Her Stories & ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் ஒருங்கிணைந்து நடத்திய ஹெப்சிபா ஜேசுதாசன் நூற்றாண்டு கருத்தரங்கம், 12.04.2025 அன்று நடைபெற்றது.

அதில் பலர் கலந்துகொண்டு பேசினர்.
ஹெப்சிபா ஜேசுதாசன் பற்றி ஒரு அழகான முன்னுரையை பேராசிரியர் பிரேமா வழங்கினார். அவர் எழுதிய நான்கு நாவல்களைப் பற்றிய மிகச் சுருக்கமாகக் கூறினார். மேலும் இலக்கிய வரலாறு திருத்தப்பட வேண்டும்; புதிய இலக்கிய வரலாறு எழுதபட வேண்டும் என்று ஆணித்தரமாகக் கூறினார்.
பெரும்பாலும் தமிழ் இலக்கியத்தில் பெண் எழுத்தாளர்களை மெதுவாகத் தான் தெரிந்து கொள்கிறோம் அதில் ஹெப்சிபாவும் ஒருவர். இந்த நூற்றாண்டில் மூன்று பெண் எழுத்தாளராகளுக்கு நூற்றாண்டு விழா கொண்டாடப்படவேண்டும். அவர்கள் – ராஜம் கிருஷ்ணன், லட்சுமி கிருஷ்ணமூர்த்தி, மற்றும் ஹெப்சிபா.
ஹெப்சிபா பிறந்தது நாகர்கோவிலில் உள்ள புலிப்பனம் கிராமத்தில். ஏழு வயதில், அவரின் ஆசிரியர் அவர் படிப்பதற்கு லாயிக்கில்லை என்று கூறுகிறார். பர்மாவிற்குச் செல்கிறார்கள். பர்மாவில் ஆங்கில கல்வி பயின்றுள்ளார். பதினான்கு வயதில் மீண்டும் நாகர்கோவிலுக்கு வருகிறார். இளங்கலை, முதுகலைப் பட்டம் முடிக்கிறார். ஆங்கிலத்தில் ஹானர்ஸ் பட்டம் பெற்றார். அவரின் தங்கை பொருளாதாரத்தில் பட்டம் பெற்றுள்ளார். அவர்கள் குடும்பத்தில் எல்லோரும் கல்வி கற்றவர்களாக இருந்திருக்கிறார்கள். மத வழியில் பயணிக்கும் குடும்பம். ஹெப்சிபா கவிதைகள் எழுதத் தொடங்கினார்.
ஹெப்சிபாவின் கணவர் தமிழ்ப் பேராசிரியர், அவர் பெயர் ஜேசுதாசன். எளிமையான குடும்பத்தைச் சார்ந்தவர். காதல் திருமணம் செய்துள்ளனர். இரண்டு பேரும் இணைந்து இலக்கிய ஆய்வு நூல்களைப் படைத்துள்ளனர். இரண்டு ஆங்கிலக் கவிதை நூல்களை ஹெப்சிபா படைத்துள்ளார். sky light மற்றும் early sheaf அவர் படைத்த கவிதைத் தொகுப்புகள் ஆகும்.
திருவிதாங்கூர் ராணிக்கு ஆங்கிலம் கற்றுக் கொடுத்துள்ளார். குயில் பாட்டை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து உள்ளார்
இது தவிர, ஹெப்சிபா நான்கு நாவல்களை படைத்துள்ளார். இந்த நான்கு நாவல்களும்
1. புத்தம் வீடு
2. டாக்டர் செல்லப்பா
3. அனாதை
4. மானீ
ஆகும். இது தவிர ஆங்கிலத்தில் History of Tamil Literature மற்றும் Count down from Solomon:Tamils through the Ages என்ற ஆய்வு நூல்களைப் படைத்துள்ளார்.
அடுத்து ஹெப்சிபா பெரியம்மா நினைவலைகள் என்ற தலைப்பில் மரு. ஜே. தங்கா பேசினார்.
ஹெப்சிபா அறம் சார்ந்து, அன்பு சார்ந்து வாழ்ந்தவர். யாரையும் கடுஞ்சொல் கூறியது கிடையாது. எளிமையான வாழ்க்கை வாழ்ந்தவர். கணவர் மேல் அதீத காதல் வைத்திருந்தார். கணவரும் ஹெப்சிபா மீது அளவுகடந்த அன்பு வைத்திருந்தார்.
முதலாவதாக ஹெப்சிபாவின் முதல் நாவலான புத்தம் வீடு என்பதைப் பற்றி முனைவர் சுடர் விழி தன் கருத்துரைகளை வழங்கினர்.
புத்தம் வீடு 1964ல் எழுதப்பட்டது. நாவலின் முன்னுரையை அம்பை, பனைமரமே பனைமரமே என்ற பாடலை எழுதித் தொடங்குகிறார். பனைமரத்தின் மூலம் மனிதர்களுக்கு கிடைக்கும் பயன்களை பனைமரம் கூறுகிறது; உங்களுக்கு நான் வீடு கட்ட பட்டியல் தருகிறேன், வீட்டிற்கு கூரையாக இருக்கிறேன். பனங்கிழங்கு, பதநீர், கருப்பட்டி, என்று அடுக்கடுக்காக பனை மரம் மக்களுக்கு தான் என்ன வகையில் பயன்படுகிறேன் என்பதை பனை கதை கூறுவதுபோல் ஆரம்பம் ஆனது அவரின் உரை.
இப்படியான பனை மரங்கள் நிறைந்த பனைவிளை… அதற்கு அடுத்து தான் புத்தம் வீடு காட்சி வருகிறது. அது புத்தம் வீடு இல்லை அது ஒரு ‘இத்துப் போன வீடு’. சாதிப் பெருமையை தாங்கிக் கொண்டு வெற்றுப் பெருமையை பேசிக் கொண்டு நிற்கும் ஒரு பழமையான வீடு.
பனை என்பது பொருளாதாரம் சார்ந்த ஒன்று. நாடார்களில் உட்சாதியில் இரண்டு பிரிவுகள் உள்ளன. 1. பனை வைத்திருக்கும் நாடார். 2. பனையேறி நாடார். இரண்டு பேரும் கிறிஸ்தவ மதத்தைச் சார்ந்தவர்கள்தான். ஆனால் அவர்கள் இருவருக்கும் உள்ளே பெண் எடுத்தல், கொடுத்தல் கிடையாது.
பனை வைத்திருப்பவருக்கும் பனையேறிக்கும் இடையை நடைபெறும் சிக்கல்களை இந்த நாவல் பேசுகிறது. இந்த நாவலில் உள்ள முக்கிய கதாபாத்திரங்கள் லிசி, தங்கராஜ், கண்ணப்பச்சி.
‘ஏய்’ என்று அதட்டி கூப்பிடும் தாத்தாவின் கூரலுக்கு ஓடி வருபவள் தான் லிசி.
லிசி பனை வைத்திருக்கும் நாடார் வகுப்பைச் சார்ந்தவள்.
தங்கராஜ் பனையேறி நாடார் வகுப்பைச் சார்ந்தவர். இரண்டு பேரும் இரண்டாம் வகுப்பு படிக்கும் போது ஒன்றாக படித்து உள்ளார்கள்.
அதற்கு பிறகு பல ஆண்டுகள் கழித்து பனையேரும் பருவம் லிசி வீட்டுக்கு பனையேற தன் தந்தையுடன் தங்கராஜ் வருகிறான். அப்பொழுது ஒரு சிறு புன்முறுவல் செய்கிறாள் லிசி. அதற்கு தாத்தாவிடம் திட்டு வாங்கி வீட்டிற்குள் செல்கிறாள்.
தங்கராஜுக்கு அவள் மேல் காதல். ஆனால் எப்படிப் பேசுவது? ஒரு நாள் பனை மரத்து நிழலில் வைத்து லிசியிடம் ‘உனக்குக் கீரை விதை வேண்டுமா?’ என்று கேட்கிறான். அவ்வளவு தான் அவர்கள் இருவருக்கும் இடையே நடந்த உரையாடல். அதை அவள் தங்கை லில்லி பார்த்து வீட்டில் சொல்ல, லிசிக்கு மாப்பிள்ளை பார்க்கிறார்கள். இந்த நேரத்தில் தாத்தா உடல் நிலை சரியில்லாமல் படுத்துக் கிடக்க, தாத்தாவைப் பார்க்க வந்த மருத்துவருக்கு பெண்ணைப் பிடித்துவிட்டது. எந்தப் பெண் என்றால் லிசியின் தங்கை லில்லியை பிடித்து விட்டது. இதனால் லிசியின் அப்பாவிற்கும் சித்தப்பாவிற்கும் சண்டை.
லில்லிக்கு வயது 14 தான். ஆனால் அவளிடம் உனக்குத் திருமணத்திற்கு சம்மதமா என்று யாரும் கேட்கவில்லை.
தங்கராஜ் அந்த ஊர் உபதேசியாரிடம் சென்று, ‘எனக்கு லிசியை பெண் கேட்க வேண்டும்’ என்று கூறுகிறான். பயந்து போன உபதேசியார், அதெல்லாம் வேண்டாம் என்று தங்கராஜிடம் சொல்லிவிட்டு, லிசி வீட்டிற்குச் சென்று போட்டுக் கொடுக்கிறார்.
மருத்துவருக்கு அவள் தங்கை லில்லியை கட்டிக் கொடுத்தார்கள். ஆனால் லிசியை தங்கராஜுக்குக் கொடுக்கவில்லை. ஆனால் பல திருப்பங்களுக்குப் பிறகு, தங்கராஜுக்கு லிசியை கட்டிக் கொடுத்தார்கள். தங்கை லில்லியின் கணவரே பனையேறி நாடார் என்ற விசயத்தை மருத்துவரான அவர் சொன்ன பிறகுதான் இந்தத் திருமணம் நடந்தது. சுயசாதிக்குள் நடக்கும் சாதி மறுப்புத் திருமணத்தை மிக நேர்த்தியாக ஹெப்சிபா 1964ல் எழுதியது என்பது மிகவும் முக்கியமான ஒன்று.
இந்த நாவலை அழகாக, நகைச்சுவையாக, பெண்களுக்கு நடந்த ஒடுக்குமுறைகள் பற்றி, நாவலில் உள்ள உவமைகள் பற்றி, சங்க காலத்தில் பயன்படுத்திய சொற்களை ஹெப்சிபா தன் நாவல்களில் கையாண்ட விதத்தை, பயன்படுத்திய இடம் மற்றும் சூழலை மிக நேர்த்தியான கருத்துரையாக முனைவர் சுடர் விழி வழங்கினார்.
இரண்டாவது நாவல் டாக்டர் செல்லப்பா. கருத்துரை வழங்கியவர் முனைவர் ஏ. இராஜலட்சுமி.
1967ல் இந்த நாவல் எழுதப்பட்டது. முதல் நாவாலான புத்தம் வீடு நாவலின் தொடர்ச்சி என்று கூறினார்கள். புத்தம் வீடு நாவலை எழுத நாற்பத்தைந்து நாள்கள் ஆனது. ஆனால் டாக்டர் செல்லப்பா நாவல் எழுத ஒன்றரை வருடங்கள் ஆகியுள்ளது என்று கூறிப்பிட்டார்.
இந்த நாவலில் ஏழைகள் நிறைந்த மருத்துவமனை தான் மையமாக அமைந்துள்ளது. நிலையான குறிக்கோள் இல்லாத மனிதன் தன் இலக்கை அடைய மாட்டான் என்பது இந்த நாவலின் கருவாக அமைந்துள்ளது.
தங்கராஜின் தம்பி டாக்டர் செல்லப்பா.
முதல் தலைமுறையில் ஒருவன் மருத்துவனாகப் படிக்கச் செல்லும் போது பொருளாதார நெருக்கடி, குடும்பம், விடுதி இவைகள் எல்லாம் அந்த மனிதனை எப்படி மன அழுத்தத்திற்கு உள்ளாக்குகின்றன என்பதை விவரிக்கிறது.
டாக்டர் படிப்பு படிக்கும் போதே திருமணம் நடக்கிறது. தந்தை இறக்கிறார். அண்ணன் அண்ணி பேசாமல் போகிறார்கள்; அண்ணன் குழந்தை இறக்கிறது. அவனுக்கு இசை மீது நாட்டம் . இப்படி அவன் கடைசி வரை டாக்டர் ஆகவும் ஆகவில்லை. நல்ல குடும்பஸ்தன் ஆகவும் இல்லை. இலக்கில் உறுதியில்லாமல் தோற்ற ஒரு மனிதனின் கதை இது.
இந்த நாவலை மிகச் சுருக்கமாகவும் தெளிவாகவும் முனைவர் ஏ. இராஜலட்சுமி வழங்கினார்கள். நாவலின் உணர்வுகளை நம் கண் முன்னே உச்சரிப்பு மூலமாகவும் உடல் அசைவுகளின் முகமாகவும் மிக மெதுவாக கதையைக் கூறியது நன்றாக இருந்தது.
மூன்றாவதாக ஹெப்சிபாவின் பனைவிளை – நினைவுகள் – தோழர் ஃபின்ஸி வழங்கினார்.
‘எனக்கு இது முதல் கருத்தரங்கு. நான் இதுவரை ஸ்டேஜ்ல பேசுனது இல்லை. முதல் தடவை பேசுகிறேன். தவறுகள் இருப்பின் மன்னித்து கொள்ளவும்’ என்று கூறிவிட்டு தனது உரையை ஆரம்பித்தார்.
ஹெப்சிபா வீடு ரப்பர் தோட்டத்தில் உள்ளது. அவரது வீடு இப்போது சிதிலம் அடைந்து விட்டது. ரப்பர் வருவதற்கு முன்பு அங்கு முந்திரிக்காடும் பனைவிளையும் இருந்தன. 1800க்கு பிற்பாடு தான் ரப்பர் பரவுகிறது.
ஹெப்சிபா இலக்கியம் சார்ந்து கணவருடன் விவாதம் செய்வார். அவர் எழுதும் போது எப்போதும் அவர் மேஜையில் அவரைச் சுற்றி புத்தகங்கள் இருக்கும். ஊரில் அவர் எழுத்தாளர் என்று பெரும்பாலும் தெரியவில்லை. ரொம்ப அன்பானவர்கள். கிறிஸ்தவ நாடார் வாழ்வியலை மட்டும் எழுதியுள்ளார். புத்தம் வீடு நாவலில் அவர் நாயகி லிசி ஜன்னல் வழியாக இந்த உலகைப் பார்க்கிறார்.
எந்த ஒரு பதட்டமும் இல்லாமல் ஹெப்சிபா எழுதிய ‘பனைவிளை’ கிராமத்தின் அறிமுகத்தைக் கொடுத்தார் தோழர் பின்ஸி.
நான்காவதாக அனாதை நாவலை பேராசிரியர் பிரேமா பேசினார்.
இந்த நாவலின் உள்ள தங்கப்பன் கதாபாத்திரத்திற்கு எல்லா சொந்தமும் இருந்தன. ஆனால் மனதளவில் தான் ஒரு அனாதை என்று நினைத்து வாழும் மனிதனின் கதை.
இந்த நாவலில் உழைக்கும் பெண்களின் உச்சக்கட்ட ஆயுதமான கெட்ட வார்த்தை பேசுபவளாக, இந்த நாவலில் கதாபாத்திரத்தின் தாய் வருகிறாள். அவளுக்கு ‘வாகாரி’ என்ற பட்டமும் ஊரால் கொடுக்கப்படுகிறது.
இந்த நாவல் இருத்தல் நிலை எழுத்து. ஃபியோதர் தஸ்தயெவ்ஸ்கி எழுதிய குற்றமும் தண்டனையும் என்ற கதையை போல, நம்பிக்கை இல்லாத வாழ்க்கையை வாழும் மனிதனின் வழியாக நாவலின் கதை பயணிக்கிறது. தன்னைச்சுற்றி அம்மா, அப்பா, தங்கை, அண்ணன், மனைவி, குழந்தை என அனைவரும் இருந்தும் மனதளவில் தான் அனாதை என்று வாழ்ந்து வருவதால் கடைசியில் அனாதையாகவே தூக்கிட்டு இறந்து போகிறான் நாயகன். அவன் இறந்து இரண்டு நாள்கள் கழித்து தான் அவன் இறந்து விட்டான் என்று அவனின் இரத்த உறவுகளுக்கு தெரிகிறது.
இந்த நாவலை பேராசிரியர் பிரேமா மிகச் குறைந்த நேரத்தில் மிகக் கச்சிதமாக நம்மிடம் கடத்திச் சென்றார்.
நான்காவது நாவலும் ஹப்சிபாவின் கடைசி நாவலான மானீயைப் பற்றி பேசுனார் தோழர் கோதா மணி .
‘மானீன்னா என்ன?’ என்று ஒரு கேள்வியை கேட்டு அவர் தன்னுடைய உரையை ஆரம்பித்தார். நாவலின் தலைப்பு மானீ என்பதே ஒரு வித்தியாசமான தலைப்பு தான். மானீ என்பது அவருடைய சுயசரிதை நூல் கிடையாது. ஏன் என்றால் இந்த நூலில் மானீ பர்மாவில் பிறக்கிறாள். பர்மாவின் பண்பாட்டை இந்த நூல் விளக்குகிறது.
நாவலில் திரு செல்வராஜ் என்று கதாபாத்திரம் வருகிறது அதை நான் Mr என்று எனக்கு ஏற்றாற்போல் வாசித்தேன். மானீயின் தந்தைக்கு மது குடிக்கும் பழக்கம் கிடையாது. அதனால் அவர் வேலைப் பார்க்கும் இடத்தில் இருந்து பணியிட மாற்றம் செய்யப்பட்டு வேறு இடத்திற்குச் செல்கிறார்.
மானீக்கு பத்து வயதான போது, இரண்டாவது உலகப் போர் தாக்கம் பற்றி குறிப்பிடுகிறார். ரயிலில் போவதற்கு அலாதி பிரியம் மானீக்கு. கடைசியில் அவர்கள் தப்பித்து பிழைத்து ரயிலில் வந்தார்கள். சந்தோஷமாக வரவில்லை ரயில் வண்டியில். போரின் போது பருந்து பறப்பதைப்போல வானத்தில் விமானங்கள் பறந்தன.
மானீக்கு சுமையில்லாதப் பூக்களை அதிகமாக தலையில் வைத்துக் கொள்வது பிடிக்கும். அவள் கண்களை விட கூந்தலின் பூ அழகானது. லுங்கி, பகோடா போன்றவை பர்மீய சொற்கள் .
மானீக்கு புத்த விகாரத்தைப் பார்க்க வேண்டும் என்று ஆவல். அப்பாவுக்கு மது குடிப்பது பிடிக்காது. ஆனால் அண்ணன் சிகரெட் பிடிக்கும் பழக்கம் வைத்திருப்பதால் அண்ணனிடம் ‘என்னை புத்தவிகாரத்திற்கு கூட்டிச் செல் இல்லையேன்றால் உன் சிகரெட் குட்டை உடைத்து விடுவேன்’ என்று அச்சுறுத்தி, அண்ணனுடன் புத்த விகாரத்தைப் பார்க்கச் செல்கிறாள் மானீ.
புத்தவிகாரில் ஒரு திருடனைப் பார்த்து அவன் அண்ணன் “இவனுக்கு எப்படி மோட்சம் கிடைக்கும்? இவனுக்கு போலிஸ் சிபாரிசு இருக்கிறது” என்று கூறுகிறான்.
1945ல் ஜப்பானில் ஹிரோஷிமா மற்றும் நாகசாகி இரண்டு நகரங்களில் குண்டு போடப்பட்டது பற்றி பேசுகிறோம். 1942ல் ஹிட்லர் போலந்து மீது படையெடுத்தத்தைப் பேசுகிறோம். இரண்டாம் உலகப் போர் எப்படி பர்மாவில் குடும்பங்களை சிதைத்தது என்பதைப் பற்றி மானீ நாவல் பேசுகிறது என்று தன் உரையை முடித்தார் தோழர் கோதாமணி.
மானீ நாவலை அவர்கள் எப்படி அறிமுகம் ஆனது; மானீ நாவலைப் பற்றி மதிப்புரைப் படித்தது; அதற்கு பிறகு மானீயை வாசித்தது… மானீ என்பது சுய சரித்திரம் இல்லை என்று தெரிந்துகொண்டதைக் குறிப்பிட்டார். மானீயைப் பற்றியான அனைத்து மதிப்புரைகளையும் மனதில் அழித்து விட்டு மீண்டும் மானீயை புதியதாக வாசித்தேன்… என மானீ நாவலுக்கும் தோழர் கோதாமணிக்கும் இடையை நடந்ததைக் கூறியது அருமையாக இருந்தது.
கடைசியாக Tamils through the Ages – தோழர் நிவேதிதா லூயிஸ் தனது உரையை ஆரம்பித்தார்கள் .
இரண்டு நூல்கள். ஒன்றில் 330 பக்கங்கள், மற்றதில் 1796 பக்கங்கள். The history of Tamil Literature (1961), Countdown from Solomon (1998-2001, 4 Volumes). இவற்றில் முதல் நூல் ஹெப்சிபாவும் இணையர் ஜேசுதாசனும் இணைந்து எழுதியது; இரண்டாம் நூல் ஹெப்சிபாவின் எழுத்து.
சிரித்துக் கொண்டே அனைவருக்கும் இரவு வணக்கம் என்று ஆரம்பித்தார். எப்படி இந்த இரண்டு புத்தகங்களை பத்து நிமிடத்தில் பேசுவது என்று எனக்குத் தெரியவில்லை. எனக்கும் ஹெப்சிபாவிற்கும் உள்ள தொடர்பு ஏறத்தாழ இருபத்தைந்து ஆண்டுகள் இருக்கலாம். அன்றிலிருந்து தேடிக் கொண்டு இருக்கிறேன் ஹெப்சிபாவை…
புத்தம் வீடு வழியாக தான் நான் ஹெப்சிபாவைத் தெரிந்து கொண்டேன்.
ஹெப்சிபா தன் இலக்கிய ஆய்வு நூல்கள் இரண்டிலும் சமண இலக்கியங்களைக் கூறிக் கொண்டே வருகிறார். சமஸ்கிருதம் பரவிய காலத்தைப் பற்றிப் பேசுகிறார்.
ஔவையின் குரல் அடித்தட்டு மக்கள் வரைச் சென்றது. ஆண்டாளையும் இரண்டு ஔவையையும் சேர்த்து வைத்து, தமிழ் இலக்கியத்தில் தவிர்க்க முடியாத மூன்று பெண்கள் என்று பார்க்கிறார் ஹெப்சிபா. ஔவை சாதி மதத்திற்கு எதிரானவர். கம்பராமயணம் மிகப் பெரிய இலக்கியம். ஹோமர், மில்டன்,சேக்ஸ்பியர் ஆகியவருக்கு நிகரானவர் கம்பர் என்று கூறுகிறார்.
தொழில் முறைப் பிரிவுகள் ஆரம்ப காலக்கட்டத்திலே இருந்தது. அது பார்ப்பனீயம் பரவ எளிதாக இருந்தது என்று ஹெப்சிபா எழுதியுள்ளார்.
1961லேயே ஹெப்சிபா பார்ப்பனர் வேறு, பார்ப்பனீயம் வேறு என்று தெளிவாகக் கூறியுள்ளார். புராணம் இலக்கிய வேலைப்பாடு கிடையாது என்று கூறுகிறார். சித்தர்கள் சாதிக்கு எதிரானவர்கள் என்கிறார். காளமேகப் புலவர் புராணங்களை கேலி செய்தார். ‘சீதக்காதி செத்தும் கொடுத்தான்’ என்பதௌ அவரின் வள்ளல்தன்மையைக் குறிப்பதாகச் சொல்கிறார் . படிக்காசுப்புலவர், உமறுப்புலவர் போன்றோருக்கு சீதக்காதி வள்ளலாக இருந்துள்ளார். சீறாப்புராணத்தை ‘the greatest tamil poem’ என்று ஹெப்சிபா குறிப்பிடுகிறார்.
1800-1961 ல் சாதியை உடைப்பதற்கு பிரிட்டிஷ் அரசாங்கம் முக்கிய பங்காற்றியது. தேசிய இயக்கம், சுயமரியாதை இயக்கம் பற்றி கூறுகிறார். பாரதியாரி குயில் பாட்டு பற்றி பேசுகிறார். கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை எழுதிய ‘தோட்டத்தில் மேயுது வெள்ளைப்பசு’ பாடலை perfect little master piece என்று குறிப்பிடுகிறார். கம்பன், வ.வே.சு. அய்யர் பற்றி எழுதியுள்ளார்.
விடுதலைப் போரில் பங்கேற்ற பார்ப்பனர்கள் பார்ப்பனீயத்தைப் பெரும்பாலும் கடைபிடிக்கவில்லை என்கிறார். கல்கி, புதுமைபித்தன், வீரமாமுனிவர், கண்ணதாசனின் இயேசு காவியம், பாரதிதாசன், விடுதலைப் போராட்டம், பெரியார் காந்தியைக் கேள்விக் கேட்டதைக்கூட பதிவு செய்துள்ளார்.
ஹெப்சிபா சங்க காலத்தில் இருந்து அவர் வாழ்ந்த சம காலம் வரை இலக்கியத்தில் பயணித்து வந்த பெண் எழுத்தாளர்களையும் ஆண் எழுத்தாளர்களையும் பேசுகிறார்.
ஹெப்சிபா பற்றி நான்கு மணி நேரம் உரையாடல் நடந்தது. சற்றும் சலிப்பில்லாமல் ஒவ்வொருவரின் உரையும் மிகக் கச்சிதமாக இருந்தது, கேட்பதற்கு அவ்வளவு ஆவலாக இருந்தது. கிட்டத்தட்ட எழுபது ஆண்டுகளுக்கு முன்பே ஒரு பெண் சமூகம் சார்ந்து எழுயிருப்பதை நினைத்து ஆச்சரியமாக இருந்தது. அவர்கள் எழுத்தைக் கையாண்ட விதமும் சமூகத்தின் மீது கொண்ட அக்கறையையும் நினைத்தால், பிரமிக்க வைக்கிறார் ஹெப்சிபா.
உண்மையில் பனை மரத்து நிழலை, தேரிக் காட்டு எழுத்தை இவ்வளவு நாள் வாசிக்காமல் வாழ்ந்ததை நினைத்து வருத்தப்பட்டேன் அன்று…
படைப்பாளர்

சிவசங்கர் ஜீவா
நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்தவர். பாளையங்கோட்டை புனித சவேரியார் கல்லூரி நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு மையத்தில் பயின்றுள்ளார்.