ராஜம்மாள் தேவதாஸ், நிறுவனர், அவினாசிலிங்கம் பல்கலைக்கழகம்
ஆண்டுக்கு இருமுறை ராஜம்மாள் பாக்கியநாதன் தேவதாஸின் இறந்த/ பிறந்த நாள்களின்போது அவர் குறித்து எங்கள் ஊரின் தளங்களில் செய்திகள் உலா வரும். அதை வைத்துத்தான் இப்படி ஒரு பெயரே எனக்குத் தெரியும் என்பதை வருத்தத்துடன் பதிவு செய்கிறேன். பார்த்தால், பல தலைமுறைகளாக அந்தக் குடும்பம் எடுத்துக்காட்டாக இருந்துள்ளது.
‘தமிழ் போற்றும் தமிழக கிறிஸ்தவர்கள்’ நூலில் ராஜம்மாளின் பெயர் இடம்பெறும்வரை அவருக்குக் கிறிஸ்தவ பின்புலம் இருக்குமென நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை. பின்னும் கணவரின் பெயரில் எட்வர்ட் இருப்பதால், அவர் கிறிஸ்தவராக இருந்திருக்கக் கூடும் எனத் தான் நான் நினைத்திருந்தேன். ஏனென்றால் அம்மாவின் குடும்பம் முழுக்க முழுக்க இந்துக்கள் கொண்ட குடும்பம். அவர்கள் வீட்டைச் சுற்றியே அம்மன் கோவில்களும், சுடலையாண்டவர் கோவில்களும் பல உள்ளன.
கள்ளிகுளம் ஊரைப்பொறுத்தவரை அவரவர் சமயத்திலிருந்து கொண்டே அனைத்து சமயத்தையும் அன்புடன் கடைப்பிடிக்கும் ஊர். எந்த சாமிக்குப் படைத்தாலென்ன? நம் மீது இருக்கும் அன்பில் தானே கொடுக்கிறார்கள் என ஒருதரப்பு , படையல் வைக்குமுன், நண்பர்களுக்கென தனியாக எடுத்து வைப்பது என இன்னொரு தரப்பு என ஒருவருக்கொருவர் அன்புடன் இருக்கும் ஊர். மிகச்சமீபத்தில் நான் பார்த்த திருமண அழைப்பிதழ் இதற்குச் சான்று.
இதனால் ராஜம்மாளின் குடும்பம் கிறிஸ்தவராக இருந்திருக்க வாய்ப்பே இல்லை என்று தான் நினைத்திருந்தேன். நிவேதிதா லூயிஸ் அவர்களின் ‘பாதை அமைத்தவர்கள்’ நூல் வாசித்த பின் தான் ராஜம்மாளின் அப்பா பெயர் மிக்கேல் பாக்கியநாதன் என புரிந்தது. காலராவில் தனது குடும்பத்தை இழந்த ராஜம்மாளின் அப்பா, பாக்கியநாதனின் பாட்டனார், தற்கொலைக்கு முயன்ற நேரம், ஆங்கிலேய மிஷனரி ஒருவர் காப்பாற்றியிருக்கிறார். அவரின் வழிகாட்டுதலில் கிறிஸ்தவராகி ‘மைக்கேல்’ என ஆகியிருக்கிறார். கல்வியும் அக்குடும்பம் பெற்றிருக்கிறது. இந்துவாக இருக்கும்போது அவரின் பெயர் முத்தையா எனத் தெரிகிறது.
பாக்கியநாதனின் மகன் சின்னத்துரை, தனது மூத்த மகனுக்குச் சந்திரன் (டாக்டர் சந்திரன்) எனப் பெயரிட்டிருக்கிறார். இரண்டாவது மகன் பெயர் முத்தையா. அதேபோல் பாக்கியநாதனின் மகள் விமலாவின் மூத்த மகனுக்கு முத்தையா என்று பெயரிட்டுள்ளார். அவர் கோயம்புத்தூரில் வசித்து வருகிறார். இப்படி குடும்பப் பெயர் இன்னமும் தொடர்கிறது.
ராஜம்மாளின் அம்மாவின் இயற்பெயர் இசக்கியம்மாள் என்றும் திருமணத்திற்குப் பின் சொர்ணம்மாள் என்றும் நிவேதிதா குறிப்பிடுகிறார். ராஜம்மாளின் கணவர்தான் சமயம் மாறித் திருமணம் செய்திருக்கிறார் என்பதெல்லாம் எனக்கு மிகவும் வியப்பாகவே இருந்தது.
அந்தக் காலகட்டத்தில் காலராவினால் ஒட்டுமொத்த ஊர்களே அழிந்த வரலாறு உண்டு. இப்போது கள்ளிகுளத்தின் தென்பகுதியாக இருக்கும் ‘சிலுவைப்பட்டி’ என்ற ஊரின் பெரும்பான்மையானோர் இவ்வாறு இறக்க, தப்பிப் பிழைத்த சிலர் கள்ளிகுளத்தில் வந்து குடியேறியிருக்கிறார்கள். சிலுவைப்பட்டி இருந்ததற்கான அடையாளமாக, ஒரு சிறிய அந்தோனியார் கோவில் அங்கு இருக்கிறது. அதனருகில் சிலுவைகள் இரண்டு கரம் கொண்டவையாக உள்ளன. அவை தோமையார் காலச் சிலுவைகள் எனச் சொல்பவர்கள் உண்டு. குறைந்தபட்சம் பதிமூன்றாம் நூற்றாண்டைச் சார்ந்தவை எனக் கருதப் படுகின்றன. இவ்வாறான மிகப்பழமையான ஊர்களெல்லாம் காலராவில் அழிந்திருக்கின்றன.
ஜூலை 15, 1891 அன்று, கள்ளிகுளத்தில் பிறந்த சொர்ணம்மாள், தனது 24ஆவது வயதில் பார்க்கனேரியைச் சேர்ந்த பாக்கியநாதன் அவர்களைத் திருமணம் செய்திருக்கிறார். கணவருக்கு அப்போது 35 வயது. கணவர் அப்போதே விலங்கியல் பட்டதாரி. அந்த வட்டாரத்திலேயே அதற்குமுன் எத்தனை பேர் பட்டம் பெற்றிருப்பார்கள் என்றால் கேள்விக்குறி தான். சொர்ணம் எழுதப் படிக்கத் தெரியாதவர். கணவர் தான் எழுதப் படிக்கச் சொல்லிக் கொடுத்திருக்கிறார். முகாம்களுக்குச் (camp) செல்லும்போது, கட்டுரைகள் எழுதி அனுப்பப் சொல்வாராம். இவர் அனுப்பினால் அவர் திருத்தி அனுப்புவாராம். இவ்வாறு நான் தான் முதலில் ‘இந்தியாவின் அஞ்சல் வழிக் கல்வி கற்றவர்’ என்று கூறியிருக்கிறார். நலம் நலமறிய ஆவல் மூலம் கல்வி கற்ற காதல் கதை எந்தத் திரைப்படமும் சொல்லாதது. நூற்றாண்டுவிழா கொண்டாடும்போதும், செய்தித்தாள் (தினமணி) வாசிக்குமளவிற்குக் கண் பார்வைத் திறன் கொண்டு விளங்கியிருக்கிறார்.
சொர்ணம் குழந்தைகள் பிறப்பிற்கு கள்ளிகுளம் வந்திருக்கலாம். அவரின் எத்தனை குழந்தைகள் கள்ளிகுளத்தில் பிறந்தனர்; எத்தனை பேர் வெளியூரில் பிறந்தனர் எனத் தெரியவில்லை. அவருக்கு ஒன்பது குழந்தைகள். ‘Naughty nine-ஆ?’ என பிள்ளைகள் குறித்துக் கேட்டதற்கு ‘இல்லை; எல்லோரும் நல்ல பிள்ளைகள்’ என சொர்ணம் சொல்லியிருக்கிறார்.
பெண்பிள்ளைகள் அனைவருமே உயர்நிலைக் கல்வியைச் சென்னை ராயபுரத்தில் உள்ள நார்த் விக் (Northwick Girls Higher Secondary School) பள்ளியில் படித்திருக்கிறார்கள் என்று மகள் சந்திரா சொன்னதாகத் தம்பிதுரை குறிப்பிடுகிறார். இவற்றில் பல தகவல்களைச் சேகரித்து தந்து உதவியவர், தம்பிதுரை. இவருடைய அப்பாவின் அம்மா சங்கராவுடை அவர்கள், சொர்ணம்மாள் மற்றும் தேவதாஸின் உடன் பிறந்த தங்கை ஆவார்.
ராஜம்மாள் அவர்கள் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும்போது, தந்தையார் நோய்வாய்ப்பட்டுவிட்டதால், மகளுக்குத் திருமணம் செய்து வைக்க சொர்ணம் விரும்பினார். இதனால், சொர்ணம்மாளின் தம்பி ஆறுமுகத்துக்குத் திருமணம் செய்து வைத்திருக்கிறார்கள். ஆறுமுகம் என்கிற தேவதாஸ்தான் கள்ளிகுளம் ஊரின் முதல் பட்டதாரி; விலங்கியல் பட்டதாரி. இப்படி சொர்ணம்மாள், தன் பிள்ளைகளை மட்டுமல்லாமல், தம்பியையும் சேர்த்தே படிக்க வைத்திருக்கிறார். ஆறுமுகம், எட்வர்ட் தேவதாஸ் என கிறிஸ்தவராக மாற, 1935 ஆம் ஆண்டில் இந்தத் திருமணம் நடைபெற்றுள்ளது. அப்போது ராஜம்மாளின் வயது பதினாறு. திரு. தேவதாஸ் காவல்துறை ஆய்வாளராகப் பணியாற்றி வந்திருக்கிறார்.
07.07.1957 அன்று தேவதாஸின் அம்மா மாடத்தியம்மாள் என்கிற பொன்னம்மாள் காலமானார். அப்போது அவர் திருநெல்வேலியில் சர்கிள் இன்ஸ்பெக்டராக இருந்திருக்கிறார்.
அவர், தன் அம்மாவிற்கு அருமையாக நினைவகம் அமைத்து ஆண்டுதோறும் நினைவு நாள் அன்று வழிபடுவதுண்டு. தேவதாஸ் இறந்தபின், ராஜம்மாள் அதைச் செய்து வந்திருக்கிறார்.
1997 இல் ராஜம்மாள் இறந்தபின் இப்போது குடும்பத்தினர் அதைச் செய்கின்றனர். குடும்பத்தைச் சார்ந்த P.பாலச்சுப்பிரமணி (தம்பிதுரையின் சித்தப்பா பரமசிவனின் மகன்) புதுப்பித்துள்ளார். கள்ளிகுளத்தில் அமைந்துள்ள அந்த நினைவகத்தின் கல்வெட்டின் கீழே, இவண் – P A எட்வர்ட் தேவதாஸ், சர்க்கிள் இன்ஸ்பெக்டர், தி(ருநெல்வே)லி டவுண் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அந்தக் காலகட்டத்தில் அவர் அப்பதவியில் இருந்திருக்க வேண்டும். கல்வெட்டில் இருக்கும் A என்பது அவரது இயற்பெயரான Arumugam என்பதைக் குறிக்கிறது.
ராஜம்மாளின் தாத்தாவின் பெயரான ‘புகழ் பெற்ற பெருமாள்’ என்ற அழகிய பெயர், இன்றும் குடும்பங்களில் வழங்கி வருகிறது என்பது சிறப்பு. குடும்பம் எவ்வளவு உயரத்திற்குப் போனாலும், வேரை மறக்காமலிருப்பதற்குப் பெரிய சான்று இது. அது போலவே எத்தனைக் குடும்பங்கள் இவ்வாறான பழைய நினைவகங்களைப் புதுப்பிக்கின்றன என்பதும் கேள்விக்குறி தான்.
சரி. இப்போது, எட்வர்ட் தேவதாஸின் குடும்பத்திலிருந்து பாக்கியநாதனின் குடும்பத்திற்கு வருவோம்.
15 பிப்ரவரி 1936 பாக்கியநாதன் இறந்திருக்கிறார். அப்போது சொர்ணம்மாளுக்கு வயது நாற்பத்தைந்துதான். தந்தையார் இறந்த சில மாதங்களில், ராஜம்மாள் பள்ளிப்படிப்பை முதல் மதிப்பெண்ணுடன் முடித்திருக்கிறார். அடுத்தடுத்த பிள்ளைகளும் அவரவர் படிப்பைத் தொடர்ந்திருக்கின்றனர். இடையில் 1939 ஆம் ஆண்டு, ராஜம்மாளின் மகன் மோகன் பிறந்திருக்கிறார். மகள் படிப்பில் நாட்டம் கொண்டு வாழ்ந்ததால் பேரனைக் கவனிக்கும் பொறுப்பும் பாட்டியின் மீது விழுந்திருக்கிறது.
அவரது பிள்ளைகள் படித்த படிப்பையும் சென்ற உயரங்களையும் கண்டால், இவர் தன்னை உரமாகியது நம் கண்களுக்கு நன்கு புலப்படும்.
1.ராஜம்மாள் தேவதாஸ்
2. ராஜதுரை மைக்கிள்
3. லீலா திரவியம்
4. கமலா ஆனந்தம்
5.செல்லத்துரை மைக்கிள்
6.சின்னத்துரை மைக்கிள்
7.ஞானத்துரை மைக்கிள்
8.சந்திரா
9. விமலா மனோகரன்
மூத்தவர் ராஜம்மாள் தேவதாஸ் குறித்து தனி கட்டுரையில் பார்க்கலாம்.
இரண்டாவது மகள் லீலா, சுதந்திரப்போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார். அப்போது இளைஞர் காங்கிரசில் இருந்த கே திரவியம் அவர்களைக் காதலிக்க, அது திருமணத்தில் நிறைவு பெற்றிருக்கிறது. லீலாவும் முதுகலைப் பட்டதாரி என்பது குறிப்பிடத் தக்கது.
லீலா திரவியத்தின் கணவர் திரவியம், எம்.ஜி.ஆர் ஆட்சியின் போது (1980-84) தலைமைச் செயலாளராகப் பணியாற்றினார். பணியில் இருக்கும்போதே இறந்து விட்டார். லீலா திரவியம், மூன்று ஆண்டுகளுக்கு முன் காலமானார்.
மூன்றாவது மகளான கமலா ஆனந்தம், கல்வி தொழில்நுட்பவியலாளர் (educational technologist). முனைவர் பட்டம் பெற்றவர். அமெரிக்காவில் ஒரு திறந்தவெளி பல்கலைக் கழகத்தில் பணிபுரிந்து வந்தார். இப்போதும் அங்கு தானிருக்கிறார் என நினைக்கிறேன்.
1994 ஆம் ஆண்டு, விமலா (கண்ணாடி அணிந்திருப்பவர்), தம்பிதுரை திருமணத்தில் கலந்து கொண்டபோது எடுத்த புகைப்படம் இது.
நான்காவது பெண் டாக்டர் சந்திரா, திருமணம் பண்ணிக்கொள்ளவில்லை. சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் பணிபுரிந்தார். தற்போது சென்னையில் இருக்கிறார்.
திருப்பத்தூரில் எடுத்த புகைப்படம் இது. இடமிருந்து வலமாக முதலாவதாக நின்று கொண்டு இருப்பவர் சந்திரா. மற்றவர்கள் தம்பிதுரை குடும்பத்தினர்.
இந்தப் புகைப்படத்திற்கான வரலாற்றைத் தம்பிதுரை இவ்வாறு கூறுகிறார், “ராஜம்மாள் தேவதாஸின் தந்தை பாக்கியநாதன், வன அலுவலராக (Forest Officer) அன்றைய வட ஆற்காடு மாவட்டத்தில் ( பின்னர் வட ஆற்காடு அம்பேத்கர் மாவட்டம், பின்னர் வேலூர் மாவட்டம், அதன் பின்னர் வேலூரிலிருந்து பிரிந்து தற்போது திருப்பத்தூர் மாவட்டம் என்ற பெயரில் உள்ளது) உள்ள செங்கம் என்ற ஊரில் பணியாற்றிய போது அங்கேயே நிறைய நாட்கள் வசித்து வந்தார். அவர் அங்கே உள்ள தேவாலயத்திற்கும் அடிக்கடி செல்வதுண்டு. அப்போது பக்கத்தில் உள்ள கரிசநாயக்கன்பட்டி என்ற கிராமத்தில் பத்து ஏக்கர் நிலம் வாங்கி அதில் பெரிய அளவில் தோட்டத்தை உருவாக்கினார். அங்கு மா மரங்கள் பெருமளவில் இருந்ததைப் பார்த்திருக்கிறேன். அவருடைய மறைவுக்குப் பிறகு, சொர்ணம் பாட்டி குடும்பத்துடன் திருப்பத்தூர் வந்து விட்டார். பாக்கியநாதனின் உடல் செங்கம் ஊரில் உள்ள தேவாலயத்தில் தான் அடக்கம் செய்யப்பட்டது. அது மட்டுமல்ல சொர்ணம், தேவதாஸ், ராஜம்மாள், அவர்கள் மகன் மோகன் ஆகியோர் உடல் அங்கே தான் அடக்கம் செய்யப்பட்டது.
நாங்கள் சொர்ணம் பாட்டியைத் தோப்புப் பாட்டி என்று தான் அழைப்போம். சென்னையில் உள்ள சந்திரா அத்தை அவ்வப்போது திருப்பத்தூர் வாருங்கள் என்று எங்களை அழைப்பதுண்டு. நாங்களும் எனது தங்கை குடும்பத்தினருடன் திருப்பத்தூருக்கு செல்வோம். திருப்பத்தூருக்கு ரயில் வசதி இல்லாததால் ஜோலார்பேட்டை வரை தான் ரெயிலில் செல்ல முடியும். ஜோலார்பேட்டை ரயில் நிலையத்துக்குச் சந்திரா அத்தை கார் அனுப்பி வைப்பார்கள். நாங்கள் அதில் ஏறி கரிச்சநாயக்கன்பட்டி செல்வோம்.”
ஐந்தாவது மகன் ராஜதுரை மைக்கிள், அக்காவின் கணவர் திரவியம் அவர்களின் கீழ் இயங்கிய சுதந்திரப் போராட்டத் தியாகி. நேதாஜியின் படையில் இருந்தவர். அதற்கானத் தாமிரப் பட்டயம் பெற்றவர். அரசுத்துறையில் ஊரக வளர்ச்சித் துறையின் கூடுதல் இயக்குநர் (additional director of rural development) பொறுப்பு வரை வந்தவர். 1967 ஆம் ஆண்டில் விருப்ப ஓய்வு பெற்று, வேளாண் நிதி நிறுவனத்தின் (agricultural finance corporation) ஆலோசகராக இருந்திருக்கிறார்.
ஆறாவது மகன் சின்னத்துரை மைக்கிள் சென்னையில் உள்ள Saint Thomas Mount இல் தபால் துறையில் உயர் பதவியில் பணி புரிந்து ஓய்வு பெற்றவர். பிற்காலத்தில் குடும்பத்தின் திருப்பத்தூர் பண்ணையைக் கவனித்துக் கொண்டிருந்திருக்கிறார். நீலாங்கரை அருகில் உள்ள பனையூரில் இரண்டு ஆண்டுகளுக்கு முன் இறந்திருக்கிறார்.
ஏழாவது மகன் செல்லத்துரை, உடற்பயிற்சி துறையில் Ph D பெற்று கனடாவில் வாழ்ந்தவர்.
எட்டாவது மகன் ஞானத்துரை மைக்கிள் Cristoffel Blinden Mission O German Organaisation நிறுவனத்தின் பிராந்திய பிரதிநிதியாக (regional representative) செயல்பட்டவர். சமூக சேவையில் ரொம்ப ஆர்வம் உள்ளவர். ராஜதுரை மைக்கிளுடன் திருச்சியில் வசித்து வந்தார். ஞானத்துரை மைக்கிள், ராஜதுரை மைக்கிள் இருவரும் நான்கு ஆண்டுகளுக்குள் அடுத்தடுத்து காலமாகி விட்டார்கள்.
ஒன்பதாவது மகள், விமலா மனோகரன் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆரல்வாய்மொழியில் வசித்து வந்தார். அவர் கணவர் மனோகரன் அவர்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றினார். ஆசிரியராகப் பணியாற்றிய விமலா மனோகரன், பிற்காலத்தில் கன்னியாகுமரி மாவட்ட கல்வி அலுவலராக பணியாற்றி ஓய்வுபெற்றார். பின்னர் சென்னையில் மகன் தேவதாஸ் மனோகரன் வீட்டில் வசித்து வந்தார். கொரோனா காலத்தில் சென்னையில் காலமானார்.
தேவதாஸ் மனோகரன் அண்ணா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றார். முன்பு அண்ணா பல்கலைக்கழகத்தை பிரித்த போது திருச்சியை தலைமையாக கொண்ட அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக சில காலம் பணியாற்றினார்.
இப்படி சொர்ணம்மாள் வளர்த்துவிட்டப் பட்டதாரிகளின் எண்ணிக்கை வியப்புக்குரியது.
சொர்ணம்மாளின் நூற்றாண்டு விழா அந்த ஆண்டின் கிறிஸ்மஸ்ஸின் போது மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டுள்ளது. 1991 இல் கோவையில் வெளியான பல செய்தி தாள்களிள் செய்தி வெளியானது. அவற்றுள் ஒன்று மட்டுமே இப்போது கைவசம் உள்ளது. சொர்ணம்மாளின் எட்டு பிள்ளைகள், 65 பேரப்பிள்ளைகள் மற்றும் கொள்ளுப் பேரப்பிள்ளைகள் இணைந்து அந்த விழாவினைச் சிறப்பித்திருக்கிறார்கள் என்னும்போது அந்த அம்மாவின் மேன்மை புலப்படுகிறது. பொதுவாக அறுபதாம் கல்யாணம், நூற்றாண்டு விழா என ஆணுக்குத் தான் நடைபெறும். பெண்ணுக்கு இவ்வாறு நூற்றாண்டு விழா எடுத்தது எல்லாம் சிறப்புத்தான். வேறு குடும்பங்களில் இவ்வாறு நான் பார்த்ததில்லை.
பாட்டியின் நூற்றாண்டு விழாவின் போது பேரன் சந்திரன் (சின்னத்துரை மைக்கேலிமகன்) வாழ்த்து மடல் எழுதியிருக்கிறார் என்பதெல்லாம் பெரும் சிறப்பு. சிலம்பு (சிலப்பதிகாரம்) படைக்க மறந்திருப்பான்; நின் சிறுகதையை வரைந்திருப்பான் எனப் பேரன் சொல்வது மிகையொன்றுமில்லை.
‘கல்வி கற்றால் வாழ்வு உண்டு
கற்றவர் பெரும் பயன் பெரிதே
ஒழுக்கம் என்றும் சேர்ந்து கொண்டால்
இழுக்கு உண்டோ எல்லாம் நலமே
கண்டு கையை கூப்புவார் வந்து வாழ்த்து கூறுவார்
இன்பங்கள் செல்வங்கள் எல்லாம் கல்வி தரும்’
இது 1979 ஆம் ஆண்டு, மாணவர் மன்றத்திற்கென தமிழம்மா எழுதிய கவிதையின் (பாடல்) சிறு பகுதி. அதை சொர்ணம் அம்மாவின் வாழ்வில் முழுமையாகக் காண முடிகிறது. அவரது கணவரின் அப்பாவிற்குக் கிடைத்த கல்வி என்னும் சிறு ஊற்று, பல தலைமுறைகளாக ஆறாகப் பெருக்கெடுத்து ஓடுகிறது. அம்மா பிறந்த காலகட்டத்தில் சாதிப்பெயரை பின்னொட்டாக போட்டுக் கொள்ளும் வழக்கம் இருந்தது. அம்மாவின் உறவுகள் யார் குறித்தும் சொல்லும்போதும், எவருக்கும் சாதி ஒட்டு இருந்ததாகக் குறிப்பிடவில்லை என்பது தனிச் சிறப்பு. கல்வி சரியாகப் போய்ச் சேர்ந்த குடும்பம் என அம்மாவின் குடும்பத்தைச் சொல்லலாம்.
இவர்கள் குடும்பத்திலிருந்து தான், ஒரு ஊரின் முதல் பொறியாளர், முதல் கால்நடை மருத்துவர்… போன்றோர் உருவாகியிருக்கிறார்கள். பல பட்டதாரிகளையும் உருவாக்குவதற்கு உந்துதலாக இந்தக் குடும்பம் இருந்திருக்கிறது; சொர்ணம் பாட்டி இருந்திருக்கிறார்.
படைப்பாளர்
பாரதி திலகர்
தீவிர வாசிப்பாளர், பயணக் காதலர்; தொன்மை மேல் பெரும் ஆர்வம் கொண்டவர். அயல்நாட்டில் வசித்து வந்தாலும் மண்ணின் வாசம் மறவாமல் கட்டுரைகள் எழுதிவருகிறார். ஹெர் ஸ்டோரிஸில் இவர் எழுதிய கட்டுரைகள், ‘பூப்பறிக்க வருகிறோம்’, ‘சினிமாவுக்கு வாரீகளா?’ என்கிற புத்தகங்களாக, ஹெர் ஸ்டோரிஸில் வெளிவந்திருக்கிறது. தற்போது ‘சினிமாவுக்கு வாரீகளா – 3’ மற்றும் ‘சாதனை படைக்கும் சாமானியர்’ என்கிற இரண்டு தொடர்களை ஹெர் ஸ்டோரீஸ் வலைத்தளத்தில் எழுதிவருகிறார்.
நன்றி பாலசுப்பிரமணி. இன்னமும் நிறைய தகவல்கள் தேவைப்படுகின்றன. ஒவ்வொருவர் குறித்தும் ஒரு கட்டுரை எழுதும் அளவிற்கு நெடும் வரலாற்றைக் கொண்ட குடும்பம். குறைந்தபட்சம் கள்ளிகுளத்தில், சத்துணவு சாப்பிடும் இடங்கள், ஊட்டச்சத்து மையங்களிலாவது ராஜம்மாள் அம்மாவின் படத்தை வைக்க, பள்ளிக் குழந்தைகளுக்கு அவர் குறித்து சொல்லிக் கொடுக்க ஏற்பாடு செய்தால் நலம்.
ஆதவன் வெ
2 days ago
இந்தக் கட்டுரையை முழுவதுமாக படித்தேன் இதில் எங்கள் ஊரும் (திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் ஊர் )சம்பந்தப்பட்டிருப்பதால் மேலும் ஆர்வமாக படித்தேன் திரு பாக்யநாதன் வனத்துறை அலுவலராக பணிபுரிந்த போது எங்கள் வீட்டு பக்கத்து வீட்டில் தான் குடியிருந்தார் அவர்களுடன் இருந்த நாட்களை அப்பா வெங்கடாஜலம் முதலியார் அப்பாவினு டைய சகோதரி ஊ த்தாம்பாள் இவர்கள் அவ்வப்போது சொன்ன சின்ன சின்ன நிகழ்வுகளை எல்லாம் இந்த கட்டுரை படிக்கும் போது நினைவுக்கு வந்தது 1968 ஆம் ஆண்டு வாக்கில் அவர்கள் ராஜ வீதியில் வைத்திருந்த வீட்டினை விற்பதற்கு வந்த போது முதல் தேர்வாக எங்களை அணுகினார்கள். ஆனால் சில சூழ்நிலை காரணத்தால் எங்களால் வாங்க இயலவில்லை.திருமதி ராஜம்மாள் தேவதாஸ் அவர்களை அடக்கம் செய்யும்போது அப்பாவுடன் சென்று அஞ்சலி செலுத்தியது நினைவுக்கு வருகிறது என்றாலும் எங்கள் தாய் தந்தையரைப் போன்றே இன்றும் நினைவில் வைத்து வணங்குகின்றேன் வணக்கம்
மிகவும் நன்றி. பக்கத்து வீட்டுக்காரர் என்ற வகையில் வேறு எதாவது தகவல்கள் இருந்தாலும் தெரியப்படுத்துங்கள். பலரின் வரலாறுகள், நாம் சின்ன செய்திகள் என நினைக்கும் தகவல்களில் தான் கட்டி எழுப்பப் படுகின்றன. ராஜம்மாள் அவர்கள் இறந்தபோது, குறிப்பிடத்தகுந்தவர் யார் யார் வந்தார்கள் என நினைவிருந்தால் சொல்லுங்கள்.
ஆதவன் வெ செங்கம்
2 days ago
திருத்தம் :தலைமுறை தாண்டிய உறவு என்றாலும் அவர்களை தாய் தந்தையரைப் போன்றே இன்றும் வணங்குகிறேன்.
Her Stories & ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் ஒருங்கிணைந்து நடத்திய ஹெப்சிபா ஜேசுதாசன் நூற்றாண்டு கருத்தரங்கம், 12.04.2025 அன்று நடைபெற்றது. அதில் பலர் கலந்துகொண்டு பேசினர். ஹெப்சிபா ஜேசுதாசன் பற்றி ஒரு அழகான…
ஒரு சிறுமியின் அம்மாவோ பாட்டியோ, அவளை ஓர் இடத்திற்கு அழைத்துச் சென்று, மிட்டாய், பலகாரம், ஐஸ்கிரீம் எனப் பிடித்த அனைத்தையும் வாங்கித் தருகிறார். அதனைச் சாப்பிட்டுக் கொண்டே போகும் போது, ஒரு கட்டிடத்தினுள் சிறுமியை அழைத்துச்…
கற்றோருக்கு சென்ற இடம் எல்லாம் சிறப்பு 🎉🎉 அருமை
நன்றி மார்க்ளின்ஸ்
பாரதி திலகர் என்ற எழுத்தாளர் “கல்வியின் ஊற்று” என்ற தலைப்பில் பல அரிய தகவல்கள் திரட்டி எங்கள் குடும்ப முன்னோர்கள் வரலாறு பற்றி எழுதி இருக்கிறார்.
பலரும் அறியாத கள்ளிகுளம் ஊரின் பண்டைக்கால வரலாறும் இதில் இடம்பெற்று இருப்பது வரலாற்று சிறப்பு.
சுதந்திரம் அடைவதற்கு முன்பே முதல் தலைமுறை பட்டதாரிகளை கொண்ட குடும்பமாக எமது முன்னோர்கள் இருந்துள்ளது வியப்பு.
இக்கட்டுரையில் என் பெயரும் இடம் பெற்று இருப்பது துடிப்பு.
டாக்டர் ராஜம்மாள் தேவதாஸ் அத்தையால் கள்ளிகுளம் ஊருக்கும் பெருமை. தமிழ் மண்ணுக்கும் பெருமை.
இக்கட்டுரையை எழுதிய பாரதி திலகருக்கு பாராட்டுக்கள் .
நன்றி பாலசுப்பிரமணி. இன்னமும் நிறைய தகவல்கள் தேவைப்படுகின்றன. ஒவ்வொருவர் குறித்தும் ஒரு கட்டுரை எழுதும் அளவிற்கு நெடும் வரலாற்றைக் கொண்ட குடும்பம். குறைந்தபட்சம் கள்ளிகுளத்தில், சத்துணவு சாப்பிடும் இடங்கள், ஊட்டச்சத்து மையங்களிலாவது ராஜம்மாள் அம்மாவின் படத்தை வைக்க, பள்ளிக் குழந்தைகளுக்கு அவர் குறித்து சொல்லிக் கொடுக்க ஏற்பாடு செய்தால் நலம்.
இந்தக் கட்டுரையை முழுவதுமாக படித்தேன் இதில் எங்கள் ஊரும் (திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் ஊர் )சம்பந்தப்பட்டிருப்பதால் மேலும் ஆர்வமாக படித்தேன் திரு பாக்யநாதன் வனத்துறை அலுவலராக பணிபுரிந்த போது எங்கள் வீட்டு பக்கத்து வீட்டில் தான் குடியிருந்தார் அவர்களுடன் இருந்த நாட்களை அப்பா வெங்கடாஜலம் முதலியார் அப்பாவினு டைய சகோதரி ஊ த்தாம்பாள் இவர்கள் அவ்வப்போது சொன்ன சின்ன சின்ன நிகழ்வுகளை எல்லாம் இந்த கட்டுரை படிக்கும் போது நினைவுக்கு வந்தது 1968 ஆம் ஆண்டு வாக்கில் அவர்கள் ராஜ வீதியில் வைத்திருந்த வீட்டினை விற்பதற்கு வந்த போது முதல் தேர்வாக எங்களை அணுகினார்கள். ஆனால் சில சூழ்நிலை காரணத்தால் எங்களால் வாங்க இயலவில்லை.திருமதி ராஜம்மாள் தேவதாஸ் அவர்களை அடக்கம் செய்யும்போது அப்பாவுடன் சென்று அஞ்சலி செலுத்தியது நினைவுக்கு வருகிறது என்றாலும் எங்கள் தாய் தந்தையரைப் போன்றே இன்றும் நினைவில் வைத்து வணங்குகின்றேன் வணக்கம்
மிகவும் நன்றி. பக்கத்து வீட்டுக்காரர் என்ற வகையில் வேறு எதாவது தகவல்கள் இருந்தாலும் தெரியப்படுத்துங்கள். பலரின் வரலாறுகள், நாம் சின்ன செய்திகள் என நினைக்கும் தகவல்களில் தான் கட்டி எழுப்பப் படுகின்றன. ராஜம்மாள் அவர்கள் இறந்தபோது, குறிப்பிடத்தகுந்தவர் யார் யார் வந்தார்கள் என நினைவிருந்தால் சொல்லுங்கள்.
திருத்தம் :தலைமுறை தாண்டிய உறவு என்றாலும் அவர்களை தாய் தந்தையரைப் போன்றே இன்றும் வணங்குகிறேன்.
நன்றி.