ஒரு சிறுமியின் அம்மாவோ பாட்டியோ, அவளை ஓர் இடத்திற்கு அழைத்துச் சென்று, மிட்டாய், பலகாரம், ஐஸ்கிரீம் எனப் பிடித்த அனைத்தையும் வாங்கித் தருகிறார். அதனைச் சாப்பிட்டுக் கொண்டே போகும் போது, ஒரு கட்டிடத்தினுள் சிறுமியை அழைத்துச் செல்கிறார்கள். அங்கு சிறுமியும் அவளது நம்பிக்கைக்குரியவர்களும் மட்டுமே இருக்கிறார்கள். அப்போது அங்கு ஒரு பெண் வருகிறார். உடனே சிறுமியைத் தரையில் அமரச் சொல்கிறார்கள். சிறுமியின் நம்பிக்கைக்குப் பாத்திரமான அவள் அம்மாவோ பாட்டியோ அவளை இறுக்கமாகப் பிடித்துத் தரையில் அமர வைத்தவுடன், அவளின் கால்சட்டை அல்லது உள்ளாடைக் களையப்படுகிறது. அவளின் கால்கள் விரித்துப் பிடிக்கப்படுகின்றன. என்ன நடக்கிறது எனத் தெரியாமல் அழுதுத் துடிக்கும் சிறுமியின் கண்ணீரை, அங்கு யாரும் பொருட்படுத்தவில்லை. ஒரு கூர்மையான அல்லது சூடான ஆயுதத்தால் சிறுமியின் பிறப்புறுப்பைச் சிதைக்கிறார்கள்/வெட்டுகிறார்கள். தனக்கு என்ன நடக்கிறது என்பதை உணர முடியாதபடி, உச்சகட்ட வலியைச் சிறுமி அனுபவித்து மூர்ச்சையடைகிறாள். சிறுமி கண்விழித்ததும் அவளின் பிறப்புறுப்பில் ஒரு தீரா வலியை உணர்கிறாள்.
இந்நிகழ்வு கற்பனையல்ல, ஒரு பெண்ணின் வாக்குமூலம். அந்த ஒரு பெண் மட்டுமல்ல, நம்மைச் சுற்றி இருக்கும் பல பெண்களும், நிஜத்தில் அனுபவிக்கும் வலி இது என்று சொன்னால், உங்களால் நம்ப முடியுமா? அதுவும் ஒன்றிரண்டு பேரல்ல, சுமார் 23 கோடிக்கும் கூடுதலான பெண்கள், இந்த வலியை அனுபவித்துக் கடந்து வந்திருக்கிறார்கள்.
பெண் பிறப்புறுப்புச் சிதைப்பு, அல்லது விருத்தசேதனம் (Female Genital Mutilation) என்பது இதன் பெயர். விருத்தசேதனம் என்றால், பெண்ணின் பிறப்புறுப்பின் ஒரு பகுதியை வெட்டியெடுத்தல். இதில் நான்கு வகை உள்ளது.
வகை – 1 : கிளிட்டோரிஸ் முழுவதுமாகவோ, பாதியாகவோ வெட்டப்படுதல்.
வகை – 2 : கிளிட்டோரிஸ் வெட்டி அகற்றப்படும், அதனுடன் லேபியா மினோரா எனும் சதையும் முழுவதுமாகவோ பாதியாகவோ வெட்டப்படும்.
வகை – 3 : சிறுநீர்ப்புறவழி (யூரித்ரா) மற்றும் பிறப்புறுப்பு (வஜைனா) மூடியிருக்கும் வகையில், லேபியா மினோரா மற்றும் லேபியா மெஜோரா ஆகிய தசைகளை ஒன்றாகச் சேர்த்து தைக்கப்படும். சிறுநீர் மற்றும் மாதவிடாய் ரத்தம் வெளியேற, சிறு திறப்பு மட்டும் இருக்கும்.
வகை – 4 : பிறப்புறுப்பை முழுவதுமாகவோ பாதியாகவோ வெட்டுதல், அல்லது சூடான ஏதாவது பொருளைக் கொண்டு பிறப்புறுப்பைச் சித்தைத்தல் ஆகியவை அடங்கும்.

முதன்முதலாக இந்தப் பழக்கம், எங்கு தோன்றியது என்று, தெளிவான விளக்கங்கள் கிடைக்கவில்லை. ஆனாலும், அது பண்டைய எகிப்து, அதாவது இன்றைய எகிப்து மற்றும் சூடான் ஆகிய இடங்களில் தோன்றியிருக்கலாம் என்று வரலாற்று ஆராய்வாளர்கள் கூறுகின்றனர். காரணம் கிமு ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த மம்மிகளில், விருத்தசேதனம் செய்ததற்கானச் சான்றுகள் கிடைத்திருக்கின்றன.
உலகின் ஏதோ ஒரு மூலையில் தோன்றிய ஒரு வழக்கம், வர்த்தகம் செய்யச் சென்றவர்களின் மூலம், அதாவது செங்கடலின் மேற்குக்கரை வழியாகத் தெற்கு மற்றும் மேற்கு ஆப்ரிக்காவிற்கும், அரபு வர்த்தகர்கள் மூலம் மத்திய ஆப்ரிக்காவிற்கும், பரவி இருக்கலாம் என்று அறிஞர்கள் சொல்கிறார்கள். மேலும் இந்த வழக்கம், பண்டைய ரோமில் பெண் அடிமைகளுக்கும் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்தது என்று தரவுகள் சொல்கின்றன.

உலகின் பல மூலைகளிலும் பெண்களுக்கு விருத்தசேதனம் செய்யும் பழக்கம் பரவிக் கிடப்பதால், இதன் தோற்றம் இங்குதான் என்று, ஒரு குறிப்பிட்ட இடத்தைச் சொல்ல முடியாத நிலைதான் இன்றும் நிலவுகிறது. அதன் தோற்றத்தைச் சுற்றியுள்ள குழப்பம் இருந்தபோதிலும், விருத்தசேதனம் நடைமுறையானது உலகம் முழுவதும், பல இன மக்களின் நம்பிக்கைக்குரிய பழக்கமாக விளங்குகிறது.
இது உலகின் ஏதோ ஒரு மூலையில் நடக்கிறது என்று, நம்மால் கடந்து போக முடியாது. நம்மைப் போன்ற சக உயிர், மூடத்தனத்தால் படும் வேதனையை எப்படிக் கண்டும் காணாமல் இருக்க முடியும். மேலும் இது வெளிநாட்டுப் பிரச்னை, இந்தியாவிற்கும் இதற்கும் என்ன சம்பந்தம் எனக் கேட்டால், இந்தியாவிலும் இந்த வழக்கம் நடைமுறையில் உள்ளது என்பதை, பதிலாகச் சொல்ல வேண்டியுள்ளது.
நவம்பர் 2011இல் தாவூதி போஹ்ரா குழுவைச் சார்ந்த ஒரு பெண், அப்போதைய தாவூதி போஹ்ரா மக்களின் மதத் தலைவரான, ’முகமது புர்ஹானுதீன்’ அவர்களிடம், இந்த விருத்தசேதனம் (காஃப்டா) முறையைத் தடை செய்ய வேண்டும் என்று ஓர் இணையவழி மனுவைச் சமர்ப்பித்தார்.
“நம் மதம் இந்த நடைமுறையை ஆதரிக்கிறது என்பதை, போஹ்ரா பெண்கள் புரிந்துகொள்ள வேண்டும். நீங்கள் எந்த வாதமும் இல்லாமல், இதைப் பின்பற்ற வேண்டும்” என்பதுதான், அந்த மனுவிற்கு அம்மதத் தலைவரின் பதிலாக இருந்தது.
அதற்குப் பிறகு, ’சாஹியோ’ மற்றும் ’வி ஸ்பீக் அவுட்’ என்கிற மும்பையைச் சேர்ந்த இரண்டு குழுக்கள், பிப்ரவரி 2016இல் ’Each One Reach One’ என்கிற பிரச்சாரத்தைத் தொடங்கின, இதன் கரு விருத்தசேதனம் பற்றிய விழிப்புணர்வு. பிறகு 2017இல் ரமலான் மாதத்தில் மீண்டும் இந்தப் பிரச்சாரம் செய்யப்பட்டது, அது விருத்தசேதனம் பற்றிய உரையாடல்களைப் பொதுவெளியில் பரவலாக்கியது.
இந்தியாவில் இந்த நடைமுறையால் பாதிக்கப்படும் போஹ்ரா பெண்களிடம், சாஹியோ அமைப்பு ஓர் இணையவழி கருத்துக்கணிப்பை நடத்தியது. அதில் பங்கேற்ற 80% பெண்களுக்கும் விருத்தசேதனம் நிகழ்த்தப்பட்டிருப்பது அப்போது கண்டறியப்பட்டது. ஆறு அல்லது ஏழு வயதில், பெரும்பாலானவர்களுக்கு இது நடந்துள்ளது. இந்த நடைமுறை நிறுத்தப்பட வேண்டும் என்று அந்தக் கருத்துக்கணிப்பில் பங்கெடுத்த 81% பெண்களும் விரும்பினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அதைத் தொடர்ந்து, 10 டிசம்பர் 2016 அன்று (மனித உரிமைகள் தினம்), தாவூதி போஹ்ரா பெண்கள் குழு, இந்த விருத்தசேதனம் முறையைத் தடை செய்ய வேண்டும் என்று, இணையவழி மனுவைச் சமர்ப்பிக்கத் தொடங்கியது. (அதே போன்ற ஒரு மனு 2015இல் அதே குழுவால், இந்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர், மேனகா காந்தியிடம் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது என்பது கூடுதல் தகவல்.) அதே மாதத்தில், தாவூதி போஹ்ரா பெண்கள், ஐக்கிய நாடுகள் சபையில் பெண் பிறப்புறுப்பு சிதைவு (FGM) அல்லது, பெண் பிறப்புறுப்பு வெட்டுதல் (FGC) வழக்கம் நடைமுறையில் உள்ள நாடாக, இந்தியாவை அங்கீகரிக்க வேண்டும் என்று கோரினார்கள்.
செப்டம்பர் 2017இல், ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் (யு.என்.எச்.ஆர்.சி) 36வது வழக்கமான அமர்வு, இந்தியாவில் ஆய்வு ஒன்றை நடத்தியது. அதில் இந்தியாவில் நடைபெறும் விருத்தசேதனம் குறித்து, ஒரு பக்க எழுத்துப்பூர்வ அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. இந்தியாவில் நடக்கும் விருத்தசேதனம் பற்றி, ஐக்கிய நாடுகள் சபையில்
எழுப்பப்பட்டது அதுவே முதல் முறை.

மே 2017இல், இந்தியாவின் உச்ச நீதிமன்றத்தில் விருத்தசேதனம் தொடர்பாகப் பொது நலன் வழக்குப் போடப்பட்டது (வழக்கு எண்/ Case-Number : WP (C) 286/2017). இந்த வழக்கை, டெல்லியைச் சேர்ந்த வழக்கறிஞர் ’சுனிதா திவாரி’ தாக்கல் செய்திருந்தார். இவ்வழக்கில் இந்தியாவில் விருத்தசேதனம் நடைமுறை தடை செய்ய வேண்டும் என்று கோரினார். இந்த மனுவை உச்ச நீதிமன்றம் பெற்றுக்கொண்டு, நான்கு மாநிலங்கள் மற்றும் நான்கு மத்திய அரசு அமைச்சகங்களிடம் பதிலளிக்கக் கூறியது.
’இந்தியாவில் விருத்தசேதனம் நடைமுறையில் இருப்பதற்கான, அதிகாரப்பூர்வத் தரவு அல்லது ஆய்வு எதுவும் இல்லை’ என்று பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் 2017 டிசம்பரில் அறிக்கைத் தாக்கல் செய்தது.
இதற்கு முன்னதாக, மே 2017இல் விருத்தசேதனம் நடைமுறையைப் பின்பற்றுபவர்கள், தாங்களாகவே முன்வந்து நிறுத்தாவிட்டால், அது சட்டரீதியாகத் தடை செய்யப்படும் என்று, பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர், மேனகா காந்தி அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏப்ரல் 2018இல் இந்திய அரசுத் தலைமை வழக்குரைஞர் (Attorney General of India) கே.கே.வேணுகோபால், விருத்தசேதனம் தொடர்பான வழக்கின் வழிமுறைகளை வெளியிடுமாறு உச்சநீதிமன்றத்தை கேட்டுக்கொண்டார். விருத்தசேதனம் முறை, ஏற்கெனவே இருக்கும் சட்டத்தின் கீழ் ஒரு குற்றம் என்று கூறினார். முன்னதாக மகாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான் மற்றும் டெல்லிக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்த உச்சநீதிமன்றம், இந்த வழக்கை ஒத்திவைத்து, கேரளா மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களுக்கும் நோட்டீஸ் அனுப்பியது.
செப்டம்பர் 2018இல், கே. கே. வேணுகோபால் மற்றும் தாவூதி போஹ்ரா பெண்களின் வேண்டுகோளின் பேரில், 5 நீதிபதிகள் கொண்ட அமர்விற்கு உச்சநீதிமன்றம் பரிந்துரைத்தது. நவம்பர் 2019இல் விருத்தசேதனம் பிரச்னை 7 நீதிபதிகள் கொண்ட அமர்விற்குப் பரிந்துரைக்கப்பட வேண்டும் என்றும், அது மற்ற பெண்கள் உரிமை பிரச்னைகளுடன் ஆராயப்பட வேண்டும் என்றும், உச்சநீதிமன்றம் முடிவு செய்தது. இந்த வழக்கு இன்றும் நிலுவையில் உள்ளது என்பதுதான் வருந்தத்தக்க ஒன்று.
2017இல் கேரளாவில் உள்ள கோழிக்கோடு மற்றும் மலப்புறம் ஆகிய மாவட்டங்களில் சாஹியோ அமைப்பு மேற்கொண்ட ஆய்வில், அங்கு பெண்களுக்குப் பிறப்புறுப்பு சிதைப்பு நடைபெறுவது கண்டறியப்பட்டது. இன்று வரை பெண்ணுறுப்பு சிதைப்பு என்பது தொடர் கதையாகத்தான் உள்ளது.
தாய்வழிச் சமூகத்திலிருந்து தந்தைவழிச் சமூகமாக மாறிய பிறகு, ஒவ்வொரு காலக்கட்டத்திலும் பெண்களைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க, ஆணாதிக்கச் சமூகத்தால் பல்வேறு உத்திகள் கையாளப்பட்டுள்ளன. அதில் ஒன்றுதான் விருத்தசேதனம். இதைச் செய்வதன் உளவியல், பெண்களின் பாலியல் இச்சைகளைக் கட்டுப்படுத்த முடியும் என்பதுதான். பெண்களின் பாலியல் இச்சைகளைக் கட்டுப்படுத்தி விட்டால், பெண்களைக் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளலாம் என நினைக்கிறார்கள்.
பெண்கள் கை கால் முளைத்த, நடமாடும் கருப்பையாகத்தான் பார்க்கப்படுகிறார்கள். அந்தக் கருப்பையைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டுமெனில், அவளது உடலையும் மனதையும் ஒட்டுமொத்தமாகக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். அதற்கான சிறந்த வழி, அவளது பாலியல் தேர்வுகள் மீது கட்டுப்பாட்டையும் ஒடுக்குமுறையையும் செலுத்துவதுதான். சாதி ஆணவக்கொலை முதல், விருத்தசேதனம் வரை, இந்த ஒடுக்குமுறையைச் செலுத்துவதற்காகப் பயன்படுத்தப்படும் கருவிகளாகத்தான் இருக்கின்றன.
விருத்தசேதனம் நடைமுறையைத் தடுக்கச் சட்டத்தை நாடிய தாவூதி போஹ்ரா பெண்களைப் போல, காலம் காலமாக நடத்தப்படும் இது போன்ற ஒடுக்குமுறைகளை எதிர்த்து, பெண்களின் குரல் ஒலித்துக் கொண்டேதான் இருக்கிறது. இது போன்ற ஒடுக்குமுறைகள் ஒட்டுமொத்தமாக இச்சமூகத்தி்லிருந்து அகற்றப்படும் வரை அக்குரல் ஒலித்துக் கொண்டேதான் இருக்கும்.
படைப்பாளர்

மரு. நாகஜோதி
Doctor of pharmacy (Pharm.D) படித்திருக்கிறார். ஒரு தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியராகப் பணிபுரிகிறார். இறை மறுப்பாளர். பெண்ணியம், பெரியாரியம், அம்பேத்கரியம், தலித்தியம் சார்ந்து இயங்குகிறார். டிவிட்டரில் இயங்கும் முச்சந்துமன்றம் என்கிற புத்தக வாசிப்புக் குழுவின் உறுப்பினர்களில் ஒருவர்.