மேற்கோள்கள் மூலம் இலகுவில் பகுத்தறிந்து அறியக்கூடியதாக உள்ளது.
உசாத்துணைகள்:
- மூன்றாம் உலக நாடுகளில் தேசியமும் பெண்ணியமும் – குமாரி ஜயவர்தன
- இலங்கை தேசிய ஆவண காப்பகம் – டொனமூர் ஆணைக்குழு மக்கள் பேரவைக் கூட்ட சாட்சியம் 1931.
- இலங்கையில் தமிழ் பேசும் பெண்கள் – ஆய்வரங்க கட்டுரைகள் 1999
- இலங்கையில் தமிழர் ஒரு முழுமையான வரலாறு – கலாநிதி முருகர் குணசிங்கம்
- இலங்கையின் அரசியல் யாப்புக்கள் – யோதிலிங்கம்
- யாழ்ப்பாண சமூகத்தில் பெண் கல்வி ஒரு ஆய்வு – வள்ளிநாயகி இராமலிங்கம்
- பெண்நிலைச் சிந்தனைகள் – சித்ரலேகா மௌனகுரு
- https://globaltamilnews.net/2022/175621/ தமிழ் கற்கை துறை கிழக்கு பல்கலைக்கழகம்
- www.noolagam.org
படைப்பாளர்
அஞ்சனா

பத்திரிகைத் துறையில் பட்டயப் படிப்பு முடித்து ஊடகவியலாளராக இலங்கையிலும், இங்கிலாந்து சட்டத் துறையிலும் பணியாற்றியுள்ளார். தற்போது கணக்கியல் துறையில் பணியாற்றிவரும் இவர், MSc. Public Policy பயின்று வருகிறார். லண்டனில் புத்தக விமர்சனங்கள் மற்றும் பெண்ணிய செயற்பாடுகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார்.